மனதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்? அவர் எதிர்பார்த்தபடி அவர் வாழ்க்கை அமையவில்லை; அவர் எண்ணப்படி பல
விஷயங்கள் நடைபெறவில்லை என்று அர்த்தம். அவரது மகிழ்வின்மைக்குக் காரணம் தேடினால் அடிப்படை இதுவாகத்தான் இருக்கும்.. எனவே அவர் என்ன செய்கிறார்? தம் மனதில் மகிழ்விற்கு “நோ வேகென்ஸி” போர்டு மாட்டிவிட்டு வருத்தம், சோகம், அயர்வு இப்படி பலவற்றையும் வாடகையே இல்லாமல் குடியமர்த்திக் கொள்கிறார்.
சரி! எதிர்பார்ப்பு என்பது என்ன? அது வயது, பால், வாழ்க்கைத்தரம் போன்றவற்றைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் ஒன்றாகும்.
குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஓர் எளிய வட்டத்திற்குள் நிற்கும் பீட்ஸா, ஐஸ்க்ரீம், வீடியோ கேம்ஸ் இப்படி ஏதாவது ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு நிறைவேறவில்லை என்றால், அடம், அழுகை, பிடிவாதம் இத்தியாதி. ….. எதிர்பார்த்தது கிடைத்துவிட்டால் பார்க்கவேண்டுமே அவர்கள் மகிழ்ச்சியை.
இதையெல்லாம் பார்க்கும் ஒரு பெண் “இதென்ன சிறுபிள்ளைத்தனம்?” என்பார். ஆனால் அவர் எதிர்பார்த்த டிஸைனில் புடவை, நகை கிடைக்கவில்லை அல்லது அதற்குக் கணவர் ஓக்கே சொல்லவில்லை என்றால் மகிழ்ச்சி தொலைந்து முகம், “உம்”.
கணவர்கள் எதிர்பார்ப்பு வேறு ரகம். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நாலு கால் ஆசனம், பணம், பினாமி பெயர்களில் சொத்து என விரியும்.. இப்படி எதிர்பார்ப்பு என்பது எண்ணற்ற வகையில் ஆளுக்கேற்ப மாறுபடும்; அது நிறைவேறாத போது அதற்கேற்ப ஏமாற்றமும் மாறுபடுகிறது; அதற்கேற்ப மன மகிழ்வும் தொலைகிறது.
இவையனைத்தும் உணர்த்தும் உண்மை – நினைத்ததெல்லாம் நிறைவேறிய முழு மனிதரென்று எவருமே உலகில் இல்லவே இல்லை என்பதையே!.
“எனவே கனவான்களே, நான் எப்பொழுது மகிழ்வடைவேன் என்றால்…”என்று ஒரு கால நிர்ணயம் செய்து கொள்வது அபத்தம். உலக வாழ்க்கை முழு நிறைவற்றது என்றானபின், சில சமயம் உற்சாகம், சில சமயம் ஏமாற்றம், சில சமயம் வெற்றி, சில சமயம் தோல்வி என்பது இயற்கை விதி.
“இன்பம் பாதி, துன்பம் பாதி, இரண்டும் சேர்ந்த கலவை நான்” என்பதுதான் வாழ்க்கை.
வாழ்க்கை என்பது நாடக மேடையாக இருக்கலாம். நாமெல்லாம் நடிகர்களாக இருக்கலாம். அதற்காக, நாடகம்போல் அனைத்துக் காட்சிகளும் முடிந்து இறுதியில் சுபம் என்று திரை இழுத்து மூடும்போது கைதட்டி மகிழலாம் என்று காத்திருந்தால், நமது வாழ்க்கை நாடகம் முடிந்திருக்கும். ஏனெனில் அது ஒரே ஒரு காட்சி மட்டுமே. மறுநாள் அடுத்தக் காட்சி கிடையாது.
பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொள்வதுபோல் மகிழ்ச்சி வந்ததும் மகிழ்ந்து கொள்ளலாம் என்பது வாழ்க்கையில் நடக்காது.
மகிழ்ச்சி என்பது ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை நாம் நடந்து போய் அடைவதற்கு.
கவலைகளெல்லாம் முடிந்து, “அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்” என்றும் மகிழ்வடைய முடியாது.
மகிழ்வு என்பது ஒரு தீர்மானம். அந்தத் தீர்மானத்தை நாம் உளமாற எடுக்க வேண்டும். முடிந்தது விஷயம். சிக்கலெல்லாம் அந்தத் தீர்மானத்தை எடுப்பதில்தான்.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நகரும் ஒவ்வொரு வினாடியும் சந்தேகமேயின்றி உணர்த்தும் ஒரு விஷயம் நமது வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறது என்பதைத்தான். பிறந்த நொடியிலிருந்து நமது நெஞ்சில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது “கவுண்ட் டௌன்” (count down) கடிகாரம். அதிலுள்ள ஒரே சௌகரியம், கவுண்ட் டௌன் எண்ணிக்கை நமக்குத் தெரியாது என்பது மட்டுமே. ஆயினும் இதில் நாம் உணர வேண்டியது இப்புவியில் நமது அவகாசம் குறைவு என்பதையே!. புவியின் வரலாற்றையும் இன்னமும் சுற்ற அதற்குள்ள வாய்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது வாழ்க்கை அவகாசம் ஒரு புள்ளி மட்டுமே.
இதைச் சரியானபடி கருத்தில் கொண்டால் போதும். நிகழ்காலத் தருணத்தை, நொடியை உபயோகமாய், மகிழ்வாய் மாற்ற முடியும். இதற்குக் குதர்க்கமாய் அர்த்தம் புரிந்து கொண்டு, “இவ்வளவு தானே அவகாசம்! ஓர் ஆட்டம் ஆடிவிடலாம்” என்று வாழ்க்கையில் கெட்டக் குத்தாட்டம் போட்டால் அடைவது மகிழ்ச்சியில்லை; அது கானல் நீர்!
உலக வாழ்க்கை முழு நிறைவற்றதே. ஆனால் உலகில் அழகும் அற்புதமும் நிறைந்துள்ளன. இறைவன் படைக்கும் போதே நிரப்பி வைத்தவை அவை. எனவே நாம் மகிழ்வாயிருக்க, வரிந்து கட்டி இறங்கி உலகில் அனைத்தையும் செப்பனி்ட்டால்தான் ஆச்சு என்று கவலைப்படாமல், நமது கண்களால் நாம் சரியான கோணத்தில் பார்த்தாலே போதுமானது. அதற்காகத் திருடன் செயினை லவட்டிக் கொண்டு ஓடும்போது, அவன் ஓடும் அழகை ரசிப்பது மடமை. தீமையைத் தவிர், தடு என்பதையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சிந்தனையாளர் கூறினார் – “ஒரு ரகசியம் சொல்கிறேன், நீ மனம் மகிழ வேண்டுமானால், மனம் மகிழ்.”
என்ன புரிகிறது?
யாரும் நம் வீட்டுக் கதவைத் தட்டி “இந்தா மகிழ்வு” என்று இலவச டிவி, வேட்டி, சேலை போல் தரப் போவதில்லை, நாமும் கடைக்குச் சென்று ஒரு கிலோ மகிழ்வு கொடுப்பா என்று வாங்கி வரப் போவதில்லை.
எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்பனவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டு, மகிழ்வு எனும் தீர்மானத்தை மனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனில் மனம் மகிழலாம்.
மனம் மகிழ, தொடருவோம்…
இந்நேரம்.காம்-ல் 08 அக்டோபர் 2010 அன்று வெளியான கட்டுரை
<–ம. ம. முகப்பு–>