49. ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (حمزة بن عبد المطلب)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. அறிவிப்பாளர் மிக உரத்தக் குரலில் அந்நகர மக்களுக்கு வரலாற்றுப் புகழ் மிக்கப் பொதுமன்னிப்புச் செய்தியை அறிவித்தார்.
“எவரெல்லாம் ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதர்’ என்று சாட்சி பகர்கின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”
“எவரெல்லாம் கஅபாவின் அருகே வந்தமர்ந்து தங்களுடைய ஆயுதங்களைக் கீழிறக்கி வைக்கின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”
“எவரெல்லாம் தங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”
“எவரெல்லாம் அபூஸுஃப்யான் இல்லத்தினுள் தஞ்சமடைகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”
“மேலும், எவரெல்லாம் ஹகீம் இப்னு ஹிஸாம் இல்லத்தினுள் தஞ்சமடைகின்றீர்களோ, அவர்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள்”
அன்றொரு நாள் மாளாத் துயருடன் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த நபியவர்களும் தோழர்களும் இன்று குரைஷிகளைப் பழிதீர்ப்பதற்கான ஆயிரம் காரணங்களும் முகாந்திரமும் இருந்தும் நபியவர்களால் மேற்படி அறிவிப்பு செய்யப்பட்டது.
மக்காவாசிகள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதற்குமுன் யார் என்ன செய்திருந்தாலும் மன்னிப்பா? இதெல்லாம் மெய்தானா?
ஆண்களெல்லாம் நபியவர்களின் கையைப் பிடித்து பிரமாணம் மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் பெண்களின் அணிவரிசை ஒன்று நீண்டிருந்தது. அதில் தம் முகத்தை, தோற்றத்தை மறைத்தபடி ஒரு பெண். என்னதான் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் தமக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. முகத்தை வெளிப்படுத்தாமல் உறுதிமொழி அளித்துவிடுவோம். பிறகு நாம் யார் என்று தெரிந்தாலும் பிரச்சினை வராது என்று சிறு தந்திரம்.
ஆனால் இஸ்லாமிய உறுதிமொழி பெண்களுக்கு அறிவிக்கப்பட, அதில் சந்தேகம் ஒன்று கேட்டார் அப்பெண். “திருடக்கூடாது என்கின்றீர்கள். என் கணவருக்குத் தெரியாமல் நான் அவர் பையிலிருந்து கொஞ்சம் களவாடியிருக்கிறேனே!”
சட்டென அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள் நபியவர்கள். “நீ அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாதானே?”
“ஆம்!” அதற்குமேல் மறைக்க முடியாது என்றாகிவிட்டது. மன்னிப்பு, பாதுகாப்பு என்பதெல்லாம் இனி எட்டாக்கனி. தீர்ந்தது விஷயம் என்று நினைத்தார் ஹிந்த்.
ஆனால் கிடைத்தது. வரலாற்றில் அழுத்தமான, கோரமான, வெறித்தனமான, அருவருப்பான நிகழ்வை உஹதுக் களத்தில் நிகழ்த்தியிருந்த அவருக்கும் அன்று மன்னிப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே மக்காவை முஸ்லிம்கள் வெற்றி கொள்கிறார்கள், உள்ளே நுழையப் போகிறார்கள் என்பதை அறிய வந்ததுமே தாயிஃப் நகருக்குத் தப்பிச் சென்றிருந்தார் ஒருவர். அங்குச் சென்றும் அவருக்கு பெரிதாய் நிம்மதி எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மிகவும் குழப்பமான மனோநிலை. உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.
அப்பொழுது யாரோ ஒருவர் அவரிடம் கூறினார், “அல்லாஹ்வின்மேல் ஆணையாகச் சொல்கிறேன். இஸ்லாத்தில் இணையும் எவரையும் முஹம்மது கொல்வதில்லை”
“அதற்குமுன் அவர் என்ன கொடுமை செய்திருந்தாலுமா?”
“ஆமாம். மன்னித்துவிடுகிறார் அவர்; மதீனாவுக்குச் சென்று மன்னிப்புக் கேளுங்கள்”
நிதானமாய் யோசித்த அவர் உடனே புறப்பட்டு விட்டார். மதீனா வந்தடைந்த அவர் மக்களிடம் விசாரித்தார், “நான் முஹம்மது நபியைச் சந்திக்க வேண்டும்”
மஸ்ஜிதுந் நபவீக்கு அவர்கள் வழி காண்பித்தனர். பள்ளிவாசலுக்கு வந்த அவர், அங்கு அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதரின் எதிரில் அமைதியாக பவ்யமுடன் சென்று நின்று கொண்டார்.
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் அன்றி வேறில்லை. முஹம்மது அவனுடைய தூதர் என்று நான் சாட்சி பகர்கிறேன்.”
தன்னிடம் யாரோ ஷஹாதா அளிப்பது செவியுற்று தலையுயர்த்திப் பார்த்தார்கள் நபியவர்கள். யாரென்று அடையாளம் தெரிந்தது. உடனே தலையைத் திருப்பிக் கொண்டவர்கள், “வஹ்ஷிதானே நீ?”
“ஆம், அல்லாஹ்வின் தூதரே”
“அமரவும். அன்று நடந்ததை எனக்கு விவரி.”
அமர்ந்து, நடந்த அனைத்தையும் விவரித்தார் வஹ்ஷி.
“மாபெரும் வேதனையை உருவாக்கிக் கொண்டாய் வஹ்ஷி! கைச்சேதம்! உனது முகத்தை என் எதிரே காண்பிக்க வேண்டாம்”
உஹதுக் களத்தின் அழுத்தமான கோர நிகழ்வு என்று மேலே சொன்னோமே அதை நிகழ்த்திய முக்கியப்புள்ளி இவர். ஆயினும், அவருக்கும் மன்னிப்பு வழங்கினார்கள் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
oOo
நபியவர்களின் அன்னை ஆமினாவுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் – ஹாலா பின்த் வஹ்ப். தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆமினாவை மணமுடித்த நபியவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப், ஹாலாவை மணந்து கொண்டார். ஏறக்குறைய ஒரே காலத்தில் இவ்விருவரின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அப்துல் முத்தலிப் – ஹாலா தம்பதியருக்குப் பிறந்தவர்கள் ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் – ரலியல்லாஹு அன்ஹுமா.
அக்காலத்தில், வறிய நிலையிலுள்ள பெண்கள் வாடகைக்கு அல்லது சன்மானத்திற்கு செவிலித் தாய்களாக அமர்த்தப்பட்டு உயர்குடி மக்களின் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்ப்பது வழக்கம். நபியவர்களின் பெரியப்பன் அபூலஹபிடம் துயைபா என்றொரு அடிமைப் பெண் இருந்தார். அவர் நபியவர்களுக்கும் சம வயதுள்ள ஹம்ஸாவுக்கும் பாலூட்டியவருள் ஒருவர். பின்னர் ஹலீமா அஸ்ஸாதிய்யா என்பவரும் இவ்விருவருக்கும் பாலூட்டும் தாயாக இருந்திருக்கிறார். இவ்விதமாக ஒன்றாக உண்டு, விளையாடி வளர்ந்து வந்த இருவருக்கும் மத்தியில் இரத்த பந்தம், அன்பு, பாசம், அதிகப்படியாய் பால்குடி சகோதர உறவு என்று மிக அழுத்தமான பிணைப்பு ஏற்பட்டுப் போயிருந்தது.
ஆனால் வளர்ந்து பருவ வயதை அடைந்து திருமணம், பிள்ளைகள் என்றானபின் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது ஆன்மிகத் தேடலில் மூழ்கி ஹிரா குகை, தனிமை என்று வழக்கப்படுத்திக் கொள்ள, ஹம்ஸாவின் பாதை வேறாக இருந்தது. வேட்டைப் பிரியராக மாறியிருந்தார் அவர். பாலைவனத்திற்கு வேட்டைக்குச் செல்வது, மிருகங்கள், பறவைகள் என்று வேட்டையாடிவிட்டு மக்காவுக்குத் திரும்புவது, குடும்பத்துடன் ஓய்வு, மீண்டும் வேட்டை – ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம்’ என்று கவலையின்றி தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் ஹம்ஸா.
ஹம்ஸாவின் மனைவி ஸல்மா. ஸல்மாவுக்கு மைமூனா, உம்மு ஃபதல் லுபாபா அல்-குப்ரா, அஸ்மா பின்த் உமைஸ் எனும் மூன்று சகோதரிகள். இந்தச் சகோதரிகள் நால்வரும் நபியவர்களின் குடும்பத்துடன் மண உறவின் மூலம் ஐக்கியமாகி இருந்தனர். உம்மு ஃபதல் நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸைத் திருமணம் புரிந்திருந்தார். பிற்காலத்தில் மைமூனா நபியவர்களுக்கு மனைவியாக அமைந்தார். அஸ்மா பின்த் உமைஸ், ஜஅஃபர் பின் அபீதாலிபை மணந்திருந்தார். ஹம்ஸா-ஸல்மா தம்பதியருக்கு உமாரா என்றொரு மகள்.
ஒருநாள் முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டது. மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி ஏற்பட்டு, சிலர் இஸ்லாத்தை ஏற்று, பலர் நிராகரித்து, ரகளை, சண்டை, சச்சரவு, முஸ்லிம்களுக்கு அடி, உதை, மிதி என்று ஊர் அல்லோலகல்லோப்பட ஆரம்பித்தது. மக்காவில் புதிய வரலாறு தொடங்கியது. அப்பொழுது ஹம்ஸாவுக்கு இதில் பெரிதாய் ஏதும் ஈடுபாடோ வெறுப்போ ஏற்படவில்லை. ‘அண்ணன் மகன் ஏதேதோ சொல்கிறார். இந்த குரைஷிகளும் ஆத்திரத்தில் ஏதேதோ செய்கிறார்கள். எல்லாம் பங்காளிச் சண்டை. ஒருநாள் சரியாகிவிடும். நாம் நம் வேட்டையைக் கவனிப்போம்’ என்றுதான் ஹம்ஸாவின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. கஅபா அருகிலோ பிற இடங்களிலோ குரைஷிப் பெருசுகள், ‘உன் அண்ணன் மகன் செய்வதைப் பார்த்தியா’ என்று ஆரம்பித்து ஏதேனும் பழித்தோ, இழித்தோ சொன்னாலும் சிரித்துவிட்டு காதில் வாங்கியது பாதி, காற்றில் கரைந்தது மீதி என்று சென்றுவிடுவார்.
பல இன்னல்கள், இடையூறுகள், அராஜகங்கள் அனைத்தையும் தாண்டி, அலுக்காமல் சளைக்காமல் தொடர்ந்து கொண்டிருந்த நபியவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரம் குரைஷித் தலைவர்களுக்கு பெரும் வேதனையாகவே மாறிவிட்டிருந்தது. ஹாஷிம் குலமும், அபூதாலிபும் நபியவர்களுக்கு அளித்துவந்த அபயத்தால், நபியவர்களுக்கு எதிராக ஏதும் செய்ய இயலாத நிலையில் தவித்துக்கொண்டிருந்தார்கள் அவர்கள். தகுந்த சந்தர்ப்பம் ஏதும் அமையாதா என்று அவர்கள் காத்திருந்தார்கள். ஒருநாள் அப்படியான ஒரு வாய்ப்பு வந்து அமைந்தது துஷ்டன் அபூஜஹலுக்கு.
கஅபாவுக்கு அண்மையில் உள்ள ஸபா குன்று அருகே நபியவர்கள் தனியாக இருப்பதை அபூஜஹ்லு கண்டான். அருகில் யாரும் இல்லை. ‘இதற்குத்தானே காத்திருந்தாய் அம்ரு’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, நபியவர்களை நெருங்கி அவர்களையும், இஸ்லாத்தையும், நபியவர்களின் பிரச்சாரத்தையும் கன்னாபின்னாவென்று ஏக வசனத்தில் திட்டித்தீர்க்க ஆரம்பித்தான். வகை தொகையில்லாத ஏசல். அதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஆத்திரப்படாமல் அமைதியாக நின்றிருந்தார்கள் நபியவர்கள். ‘இப்படியெல்லாம் ஏசினால், திட்டினால்கூட அடங்கமாட்டார் இந்த முஹம்மது’ என்று நினைத்தவன் நபியவர்கள்மீது ‘கை வைத்தான்’. கல் ஒன்றை எடுத்து நபியவர்களின் தலைமீது தாக்க பெருமானார் முகத்தில் உதிரம் வழிந்தது.
அனாவசியமாய் ஏற்படும் அவமானம் ஒரு சாதாரண மனிதருக்கே சகிக்க இயலாத ஆத்திரத்தைத் தரும். அதையும் மீறித் தாக்குதலுக்கும் உட்பட்டு ரத்தக் காயமும் ஏற்பட்டால்? அனைத்தையும் அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக்கொண்டு, ஒரு வார்த்தை திருப்பிப் பேசாமல், எல்லை தாண்டிய பொறுமையை வெளிப்படுத்தி நின்றிருந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆத்திரம் தீரக் கத்தி ஓய்ந்தவன், இது போதும் இப்போதைக்கு என்று கஅபாவின் அருகே அமர்ந்திருக்கும் தன் நண்பர் குழுவிடம், ‘ஒன்றும் தெரியாதவன்போல்’ சென்று அமர்ந்துகொண்டான் அபூஜஹ்லு. இந்த அக்கிரமம் அனைத்தையும் ஒரு ஜோடிக் கண்கள் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன.
