ஸாலிஹ் நஜ்முத்தீன் கடல்போன்ற ரானுவப்படையினருடனே ஷாம் நோக்கிச் சென்றார். அந்தச் சமயத்தில் மிஸ்ரில் உயிர்வாழ்ந்தவர் எவரும் தமதாயுள் முழுதும் ஒரு முறைகூடக் கண்டிராத
அத்துணைப் பெரிய சேனையை அவர் திரட்டிக் கொண்டு சென்றதே பலருக்குப் பீதியை யூட்டிற்று. சேனா சமுத்திரம் முன்னோக்கிச் செல்லச்செல்ல, அதற்குப் பின்னே எழுந்த புழுதிப்படலம் ஆகாய மண்டலம்வரை ஒரே புகைத் திரளாகக் காட்சியளித்தது. ஐயூபிகளின் ஆட்சி நிலைபெறுத்தப்பட்ட பின்னர் ஸாலிஹ் ஷாமுக்குக் கொண்டுசென்ற படையே மிகப்பெரிது என்று சரித்திராசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஸாலிஹ் சென்றபின்னர்க் காஹிரவிலே பேரமைதி நிலவியது. பெரிய பட்டாளம் அந்நகரைவிட்டுச் சென்றுவிட்டபடியால், ஊரே குடிஜனமில்லாச் சூனியமாகக் காட்சியளித்தது.ஆனாலும், நாட் செல்லச்செல்ல அந்த மாறுதலும் பழகிப்போய்விட்டது. மன்ஸூர்கலீல் பிறந்த நாற்பதாவது நாள் வந்ததும், ராணி ஷஜருத்துர் ஹம்மாமிலே நறுநீர் ஸ்நாநம் செய்து, “நிபாஸ்” என்னும் பிள்ளைப்பேற்றுப் புனிறுநீங்கிப் புனிதமடைந்து விட்டார். முன்னொரு சமயம் மூனிஸ்ஸா ஹம்மாமில் குளித்தபின்னரே திடீரென்று மாண்டாராதலால், இப்போது எல்லா வைத்தியர்களும் சர்வஜாக்கிரதையுடனே ஷஜருத்துர்ரைக் கவனிக்கலாயினார்கள்.
அடுத்தநாள் முதற்கொண்டு, தம்முடைய கணவர் சார்பாக ஸூல்தானா ஷஜருத்துர் அரியாசனத்தில் ஏறியமர்ந்து ராஜ்யபாரத்தை நிர்வகித்தார்! இஸ்லாமிய ஆட்சி மிஸ்ரிலே நுழைந்தபின்னர் முதன்முதலாக அரசியாக அரியணையேறும் செளப்பாக்கியம் பெற்ற முதல் பெண்மணி ஷஜருத்துர்ரே யாவார்! ஆண்டவனின் லீலா விநோதங்களுள் இதுவும் ஒன்றன்றோ!
ஆரம்பத்தில் சிலபிற்போக்குள்ள பேர்வழிகள், ஒரு பெண் பிள்ளை அரசாள்வதா? என்று சீறினர். எனினும், அச் சீறல்க ளெல்லாம் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே பதுங்கியிருந்தன. ராணிக்கு மாற்றம் உரைப்பது கொடிய ராஜதுரோகக் குற்றமாகப் போய்முடியு மென்பதை மிஸ்ரிகள் உணராமலா இருந்திருப்பார்கள்?
ஸுல்தானா ஷஜருத்துர் அரசாங்க மென்னும் அசுவக் கடிவாள ‘லகானை’ இறுக்கப்பற்றினார். தட்டிக்கொடுக்க வேண்டியவற்றைத் தட்டிக்கொடுத்தார்; இழுத்துப் பிடிக்கவேண்டியவற்றை இழுத்துப் பிடித்தார்; விட்டுக் கொடுப்பனவற்றை விட்டுக் கொடுத்தார்; அடித்துத் திருத்தவேண்டியவற்றை அடித்துத் திருத்தினார். நீதிசெலுத்தும் விஷயங்களில் தட்டான பொன் நிறுக்கும் சன்னத்தராசுமுள் நடுநிற்பதில் சற்றாவது முன்பின் சாயலாம்; ஆனால், நமது ஸூல்தானாவின் நடுநிலைமை உலகசரித்திரத்தில் ஈடிணையற்றதாக நின்றிலங்கி வருகிறது. இவ்வாறே, சட்டமியற்றுவதிலும், இயற்றிய சட்டத்தை அமல் நடத்துவதிலும் ஷஜருக்கு நிகர் ஷஜராகவே விளங்கினார். ஏகபோக அரசுரிமையைத் தெய்வாம்சமாகப் பாவித்து, முற்ற முற்ற ஒழுங்காக ஆண்ட பெருமையனைத்தும் அவ்வம்மை யார்க்கே என்றும் உரித்தாகும்.
