தங்கம் என்பது ஒரு தனிமையான கனிப்பொருள்: உலக மக்கள் யாவராலும் போற்றப்படும் உலோகம். உலக நாடுகள் அத்தனையும் தங்கள்

புழக்கத்திலுள்ள நாணயமாற்று விகிதத்தை இந்தத் தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிட்டே நிலைநிறுத்துகின்றன. இப்படிப்பட்ட விலையுயர்ந்த மதிப்புமிக்க உலோகம் 100க்கு 100 தூய்மையுடன் நமக்குக் கிட்டுவதில்லை. ஒரு துண்டு தங்கத்தை நாம் எத்தனை வகையான ரசாயன சுத்திகரிப்புக்கு அதி கவனத்துடன் உட்படுத்திய போதினும், காற்றில் மிதக்கும் தூசு, உருக்கும் கருவியிலுள்ள அழுக்கு அல்லது புழுதி அதில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. எனவேதான், தங்கக் கட்டிகளை ‘பிஸ்கட்’டாக (Biscuit) வடித்து விற்கும் ஸ்விட்ஸர்லாந்து நாட்டு ரசாயனக்கூடம், ஒவ்வொரு துண்டும் எத்தனை கிராம் எடை என்பதை அதன்மீது பொறிக்கும்போதே, அது 99% தூய்மையுடையது என்பதையும் உறுதிப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். அதாவது 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியில் 99 கிராம் மட்டுமே தங்கம்; மீதி 1 கிராம் வேறு அன்னியப்பொருள் என்பது விளக்கம். இன்னம் சற்றுத் தெளிவாகச் சொல்வதென்றால், 1 கிலோ எடையுள்ள தங்க ‘பிஸ்கட்’ கட்டிகளை வாங்க நாம் கொடுக்கும் பணம், 990 கிராம் தங்கத்துக்கும் 10 கிராம் அழுக்குக்கும் செலுத்தப்படுகிறது என்னலாம். எனவே, 100% தூய்மையான தங்கம் எங்கும் கிடைக்காது; கிடைக்க வழியுமில்லை.

மேகத்திலிருந்து வடிகிற மழைநீர்த் துளிகள் தூய்மைமிக்கன; அப்பழுக்கு அற்றவை; குற்றங்குறை இல்லாதவை என்றெல்லாம் சாதாரண மக்கள் கருதுவர். ஆனால், அறிவியல் துறை வல்லுநர்கள், ஒவ்வொரு மழைநீர்த் துளியிலும் நுண்ணிய அழுக்கு படிந்திருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுகிறார்கள். மேகத்தில் மிதந்து பறக்கும் தூசுகள், அல்லது மேலிருந்து விழும் நீர்த்துளி இடைவழியில் சந்திக்க நேரிடும் புவிமண்டல அழுக்கு அணுக்கள் மழைநீரில் கரைந்துவிடுகின்றன; எனவே, மழைநீர் 100க்கு 100 தூய்மையுடையதில்லை; முற்றும் தூய்மையான தண்ணீர் எங்குமில்லை என்றெல்லாம் அவர்கள் கூறுகிறார்கள்.

திட, திரவப் பொருள்கள் தூய்மைகெட்டு இருப்பதைவிட, வாயுப் பொருளாகிய நாம் மூச்சு இழுத்துவிடும் காற்றில் இருக்கும் கலப்படத்துக்கு அளவே இல்லை. சுற்றுப்புறச் சூழல் மாசுபடிந்திருக்கும் அவலக்கோலங்கள்பற்றி அனைத்து நகரில் வாழும் அனைவருமே நன்கறிவர். எனவே, 100க்கு 100 தூய்மையான காற்றை எங்கும் காண்பதற்கில்லை.

இப்படியே எல்லாப் பொருள்கள் பற்றியும் எவ்வளவும் எழுதிக்கொண்டே போகலாம். ஆக, நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், உலகில் கலப்படமில்லா இயற்கைப் பொருள் எதுவுமில்லை என்பதுதான். இயற்கைப் பொருள்களின் கதியே இதுவென்றால், செயற்கைப் பொருள்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? – எங்கும் கலப்படம்! எதிலும் கலப்படம்!

ஆனால், கலப்படமே இல்லாத, தூய்மை சற்றும் கெடாத, பரிசுத்தம் என்றும் அகலாத ஒரே ஒரு பொருள் மட்டும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது; அதுதான் தூயனாகிய ஏக இறைவன் மக்கட்கருளிய ‘தீனுல் இஸ்லாம்’. சர்வ சாந்தி மயமான இந்தச் சுத்த சன்மார்க்கம் தன்னளவில் மட்டும் தூய்மை நிரம்பியதாயில்லை; மாறாக, இதை ஏற்றுக் கவனத்துடன் செயல்படுகிறவர்களும்கூட, இவ்வுலகிலும் மறுவுலகிலும் முழுத்தூய்மையைப் பூரணமாக அடையப்பெறுகிறார்கள் என்பது கண்கூடாம். எப்படி என்று கேட்கிறீர்களா? பின்வரும் விளக்கங்களை நுணுக்கமாகப் பயிலுங்கள்:-

உலகம் தோன்றிய நாளிலிருந்து இறைவன் மக்கட்கருளிய ஒவ்வொரு வேதத்திலும் வேதாகமத்திலும் தான் மட்டுமே தூய்மைமிக்கவன்; கலப்படங்களுக்கு அப்பாற்பட்டவன்; இழுக்குக் கற்பிக்க முடியாதவன்; மாசுமறு அற்றவன்; இணையோ துணையோ இல்லாதவன்; உருவம் வடிக்க உட்படாதவன் என்றெல்லாம் தன்னறிவிப்புக் கொடுத்திருப்பதைக் காண்கிறோம். முந்திய வேதங்கள் மானிடச் சேஷ்டையால் மாசுபட்டுவிட்டன. ஆகையால், அவற்றை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தூய்மை கெடாது சென்ற 1406 ஆண்டுகளாக அப்பட்டமாக இலங்கிவரும் திருமறையாம் குர்ஆனை மட்டும் இங்கு நாம் கருத்துள் கொள்வோம். இப்பரிசுத்த அருமறையில் அவன் எப்படியெல்லாம் தூய்மையைக் காப்பாற்றுகிறான்? எப்படியெல்லாம் அதைக் காப்பாற்ற நமக்குக் கற்றுத் தருகிறான் என்பனவற்றை நினைவுகூர்வோம்.

இறைவன் தூய்மையானவன் என்பதைத் தூய்மையாகப் படைக்கப்பட்ட மனிதன் முதற்கண் ஏற்றுக்கொள்ளக் கட்டுப்பட்டிருக்கிறான். எந்த நிமிடத்தில் மானிடன் இதை ஏற்கத் தவறிவிடுகிறானோ – மறுத்துவிடுகிறானோ – மறந்துவிடுகிறானோ அந்த நிமிடமே தூய்மை இழந்து, ஆபாசமான அழுக்குகளைத் தன் நெஞ்சத்தில் குடிபுகுமாறு செய்துவிடுகிறான். இவ்வாறு ஒருவன் தனது உள்ளத்தை மாசுறுமாறு செய்வதிலிருந்து விடுபட வேண்டுமானால், “தூய்ம ைமிக்கது” என்னும் பொருளுள்ள ‘தய்யிப்’ ஆகிய கலிமாவை மனமார உச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது. அழுக்குப் படிந்த துணியை சோப்பு அல்லது ‘டிட்டர்ஜண்ட்’ எனும் சோப்புத் தூள் எப்படித் தூய்மைப்படுத்துகிறதோ, அதேவிதமாகக் கலிமாத் தய்யிப் என்னும் பரிசுத்த நம்பிக்கை யாவரின் மாசுபடிந்த உள்ளத்தையும் தூய்மை அடையச் செய்துவிடுகிறது. 100க்கு 100 உள்ளத் தூய்மையை உண்டுபண்ணும் சக்தி பெற்றிருக்கும் காரணமாகத்தான் ‘லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்னும் கலிமா வாசகம் தய்யிப் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இந்த நம்பிக்கை குடிபுகுந்த உள்ளம் 100% தூய்மை பெறுகிறது.

மானிடன் உயிர் வாழ்வதற்கு உணவும் பானமும் இன்றியமையாதன. ஆனால், எல்லா உணவும் பானமும் தூய்மை பெற்றில்லை. அவற்றுள் இருவகையுண்டு: 1. முற்றிலும் தீமை பயப்பவை; 2. சிறிதளவு மாசு உள்ளவை. இவ்விரண்டுள் முதல் இனத்தை முழுதுமாக ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். ஆகையால், அதை ‘ஹராம்’ என்று இறைவன் நமக்கு அறிவித்துள்ளான். ஹராமான அத்தனை உணவுகளும் பானங்களும் நிபந்தனையின்றி வீசி எறியப்பட வேண்டியவை ஆகும். ஏனென்றால், அவை 100% தீங்கு பயக்கின்ற காரணத்தால். அனுமதிக்கப்பட்ட “ஹலால்” ஆன உணவுவகைகளென்றாலோ, அவற்றிலும் தேவையற்ற அன்னியப் பொருள் கலந்து இருக்கக்கூடும், ஆகையால், அவற்றிலுள்ள மாசு நீக்கி உண்ணவேண்டும் என்பது விளக்கமாகிறது. இவ்வாறு பரிசுத்தப்படுத்தப்பட்ட ஆகுமான பொருள்கள் ‘ஹலாலன் தய்யிபன்’ என்று அழைக்கப்படுகின்றன. நாம் தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய தங்கக்கட்டி உபமானத்தை இங்குக் கருத்தில் கொள்வோம். அதாவது, ஹலாலான பொருள்கூட முற்றிலும் தூய்மைபெற்றில்லை. ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி ஹலாலானவை என்றாலும், அவை தூய்மைபெற – (தய்யிபாக) அவற்றை நன்கு அலசிக் கழுவி, மசாலாப் பொருள்கள் கலந்து, சுவைபெருகச் சூடாகச் சமைத்து அப்புறந்தான் அருந்தவேண்டும். பச்சை மாமிசம் தூய்மை பெற்றில்லை. ஆகவே, முதற்கண் அதை நாம் தூய்மைபடுத்தக் கட்டுப்பட்டிருக்கிறோம். அப்போதுதான் ‘ஹலாலன் தய்யிபன்’ என்னும் இலக்கணம் அதற்குப் பொருந்தும்.

ஒரு மனிதன் நாள் முழுதும் நன்மையான காரியங்களைச் செய்கிறான்; தீமையை முற்றும் ஒதுக்கி நடக்கிறான்; மெய் பேசுகிறான்; ஆகுமான வழியில் பொருள் ஈட்டுகிறான்; நெறியான கடமை கட்டுப்பாடுகளை மதித்து நடக்கிறான என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் அவன் 99% தூய்மையுடையவனாக அல்லது அதனினும் குறைவான தூய்மைபெற்றவனாகத்தான் விளங்கமுடியும். ஏனென்றால், இயற்கைச் சூழ்நிலையின் மாசு அவனது உள்ளத்தில் ஒட்டிக்கொள்கிறது. அந்த மாசு அகல, அவன் குறைந்த பட்சம் தினமும் ஐந்து வேளையாவது சில நிமிடங்களை ஒதுக்கி, பரிசுத்தமான இறைவனை வணங்கித் தன்னைத் துலக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது, தொழுகை என்னும் கடமை மட்டுமே ஒரு மானிடனைப் பரிசுத்தம் அடையச் செய்கிறது. அந்தத் தொழுகையை நிறைவேற்ற முற்படுகிறவன் என்னதான் உள்ளப் பரிசுத்தத்துடன் இலங்கியபோதினும், பள்ளியறையிலிருந்து தூங்கி எழுந்து, அல்லது கழிப்பிடத்தில் சிறுநீர் முதலியன கழித்துவிட்டு, அப்படியே நேரே தொழச் செல்ல முடியாது. ஏனென்றால், அவன் அசுத்தத்துடன் இருக்கிறான். அவன் முதற்கண் முழு உடல் நனைய நீராடியோ, அல்லது ஒலு என்னும் சிறு சுத்தம் செய்துகொண்டோ தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. தூய்மை கெட்டவன் தொழுகையை நிறைவேற்ற முடியாதல்லவா?

இறைவன் அருளிய திருமறையில் எங்கெங்கே தொழுகையை நிலைநிறுத்தக் கட்டளையிடுகின்றானோ அங்கெல்லாம் ‘ஜக்காத்’ என்னும் கடமையையும் எல்லாரும் நிறைவேற்றியாக வேண்டும் என்னும் கட்டளை பிறப்பித்திருப்பதைக் காண்கிறோம். ‘ஜக்காத்’ என்னும் சொல், ‘அவன் பரிசுத்தப்படுத்தினான்’ – (ஜக்கா) என்கிற மூலத்திலிருந்து பிறந்ததாகும். அதாவது, ‘பரிசுத்தம் – தூய்மை’ என்பதுதான் ஜக்காத் என்பதன் பொருளாகும். தொழுவதால் மட்டும் 100% தூய்மைபெற இயலாது; அதனுடன் ஜக்காத் என்னும் முழுப்பரிசுத்தம் பொருத்தப்பட்டால்தான் அது நிறைவுறும் என்கிறான் இறைவன். “குளித்து முழுகி நீராடி, ஒலுச்செய்து, துப்புரவாக நின்று தொழுவதுமட்டும் ஏன் முழுத் தூய்மை தராது? ஜக்காத்தைச் செலுத்தினால்மட்டும்தான் 100% தூய்மை கிட்டுமோ?” என்று எவரேனும் வினா எழுப்புவரேல், அதற்கான சரியான விடை இதுதான்:-

ஒரு மூமினாகிய நல்ல முஸ்லிம் முற்றிலும் ஆகுமான வழியில், நேர்மையான முறையில், அரசாங்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, ஓர் இழுக்கும் கற்பிக்க முடியாவண்ணம் பொருள் ஈட்டுகிறார். உத்தமமான ஊழியமும், நாணயமான வர்த்தகமும், எவரையும் வஞ்சிக்காத வாணிபமும் அப்பழுக்கில்லாத செல்வத்தைத் தமக்கு நல்கியுள்ளன என்று அவர் பெருமைப்படக்கூடும். ஆனால், தங்கக் கட்டியில்கூட ஒரு சதவிகித மாசு கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கிறது என்னும் உண்மையை அவர் உணரத் தவறிவிடுகிறார். எனவே, அவர் சம்பாதித்த நேர்மையான செல்வத்தில் எவரும் அறியாமலே சிறிதளவு – (2 1/2%) அழுக்குப் படிந்திருக்கிறது என்கிற இயல்பினை மறந்துவிடுகிறார். தூய்மையான தொழுகையை நிறைவேற்றத் துப்புரவாக அவர் நிறைநிற்கிற அதே நேரத்தில், அவருடைய சட்டைப் பையில் இருக்கிற ஒவ்வொரு இரண்டு வெள்ளி ($2.00)யிலும் ஐந்து, ஐந்து காசு வீதம் அசுத்தம் ஒட்டிக்கிடப்பதை நினைத்தும் பார்ப்பதில்லை; மற்றும், தம் கையிருப்பிலுள்ள, இரும்புப் பெட்டியிலுள்ள அல்லது வங்கிகளில் உள்ள, அல்லது பங்குகளில் (Shares), கடன் பத்திரங்களில் முடங்கிய ஒவ்வோர் ஆயிரம் வெள்ளியிலும் 25 வெள்ளி வீதம் அன்னியப் பொருள் கலந்து அசுத்தம் படிந்து கிடக்கிறது என்பதைக் கருதிப் பார்ப்பதில்லை. ஆகவேதான், “உனது தொழுகை தூய்மைபெற வேண்டுமானால், உனது செல்வத்தையும் நீ பரிசுத்தப்படுத்திக் கொள்!” என்று அடிக்கடி நினைவூட்டுகிறான் இறைவன். அழுக்குப்படிந்த செல்வத்தை வைத்திருப்பவனின் தொழுகையும் அழுக்காகிப் பழுதுபட்டுவிடும் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும்? தொழுபவனின் உள்ளம், உடல், ஆடை, தொழும் இடம் ஆகியவை எவ்வாறு தூய்மை மிக்கனவாக இருக்கவேண்டுமோ, அவ்வாறே அவனது செல்வம், ரொக்கம், பத்திரங்கள் ஆகியனவும் முழுப்பரிசுத்தம் குன்றாமலிருக்க வேண்டும் என்பது வெளிப்படை. “இரண்டு வெள்ளியில் ஐந்து காசுகளை நீக்கித் தூய்மைப்படுத்துங்கள்!” என்கிறான் இறைவன். மாசுபடிந்த $2.00 உங்களை அசுத்தப்படுத்த விரும்புகிறீர்களா? அல்லது அழுக்கு நீக்கப்பெற்ற $1.95 உங்களைத் தூய்மைப்படுத்தட்டும் என்று விழைகிறீர்களா?

ஆண்டு முழுதும் ஒரு மூமின் ஹலாலான, தய்யிபான உணவுகளை உட்கொண்டுவந்தாலும், அப்பொழுதும் அவரது உடலுறுப்புகளும் உள்ளமும் ஏதோ ஒரு வழியில் மாசுபட்டு விடுகின்றன என்னும் காரணத்தால்தான், ரமலான் மாதந்தோறும் அவர் பகல் நேரங்களில் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்துத் தூய்மை பெற வேண்டும் என்று கட்டளையிடுகிறான் இறைவன். நோன்பிருக்கத் தவறினால், முற்சொன்ன அழுக்கு ஆண்டுதோறும் பெருகிக்கொண்டே போய், ஒருவனை அக-புற நோய்களுக்குப் பலியாக்கி விடுகிறது. குடப்பாலில் துளி விஷம் விட்டாற் போல், நோன்பு நோற்கத் தவறியவனின் கலிமா தய்யிப் குடியிருக்கும் உள்ளமும், ஒழுங்கான தொழுகை நடவடிக்கையும், பரிசுத்தமான ஜக்காத் ஈயப்பெற்ற பணமும் இயல்பாகவே தூய்மை கெட்டுவிடுகின்றன!

கலிமா, தொழுகை, ஜக்காத், நோன்பு என்னும் நான்கு முழுத் தூய்மைகளையும் ஒரு மூமின் நிலைநாட்டியதற்கு அறிகுறியாக, அவர் மக்கா நோக்கிப் புனித யாத்திரை (ஹஜ்) மேற்கொள்ளும்பொழுது, தம் வழக்கமான அத்தனை ஆடைகளும் அசுத்தம் பெற்றுவிட்டன என்னும் காரணத்தால் அவற்றை நீக்கி, தூய்மையான, துல்லியமான, தையலில்லாத, வெள்ளை வெளேரென்ற இரு துண்டுத் துணிகளைப் புனைந்து, இறைச் சன்னிதானத்தில் 100% தூய்மையுடன் சுடர்விடுகிறார்.

பூவுலக வாழ்க்கை ஒரு நாளன்று முடிவுறுகிறது. ஆவி நீங்கிய உடல் அசுத்தமாகிவிடுகிறது. ஏனென்றால், உயிர் இருக்கிறவரையில்தான் ஒருவனால் தனது உடலை மாசுபடாமல் தற்காத்துக்கொள்ள இயலும். ஆகவே, உயிர் பிரிந்த உடலை மற்றுளோர் சுத்தமாகக் கழுவிக் குளிப்பாட்டி, சிறிதேனும் அழுக்கு நகத்து இடுக்கிலோ சதை மடிப்பிலோ ஒட்டியில்லாமல் முற்றும் போக்கி, தையலில்லாத சுத்தமான வெள்ளையுடையில் கட்டிப் புனைந்து, ஜனாஸாத் தொழுகை தொழுது மேலும் பரிசுத்தப்படுத்தி, மறுவுலக வாழ்க்கைப் பாதையான மண்ணுக்குள் புதைக்கிறார்கள். இங்கும் இறுதித் தூய்மை பளிச்சிடுகிறது.

பிறவி முதல் ஒவ்வொரு துறையிலும் வகையிலும் கலப்படம் களைந்து பரிசுத்தமாக வாழ்ந்து, தூய்மையைக் கடைப்பிடித்து. முழுத் தூய்மையாக இறைவனடி சேர வழி கற்பிக்கும் மாரக்கம் ஒன்றே ஒன்றுதான் உலகில் உண்டு. அதுதான் இஸ்லாம். சுத்த சாந்திமயமான இஸ்லாம் இவ்வுலகில் 100% தூய்மையைப் புகட்டி ஒரு மூமினை அப்பழுக்கற்றவனாக ஆக்கிவிடும் காரணத்தால்தான், அப்பட்டமான தூய்மை நிலவும் சுவர்க்கத்தை மறுவுலகில் அனுபவிக்க அவன் 100% அருகதை பெற்றுவிடுகிறான்; முழு வெற்றி அடைந்துவிடுகிறான். (குர்ஆன் 23-ஆவது அத்தியாயத்தின் தொடக்க வாசகங்களை ஊன்றிப் படித்து உண்மையுணருங்கள்.)

எனவே, 100% தூய்மைதான் இஸ்லாம். இப்படி 100-க்கு 100 முழுப் பரிசுத்தம் புகட்டும் வல்லமை பெற்ற மற்றொரு மார்க்கம் உலகிலில்லை. தங்கக் கட்டியில், குடிநீரில், மூச்சுவிடும் காற்றில் எல்லாம் உள்ள குறைகளை அகற்ற எவராலும் முடியாது. ஆனால், இஸ்லாத்தை ஏற்ற எந்த ஆன்மாவும் ‘தூய்மை 100%’ என்னும் முத்திரையை ஈருலகிலும் அழுத்தமாகப் பொறிக்கப்பெற்றுவிடுகிறது! இது 100% உண்மை!

– N.B. அப்துல் ஜப்பார், B.A.

வெளியீடு: சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்  ஜமாத்  மீலாது பெருவிழா மலர் – 1406 ஹி. /1986

Related Articles

Leave a Comment