சில நாள் கழித்துத் தம் வேட்டைப் பயணம் முடித்து மக்கா திரும்பினார் ஹம்ஸா. அவரிடம் ஒரு வழக்கம் இருந்தது. வேட்டை முடிந்து மக்கா நகரினுள் நுழைந்ததும் முதற் காரியமாய் நேரே கஅபா சென்று அதைச் சுற்றிவந்து ‘தவாஃப்’ செய்வார். பிறகு அங்கு அருகில் அமர்ந்திருக்கும் குரைஷிக் குழுக்களிடம் முகமன் கூறி நலம் விசாரித்துக் கொள்வார். வேட்டையில் நிகழ்ந்த வீரதீர செயல்களைப் பரிமாறிக் கொள்வார். பெரிய இடத்துப் பிள்ளையான அவரைக் குரைஷிகளுக்கும் மிகவும் பிடிக்கும். நன்றாக சிரித்துப் பேசிக் கொள்வார்கள். இம்முறை நகருக்குள் வந்துகொண்டிருந்த அவரை ஒரு பெண் இடைமறித்தார்.
ஒரு வீட்டின் பணிப்பெண் அவர். நபியவர்களுக்கு அபூஜஹ்லு புரிந்த அட்டூழியம் முழுவதையும் அன்று சன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தவர் அவர். தன்னால் தடுக்க இயலாமற்போன கொடுமையை என்னவாவது செய்து நிவர்த்திக்க வேண்டுமே என்று காத்திருந்தவர் ஹம்ஸாவிடம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்; கண்ணால் கண்டதைச் சாட்சி பகர்ந்தார்.
அவ்வளவுதான். பிறந்தது தீப்பொறி!
வேட்டைப் பிரியரான ஹம்ஸாவுக்கு கம்பீரமான தோற்றம். அகம், புறம், புஜம் என்று அனைத்தும் வீரம் நிறைந்த உடல்வாகு. சட்டெனப் பொங்கியெழும் கோபமும் உண்டு. அத்தகையவர் தம் அண்ணன் மகனுக்கு, அன்பும் பாசமும் மிகைத்திருந்த மிகவும் நெருக்கமான தம் குல உத்தமர் முஹம்மதுக்கு இத்தகையதொரு அவலம் நேர்ந்தது என்பதை அறிந்ததும் மக்கா வெயிலை மீறிய உஷ்ணம் அவர் உடலைத் தாக்கியது. விறுவிறுவென்று கஅபாவை நோக்கிச் சென்றார். அங்கு அபூஜஹ்லு தன் ‘ஜமா’வுடன் அமர்ந்திருந்தான். நேரே அவனை நோக்கிச் சென்றவர், ஆத்திரம் அனைத்தையும் திரட்டி தம் கையில் இருந்த அம்பால் அவன் தலையில் ஒரே போடு. அவனது முன்நெற்றியில் பெரும்கோடு ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. மக்களின் பேச்சரவம் நின்றுபோய் அனைவரும் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தார்கள்.
சுதாரித்துக்கொண்ட அபூஜஹ்லின் சகாக்கள் விரைந்து எழுந்திருக்க, அவன் தடுத்தான். “அபூஉமாராவை ஒன்றும் செய்யாதீர்கள். நான்தான் அவருடைய அண்ணன் மகனைக் கேவலமாய்ப் பேசினேன்; தாக்கினேன்.”
“அவர் அறிவித்த மார்க்கத்தை நான் பின்பற்றுபவனாய் இருக்க நீ அவரை ஏசுவாயா? அவர் சொல்வதையே நானும் சொல்கிறேன். உன்னால் முடிந்ததைச் செய்துகொள்.”
அபூஜஹ்லின் தீவினை அவனை மட்டுமின்றி குரைஷிகளையே திருப்பிச் சுட்டது. ஹம்ஸா முஸ்லிமாகிவிட்டாரா? வந்தார், அடித்தார், போனார் என்றில்லாமல் இதென்ன புதுக் குழப்பம்? அவர் அடித்த அடியைவிட இது அனைவருக்கும் அதிகமாய் வலித்தது. அன்றுவரை, அந்த நொடிவரை ஹம்ஸாவின் மனத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை. அபூஜஹ்லை அடித்துவிட்டு, ஓர் ஆத்திரத்தில்தான் அதைச் சொன்னாரே தவிர, அவரும் சரி, அவரைத் திருப்பித் தாக்காமல் தம் சகாக்களைத் தடுத்த அபூஜஹ்லும் சரி, அன்று அந்த இருவரின் நோக்கம் முழுவதும் குல அக்கறையைச் சார்ந்து மட்டுமே வெளிப்பட்டவை. குரைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பு, தன்னுடைய தனிப்பட்டச் செயலால், குலப் போராக மாறித் திசை திரும்பிவிடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை அபூஜஹ்லுக்கு. ஹம்ஸாவுக்கோ, தம் அண்ணன் மகனை, ஹாஷிம் குலத்தவரைத் தாக்கியவரைத் திருப்பித் தாக்கி பழிதீர்ப்பது மட்டுமே நோக்கம். ஆனால் நிகழ்வின் முடிவோ வேறு.
வீட்டிற்கு வந்து கை, கால் கழுவி ஆசுவாசமடைந்ததும் ஆத்திரத்தில், அவசரத்தில் தாம் உச்சரித்துவிட்டதை நினைத்துப் பார்த்தார் ஹம்ஸா. நிதானமடைந்து சமநிலைக்கு வந்திருந்த மனம் நிறைய யோசித்தது. ‘முஹம்மது என்னதான் சொல்கிறார்? எதற்காக இப்படிக் கச்சைக்கட்டி இவர்கள் எதிர்க்கிறார்கள்? யார் பக்கம் உண்மை?’ அம்பு, வில் அனைத்தையும் எடுத்து ஓரமாக வைத்துவிட்டு நபியவர்களைச் சென்று சந்தித்தார் ஹம்ஸா. ‘என்னதான் உங்கள் செய்தி? விபரமாகச் சொல்லுங்கள்.’ கேட்கக் கேட்க மனம் உண்மை உணர்ந்தது. தெளிவு பிறந்தது. இவ்விஷயத்தில் ‘ஆத்திரத்தில் புத்தி மட்டுப்படவில்லை’; உச்சரித்தது எதுவும் தவறாகிவிடவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் அருகிலேயே இருந்த இந்த உண்மையை, முழுக்க அறியாமல் போனதுதான் கைச்சேதம் என்று புலப்பட்டது. உளச்சுத்தியுடன் ஏகத்துவ சத்தியத்தை உரத்து உரைத்து எழுந்து நின்றார் ஹம்ஸா. ரலியல்லாஹு அன்ஹு.
செய்தி தெரியவந்ததும் உண்மையிலேயே அதிர்ந்து போனார்கள் அபூஜஹ்லும் குழுவினரும். ‘அன்று முஹம்மதுமீது கைவைத்திருக்கக் கூடாதோ’ என்று தன் தாடி முடியை பிய்த்துக்கொண்டான் அவன். ஹம்ஸாவும் பின்னர் உமரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் முஸ்லிம்களுக்குப் பெரும் பலம் கிடைத்ததைப் போலாகிவிட்டது. ஏனெனில் இருவரின் வீரமும் தீரமும் மக்கத்து மக்கள் நன்கு அறிந்திருந்தவை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு அந்த இருவர் மீதும் மதிப்பும், மரியாதையும் மட்டுமில்லாது மறைமுகமான பயமும்கூட இருந்து வந்தது. எனவே இந்த இருவரும் இஸ்லாத்திற்குள் நுழைந்தது இஸ்லாமிய வரலாற்றின் மக்கா அத்தியாயங்களில் முக்கியமான திருப்புமுனை நிகழ்வுகளாக அமைந்து, வலுவான இரு உயரிய தூண்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் தூக்கித் தாங்க ஆரம்பித்தன. அராஜக அடக்குமுறையில் நசுங்கிக் கிடந்த அவல முஸ்லிம்கள் இண்டு இடுக்கிலிருந்து ஓரளவு சுதாரித்துக் கொண்டு எழுந்தனர். ஒளிந்து மறைவாய் நடைபெற்ற பிரச்சாரம் பகிரங்கமானது.
காலம் மாறியது. காட்சிகள் மாறின. இறுதியில் முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.
oOo
பணம் கெட்ட ஆட்டம் போட வைக்கும். கெட்டவர்களிடம் பொருளாதார வலிமை என்பதோ அவர்களது அயோக்கியத்தனத்திற்கு மேலும் வலு சேர்க்கும். ஆகவே அதை மட்டுப்படுத்தினால்தான் அவர்களது புத்திக்கு எட்டும் என்று நபியவர்களின் கவனம் குரைஷிகளின் பொருளாதார வலிமையைத் தகர்ப்பதில் அமைந்தது. ஹிஜ்ரி முதலாம் ஆண்டு, ரமளான் மாதம். ஷாமிலிருந்து மக்காவை நோக்கிக் குரைஷிகளின் வணிகக் குழு திரும்பிக் கொணடிருந்தது. ஏறக்குறைய முந்நூறு பேர், அதற்குத் தலைமை அபூஜஹ்லு. அவர்களை வழிமறிக்க 30 முஹாஜிர்களை நியமித்து அந்தப் படை பிரிவுக்குத் தலைவராய் ஹம்ஸா நியமிக்கப்பட்டார். ஸய்ஃபுல் பஹர் என்ற இடத்தில் இரு படைகளும் ஒருவரை எதிர்த்து ஒருவர் அணிவகுத்து நின்றனர். ஆனால் அபூஜஹ்லின் ஆயுள் மிச்சமிருந்தது. இரு தரப்புக்கும் உகந்தவரான மஜ்தி இப்னு அம்ரு அல்ஜுஹனி என்பவர் அங்கு இருந்தார். அவர் இடையில் புகுந்து சமாதானம் பேச, முதல் ஆயுத மோதல் தடுக்கப்பட்டது.
அதற்கு அடுத்த ஆண்டு நபியவர்கள் தாமே தலைமையேற்று 70 முஹாஜிர்களுடன் குரைஷிகளின் கூட்டம் ஒன்றை இடைமறிக்கச் சென்றார்கள். இப்போரிலும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு பங்கேற்றிருந்தார். படை அணிக்கு வெள்ளைக் கொடி நிர்ணயிக்கப்பட்டு அதை ஏந்தும் பொறுப்பு ஹம்ஸாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் படையெடுப்பிலும் போர் நிகழவில்லை. இவ்வாறான சிறுசிறு வழிமறிப்புகளைத் தொடர்ந்து அமைந்ததுதான் பத்ருப் போர். இதன் காரணம், இரு தரப்பு ஏற்பாடுகள், நிகழ்வுகள் ஆகியனவற்றை முந்தைய அத்தியாயங்களில் ஆங்காங்கே பார்த்துவிட்டதால் இங்கு நேரே களத்திற்குச் சென்றுவிடுவோம்.
முஸ்லிம்கள் முக்கியமான இடத்தில் முகாமிட்டிருந்தார்கள். அல் ஹுபப் இப்னு முன்திர் ரலியல்லாஹு அன்ஹு ஆலோசனை வழங்கியிருந்தார். “அல்லாஹ்வின் தூதரே! குரைஷிகளுக்கு அருகிலுள்ள நீர்நிலைக்குச் சென்று தங்குவோம். ஒரு தடாகத்தை ஏற்படுத்தி நீரால் நிரப்பிவிட்டு, மற்ற அனைத்து நீர்நிலைகளையும் அழித்துவிடுவோம். நாளை போர் நிகழும்போது நமக்குத் தண்ணீர் இருக்கும். அவர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிடலாம்.”
“நிச்சயமாக இது மிக நல்ல யோசனை” என்று அதை ஏற்றுக்கொண்டார்கள் நபியவர்கள். திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மறுநாள் –
இருதரப்பும் தயாராய் நின்றுகொண்டிருந்தனர். குரைஷிகளின் தரப்பிலிருந்து அல்-அஸ்வத் இப்னு அப்துல் அஸத் அல்-மக்ஸுமி என்பவன் முதலில் நகர்ந்தான். இவ்வளவு பெரிய படையைத் திரட்டி நாம் நிற்கிறோம். சேர்ந்து அழுத்தினால் நசுங்கக்கூடிய அளவில் நின்றுகொண்டு நீர்த் தடாகத்தையும் கைப்பற்றியிருக்கிறார்களே இந்த முஸ்லிம்கள் என்று நினைத்தவன், “நான் சென்று அந்தத் தடாகத்தில் நீர் அருந்துவேன். குறைந்தபட்சம் அதை உடைத்து எறிவேன். இல்லையா அங்கேயே செத்து மடிவேன். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்” என்று உரத்துக் கத்திவிட்டு விடுவிடுவென்று தடாகத்தை நெருங்கினான்.
எதிர்கொண்டு விரைந்து வந்தார் ஹம்ஸா. தமது வாளால் அவனது பாதத்தை நோக்கி வேகமாக ஒரு வீச்சு. கெண்டைக்காலில் இருந்து அப்பகுதி பிய்த்துக்கொண்டு சென்றது. நீராய் ரத்தம் பீறிட்டுப்பாய, பொதேர் என்று விழுந்தான் அல்-அஸ்வத். அப்படியும் விடாமல் தடாகத்தை நோக்கித் தவழ்ந்தான். சத்தியம் செய்திருக்கிறானே! பிடிவாதம்! தடாகத்தை நெருங்கவிட்டு அங்கேயே அவன் கதையை முடித்தார் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு.
பார்த்துக்கொண்டிருந்த குரைஷிகளுக்கு அதிர்ச்சி, கோபம். அடுத்து அவர்கள் தரப்பிலிருந்து அறைகூவல் எழுந்தது – ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கான அறைகூவல். குரைஷிகளின் முக்கியப்புள்ளி உத்பா இப்னு ரபீஆ, தன் சகோதரன் ஷைபா, மகன் வலீத் ஆகியோருடன் முன்னால் வந்து நின்று முஸ்லிம்களிடம் அறைகூவல் விடுத்தான்.
“உங்களில் யார் வருகிறீர்கள்?””
ஒத்தைக்கு ஒத்தை சண்டையில் இறங்கினால் ஒன்று சாகடி; அல்லது செத்துமடி’. இரண்டில் ஒன்றுதான். எனவே அதற்குச் சண்டைக் கலையும் துணிவும் சரிசமம் தேவை. அந்த அழைப்பை ஏற்றுச் சண்டையிட ‘திடுதிடு’வென்று ஓடி வந்து நின்றார்கள் மதீனாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் –முஆத், முஅவ்வித், அவ்ஃப். அவர்களை ஏறிட்டுப் பார்த்தான் ஷைபா இப்னு ரபீஆ. மூவருமே மதீனாவாசிகள் என்பதை அறிந்துகொண்டவன், கத்தினான்.
“இதோ பார்! நாங்கள் உங்களிடம் சண்டையிட வரவில்லை. எங்களுக்கு எங்களின் மக்கள் வேண்டும்”
குரைஷிகளின் ஆத்திரமெல்லாம் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட தங்கள் இன-சொந்த பந்தங்களின் மீது இருந்தது. இன்றுடன் அவர்களை நசுக்கி அழித்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தனர்.
‘உங்களுக்கு அந்த இளைஞர்களே போதும். ஆனால் நாங்கள்தானே வேண்டும். இதோ…’ என்பதுபோல் முன்னால் வந்து நின்றார்கள் – ஹம்ஸா, அலீ, உபைதுல்லாஹ் இப்னுல் ஹாரித், ரலியல்லாஹு அன்ஹும். மூண்டது கடுமையான சண்டை. ‘திடும் திடுமென’ அவர்கள் மோதிக்கொள்ள சுற்றிலும் புழுதி மயம். முடிவில், ஹம்ஸா ஷைபாவைக் கொல்ல, அலீ வலீதைக் கொன்றார். உபைதுல்லாஹ்வுக்கும் உத்பாவுக்கும் இடையில் மட்டும் சண்டை இழுத்துக் கொண்டிருந்தது. அலீயும் ஹம்ஸாவும் உத்பாவைக் கொன்று அதை முடித்து வைத்தனர். இந்தச் சண்டையில் உபைதுல்லாஹ்வின் கால் வெட்டுண்டு, பின்னர் நன்கு நாட்களுக்குப் பிறகு இறந்துபோனார் அவர்.
ஒத்தைக்கு ஒத்தை முடிந்ததும் தொடங்கியது முழு அளவிலான போர். ஆயிரக்கணக்கான எதிரிகளை முந்நூற்று சொச்சம் முஸ்லிம்களின் படை படு ஆவேசமாய்த் தாக்கியது; எதிர்கொண்டது. ஒவ்வொருவரின் செயலும் வீரமும் தனிச் சிறப்பென்றாலும் ஹம்ஸாவின் வீரம் அன்று அசாத்தியமாய் அமைந்து போன ஒன்று. அல்லாஹ்வின் எதிரிகளைச் சரசரவென வெட்டிச் சாய்த்து, களத்தில் ஏக அதகளம். தமக்கான சிறப்பு அடையாளமாய், நெருப்புக்கோழியின் இறகு ஒன்றை அவர் செருகியிருந்தார். அது அரேபிய மாவீரர்கள் தங்களது வலிமையைப் பறைசாற்றும் அடையாளம். போர் நடைபெறும்போது அவருக்கு இணையான மற்றொரு வீரன் அந்த அடையாளத்தைக் கொண்டு அவர்களை எதிர்கொள்வது வழக்கம்.
அன்று நடைபெற்று முடிந்த பத்ருப் போர் மிக நீண்ட அத்தியாயம். இறுதியில் குரைஷிகளுக்குப் படுதோல்வியும் முஸ்லிம்களுக்கு வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றியையும் அளித்து முடிவுக்கு வந்தது அந்தப் போர். கைதியாகப் பிடிபட்டவர்கள் எழுபது பேர். அதில் உமைய்யா இப்னு ஃகலஃப் ஒருவன். அவன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹுவிடம் கேட்டான், “நெருப்புக் கோழியின் இறகுடன் போரிட்டுக்கொண்டிருந்தாரே ஒருவர். அவர் யார்?”
“அவர்தான் ஹம்ஸா இப்னுல் முத்தலிப். நபியவர்களின் சிறிய தந்தை.”
“ஓஹ்! அவர் இந்தப் போரில் எங்களுக்கு ஏற்படுத்திய இழப்பு ஏராளம்.”
மிக உண்மையான பேச்சு அது. களத்தில் அன்று ஹம்ஸா நிகழ்த்திக் காட்டிய வீரம் ஓர் அற்புதம். மற்ற குரைஷிகளுக்கும் அது புரிந்திருந்தது. குறிப்பாய் இருவருக்கு அது ஹம்ஸாவின் மேல் தீராத வன்மமாய் உருவெடுத்தது, வலுப்பெற்றது.
oOo
பத்ருப் போருக்குக் காரணமாய் அமைந்த அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா. ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு அழைத்த உத்பாவின் மகள் இவர். தன் தந்தை, சகோதரன், சிற்றப்பன், மகன் என்று பல உறவுகளை அந்தப் போரில் இழந்து ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தார் ஹிந்த். சொல்லி மாளாத சோகம், துக்கம், என்று ஹிந்தின் உள்ளும் புறமும் வெறியில் துடித்துக்கொண்டிருந்தன. கிள்ளுக் கீரைகள் என்று நினைத்துக்கொண்டிருந்த முஸ்லிம்கள் இந்த அளவிற்கான இழப்பை அளிப்பார்கள் என்பதை அவரோ, குரைஷியரோ சற்றுமே எதிர்பார்க்கவில்லை. போரில் ஏற்பட்ட இழப்பிற்கு ஏனையப் பெண்களெல்லாம் முடியை மழித்துக் கொண்டு, அடித்து, அரற்றி ஒப்பாரி வைத்து மாய, ஹிந்த் மட்டும் அழவே இல்லையே! அதைக் கண்டு மற்றப் பெண்கள் ஆச்சரியத்துடன் கேட்கவும் செய்தார்கள், “உன் தந்தை, சகோதரன், தந்தையின் சகோதரன் என்றெல்லாம் கொல்லப்பட்டும் உனக்கு அழத் தோன்றவில்லையா ஹிந்த்?”
“சத்தியமாக அழ மாட்டேன். நான் அழுதேன் என்ற செய்தி மட்டும் அந்த முஹம்மதுக்கு எட்டினால் அவரும் அவருடைய தோழர்களும் பனூ கஸ்ரஜ் பெண்களும் ஆனந்தமடைவார்கள். அந்த வாய்ப்பை அவர்களுக்குத் தரமாட்டேன். அவர்களைப் பழிவாங்கும்வரை அழ மாட்டேன். வெறும் அழுதுத் தீர்ப்பது மட்டும் என் சோகத்தை அழிக்கவல்லது என்றால் அழுதிருப்பேன். என் இரத்த சொந்தங்களைக் கொன்றவர்கள் கொல்லப்படும் காட்சியை நான் என் கண்களால் காணவேண்டும். அப்பொழுதுதான் என் ஆத்திரமும் வேதனையும் தீரும். அதுவரையில் எனக்கு எண்ணெயும் நறுமணமும் அலங்காரமும் வேண்டாம்”
வெறும் ஒப்புக்கான சத்தியம் போன்று இல்லாமல் அதை அப்படியே பின்பற்றினார் ஹிந்த். பின்னர் உஹதுப் போர் நடைபெறும்வரை தன் கணவனுடன் அவர் தாம்பத்தியத்திலும் ஈடுபடவில்லை. கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் மக்கத்துக் குரைஷிகளை அடுத்தப் போருக்குத் தூண்டிவிடுவதிலும் அவர்களுக்கு வெறியூட்டுவதிலுமாக ஹிந்தினுடைய பொழுது கழிந்து கொண்டிருந்தது.
மக்காவில் மற்றொரு வீடு. அங்கு ‘தேமே’ என்று தன் வேலையைப் பார்த்துக்கொண்டு கிடந்தார் அடிமை ஒருவர். அபிஸீனிய நாட்டைச் சேர்ந்த அபூதஸ்மா எனும் அடிமை அவர். இயற்பெயர் வஹ்ஷி பின் ஹர்பு http://www.satyamargam.com/1542. அக்கால அரேபியாவில் அடிமைகள் என்பவர்கள் குறிப்பிட்ட தரப்பு மக்கள் என்றில்லாமல், பல நாட்டைச் சேர்ந்தவர்கள். மொழி, இனம், குலத்தால் வேறுபட்ட மக்கள். போரில், கலவரத்தில், கொள்ளையில் என்று ஏதேனும் ஓர் அசந்தர்ப்பமான நிகழ்வில் மாட்டி அடிமையாகியிருப்பார்கள். அத்துடன் அவர்களது சுதந்திரம் பறிபோயிருக்கும். காலா காலத்திற்கும் அடிமை என்று அவர்களது வாழ்க்கை மாறியிருக்கும். யாரேனும் அந்த அடிமையின் முதலாளிக்குப் பணம் கொடுத்து அந்த அடிமைக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும். இல்லையா நல்ல நாள், பெருநாள் என்று எஜமானனாய்ப் பார்த்து, “அடிமையே இன்றிலிருந்து உனக்கு விடுதலை” என்று சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் விடுதலை.
தன் வேலையுண்டு தானுண்டு என்று கிடந்த வஹ்ஷிக்கு மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி பெற்றது, ஏகத்துவச் செய்தி, தம்மைப் போன்ற அடிமைகள் சிலர் அதை ஏற்றுக்கொண்டு படும் சித்திரவதை, அரசியல் மாற்றங்கள், முஸ்லிம்களின் புலப்பெயர்வு, பத்ருப் போர், குரைஷிகளின் தோல்வி என்று எதுவும் பெரிய மாற்றத்தை நிகழ்த்தவில்லை. கடமையே கண்ணாய் தன் எசமானருக்கு விசுவாசமாய்க் கழிந்துகொண்டிருந்தது அவரது பொழுது. ஒட்டகமாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்துகொண்டிருந்த வஹ்ஷியிடம் ஓர் அபாரத் திறமை இருந்தது. ஆப்பிரிக்கர்களுக்கே உரித்தான திறமை அது. ஓர் இலக்கை நோக்கி தனது ஈட்டியை எறிந்தால் எறிந்ததுதான். குறி தப்பவே தப்பாது. இதைச் சரியாக அறிந்து வைத்திருந்தார் அவரது எசமானர் ஜுபைர் இப்னு முத்இம்.
இவர் குரைஷிக் குலத்தைச் சேர்ந்த பனூ நவ்ஃபல் கோத்திரத்தின் ஒரு முக்கியத் தலைவர். இவருடைய தந்தையின் சகோதரர் துஐமா பத்ரு போரில் கலந்துகொள்ளச் சென்றவர் திரும்பி வரவில்லை. கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அவரது பெயரும் சேர்ந்துவிட்டது. அவரைக் கொன்றவர் ஹம்ஸா. அந்தச் செய்தி அறிய வந்த நாளிலிருந்து ஜுபைர் இப்னு முத்இமுக்கு ஹம்ஸாவின் மேல் ஆத்திரம், பழி தீர்க்கும் எண்ணம் உருவாகியிருந்தது. தருணம் பார்த்துக் காத்துக் கிடந்தது அவரது மனம்.
இப்படியாகக் குரைஷியர் அனைவருக்கும் பத்ருப் போரில் ஏற்பட்டிருந்த தோல்வியினால் ஆளுக்கொரு காரணம், அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் என்று இருந்தது அடுத்தப் போருக்கான படையெடுப்பாய் பரிணமித்தது. பெரும் படையாய்த் திரண்டது. பத்ருப் போர் முடிந்த ஓர் ஆண்டு முடிந்திருந்த நிலையில் அந்தப் படை மதீனா நோக்கிக் கிளம்பியது.
அந்த நேரத்தில் வஹ்ஷியைப் பார்த்து ஜுபைர் இப்னு முத்இம் ஒரு கேள்வி கேட்டார்.
“உன்னை நீ அடிமைத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமா?”
ஆச்சரியமாகப் பார்த்தவர் “நிச்சயமாக. ஆனால் யார் எனக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள்?”
“நானே உனக்கு விடுதலை அளிக்கிறேன்,” என்றார் எசமானர் ஜுபைர்.
“எப்படி?” நம்ப முடியவில்லை வஹ்ஷிக்கு.
“பத்ருப் போரில் என் தந்தையின் சகோதரர் துஐமா இப்னு அதீயைக் கொன்றவர் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப். நடைபெற உள்ள போரில் நீ மட்டும் அவரைக் கொன்றுவிட்டால், உனக்கு விடுதலை. நீ சுதந்திரக் காற்றை சுவாசிக்கலாம்.”
சில்லென்று சிலிர்த்தது. விடுதலை கிடைத்துவிடுமா? நிச்சயமாகவா?
“நீங்கள் உங்களுடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது?” என்று நம்பமுடியாமல் கேட்டார் வஹ்ஷி. பழிவாங்கும் வெறியில் தன் இஷ்டத்திற்கு வாக்குறுதி அளிக்கிறார் எசமானன். வேலை முடிந்த பிறகு, “வா, வந்து இந்த ஒட்டகத்துச் சாணத்தை கூட்டிப் பெருக்கி துப்புரவாக்கு” என்று பின்வாங்கி விட்டால்?
“நீ யாரை விரும்புகிறாயோ அவர்களை எல்லாம் அழைத்துவா. என்னுடைய வாக்குறுதிக்கு நான் அனைவரையும் சாட்சியாக ஆக்கிக்கொள்வேன்” என்று தீவிரமான பதில் வந்தது.
“அப்படியானால், நிச்சயம் நான் உமது கோரிக்கையை நிறைவேற்றுவேன்,” என்று பதிலளித்தார் வஹ்ஷி.
இந்த வாக்குறுதி குரைஷிப் படையினரிடம் பரவி பிரபலமடைந்து, எட்ட வேண்டிய காதை எட்டியது. “சபாஷ்! சரியான தேர்வு” என்று மகிழ்ந்த ஹிந்த் பின்த் உத்பா வஹ்ஷியிடம் கூறினார். “வஹ்ஷி! உன்னையும் விடுவித்துக்கொள். எங்களையும் எங்களது பெருந்துயரிலிருந்து விடுவி! எனது தங்கக் காதணிகள், பவளக் கழுத்தணி இவையெல்லாம் உனக்குப் பரிசாகக் கிடைக்கும்.”
பெறுவதற்கு அரிய விடுதலை. கூடவே கொசுறாக பெருமதிப்புள்ள ஆபரணங்கள் இனாம். வேறென்ன வேண்டும்? மகிழ்ந்து போனார் வஹ்ஷி. குறிக்கோளைத் தெளிவாய் வரையறுத்துக் கொண்டார். தனது ஈட்டியை எடுத்துக் கொண்டார். படையுடன் சேர்ந்து கொண்டார். ஆனால் படையின் இறுதியில் வந்துகொண்டிருந்த பெண்கள் பிரிவினருக்கு அருகில் இணைந்து கொண்டார்.
இந்தப் போரில் அவருக்கு எந்தவொரு பிரமாதமான ஈடுபாடும் இல்லை. ஒரே ஓர் இலக்கு. அதை அடைந்தால் தனக்கு விடுதலை. அந்த எண்ணம் மட்டும் அவரது நெஞ்சம், தலை, கை கால் என்று உடல் முழுக்க வியாபித்திருந்தது. எனவே படையினர் மற்றவருடன் கலந்துகொள்வதோ, அந்த ஆரவாரத்தில் பங்கெடுப்பதோ இல்லாமல் அமைதியாய் மதீனாவின் பாதையை நோக்கி அவரது கண்கள் நிலைகுத்தின.
மதீனா நகர்வரை எதிரிகளை நுழையவிட்டுப் போரிடுவதா, அல்லது நகருக்கு வெளியே படை திரட்டிச் சென்று எதிர்கொள்வதா என்று நபியவர்கள் தோழர்களுடன் ஆலோசித்தார்கள். ஹம்ஸா தம் கருத்தைத் தெரிவித்தார். “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு வேதம் இறக்கி அருள்பவன் மீது ஆணையாக! அவர்களை மதீனாவிற்கு வெளியே வைத்து என்னுடைய வாளால் போரிடும்வரை நான் உணவு உண்ணப் போவதில்லை.” இன்னபிற தோழர்களின் கருத்தும் இதைப்போல் அமைய நபியவர்கள் முடிவெடுத்தார்கள். மதீனாவிற்கு வெளியே அமைந்துள்ள உஹது மலை அடிவாரத்தில் குரைஷிப் படையை எதிர்க்கொண்டது முஸ்லிம்களின் படை.
யுத்தம் துவங்கியது; உக்கிரம் அடைந்தது. எதிரிகள் அணியில் தல்ஹா பின் அபீதல்ஹா கொடி ஒன்றை ஏந்தி ஒட்டகத்தின் மீது அமர்ந்து முஸ்லிம்களுக்கு அறைகூவல் விட்டுக்கொண்டிருந்தான். மகா முரடன். படையின் முரட்டுக் கடா என்ற பட்டப்பெயரும் அவனுக்கு உண்டு. அவன்மீது சிங்கம் போல் பாய்ந்தார் ஸுபைர் இப்னுல் அவ்வாம். வெட்டி எறிந்து அவனைச் சாய்க்க, மாண்டு விழுந்தான் அவன். அதைத் தொடர்ந்து யுத்தம் தீவிரமடைந்து களமெங்கும் ஆயுதங்கள் உரசும் ஒலி, தீப்பொறி.
தல்ஹா இப்னு அபூதல்ஹா கொல்லப்பட்டதும் அவனுடைய சகோதரன் உதுமான் இப்னு அபூதல்ஹா அந்தக் கொடியைப் ஏந்திக் கொண்டு வீராவேசமாய் உரைத்தான். “கொடியை ஏந்தியவனின் ஈட்டி, குருதியினால் நிறம் மாற வேண்டும். இல்லையேல் அது உடைந்து போகவேண்டும்.”
இப்போது அவன்மீது பாய்ந்தார் ஹம்ஸா. அவனது புஜத்தில் படு ஆக்ரோஷமாய் இறங்கியது அவரது வாள். அதில் அவனது கை துண்டாகி விழுந்தது. தவிர தாக்குதலின் வேகம் எப்படி இருந்தது என்றால் அவரது வாள் அவனது தோளிலிருந்து தொப்புள் வரை இறங்கி குடல் சரிந்து வெளியே விழுந்தது. அவனும் இறந்தான். அந்த அளவு வெட்டிச் சாய்க்க அசாத்திய உடல் வலிமையும் உறுதியும் இருக்க வேண்டும். இருந்தது அவருக்கு. களத்தில் சிங்கமாய் ஆடிக்கொண்டிருந்தார் ஹம்ஸா. “அல்லாஹ்வின் சிங்கம் நான். அவனுடைய தூதரின் சிங்கம் நான்” என்று இரண்டு கைகளிலும் வாளை ஏந்திக் கொண்டு வீறுகொண்ட வேங்கையைப்போல் எதிரிப் படையினரின் ஊடே தமது வாளால் வெட்டிக்கொண்டே பறந்தோடிக் கொண்டிருந்தார் அவர். அவரது அந்த அசகாய முன்னேற்றத்தை குரைஷிப் படையினர் தடுக்கமுடியாமல் திணறி வீழ்ந்து கொண்டிருந்தனர். அவரின் அருகே நெருங்கக்கூட இயலாமற் சிதறி ஓடினர். அன்றையப் போரில் அவர் மட்டுமே முப்பது எதிரிகளைக் கொன்றதாய் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
களம் இவ்விதம் அதிர்ந்து கொண்டிருக்க, வஹ்ஷியின் கண்கள் தீவிரமாக ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவை மட்டும் தேடிக் கொண்டிருந்தன. வேறு எதிலும் நாட்டமில்லை, எதையும் கவனிக்கவில்லை. ஹம்ஸாவை மக்காவில் இருக்கும்போதே பார்த்திருக்கிறார் வஹ்ஷி. கம்பீரத்தின் சின்னம் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப். தலையில் தலைப்பாகையும் அதில் ஒரு நெருப்புக்கோழியின் இறகும் செருகி இருக்கும். எனவே ஹம்ஸாவை எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. சந்தனநிற மந்தையில் தனியாய்த் தெரியும் கறுப்பு ஒட்டகத்தைப்போல் அவரை இனங் கண்டுகொண்டதாகப் பின்னர் விவரிப்பார் வஹ்ஷி.
புதர்களுக்கும் பாறைகளுக்கும் இடையில் மறைந்து மறைந்து ஹம்ஸாவைத் தொடர்ந்து நெருங்கிக் கொண்டிருந்தார் வஹ்ஷி. அந்நேரம் குரைஷிப் படையைச் சேர்ந்த சிபா அப்துல் உஸ்ஸா என்பவன் தனது குதிரையுடன் அவரை நெருங்கி, “நான் உனக்குச் சவால் விடுகிறேன் ஹம்ஸா,” என்று அவரை “ஒத்தைக்கு ஒத்தை” சண்டைக்கு அறைகூவல் விடுத்தான். இந்த சிபாவை நினைவிருக்கிறதா? கப்பாப் பின் அல்-அரத் வரலாற்றில் நாம் சந்தித்த அதே சிபா இப்னு அப்துல் உஸ்ஸாதான். அவனை நோக்கி முன்னே சென்ற ஹம்ஸா, “வா, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்பவளின் மகனே, வா வந்து பார்!” என்றார் ஆக்ரோஷமாக! சிபாவின் தாய் உம்மு அன்மார் மக்காவில் அந்தத் தொழில் புரிபவள். அதனால் அவனது அறைகூவலுக்கு பதில் ஏசலாய் அதைச் சொல்லி அவனை அழைத்தார் ஹம்ஸா.
அவனும் ரோஷமாய் ஹம்ஸாவை நோக்கி வேகமாக நெருங்க, தனது வாளால் ஒரே சீவு. தலை இழந்து இரத்த வெள்ளத்தில் மடிந்தான் அவன். சிபாவை வீழ்த்தி ஹம்ஸா நிமிர்ந்த அந்த நேரமும் சூழ்நிலையும் பெரும் வாகாய் அமைந்தது வஹ்ஷிக்கு. தனது ஈட்டியை உயர்த்தி வலமும் இடமும் ஆட்டி ஆட்டி, தனது கைகளில் அதைச் சரியான சமநிலைககுக் கொண்டுவந்தார். குறிபார்த்து எறிந்தார். அது நேராக ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் அடிவயிற்றில் புகுந்து அதன் முறுமுனை இடுப்பிலிருந்து வெளிவந்தது. திகைத்துத் திரும்பிய ஹம்ஸா வஹ்ஷியை நோக்கித் தள்ளாடி கால்களை முன்னெடுத்து வைத்து, அதற்குமேல் முடியாமல் செருகிய ஈட்டியுடன் தடுமாறி வீழ்ந்தார். நேருக்கு நேரான போரில், சண்டையில் அவரை எதிர்கொள்ள முடியாது என்பதை சர்வ நிச்சயமாய் அறிந்திருந்த வஹ்ஷி மறைந்திருந்து தாக்கி அவரைக் கொன்றார்.
எங்கும் நகராமல் அப்படியே காத்திருந்த வஹ்ஷி, ஹம்ஸா இறந்துவிட்டார் என்பது உறுதியானதும் அவரை நெருங்கித் தனது ஈட்டியை அவரது உடலிலிருந்து பிடுங்கி எடுத்துக்கொண்டு தனது கூடாரத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டார். வந்த வேலை முடிந்தது. அதற்குமேல் போரில் அவருக்கு எந்த சுவாரஸ்யமும் இல்லை, வேறு எவரையும் கொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. “என் பணி முடிந்தது. இனி எனக்கு விடுதலை” தீர்ந்தது விஷயம்.
பத்ருப் போரைப் போலவே உஹதுப் போரும் மிக நீண்ட அத்தியாயம். ஹம்ஸாவின் மரணத்துக்குப் பின்னர், சில முஸ்லிம் வீரர்களின் அவசரத்தினால் திசை மாறிய போர் குரைஷிகளுக்குச் சாதகமாகத் திரும்பியது. அந்த வெற்றியில் குரைஷிப் பெண்கள் மதிமயங்கி வெறியாட்டம் போட்டார்கள். குலவையிட்டும் நாட்டியமாடியும் போர்க்களத்தில் அவர்கள் புரிந்தது அழிச்சாட்டியம். மரணித்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களின் சடலங்கள், அப்பெண்களால் சின்னா பின்னமாக்கப் பட்டன. குடல்கள் கிழித்தெறியப்பட்டன. கண்கள் நோண்டப்பட்டன. காதுகள் அறுக்கப்பட்டன. மூக்குகள் குடையப்பட்டன. இவ்வளவு குரூரமும் போதாதென்று ஒருத்தி முஸ்லிம் வீரர்களின் அறுக்கப்பட்ட அங்கங்களைக் கழுத்திலும் கைகளிலும் அணிகலனாக அணிந்து கொண்டு ஆனந்தக் கூத்தாடினாள். பத்ருப் போரில் பலியான தங்கள் சொந்தங்களின் இழப்பிற்கெல்லாம் பரிகாரம் கிடைத்த திருப்தி ஏற்பட்டது அப்பெண்களுக்கு.
இவற்றுள் ஹிந்தின் ஆட்டம் பேயாட்டம். இறந்த சஹாபாக்களின் உடல்களைச் சிதைத்து அவர்களின் சடலங்களிலிருந்து காதுகள் மூக்குகள் ஆகியனவற்றை அறுத்தெடுத்து கழுத்தணியும் காதணியும் செய்து மாட்டிக் கொண்டு, தங்கத்தினாலான தனது காதணியையும் பவளக் கழுத்தணியையும் வஹ்ஷிக்கு சன்மானமாக அளித்தார் அவர்.
“வஹ்ஷி. இந்தா வாங்கிக் கொள். இவையெல்லாம் எனது பரிசு. விலை மதிப்புமிக்க இவை அனைத்தும் உனக்கே உனக்கு”
உச்சக்கட்டக் கொடூரமாக மற்றொன்று செய்தார் ஹிந்த். ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவின் ஈரலை அறுத்து எடுத்து அதைக் கடித்தவள் முழுங்க இயலாமல் துப்பினாள். இதைவிடக் காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்க முடியும்?
தம் சிறிய தந்தை ஹம்ஸாவின் இழப்பும் பிறகு அவரது சடலத்துக்கு இழைக்கப்பட்ட கொடூரமும் நபியவர்களுக்குச் சொல்லிமாளாத சோகத்தை அளித்துவிட்டன. விம்மியழுது வெளிப்பட்டது கண்ணீர். விம்மலுடன் கஅபாவை நோக்கி இறைஞ்சினார்கள். ஹம்ஸாவின் சகோதரியும் நபியவர்களின் அத்தையுமான ஸஃபிய்யா, தம் சகோதரன் ஹம்ஸாவின் உடலைக் கண்டார். அலங்கோலமாய்ச் சிதைந்து கிடந்த சடலத்தைக் கண்டு தீர்க்கமான வார்த்தைகள் வெளிப்பட்டன. “நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே நாம் மீள்வோம். இது அல்லாஹ்வுக்காக நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் என்ன விதித்துள்ளானோ அதை நான் ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குரிய அல்லாஹ்வின் வெகுமதிக்காக நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.”
போரில் இறந்த முஸ்லிம்களின் நல்லடக்கம் நடைபெறும்போது ஹம்ஸாவின் சடலத்தை முழுமையாய் மூடும் அளவிற்குக்கூட நீளமான துணி முஸ்லிம்களிடம் இல்லை. தலையை மூடினால் கால் வெளிப்பட்டது. காலை மூடினால் தலை தெரிந்தது. இறுதியில் தலையிலிருந்து மூடி கால் பகுதியை இத்கிர் எனும் இலை கொண்டு மறைத்து அடக்கம் செய்யப்பட்டார் அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா பின் முத்தலிப்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!
சத்தியமார்க்கம்.காம்-ல் 16 ஆகஸ்டு 2012 அன்று வெளியான கட்டுரை