துருக்கியிலே பிறந்து, சிறு பிரயாத்திலேயே பெற்றோரை யிழந்து, அனாதையாகவும் அற்பச் சிறுமியாகவும் விளங்கி, விதியின் விசித்திரத்தால் சுல்தானாவாக உயர்ந்துவிடும் பேரதிருஷ்டம் கிடைக்கப்பபெற்ற ‘அம்’மாதர்க்கரசி தமது கல்வி, கேள்வி, ஞானத்தின் சூட்டுசுமத்தால், மனச்சாட்சிக்குச் சற்றேனும் துரோகம் இழைக்க முற்படுவரோ? பரம்பரையாக அரசவமிச மென்னும் அகம்பாவம் இருந்திருந்தால், அப்பெண் ரத்தினம் ஏழைகளின் இன்னல்களை உணர மார்க்கம் இல்லாமலே போய்விட்டிருக்கும். ஆனால், சாதாரணப் பொது மக்களுள் அற்பப்பிராணியாக இருந்த அவர் இப்பொழுது அரசியாக உயர்ந்துவிட்டால், அந்தச் செருக்கால் கண்மூடிவிடுவாரோ? உண்மையிலேயே ஷஜருத்துர்ரை யல்லாமல் வேறோர் அனாதைப் பெண்ணுக்கு இந்த அரச பதவி கிடைத்திருந்தால், அவள் இவ்வளவு நேர்மையுடனும் நீதியுடனும், பாரபக்ஷமின்றியும் மிகஒழுங்காக நடந்திருப்பாளா? என்பதை எம்மால் கூற முடியாது. ஆனால், ஆண்டவன் ஷஜருத்துர்ருக்குப் பதவியில் உயர்வைத் தந்ததுபோல், அவருடைய ஞானத்தையும், விவேகத்தையும், நல்லறிவையுங்கூட மிகஉச்சத்துக்கே கொண்டுசென்று நிறுத்தினான்.
காஹிராவின் வீதியிலும், மிஸ்ரின் வேற்றூர்களிலும் திரிந்துக்கொண்டிருக்கும் சாதாரண மனிதனும் ஷஜருத்துர்ரின் நேர்மையான ஆட்சியைப்பற்றித் தன்னையறியாமலே வியந்து பாராட்டி மகிழாதிருக்க முடியவில்லை. ஐயூபிகள் அத்தனை பேரின் ஆட்சியின் கீழ் மிஸ்ரிகள் அடைந்த பேரானந்தப் பெருந்திருப்தியைவிட, ஓர் ஐயூபியின் இரண்டாந்தரமாய் வந்து வாய்த்த வேற்றுநாட்டுப் பெண்ணடிமையான ஷஜரின் தண்ணிய கோலோச்சுதலுக்கு மெய்ம்மறந்து அடிபணிய முற்பட்டனர். ஆரம்பத்தில் முணுமுணுத்த வைதிக முல்லாக்கள் அம்மையாரின் மிகச்சீரிய சக்தியைக் கண்டு நாணித் தலைகுனிந்ததுடன், அரசஉரிமை யென்பது ஆண்களுக்கு மட்டுமே ஆண்டவன் சிருஷ்டிசெய்த ஏகபோக உரிமையன்று என்பதை உணர்ந்தனர். அதனுடன், ஆண் அரசரும் செய்து முடிக்க இயலாத மாபெருஞ் சக்திகளை ஒரு பெண்ணரசியே ஒரு வினாடியில் நிகழ்த்திவிட முடியமென்பதையும் அவர்கள் அறிந்து, தம்மையறியாமலே ஷஜருத்துர்ரின் ஆட்சிமகிமைக்குப் புகழ்ப் பட்டம் அளிக்க முற்பட்டு விட்டனர். ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளாதவரையில் அவ் வம்மையார். மேலும் மலும் புகழோங்கி வந்நதில் வியப்பென்ன இருக்கிறது!
