தோழர்கள் – 23 உஸைத் பின் ஹுளைர் (ரலி)

by நூருத்தீன்
23. உஸைத் பின் ஹுளைர் (أسيد بن حضير)

தீனாவில் அப்துல் அஷ்ஹல் என்றொரு குலம். அவர்களை முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு சென்று சந்தித்தார். முதல் அகபா உடன்படிக்கைக்குப் பிறகு முஸ்அப் இப்னு உமைர் யத்ரிபிற்கு வந்து பிரச்சாரம் புரிய ஆரம்பித்ததை முந்தைய தோழர்களின் அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம். யத்ரிப் வந்த முஸ்அபை, தம் வீட்டில் விருந்தினராக இருத்திக் கொண்டவர் அஸ்அத் இப்னு ஸுராரா. இவர் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வீடு முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய மிகவும் தோதாகிப்போய், அங்கு மக்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.

ஒருநாள் அஸ்அத், முஸ்அபை அழைத்துக் கொண்டு, “இந்த மக்களுக்கும் செய்தி சொல்லுங்கள். அவர்களும் இஸ்லாத்தை அறியட்டும்; ஏற்றுக் கொள்வார்கள்” என்று அப்துல் அஷ்ஹல் குலத்தினரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அந்தக் குலத்தினருக்குச் சொந்தமான ஒரு பழத்தோட்டம் இருந்தது. கிணறு, பேரீச்ச மரங்கள், அதன் நிழல் என்று வெயிலுக்கு இதமான இடம். தங்களைச் சந்திக்க வந்த அந்த இருவரையும் அந்த மக்கள் அத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, “என்னதான் அது செய்தி? சொல்லுங்கள் கேட்போம்” என்று எல்லோரும் வாகாய் அமர்ந்து கொண்டு செவியுற ஆரம்பித்தார்கள்.

முஸ்அப் இப்னு உமைரை ஒரு சிறு மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அதில் சிலர் முன்னமேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மற்றவர்களோ ‘கேட்டுத்தான் பார்ப்போமே’ என்று வந்து சேர்ந்து கொண்டவர்கள். அழகிய முறையில் நற்செய்தி சொல்ல ஆரம்பித்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.

மதீனாவில் இருபெரும் கோத்திரங்கள் இருந்தன, ஒன்று அவ்ஸ், மற்றொன்று கஸ்ரஜ். இத்தகவலும் முந்தைய அத்தியாயங்களில் நாம் அறிந்ததே. இதில் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த இரு முக்கியப்புள்ளிகள் உஸைத் பின் ஹுளைர், ஸஅத் பின் முஆத். இவர்கள் இருவரும் அன்று ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க, ஒருவன் வேகவேகமாய் அவர்களிடம் வந்தான். “செய்தி தெரியுமா? கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் இப்னு ஸுராரா தெரியுமில்லையா? மக்காவிலிருந்து வந்து என்னவோ புதுமதம் பற்றிப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருக்கும் அவரது விருந்தினரை மிகத் துணிச்சலாய் இங்கு நமது எல்லைக்கு அருகிலேயே அழைத்து வந்துவிட்டார். அதையெல்லாம் கவனிக்காமல் இங்கு நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களே?”

வந்தவன் பற்ற வைத்துவிட்டு நகர, வெகுண்டு எழுந்தார் ஸஅத் பின் முஆத். இவருடைய தாயாரின் சகோதரி மகன்தாம் அஸ்அத் இப்னு ஸுராரா. அதனால் தன்னுடைய கோபத்தை நேரே சென்று அவர்மேல் கொட்டுவதில் தயக்கம் ஏற்பட்டது ஸஅதுக்கு. உஸைதை அழைத்தார்.

“உஸைத்! நீ ஒரு தைரியசாலி, பலசாலி. மக்காவிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் அந்த இளைஞனை மிரட்டி அனுப்பியாக வேண்டும். அங்கிருந்து கிளம்பிவந்து நம் கோத்திரத்துக் கீழ்க்குடி மக்களின் மனதைக் கலைத்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய கடவுளர்களைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனை எச்சரித்து, யத்ரிபிலிருந்தே விரட்ட வேண்டும். மீண்டும் ஒருமுறை அவன் இங்கு வந்து நம் இல்லங்களில் கால் வைக்கக் கூடாது. இவன் மட்டும் என் உறவினன் அஸ்அத் இப்னு ஸுராராவின் விருந்தினனாகவும் அவனது அடைக்கலத்தில் இல்லாதும் இருந்திருப்பின் நானே அவனைக் கவனித்து அனுப்பியிருப்பேன். உனக்குச் சிரமம் அளித்திருக்க மாட்டேன். சற்று கவனித்துவிட்டு வாயேன்”

“அவ்வளவுதானே? நான் பார்த்துக் கொள்கிறேன். இன்றோடு இப்பிரச்சனை ஒழிந்தது” என்று தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று கிளம்பி அத்தோட்டத்தை அடைந்து உள்ளே நுழைந்தார் உஸைத் பின் ஹுளைர். அவர் நுழைவதைக் கண்ட அஸ்அத் இப்னு ஸுராரா உடனே முஸ்அபை எச்சரித்தார். “எச்சரிக்கை முஸ்அப்! அதோ வருகிறாரே ஒருவர், அவர் அவரது குலத் தலைவர்களில் ஒருவர். நல்ல புத்திசாலி. மிகவும் நேர்மையானவர். அவர் பெயர் உஸைத் பின் ஹுளைர். அவர் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்று வையுங்கள், அவரது குலத்திலிருந்து பல மக்கள் அவரைப் பின்தொடர்ந்து நுழைவார்கள். அந்தளவு அவருக்குச் செல்வாக்கு. அல்லாஹ்வுக்கு உகந்த முறையில் அவரை இஸ்லாத்திற்கு அழையுங்கள். இனி உங்கள்பாடு, அவர்பாடு”

உஸைதின் தந்தை ஹுளைர் அல்-காதிப், அவ்ஸ் குலத்தின் தலைவராகத் திகழ்ந்தவர். அரபு குலத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த அவர் நல்ல பலசாலி, சிறந்த வீரர். அவரைப் பற்றிக் கவிஞரொருவர் மெனக்கெட்டுக் கவிதையெல்லாம் எழுதிப் புகழ்ந்து வைத்திருந்தார். அவரது அந்தஸ்து, வீரம், பரோபகாரம் எல்லாம் உயில் எழுதி வைக்கப்படாமலேயே உஸைதுக்கு வந்து அமைந்தது. மிகவும் திறமையான வில்லாளியாகவும் குதிரையேற்றத்தில் சிறப்பானவராகவும் ஆகிப்போனர் உஸைத். எழுத்தறிவு குறைவாய் அமையப்பெற்ற அக்குலத்தில் கல்வியறிவு வாய்க்கப்பெற்ற சிலருள் அவரும் ஒருவர். இதெல்லாம்போக, இயற்கையாய் அமைந்துவிட்ட நேரிய குணங்களும் அப்பழுக்கற்ற சிந்தனையும் எல்லாம் மேன்மையான இணைப்புகளாக அமைந்துவிட்டன.

அஸ்அத் இப்னு ஸுராராவின் எச்சரிக்கை முஸ்அபுக்குப் புரிந்தது. கோபமாய், வேகவேகமாய் நுழைந்த உஸைத், அங்குக் குழுமியிருந்த மக்களைப் பார்த்தார். முஸ்அபை முறைத்தார். ‘நீதானா அவன்?’

“உனக்கு எங்கள் பகுதியில் என்ன வேலை? எங்களது கீழ்க்குடி மக்களையெல்லாம் அழைத்துவைத்து மனதைக் கலைக்கிறாயாம். உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன், உயிர் முக்கியம் என்றால் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்கள்” வீண் மிரட்டலெலாம் இல்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது; வார்த்தைகளும் மிகக் கடுமையாய் வந்து விழுந்தன.

நிதானமாய், சாந்தமாய் உஸைதைப் பார்த்தார் முஸ்அப். “எதற்கு வீண் பிரச்சனை? அதெல்லாம் வேண்டாம். கோத்திரத் தலைவர்களுள் ஒருவரான உங்களுக்கு நானொரு சிறு கோரிக்கை வைக்கட்டுமா?”

“என்ன அது?”

“சற்று இங்கு வந்து அமருங்கள். நான் என்ன சொல்லிவருகிறேன் என்பதைச் செவியுறுங்கள். நான் சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையா, ஒன்றும் பாதகமில்லை. உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் நாங்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறோம்”

வீண்வாக்குவாதம், வீண்பேச்சு, மிரட்டலுக்கு பதில் மிரட்டல், பதிலுக்குக் கோபம், அதட்டல், என்று எதுவுமே இல்லாமல் நேரடியாய் மிக இலகுவாய் அவர் மனதைத் தட்டினார் முஸ்அப். “நல்லது. உன் கோரிக்கை அப்படியொன்றும் மோசமில்லை” என்று ஏற்றுக் கொண்டார் உஸைத். அதற்காக, தான் பணிந்துவிட்டதாகவோ, கோபம் தணிந்துவிட்டதாகவோ அவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாதே! தான் கொண்டுவந்திருந்த ஈட்டியைத் தரையில் செங்குத்தாய்ச் செருகி நட்டுவைத்தார். எந்நேரமும் அது அவர்களைத் தாக்கத் தயங்காதாம் – அதற்கு அதுதான் அர்த்தம். “உம், சொல்”

முஸ்அப் உஸைதைக் கூர்ந்து நோக்கி, முழுக் கவனத்துடன் நிதானமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். ஏகத்துவம், அல்லாஹ் முஹம்மது நபிக்கு அளித்துள்ள நபித்துவம், அற்ப இம்மை என்ன, நிரந்தர மறுமை என்ன, போன்ற இஸ்லாமிய அடிப்படைகளை அழகாய்ச் சொன்னார், தெளிவாய் அறிவித்தார். இறைவனிடமிருந்து வந்திறங்கிய குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார். அவ்வளவுதான். நீண்ட நெடிய பிரசங்கம், தர்க்கம், அது-இது என்று வேறொன்றுமே பேசவில்லை!

உஸைத் இப்னு ஹுளைர் மனதினுள் அப்படியே தெள்ளத்தெளிவாய்ப் புகுந்து அமர்ந்து கொண்டது அந்தச் செய்தி. ‘அவ்வளவுதானா? இதுதான் இஸ்லாமா? இந்த எளிமையை மறுத்தா அங்குக் குரைஷிகளும் இங்கு சில மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்?’ அங்குக் கூடி அமர்ந்திருந்தவர்கள் உஸைதின் முகத்தில் தென்படும் மாறுதலை அப்பட்டமாய்க் கண்டனர். ‘அல்லாஹ்வின்மீது ஆணையாக! இவரது முகத்தில் தென்படும் களிப்பும் உவப்பும்… இதோ இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறார்’ என்பதை அனைவராலும் எளிதாய் யூகிக்க முடிந்தது.

சுற்றி வளைக்கவில்லை உஸைதும். “நீர் சொன்ன செய்திகள் என்ன அருமை! குர்ஆனின் வசனங்கள் என்று சிலவற்றை ஓதினீர்களே எவ்வளவு சிறப்பாய் உள்ளது அது! சொல்லுங்கள், ஒருவன் முஸ்லிமாக என்ன செய்யவேண்டும்?”

“அதொன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு குளியல். உடைகளைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் வாய்விட்டு சாட்சி, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதரென்று சாட்சி பகர்கிறேன்’. அதன் பிறகு இரண்டு ரக்அத் தொழுகை. அவ்வளவுதான்”

‘அவ்வளவுதானே’ என்று விருட்டென்று எழுந்தார் உஸைத். அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்று தண்ணீர் மொண்டு தம்மைச் சுத்தம் செய்து கொண்டு திரும்பினார். கலிமா உரைத்தார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, ‘இதோ இன்றிலிருந்து இஸ்லாமியப் பணிக்கு நான் தயார்’ என்று தலை உயர்த்தி நின்றார், உஸைத் பின் ஹுளைர், ரலியல்லாஹு அன்ஹு!

சென்றவர் வருவார், மக்கத்து இளைஞனைத் துரத்தி விரட்டிய பராக்கிரமம் சொல்வார் என்று அங்குக் காத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ஸஅத் பின் முஆத்.

oOo

தோட்டத்திலிருந்து திரும்ப ஆரம்பித்த உஸைத் மனதில் தீவிர சிந்தனை. “இந்த இஸ்லாம் அற்புதம்! என்னைப் போன்றவரே என் நண்பர் ஸஅத். நான் பெற்ற இந்த இன்பம் அவரும் பெற வேண்டும். என்ன செய்யலாம்? ‘விரட்டப் போனேன், ஆனால் அவர் உரைத்த செய்தி நன்றாக இருந்தது; ஏற்றுக் கொண்டேன்’ என்றால் அது சரிப்பட்டுவராது. ஸஅத் மனதில் மேலும் கோபத்தைக் கிளப்பி, உண்மையை உணர முடியாமல் செய்துவிடும். அதையெல்லாம் அவருக்கு எடுத்துச் சொல்ல முஸ்அப்தாம் சரியான ஆள். ஆஹா, அவரது வாயால் குர்ஆன் வசனங்களை ஸஅத் செவிமடுத்தாலே போதுமே” என்று எண்ணியபடி நடந்து கொண்டிருந்தவருக்கு ஓர் உபாயம் தோன்றியது.

உஸைத் திரும்பி வருவதைக் கண்ட ஸஅத் மனதில் உடனே குறக்களி – ‘ம்ஹும்! என்னவோ சரியில்லை’. தம் அருகிலிருந்தவர்களிடம், “சத்தியமாய்ச் சொல்கிறேன். திரும்பி வருவது கிளம்பிச் சென்ற உஸைத் அல்ல. அவர் முகத்தில் என்னால் மாற்றத்தைப் படிக்க முடிகிறது”

முஸ்அபுக்கு மதீனாவில் அடைக்கலம் அளித்துள்ள அஸ்அத் இப்னு ஸுராரா, ஸஅதின் மிக நெருங்கிய உறவினர் என்று முன்னரே பார்த்தோம். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் உஸைத். ஸஅதிடம் வந்தவர், “அல்-ஹாரித் குலத்தினர் அஸ்அத் இப்னு ஸுராராவைக் கொலைச் செய்யப் புறப்பட்டு வருவதாய்க் கேள்விபட்டேன். அஸ்அத் உம்முடைய உறவினர் என்று அறிந்து கொண்டும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லையாம்”

அந்த பானம் மிகச் சரியாய் வேலை செய்தது. “என்ன? என் சொந்தக்காரனைக் கொல்ல வருகிறார்களா?” என்று குதித்தெழுந்து தம் அம்பையும் ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு அந்தத் தோட்டத்தை நோக்கி ஓடினார் ஸஅத். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிவந்து பார்த்தால், சண்டை சச்சரவுக்கான ஆரவாரம், சந்தடி எதுவுமேயில்லாமல் அமைதியாக இருந்தது அந்த இடம். முஸ்அப் அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருக்க, அவரைச் சுற்றி அமர்ந்து அமைதியாய்ச் செவியுற்றுக் கொண்டிருந்தது அந்தக் குழு. உஸைதின் திட்டம் பிறழாமல் வேலை செய்தது. குர்ஆன் வசனங்களையும் முஸ்அபின் செய்திகளையும் கேட்ட பிறகு ஸஅத் மட்டும் என்ன செய்வார்? புத்திசாலி அவர் – வெறும் ஸஅத் ஆக இருந்தவர் – ஸஅத் பின் முஆத் ரலியல்லாஹு அன்ஹு ஆகிப் போனார்.

அதைத் தொடர்ந்து ஸஅத், தம் மக்களிடம் சென்று பேசி, அவர்களில் பலர் மிகப்பெரும் கூட்டமாய் இஸ்லாத்திற்குள் ஓடிவந்து புகுந்தது தனி வரலாறு.

யாரோ ஒருவன் போகிற போக்கில் கெடுதலுக்குப் பற்றவைத்தத் திரி நன்மையில் முடிந்தது. அது என்னவோ, வீரியத்துடன் இஸ்லாத்தை எதிர்த்து எழுபவர்கள் பலர் வாஞ்சையுடன் அதைத் தழுவி சகலமும் மாறிப்போவது மாவீரர் உமர் (ரலி) இடமிருந்து தொடங்கி, ஆயிரத்து நானூறு ஆண்டுகளாய்த் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறை அற்புதம் அது!

oOo

உஹதுப் போர் தொடங்குவதற்குமுன் மதீனாவில் நபியவர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. குரைஷிப் படைகளை எப்படி எதிர்கொள்வது என்பது ஆலோசனையின் கரு. மக்கள் இருவிதக் கருத்துகளை மொழிந்தனர். நபியவர்களும் பல முக்கிய நபித்தோழர்களும் முஸ்லிம்படை மதீனாவில் தங்கி நகரைத் தற்காத்துப் போர் புரிய வேண்டும் என்று விரும்பினர். ஆனால் மற்றொரு தரப்பினரோ பத்ரு யுத்தம் போலவே முஸ்லிம் படைகள் மதீனாவை விட்டுக் கிளம்பிச் சென்று நகருக்கு வெளியே, வழியிலேயே அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். இறுதியில் இரண்டாம் தரப்பினரது கருத்து வலுப்பட, நபியவர்களும் அதற்கு உடன்பட்டு, ‘சரி கிளம்புவோம்’ என்று அறிவித்துவிட்டு ஆயுதம் தரித்தார்கள்.

நபியவர்களைப் போலவே முஸ்லிம் படைகள் மதீனாவில் தங்கியிருந்து போர் புரியவேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தவர்களில் முக்கியமான இருவர் உஸைத் பின் ஹுளைரும் ஸஅத் பின் முஆதும். அவர்கள் மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள், “நாம் மதீனாவில் தங்கியிருந்தே எதிரியை எதிர்கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் விரும்பியதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களது கருத்தை வலியுறுத்திப் பேசியதன் மூலம் நீங்கள் அவர்களது கருத்திற்கு மாற்றமாய் அறிவுறுத்திவிட்டீர்களே. என்ன செய்யவேண்டும் என்ற முடிவை முழுக்க முற்றிலும் இறைத் தூதரின் நோக்கத்திற்கு விட்டுவிட்டு அவர்களது கட்டளையை ஏற்றிருந்தால் எவ்வளவு நன்மையாக இருந்திருக்கும்?”

மற்றவர்களுக்கு அதன் நியாயம் புரிந்தது. கருத்துச் சொல்கிறோம் பேர்வழி என்று நபியவர்களை மீறிவிட்டோமோ என்ற பயமும் கவலையும் அந்த மக்களுக்கு ஏற்பட்டு விசனம் தொற்றியது! நபியவர்கள் ஆயுதம் தரித்து, தம் வீட்டிலிருந்து வெளியேவர, அவர்களிடம் சென்று பேசினார்கள் அம்மக்கள். “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு மாற்றமாய்ச் சொல்வது செய்வது எங்கள் நோக்கமில்லை. இங்கிருந்து போர்புரிவதே தங்களது விருப்பம் எனில் அப்படியே செய்வோம். இறைவன் நாட்டப்படியே அனைத்தும் நடக்கட்டும்”

அவர்களுக்கு நபியவர்கள் பதில் அளித்தார்கள். “நான் ஒரு கருத்தை முன்மொழிந்தேன். அதை உங்களில் பலர் ஏற்கவில்லை. பெரும்பாலானவர்களின் ஆலோசனையை நான் ஏற்றுக் கொண்டேன். கவசம் தரித்து வாளும் ஏந்தியபின் நபியென்பவர் அந்த முடிவிலிருந்து விலகுபவர் அல்லர். இப்பொழுது நபிக்கும் அவரது எதிரிக்கும் இடையில் தீர்ப்பு வழங்கவேண்டியவன் இறைவனே. ஆகவே இனி என் கட்டளைக்குக் கீழ்படியுங்கள். பொறுமையுடன் போர்புரியுங்கள். வெற்றி உங்களை வந்தடையும்”

ஆலோசனையொன்று செய்து அதன் அடிப்படையில் முடிவொன்று எடுக்கப்பட்டுவிடுமாயின் அடுத்து அந்த முடிவை செயல்படுத்துவதில்தான் காரியமாற்ற வேண்டுமே தவிர, நொடிக்கு நொடி முடிவை மாற்றிக் கொண்டிருந்தால் அது ஆபத்தல்லவா? உறுதியற்ற மனோபாவமாயிற்றே?

அதன்பிறகு முஸ்லிம் படைகள் மதீனாவிலிருந்து கிளம்பி உஹது மலையடிவாரத்தில் போர் நிகழ்ந்ததும் அதன் விளைவுகளும் தனி வரலாறு. நாம் ஆங்காங்கே எட்டிப்பார்த்தும் வந்தோம்.

அந்தப் போரில் நபியவர்களைக் காக்க தம் உயிரை வாளில் ஏந்திப் போரிட்டார் உஸைத். அதன் விளைவாய் அவரது உடலில் கடுமையான ஏழு காயங்கள். அதெல்லாம் துச்சம் எனத் துடைத்து எறிந்ததுவிட்டு அடுத்த பணிக்குத் தயாராக நின்றர் உஸைத்.

எப்படி?

உஹதுப் போரைத் தொடர்ந்து, ‘பனூ அஸத் கோத்திரத்தின் தலைவர்களான துலைஹாவும் ஸலமாவும் மதீனாவின்மீது படையெடுப்பதற்கு ஆயத்தம் புரிந்து வருகிறார்கள்’ என்ற செய்தி மதீனாவை அடைந்தது. முஹம்மது நபி உடனே அபூ ஸலமா பின் அப்தில் அஸதை அழைத்து, அவரது தலைமையில் நூற்றைம்பது வீரர்களை தயார் செய்து, “எதிர்கொண்டு சென்று எதிரிகளை முறியடித்துத் திரும்புங்கள்” என்று கட்டளையிட்டார்கள். அப்படையில் இடம்பெற்றிருந்த முக்கியமான தோழர்கள் அபூ உபைதா இப்னுல் ஜர்ரா, ஸஅத் பின் அபீவக்காஸ், உஸைத் பின் ஹுளைர். பகலில் பதுங்கி, இரவில் முன்னேறிச் சென்று தாக்குங்கள் என்பது கட்டளை. அதன்படி எதிரிகள் சற்றும் எதிர்பாராதவிதமாய் அவர்களை அடைந்து தாக்குதல் நிகழ்த்தி வெற்றிச் செய்தி கொண்டுவந்தனர் அவர்கள்.

oOo

ஒருமுறை நபியவர்கள் தோழர்களுடனான தம் பயணத்தின்போது தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவை அழைத்துச் சென்றிருந்தார்கள். மதீனாவுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள தாத்துல் ஜைஷ் எனும் இடத்தில் அனைவரும் தங்கியிருந்துவிட்டுப் புறப்படும்போது, அன்னை ஆயிஷா அணிந்திருந்த கழுத்து ஆபரணம் தொலைந்துவிட்டது. தேடிப்பார்த்தார்கள், கிடைக்கவில்லை. நபியவர்களிடம் அன்னை ஆயிஷா அதைத் தெரிவிக்க, உஸைத் பின் ஹுளைரை அழைத்து, ‘சென்று தேடிப்பாருங்கள்’ என்று அனுப்பிவைத்தார்கள் அவர்கள்.

முஸ்லிம் படைகள் தங்கியிருந்த அந்த இடத்தில் அப்பொழுது தண்ணீர் வசதி எதுவுமேயில்லை. தொழுகை நேரமோ நெருங்கிவிட்டது. இப்படியான ஓர் இடத்தில் நகையைத் தவறவிட்டு அனைவரும் தாமதிக்கும்படி ஆகிவிட்டதே என்று அன்னை ஆயிஷாவின் தந்தை அபூபக்ருவிடம் சிலர் சென்று முறையிட்டனர். அவரும் சற்று எரிச்சலுடன் வந்து மகளைக் கடிந்து கொள்ள ஆரம்பித்தார். இதனிடையே நகையைத் தேடி எடுத்துவரச் சென்ற உஸைதும் மற்றத் தோழர்களும் தொழுகை நேரம் தவறவிடக் கூடாதே என்று ஒளு இல்லாத நிலையிலேயே தொழுதுவிட்டு வந்து நபியவர்களிடம் முறையிட்டார்கள்.

அந்த நேரத்தில் வந்திறங்கியது மழை! சூல்கொண்ட மேகத்திலிருந்து கொட்டும் மழையல்ல; அதற்கும் வெகுமேலேயிருந்து தயம்மும் சலுகைக்கான இறைவனின் கருணை மழை! தண்ணீர் இல்லாத நேரத்தில் உலர்ந்த மண்ணைக் கொண்டு உடலைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள், தொழுகை நிகழ்த்துங்கள் என்ற சலுகை. மகிழ்வுற்ற உஸைத் அன்னை ஆயிஷாவிடம் கூறினார், “அல்லாஹ் தங்களுக்கு நல்வெகுமதி அளிப்பானாக. தங்களுக்கு விருப்பமில்லாதது ஏதேனும் நிகழ்ந்த போதிலும் அல்லாஹ் அதைத் தங்களுக்கு இலேசாக்கி அதன் மூலம் தங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சிரமப் பரிகாரம் அளிக்காமல் விட்டதில்லை”.

இறுதியில் அந்த நகை, அன்னை ஆயிஷா பயணிக்கும் ஒட்டகம் எழுந்து நிற்கும்போது அதன் அடியில் கிடந்தது.

oOo

குர்ஆனின் அறிமுகத்துடன் துவங்கியதாலோ என்னவோ போர் வீரர் உஸைத் பின் ஹுளைருக்குக் குர்ஆனின்மீது அளவற்ற ஆர்வம். போரில் ஈடுபட்டு, பின்னர் மீதமிருந்த நேரமெல்லாம் குர்ஆனே பிரதானம் என்றாகிப்போனது. கற்பது, அதை அழகுற ஓதுவது. இதுவே அவருக்கு முழுநேர வேலை. இறைவனின் அருளால் அவரது குரல்வளமோ அருமை. அது அவரது உச்சரிப்பை மேலும் மெருகுற வைத்தது. இரவில் மக்கள் உறங்கும் நேரத்தில் சாந்தம் தவழும் நேரத்தில் மெய்மறந்து குர்ஆன் ஓதுவது அவரது வழக்கம்.

அவர் ஓதுவதைக் கேட்பதற்குத் தோழர்கள் போட்டியிடாத குறை. அவர்களது ஏகமனதான எண்ணம், “வசனங்கள் இறைத்தூதருக்கு வந்திறங்கிய அதே புதுப்பொலிவுடன் இருக்கிறது இவரது உச்சரிப்பு”

ஆனால், உஸைதோ இதரத் தோழர்களோ அறியாத, நினைத்துக்கூடப் பார்க்காத வேறோர் இனமும் அவர் குர்ஆன் ஓதுவதைக் கேட்பதில் பெருமிதம் கொண்டிருந்தனர் என்பது வியத்தகு உண்மை. நிரூபித்தது ஒரு நிகழ்ச்சி.

உஸைதுக்கு யஹ்யா என்றொரு பாலகன். ஒருநாள் இரவு வீட்டிற்கு வெளியே முற்றத்தில் அவனை உறங்க வைத்துவிட்டு அமர்ந்திருந்தார் உஸைத். சற்றுத் தள்ளி அவரது குதிரை கட்டப்பட்டிருந்தது. அவருடைய போர்வாகனம் அந்தக் குதிரை. சாந்தமான இரவு. நட்சத்திரங்கள் மினுமினுக்கும் தெளிவான வானம். அத்தகைய அருமையான அமைதி தவழும் இரவும் சூழலும் உஸைத் மனதில் என்ன எண்ணத்தைத் தோற்றுவிக்கும்? தனது உன்னதக் குரலில் குர்ஆன் ஓதத் தொடங்கிவிட்டார்.

“அலிப்ஃ, லாம், மீம். இஃது இறைமறை; இதில் எவ்வித ஐயமுமில்லை. இறையச்சம் உடையோருக்கு இது நேர்வழிகாட்டியாகும். அவர்கள், மனிதப்புலன்களுக்கு எட்டாத மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகுவார்கள். மட்டுமின்றி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து அறவழியில் செலவும் செய்வார்கள். (நபியே!) அவர்கள் உமக்கு அருளப் பெற்ற(இம்மறைய)தன் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; மறுமை வாழ்க்கையை உறுதியாக நம்புவார்கள்”

இரண்டாம் அத்தியாயமான அல்-பகராவின் ஆரம்ப வசனங்கள் அவை. உஸைத் ஓதிக் கொண்டிருக்கும்போது திடீரென அவரது குதிரை, பாய்வதைப்போல் மூர்க்கமாய்க் குதித்தது. கட்டப்பட்டிருந்த தாம்புக் கயிற்றையே அறுத்துவிடும்போல் இருந்தது அதன் செயல். ஒன்றும் புரியாமல் ஓதுவதை நிறுத்திவிட்டு உஸைத் குதிரையைப் பார்க்க, அது உடனே அமைதியாகிவிட்டது. தொடர்ந்தார் உஸைத்.

“இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் நடைபயில்வோர்; இவர்களே வெற்றியாளர்கள்”

மீண்டும் அவரது குதிரை முன்பைவிடக் கடுமையாய்த் தரையை உதைக்க ஆரம்பித்தது. திடுக்கிட்டு உஸைத் குர்ஆன் ஓதுவதை நிறுத்த, குதிரையும் அமைதி அடைந்தது. குர்ஆன் ஓதுவதை உஸைத் தொடர்ந்தால் மீண்டும் அதே நிகழ்ந்தது. என்னவோ பட்டனைத் தட்டினால் இயங்கும் மின்சாதனம்போல் ஓத ஆரம்பித்தவுடன் குதிரை குதிப்பதும் நிறுத்திய கணம் அது அமைதி அடைவதுமாகப் பலமுறை நிகழ்ந்து கொண்டிருந்தது. உஸைதுக்குக் கவலையாகி விட்டது! எங்கே குதிரை கட்டறுத்துக்கொண்டு வந்து அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகனை மிதித்துவிடுமோ என்ற கவலை. யஹ்யாவை எழுப்ப முற்பட்டார். அப்பொழுது அவர் யதேச்சையாய் வானத்தை அன்னாந்துப் பார்க்க, முன்னெப்போதும் யாரும் கண்டிராத மிகப் பிரகாசமான மேகத் திரளொன்று திரண்டிருந்தது. அதில் கட்டித் தொங்கவிட்டதைப் போன்ற விளக்குகள். அவர் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அம்மேகம் உயர்ந்து உயர்ந்து பார்வையை விட்டு அகன்றது. பேச்சற்றுப் போனார் உஸைத் பின் ஹுளைர் ரலியல்லாஹு அன்ஹு!

மறுநாள் விழித்தெழுந்ததும் முதல் வேலையாக நபியவர்களைச் சந்தித்து, இரவு நடந்த அவ்வினோத நிகழ்ச்சியை விவரிக்க, நபியவர்கள் பதில் கூறினார்கள். “உஸைத்! அவர்கள் வானவர்கள். நீர் ஓதுவதைச் செவியுற்றுக் கொண்டிருந்தார்கள். நிறுத்தாமல் நீர் மட்டும் ஓதுவதைத் தொடர்ந்திருப்பின் அவர்கள் உன்னிடம் மிகவும் நெருங்கி நெருங்கி வந்து எத்தகைய தடையுமின்றி மக்களின் கண்களுக்குத் தட்டுப்பட்டிருப்பார்கள்”.

குர்ஆனின் அத்தியாயம் அல்-பகராவின் சிறப்பம்சங்களுள் இந்நிகழ்வு ஒரு வரலாற்றுச் சான்றாகவே அமைந்துவிட்டது.

இறைமறையின்மீது அவருக்கிருந்த அளவற்ற ஈடுபாடு ஒருபுறமிருக்க இறைத்தூதரின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் அபிமானமும் அபரிமிதமானது. ‘குர்ஆன் ஓதும்போது ஆன்மாவில் ஒரு தெளிவும் இறை நம்பிக்கையின் உயர்ந்த தருணமும் அமைகிறதென்றால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசுவதைக் கேட்டாலோ அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ அதே உணர்வு ஏற்படுகிறது’ என்று அவர் குறிப்பிடுவது வழக்கம்.

இதெல்லாம் சேர்ந்து நபியவர்கள் மீது அவருக்கு ஏற்பட்ட விருப்பமும் பாசமும் என்றாவது ஒருநாள் அவர்களைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும், அவர்கள் மீது அன்பாய் ஒரு முத்தமாயினும் இட்டுவிட வேண்டும் என்று அவருக்குப் பேரார்வம். ஒருநாள் அத்தகைய வாய்ப்பு அமைந்தது.

முஹம்மது நபி, தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். உஸைத் நகைச்சுவையாய் ஏதோ கூற, அதில் மனம் மகிழ்ந்து மகிழ்ச்சியுற்ற நபியவர்கள் தம் கையிலிருந்த சிறு குச்சியால் செல்லமாய் உஸைதின் விலாவைக் குத்தினார்கள். ஏதோ அதனால் பெரிய வலி ஏற்பட்டுவிட்டது போல், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலியேற்படுத்து விட்டீர்கள்” என்று நெளிந்தார் உஸைத்.

“அப்படியானால் அதேபோல் நீரும் என்னைக் குத்திவிடும், நிகராகிவிடும்”

“நல்லது. ஆனால் நீங்கள் என்னைக் குத்தும்போது நான் மேலாடை இல்லாமல் வெற்றுடம்பாய் இருந்தேன். தாங்களோ ஆடை அணிந்திருக்கிறீர்களே” என்றார் உஸைத்.

அவ்வளவுதானே, பரவாயில்லை என்பதைப்போல் நபியவர்கள் தமது ஆடையை விலக்க, உடனே அவர்களை அன்பாய்த் தழுவிக்கொண்ட உஸைத் இறைத் தூதரின் உடம்பில் மிக அன்பாய் முத்தமிட்டார். அப்பாடா! எத்தனை நாள் விருப்பம் அது? எத்தகு நற்பாக்கியம் அது?

“அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர்கள் தங்களுக்கு அர்ப்பணம். தங்களைச் சந்தித்த நாளாய் உங்களது திருமேனியில் முத்தமிட வேண்டும் என்பது எனது பெருவிருப்பம். அது இன்று நிறைவேறியது”

அந்த உத்தமத் தோழர்களின் அன்பும் பாசமும் அலாதியானது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இத்தகு செயல்களைச் சற்றேனும் உணர வேண்டுமாயின், அந்த மேன்மக்களைப்போல் வாழ்ந்து பார்க்க முயலுவதைத் தவிர வேறுவழியில்லை.

உஸைதின் அன்பை முற்றிலும் உணர்ந்து கொண்டிருந்த நபியவர்கள் அவ்வப்போது அவரிடமே அதை நினைவுறுத்துவதும் வழக்கம். ‘ஆரம்ப தருணத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர் உஸைத். முஸ்லிம்களுக்கு மாபெரும் சோதனையாய் அமைந்த உஹதுப் போரில் என்னைக் காக்க கடினக் காயங்களும் அடைந்தீர். உமது குலத்தினர் மத்தியில் மிகுந்த மரியாதைக்குரியவர் நீர். உம் மக்களிடம் என்ன பேசுவதென்றாலும் உம்மை நான் பெருநம்பிக்கையுடன் அணுக முடிகிறது’

அன்ஸார்களில் ஏழ்மையான ஒரு குடும்பம் இருந்தது. குடும்பத் தலைவரை இழந்த அனைவரும் பெண்கள். அவர்களுக்கு உதவ வேண்டும என்று உஸைதுக்குத் தோன்றியது. நபியவர்களை அணுகி விபரம் சொன்னார்.

“மிகவும் தாமதமாய் வந்திருக்கிறீர்களே உஸைத். தானமாய் வந்த செல்வத்தையெல்லாம் இப்பொழுதுதானே நான் அனைவருக்கும் பங்கிட்டு அளித்தேன். அடுத்தமுறை என்னிடம் நன்கொடைகள் வந்தடையும்போது எனக்கு அக்குடும்பத்தைப் பற்றி நினைவூட்டுங்கள்” என்றார்கள் நபியவர்கள்.

அடுத்து சிலநாள் கழித்து ஃகைபர் யுத்தத்தில் முஸ்லிம்கள் வெற்றியடைய, போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் நபியவர்களிடம் வந்து சேர்ந்தன. அவற்றை முஸ்லிம்களுக்குப் பங்கிட்டு அளிக்கும்போது அன்ஸார்களுக்கு மிகவும் தாராளமாய் அளித்த நபியவர்கள் குறிப்பாய் உஸைத் முன்னர் குறிப்பிட்ட அக்குடும்பத்திற்கும் கூடுதலாக அளித்தார்கள்.

நபியவர்கள் மறவாமல் அக்குடும்பத்தை நினைவுகூர்ந்து கருணை கொண்டதைப் பார்த்து நெகிழ்வுற்ற உஸைத், “அல்லாஹ்வின் தூதரே! அக்குடும்பத்தினரின் பொருட்டு அல்லாஹ் உங்களுக்கு மாபெரும் வெகுமதி அளிப்பானாக” என்று பிரார்த்தித்தார்.

அதைக் கேட்ட நபியவர்கள், “அன்ஸார்களுக்கு அல்லாஹ் மிகச் சிறந்த வெகுமதி அளிக்கப் பிரார்த்திக்கிறேன். நான் தங்களைச் சந்தித்த நாளாய் அறிந்ததெல்லாம், நீங்கள் மிகவும் பொறுமையானவர்கள், எந்த எதிர்பார்ப்பும் கொள்ளாதவர்கள் என்பதே. நான் இறந்த பிறகு, உலக விஷயத்தில் மற்றவர்கள் உங்களைவிட அதிகச் சலுகை பெறுவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் என்னை சொர்க்கத்தில் காணும்வரை பொறுமை காத்துவாருங்கள். அங்கு நாம் சந்திக்கும் இடம் கவ்தர் தடாகமாயிருக்கும்”

எத்தகைய நற்செய்தி அது?

oOo

பனூ முஸ்தலிக் போர் முடிந்து முஸ்லிம் படைகள் திரும்பிவரும்போது ஒரு நிகழ்வு.

வரலாற்றில் தப்பான பகுதியில் பதிந்துபோன ஒருவன் இருந்தான் – அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல். நயவஞ்சகனாகிக்போன அவலம் அவன். திரும்பும் வழியில் ஓர் இடத்தில் முஸ்லிம் வீரர்கள் தங்கியிருக்கும்போது நீர் சேகரித்துக் கொள்வதில் சிறியதாய்ச் சலசலப்பு ஒன்று ஏற்பட, அதைத் தன் தீயச்செயலுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தான் அப்துல்லாஹ் இப்னு உபை. அதற்கு அவன் தேர்ந்தெடுத்த வழி, சகோதரர்களாய் ஒன்றிணைந்து வாழ ஆரம்பித்திருந்த முஹாஜிரீன்கள் – அன்ஸார்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவது.

“மக்காவிலிருந்து நாடோடிகளாய் ஓடிவந்த இந்த முஹாஜிர்களுக்கு, தங்குவதற்கு இடமும் சொத்தில் பங்கும் அளித்தீர்கள். இப்பொழுது என்ன ஆயிற்று? ஆண்டவன்மீது ஆணையாகக் கூறுகிறேன். உங்களிடம் உள்ளதை நீங்கள் அவர்களுக்கு மட்டும் பங்கு வைக்காமல் இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறொரு மக்களிடம் சென்றிருப்பார்கள். நாம் மதீனாவிற்குத் திரும்பியதும் மாண்புமிக்கவர்கள் நாடோடிகளை விரட்டியடிப்பார்கள்”

தன்னையும் தன் குலத்தையும் மாண்புமிக்கவர்கள் என்றும் முஹாஜிர்களை நாடோடிகள் என்றும் பகிரங்கமாய் அவன் பேச, இவ்விஷயம் நபியவர்களை அடைந்தது. உஸைத் நபியவர்களைச் சந்தித்தபோது, “உங்கள் ஊர்க்காரர் சொன்ன இந்தச் செய்தி அறிவீர்களா உஸைத்?” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்?”

“அப்துல்லாஹ் இப்னு உபை”

“என்ன சொன்னான்?”

நபியவர்கள் தெரிவிக்க, “அல்லாஹ்வின் தூதரே! விடுங்கள் கவலையை. அல்லாஹ் நாடினால் நீங்கள் அவனை மதீனாவை விட்டு விரட்டலாம். அல்லாஹ்வின்மீது ஆணையாக! தாங்கள்தாம் மாண்புமிக்கவர்கள். கேவலமானவன் அவனே” என்று எவ்விதத் தயக்கமும் இன்றி உரைத்த உஸைத் மேலும் கூறினார்.

“அவன் அப்படி பொருமுவதற்குக் காரணம் இருக்கிறது. அவன் இன மக்கள் அவனை மதீனாவின் அரசனாக முடிசூட்ட கிரீடமெல்லாம் தயாரித்துவிட்ட நிலையில் நீங்கள் இங்கு வந்து அடைந்தீர்கள். மதீனாவின் அரசியல் நிலை மாறிப்போனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதுபோல் அவனது அரசாங்கம் பிடுங்கப்பட்டதாய் உணர்கிறான் அவன். முடிந்தவரை அவனைத் தாங்கள் மென்மையாகவே கையாளுங்கள்”

மிகவும் பக்குவப்பட்ட சிந்தனைத் தெளிவு வாய்க்கப் பெற்றவர் உஸைத். அது பின்னர் மற்றுமொரு முக்கியத் தருணத்தில் மேலும் அழகாய் வெளிப்பட்டது.

நபியவர்கள் இவ்வுலகைவிட்டு மறைந்தநாள் தோழர்கள் அனைவருக்கும் மிகவும் சோதனையான நாள். மிகவும் நெருக்கடியான காலகட்டம் அது. கலீஃபாவாய் யாரை நியமிப்பது என்று ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றி ஸைத் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் பார்த்தோம்.

அன்ஸாரியான ஸஅத் இப்னு உபாதாவுக்கே கலீஃபா பொறுப்பு வந்துசேர வேண்டும் என்பது சில அன்ஸார்களின் எண்ணம். அப்பொழுது எழுந்து நின்று பேசியதில் உஸைதும் ஒருவர். “அல்லாஹ்வின் தூதர் முஹாஜிர். அவருக்கு அடுத்து வருபவர் முஹாஜிர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும். நாம் அல்லாஹ்வின் தூதருக்கு ஆதராவாளர்களாய் இருந்தோம். இன்று அவருக்கு அடுத்து வருபவருக்கும் ஆதரவாளர்களாய் இருப்போம்” மிகவும் எளிய தெளிவான உரை அது. அன்றைய குழப்பமான நேரத்தில் அவருடைய அந்தப் பேச்சு மிக முக்கியம் பெற்றது.

oOo

காலம் நகர்ந்து, உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நேரம். ஒருமுறை அரசுக் கருவூலத்திற்கு வந்த பொருட்களையும் பணத்தையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டு அளித்தார் உமர். அதில் உஸைதிற்கு வந்த பங்கில் ஓர் அங்கி இருந்தது. ஆனால் அது அவருக்குப் பொருந்தாமல் அளவில் சிறிதாயிருந்தது. அதைப் பெற்றுக் கொண்ட உஸைத் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது குரைஷிக் குலத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் அவரைக் கடந்து சென்றான். உமர் உஸைதிற்கு அளித்ததைப் போன்ற ஓர் அங்கியை அவனும் அணிந்திருந்தான். ஆனால் அது மிக நீளமாய் தரையில் உரசும் அளவிற்கு நீண்டிருந்தது. அதைக் கண்ட உஸைதிற்கு அன்று நபியவர்கள் “உலக விஷயத்தில் மற்றவர்கள் அன்ஸார்களைவிடச் சலுகை பெறுவார்கள்” என்று கூறியது சட்டென்று நினைவிற்குவர, தம் அருகில் இருந்தவர்களிடம் அதைச் சொல்லிவிட்டார்.

அதைக் கேட்ட ஒருவர் உமரைச் சந்தித்து ‘நபியவர்கள் இப்படிக் கூறினார்கள் என்று உஸைத் கூறினார்’ என்று அதைத் தெரிவித்துவிட்டார். இப்படியொரு சொல் கேட்டுவிட்டால் உமர் என்ன செய்வார்? பதிலுக்கு மறுப்பறிக்கை, கண்டனம், தண்டனை என்றெல்லாமா யோசிப்பார்? உடனே கிளம்பி வெகுவேகமாய் உஸைதைச் சந்திக்க விரைந்தார் அவர். அப்பொழுது உஸைத் தொழுது கொண்டிருக்க, “உம் தொழுகை முடிந்ததும் நாம் பேச வேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்று அமர்ந்து கொண்டார்.

உஸைத் தொழுது முடிக்க, “நீர் என்ன சொன்னீர்? எனக்கு மீண்டும் தெளிவாகச் சொல்லவும்”

தான் நபியவர்களிடம் செவியுற்றதையும் இங்கு இப்பொழுது கண்டதையும் அருகிலிருந்தவர்களிடம் அதைத் தெரிவித்ததையும் அப்படியே மீண்டும் கூறினார் உஸைத்.

“அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக உஸைத்! அகபா உடன்படிக்கையின்போது பிரமாணம் எடுத்துக் கொண்ட ஓர் அன்ஸாரிக்குத்தான் நான் அந்த அங்கியை அனுப்பி வைத்தேன். அவர் பத்ருப் போரிலும் உஹதுப் போரிலும் கலந்து கொண்டவர். தாங்கள் சந்தித்த குரைஷி இளைஞன் அதை அவரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும்போது நபியவர்கள் அறிவித்த அத்தகைய பாரபட்ச விஷயம் நிகழ விட்டுவிடுவேன் என்றா நினைத்தீர்கள்?”

“அல்லாஹ்வின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். இத்தகைய பாரபட்சமான செயல்கள் உம்முடைய வாழ்நாளில் நிகழ நீங்கள் அனுமதிக்க மாட்டீர் உமர்” என்றார் உஸைத்.

தோழர்கள் அவர்கள் – ரலியல்லாஹு அன்ஹும்!

அதற்கெல்லாம் பிறகு நீண்டநாள் வாழவில்லை உஸைத். உமர் கலீஃபாவாய் இருக்கும் காலத்திலேயே உஸைதை மரணம் தழுவியது. அப்பொழுது உஸைத் நாலாயிரம் திர்ஹம் கடன்பட்டிருக்கும் விபரம் தெரியவந்தது. அவரது சொத்தின் வாரிசுரிமையாளர்கள் அவரது சொத்தை விற்று அக்கடனை திருப்பிச் செலுத்த முடிவெடுத்தனர். இச்செய்தி உமரை வந்தடைந்தது.

“என் சகோதரன் உஸைதின் பெண்களும் பிள்ளைகளும் வறியவர்களாகி பிறர் கையை எதிர்நோக்கி நிற்க நான் அனுமதிக்க முடியாது” என்று கூறிய உமர் உஸைதுக்கு கடன் அளித்தவர்களைச் சந்தித்தார். நிலத்தைக் கடனுக்குப் பகரமாய் பெற்றுக் கொள்வதைவிட அந்நிலத்தின் விளைச்சலை ஏற்றுக் கொண்டு கடனை தள்ளுபடி செய்ய சிபாரிசு செய்தார் உமர். ஏற்றுக் கொண்டார்கள் அவர்களும்.

ஹிஜ்ரி இருபதாம் ஆண்டு ஷஃபான் மாதம் உஸைத் பின் ஹுளைர் மரணமடைந்ததாகவும் மதீனாவிலுள்ள ஜன்னதுல் பஃகீயில் நல்லடக்கம் நிகழ்வுற்றது என்றும் வரலாற்றுக் குறிப்புகள் அறிவிக்கின்றன. அவரது நல்லுடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது பெருமையுடன் அதைத் தூக்கிச் சுமந்தார் கலீஃபா.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ஒருமுறை நபியவர்களிடம் கூறியிருந்தார், “மூன்று அன்ஸார்கள் உள்ளனர். அவர்களது தரம் ஒப்பற்றது. அவர்கள் ஸஅத் பின் முஆத், உஸைத் பின் ஹுளைர் மற்றும் அப்பாத் பின் பிஷ்ரு”. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிலாகித்த ஒன்றும் உண்டு.

“எத்தகு மேன்மையான மனிதர் உஸைத் பின் ஹுளைர்?”

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 10 ஜனவரி 2011 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment