16. ஸைது இப்னு தாபித் (زيد بن ثابت)
ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு. மதீனா நகரம் முக்கியமான வரலாற்று நிகழ்வொன்றிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்நகரிலிருந்த வீடு ஒன்றில் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருந்தார். தன் தாயாரிடம் விரைந்து சென்றார்.
“நானும் போரில் கலந்து கொள்ள வேண்டும். என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”
மதீனாவில் இஸ்லாம் நுழைவதற்குமுன் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினர் அவ்வப்போது முட்டிக்கொண்டு நிகழ்த்திக் கொண்ட சிறுசிறு சண்டைகள் அலுத்துப்போய் பெரும் போர் ஒன்று நிகழ்த்தினர். புஆத் போர். எல்லாம் மதீனத்து யூதர்களின் கைங்கர்யம். அந்தப் போரில் அந்தச் சிறுவரின் தந்தை காலமாகிவிட்டிருந்தார். எனவே அவருக்கு அனைத்தும் அவருடைய தாயார் ஆகிப்போனார்..
“அப்படியா? தயாராகி வா. அழைத்துச் செல்கிறேன்” என்றார் தாயார் அந்நவ்வார் பின்த் மாலிக்.
பெருமகிழ்வுடன் தயாராகி வந்தார் அந்தச் சிறுவர். கையில் போர் வாள்! அவரது உயரமே ஏறக்குறைய அந்த வாள் அளவுதான் இருந்தது.
அந்தச் சிறுவர் கலந்து கொள்ள ஆசைப்பட்டது திருவிழாவோ, விளையாட்டுப் போட்டியோ அல்ல.
போர்!
வில், அம்பு, வாள், குருதி, மரணம் என்று களத்தில் உயிருக்கு முடிவுகட்டக்கூடிய சாத்தியக்கூறு அத்தனையும் உள்ள போர். அந்தச் சிறுவனும் “பெரிய மனுசத்தனமாய்” ஆசைப்பட, தாயாரும் உடனே அழைத்துக் கொண்டு கிளம்பினார். ஏற்கெனவே ஒரு போரில் கணவரை இழந்தவர் அவர். இப்பொழுது மற்றொரு போர். மகன் திரும்பிவர உத்தரவாதம் இருக்கிறதா என்ன? பதக்கம் பரிசு கிடைக்கும் விளையாட்டுப் போட்டியா அது? கரணம் தவறினால் மரணம் நிச்சயம் என்ற போர். அதெல்லாம் கணக்கில்லை.
அன்ஸாரீயீன்கள் அவர்கள்! நபியவர்களுக்காக “உடலும் உயிரும் தருவேன்” என்று சத்தியமிட்டவர்கள். அதை ஆண், பெண், சிறுவர் என்று எவ்வித பேதமும் இல்லாமல் பெருமகிழ்வுடன் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
தன் மகனைப் பெருமிதத்துடன் நபியவர்களிடம் இட்டுச் சென்றார் அந்வ்வார் பின்த் மாலிக்.
இஸ்லாத்தின் முதல் போரான பத்ரு யுத்தத்திற்குத் தயாராகி்க் கொண்டிருந்தது முஸ்லிம்களின் படை. தனது படையினரை இறுதிக் கட்டமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். முகத்தில் பெரும் பொலிவு மிளிர, தோரணையில் வீரம் தெறிக்க முஹம்மது நபியை நெருங்கி வந்தார் அந்தச் சிறுவர்.
“அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களுக்காக எனது உயிரை அர்ப்பணிக்கிறேன். என்னையும் அனுமதித்து ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களது தலைமையில் அல்லாஹ்வின் எதிரிகளை நானும் எதிர்த்துப் போரிடுவேன்”
ஆச்சரியமும் மலைப்பும் ஒருங்கே தோன்ற அந்தச் சிறுவனை ஏறி்ட்டு நோக்கினார்கள் முஹம்மது நபி. என்ன சொல்கிறோம் என்பதைப் புரிந்துதான் சொல்கிறாரா இந்தச் சிறுவர்? முகத்தில் என்னவோ உண்மையும் ஆர்வமும் தெரிந்தது. ஆனால் அவரது கையிலுள்ள வாள் அளவு உயரமே உள்ள அவரை எப்படிப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்வது? மக்காவிலிருந்து கிளம்பிவந்து கொண்டிருப்பதோ கடுமையான போர் வீரர்களின் அணி. அவர்களை எதிர்க்க இவரையும் ஒரு வீரராய் எப்படிக் களமிறக்குவது, அன்பாய் ஆதரவாய் அந்தச் சிறுவனது தோளைத் தட்டிக் கொடுத்தவர்கள் சமாதானம் கூறினார்கள். “நீ மிகவும் சிறியவன். வாய்ப்பு ஒருநாள் வரும் அதுவரை காத்திரு”
சிறுவரது மனம் காயப்படாமல் பேசி அனுப்பி வைத்தார்கள். ஆயினும் மிகவும் ஏமாற்றமடைந்தார் அந்தச் சிறுவர். ஆசையாய்க் கேட்ட விளையாட்டுப் பொருள் கிடைக்காமற் போனால் படரும் ஏமாற்றத்தைவிடப் பலமடங்கு கடுமையான சோகம் கவ்வியது அந்தச் சிறுவரது முகத்தில். நபியவர்களுடன் அவரது முதல் படையெடுப்பில் கலந்து கொள்வது எத்தகைய பேறு? கை நழுவிப்போகிறதே அது என்ற ஆற்றாமை. வாள் தரையில் உரச வாடிய முகத்துடன் வீடு திரும்பினார்.