ஷஜருத்துர் ஆட்சியைக் கையிலெடுத்து ஆறுமாதங்கள் மிகஎளிதில் ஓடி மறைந்தன. ஷாமுக்குச் சென்ற சுல்தானின் வெற்றியைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது சுல்தானாவுக்கு எட்டிக்கொண்டே யிருந்தன. காஹிராவுக்கும் திமஷ்க்குக்கும் இடையே தூதர்கள் இரவுபகலாகச் செய்திகளைத் தாங்கிக் கொண்டே போய்வந்துகொண் டிருந்தார்கள். அன்றியும், போர்க்களத்தில் நின்றுகொண் டிருந்த சுல்தானுக்கு ஷஜருத்துர்ரின் மாண்புமிக்க ஆட்சிமகிமை எட்டஎட்ட, அவருடைய காதுகளில் அமுதம் பழியப்படுவதுபோன் றிருந்தது. தன் மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய் அடையும் ஆனந்தத்தைவிட, தம் மனைவி பெறும் பேரும் புகழும் இப்படிப்பட்டவை என்று கேட்ட ஸாலிஹ் உள்ளங் குளிர்ந்து போயினார். இவ்வாறே, சுல்தானுக்கு வெற்றிக்குமேல் வெற்றி கிட்டிக்கொண்டே யிருக்கிறதென்று கேள்வியுற்ற சுல்தானா உச்சிகுளிர்ந்து போயினார். துரோகி முஹம்மத் ஷாவின் படைகள் ஷாமுக்குள்ளே எல்லா மூலைமுடுக்குகளிலும் ஒளிந்திருந்து வரைமுறையின்றிப் போராடி வந்ததால், இறுதி வெற்றியைச் சுலபமாக அடைய முடியாதென்றும், குறைந்தபக்ஷம் இன்னம் ஓராண்டு கழிகிறவரையிலாவது சுல்தான் ஷாமில் இருந்ததாகவேண்டி யிருந்த தென்றும் ஷஜருத்துர்ருக்குச் செய்தி வந்தது. படையெடுத்து வருகிற எதிரிகளாயிருந்தால், ஒன்றல்லது இரண்டு போர்க்களத்தில் பொருது வெற்றியை நிலைநாட்டிவிடலாம். ஒண்டவந்த தேசத்தில் எல்லா மூலைமுடுக்குக்களிலும் கலக கோஷ்டிகளைச் சித்தப்படுத்திவிட்ட முஹம்மத் ஷா போன்ற உள்நாட்டுத் துரோகச் சுண்டெலிக் கூட்டத்தை எப்படி ஒரே சண்டையில், அல்லது ஒரே களத்தில் தோற்கடிப்பது முடியும்? சுல்தான் மேற்கொண்ட காரியம், பாம்பு கடித்து உடலெல்லாம் விஷம் பரவிவிட்ட மனிதனுக்கு மந்திரம் செய்து விஷமிறக்குவதுபோலக் காணப்பட்டது.
மாதங்கள் பல ஓடிக்கொண்டே யிருந்தன. ஷஜருத்துர் ராணியாரின் கீர்த்தி பிரதாபமும் விறு விறு வென்று ஏறிக்கொண்டே யிருந்தது. புகழுக்கு மேல் புகழான பழுக்களைக் கொண்டு தம் சாமார்த்தியத்தாலும் புகழேணியைச் சிருஷ்டி செய்துகொண்ட அந்த ஸுல்தானா இன்னம் மேலும் மேலும் அதிக புகழையே அடைந்துவந்தார். நாடு சுபிக்ஷத்துக்குமேல் சுபிக்ஷமடைந்தது. மக்களுக்குத் திருப்திக்கு மேல் திருப்தி நிலவியது. அதிகாரிகள் அரசியாக்கினைக்கு நடுநடுங்கி, விலவிலத்துப் போய்த் தத்தம் பணிகளை மிக்க ஒழுங்குடன் ஆற்றிவந்தனர். முஸ்லிம்கள் மட்டுமின்றி, சகல மத மக்களுமே அந்த ஸல்தனத்தின் அமிர்தமென்னும் இனிமையை மெய்சிலிர்க்க நுகர்ந்துவந்தனர்.
ஆனால், மக்களின் கண்திருஷ்டிக் கோளாறோ, அல்லது ஆண்டவனின் அரிய சோதனையோ, அல்லது விதியின் விசித்திரமோ, – ஷஜருத்துர்ரின் பெருந்திருப்திலயான மஹோன்னதப் பெருவாழ்வைச் சிறிது சோதிக்க முற்பட்டது. தமது ஈரல் துண்டென மதித்துச் சகல ஆசையையும் ஒருங்கே கக்கிக் கண்ணுட் கருமணியென்னப் போற்றி வளர்த்துவந்த சிசு கலீலுக்குத் திடீரென்று வியாதி வந்தது. சிறு சிசுக்களுக்கும் மிக உயர்தர குதிரைகளுக்கும் சட்டெனப் பெரியவியாதி வருவது வழக்கமென்று நாம் முன்னொரு முறை விவரித்தோம். அதேவிதமாக, ஒன்பதுமாதமே முடிந்திருந்த சிசு கலீலுக்கு ஏதோஒரு பெரிய வியாதி வந்தது. குழந்தை வைத்தியத்தில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பெரிய வைத்தியர்கள்தாம் என்ன செய்ய முடியும்? வியாதிக்கு மருந்து கொடுத்தார்கள்; விதியை நிறுத்திப் பிடிக்க ஆனமட்டும் முயன்று பார்த்தார்கள் ஆயின், பயனென்ன?
இறுதியில் ஒருநாள் கடைச்சாமத்தில், ஐயூபி வமிசத்து சுல்தான் ஸாலிஹுக்கும், அவர்தம் ஆருயிர்க் காதற்கிழத்தியும் அருமைப் பத்தினியுமாகிய ஷஜருத்துர்ருக்கும் திருவயிறு வாய்த்திருந்த கலீல் ஆண்டவன் திருவடி நீழலை அமைதியுடன் அடைந்து மறைந்துவிட்டான். பிறந்தோரெல்லாம் இறப்பது சரத மன்றோ!
சுல்தானே காலஞ் சென்றிருந்தாலும் காஹிரா நகரும், மிஸ்ர்தேசமும் அவ்வளவு ஆழியதுக்கத்தில் ஆழ்ந்திருக்குமா? என்று எல்லோரும் சந்தேகிக்கும்படி இருந்தது அந்தச் சிசுவின் அகாலமரணம்! ஷஜருத்துர் அழுதுசலித்து ஆறாய்ப் பெருகியதைவிட, அவருடைய தோழியரும், மந்திரி பிரதானிகளும் அழுதுபுரண்டனர். அவர்கள் அழுததைவிட ஊர்ப்பொதுமக்கள் அதிகமாகக் கண்ணீரைப் பெருக்கிக்கொண் டிருந்தனர். அதிலும் சுல்தான் ஊரிலில்லாத காலத்தில் விழுந்த இப் பேரிடியால் மக்கள் அதிகமும் துயருற்றனர். மரணமடைந்தது மிகச் சிறு சிசுவாயிருந்தும், அப் பிரேதத்துக்காக நிகழ்த்தப்பட்ட ஜனாஜாத் தொழுகைக்குக் காஹிராவின் மக்கள் அனைவரும் திரண்டு குழுமிவிட்டனர். ஏழைகளின் நண்பியும், நீதியின் ஜோதியும், அன்பின் அவதாரமும், நேர்மையின் அரசியுமான சுல்தானா ஷஜருத்துர்ரின் ஒரேசிசு மாண்டுவிட்ட தென்றால், அதன் மறுமைக்கு வேண்டுதல்புரிய மக்களை வாவென்று அழைக்கவும் வேண்டுமோ?
ஸல்தனத்தை நடத்துகிற சுல்தானாவா யிருந்தா லென்ன? சர்வமும் கற்றுத்தேர்ந்த சர்வகலாவல்லியா யிருந்தாலென்ன? பெண்ணென்றால்,எல்லாரும் பெண்தாமே? ஷஜருத்துர் மட்டும் விதிக்கு விலக்கா? அவர் அழுதார்; அலறினார்; துடித்துடித்தார்; பதைபதைத்தார். அவர் கற்ற கல்வியோ, கேட்ட கேள்வியோ, மடை திறந்தாலன்ன அவலக்கண்ணீர் அளவுமீறிப் பெருகுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது பெண்மைக் குணம்; ஷஜருத்துர்ரைக் குறைகூறிப் பயனில்லை. சுல்தானாவைப் பார்த்து மக்கள் அழ, மக்களைப் பார்த்து மற்றோர் அழ, நாற்பது நாட்களும் அந்த ஸல்தனத்திலே சொல்லொணாச் சோகமே எங்கெங்கும் சூழ்ந்துக்கொண் டிருந்தது. இப் பெருந்துக்கச் செய்தியை ஸாலிஹ் கேள்வியுற்றதும் அவர் மூர்ச்சித்தார். மூளை கலகலத்துப் போனதால், தாடியைப் பிய்த்துக் கொண்டார். ஷஜருத்துர் இவ் ஆறாத்துயரின் காரணமாக எங்ஙனம் மனமுடைந்து போயினளோ என்று ஏங்கினார், இறங்கினார், வருந்தினார், வாடினார்.
சுகத்தை யடுத்துத் துக்கம் வருவது உலக இயற்கை, அதற்காக அத் துக்கத்தையே நினைத்துக்கொண்டு அவதியுறுவதா? காலமென்னும் சஞ்சீவி எதையும் மாற்றிவிடுகிறதல்லவா? ஒரு குழந்தை – அதிலும் சிறுசிசு காலமானதற்காக அல்லுபகலாக அழுது அழுதுகொண்டே யிருந்தால், அரசாங்கம் என்ன கதியாவது? எனவே, அரசியார் கண்திறந்தார். கவலையை யெல்லாம் கணநேரத்தில் உதறி யெறிந்துவிட்டு, ஸுல்தானா தம் கடமையைச் செலுத்த லாயினார். கடமை யென்பது ஏனை யெல்லாவற்றையும்விட மிகமிக முக்கியமான தன்றோ?
அப்பால் ஸல்தனத் முன்னையைப் போலவே திரும்பவும் ஜகத் ஜோதியுடன் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. அல்லாமலும், இப்போது ஸல்தானாவுக்குக் குழந்தை யிருக்கிறதென்னும் கவலையும் இல்லாமல் போயினமையால், தமது முழுக் கவனத்தையும் அரசியலிலே செலுத்தினார். பொதுமக்களுக்கு ஷஜருத்துர்ரின் இந்த மனவொருமை பெரிய அதிசயத்தை யளித்தது.
ஹிஜ்ரீ 646-ஆம் ஆண்டு பிறந்தது. ஷாமுக்குச் சென்ற சுல்தானின் முயற்சி இன்னம் பூரணவெற்றியைப் பெறாமையால், அவர் திரும்பவில்லை. ஆனால், அவர் புரிகிற போர்களில் பிடிக்கிற யுத்தக் கைதிகள் தினம் தினம் நூற்றுக்கணக்கில் காஹஹராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களுள் அடிமைகளாகப் போனவர்கள் பலர்; கைதிகளாகவே சிறையில் அடைக்கப்பட்டவர் பலர். இம்மாதிரி அனுப்பப்பட்ட கைதிகளுள் சுல்தானுக்கு ஏற்ற மம்லுக் அடிமைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஷஜருத்துர் தம் முழுத் திறமையையும் காண்பிக்க லாயினார். அமீர்கள் இல்லாமல் பலஹீன மடைந்திருக்கும் ஸல்தனத்தை மம்லுக் அடிமைகளைக் கொண்டேனும் பலப்படுத்த வேண்டுமென்னும் முடிபை ஷஜர் எட்டிவிட்டார். எனவே, சுல்தானுக்கும் தமக்கும் என்றென்றும் தொண்டூழியம் புரியத்தக்க நிஜமான யோக்கியதை வாய்க்கப் பெற்றவர்களை அந்த ஸூல்தானா மிகத் திறமையுடன் தேர்ந்தெடுத்தார். முன்னமொருமுறை சுல்தானிடம் இந்த மம்லுக் அடிமைகளைப் பற்றித் தாம் வாதுபுரிய நேர்ந்த வைபவத்தை அவ்வம்மையார் மறக்கவில்லை, எனவே, அவர் தெரிந்தெடுத்த ஹல்காக்களும் மம்லூக்குகளும் பின்னொரு காலத்தில் அநியாயமான பலம் பெற்று முற்றிவிட முடியாத ஆட்களாகவே விளங்கலாயினார் ஷஜரின் அபிப்ராயத்தில்.
முஹம்மத்ஷா விடமிருந்து ஊழியம் புரிந்து, சுல்தானின் கோபத்துக்கு ஆளாகி, அவரால் கைதுசெய்யப்பட்ட தங்களை இந்த ராணியம்மையார் இவ்வளவு நேர்மையுடன் நடத்துவதைக் கண்டு, அவர்கள் முதலில் திகைத்துப் போயினர். அந்த ஸுல்தானாவின் யோக்கியதாம்சங்களைக் கண்டு வியந்துபோன அவர்கள் தாம்தாம் வலியவே சுல்தானுக்கும் ஸல்தனத்துக்கும் சேவைசெய்ய ஆசைப்படுவதாக அறிவித்தனர். கேட்பானேன்? மம்லுக்குகளின் ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது. எண்ணிக்கையில்மட்டும் பெருக்கம் ஏற்பட்டதென்று நினையாதீர்கள். மிஸ்ரின் ஸல்தனத்துக்கு இப்பொழுது ராஜவிசுவாசமுள்ள மம்லூக்குகளின் வன்மையும் அதிகரிக்கத் தொடங்கிற்று.
ஷாமிலிருந்து போர்க்கைதிகளையும் மம்லுக்குகளையும் மட்டுமே அல்மலிக்குஸ் ஸாலிஹ் அனுப்பிவைத்தாரென்று எண்ண வேண்டாம். அவர் இன்னமொரு வஸ்துவையும் அடிக்கடி அனுப்பிக்கொண் டிருந்தார் : காஹிராவின் கோட்டை வாயில்களிலும், அரண்மனைக் கோபுரவாயில்களிலும் அலங்காரமாகத் தொங்குவதற்காகவும், எதிரிகளுக்கு அல்லது ராஜதுரோகிகளுக்கு அச்சத்தை யூட்டுவதற்காகவும் அவர் சில மனிதர்களின் தலைகளையும் அனுப்பிக்கொண் டிருந்தார். ஆம்! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து, உள்நாட்டுக் குழப்பத்துக்கு ஊக்கமளித்துவந்த மிகப்பொல்லாத துரோகப் பேர்வழிகளை உயிருடன் காஹிராவுக்கு அனுப்புவது எப்போதுமே பேராபத்து என்றுணர்ந்த சுல்தான் அத்தகைய பயங்கரப் பேர்வழிகள் தம் கையில் சிக்குந்தொறும் சிக்குந்தொறுமெல்லாம், தமது கூரிய வாள்கொண்டு அன்னவர்களின் தலைகளைமட்டும் தனியே தறித்து அனுப்பிவைத்தார். ஸாலிஹின் கடுங்கோபத்துக்கு ஆளாகும் துரோகிகள் இம்மாதிரியான தண்டனையையே பெற்றுவந்தார்கள். சிறையிடப்பட்ட கைதிகளுக்கும் மம்லூக் கூட்டத்தில் சேர்க்கப்பட்ட அடிமைகளுக்கும் அந்தத் தலைகளைப் பார்க்கப் பார்க்க அச்சம் அதிகரித்தது. அன்றியும், அவர்களுக்கு ஷஜருத்துர்ரின் பாசங்கலந்த கனிவான பார்வை ஸல்தனத்திபால் அதிக பக்தியை யூட்டிவந்தது. இவ்வண்ணமாக அந்த மன்னரின் தயைதாக்ஷிண்ய மற்ற பொல்லாத தண்டனையும், இந்த ஸுல்தானாவின் கருணைப்பிரவாகத்தின் பேரன்பும் மம்லூக்குகளின் ராஜபக்தி விசுவாசத்தை வெகுவாக அதிகரிக்கச் செய்தன.
ஷாமுக்குள் தஞ்சம்புகுந்து, அச் சிற்றரசரின் உப்பைத் தின்று, அவருக்கே கடுந்துரோக மிழைத்த கயவர்சகள்மீது சுல்தான் பழிக்குப்பழி வாங்கியதன் முடிவாக, அவருடைய கோட்டைவாயில்களில் தலைகளும், சிறைச்சாலையில் கைதிகளும், மம்லூக் கூட்டத்தில் புதிய அடிமைகளும் பெருக ஆரம்பித்தனர். பெருகியதுடன் நில்லாமல், அவர்கள் தினந்தினம் அதிகரித்தும் வந்தார்கள்.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
<<அத்தியாயம் 25a>> <<அத்தியாயம் 27>>