தோழர்கள் – 41 ஸயீத் இப்னு ஸைது (ரலி)

by நூருத்தீன்
41. ஸயீத் இப்னு ஸைது (سعيد بن زيد)

வருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை.

மக்காவைச் சேர்ந்தவர் அவருக்கு இறைவழிபாடு என்று அங்கு நடைபெறும் கூத்தைக்கண்டு வெறுத்துப்போயிருந்தது. ‘இறைவனை மெய்யாக வழிபடும் மதம் எது; மார்க்கம் என்ன?’ என்று அவருக்குள் அடக்கமாட்டாத வேட்கை; தாகம். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பற்றி, செவிவழியாகவும் முதியோர் சிலரிடம் மிச்சம் மீதி என்று தங்கியிருந்த உண்மையின் வாயிலாகவும் சில குறிப்புகள் அவருக்குத் தெரிந்திருந்தன. ‘உண்மையான இறை மார்க்கம் இதுதான்; உலகின் எங்கோ ஒரு மூலையில் இது இன்னும் இருக்க வேண்டும்’ என்று அந்தத் தேடலிலே ஊர் ஊராகத் திரிந்து, கழிந்துகொண்டிருந்தது அவரது வாழ்வு.

யூத மதம், கிறித்தவ மதம் என்று படித்துப் பார்த்தும் அவற்றில் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. “ம்ஹும்! இந்த மதங்கள் அதை முழுமையாகச் சொல்லவில்லையே! இவற்றிலும் என்னவோ குறைகிறதே; உண்மையிலிருந்து மாறுபட்டிருக்கின்றன இவை” என்று அவரது மனம் திருப்தியுற மறுத்தது.

திருவிழாக் கூட்டத்தில் காணாமல்போன குழந்தையைத் தேடுவதுபோல், ‘மெய்ஞ்ஞானம் எங்கே கிடைக்கும்’ என்று தேடி ஓடிக்கொண்டே இருந்தார் அவர்.

“சிரியாவில் துறவி ஒருவர் இருக்கிறாராம். பழங்கால வேத நூல்கள் பற்றிய ஞானம் அவருக்கு அதிகமாம்” என்று கேள்விப்பட்டு, ”அப்படியா?” என்று சிரியா வந்துச் சேர்ந்தார். துறவியைச் சந்தித்து தம் கதையை எல்லாம் சொல்ல நிதானமாக கேட்டுக்கொண்டவர், “இறைத் தூதர் இப்ராஹீமின் மார்க்கத்தை நீ தேடி அலைவதாகத் தெரிகிறதே மக்கத்துச் சகோதரனே!” என்றார்.

”ஆம்! அதுதான். அதைப்பற்றிய உண்மையான விபரங்கள்தாம் எனக்கு வேண்டும்.”

உண்மையான ஞானம் பொதிந்திருந்த துறவி அவர். பொய், புரட்டு அறியாதவர். அதனால் மெய் சொன்னார். “நீ தேடி அலையும் மார்க்கம் இன்று வழக்கத்தில் இல்லை. நீ உன்னுடைய ஊருக்குத் திரும்பிச் செல். உன்னுடைய மக்களிலிருந்தே அல்லாஹ் ஒரு நபியைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப் போகிறான். அவர் இப்ராஹீமின் மார்க்கத்தை மீளெழுச்சி செய்யப்போகிறார். அது நடைபெறும்வரை உனக்கு வாழக்கொடுத்து வைத்திருந்தால் உடனே அதை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்.”

யூதர்களின், கிறித்தவர்களின் வேத நூல்களின் மாசுறாத தகவல்களை அறிந்த வெகுசிலர் அக்காலத்தில் இருந்தனர். அந்த நூல்களில் இருந்த திட்டவட்டமான இந்த முன்னறிவிப்பு அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அத்தகைய சிலருள் அந்தத் துறவியும் ஒருவர்.

‘எங்கெங்கோ தேடி அலைந்தது நம் ஊரிலேயே கிடைக்கப்போகிறதா? கெட்ட அனாச்சாரங்கள் அழிந்தொழியப் போகின்றனவா?’ அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

விரல் நுனியால் பொத்தானை அழுத்தித் தகவலைத் தேடிப் பெறுவதுபோல் அல்லாமல், வெயிலிலும் அனலிலும் பாலைவனம் கடந்து, ஊர் ஊராய் அலைந்து திரிந்து கல்வி கற்பதைக் கற்பனை செய்ய முடிந்தால் அவரது மகிழ்ச்சியின் வேகம் நமக்குப் புரியும். உடனே மக்காவுக்குக் கிளம்பினார் அவர். ஆனால் இறைவன் முடிவு செய்து வைத்திருந்த விதி அவருக்கு வழியில் காத்திருந்தது.

‘வெளிநாட்டுப் பயணி; நிறையப் பொருள் கிடைக்கக்கூடும்’ என்று நினைத்து அவரை வழிமறித்தது கொள்ளையர்கள் கூட்டம். அவரது மூட்டை முடிச்சைக் கலைத்துப் பார்த்தார்கள். அவரது மடியில் கனமில்லை, மண்டையில் மட்டும் ஏதோ இருக்கிறது, ஆனால் நமக்கு உபயோகப்படாத ஞானம் என்று தெரிந்ததும், ஈவு, இரக்கம் அறியாத அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள்!

மரணத் தருவாயிலும் அவருக்கு ஆதங்கம் அடங்கவில்லை. இறைஞ்சினார். “அல்லாஹ்வே! நீ விரைந்து அளிக்கப்போகும் நற்செய்தியும் அதை அனுபவிக்கும் பலனும் எனக்குக் கிடைக்காமற் போகுமென்றால், அது என் மகனுக்காவது பூரணமாகக் கிடைக்க வேண்டும்.”

சிரியாவிலிருந்து மக்கா செல்லும் சாலையில் இறந்து போனார் அவர் – ஸைது இப்னு அம்ரு.

oOo

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கி, இறை வசனங்கள் இறங்க ஆரம்பித்தன. தமக்கு அளிக்கப்பட்டுள்ள நபித்துவம் பற்றி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்த ஆரம்பத் தருணங்களில் அவர்களை நம்பி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் வெகு சொற்பம்.

பின்னர் நாளுக்குநாள் விஷயம் பரவலாக, துவங்கியது குரைஷிகளின் கொடுமை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுவந்த கொடுமைகளில் தம் பங்குக்கு அடி, உதை, சாட்டையடி என்று நிறைவேற்றிக்கொண்டிருந்தார் முக்கியமான வரலாற்று நாயகர் ஒருவர். உமர்!

என்னதான் அடித்தாலும் உதைத்தாலும் முஸ்லிம்களின் பிரச்சாரம் மட்டும் முடங்காமல் வளர்ந்துவர, ஒருநாள் உமருக்கு மிகுந்த ஆவேசமாகிவிட்டது. “இந்த முஹம்மதைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை” என்று வாளை உருவிக் கொண்டார். மக்கா வீதியில் வேகவேகமாய் நடக்க ஆரம்பித்தார். யதேச்சையாய் அவ்வழியே வந்த நுஐம் எனும் இளைஞர் உமரைப் பார்த்து விட்டார். கையையும் வாளையும் வீசிவீசி நடந்து சென்றுகொண்டிருந்த உமரின் தோரணை ‘இது ஒன்றும் நல்லதாய்த் தெரியவில்லையே’ என்று அவருக்கு உள்ளுக்குள் கிலி கிளம்பியது. அவரும் அச்சமயத்தில் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தவர்தாம்.

“ஏன் இப்படி?” என்று அவர் விசாரித்துப் பார்த்ததில் ‘அது கொலைவெறி’ என்று தெரிந்துபோனது. உமர் கோபத்துடன் வருவதை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் சொல்லி எச்சரிக்க வேண்டும்; அதற்கு அவகாசம் தேவை. சமயோசிதமாய் ஒரு காரியம் செய்தார் நுஐம் ரலியல்லாஹு அன்ஹு.

”முஹம்மதைக் கொல்வது இருக்கட்டும். முதலில் நீர் உமது வீட்டைப் பாரும்” என்றார் நுஐம். அப்படி அவர் குறிப்பிட்டது உமரின் சகோதரி ஃபாத்திமாவின் வீடு. ஃபாத்திமாவின் கணவர் ஸயீத் இப்னு ஸைது.

சொற்பமானவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பத் தருணங்களிலேயே, தாமும் ஏற்றுக்கொண்டவர் ஸயீத். அந்த ஏகத்துவச் செய்தி அறிய வந்ததும் அதில் அடங்கியிருந்த சத்தியம் ஸயீதின் மனத்தைச் சட்டெனத் தைத்தது. தயக்கமே இல்லாமல் ஏற்றுக்கொண்டார். அப்பொழுது அவரது வயது ஏறத்தாழ இருபது இருக்கும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அல்-அர்கமின் இல்லத்தில் இருந்து இஸ்லாமியப் பிரச்சாரம் துவங்கும் காலத்திற்கு முன்பாகவே ஸயீத் இஸ்லாத்தினுள் நுழைந்துவிட்டார். கூடவே அவரின் மனைவி ஃபாத்திமாவும்.

தம் சகோதரி ஃபாத்திமா, அவரின் கணவர் ஸயீது ஆகியோரின் மாற்றம் பற்றி அதுவரை அறிந்திராத உமர், இப்பொழுது தம் கோபம் சட்டெனத் திசை மாற, தம் சகோதரியின் வீட்டிற்கு அதே கோபத்துடன் விரைந்தார். நுஐமின் தந்திரம் பலித்தது. ஆனால் அதுவே பின்னர் நிகழப்போகும் உமரின் பிரம்மாண்ட வரலாற்றுக்கு முன்னுரை எழுதிவிட்டது.

ஃபாத்திமாவும் அவர் கணவர் ஸயீத் இப்னு ஸைதும் வீட்டினுள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் நமக்கு நன்கு அறிமுகமான. கப்பாப் இப்னு அரத் (ரலி). உமர் ஆவசேமாய் வருவதைக் கண்ட கப்பாப் இப்னு அரத் ஓடி ஒளிந்துக் கொண்டார். உமரின் அத்துணை மூர்க்கமும் ஸயீத் மேல் இறங்கியது.

முன்னர் ஸயீதின் தந்தையான தம் சகோதரர் ஸைதையே சிலை வணக்கத்தை வெறுத்ததற்காக அடித்துத் துன்புறுத்தியவர் உமர். இப்பொழுது அவரின் மகன் – அதுவும் தம் சொந்த சகோதரியின் கணவர், “சிலை வேண்டாம்; படையல் வேண்டாம்” என்பதோடு நில்லாமல், அந்த முஹம்மதைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தம் சகோதரியையும் வழிகெடுக்கிறார் என்றால்? பொறுக்கவியலாத ஆத்திரம். முரட்டுத்தனமாய் அடிக்க ஆரம்பித்து விட்டார். இடையில் புகுந்த ஃபாத்திமாவுக்கும் பலமான அடிவிழ இரத்தம் பீறிட ஆரம்பித்தது. இரத்த சகோதரியின் இரத்தம் பார்த்ததும்தான் உமரின் ஆத்திரம் நிதானத்திற்கு வந்தது. ஆயாசமும் கழிவிரக்கமும் ஏற்பட்டன.

நிதானப்பட்ட உமர், “என்ன அது நீங்கள் ஓதிக் கொண்டிருப்பது?” எனக் கேட்க, அவரைக் கை-கால் கழுவி வரச் செய்து குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்த சுவடிகளைக் காண்பித்தார்கள். அது அத்தியாயம் தாஹா. புத்தியிலும் பலம் மிக்கவரான உமருக்கு அதற்கு மேல் எதுவும் தேவைப்படவில்லை. ஒருவரிப் பேச்சு, “என்னை முஹம்மதிடம் அழைத்துச் செல்லுங்கள்”. உமர் இஸ்லாத்தை ஏற்று அதன்பின் நிகழ்ந்ததெல்லாம் சகாப்தம். ரலியல்லாஹு அன்ஹு.

ஸயீதின் தந்தையையே உமர் அடித்தார் என்று பார்த்தோம் இல்லையா? அவர் வேறு யாருமல்லர்; சிரியாவிலிருந்து மக்கா செல்லும் சாலையில் கொலை செய்யப்பட்ட ஸைது இப்னு அம்ரு. உமருக்கு மிக நெருங்கிய உறவு. பெரியப்பா மகன்.

oOo

அன்று மக்காவில் ஏதோ திருவிழா. திமுதிமுவென மக்கள் கூட்டம். குரைஷி குல ஆண்களெல்லாம் உயர்தரப் பட்டுத்துணியால் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, விலையுயர்ந்த யமன் நாட்டு அங்கி அணிந்துகொண்டு பகட்டு நடை நடந்துகொண்டிருந்தனர். பெண்கள், குழந்தைகளெல்லாம் பிரகாசமான பளபளவென்ற நிறத்தில் உடை, கண்ணைக் கவரும் நகைகள் என்று குதூகலம். கஅபாவில் நட்டுவைக்கப்பட்டிருந்த சிலைகளுக்குப் பலியிடுவதற்காகக் கால்நடைகளுக்கும் அலங்காரம். ஊரே வண்ண மயம், வேடிக்கை.

