ன்னத்தில் கை வைத்தபடி, ஆப்பிரிக்காவின் வடமேற்கு திசை நோக்கிப் பார்த்துக்கொண்டு சர்வதேச உதவி அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. அகதிகள் உருவாகி அண்டை நாடுகளுக்கு ஓடப்போகிறார்கள்; பொதுமக்கள் நிறைய பேர் உயிரிழக்கப் போகிறார்கள்; அப்பாவிகளின் உரிமை சகட்டுமேனிக்கு மீறப்படும்; தாக்குதலுக்கு ‘பதில் தாக்குதல்’ என்று நடந்து ஓயாமல் வெடிச் சப்தம் ஒலிக்கப்போகிறது என்று நிறைய நியாயமான கவலைகள்.

அதற்கேற்றாற்போல், அங்குள்ள சில நாடுகள், “ஐயா ஐ.நா.! எங்களின் இந்த அண்டை நாட்டில் கொஞ்சம் தலையிட்டு அங்கு நிலைமையைச் சீர்ப்படுத்துங்கள். இல்லையென்றால் எங்களுக்குத் தலைவலி” என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஒத்தாசைக்கு நாங்கள் 3300 படைவீரர்கள் தருகிறோம் என்று தெரிவித்துள்ளது ஆப்பிரிக்காவின் பதினாறு உறுப்பு நாடுகள் கொண்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு  (Economic Community of West African States – ECOWAS). “நாங்கள் 250 இராணுவப் பயிற்சியாளர்களைத் தருகிறோம். உங்கள் வீரர்களுக்கு சிறப்பான இராணுவப் பயிற்சி அளிப்பார்கள்” என்று கூறியுள்ளது, European Union (EU).

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி இவ்விஷயத்தில் ஆழ்ந்து திட்டமிட்டு வருகின்றன. நடவடிக்கைக்கு இன்னும் நேரம் குறிக்கப்படவில்லை’ என்று மேற்குலக அரசியல் நிபுணர் ஒருவரின் தகவலை ஊடகள் வெளியிட்டுள்ளன.

மேற்சொன்ன கவலைகளுக்கு உரிய நாடு மாலி! இந்த நாட்டைப்பற்றி பார்க்கும்முன் காலாற நகர் உலா ஒன்று சென்று வந்துவிடுவோம். அது மிகப் பழங்கால நகரம். அதனால் சற்று பின்னோக்கி நகரவேண்டும்.

o-O-o

பத்தாம் நூற்றாண்டு, ஆப்பிரிக்காவின் பெர்பெர் (Berber) இனத்தைச் சேர்ந்த ஒருவர் சஹாரா பாலைவனத்தின் தெற்கு எல்லையில் ஊர் ஒன்றை உருவாக்கினார். அந்த ஊருக்கு திம்புக்தூ (Timbuktu) என்று பெயரிடப்பட்டது. அக்காலத்தில் பண்டங்களை ஓர் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வாங்கி விற்க, ஒட்டகம், கழுதை என்று பிராணிகளின் முதுகில் சுமையைச் சுமந்து பயணம் புரியும் வர்த்தகர்களுக்கு திம்புக்தூ தோதான இளைப்பாறல் ஊராய் அமைந்தது. சிறிது சிறிதாக ஊரின் அறிமுகம் மக்களிடம் பரவ, 11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் வர்த்தகர்கள் அங்கு வந்து குடியேறி கடை, கண்ணி துவங்கி, மக்கள் நிரந்தரமாய் வாழும் ஊராய் உருமாற்றமடைந்தது திம்புக்தூ.

தொழில் புரிவோம், காசு பார்ப்போம் ஓய்ந்த பொழுதில் உல்லாசம் புரிவோம் என்று அக்கால முஸ்லிம் வர்த்தகர்கள் உலக ஆதாயத்துடன் தங்களது வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ளவில்லை. அவர்கள் சென்ற இடமெல்லாம் இஸ்லாமும் இஸ்லாமியக் கல்வியும் மக்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருந்தன. திம்புக்தூவிலும் மக்களுக்கு குர்ஆன் அறிமுகமானது. அதை அம்மக்கள் ஓதியுணர எழுத, படிக்க கற்றுத்தந்தார்கள் முஸ்லிம் வர்த்தகர்கள். இஸ்லாம் வளர ஆரம்பித்தது. ஓங்கி வளர ஆரம்பித்தது. நாளாவட்டத்தில் திம்புக்தூ வளமான வர்த்தக நகரமாய் உருமாற்றம் அடைய, அதைவிட மிகச் சிறப்பாய் அந்நகர் கல்விச் சாலைகளுக்குப் புகழ் பெற்றது. பல்கலைக் கழகங்கள் தோன்ற ஆரம்பித்தன.

பதினான்காம் நூற்றாண்டில் திம்புக்தூ ‘மாலி’ பேரரசின் அங்கமாகியிருந்தது. கல்விச் சாலைகளின் மையம் என்றது அதன் முகவரி. பின்னே? ஏறத்தாழ 180 கல்விச் சாலைகள், நூற்றுக்கணக்கான முஸ்லிம் அறிஞர்கள், உலகின் பல பகுதிகளிலிருந்தும் கல்வி கற்பதற்காகவே அந்நகருக்கு கூட்டம் கூட்டமாய் வந்து சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் என்று நகரெங்கும் கல்வி வாசம். நான்கு கட்டமாய் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. சமயக் கல்வி, இலக்கியம், அறிவியல், கணிதம், மருத்துவம் என ஆழமான கல்வி அமைப்பு. திம்புக்தூ பல்கலையில் மூன்று முக்கியப் பள்ளிவாசல்கள் இருந்தன.

15ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஸோங்காய்ப் பேரரசு (Songhai Empire) கோலோச்ச ஆரம்பித்தபோது திம்புக்தூ அதன் அங்கமானது. அப்பேரரசின் காலம் வளமான காலம். அதன் பலனை திம்புக்தூவும் அனுபவித்தது. ஆனால் 1591-இல் மொராக்கோவின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டபோது அங்கு துவங்கியது திம்புக்தூவின் இறங்குமுகம். ஆனால் அட்லாண்டிக் பெருங் கடலைத் தாண்டிய நாடுகளுக்கு அடிமைகளாக ஆப்பிரிக்கர்கள் விற்கப்பட்டபோதுதான் (Transatlantic Slave Trade) திம்புக்தூ முழு அளவில் பாதிக்கப்பட்டது.

மேற்கே உருவாக ஆரம்பித்த புது உலகை (New World) கட்டமைக்க வெள்ளைக்காரர்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டனர். ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இனத்தவர்களைக் கொத்துக்கொத்தாய், கப்பல் கப்பலாய்… அடிமைகளாக வாங்கி, அவர்களைத் தென் அமெரிக்காவிற்கும் வட அமெரிக்காவிற்கும் அனுப்பிவைக்க ஆரம்பித்தனர் ஐரோப்பியர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், ஏழை பணக்காரர்கள் என்று எவ்வித பாகுபாடுமில்லை. உன் நிறம் கறுப்பா? நீ அடிமை. நான் ஆண்டான்.

எண்ணி மாளாத மக்கள் அடிமைகளாய் கண்டம் விட்டு கண்டம் கடத்தப்பட்டனர். யார் கண்டிப்பது? வரலாற்றில் படிந்த ஆறாத வடு அது. அந்த இழப்பிலிருந்து திம்புக்தூ விடுபடவேயில்லை. ஒரு காலத்தில் கல்வி வளத்தில் கோலோச்சிய திம்புக்தூ இன்று செல்வ வளமற்ற வறிய நகரம். தவிர மற்றொரு அவலமும் நேர்ந்திருந்தது. அதை இறுதியில் பார்ப்போம்.

இப்படியான இந்நகரத்தை 1893ஆம் ஆண்டு ஃபிரான்சு கைப்பற்றி தன்னுடைய ஆட்சியின் கீழ்கொண்டு வந்தது.

o-O-o

கிழக்கே, மேற்கே என்று நாலாபுறமும் நாடுகள்சூழ நடுவில் மாட்டிக்கொண்ட எலிபோல் அமைந்துள்ள மாலி, ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு.. வடக்கே அல்ஜீரியா (Algeria), கிழக்கே நைஜெர் (Niger); பர்கினா ஃபாஸோ (Burkina Faso), கோட்டுவார் Côte d’Ivoire என்று தெற்கே இரு நாடுகள்; தென்மேற்கில் கினி (Guinea), செனகால் (Senegal); மௌரிடேனியா (Mauritania) மேற்கில்.

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரான்ஸ் மாலி நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றி, தனது காலனி நாடாக்கிக்கொண்டது. அதில் மேலே குறிப்பிட்ட திம்புக்தூவும் அடக்கம். இப்போதைய செனகல் நாடும், மாலியும் அக்காலத்தில் சூடானிய குடியரசு (Sudanese Republic) என ஒரே பெயருடன் திகழ்ந்து வந்தன. நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த பிரெஞ்சு ஆதிக்கம், ஒருவழியாய் 1960 இல் முடிவுக்கு வந்து, அவர்களுக்கும் சுதந்தரம் கிடைத்தபோது, விடுதலையடைந்தவர்கள் மாலி கூட்டரசு (Mali Federation) என்று கூட்டாட்சி ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், சில மாதங்களிலேயே இதெல்லாம் சரிப்படாது என்று தனிக்குடித்தனம் சென்றுவிட்டது செனகல். கூட்டாளி பிரிந்தபின் கூட்டரசு என்ன வேண்டியிருக்கிறது என்று Mali Federation-லிருந்து federation னை நீக்கிவிட்டு வெறும் ‘மாலி’யானது மாலி.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல் ஏறத்தாழ நூறாண்டு அடிமையாகக் கிடந்து விடுதலையடைந்தாலும் கடுமையான பஞ்சம், சர்வாதிகார ஆட்சி. என மாலிக்கு வேறுவித சோதனைகள் வந்தன. அடுத்த 23 ஆண்டுகாலம் சர்வாதிகார ஆட்சியும் கலகமுமாய் நிம்மதியற்றுப் போனது மாலி. இறுதியில் 1991 ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி சர்வாதிகார ஆட்சியைத் தூக்கி எறிய, ஆல்பா உமர் கொனாரி (Alpha Oumar Konaré) ஜனநாயக முறைப்படி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1992, 1997 என்று ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற இரு தேர்தல்களிலும் அவரைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஒருவர் இரண்டு முறைக்குமேல் ஆட்சி வகிக்கக்கூடாது என்பது மாலியின் அரசியலமைப்புச் சட்டம். அதன்படி 2002-ல் அவர் விலகிக்கொள்ள அமாதொ டௌமானி டோரே (Amadou Toumani Touré) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் இரு முறை வாய்ப்பு வழங்கினார்கள் மாலி மக்கள். அதனால் 2007 இல் மீண்டும் இவரே ஜனாதிபதி.

குடியரசு நாடான மாலியில் 90 சதவிகிதம் மக்கள் முஸ்லிம்கள். கிறித்தவர்கள் 1 சதவிகிதம். மற்றவர்கள் இதர மதத்தினர். ஆப்பிரிக்கா என்றதும் கறுப்பு நிறத்தில், ஒரே மாதிரியான முகச்சாடையுடைவர்களாய் அவர்களைப் பற்றிய பிம்பம் நமக்கு இருந்தாலும், மாலியில் அவர்களுக்குள்ளும் ஏகப்பட்ட இனப்பிரிவுகள். நாக்கு சுளுக்கிக்கொண்டால் ஆட்சேபனையில்லை என்பவர்கள் அப்பிரிவின் பெயர்களைப் படித்துப்பார்க்கலாம். பம்பாரா (Bambara), மாலின்கே (Malinke), சொனின்கே (Soninke) என்ற உட்பிரிவுகள் அடங்கிய மாண்டே (Mande) இனம்; பியுல் (Peul), வொல்டைக் (Voltaic), ஸொங்காய் (Songhai), துஆரெக் (Tuareg), மூர் (Moor).

மாலி நாட்டின் 65 சதவிகிதம் முழு பாலைவனம், அல்லது பாலையின் புறவனம். உலகப் புகழ்பெற்ற சஹாரா பாலைவனம் இருக்கிறதே அது மாலியிலும் வடக்கே மனை விரித்துள்ளது. எனவே மாலி தன்னுடைய விவசாயத்திற்கு நம்பிக்கிடப்பது நாட்டின் நடுவே ஓடும் நைஜர் ஆற்றை. மாலியின் தலைநகரம் பமாகோ (Bamako) அந்த ஆற்றின் கரையோரம்தான் அமைந்துள்ளது. பருத்தி, இரும்புத் தாது தொழிற்சாலைகளும் மாலியில் உண்டு. சொல்லப்போனால், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தி நாடுகளுள் மாலியும் ஒன்று. இவை தவிர மாலியில் தங்கச் சுரங்கமும் உண்டு. ஆனால் வருத்தத்திற்குரிய உண்மை யாதெனில், உலகின் 25 ஏழை நாடுகளுள் மாலியும் அடக்கம். ஏற்றுமதி செய்து சொற்ப வருமானம் பார்த்துவிட்டு, வெளிநாட்டு உதவியை நம்பிக் கிடக்கும் அபாக்கிய நிலை மாலிக்கு.

மேலே கரடுமுரடாய் நிறைய இனங்களைப் பார்த்தோமில்லையா, அதில் இங்கு நமக்கு முக்கியம் துஆரெக். இது வலிமை வாய்ந்த, குறிப்பிடத்தக்க இனம். மாலி தவிர, மிகப் பெருமளவில் நைஜெரிலும், பர்கினா ஃபாஸோ, அல்ஜீரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஓரளவும் இந்த இனத்தவர் வசித்து வருகின்றனர்.

மாலி நாட்டில் வடக்கே உள்ள இவர்கள் 1990 இல் நில, கலாச்சார உரிமைகளைக் கோரி அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 1992 இல் ஆல்ஃபா உமர் ஜனாதிபதியாக ஆட்சி அமைத்தாரல்லவா? அவரது அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது; ராணுவ நடவடிக்கை எடுத்துப் பார்த்தது. எதுவும் சரிப்பட்டு வரவில்லை; பிரச்சினை தீரவில்லை. மாறாக, 2007 ஆம் ஆண்டு அது தீவிரமடைய ஆரம்பித்தது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு லிபியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் கைங்கர்யத்தால் ஏகப்பட்ட ஆயுதங்கள் போராளிகளுக்குக் கிடைத்து, நிலைமை படு மோசமானது.

லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கதாஃபி, ஆப்பிரிக்காவின் பல நாடுகளிலிருந்து கூலிப்படையினரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். அவரென்ன அதிபரா? தாதாவா என்று கேள்வி எழுந்தால் இப்பொழுது தேவையில்லாமல் லிபியாவின் வரலாற்றிற்குள் நுழையும்படி இருக்கும். அதனால் நமக்குத் தேவையான தகவலை மட்டும் தெரிந்துகொள்வோம்.

கதாஃபியின் ஆப்பிரிக்கக் கூலிப்படையினருள் துஆரெக் மக்களும் இருந்தனர். லிபியாவின் உள்நாட்டுப் போரில் கதாஃபி கொல்லப்பட்டதும், தாங்கள் அவருக்கு பார்த்த வேலைக்கு கூலியாக பெரும் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு மாலிக்குத் திரும்பி விட்டனர். சுட்டு விளையாடத் தேவையான ஆயுதங்கள் கிடைத்ததும், இவர்களுள் சிலர் வேகவேகமாய் National Movement for the Liberation of Azawad (MNLA) என்ற அமைப்பைத் துவங்கினார்கள்.

இப்படியான அரசியல் மாற்றங்களுக்கு இடையே மாலி நாட்டில் வடக்கே இஸ்லாமியப் போராளி அமைப்பு ஒன்று – அன்ஸார்தீன் – உருவாகி வளர்ந்திருந்தது. அவர்களுடன் சென்று கைகோர்த்தது MNLA. அப்பொழுது தலைநகர் பமாகோவில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது.

அது 22, மார்ச் 2012. ‘அந்தக் கலகக்காரர்களை போராளிகளை அடக்குவதற்கு சரியான முறையில் உதவ மறுக்கிறாயே, என்ன அதிபர் நீ? நீயெல்லாம் நாட்டை ஆண்டு என்ன பயன்?’ என்று மாலி இராணுவம் திடீர் புரட்சி நிகழ்த்தி, ஜனாதிபதி அமாதொ டோரே (Amadou TOURE) வை நீக்கி, நாட்டைக் கைப்பற்றியது. ஆனால், இராணுவத்தின் கையில் நாடு சிக்கிக்கொள்ளாமல், சர்வேதச அழுத்தம் இராணுவப் புரட்சியாளர்கள் மீது விழுந்தது. எனவே, இடைக்கால ஜனாதிபதியாக டியான்கொண்டா ட்ராஒரே (Dioncounda TRAORE) 12 ஏப்ரல் 2012 அன்று நியமிக்கப்பட்டார்.

மத்தியில் நிகழ்ந்த இந்த இராணுவப் புரட்சியும் கவனச் சிதறலும், MNLA, அன்ஸார்தீன் போராளிகளுக்குப் போதுமானதாக இருந்தன. மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர் அவர்கள். மாலியின் வடக்கே அமைந்துள்ள நகரங்களில் சரசரவென்று நுழைந்து, வெகு சிலநாட்களில் மூன்றில் இரண்டு பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் கொண்டுவந்தனர். MNLA அமைப்பின் தலைவர் பிலால் அஃக் ஷெரிஃப் (Bilal Ag Cheriff) காஓ (Gao) நகரில் உள்நாட்டு மக்கள் குழுவினரிடம் அறிக்கை வெளியிட்டார் “துஆரக் மக்களுக்கான ஆஸாவாத் (Tuareg state of Azawad) எனும் கனவு இதோ மெய்யாகிறது” என்று.

ஆனால் துஆரெக் இனத்தின் இந்த நெடுநாள் கனவு கை கூடும் தருணத்தில், மற்றொரு முக்கிய திருப்பம். முஸ்லிம்கள்தான் என்றாலும், துஆரெக் secularist அமைப்பாகவும் அன்ஸார்தீன் முழுக்க முழுக்க இஸ்லாமிய அமைப்பாவும் இருந்ததால், இருவருக்கும் மத்தியில் லடாய் உருவானது. போராளிகளும், போராளிகளும் மோதினால் கட்டிப்புரண்டா உருள்வார்கள்? ஆயுதங்கள் அலறின. அன்ஸார்தீன் அமைப்பு துஆரெக் போராளிகளை வென்றது. அதில் அஃக் ஷெரிஃபுக்கு காயம் உண்டாகி, அவர் காஓவை விட்டு தப்பித்து ஓடவேண்டிய நிலை. அப்படித்தான் செய்திகள் நம்புகின்றன. கடகடவென்று காஓ, திம்புக்தூ, கிடால் (Kidal) என்ற நகரங்கள் அன்ஸார்தீன் அமைப்பின் வசமாகின.

இந்நிலையில், மாலி நாட்டின் அதிகாரம் மூன்று துண்டானது. நாட்டின் மூன்றில் இரண்டு பகுதியான வடக்குப் பகுதியில் அன்ஸார்தீன்களின் ஆட்சி. தலைநகர் பமாகோவில் இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர். ஜனாதிபதியும் பிரதமரும் இருந்தாலும் அவர்களுக்கு இணையான, அல்லது அவர்களைவிட ஒரு கை ஓங்கிய கேப்டன். இவர் உண்மையான இராணுவக் கேப்டன். புரட்சி நடத்தியதே இராணுவம், அதன் அதிகாரி அமாடோ ஸனோகோ (Captain Amadou Sanogo).

வடக்குப் பகுதியை தங்களது ஆளுமைக்குள் கொண்டுவந்த அன்ஸார்தீன் அரசு, தலைநகர் பகுதியில் உள்ள இடைக்கால அரசையும், இராணுவப் புரட்சியாளர்களையும் பற்றி இப்போதைக்கு அதிகம் அலட்டிக்கொள்ளாமல், முதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும்!

யார் இந்த அன்ஸார்தீன்?

துஆரெக் இனம், அவர்கள் தங்களது கலாச்சார உரிமைகளுக்காகத் துவங்கிய போராட்டம், பிறகு MNLA என்று அவர்கள் அடைந்த பரிணாம வளர்ச்சி என்று பார்த்துக்கொண்டே வரும்போது அதன் இறுதியில் வந்து நுழைந்தார்களே அன்ஸார்தீன் குழுவினர், அவர்கள்தான் இன்று மாலியின் குறிப்பிடப்படும் சக்தியாக உருவாகியுள்ள போராளிக் குழு.

இவர்கள் ஆப்பிரிக்காவிலுள்ள ‘இஸ்லாமிய மொரொக்கோவில் அல் காயிதா (Al Qaeda in the Islamic Maghreb – AQIM)’ அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்கின்றனர் உலக அரசியல் வல்லுநர்கள். அதற்கு ஒரு காரணமும் உள்ளது. அன்ஸார்தீன் அமைப்பின் தலைவர் அயாத் அஃக் ஃகாலி (Iyad Ag Ghaly). இவரும் துஆரெக் இனத்தவர்தான். சொல்லப்போனால், 1990-ல் துஆரெக் நிகழ்த்திய கலவரத்தில் அவற்றின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். ஆனால் காலப்போக்கில் ‘இன உணர்வு’ என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியாகி, ஏகத்துவ இஸ்லாமியக் கொள்கை என உருவாக ஆரம்பித்தார். இவருக்கு ஹமாதா அஃக் ஹாமா (Hamada Ag Hama) என்றொரு உறவினர். ஹமாதா AQIM வின் தளபதி. எனவே, அன்ஸார்தீனும் அல் காயிதாவின் பிரிவு என்பது ஊடகங்கள், அரசியல் வல்லுநர்களின் யூகம். ஆனால் ஸல்மா பிலாலா (Salma Belaala) எனும் வார்விக் பல்கலையின் (Warwick University) பேராசிரியர் அதை மறுக்கிறார். இவருக்குப் பிடித்தமான ஆராய்ச்சி ‘வட ஆப்பிரிக்காவில் ஜிஹாத்’ என்பதால் அவரது கருத்தையும் ஒதுக்கமுடியவில்லை.

இந்த தொடர்பு எந்தளவு மெய்யோ, பொய்யோ ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை. தனியுரிமை கேட்டுப் போராடும் MNLA போலன்றி, ‘முழுமையான மாலி நாடு. அதில் இஸ்லாமிய ஆட்சி’ என்பது அன்ஸார்தீனின் அடிப்படைக் கோட்பாடு. அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் போலன்றி, அறிவிப்புடன் நிறுத்தாமல் சில முக்கியக் காரியங்களில் இறங்கினார்கள் அவர்கள். என்ன அது?

இஸ்லாமியக் கல்வியில் சிறந்து விளங்கிய திம்புக்தூ நகரைப்பற்றி மேலே பார்த்தோமே, காலப்போக்கில் அங்கு மாற்றங்கள் சில நிகழ்ந்திருந்தன. பேராசிரியர்கள், அறிஞர்கள் இருந்திருப்பார்களல்லவா? ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களுக்கெல்லாம் கப்ருகள் எழுப்பி அதற்கு வழிபாடுகள் துவங்கி நிலைபெற்றிருந்தன. அன்ஸார்தீன் குழுவினர் ஆயுதங்களைப் பத்திரமாய் இறக்கி வைத்துவிட்டு, கையில் கடப்பாரை, கோடாலி போன்றவற்றைத் தூக்கிச் சென்று அந்தக் கல்லறைகளை இடிக்க ஆரம்பித்தனர். ஸித்தி மஹ்மூது, ஸித்தி அல் முக்தார், அல்ஃபா மோயா என்பவர்களின் கல்லறைகள், ஏழு சமாதிகள் இடிக்கப்பட்டன. மேலுமுள்ள 16 முக்கியக் கல்லறைகளும் இடிக்கப்படும் என்று ஏகப்பட்ட புழுதிகளுக்கு இடையே அறிவித்தனர்.

ஸித்தி யஹ்யா என்றொரு பள்ளிவாசல். இப்பள்ளியின் மினாராவின் அடியில் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஸித்தி யஹ்யாவின் கல்லறை. அந்தப் பள்ளியில் ஒரு வாயிற்கதவு. அது உலக அழிவுநாள் நெருங்கும்வரை திறக்கப்படக்கூடாது என்றொரு கட்டுக்கதை உருவாகி, பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதெல்லாம் அப்பட்டமான இணைவைப்பு என்று அன்ஸார்தீன் போராளிகள் அந்தக் கதவை உடைத்து எறிந்தனர். பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்துகொள்ளுங்கள் என்று பணமும் கொடுத்துவிட்டனர்.

காஓ (Gao) நகரில் விடியோ விளையாட்டுகள், மாலி நாட்டு இசை, மேற்கத்திய இசை, சாராய விடுதிகள் (bars), கால்பந்து ஆகியனவற்றுக்குத் தடா. இவற்றையெல்லாம் பார்த்து தடாலென பெருங்கவலை மேற்குலகின் சில நாடுகளில் ஏற்பட ஆரம்பித்துள்ளன. விடுதலையடைந்த நாளாய் வறுமைக்கோட்டிற்குக் வெகு கீழே, உலகின் படு ஏழை நாடுகளுள் ஒன்றாய் மாலி அதலபாதாளத்துள் கிடந்தபோது இல்லாத அதீத அக்கறை இப்போது உருவாக ஆரம்பித்துள்ளது.

அவையெல்லாம் 16ஆம் நூற்றாண்டில் திம்புக்தூவின் பொற்காலத்தில் உருவானவை. வேண்டுமென்றே இவற்றை இடிக்கிறார்கள். இதற்கு எந்த நியாயமும் இல்லை. இத்தகைய அழிவுச் செயல்களை உடனே நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் UNESCO டைரக்டர்-ஜெனரல் இரினா போகோவா (Irina Bokova) என்ற பெண்மணி.

“அகதிகள் உருவாகி அண்டை நாடுகளுக்கு ஓடப்போகிறார்கள்; பொதுமக்கள் நிறைபேர் உயிரிழக்கப் போகிறார்கள்; அப்பாவி மனிதர்களின் உரிமை சகட்டுமேனிக்கு மீறப்படும்; தாக்குதலுக்கு ‘பதில் தாக்குதல்’ என்று நடந்து ஓயாமல் வெடிச்சப்தம் ஒலிக்கப்போகிறது” என்று சர்வதேச உதவி அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

அண்டை அருகாமையில் உள்ள பெயரளவிலான முஸ்லிம் நாடுகள், எங்களின் இந்த அண்டை நாட்டில் கொஞ்சம் தலையிட்டு அங்கு நிலைமையைச் சீர்ப்படுத்துங்கள். இல்லையென்றால் எங்களுக்குத் தலைவலி’ என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஒத்தாசைக்கு நாங்கள் 3300 படைவீரர்கள் தருகிறோம் என்று தெரிவித்துள்ளது ஆப்பிரிக்காவின் பதினாறு உறுப்பு நாடுகள் கொண்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு  (Economic Community of West African States – ECOWAS). நாங்கள் 250 இராணுவப் பயிற்சியாளர்களைத் தருகிறோம். உங்கள் வீரர்களுக்கு சிறப்பான இராணுவப் பயிற்சி அளிப்பார்கள் என்று கூறியுள்ளது European Union (EU).

மேற்குலக அரசியல் நிபுணர் ஒருவர், “எங்களது அடிப்படைத் திட்டம், மாலி படையினர், மேற்கு ஆப்பிரிக்காவின் படையினர் ஆகியோருக்கு பயிற்சி அளித்து அவர்களைப் போராளிகளுடன் போரிட வைத்து மாலியின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றி, அங்கு அரசாங்க ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொதுவான ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகள் ஆழ்ந்து திட்டமிட்டு வருகின்றன. நேரம் குறிக்கப்படவில்லை,” என்றார்.

இப்படியாக அவர்களள் திட்டமிட்டுக்கொண்டிருக்க அதை தடுமாற வைக்கும் காரியம் ஒன்றைச் செய்துள்ளார் கேப்டன். மாலியில் இடைக்கால அரசாங்கம் என்று ஒன்று உருவானதே சர்வேதச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகத்தான். அப்படி உருவானதும், புரட்சி நடத்திய இராணுவம் முற்றும் போட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிடவில்லை. எக்கணமும் அரசாங்கத்தை நசுக்க தங்களது பூட்ஸ் காலை உயர்த்தி நின்றிருந்த அவர்கள், இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் ஷேக் மொடிபோ டியார்ராவை (Cheick Modibo Diarra) டிசம்பர் 11 அன்று அமைதியான முறையில் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

ஷேக் மொடிபோ டியார்ரா நாஸாவின் (NASA) முன்னாள் விஞ்ஞானி. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பிரிக்கப் பகுதி தலைவர். அந்தப் பெருமை, புகழ் எல்லாம் உன்னோடு இருக்கட்டும்; நீ நமக்கு என்ன செய்தாய்? நாட்டிற்கு அவமானத்தைத்தான் தேடித் தருகிறாய் என்று கேப்டன் அமாடோ ஸனோகோ பிரதமர் ஷேக் மொடிபோ டியார்ராவை திட்டியிருக்கிறார். கோபத்தில் கேப்டன் நாக்கைத் துருத்தினாரா? விரலை நீட்டினாரா? கண்கள் சிவந்தனவா என்பது பற்றி தகவல் இல்லை. ஆனால் பிரதமர் கண்கலங்கி அழுததை படைவீரர் தெரிவித்திருக்கிறார்.

அப்படியே நைஸாகக் கிளம்பி ஃபிரான்சுக்குத் தப்பிவிட விமானம் ஏற இருந்தவரை கைது செய்து, இராணுவ தலைமையகத்துக்குத் தூக்கிவந்துவிட்டனர். அடுத்து சில மணிநேரங்களில், ‘நானும் எனது அரசாங்கமும் பதவியை ராஜினாமாச் செய்கிறோம்’ என்று நடுக்கம் தெரிய ஒற்றை வாக்கிய பேட்டியை தொலைக்காட்சியில் அறிவித்து முடித்துக்கொண்டார் ஷேக் மொடிபோ டியார்ரா.

‘நாங்கள் அவரைத் துன்புறுத்தவில்லை. இந்த முடிவை அவர் எடுக்க வசதி செய்துகொடுத்தோம்’ என்று தம் பங்குக்குத் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துவிட்டார் கேப்டன். அடுத்த சில நிமிடங்களில் டாங்கோ சிஸ்ஸோகா (Django Cissoko) என்பவரை பிரதமராக நியமித்து அறிக்கை வெளியிட்டார் இடைக்கால ஜனாதிபதி டியான்கொண்டா ட்ராஒரே.

இந்த மாற்றங்களைப் பார்த்து தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துள்ளன மேற்கத்திய நாட்டாண்மை நாடுகள். மற்றவர்களைவிட ஃபிரான்சுக்குத்தான் இதில் அதீத அக்கறை. அவர்களுக்கு முக்கியக் கவலை அன்ஸார்தீன். இஸ்லாமிய ஆட்சி என்கிறார்கள்; ஏகத்துவம் என்று சொல்கிறார்கள்; அடக்கத்தலங்கள் எப்பேற்பெற்ற உலக உன்னதம்? அதைப்போய் இடிக்கிறார்கள். அல்-காயிதாவின் பங்காளிகள் என்று தெரிகிறது. எனவே அக்குழுவை நசுக்க வேண்டும்.

அதற்கு நாட்டாண்மையாளர்களின் தேவை, மாலியில் அவர்களுக்கு உவப்பான மத்திய அரசு. அந்த அரசுக்கு உதவுகிறேன் என்ற களமிறங்கலாம். ஆனால் இந்தக் கேப்டன் ஸனோகோ தலைநகரை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். இருக்கும் அரசாங்கம் அவரது பதுமைகள் என்பதை நிரூபித்துவிட்டார். அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்ட இராணுவத்திற்குத் தான் நாம் உதவலாமே தவிர அரசாங்கத்தை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இராணுவத்திற்கு எப்படி உதவுவது? அது நம் முதுகை துப்பாக்கியால் சொறிந்து கொள்வதைப் போன்றதாயிற்றே! என்று கவலைப்படுகிறார்கள்.

தம் நாட்டில் அந்நியப்படைகள் நுழைவதை மாலியின் இராணுவமும் விரும்பவில்லை. “எங்களுக்குத் தேவையெல்லாம் பணமும் தளவாடமும் மட்டுமே. அதைத் தாருங்கள். நாங்கள் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினையைப் பார்த்துக்கொள்வோம்” என்கிறார்கள்.

இப்பொழுது அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளுக்குத் தொக்கி நிற்கும் பெரிய அச்சம் – ‘மாலி மற்றொரு ஆப்கன் ஆகிவிடுமோ என்பதுதான்!’

-நூருத்தீன்

வெளியீடு: சமநிலைச் சமுதாயம், ஜனவரி 2013

Related Articles

Leave a Comment