அவர் – ஸைது இப்து தாபித் ரலியல்லாஹு அன்ஹு!
அவருடைய தாயாருக்கும் தன் மகனுக்கு வாய்ப்பு கிடைக்காமற் போனது மிகப் பெரும் வருத்தம். இஸ்லாத்திற்காக முதற் போர் நடைபெறுகிறது. அதில் என் மகன் இடம்பெற இயலவில்லையே என்று பெரும் அங்கலாய்ப்பு. நெஞ்சின் இண்டு இடுக்கெல்லாம் வீரம் செறிந்து கிடந்தது அவர்களுக்கு. வருத்தப்படாமல் வேறென்ன செய்வார்கள்?
அதற்கு அடுத்த ஆண்டு உஹதுப் போருக்கான மேகம் மதீனாவைச் சூழ்ந்தபோது, ஒரு குழுவாய் சிறுவர்கள் கூடி வாள், ஈட்டி, வில்-அம்பு, கவசம் ஆகியனவெல்லாம் எடுத்துக்கொண்டு முஹம்மது நபியவர்களிடம் ஓடினார்கள். ஏதாவது செய்து படையில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற பெரும்போட்டி அவர்களுக்குள். அதில் ரஃபி இப்னு கதிஜ், சமுரா இப்னு ஜுன்துப் எனும் இருவர் தங்களது வயதுக்கு மீறிய வலிமையோடும் தேகபலத்துடனும் திகழ்ந்தவர்கள். மல்யுத்தம் புரிவதிலும் போர்க்கருவிகளை கையாள்வதிலும் அவர்களிடம் அசாத்திய லாவகம் இருந்தது. அதைப் பார்த்த முஹம்மது நபி அனுமதியளித்துவிட்டார்கள். ஆனால் உமர் (ரலி) மகன் அப்துல்லாஹ்விற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்தச் சிறுவர் பட்டாளத்துடன் சேர்ந்து முயற்சி செய்த ஸைது இப்னு தாபித்திற்கும் வாய்ப்பு அமையவில்லை. போருக்கான பக்குவம் அவர்களிடம் இன்னமும் ஏற்படவில்லை என்பது நபியவர்களின் மதிப்பீடு.
பின்னர் ஸைதினுடைய பதினாறாவது வயதின்போது நிகழ்வுற்ற அகழி யுத்தத்தில்தான் ஸைதிற்கு அந்த வாய்ப்புக் கிடைத்து இஸ்லாத்திற்காக ஆயுதமேந்தினார். ஆனால் முதல் இருபோர்களில் அவருக்குக் கைநழுவிப் போன வாய்ப்பிற்குப் பின்னே இறை விதியிருந்தது. பெருமைக்குரிய விதி; பார்ப்போம்.
வயது ஒரு குறையென்று போரில் பங்கெடுக்கும் பாக்கியம்தான் கிட்டவில்லை, வேறென்ன செய்தால் நபியவர்களின் அண்மை கிட்டும், சேவை செய்யும் வாய்ப்பு அமையும் என்று சிந்தித்தார் அந்தச் சிறுவர். யோசனையொன்று பளிச்சிட்டது. தடையாயிருந்த வயதே மிகப்பெரும் வரமாய் மாற்றிக் கொள்ளக் கூடிய திட்டமொன்று உருவானது. வானத்திலிருந்து வந்து இறங்குகிறதே இறைவசனம் அதைப் படித்து உய்த்துணரும் மாணவனாய் ஆகிவிட்டால்? அதுவே சரியென்று தோன்றியது. மீண்டும் ஓடினார் தாயிடம். திட்டம் அறிந்த தாய்க்கு அளவிலா மகிழ்ச்சி. “சபாஷ்! சரியான முடிவு” என்று தட்டிக் கொடுத்தவர் உடனே தன்னுடைய உறவினர்களிடம் இது குறித்துப் பேசினார்.
“என் மகன் அல்லாஹ்வின் வேதம் கற்றவனாய் ஆக விரும்புகிறான். உதவி செய்யுங்கள்”
அதற்காக மதரஸா, பள்ளிக்கூடம், அரபிக் கல்லூரி என்பதெல்லாம் இல்லை. நேரே அறிவின் ஊற்றினருகில் சமர்ப்பித்துவிட வேண்டியதுதான். முஹம்மது நபியெனும் பல்கலையின் நேரடி மாணாக்கனாய், பாலை மணலில் கல்வி சுரக்கும். இம்முறை அந்த உறவினர்கள் சிறுவர் ஸைது இப்னு தாபித்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று சிபாரிசு செய்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! இந்த எங்களின் சிறுவன் ஸைது இப்னு தாபித், பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். தனது இந்தத் திறமையையெல்லாம் தங்களது சேவைக்கு அர்ப்பணித்து தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விழைகிறான். தங்களுக்கு விருப்பமிருந்தால் தயவுசெய்து தாங்களே அவனை ஓதச் சொல்லிக் கேட்டு, சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்”
“எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது, கேட்கிறேன்” என்றார்கள் முஹம்மது நபி.
ஓதினார் ஸைது இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு.
அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் அவரது நாவிலிருந்து வெளிவந்தன குர்ஆன் வசனங்கள். குரலிலிருந்த ஏற்றமும் இறக்கமும், ஒவ்வொரு வசனத்தையும் ஆரம்பித்து முடிப்பதில் இருந்த கவனமும் எந்தளவு உள்ளார்ந்து குர்ஆன் அவரது மனதில் இடம் பெற்றிருக்கிறது என்பது உடனே புரிந்துவிட்டது நபியவர்களுக்கு. அவருடைய உறவினர்கள் விவரித்ததைவிட ஸைது திறமைசாலி என்பது தெளிவாய்த் தெரிந்தது. அதையும் தாண்டி நபியவர்களை உவகையில் ஆழ்த்திய விஷயம் ஒன்றிருந்தது – ஸைது சிறப்பாய் எழுத, படிக்கக் கூடியவர் என்பது.
தாபித் இப்னு கைஸ் வரலாற்றிலேயே பார்த்தோமில்லையா, யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை முழுமுற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் தேர்ச்சி முஹம்மது நபியவர்களிடம் இருந்தது என்று. எனவே ஸைதை எப்படி இஸ்லாத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு அக்கணமே உறுதியாகிவிட்டது.
“ஸைது! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதை சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்” மதீனாவில் இருந்துகொண்டு அழும்பு புரிந்து கொண்டிருந்த யூதர்களுடன் உடன்படிக்கை என்று அரசியல் சமாச்சாரங்கள் சில அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர்களுடன் எழுத்தில் தகவல் பரிமாற்றம் புரிந்துகொள்ள யூத மொழி வல்லுநர் ஒருவரின் தேவை முஸ்லிம்களுக்கு அவசிமாயிருந்தது.
அவ்வளவுதானே, இதோ “தங்களது உத்தரவிற்கு அடிபணிந்தேன் நபியவர்களே” என்று உடனே, வெகு உடனே காரியத்தில் இறங்கினார் ஸைது. முப்பது நாளில் ஒரு மொழியில் தேர்ச்சியடைய புத்தகங்களெல்லாம் இல்லாத காலமது. ஒரே வழி உழைப்பு. இராப் பகல் என்று அயராது உழைப்பு. அதன் பலனாய் வெகு குறுகியகாலத்தில் இரண்டே வாரத்தில் ஹீ்ப்ரு மொழி கற்றுத் தேர்ந்தார் அவர். அதன் பிறகு யூதர்களுக்கு எழுதக் கூடிய கடிதம், அவர்களிடமிருந்து வரும் தகவல் என்று எதுவாய் இருந்தாலும் படிப்பது மொழிபெயர்ப்பது எழுதுவது எல்லாம் ஸைது பொறுப்பிற்கு வந்து சேர்ந்தது.
அதைத் தொடர்ந்து, “உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?” என்று கேட்டார்கள் நபிகள்.
“தெரியாது” என்றார் ஸைது.
“சென்று அதைக் கற்று வா ஸைது”
அதையும் உடனே பயின்றார். அதுவும் எத்தனை நாளில்? பதினேழே நாளில். நபியவர்கள் இட்ட கட்டளைக்காக மிக இளவயதினர் ஒருவர் இரு வாரங்களில் ஒரு மொழியினைக் கற்று, தயாராய் வந்து நிற்கிறார்.
அரபு மொழி ஒருபுறம் இருக்கட்டும், நம்மில் பலருக்கு அந்த அரபு மொழியில் தப்புத் தவறின்றி குர்ஆன் ஓதுவதே பெரும் சவாலாய் அல்லவா இருக்கிறது? அதுபற்றிய விசனத்திற்குக்கூட நேரமில்லாமல் நாளும் மாதமும் வருடங்களும் ஓடிக்கொண்டேயிருக்க கணினியில் பல மொழி, உலக மொழிகளில் சில மொழி எனக் கற்று காசு பார்ப்பதில் குறியாய்க் கிடக்கிறதே நம் மனது!
இளைஞர் ஸைது இப்னு தாபித் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு மொழி வல்லுநராய் வளர்ந்து வரலானார். நபியவர்களுக்கு அவரே அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆகிப்போனார். அவரிடமிருந்த புத்திசாதுர்யம், செய்யும் செயல்களில் நேர்த்தி, துல்லியம் எல்லாமாய்ச் சேர்ந்து ஸைதின் திறமையின்மேல் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது முஹம்மது நபிக்கு.
அவ்வப்போது அருளப்பெறும் இறைவசனங்களை எழுதிவைத்துக் கொள்வதற்காகவே சிலரை நியமித்து வைத்திருந்தார்கள் நபியவர்கள். அவர்களுள் ஸைத் பிரதானமான ஒருவராய் ஆகிப்போனார். இறைவசனம் புதிதாய் வந்திறங்கியதும் ஸைதை அழைத்துவரச் சொல்வார்கள். பிறகு அவர்கள் உச்சரிக்க உச்சரிக்க கவனமாய் எழுதிக் கொள்வார் ஸைது. எத்தகைய பாக்கியம் அது? விண்ணிலிருந்து புத்தம் புதிசாய் இறங்கும் வசனத்தை, இறைவனின் வார்த்தைகளை, முதலில் தன் கைப்பட எழுத அமையும் பாக்கியம் எத்தகைய நற்பேறு? வாய்த்தது அது அவருக்கு. அது மட்டுமல்லாமல் மன்னர்களுக்கு நபியவர்கள் அனுப்பிவைத்த கடிதங்களை எழுதும் பணியும் ஸைதிற்கு அமைந்தது.
இவ்வளவும் ஸைதின் மிக இளமைப் பருவத்தில் – பதினாலு பதினைந்து வயதிலிருந்தே – நிகழ ஆரம்பித்தன. வயது முதிர்ந்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கச் சொல்லும் இஸ்லாம் அதே நேரத்தில் வயதில் சிறிய இளைஞர்களின் எந்தவொரு திறமையையும் அவர்களின் வயதின் காரணத்தால் நிராகரிக்கவுமில்லை, உதாசீனப்படுத்தவுமில்லை. மாறாய், போற்றி ஊக்கப்படுத்தி நல்வடிவம் அளித்தது. இஸ்லாமிய வளர்ச்சிக்கு அவர்களின் வீரியத்தை உரமாக்கியது. தெள்ளென அதை நிகழ்த்திக் காட்டினார்கள் நபியவர்கள். நமது இளைய தலைமுறையினருக்கு இதில் நிறைய பாடம் இருக்கிறது; முதிய தலைமுறையினருக்கு அறிவுரை இருக்கிறது.
குர்ஆனின் வசனங்களை எழுத்தில வடிக்கும் பணியில் ஈடுபட்ட ஸைதிற்கு அப்படியே அவ்வசனம் அவரது இதயத்திலும் பசுமரத்தாணியாய்ப் பதிந்தது. அவரது ஆன்மாவும் ஞானமும் புத்துணர்ச்சி அடைந்து விருத்தியடைந்து கொண்டிருந்தன. நபியவர்களிடமிருந்து முதன்முதலாய் வசனம் கேட்கும் வாய்ப்பு அமைந்ததால் ஒவ்வொரு வசனமும் எதற்கு எந்தச் சந்தர்ப்பத்தில் இறங்குகிறது என்ற விஷய ஞானமும் ஸைதிற்கு இயல்பாய் அமைந்து போனது. அவரது மனம் குர்ஆனின் வழிகாட்டுதலால் மிகவும் பிரகாசம் அடைந்து கொண்டிருக்க, அவரது அறிவுத்திறமோ அசாத்தியமாய் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இளைஞர் இளவயதிலேயே அறிஞராகிப் போனார்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் மறைவுற்றபோது ஸைதிற்கு இருப்பத்தோரு வயது இருக்கும். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆனைப் பற்றிய ஞானமுடையவராகவும் அவ்வசனங்களைப் பற்றிய மிகச்சிறந்த மூலாதார விஷயங்கள் அறிந்தவராகவும் ஸைதின் அடையாளம் திகழ்ந்தது. உலக ஞானம் மட்டும் உள்ளவனுக்கு ஏற்படும் குழப்பங்கள் இறைவேத ஞானம் கொண்டவனுக்கு ஏற்படுவதில்லை அல்லவா? அதனால் நெருக்கடியான காலகட்டங்களில் ஆழமாய்ச் சிந்தித்து சிறப்பான முடிவுகளை அவரால் எட்ட முடிந்தது.
அப்படியொரு முக்கிய நிகழ்வும் அவருக்கு அமைந்தது. நபியவர்களின் மரணம் தோழர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நேரம். மாவீரர்களாய் கருதப்பெற்ற உமர், அலீ ரலியல்லாஹு அன்ஹும் போன்றவர்களே தடுமாறி மனதால் பலகீனமடைந்திருந்தார்கள். தாங்கவியலாத கவலையும் சோகமும் அனைவரையும் அப்பியிருந்தன. அடுத்து நமக்கு யார் தலைவர் என்ற மற்றொரு பெரிய கேள்வியும் அவர்களை அச்சுறுத்தியது. அனைவரும் ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்தனர்.
அப்பொழுது பனீ ஸாஇதா சமுதாயக் கூடத்தில் தோழர்கள் குழுமி அடுத்து யாரை முதல் கலீஃபாவாகத் தேர்ந்தெடுப்பது என்று விவாதத்தில் ஈடுபட்டனர். மக்காவிலிருந்து வெளியேறி மதீனா குடியேறிய முஹாஜீரீன்கள், “எங்களில் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், எங்களுக்கே அதற்குரிய தகுதி உள்ளது” என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
“தலைமைப் பொறுப்பில் உங்களைவிட எங்களுக்கே அதிகம் திறமையுள்ளது. அதனால் எங்களில் ஒருவரே கலீஃபாவாக அமைய வேண்டும்” என்றனர் மதீனத்து அன்ஸாரீகள்.
மற்றும் சிலரோ, “நிர்வாகத்தில் எங்களுக்கும் பங்களிக்கப்பட வேண்டும். நபியவர்கள் உங்களில் ஒருவருக்கு ஒரு பொறுப்பை ஒப்படைக்கும்போது அவருடன் எங்களிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் துணையாக ஆக்கிவைப்பதுதானே வழக்கம்” என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.
தெளிவான முடிவை எட்ட முடியவில்லை.
விவகாரம் காரசாரமான நிலையை எட்டிக் கொண்டிருந்தது. அந்நிலையில் அபூபக்ரு (ரலி) எழுந்து நின்று ஆற்றிய உரைதான் ஒருபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மரியாதையுடனும் நடைநயத்துடனும் ஆற்றப்பட்ட உரை அது. மக்கள் மத்தியில் அதைத் தொடர்ந்து விவாதம் உரத்த குரலை அடைய, இறுதியில் உமர் அபூபக்கரை நோக்கி, “கைகளை நீட்டுங்கள்,” என்றார். அவர் நீட்ட, இவர் உடனே அபூபக்ரை கலீஃபாவாக ஏற்று தனது முதல் பய்ஆவை – உறுதிமொழியை – வழங்க நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மக்கள் அதைத் தொடர்ந்து தாங்களும் பிரமாணம் அளித்தனர்.
அந்தக் கூட்டத்தில் அபூபக்ரு, உமர் தவிர மற்றொருவரும் பேசினார். ஸைது இப்னு தாபித்.
“அன்ஸார் மக்களே! அல்லாஹ்வின் தூதரோ (ஸல்) முஹாஜிரீன்களில் ஒருவர். எனவே கலீஃபாவாய் அவர்களிலிருந்தே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படட்டும். நாம் இறைத்தூதரின் உதவியாளர்கள், அன்ஸாரீயீன்கள். எனவே நாம் இறைத்தூதரின் கலீஃபாவிற்கு உதவியாளராக இருப்போம். அவர் உண்மைக்காகப் போரிட நாம் தோள் கொடுப்போம்” என்றவர் அபூபக்ரு சித்தீக் (ரலி) இடம் கையை நீட்டி, ”இவரே உங்களது கலீஃபா இவருக்கு உறுதிமொழி அளியுங்கள்” என்று முடித்தார்.
அதுவும் மதீனத்துத் தோழர்களிடம் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது. ஸைது இப்னு தாபித்தினுடைய ஞானம், அறிவு இவற்றையெல்லாம் அறிந்திருந்த அந்த மக்கள் அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்டனர்.
கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், நிகழ்வுற்ற போர்களில் முதன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்தது பொய்யன் முஸைலமாவுடன் நிகழ்வுற்ற போர். அதுபற்றி சிறிது சிறிதாய் முந்தைய தோழர்களின் வரலாற்றிலேயே ஓரளவு பார்த்துக் கொண்டு வந்தோம். இறுதியில் முஸைலமாவின் முடிவுரை யமாமாவில் மரணத் தோட்டத்தில் வைத்து எழுதப்பட்டதையும் பார்த்தோம். ஆனால் அந்தப் போரில் முஸ்லிம்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்பும் கணிசமானது. வாளையும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி முன்வரிசையில் நின்று போர் புரிந்த முக்கியத் தோழர்கள் பலர் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தவர்கள். இறைவசனம் அவர்கள் இதயத்தில் பதிந்து குருதியில் கலந்து ஓடிக்கொண்டிருந்தது. அதனால் தொழுகையில் முதல்வரிசைக்குப் போட்டியிடுவதைப் போலவே போருக்கும் முதல் ஆளாய் ஓடிப்போய் நின்றார்கள். அவர்களில் பலர் அந்தப் போரில் உயிரிழக்க நேரிட்டது.
நெருக்கமான தோழர்களை இழந்த துக்கம், அவர்களின் வீரமரணத்தை நினைத்து உவகை இந்தக் கலவையான உணர்வுகளையெல்லாம் தாண்டி ஒருவருக்கு பெரும் கவலையொன்று ஏற்பட்டது. அசாத்திய தூரநோக்குக் கொண்டிருந்தவர் அவர். உமர் இப்னு அல்-கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு.
கலீஃபா அபூபக்கரைச் சென்று சந்தித்தார் உமர்.
“இதோ பாருங்கள். நம்முடைய தோழர்களில் இறைமறையை மனனமிட்டிருந்த நிறைய காரீகள் யமாமா போரில் இறந்து விட்டார்கள். அடுத்து நிகழக்கூடிய போர்களிலும் அத்தகையோர் பலரை இழக்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆகவே நீங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து குர்ஆனைத் தொகுக்க ஆணையிட வேண்டும்”
“அது எப்படி? அல்லாஹ்வின் தூதர் செய்யத் துணியாத ஒன்றை நான் எப்படிச் செய்வது?”என்று மறுத்தார் அபூபக்ரு.
“சொன்னால் கேளுங்கள். அல்லாஹ்வின்மேல் ஆணையாக. இது நிச்சயம் நல்லதற்கே”
அபூபக்ரு இணங்கவில்லை. உமரும் விடுவதாக இல்லை. தொடர்ந்து சந்தித்து இதைப்பற்றி அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் உமரின் கோரிக்கையில், அறிவுறுத்தலில் இருந்த நியாயம் முழுவதும் புரிந்தது. அல்லாஹ் அபூபக்ரின் இதயத்தைத் திறந்தான்.
ஸைது இப்னு தாபித்தை வரவழைத்தார் கலீஃபா அபூபக்ரு. வந்து சேர்ந்தார் அவர். அனைத்தையும் கூறினார் அபூபக்ரு. “உம், சரி” என்று கேட்டுக் கொண்டிருந்த ஸைதிற்கு அடுத்து வரப்போவது தெரியவில்லை. கடைசியில் அபூபக்ரு சொன்னார், “நிச்சயமாக நீ புத்திக்கூர்மையுள்ள திறமையான இளைஞன். உனது நடத்தையின் மீதும் செயல்பாட்டின் மீதும் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தவிர இறைத்தூதருக்காக இறைவனின் வசனங்களில் எழுதிய ஒருவருள் பிரதானமானவனல்லவா நீ. எனவே, சிதறிக்கிடக்கும் குர்ஆனின் எழுத்துப் பிரதிகளையெல்லாம் தேடிப்பிடித்து ஒரே தொகுப்பாய் நீதான் தொகுத்துத் தரவேண்டும்”
எந்த முக்கியப் பொறுப்பிற்கும் முந்திக் கொண்டு ஓடாத, மேலும் இறைவன் சம்பந்தப்பட்ட பொறுப்பென்றால் பயந்து பின்தங்கும் சமூகத்தவர்கள் அவர்கள். அவரில் ஒருவரிடம் இத்தகைய பணியை ஒப்படைத்தால்? கிடுகிடுத்துப் போனார் ஸைது.
“ம்ஹும். வேண்டுமானால் ஒரு மலையைக் காட்டுங்கள்; அதை இடம்பெயர்த்து வைக்க வேண்டுமென்று சொல்லுங்கள். எளிதானது செய்து முடிக்கிறேன். இதெல்லாம் நான் தாங்க இயலாத பாரம்”
விடவில்லை அபூபக்ரு. உமர் எப்படி அவருடைய மனதைக் கரைத்தாரோ அதேபோல், பேசிப்பேசி ஸைதின் மனதைக் கரைத்தார். இறுதியில் ஏற்றுக்கொண்டார் ஸைது. எத்தகைய அசகாயப் பணி அது? தேடித் தேடி எடுத்தார். பேரீச்சம் மட்டையிலும், தோலிலும், கற்பலகைகளிலும், பிராணியின் எலும்புகளிலும், தோழர்களின் இதயத்திலும் வடிக்கப்பெற்றிருந்த இறைவனின் வசனங்களை அலைந்தலைந்து சேகரித்தார். அதனுடைய ஒவ்வொரு எழுத்தையும் ஒப்பிட்டுச் சரிபார்த்தது; வசனங்கைளை அடுத்தடுத்து சரியான வரிசையில் வைத்தது; அந்த வசனங்களை அத்தியாயவாரியாய்த் தொகுத்தது என்று அவர் எடுத்தப் பிரயத்தனமெல்லாம் தனியொரு வரலாறு.
ஓர் எழுத்தோ, காற்புள்ளியோ எதுவும் தவறிடவில்லை, அனைத்தும் நூறு சதவிகிதம் சரி என்று ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பெற்றபின் அவையாவும் சுவடிகளில் ஒரு முழு குர்ஆனாய் எழுத்துவடிவில் பரிணமித்தது. அதை அபூபக்ரிடம் ஒப்படைத்தார் ஸைது.
ஸைது நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கலாம். ஆனால் அது அவரது பணியின் முதல் பாகம் மட்டும்தான், கிடைத்திருப்பது இடைவேளை அவகாசம் மட்டுமே என்பதை அப்போது அவர் அறியவில்லை.
கலீஃபா அபூபக்ரு வயது முதிர்ந்தவர்; ஆழ்ந்த ஞானமுள்ளவர். ஸைதோ இளைஞர். ஆயினும் நெருக்கடியான காலகட்டங்களில் ஸைதிடம் ஆலோசனை பெறுவதில் கலீஃபாவிற்கு எவ்வித சங்கடமும் ஏற்பட்டதில்லை. பாகப்பிரிவினை, வாரிசுரிமை சம்பந்தமான கேள்விகள் பிரச்சனைகள் மக்களிடையே எழும்போதெல்லாம், “கூப்பிடு ஸைதை” என்பதுதான் வழமை. குர்ஆன் அமைத்துத் தந்த சட்டப்படி பாகம் பிரித்துத் தருவார் ஸைது. அத்துறையில் அவருக்கு அத்துணை அசாத்தியத் திறமை.
ஸைது தொகுத்துச் சமர்ப்பித்த குர்ஆனின் ஒரே பிரதி, முதலாம் கலீஃபா அபூபக்ருடைய மரணத்திற்குப்பின் உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடம் வந்துச் சேர்ந்தது.
உமரும் ஸைதின் மேல் சரியான அபிப்ராயமும் நன்மதிப்பும் கொண்டிருந்தார். ஒருமுறை டமாஸ்கஸ் நகருக்கு வெளியே அமைந்திருந்த அல்-ஜபியால் எனும் கிராமமொன்றில் உமர் ஒருமுறை குத்பா உரை நிகழ்த்தினார். அதில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைப் பேசியவர், அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். “யாருக்கெல்லாம் குர்ஆன் சம்பந்தமான கேள்விகள் உள்ளனவோ அவர்களெல்லாம் ஸைது இப்னு தாபித்தை அணுகட்டும். யாருக்கெல்லாம் மார்க்க சட்டம் சம்பந்தமான கேள்விகள் உள்ளனவோ அவர்கள முஆத் இப்னு ஜபலை அணுகட்டும். யாருக்கெல்லாம் செல்வம் சம்பந்தமான கேள்விகள் உள்ளனவோ அவர்கள் என்னிடம் வாருங்கள். அல்லாஹ் அதற்கு என்னைப் பொறுப்பாளனாக ஆக்கியுள்ளான். உங்களிடம் அதனைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்துள்ளான்” குர்ஆன் சம்பந்தமான கேள்விகளுக்கு ஸைதை அணுகலாம் என்று பொதுமக்களுக்கு மேடை போட்டு அறிவிக்கும் அளவு பெருமை வாய்ந்திருந்தது ஸைதின் ஞானம்.
உமரின் மறைவிற்குப்பின் குர்ஆனின் மூலப் பிரதி அவரின் மகளும், நபியவர்களின் மனைவியருள் ஒருவருமான அன்னை ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹாவிடம் வந்து சேர்ந்து பத்திரமடைந்தது.
oOo
காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது.
கலீஃபா உமரையும் அவரைத் தொடர்ந்த உதுமான் ரலியல்லாஹு அன்ஹுமாவின் ஆட்சிக் காலங்களின்போது, இஸ்லாம் நாலாபுறமும் பரவி விரவிக் கொண்டிருந்தது. தோழர்களின் வீர பவனியில் ரோம சாம்ராஜ்யமும் பாரசீக சாம்ராஜ்யமும் முஸ்லிம்கள் வசமாகிக் கொண்டே வந்தன. அப்பொழுது ஒரு புதுப்பிரச்சனை வளர ஆரம்பித்தது. அரேபியாவைத் தாண்டிய பகுதிகளில் இருந்த மக்களெல்லாம் அரபு மொழியல்லாதவர்கள். அரபு மொழி பேசும் இதரப் பகுதி மக்களும்கூட அந்தந்தப் பகுதிசார் பேச்சுவழக்குக் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள். நமது தமிழிலேயே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் – ஒரே மாவட்டத்துக்குள்ளேயுங்கூட வித்தியாசம் உள்ளதல்லவா அதைப்போல் அவர்களுடைய அரபி உச்சரிப்பில் பெரும் மாறுதல் இருந்தது. அது உரையாடலுக்கோ இதர தகவல் தொடர்பிற்கோ இடைஞ்சலாய் இல்லை. ஆனால் குர்ஆன் ஓதுவதிலும் அதன் உச்சரிப்பிலும் வித்தியாசம் தோன்றிப் பெருகலானது. மட்டுமல்லாது ஒலிவடிவில் அருளப்பெற்ற இறைமொழி, அவரவர் ஊர்சார்ந்த உச்சரிப்பிற்கேற்ப வரிவடிவ மாறுதலுக்கு உள்ளாக ஆரம்பித்து மக்களிடையே விவாதம் பெரிதாகிவிட்டது.
சிரியா, இராக், அர்மீனியா, அஸர்பெய்ஜான் பகுதிகளில் போரில் ஈடுபட்டிருந்த ஹுதைஃபா இப்ன் அல்-யமான் ரலியல்லாஹு அன்ஹுவிற்கு இந்தப் புதுப்பிரச்சினையைக் கண்டு ஆழ்ந்த கவலை ஏற்பட்டுவிட்டது. இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டுமே என்று எச்சரிக்கையுணர்வு தோன்றி வலுவடைந்தது. மதீனா வந்து கலீஃபா உதுமானைச் சந்தித்தார்.
“அமீருல் மூஃமினீன்! யூதர்கள், கிறித்தவர்கள்போல் நமது சமூகமும் இறைவனது புத்தகத்தில் அபிப்ராயப் பேதம் கொள்வதற்குமுன் தாங்கள் மிக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரச்சனைகளை விரிவாய் எடுத்துரைத்தார்.
அதன் முக்கியத்துவம், அவசரம் அனைத்தும் உடனே புரிந்தது கலீஃபாவிற்கு. சுவடிகளில் தொகுக்கப்பெற்ற குர்ஆன் பிரதி அன்னை ஹஃப்ஸாவிடம் வந்து சேர்ந்தது என்று பார்த்தோமல்லவா? கலீஃபா அன்னைக்குச் செய்தியனுப்பினார். “குர்ஆனின் கையெழுத்துப் பிரதியை தயவுசெய்து கொடுத்தனுப்புங்கள். அதிலிருந்து போதிய நகலெடுத்துக் கொண்டு மீண்டும் பத்திரமாய் அதை உங்களிடம் அளித்து விடுகிறோம்” அன்னை ஹஃப்ஸா கொடுத்துனுப்பினார்.
நகலெடுக்கும் பணிக்கு யாரைப் பொறுப்பாக்குவது?
ஸைது இப்னு தாபித்திற்கு அழைப்பு வந்து சேர்ந்தது. அவருக்கு உதவியாய் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், சயீத் இப்னு அல்-ஆஸ், அப்துர் ரஹ்மான் இப்னுல் ஹாரித் இப்னு ஹிஷாம் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரை ஒரு குழுவாய் நியமித்து ”மூலப்பிரதியிலிருந்து நகலெடுங்கள்” என்று கட்டளையிட்டார் உதுமான்.
விறுவிறுவென வேலை துவங்கியது. எத்தகைய நவீன அச்சு வசதிகளும் இல்லாத அக்காலத்தில் ஒவ்வொரு எழுத்தையும் பிழையென்று எதுவும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துப் பார்த்து எழுதவேண்டிய அசகாயப் பணி துவங்கியது. போதுமான பிரதிகள் தயாரானவுடன் மூலப்பிரதி அன்னைக்கு திருப்பித் தரப்பட்டு, இப்பொழுது புத்தக வடிவத்தில் அத்தியாயவாரியாய் எழுதப்பெற்ற குர்ஆன் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அன்று அருளப்பெற்ற அதே துல்லியத்துடன் ஓர் எழுத்துகூட பிழையின்றி இன்று நம் கைகளில் தவழும் குர்ஆன் நூலிற்குப்பின் ஸைதின் உழைப்பு முதன்மையானது. காலந்தோறும் நிலைத்திருக்க வேண்டிய சேவைக்கு அந்த இளைஞரை தேர்ந்தெடுத்துக் கொண்ட நோக்கத்தினால்தான் அல்லாஹ் அன்று அவருடைய போர்க்கள ஆசையை ஒத்திவைத்தான் போலும்.
தோழர்களும் தாபியீன்கள் என அழைக்கப்படும் தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரும் ஸைதின் மேல் மிகுந்த மதிப்பும் நல்லபிப்ராயமும் கொண்டிருந்தனர். ஞானத்திற்கும் அறிவிற்கும் முன்னுரிமை கொடுத்த சமூகம் அது. இகலோக அந்தஸ்தெல்லாம் உதாசீனம். அபூஹுரைரா, இப்னு அப்பாஸ் போன்ற முக்கியத் தோழர்கள் ஸைதின் மூலமாய் ஹதீத்கள் அறிந்து அறிவித்தது ஒருபுறமிருக்க, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அபூ ஸயீத் அல்குத்ரீ, அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹும்) என்று அவரிடம் குர்ஆன் கற்றவர்களின் பட்டியல் மிக நீளம்.
மாலிக் இப்னு அனஸ் ஒருமுறை ஸைதின் பெருமையை விவரித்தார். “மதீனத்து மக்களுக்கு உமருக்குப் பிறகு ஸைது தலைவராக இருந்தார். ஸைதிற்குப் பிறகு அப்துல்லாஹ் இப்னு உமர் தலைவர்” அதில் அர்த்தம் இல்லாமலில்லை. உமர் (ரலி) ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் மதீனாவின் நிர்வாகத்தை ஸைதின் பொறுப்பில் விட்டுச் செல்வது வழக்கமாயிருந்தது. தவிர யர்மூக் போரில் கைவரப்பெற்ற செல்வங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர் ஸைது.
நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸும் (ரலியல்லாஹு அன்ஹும்) இளைஞர். அசாத்திய ஞானமுள்ள ஒரு நடமாடும் பல்கலை. அவர் ஒருமுறை ஸைது இப்னு தாபித் தன்னுடைய கோவேறு கழுதையில் பயணிக்கத் தயாராவதைக் கண்டு விரைந்து சென்று அதன் கடிவாள வாரை ஒத்தாசையாகப் பிடித்துக்கொண்டார். இக்காலத்தில் வாகனத்தின் கதவை திறந்து உதவுவது மரியாதையான செயலாகக் கருதப்படுவதுபோல் அக்காலத்தில் பிரயாண மிருகத்தை பிடித்து உதவுவது இருந்தது. சங்கடப்பட்டுப்போன ஸைது, “தாங்கள் இதைச் செய்யத் தேவையில்லை, நபியவர்களின் உறவினரே!”என்று தடுக்கப்பார்த்தார். நபியவர்களின் வமிசத்தைச் சார்ந்த உறவினர்களிடம் அளப்பரிய மதிப்புக் கொண்டிருந்தனர் தோழர்கள்.
“பரவாயில்லை, அறிஞர்களை மதிக்கும்படி நாங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம்” என்று பதிலளித்தார் இப்னு அப்பாஸ்.
“அப்படியா, எங்கே உங்களது கரங்களை காட்டுங்கள் பார்ப்போம்” என்றார் ஸைது.
இப்னு அப்பாஸ் தனது கரங்களை நீட்ட அதைக் குனிந்துப் பற்றிய ஸைது முத்தமிட்டுவிட்டு “நபியவர்களின் உறவினரை இவ்விதம் மதிப்பளித்து கௌரவிக்க எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது”
தருக்கு, செறுக்கு, பெருமிதம், தலைக்கணம், அகங்காரம் போன்ற சொற்களின் வாடையே அறியாத ஞானவான்கள் அவர்கள். வேறென்ன செய்வார்கள்?
ஹிஜ்ரி 51ஆம் ஆண்டு மரணமடைந்தார் ஸைது இப்னு தாபித். அவருடன் சேர்ந்து அவரது ஞானமும் உலகை விட்டு நீ்ங்குவது முஸ்லிம்களுக்கு பெருத்த சோகத்தை அளிக்க, தாங்க இயலாமற் விம்மி அழுதனர் மக்கள்.
அபூஹுரைரா கூறினார், ”இன்று நம் சமூகத்து அறிஞர் இறந்துவிட்டார். அல்லாஹ் இப்னு அப்பாஸை நமக்கு அறிஞராய் தேர்ந்தெடுத்து அளித்து ஆறுதல் அளிக்கக் கூடும்”
நபிக்கவி ஹஸ்ஸான் இப்னு தாபித் அந்த இழப்பைக் கவிதையாக வடித்தார்,
ஹஸ்ஸானும் மகன்களும் கவிகளுள் சிறந்தவர்
எனில்,
ஸைதின் வழி யார் நடப்பர்?
மார்க்க அறிவில் நனி சிறப்பர்?
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
சத்தியமார்க்கம்.காம்-ல் 21 செப்டம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை