34. உமைர் இப்னு வஹ்பு (عمير بن وهب)
பத்ருப் போர் முடிந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். முஸ்லிம்களுக்கு அந்த வெற்றியின் பிரமிப்பு முற்றிலும் விலகாத ஆரம்பத் தருணங்கள் அவை. கூடிக்கூடிப் பேசி மகிழ்ந்தார்கள்; கூடும் போதெல்லாம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள். வீடெங்கும் தெருவெங்கும் அதே பேச்சு. அப்படியான ஒருநாளில் …
மதீனாவில் நபியவர்களின் பள்ளிவாசலுக்கு அருகே உமரும் தோழர்களும் – ரலியல்லாஹு அன்ஹும் – அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போரின் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நுண்ணிய நிகழ்வையும் ரசித்து ரசித்துச் சொல்லிக்கொண்டார்கள். முஹாஜிர்களின் வீரம், அன்ஸாரிகளின் தீரம், குரைஷிகளின் மூக்குடைப்பு என்று பேச்சு வெகு சுவாரஸ்யமாக நிகழ்ந்து கொண்டிருக்க, தூரத்தில் ஒட்டகத்தில் ஒரு பயணி.
வெகு தொலைவிலிருந்து வந்த அலுப்பில் ‘இந்தா, வரவேண்டிய ஊர் வந்துடுச்சு; இறங்கிக்கொள்’ என்று ஒட்டகம் களைப்பாய் நின்றுகொள்ள, அந்தப் பயணி இறங்கினார். களைப்பையும் மீறி அவரிடம் உத்வேகம் இருந்தது. நபியவர்களின் பள்ளிவாசலை நோக்கி அவர் நடக்க ஆரம்பிக்க, அதை முதலில் கவனித்தவர் உமர். அவரை நன்றாக அடையாளம் கண்டுகொண்டார். சட்டென்று எழுந்து அவரிடம் விரைந்தார்.
அங்கு மக்காவிலும் குரைஷிகள் கூடிக்கூடி அமர்ந்து பேசி அங்கலாய்த்தார்கள். கூடும்போதெல்லாம் அதைப்பற்றிப் பேசி அழுதார்கள். என்ன அரற்றியும் துக்கம் தீராமல் மாய்ந்துகொண்டிருந்தார்கள். அப்படியான ஒருநாளில்,
குரைஷிகள் சிலர் அமர்ந்து கன்னத்தில் கைவைத்து சோகம் பரிமாறிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே உற்சாகமாய் வந்தார் ஒருவர். துக்கமெதுவும் இல்லாமல் அவர் முகத்தில் பொலிவு. அதைப் பார்த்த குரைஷிகளுக்கு ஆத்திரம், கோபம்.
“என்ன மனுசன் நீ? உன் அப்பன் செத்து அந்த எலும்பின் சூடுகூட தணிந்திருக்காது. உனக்கு அதற்குள் சிரிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம். எப்படி இப்படி? கொஞ்சம்கூட உனக்குத் துக்கம், கோபம், சூடு, சொரணை இல்லையா?”
அவரிடமிருந்து உற்சாகம் மாறாமலேயே பதில் வந்தது. “வருத்தப்படுவதை நிறுத்துங்கள். பத்ரில் பட்ட நஷ்டத்தையெல்லாம் நீங்கள் மறந்து, உற்சாகம் அடையும்படி வெகு விரைவில் ஒரு நல்ல செய்தி வரப்போகுது பாருங்கள்” என்று குடுகுடுப்பைக்காரன் போல் சொல்லிக்கொண்டே சென்றார் அவர். கும்பலாய் அமர்ந்து, ஒப்பாரி வைக்காத குறையாய் அழுதுகொண்டிருந்த குரைஷிகளின் ஒவ்வொரு கும்பலுக்கும் சென்று அவர் சொன்னது ஒரே செய்திதான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை பத்ருக் களத்தின் மாயத் தோல்வி தந்த அதிர்ச்சியால் இவருக்கு மனநிலை பாதித்து விட்டதோ என்றுகூட குரைஷிகளில் சிலர் நினைத்து விட்டிருக்கலாம்.
மனப்பிரமை, உளறல் எதுவும் இல்லை. தெளிவாகத்தான் இருந்தார் அவர். பெயர் ஸஃப்வான் இப்னு உமைய்யா. பத்ருப் போரில் தம் தந்தையையும் சகோதரனையும் பறிகொடுத்துவிட்டு, ‘என்ன வாழ்க்கை இது, செத்துப்போனால் தேவலை’ என்று வெகு ஆரம்பத் தருணங்களில் மாய்ந்து மருகிக் கிடந்தவர்தான் அவரும். அப்படியான ஒருநாளில்,
கஅபாவின் ஹஜருல் அஸ்வத் கல் அருகே தனியாக அமர்ந்து துக்கப்பட்டுக் கொண்டிருந்த ஸஃப்வானிடம் வந்தார் ஒருவர். காலை வணக்கம் தெரிவித்த அவரை இழுத்து வைத்து, “இங்கே வந்து உட்கார். பேசுவோம். நேரமும் கழியும்; மனக் கவலையும் குறையும்” என்றார்.
ஆமோதித்து அமர்ந்தார் வந்தவர். அவருக்கும் ஏகப்பட்ட துக்கம் இருந்தது. அவர் பெயர் உமைர் இப்னு வஹ்பு.
oOo
பத்ரு யுத்தம் பற்றித் தோழர்களின் முந்தைய அத்தியாயங்களில் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். இங்கும் கொஞ்சம்.
இஸ்லாமிய வரலாற்றின் அதி முக்கியமான அந்த முதல் போரில் நஷ்டமடையாத குடும்பம் என்று மக்காவில் எதுவும் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டோ இழவு. அல்லது அவ்வீட்டினரின் உறவினர் ஒருவர் போரில் சிறைக் கைதியாக பிடிபட்டிருந்தார்.
இந்த யுத்தம் பற்றி முன் அறிமுகம் இல்லாதவர்களுக்காக சிறு குறிப்பொன்றை இங்கே பார்த்துவிடுவோம். ஓயாத ஒழியாத அழிச்சாட்டியம் புரிந்துகொண்டிருந்த குரைஷிகளை ஒடுக்க அபூஸுஃப்யானின் வர்த்தகக் குழுவை மடக்கத் திட்டம் தீட்டினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஏறக்குறைய முந்நூறு தோழர்கள் திரண்டு, மதீனாவிலிருந்து கிளம்பியது படை. தமது வியாபாரம் முடித்துக்கொண்டு கொழுத்த செல்வத்துடன் மக்கா திரும்பிகொண்டிருந்த அபூஸுஃப்யானுக்கு முஸ்லிம்களின் இத்திட்டம் குறித்து தகவல் வந்துவிட்டது. உடனே தம்தம் இப்னு அம்ரு என்பவனை மக்காவிற்கு விரட்டினார். ஆயிரம் பேர் கொண்ட குரைஷிப் படை அணி திரண்டு மதீனா நோக்கி, ஆட்டம் பாட்டத்தோடு ஆரவாரமாக முன்னேறி வர ஆரம்பித்தது.
நபியவர்களின் படை அருகே நெருங்கிவிட்டதை அறிந்த அபூஸுஃப்யான் வெகு சமயோசிதமாக ஒரு காரியம் செய்தார். தம் குழுவினரின் திசையைத் திருப்பி வழக்கமான பாதையிலிருந்து கடலோரப் பாதையில் மக்காவிற்குப் பயணித்து, ‘எல்லாம் நலம்; முஹம்மதின் படையினினரிடமிருந்து நாங்கள் தப்பி வந்துவிட்டோம்; நீங்களும் திரும்பி, நலமே வீடு வந்து சேருங்கள்’ என்று குரைஷிப் படைகளுக்குத் தகவல் அனுப்ப, அங்குதான் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான் அபூஜஹ்லு.
“அது எப்படி? இவ்வளவு தூரம் வந்தது வந்துவிட்டோம். நமக்கும் அவருக்கும் தீர்க்க வேண்டிய பாக்கி இருக்கிறது. இன்றுடன் முஸ்லிம்களை முழுக்கச் சுருட்டி வீசிவிட்டு இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம்” என்று அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு களம் இறங்கிவிட்டான்.
அந்நேரம் போருக்கான ஏற்பாடோ, பெரும் படையை எதிர்க்கும் ஆற்றலுடனோ முஸ்லிம்கள் இல்லை. தம் தோழர்கள் அம்மாரையும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதையும் உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள். அவ்விருவரும் திரும்பிவந்து, “அவர்களது முகாமிலிருந்து வீசும் காற்றிலேயே அச்சம் கலந்திருப்பது தெரிகிறது. குதிரையொன்று செறுமினால்கூட அதன் முகத்தில் போட்டு அடிக்கிறார்கள். அந்தப் பகுதியில் மழையும் பெய்கிறது” என்று தகவல் தெரிவித்தனர்.
தோழர்களிடம் ஆலோசிக்க, “ஒன்றும் பிரச்சினையில்லை. ‘நீங்களும் உங்கள் இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று யூதர்கள் மூஸா நபியிடம் சொன்னதைப்போல் நாங்கள் சொல்லமாட்டோம். அல்லாஹ்வின் தூதரே! உத்தரவிடுங்கள். களம் இறங்குவோம். தாங்கள் கடலை நோக்கிக் கை காட்டினாலும் நாங்கள் தொடர்ந்து வரத் தயார்” பதில் உத்வேகத்துடன் கிடைத்தது!
முஸ்லிம்கள் தரப்பு முழுவீச்சில் போரில் இறங்க ஏற்பாடுகள் நிகழ ஆரம்பித்தன. முஸ்லிம்களின் பலம்தான் என்ன? என்ன தைரியத்தில் களம் இறங்குகிறார்கள் என்பதை வேவு பார்க்க ஒருவரை அனுப்பி வைத்தனர் குரைஷிகள். அவர் உமைர் இப்னு வஹ்பு. புத்திக் கூர்மையும் சாமர்த்தியமும் நிறைந்தவர் உமைர். சிறப்பான ஒற்றறிந்து முஸ்லிம்களின் நிலவரத்தை மிகச் சரியாக கணித்து வந்து தெரிவித்தார்.
“ஏறக்குறைய முந்நூறு பேர்தான் இருப்பார்கள். அவர்களிடம் போதிய அளவு ஒட்டகங்களும் குதிரைகளும்கூட இல்லை. அவையும் வற்றல் தொற்றல். அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களுக்கும் சரியான உறை இல்லை. இப்படி பலமற்ற நிலையில் இருக்கும் அவர்கள் இழப்பதற்கு என்று உயிரைத் தவிர எதுவும் இல்லை. எனவே இந்தப் போர் நிகழ்ந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் நம்மில் ஒருவரைக் கொன்றுவிட்டே மடிவார் என்று நினைக்கிறேன். நாம் வெற்றியடைந்தாலும் நம்மில் முந்நூறு பேரையாவது இழந்துதான் வெற்றியடைவோம். இந்த வெற்றி எதில் சேர்த்தி என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். முஸ்லிம்கள் பலவீனமான நிலையில் இருந்தாலும் அவர்களின் மனவுறுதியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் புத்தி சாதுர்யம் பெற்றிருந்தார் உமைர்.
இந்தத் தகவலும் சரி; அப்பொழுது இஸ்லாத்தை ஏற்காதிருந்த ஹகீம் இப்னு ஹிஸாமின் நல்ஆலோசனையும் சரி, மமதையில் இருந்த குரைஷித் தலைவர்களுக்குச் ‘செவிடன் காதில் விழுந்த சங்கொலி’ போல் ஆகிப்போனது. தொடங்கியது போர்; தொடர்ந்தது இறை அற்புதம்.
குரைஷியர்களின் முக்கியத் தலைவனான அபூஜஹ்லு உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர். தம் தந்தை உமைய்யா இப்னு கலஃப், சகோதரன் அலீ ஆகியோரை இழந்தார் ஸஃப்வான் இப்னு உமைய்யா. உமைர் இப்னு வஹ்பின் மகன் வஹ்பு முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களுள் ஒருவர். அவர்கள் மதீனா கொண்டு செல்லப்பட்டனர். இப்படியாக உயிரிழப்பு, பொருள் இழப்பு என்று கனவிலும் எதிர்பாராத பலத்த தோல்வியுடன் மக்காவுக்குத் திரும்பி வந்தடைந்தனர் குரைஷிகள். அனைவருக்கும் சொல்லி மாளாத சோகம். யாராலும் அத்தகைய தோல்வியை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவமானம் அவர்களைப் பிடுங்கித் தின்றது.
அப்படியான ஒருநாளில் கஅபாவில் சுவரில் ஸஃப்வான் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தபோதுதான் அங்கு வந்து சேர்ந்தார் உமைர். அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த சிலைகளைச் சுற்றி வந்து பிரார்த்திப்பது அவர்களது அஞ்ஞான வழக்கம். ஸஃப்வானைப் பார்த்துவிட்டு, “குரைஷிகளின் தலைவரே, அன்அம ஸபாஹா (வளமுள்ள காலை வணக்கம்)” என்றார்.
“அன்அம ஸபாஹா அபூவஹ்பு. இங்கே வந்து உட்கார். பேசுவோம். நேரமும் கழியும்; மனக் கவலையும் குறையும்”
கூடி அமர்ந்து பத்ரு இழப்பைப் பற்றிப் பேசி, பெரிதாய்க் கவலைப்பட்டுக் கொண்டார்கள் இருவரும். பத்ரில் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே குலைப் கிணற்றில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். அதையெல்லாம் சொல்லிச் சொல்லி உருகினார்கள்; கைதிகளை நினைத்து வருந்தினார்கள்.
முஸ்லிம்களுக்கு மக்காவில் இழைக்கப்பட்ட கொடுமைகளில் பெரும் பங்காற்றியவர் உமைர் இப்னு வஹ்பு. அவருக்கு இப்போது ஏகப்பட்ட அச்சம் உருவாகியிருந்தது. தாம் முஸ்லிம்களுக்கு முன்னர் இழைத்த கொடுமைகளுக்காக மதீனாவில் தம் மகன் பழிவாங்கப்படுவான் என்றே அவருக்குத் தோன்றியது. தம் கவலையை ஸஃப்வானிடம் சொன்னார். இறுதியில் ஒரு வார்த்தை சொன்னார். அந்த வார்த்தையின் தீவிரமும், அதில் தெரிந்த உண்மையும் ஸஃப்வானை உலுக்கியது; உருவானது ஒரு திட்டம். அது …
oOo
“பெருந்தலைகள் பல உருண்டு விட்டன. அவர்களே போனபின் வாழ்வதே வீணாகத் தெரிகிறது எனக்கு” என்றார் உமைர்.
இருவரும் சற்று நேரம் சோகமாய் அமர்ந்திருந்தனர். பிறகு உமைரே தொடர்ந்தார், “இந்தக் கஅபாவின் இறைவனின் மீது ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு மட்டும் கடன் தொல்லைகள் இல்லாதிருந்து, எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் பிள்ளை, குட்டிகள் கஷ்டப்படுமே என்ற நிலை இல்லாதிருந்தால், நான் சென்று அந்த முஹம்மதைக் கொன்று ஒரேயடியாய் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன்.”
அஞ்ஞானத்தில் இருந்தாலும் கடனைத் திருப்பிச் செலுத்துவது அவர்களுக்குப் பெரும் மானப் பிரச்சினை. அது ஒருபுறம். சிறைபிடிக்கப்பட்ட மகன் தவிர வேறு பிள்ளைகளும் இருந்தனர் உமைருக்கு. வறிய நிலையில் உள்ள தமக்கு உயிரிழப்பு என்று ஏதும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் நிராதரவாகி விடுவார்களே என்ற கவலை மறுபுறம்.
“இன்னும் சொல்லப்போனால் என் மகன் சிறைபிடிக்கப் பட்டிருப்பதால் நான் மதீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாது தெரியுமா? நான் எளிதாய்ச் சென்று காரியத்தை முடித்துவிட முடியும்” என்று மேலும் கூறினார்.
இதை எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஸஃப்வான் இப்னு உமைய்யாவுக்கு அருமையான வாய்ப்பு ஒன்று கண்ணெதிரே நிழலாடுவது தெரிந்தது. சட்டென்று பற்றிப் பிடித்துக்கொண்டார்.
“இதுதான் உன் பிரச்சினையா? கவலையைவிடு. உன் கடன் என்பது இனி என் கடன். அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சரி. நான் திருப்பிச் செலுத்தி விடுவேன். உன் பிள்ளைகளும் இனி என் பிள்ளைகள். நான் உயிருடன் இருக்கும்வரை அவர்களை நான் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன். அவர்கள் சொகுசாய் வாழ்க்கையைச் சுவைக்கும் அளவிற்கு என்னிடம் செல்வம் உண்டு உமைர்.”
உமைர் சொன்னதும் சும்மா ஒரு பேச்சுக்கு என்றெல்லாம் இல்லை. தம்முடைய தடைக்கற்கள் நீங்கி விட்டன என்று தெரிந்ததும், உடனே செயலில் இறங்க முடிவெடுத்தார் அவர். ஸஃப்யானின் வாய் வார்த்தையே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
“அப்படியெனில் நமது இந்தத் திட்டம் மிகவும் ரகசியமாக இருக்கட்டும். காரியம் முடியும்வரை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, ஒட்டகம் ஏறி மதீனா கிளம்பினார். நீண்ட பயணத்திற்குத் தேவையான மூட்டை முடிச்சுடன் தம் பணியாளிடம் சொல்லி, கவனமாக வாளையும் எடுத்துக்கொண்டார். நன்றாக அதைச் சாணை தீட்டி விஷத்தில் தோய்த்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டார். மனம் நிறைய குரோதம்; வாள் முனையில் விஷம். அவரது பயணம் துவங்கியது. குரைஷிகள் பலரும் பயணயக் கைதிகளாகப் பிடிபட்டிருக்கும் தத்தம் உறவை மீட்கும் நடவடிக்கையாக மக்கா – மதீனா சாலை, பயணியர் போக – வர எனப் பெரும்பாலும் பரபரப்புடன் இருந்த நேரம் அது. எனவே யாரும் அவரது பயணத்தின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்கவே இல்லை.
ஒட்டகம் அசைந்து அசைந்து ஒருவழியாய் அவரை மதீனா கொண்டு வந்து சேர்த்து, ‘இந்தா, வரவேண்டிய ஊர் வந்துடுச்சு; இறங்கிக்கொள்’ என்று அமர்ந்துகொண்டது. ஒட்டகத்தைக் கட்டிவிட்டு நபியவர்களின் பள்ளிவாசலை நோக்கி நீளமாய் அடியெடுத்து நடக்கும் உமைரையும் அவரது இடையில் தொங்கும் வாளையும் முதலில் கவனித்தவர் உமர் (ரலி). மிகப் பிரமாதமான உள்ளுணர்வு கொண்டவர் அவர். ‘இவன் எங்கே இங்கே? ம்ஹும். என்னவோ ஒன்று சரியில்லை. உள்ளுக்குள் ஏதோ தப்பு இருக்கிறது’ என்று அவரது உள்ளுணர்வு அடித்துச் சொல்லியது.
“இந்த நாய் அல்லாஹ்வின் விரோதி. இவன் பெயர் உமைர் இப்னு வஹ்பு. ஏதோ ஒரு தீய எண்ணத்துடன்தான் இங்கு வந்திருக்கிறான். மக்காவில் இருக்கும்போது நமக்கு எதிராகக் குரைஷிகளைத் தூண்டியவன் இவன். பத்ரு யுத்தத்தின்போது அவர்களுக்காக வேவு பார்த்தவனும்கூட” என்று விரைந்து எழுந்தார்.
அருகிலிருந்த தோழர்களிடம், “விரைந்து சென்று அல்லாஹ்வின் தூதரைச் சுற்றி பாதுகாவல் அமையுங்கள். இந்த இழிந்த பிறவி நபியவர்களுக்கு எந்தக் கேடும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்”
அத்துடன் இல்லாமல் இவரே நேராக நபியவர்களை அண்மிச் சொன்னார்: “அல்லாஹ்வின் தூதரே! உமைர் இப்னு வஹ்பு, அல்லாஹ்வின் எதிரி, வாளும் இடுப்புமாய் இங்கு வந்திருக்கிறான். அவனது வருகையில் ஏதோ தீய நோக்கம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது”
“அவன் வரட்டும்!” என்றார்கள் முஹம்மது நபி (ஸல்).
உமைரைப் பிடித்து, தொங்கிக் கொண்டிருந்த அவரது வாளின் இடுப்புத் துணியைக் கழட்டி, வாளுடன் அவரது கழுத்தில் சுற்றி, கச்சையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நபியவர்களிடம் வந்தார் உமர்.
அதைக் கண்டுவிட்டு, “அவரை விடுவியுங்கள் உமர்” என்றார்கள் நபியவர்கள்.
“அவரை விட்டு விலகி நில்லுங்கள்” என்று அடுத்த உத்தரவு வர, அவரை விடுவித்து விலகி நின்றுகொண்டார் உமர்.
“அன்அமூ சபாஹன் (வளமான காலைவணக்கம்)” என்றார் உமைர்.
“இதைவிடச் சிறப்பான முகமனை அல்லாஹ் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறான் உமைர். அவன் எங்களுக்கு ‘சாந்தி’யைக்கொண்டு மேன்மைப்படுத்தி இருக்கிறான். சொர்க்கவாசிகளின் முகமன் அது.”
“அதெல்லாம் தெரியாது. அண்மைக் காலம் வரை நீங்களும் எங்களது முகமனுக்குப் பழக்கமாகியிருந்தவர்தாமே?”
முரட்டுத்தனமான அவரது பதிலைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த நபியவர்கள், “நீ மதீனா வந்த நோக்கம் என்ன உமைர்?”
“தாங்கள் கைதியாய்ப் பிடித்து வைத்துள்ள என் மகனின் பொருட்டு மன்றாட வந்திருக்கிறேன். அவனை விடுவித்துக் கருணை புரியுங்கள்”
“அதற்கு ஏன் வாள் சுமந்து வந்தாய்?”
“அல்லாஹ்வின் சாபம் இந்த வாள்களின்மேல் உண்டாவதாக!. இவை பத்ரில் எங்களுக்குத் தந்த பயன் என்ன?”
மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள் நபியவர்கள். “உண்மையைச் சொல்; எதற்காக மதீனா வந்திருக்கிறாய் உமைர்?”
“நான்தான் முன்னமேயே கூறினேனே! என் மகனை மீட்டுச் செல்ல வந்தேன்” என்று பதில் வந்தது.
“பொய் சொல்கிறாய் உமைர்” என்று விளக்க ஆரம்பித்தார்கள் நபியவர்கள்.
“கஅபா அருகே நீயும் உன் நண்பனும் அமர்ந்து குரைஷிகளுக்கு ஏற்பட்ட இழிவையும் குலைப் கிணற்றில் அடக்கம் செய்யப்பட்ட உறவுகளையும் பற்றிப் பேசி வருந்தினீர்கள். ‘கடன் சுமையும் பிள்ளைகளின் கவலையும் இல்லையெனில் நான் சென்று முஹம்மதைக் கொலை செய்வேன்’ என்று நீ கூறினாய். அதற்கு ஸஃப்வான், ‘நீ மட்டும் முஹம்மதைக் கொல்வதாக இருந்தால், உனது கடன் சுமையை ஏற்றுக்கொண்டு உன் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறினான். அல்லாஹ் உன்னை அந்தச் சூழ்ச்சித் திட்டத்திலிருந்து தடுப்பானாக!”
அப்படியே திக்பிரமை பிடித்து வாயடைத்துப் போனார் உமைர் இப்னு வஹ்பு. வாய் திறந்தபோது வந்த முதல் வாக்கியம் “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்” உமைரின் அத்தனைத் திட்டமும் ஏற்பாடுகளும் சடுதியில் நொறுங்கிப் போனது மட்டுமில்லாமல் நிலைமை அப்படியே தலைகீழாகவும் மாறிப்போனது.
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும் எங்களுக்காக தாங்கள் வானிலிருந்து கொண்டு வந்த வஹீயையும் நம்ப மறுத்தோம். ஸஃப்வானுக்கும் எனக்கும் இடையில் நிகழ்வுற்ற உரையாடல் – அது, என்னையும் அவரையும் தவிர யாருக்கும் அறவே தெரியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதைத் தங்களுக்குத் தெரிவித்திருக்க வாய்ப்பே இல்லை. என்னை இங்கு இட்டுவந்து, நேர்வழியான இஸ்லாத்திற்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”
பிறகு முறைப்படி சாட்சி பகர்ந்து இஸ்லாத்திற்குள் நுழைந்தார் உமைர் இப்னு வஹ்பு, ரலியல்லாஹு அன்ஹு!
தம் தோழர்களிடம் திரும்பிய நபியவர்கள், “உங்கள் சகோதரருக்கு மார்க்கத்தையும் குர்ஆனையும் கற்றுத் தாருங்கள். அவர் மகனை விடுவியுங்கள்”
ஒற்றை வாக்கியத்தில் வில்லன் ஒருவர் சகோதரனாகிப்போன ஆச்சர்யம் நிகழ்ந்தது அங்கு. அதை உரைப்பதற்கு முன்நொடி வரையிலான அனைத்தும் துடைக்கப்பட்டு அழிந்து போகிறது, முழு முற்றிலுமாய். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தோழர்களுக்குப் பேருவகை பொங்கியது! உமர் (ரலி) கூறினார், ”உமைர் இப்னு வஹ்பு நபியவர்களிடம் வந்தபோது, அவரைவிட ஒரு பன்றி எனக்கு உவப்பானதாய் இருந்தது. இப்பொழுது, என் சொந்தப் பிள்ளைகளைவிட நான் இவரை மிக அதிகம் நேசிக்கிறேன்”
அல்லாஹ், அவனுடைய நபி, இவர்களின் விருப்பு வெறுப்பே வாழ்க்கையாய், மன இச்சை அனைத்துமே இறை உவப்பு சார்ந்ததாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சுக துக்கம் என்பதன் அர்த்தம் அவர்களது அகராதியில் வேறு.
அடுத்து சில பல நாட்கள், மக்கா, தம் உறவு, ஸஃப்வான் என்று அனைத்தும் அனைவரும் மறந்து ஆன்ம ஞானத் தேடலில் மூழ்கிப்போனார் உமைர். அவர் நெஞ்சமெங்கும் குர்ஆனின் ஒளி ஊடுருவிப் பரவ ஆரம்பித்தது. தம் வாழ்க்கையிலேயே இவைதாம் உயர் தருணங்கள், அர்த்தமுள்ள நாட்கள் என உணர ஆரம்பித்தார் அவர்.
இங்கு இவ்வளவு நடைபெற்றுக் கொண்டிருக்க, இவை எதுவுமே தெரியாமல் குரைஷிகளின் குழுக்களிடம் சென்று, “பத்ரு இழப்பை ஈடுசெய்ய, விரைவில் நற்செய்தி வரப்போகிறது பாருங்கள்” என்று சொல்லித் திரிந்து கொண்டிருந்த ஸஃப்வான், தினமும் மக்கா – மதீனா சாலையில் சென்று நின்றுகொண்டு, கடந்து செல்லும் பயணிகளிடம் எல்லாம், “உமைர் இப்னு வஹ்பு எனக்கு ஏதும் செய்தி சொல்லி அனுப்பினாரா?” என்று கேட்பது வாடிக்கையாகிப் போனது. அவர்களும் உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள்.
நாளாக, நாளாகக் கவலையும் மன வேதனையும் அதிகமாகி இருப்புக் கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தார் ஸஃப்வான். அப்பொழுது ஒருநாள் மதீனா செய்தி அறிந்திருந்த ஒரு பயணி உண்மையைச் சொல்லி விட்டுச் சென்றார். “உமைர் இப்னு வஹ்பு பற்றியா கேட்கிறீர்கள்? அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நல்ல பிள்ளையாய் நபியவர்களிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறாரே!”
இடி விழுந்தது போன்ற அந்தச் செய்தியைக் கேட்டு, தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார் ஸஃப்வான். ‘உலகம் முழுவதுமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளும்; ஆனால் ஒருக்காலத்திலும் உமைர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என்பது அசாத்தியம்’ என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் இத்தகைய செய்தி வந்தால் பிறகு வேறென்ன செய்வார்?
தேவையான இஸ்லாமியப் பாடங்களும் குர்ஆனும் கற்றுத்தேர்ந்த உமைர், நபியவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! என் வாழ்நாளின் பெரும்பகுதியை அல்லாஹ்விடமிருந்து வந்த சத்தியத்தின் ஒளியை அணைக்கச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். முஸ்லிம்களுக்கு அளவற்ற தொல்லையும் கெடுதலும் புரிந்தேன். எனக்கு இப்பொழுது அனுமதி அளியுங்கள். நான் மக்கா சென்று குரைஷிகளை இஸ்லாத்தை நோக்கி அழைக்கப் போகிறேன். அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு நல்லது. மறுப்பவர்களுக்குக் கேடு காத்திருக்கிறது. அஞ்ஞானத்தின்போது நான் முஸ்லிம்களுக்கு இழைத்த துன்பங்களை ஏகத்துவ செய்தி மறுக்கும் குரைஷிகளுக்கு இப்பொழுது அளிக்கப்போகிறேன்.”
மக்கா வந்து சேர்ந்தவர், நேராக ஸஃப்வான் இப்னு உமைய்யாவின் வீட்டிற்குச் சென்றார்; பேசினார்.
“ஸஃப்வான், குரைஷித் தலைவர்களில் ஒருவன் நீ. அவர்களில் நீ தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் உடையவன். கற்சிலைகளை வழிபடுவதும் அவற்றுக்குப் பலிகொடுப்பதும் சரியான செயலாகத் தோன்றுகிறதா உனக்கு? அர்த்தமுள்ள மனிதன் ஒருவனின் மதமாக இது எப்படி இருக்க முடியும்? ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. முஹம்மது அவனுடைய தூதர் என்று நான் உளமாற புரிந்துகொண்டேன், ஏற்றுக்கொண்டேன்”
அப்பொழுது அதெல்லாம் கேட்டு உணரும் மனநிலையில் ஸஃப்வான் இல்லை. நிராகரித்து முகம் திருப்பிக்கொள்ள, வெளியே வந்த உமைர் இப்னு வஹ்பு பரபரவென பகிரங்கமாய்ப் பணி புரிய ஆரம்பித்துவிட்டார். என்ன பணி? பழைய பாவங்களை கழுவித் தொலைக்கும் வகையில் தீவிரமான ஏகத்துவப் பிரச்சாரப் பணி. அதற்கு நல்ல பலன் இருந்தது. அதன் பலனாய் அவர்கள் எல்லாம் மெதுமெதுவே இஸ்லாத்தினுள் நுழைய ஒரு புதிய முஸ்லிம்களின் குழுவொன்று சிறு ஊர்வலமாய் மக்காவிலிருந்து மதீனா புலம் பெயர்ந்தது.
oOo
மக்காவை நபியவர்கள் வெற்றியுடன் கைப்பற்றிய தினம். எதிரிகளுக்கும் தீய விரோதிகளுக்கும் மன்னிப்பும் கருணையும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இதற்குமேல் இந்த ஊரில் வாழ்வது வெட்கக்கேடு, அவமானம் என்று வெளியேறி ஒடினார்கள் சிலர். அவர்களில் ஒருவர் ஸஃப்வான் இப்னு உமைய்யா. மக்காவைக் கைப்பற்ற வந்த முஸ்லிம் படை அணியில் உமைர் இப்னு வஹபும் இருந்தார். தம் நண்பனை உமைர் தேட ஆரம்பிக்க, “அவர் கடல் மார்க்கமாய் வேறு நாட்டுக்கு ஓடிவிட ஜித்தா சென்றுவிட்டாரே” என்று தகவல் கிடைத்தது. அக்காலத்தில் கடல் கடந்து பயணிப்பது பெரும் ஆபத்தான காரியமாய் இருந்தது அரேபியர்களுக்கு. இஸ்லாத்தின்மேல் தாம் கொண்டிருந்த குரோதத்தில் அந்த ஆபத்தெல்லாம் துச்சம் என்று கருதிவிட்டார் ஸஃப்வான்.
நபியவர்களிடம் விரைந்து வந்த உமைர், “அல்லாஹ்வின் தூதரே! ஸஃப்வான் இப்னு உமைய்யா குரைஷிக் குலத்தின் முக்கியஸ்தர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களிடமிருந்து தப்பித்து அவர் ஜித்தாவுக்குச் சென்றுவிட்டார். ஆபத்தான கடல் பயணத்திற்கும் அவர் தயாராகி விட்டதாய்த் தெரிகிறது. அவருக்கு மன்னிப்பும் பாதுகாவலும் அளிப்பதாய்த் தாங்கள் தயவுசெய்து உறுதி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அளித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). “அடையாளமாய் ஏதாவது தாருங்களேன். என் நண்பனிடம் அதை ஆதாரமாய்க் காண்பிப்பேன்.“
மக்காவில் நுழையும்போது தாம் அணிந்திருந்த தம் தலைப்பாகையை அவிழ்த்து அளித்தார்கள் நபியவர்கள். அதைப் பெற்றுக்கொண்டு ஜித்தாவுக்குப் பறந்தார் உமைர் இப்னு வஹ்பு. வேகவேகமாய்ச் சென்றவர் துறைமுகத்தில் படகில் ஏறப்போன ஸஃப்வானைப் பிடித்துவிட்டார். “உன்னை நீயே அழித்துக் கொள்ளுமுன் நான் சொல்வதைக் கேள். நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து உனக்கு வாக்குறுதிப் பெற்று வந்துள்ளேன்.”
“என்னை விட்டுவிடு. பொய் உரைக்கிறாய் நீ”
“ஸஃப்வான்! கருணையில் மிகைத்த, அன்பான ஒரு மனிதரிடம் பேசிவிட்டு நான் உன்னிடம் வந்திருக்கிறேன்” என்று மனம் தளராமல் தொடர்ந்தார் உமைர்.
“என் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று அஞ்சுகிறேன்” என்றார் ஸஃப்வான்.
“அந்தக் கவலையை விடு. நீ கற்பனையும் செய்ய முடியாத இரக்கக் குணமுள்ளவர் அவர்” என்று தாம் பெற்று வந்திருந்த உத்தரவாதத்தைக் காட்டினார் உமைர். இறுதியில் இணங்கிய ஸஃப்வான் மக்கா வந்து நபியவர்களைச் சந்தித்து நான்கு மாத அவகாசம் பெற்றுக்கொண்டு தாமே சுயமாய் இஸ்லாத்தில் இணைந்தார்.
இஸ்லாத்தின் கொடிய விரோதியாய் இருப்பவர்கள், அல்லது இஸ்லாம் பற்றிய அறிமுகம்கூட இல்லாதிருப்பவர்கள் என்று பலர் ஏதோ ஒரு திருப்புமுனை நிகழ்வில், இஸ்லாத்தை ஏற்கிறார்கள். அத்துடன் நில்லாமல் அப்படியே அதில் புதைந்து வரலாற்றுப் பாடமாகவும் ஆகிவிடுகிறார்கள். இது தோழர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. “ஏன் அப்படி?” என்று சார்பற்று சற்றுக் கவனமுடன் சிந்தித்தால் போதும். சத்தியம் அனைத்து மனங்களுக்கும் சாத்தியமாகும்.
வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிரான தீய விரோதியாய் இருந்த உமைர் இப்னு வஹ்பு, சத்தியம் ஏற்ற நொடிமுதல் இஸ்லாத்திற்காக உழைக்கும் அசாத்தியப் போராளியாக மாறிப்போனார். தம் மக்களுக்கு ஏகத்துவத்தை எடுத்துச்சொல்லும் செயல் வீரராகிப் போனவர், எந்த முக்கியப் போரையும் தவறவிடாது நபியவர்களுடன் இணைந்து போரிட்ட போர் வீரராகவும் ஆகிப்போனார். அண்டை நாட்டு மக்களுக்குத் தம் தூதுச் செய்தியைச் சொல்ல நபியவர்கள் அனுப்பி வைத்த தோழர்களுள் உமைர் இப்னு வஹ்பும் ஒருவர். இஸ்லாத்தை அழிக்க வாள் ஏந்தி வந்தவர், நபியவர்களின் தூதுச் செய்தியின் ஓலை ஏந்தி இஸ்லாத்தின் பிரதிநிதியாக உயர்வடைந்து போனார்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
சத்தியமார்க்கம்.காம்-ல் 05 ஜூலை 2011 அன்று வெளியான கட்டுரை