இதையெல்லாம் தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஸைது இப்னு அம்ரு இப்னு நுஃபைல். அதையெல்லாம் கண்டு அவருக்கு ஆதங்கமும் வெறுப்பும் ஏற்பட்டன. கஅபாவில் முதுகைச் சாய்த்து நின்றவர், ”ஏ குரைஷி மக்களே! ஆடுகளெல்லாம் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன. அவை அருந்துவதற்காக மழைநீரையும் அவனே அனுப்பிவைக்கிறான்; அவை உண்பதற்காக இலை தழைகளையெல்லாம் அவன் பூமியில் விளைவிக்கிறான். இப்படி வளர்ந்த ஆடுகளை அல்லாஹ்வின் பெயரில் அல்லாமல் வேறு எதுவொன்றுக்காகவோ அறுத்துப் பலியிடுகிறீர்கள் நீங்கள். எவ்வளவு அஞ்ஞானத்தில் இருக்கின்றீர்கள்.”

ஸைதின் கன்னத்தில் ஓங்கி அறை ஒன்று விழுந்தது. உமரின் தந்தை கத்தாப்தான் அறைந்தவர். ஸைதின் தந்தை அம்ரிப்னு நுஃபைலும் உமரின் தந்தை கத்தாப் இப்னு நுஃபைலும் சகோதரர்கள்.

“கெட்டு அழியப்போகிறாய் நீ. உன்னுடைய முட்டாள்தனமான பேச்சைக் கேட்டுக்கேட்டு என் பொறுமையே போய்விட்டது. இத்துடன் நிறுத்திக்கொள்.”

இந்த எச்சரிக்கைக்கு எல்லாம் ஸைது கட்டுப்படமாட்டார் என்று தோன்றியது. தம் குலத்து முரட்டு இளைஞர்களை அழைத்தார் கத்தாப். அண்ணன் மகன் என்ற கருணை எல்லாம் இல்லாமல், “இவனைக் கொஞ்சம் கவனியுங்கப்பா” என்று சொல்ல, அவ்வளவுதான்; சகட்டுமேனிக்கு ஸைதைப் போட்டுத் தாக்கினார்கள். அந்த முரட்டுக் கும்பலில் முக்கியப் புள்ளி உமர் இப்னுல் கத்தாப். ‘குரைஷிகளின் குலப்பெருமையே முக்கியம். இதில் அண்ணனாவது, தம்பியாவது?’ தம் பெரியப்பா மகனென்றும் பாராமல், ஸைதைத் தம் பங்குக்கு அடித்துத் துவைத்தார். அவர்களின் அடியும் அட்டூழியமும் தாங்க முடியாமல் ஹிரா மலைக்கு ஓடிப்போய்த் தஞ்சம் புகுந்துகொண்டார் ஸைது.

“தொலையட்டும். அவன் ஊருக்குள் வாராமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் கத்தாப். ஒருவிதமான ஊர் விலக்குப்போல் ஆகிப்போனது ஸைதின் நிலைமை. மக்காவுக்குள் வரவேண்டுமானால் யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக வந்து செல்வார்.

குரைஷிகளின் மூட உருவ வழிபாட்டை, பழக்கவழக்கங்களை அருவருப்புடன் வெறுத்துக்கொண்டிருந்தவர் ஸைது மட்டுமல்லர். வேறு சிலரும் இருந்தனர் – வரக்கா இப்னு நவ்ஃபல், உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷு, உதுமான் இப்னுல் ஹுவைரித், நபியவர்களின் அத்தை உமைமா பின்த் அப்துல் முத்தலிப் ஆகியோர். மக்காவிலுள்ள இவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொள்வார் ஸைது. பலதெய்வக் கொள்கையில் குரைஷிகள் வழிதவறிப்போய்க் கிடப்பதைப்பற்றிப் பேசிப்பேசிக் கவலைப்பட்டுக்கொள்ளும் இந்தச் சிறு குழு. சிலைகளை வணங்காத இவர்கள் தங்களை “ஹுனஃபா”வினர் என்று கூறிக் கொண்டனர்.

ஒருமுறை அவர்களிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இந்த மக்களெல்லாம் எவ்வளவு பெரிய பாவம் புரிகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்ராஹீம் நபியின் மார்க்கத்திலிருந்து முரண்பட்டு, அதற்கு நேர்விரோதமாய்ச் சென்றுவிட்டார்கள். இந்தப் பாவத்திலிருந்து விமோசனம் பெறவேண்டுமென்றால், உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய மதத்தை தேடவேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் ஸைது.

அதே எண்ணம் அவர்களுக்கும் இருந்தது. அந்த நான்கு ஆண்களும் தேட ஆரம்பித்தனர். யூத குருக்கள், கிறித்தவப் பாதிரிகள் என்று தேடித்தேடிச் சென்று பேசினர். ‘இப்ராஹீம் நபி அறிவித்துச்சென்ற மார்க்கத்தைத் தூய வடிவில் அறிய வேண்டும்‘ இதுதான் அவர்களது தேடலின் அடிநாதம்.

இந்த முயற்சியின் பயனாய் வரக்கா இப்னு நவ்ஃபல் கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் முஹம்மது நபியவர்களுக்கு முதன்முதலாய் வஹீ வந்து இறங்கியபோது, அன்னை கதீஜா விஷயத்தைச் சொன்னது தம் உறவினரான இவரிடம்தான். மிகவும் முதுமையான பிராயத்தில் இருந்த வரக்காவுக்கு உண்மை புரிந்துபோனது. “மூஸா நபிக்கு வந்து இறங்கிய அதே வானவர்தான் முஹம்மது நபியிடத்தும் வருகிறார்; யூத, வேத நூல்களில் அறிவிக்கப்பட்டவர் இவரே” என்றவர், “நான் உயிருடன் இருந்தால் அல்லாஹ்வின் தூதருக்கு என்னாலான அனைத்தையும் இறுதிவரை செய்வேன்” என்று உறுதியும் கூறினார். ஆனால் அதுவரை அவரது ஆயுள் பாக்கியிருக்கவில்லை.

உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷுக்கு எந்த மதத்தின்மீதும் அபிப்ராயம் ஏற்படவில்லை. அப்படியே இருந்தவர், நபியவர்களின் இஸ்லாமிய அழைப்பு துவங்கியபோது அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் முஸ்லிம்கள் அடைக்கலம்தேடி அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்தபோது இவரும் தம் மனைவி உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹாவுடன் அங்குச்சென்றவர், கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொண்டு அப்படியே வாழ்ந்து மறைந்துபோனார்.

உதுமான் இப்னுல் ஹுவைரித் அங்கே இங்கே என்று பயணம் புரிந்தவர் பைஸாந்திய மன்னனைச் சந்தித்தார். அங்கு அவர் கிறித்தவராக மாறிப்போக, அவருக்கு நல்ல சலுகையும் அந்தஸ்தும் அளித்து கௌரவித்தார்கள் பைஸாந்தியர்கள். அதில் அவர்களுக்கு உள்நோக்கம் ஒன்றும் இருந்தது. ‘உதுமானை மக்காவின் அரசனாக்கிவிட வேண்டும் என்பது.’ குரைஷிகளால் ரோமர்களின் இந்தத் திட்டத்தைக் கற்பனையில்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. சிரியாவில் பைஸாந்தியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு அரபு கோத்திரம் வாழ்ந்துகொண்டிருந்தது. அதில் கஸ்ஸான் கோத்திரத்தைச் சேர்ந்தவன் மன்னன் அம்ரு இப்னு ஜஃப்னாஹ். அவன் உதுமான் இப்னுல் ஹுவைரித்தை விஷம் வைத்துக் கொன்றான்.

ஸைது இப்னு அம்ரோ சிரியா, ஈராக் என்று அலைந்து திரிந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் மனத்தை நிறைவு செய்யும் பதில்தான் கிடைக்கவில்லை. இருந்தாலும் தம்மளவில் தூய்மையுடன் வாழ்ந்துகொண்டிருந்தார் அவர். மக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த உருவ வழிபாட்டில் ஈடுபடுவதில்லை; சிலைகளுக்குப் பலியிடப்படும் கால்நடைகளின் இறைச்சியைத் தொடுவதில்லை என்று உறுதி, கட்டுப்பாடு. தவிர,

அக்காலத்தில் அரபியர்கள் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்துவிடுவார்கள் என்று தெரியுமில்லையா? அவ்விதம் யாரேனும் பெண் குழந்தைகளைக் கொல்லப்போவது தெரியவந்தால் ஓடிவந்து காப்பாற்றியிருக்கிறார்.

எப்படி?

”அக்குழந்தையைக் கொல்ல வேணடாம். உன் சார்பாய் நான் உணவளித்துப் பராமரிப்பேன்; வளர்ப்பேன்” என்பார் அதன் தந்தையிடம்.

‘தொலையட்டும். என்னவாவது செய்யட்டும்’ என்று தம்மிடம் விடப்படும் குழந்தையை ஊட்டி வளர்த்து, அது ஆளானதும் அவள் தந்தையிடம் சென்று, “இதோ உன் மகள். உனக்கு வேண்டும் எனில் நீ அழைத்துக்கொள். இல்லையா நானே மேற்கொண்டும் பாதுகாப்பேன்.”

எளிதில் அமைந்துவிடாது இத்தகைய மனோதிடமும் குணமும்.

குரைஷிகளின் அஞ்ஞானத்தைப் பார்த்து, ‘உங்களில் நான் ஒருவன்தான் நபி இப்ராஹீமின் மார்க்கத்துக்கு நெருக்கமாய் இருக்கிறேன்’ என்று சொல்லிக்காட்டுவார்.

இறைவனிடம் இறைஞ்சுவார், “நீ ஏற்றுக்கொள்ளும் வகையில் உன்னை வணங்குவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. நான் அதை அறியாதவனாய் இருக்கிறேன். தெரிந்திருந்தால், நான் அதைப் பின்பற்றி இருப்பேன்”. பிறகு தமது உள்ளங்கையில் சிரம்புதைத்து இறைவனை வணங்கிக்கொள்வார்.

இதையெல்லாம் கவனித்த அவரின் சிற்றப்பா கத்தாப், புத்திமதி சொல்லிப் பார்த்தார்; ‘உண்மையைத் தேடுகிறேன் பேர்வழி’ என்று அவர் வெளியூர்களுக்குச் செல்வதைத் தடுத்துப் பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. அதனால்,

‘மிகவும் அலும்பு செய்கிறான். இவன்மீது ஒரு கண் வையுங்கள்’ என்று தம் வீட்டுப் பெண்மணி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் கத்தாப். ஸைது பயணம் புறப்படப் போகிறார் என்று தெரிந்தால் போதும், உடனே செய்தி வரும் கத்தாபுக்கு. ‘தடா’ விழும் ஸைதுக்கு. ஆனாலும் ஸைது நழுவிக்கொண்டே இருந்தார்.

இந்த எரிச்சலெல்லாம் சேர்ந்து சேர்ந்துதான் திருவிழாவின்போது ஸைதை அடித்துத் துவைத்தார்கள். ஹிரா மலைக்கு ஓடியவரைக் கண்காணிக்க இளைஞர் படை நியமிக்கப்பட்டது. ஸைது மக்காவிற்குள் நுழைந்தால், தகவல் வந்து உடனே அவரைத் துரத்தும் வேலை நடைபெறும். ‘மற்றவர்கள் மனத்தையும் மாற்றித் தொலைத்துவிடுவாரோ’ என்ற பயம்தான். வேறென்ன?

இத்தகு சோதனையை எல்லாம் முறியடித்துத் தாண்டி சிரியா சென்று திரும்பும்போதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்வுற்றது. வழிப்பறிக் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு இறந்து போனார் ஸைது. ஆனால் மாளும் தருவாயில் இறைஞ்சினாரே, “அல்லாஹ்வே! நீ விரைந்து அளிக்கப்போகும் நற்செய்தியும் அதை அனுபவிக்கும் பலனும் எனக்குக் கிடைக்காமற் போகுமென்றால், அது என் மகனுக்காவது பூரணமாகக் கிடைக்க வேண்டும்” என்று? அதை நிறைவேற்றி வைத்தான் இறைவன்; பூரணமாய் அருளினான் ஸைதின் மகன் ஸயீது இப்னு ஸைதுக்கு.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தார் ஸைது. அவர் பிள்ளை என்ன ஆனது?

தந்தையின் நற்கருமப் பலன் மகனுக்கு வந்துச் சேர்ந்தது. நபியவர்களிடமிருந்து சத்தியச் செய்தி வந்து சேர்ந்ததும் அதைச் சடுதியில் இனம் கண்டு, உணர்ந்து, ஏற்க முடிந்தது அவர் மகனுக்கு. ‘இவருக்குச் சொர்க்கம்’ என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறுதியிட்டுச் சொன்ன பத்துப்பேருள் ஒருவராகிப் போன நற்பேறு கிட்டியது அந்த மகனுக்கு. ஸயீது இப்னு ஸைது, ரலியல்லாஹு அன்ஹு.

நம் பிள்ளைகளின்மேல் நமக்கு மெய்யான பாசம் இருந்தால் முதலில் நாம் நம்மைச் செப்பனிட்டுக்கொள்வது உத்தமம்.

oOo

ஸயீது இப்னு ஸைது மிக இளவயதில் இஸ்லாத்தில் இணைந்தாரா, தம் இள ரத்தத்திற்குரிய துறுதுறுப்பையும் வீரத்தையும் இறைவனின் பாதையில் அர்ப்பணித்தார். இஸ்லாத்திற்காக நிகழ்வுற்ற அனைத்துப் போர்களிலும் நபியவர்களுடன் இணைந்து களம் புகுந்து வாளும் போருமாய் வாழ்ந்திருக்கிறார் ஸயீது. ஆனால், முதல் முக்கியப் போரான பத்ருப் போரில் மட்டும் அவர் இல்லை. அவருக்கு வேறு முக்கியப் பணி அளித்திருந்தார்கள் நபியவர்கள்.

ஷாம் பகுதியிலிருந்து மதீனா நோக்கித் திரும்பும் அபூஸுஃப்யானின் வணிகப் பொருட்களை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்பதுதான் நபியவர்களின் திட்டம். பின்னர் அதையொட்டித் தொடர்ந்த நிகழ்வுகளே பத்ருப் போரில் வந்து முடிந்தன; போரில் முஸ்லிம்களுக்கு முதல் பூரண வெற்றியும் கிடைத்தது. அபூஸுஃப்யானின் வணிகக் கூட்டம் மதீனாவைத் தாண்டி கடக்கும் நேரத்தை அறிய இரு ஒற்றர்களை நியமித்தார்கள் நபியவர்கள். அவர்கள் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸயீத் இப்னு ஸைது. வணிகக் கூட்டம் பெரும்பாலும் கடந்து செல்லும் பாதையை நோக்கி விரைந்து சென்றார்கள் இருவரும். அந்தப் பாதையில் அல்-ஹவ்ரா எனும் இடத்தில் அமைந்திருந்தது கஷ்த் அல்-ஜுஹானி என்பவரின் தங்குமிடம். அங்குச் சென்று மறைந்து கொண்டு காத்திருந்தார்கள் தல்ஹாவும் ஸயீதும்.

ஆனால், இவர்கள் வந்து தகவல் அளிப்பதற்கு முன்பாகவே அபூஸுஃப்யானின் வணிகக் கூட்டம் பற்றிய அனைத்து விபரங்களும் நபியவர்களுக்கு வந்துச் சேர்ந்துவிட்டது. எனவே தாமதிக்காமல் உடனே செயலில் இறங்கியது முஸ்லிம்களின் படை. அதைத் தொடர்ந்து பத்ருப் போரும் நிகழ்ந்துவிட, பத்ருப் போரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மட்டும் நழுவிப்போனது ஸயீதுக்கு.

போர் முடிந்தபின்தான் ஸயீத் இப்னு ஸைது மதீனா வந்து சேர்ந்தார். அந்தப் போரில் முஸ்லிம்களின் கைவசமான பொருள்களில், தம் பங்கிலிருந்து ஸயீதுக்கு அளித்தார்கள் நபியவர்கள். நேரடியாக யுத்தக்களத்தில் இல்லாமல் போனாலும் பத்ருப் போரில் பங்கெடுத்த பெருமை ஸயீதுக்குக் கிட்டியது.

oOo

ஷாம்! இப்போதைய லெபனான், சிரியா, ஃபலஸ்தீன், ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கிய பகுதியே அக்காலத்தில் ஷாம். ரோமர்கள் கோலோச்சிய பகுதி. இப்பகுதியில் ரோமர்களுடன் முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களும் நிகழ்வுகளும் முக்கியமான நீண்ட வரலாறு.

இதில் யர்மூக் யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பின்னர் ஆங்காங்கே தேவைப்படும் என்பதாலும், ரோமர்களின் சாம்ராஜ்ஜியத்தைத் தகர்த்த பெரும் நிகழ்வு என்பதாலும் இந்த யர்மூக் யுத்தம் பற்றிச் சிறு முன்அறிமுகம் இங்கு நமக்குத் தேவைப்படுகிறது. முக்கியமான நபித் தோழர்கள் உயிர்த்தியாகத்தை இந்த யுத்தத்தின் ஊடே நாம் கடக்க நேரிடும். அதற்கு இந்த அறிமுகம் உதவியாக இருக்கும்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்தபின் கலீஃபாவாகப் பொறுப்பேற்ற அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுக்கு முதல் சவாலாக அமைந்தது ‘முர்ததத்’களின் யுத்தங்கள்’. அவையும் பொய்யன் முஸைலமாவின் அட்டகாசமும் நமக்கு நன்கு பரிச்சயமானவை. அவற்றையெல்லாம் வெற்றிகரமாக அடக்கி, கட்டுக்குள் கொண்டு வந்தவுடன், பாரசீகம், ரோம் நோக்கித் திரும்பியது கலீஃபாவின் கவனம்.

நபியவர்கள் தமது மரணத்திற்குமுன் இப்பகுதிக்கு உஸாமா இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார்கள். நபியவர்களின் மரணத்திற்குபின் நிகழ்வுற்றுவிட்ட பல முக்கிய அலுவல்களால் அந்தக் காரியத்தில் கவனம் சிதறிப் போயிருந்தது. பாரசீகர்களை நோக்கிப் படையை அனுப்பியிருந்தாலும் ரோமர்களையும் கவனிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

நான்கு முஸ்லிம் படை அணிகள் தயாராயின. அவற்றிற்குத் தலைமை தாங்க நான்கு முக்கியத் தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் – அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ், ஷுராஹ்பில் இப்னு ஹஸனாஹ், யஸீத் இப்னு அபீஸுஃப்யான், அல்-அம்ரு இப்னுல் ஆஸ், ரலியல்லாஹு அன்ஹும்.

அபூ உபைதாவின் படை ஹிம்ஸ் பகுதியையும் ஷுராஹ்பில் இப்னு ஹஸனாஹ் ஜோர்டான் பகுதியையும் யஸீது டமாஸ்கஸ் பகுதியையும் அல்-அம்ரு இப்னுல் ஆஸ் ஃபலஸ்தீன் பகுதியையும் அடைந்தனர். வழிநெடுக சிறு சிறு போர்கள். அதில் வெற்றிபெற்று அந்தந்தப் பகுதிகள் முஸ்லிம்கள் வசமாயின.

ரோமர்கள் திட்டம் தீட்டினர். சடுகுடு ஆட்டத்தில் எதிர்த்தரப்பை நன்றாக உள்ளே வரவிட்டு மடக்கிப் பிடிப்பார்களில்லையா, அதைப்போல் ‘முஸ்லிம்கள் நன்றாக உள்ளே வரட்டும்; அமுக்கிவிடுவோம். நாலாகப் பிரிந்து நிற்கும் படைகள் ஒன்றாக இணைந்து தாக்கினால்தான் சிரமம்; அவர்களைத் தனித்தனியே போரிட்டு வெல்வது எளிது’என்று முடிவுகட்டினார்கள்.

தவிர, ரோமர்களிடம் படை பலமும் ஆயுத பலமும் எக்கச்சக்கம். பாரசீகர்களுடன் போரிட்டு வாழ்வதே தினசரி வழக்கமாகிப்போயிருந்த அவர்களுக்குக் கோட்டைகள், அரண்கள், பாதுகாப்பு வசதிகள் ஆகியனவும் பிரமாதமாய் அமைந்திருந்தன.

நாலா பகுதிக்கும் சென்றடைந்த அந்த நான்கு தளபதிகளும் இதை நன்கு உணர்ந்து கொண்டனர். எதிரியின் வலுவையும் திட்டத்தையும் புரிந்து வைத்திருந்தவர்களுக்குத் தங்களது நான்கு படையும் வாகான ஓர் இடத்தில் ஒன்றிணைந்து எதிரியுடன் போரிட வேண்டும் என்று தெளிவானது. கலீஃபா அபூபக்ருவிடம் ஆலோசனையும், மேலும் தேவையான போர் வீரர்களையும் கேட்டுத் தனித்தனியே கடிதம் எழுதினர் அவர்கள்.

பதில் வந்தது. ‘நான்கு படைகளும் தங்களது பகுதிகளிலிருந்து பின்வாங்கி யர்மூக் எனும் இடத்தில் ஒன்றிணைய வேண்டும். ரோமர்களை எதிர்த்து ஒருமுகத் தாக்குதல் நடத்தவேண்டும்.’ மேற்கொண்டு ஆயிரக்கணக்கில் படை வீரர்களையும் அனுப்பிவைத்தார் கலீஃபா. முத்தாய்ப்பாக,

பாரசீகத்தில் போரிட்டுக்கொண்டிருந்த காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹுவைத் தம் வீரர்களுடன் யர்மூக் நோக்கிச் சென்று உதவவேண்டும், ஒருங்கிணைந்த படைகளுக்கு அவரே தலைமை ஏற்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார் கலீஃபா.

யர்மூக் வந்து சேர்ந்தார் காலித் பின் வலீத். அபூ உபைதா, ஷுராஹ்பில் இப்னு ஹஸனாஹ், யஸீது ஆகியோரும் யர்மூக் வந்து சேர்ந்தனர். ஆனால் இந்தத் திட்டத்தை அறிந்துகொண்ட ரோமர்கள் பின்வாங்கிச் செல்லும் அம்ரு இப்னுல் ஆஸின் படைகளை பின்தொடர்ந்து யுத்த்ததைத் துவங்க அழுத்தம் அளிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நிலையில் ரோமர்களுடன் முழுஅளவிலான யுத்தத்தைத் தவிர்க்க விரும்பினார் அம்ரிப்னுல் ஆஸ். எப்படியும் யர்மூக் சென்று அடைய வேண்டும். தமது படையின் சேதத்தை இயன்றவரை மிகவும் குறைக்கவேண்டும் என்பதே அவரது பிரதான நோக்கம். அதுதான் அப்பொழுது முஸ்லிம்களுக்கு முக்கியமானதாய் இருந்தது.

இங்கு யர்மூக்கில் மற்ற மூன்று தளபதிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த காலித் பின் வலீத், அம்ரிப்னுல் ஆஸுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலை யோசித்தார். ஒன்று அம்ரு இப்னுல் ஆஸ் தாமே சமாளித்து வந்துவிடுவார் என்று காத்திருப்பது. அல்லது தாம் ஒரு சிறு படையுடன் சென்று அவருடன் இணைந்து ரோமர்களைப் போரிட்டு வென்று அம்ரு இப்னுல் ஆஸ் படையை இங்குக் கொண்டு வந்து சேர்ப்பது என்று இரண்டு தீர்வு அவருக்கு இருந்தது. இதில் இரண்டாவது யோசனையே அவருக்குச் சரி எனப்பட்டது.

நிகழவிருக்கும் பெரும் யுத்தத்திற்கு ஒரு முன்னோட்டமாய், முஸ்லிம்களின் வலிமையும் தாக்குதலும் எப்படி இருக்கும் என்று ரோமர்களுக்குக் நிரூபிக்கலாம். அந்தத் தாக்குதலில் தோல்வியுறும் ரோமர்கள் மனத்தில் பெரும் மனக்குலைவை ஏற்படுத்தலாம் என்று முடிவெடுத்தார் காலித்.

கிளம்பியது ஒரு படை – காலித் பின் வலீத் தலைமையில் அஜ்னதைன் நோக்கி.

oOo

அஜ்னதைன் போரில் குதிரைப் படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார் ஸயீத் இப்னு ஸைது. ரோமர்கள் முஸ்லிம்களின்மீது அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். காலித் பின் வலீதை நோக்கிக் கத்தினார் ஸயீத். “இந்தக் கொடியவர்கள் கூட்டம் பொழியும் அம்புகளால் ஏகப்பட்ட பாதிப்புகள். நம் குதிரையின் முதுகுகள் காயத்தால் கொப்புளிக்கின்றன. இவர்களைத் தாக்கி அழிக்க இன்னும் என்ன காரணம் பாக்கியிருக்கிறது?”

முஸ்லிம் படையினரை நோக்கித் திரும்பிய காலித், “அல்லாஹ்வின் பெயரால் உங்களது ஆயுதங்களை ஏந்துங்கள். அல்லாஹ்வின் கருணை உங்கள் மீது பொழியட்டும்.” அவ்வளவுதான். முழு அளவில் துவங்கியது யுத்தம்.

காலித் பின் வலீதும் அலையென எழுந்த முழு முஸ்லிம் படையும் சேர்ந்து ரோமர்களைத் தாக்கத் துவங்கினர். முஸ்லிம் படை அணியின் வலப்பக்கமும் இடப்பக்கமும் கடும் தாக்குதல்களைத் தொடுத்தனர் ரோமர்கள். அதையெல்லாம் உறுதியுடன் முறியடித்தபடி போரிட்ட முஸ்லிம்களுக்கு அம்புகளின் மழையை சகித்துக்கொண்டு பொறுமையுடன் போரிடுவதுதான் பெரும்பாடாய் இருந்தது.

அந்தப் பொறுமைக்குப் பலன் இருந்தது. சற்று நேரத்தில் போரின் போக்கு முஸ்லிம்களுக்கு முழுக்கச் சாதகமாகிப்போக, இப்பொழுது எதிரிப் படைகளின் உள்ளேயே புகுந்து தாக்கும் அளவிற்கு முன்னேறினர் முஸ்லிம்கள். கடுமையான, ஆக்ரோஷமான முஸ்லிம் படை அணியின் தாக்குதலை சமாளிப்பது ரோமர்களுக்கு கடினமாகித் தற்காப்புப் போருக்குத் தள்ளப்பட்டனர்.

ஆனால், அதுவும் நீடிக்கவில்லை. ரோமர்களின் படை அணிகளை உடைக்க ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். அலங்கோலமடைந்த எதிரி அணி அதன்பின் மீண்டும் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்க முடியாமல் போனது. இறுதியில் படுதோல்வியைச் சந்தித்தது ரோமர்களின் படை. அவர்களைச் சுற்றிவளைத்துக் கொன்றார்கள் முஸ்லிம்கள்.

ரோமர்களுடனான முதல் முக்கியப் போராக வரலாற்றில் பதிவானது அஜ்னதைன் போர்.

oOo

அஜ்னதைன் வெற்றிக்குப்பிறகு யர்மூக்கில் முஸ்லிம் படை அணிகள் காலித் பின் வலீத் தலைமையில் அணிவகுத்து நின்றன. முஸ்லிம்கள் அணியில் மொத்தம் நாற்பதாயிரம் அல்லது நாற்பத்து ஐந்தாயிரம் வீரர்கள் இருந்தனர்.

படையின் பின்னால் உள்ள அணி ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் 1000 வீரர்களாக 5000 வீரர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த அணிகளுக்கு ஸயீத் இப்னு ஸைத் தலைமை தாங்கினார். தவிர அவருக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுக்கும் படையின் நிர்வாகப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

திடோர் என்பவன் தலைமையில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரோம வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அந்தப் படை ‘தொம் தொம்’ என்று பலமான ஓசையுடன் முஸ்லிம்களை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருந்தது. ஏதோ பெரும் மலை ஒன்று கண்ணுக்குத் தெரியாத கைகளால் நகர்த்தப்படுவதைப் போலிருந்தது என்று அதை வருணித்துள்ளார் ஸயீது. “அந்தப் படையினரை வழிநடத்த கிறித்தவர்களின் தலைமை குருக்கள், பாதிரிகள் ஆகியோரும் நிறைந்திருந்தனர். சிலுவைகளைச் சுமந்தபடி சுலோகங்களை அவர்கள் உரைக்க, அதைப் படையினர் திருப்பிச் சொன்னது இடி முழக்கம் போலிருந்தது” என்று குறிப்பிட்டார் ஸயீது.

இந்தப் பிரம்மாண்ட அணிவகுப்பையும் தோரணையையும் பார்த்து முஸ்லி்ம்களின் மனத்தில் யதார்த்தமான அச்ச உணர்வு எழுந்து பரவியது. முஸ்லிம்களைவிட ஐந்து மடங்குப் பெரிய படை; பலமான ஆயயுத வசதி என்று களம் அதிர்ந்து கொண்டிருந்தது.

படையின் மத்தியப் பிரிவுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அப்பொழுது முஸ்லிம் படையினரை நோக்கி அற்புதமான உரையொன்று நிகழ்த்தினார்.

“அல்லாஹ்வின் ஊழியர்களே! அல்லாஹ்வுக்காகப் போரிடுங்கள்; அல்லாஹ் உங்களுக்குத் துணை புரிவான். அல்லாஹ்வின் ஊழியர்களே! களத்தில் உறுதியுடன் நிலைத்து நில்லுங்கள். அது இறைவனுக்கு மிகவும் உவப்பான செயல்; இழிவிலிருந்தும் அவப்பெயரிலிருந்தும் அது நம்மைக் காப்பாற்றும். உங்களது ஈட்டிகளை முன்னோக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். கேடயத்தை உங்களுக்குப் பாதுகாப்பாய் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களது சுவாசம் அல்லாஹ்வின் பெயரை மட்டும் உச்சரிக்கட்டும். வேறு எந்தப் பேச்சும் வேண்டாம். நான் கட்டளையிடும்வரை காத்திருங்கள். பிறகு தாக்குங்கள்.”

சுருக்கமான, எளிய, வீர உரை. இகலோக ஆசை என்று எதுவும் இல்லை. போர் புரியுங்கள் அல்லாஹ்வுக்காக. சுவாசமெல்லாம் அல்லாஹ்வின் பெயர் ஆக்கிரமிக்கட்டும். மற்றவை அவன் செயல்.

இது நெஞ்சில் பதிந்து போனால் பிறகு அச்சமாவது, மண்ணாவது? ஓர் எழுத்து சந்தேகமில்லாமல் தெள்ளத்தெளிவாய் அதைப் புரிந்துகொண்டார்கள் முஸ்லிம் படையினர்.

ஒருவர் தம் அணியிலிருந்து முன்னால் நகர்ந்துவந்து அபூ உபைதாவிடம் கேட்டார், “நான் இந்தப் போரில் மரணமடைவது என்று உறுதி கொண்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் தெரிவிக்க ஏதும் தகவல் உள்ளதா?”

ஊருக்குப் போகிறேன்; உன் குடும்பத்தாருக்கு ஏதும் செய்தி் உள்ளதா என்பதைப் போல் வெகு தீர்மானமாய்க் கேட்டார் அவர்.

”ஆம்! நானும் முஸ்லிம் படையினரும் நபியவர்களுக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ கூறினோம் என்று தெரிவியுங்கள். மேலும் அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ் வாக்குறுதி அளித்தது நிறைவேறியது’ என்றும் கூறுங்கள்.”

அந்தச் செய்தியை பெற்றுக்கொண்ட அவர், வாளை உருவிப் போருக்குத் தயாராக, அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஸயீத் தாமும் தயாரானார்.

துவங்கியது போர் – படு ஆக்ரோஷமாக. முழந்தாளிட்டு அமர்ந்த ஸயீத் தம் ஈட்டியை நீட்டிப் பிடித்துக்கொண்டார். முஸ்லிம்களை நோக்கிக் குவிந்த குதிரை வீரரைத் தம் ஈட்டியாலேயே குத்திக் கொன்று எறிந்தார். ஸயீதின் மனத்தில் எதிரிகளின் எண்ணிக்கையும் பிரம்மாண்டமும் தோற்றுவித்திருந்த அச்சம் முற்றிலும் நீங்கிப் போயிருந்தது. சுழன்று சுழன்று போரிடத் துவங்கினார்.

முஸ்லிம்களின் படை வெகு மூர்க்கமாய் எதிரிகளைத் தாக்கத் துவங்கியது. கடுமையான சண்டைக்குப் பிறகு மாபெரும் வெற்றியை அடைந்தனர் முஸ்லிம்கள். வெறும் நாற்பதாயிரத்துச் சொச்சம் முஸ்லிம்கள், இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரோமப் படையினரை வென்றனர். இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கியமான யுத்தமாக அமைந்து போனது யர்மூக் யுத்தம்.

பின்னர் டமாஸ்கஸ் நகரம் முஸ்லிம்கள் வசமானபோது அந்நகரின் ஆளுநராக ஸயீத் இப்னு ஸைதை நியமித்தார் அபூ உபைதா.

oOo

பனூ உமைய்யா ஆட்சிக் காலம். அப்பொழுது மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த ஸயீதுக்குப் பெரும் சோதனை ஒன்று வந்து சேர்ந்தது. அர்வா பின்த் உவைஸ் என்றொரு பெண்மணி. அவர் திடீரென ஸயீத் மீது புகார் ஒன்று கூற ஆரம்பித்தார். ‘தம்முடைய நிலத்தை ஆக்கிரமித்து, அவருடைய சொத்துடன் இணைத்துக் கொண்டார் ஸயீத்’ என்று புகார். அதை மக்களுக்கு மத்தியில் சென்று பேசிப் பரப்பவும் ஆரம்பித்துவிட்டார்.

மதீனாவின் ஆளுநராக மர்வான் இப்னுல் ஹகம் பதவி வகித்து வந்த நேரம் அது. ஒரு கட்டத்தில் ஆளுநரிடம் வந்து புகார் கூறினார் அர்வா. புகார் வந்தால், அதுவும் முக்கியப் புள்ளிகளைப் பற்றி புகார் வந்தால், அது கை மாறி, மாறி குப்பைக் கூடைக்குள் போகும் பழக்கம் அப்பொழுது பரிச்சயமில்லாதது. வழக்கு விசாரணை மேற்கொள்ள ஸயீதைக் கூப்பிட்டு அனுப்பினார் மர்வான். இது ஸயீத் இப்னு ஸைதுக்கு பெரும் மன உளைச்சலைத் தோற்றுவித்தது.

‘என் தகுதி என்ன? அந்தஸ்து என்ன? பெருமை என்ன? என் மீது யாரோ எவரோ வந்து புகார் சொல்வதாவது’ என்ற எண்ணத்தில் தோன்றிய உளைச்சல் இல்லை அது. அறவே இல்லை. பின்?

“நான் அந்தப் பெண்ணின் நிலத்தை மோசடி செய்து அபகரித்துவிட்டேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் அவ்விதம் செய்யவே முடியாது. ஏன் தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்த செய்தி ஒன்றை நான் கேட்டிருக்கிறேன். ‘யாரேனும் கையளவு நிலத்தை அநியாயமாய்க் கையகப்படுத்தியிருந்தால், மறுமை நாளிலே அது அவர் கழுத்திலே கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படுவார். பூமியும் அதன் ஏழு அடுக்குகளும் உள்ள அளவிற்கு அந்தத் துண்டு நிலத்தின் தடிமன் இருக்கும்.’

நான் அவளை மோசடி புரிந்துவிட்டேன் என்று அந்தப் பெண் கூறுகிறாள். யா அல்லாஹ்! அவள் கூறுவது பொய் எனில், அவள் கண்பார்வை பறிபோகட்டும். தன்னுடைய கிணறு என்று கோரும் அந்தக் கிணற்றினுள் அவள் வீழட்டும். என்னுடைய நேர்மையையும் நான் அவளுக்கு அநீதி இழைக்கவில்லை என்பதையும் ஒரு தெளிவான ஒளியைப்போல் முஸ்லிம்கள் அறிந்துகொள்ளட்டும்.”

அநீதி இழைக்கப்பட்டவரது இறைஞ்சுதல் இறைவனை அடையத் தடையே இல்லை என்பது நபியவர்களின் அறிவிப்பு. எனும்போது, சொர்க்கவாசி என்று நபியவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்டவர், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இறைஞ்சினால்?

வெகு சில நாட்களில் அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஒன்று ஏற்பட்டது. நிலங்களுக்கு இடையே நிறுவப்பட்டு, காலப்போக்கில் மறைந்துபோயிருந்த எல்லைக்கோடுகளை, அடித்துச் சென்ற தண்ணீர் தெளிவாக்கிவிட்டுப் போனது. பிறகு பார்த்தால் ஸயீதின் நேர்மையை பளிச்சென மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின அந்த எல்லைக்கோடுகள்.

ஒரு மாதம் கடந்திருக்கும். அந்தப் பெண்ணின் கண்பார்வை பறிபோனது. ஒருநாள் தம்முடைய நிலத்தில் உலாவிக் கொண்டிருந்தவர், பார்வைக் குறைபாடால் தட்டுத்தடுமாறிக் கிணற்றினுள் வீழ்ந்தார்.

இந்த நிகழ்வு அக்காலத்தில் மிகவும் பிரபலமாகி, அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறினார், “மக்கள் மத்தியில் பழமொழியே உருவாகிவிட்டது. அல்லாஹ் அர்வாவின் கண்பார்வையைப் பறித்ததைப்போல் உன் பார்வையைப் பறிக்கட்டும்.”

oOo

ஹிஜ்ரீ 50ஆம் ஆண்டு, ஒரு வெள்ளிக்கிழமை. மதீனாவில் அல்-அகீக் எனும் இடத்தில், ஏறத்தாழ தமது எழுபதாவது வயதில் இறந்துபோனார் ஸயீத் இப்னு ஸைது. செய்தி அறிந்து விரைந்து வந்து சேர்ந்தார் அப்துல்லாஹ் இப்னு உமர். ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஸயீதின் உடலைக் குளிப்பாட்டி, அவரும் அப்துல்லாஹ் இப்னு உமரும் சேர்ந்து ஸயீதின் உடலைக் கப்ரினுள் இறக்கி நல்லடக்கம் செய்தனர்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment