முதல் கமலம் – தாருல் இஸ்லாம் பிறந்த கதை

by admin

பா. தாவூத்ஷா தொடங்கி நடத்திய “தாருல் இஸ்லாம்“ எனும் இதழ், இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த இதழ். மிகப்பழமையான இதழ். 38 ஆண்டு தொடர்ந்து வெளிவந்த பெருமைக்குரியது. 1919இல் மாத இதழாகத் தொடங்கி, மாதம் இருமுறை, வாரம், வாரம் இருமுறை, நாளிதழ் என்று வளர்ந்தது. பிறகு மாத இதழாக மாறி 1957இல் நின்றது.

1919இல் “முதல் கமலம்“ என்ற பெயரில் தொடங்கப்பட்டு 12 இதழ்கள் வந்தன. ஓராண்டு ஆனதும், 1920இல் இவ்விதழ் “மறுகமலம்” என்று பெயர் மாற்றப்பட்டது. மேலும் ஓராண்டு ஆனதும் “தத்துவ இஸ்லாம்” என்று மாறியது. 1923 சனவரி முதல் “தாருல் இஸ்லாம்“ என்ற பெயரில் வெளிவந்தது. மலர் – இதழ் எண் மட்டும் முதல் கமலம் தொடங்கியதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டன.

முதல் கமலம்

பா. தாவூத் ஷா வெளியிட்ட முதல் இதழ், “முதல் கமலம்”. இது 1919 சனவரி மாதம் வெளிவந்தது. “கமலம் 1, இதழ் 1, என்று மலர் – இதழ் எண் குறிப்பிடப்பட்டது.

முன் அட்டையில்,

“கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை“ என்ற திருக்குறள் இடம் பெற்றிருக்கிறது.

நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கம்
ஈமான் அல்லது உறுதி

என்று தலைப்பு. இதன் கீழ் மீண்டும ஒரு திருக்குறள் – “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை”.

இதன் அடியில், “இதைத் தங்கள் மித்திரர்களுக்கும் படிக்கக் கொடுங்கள்“ என்ற குறிப்பு.

பின் அட்டையில் ஒரு “விக்ஞாபனம்”. அது –

“தமிழ் நாட்டின் கண்ணுள்ள சுன்னத் ஜமாஅத்தாரின் மேன்மையின் பொருட்டு அதற்குரிய எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டும் என்பது எமது நோக்கம். இந்நோக்கத்துக்கு இணங்க பல காரியங்களும் செய்வதுடன் புத்தகங்கள், பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள், வியாசங்கள், உபன்யாசங்கள் முதலியன செந்தமிழில் இனிய நடையில் அச்சிட்டு இலவசமாய்ப் பரவச் செய்தலும் ஓர் அவசியமான காரியமெனக் கைக்கொண்டிருக்கிறோம். போதிய திரவியம் கிட்டியவுடன் ஒரு வேத பாடசாலை திறப்பதும், ஏழை முஸ்லிம் மாணவர்கட்கு உபகாரச் சம்பளம் கொடுப்பதும் அனுஷ்டானத்துக்குக் கொண்டு வரப்படும். இக்காலத்தில் ஐஸ்வரிய பலமில்லாமல் ஒரு பலனும் கைகூட மாட்டாது. ஆதலின் நம் முஸ்லிம் ஸ்ரீமான்கள் தங்களால் இயன்ற திரவிய சகாயம் செய்தருள்வார்கள் என்று யாம் அதிவினயமாய் விக்ஞாபித்துக்கொள்ளுகின்றோம்.”

ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு

இதை அடுத்து, “Guardian Press, Chennai” என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

அட்டை உட்பக்கத்தில்,

”முஸ்லிம் சங்கத்துக்காக அதன் காரியதரிசியால் பிரசுரிக்கப்பட்டது.

இதன் விலை அரையணா லேபில்.

இப்புத்தகம் வேண்டுவோர் நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கக் காரியதரிசிக்கு அரையணா போஸ்டல் லேபில் ஒன்று அனுப்பிப் பெற்றுக்கொள்ளுவாராக.”

அறிவிப்பு

குர்ஆன் ஷரீபு தமிழ் மொழி பெயர்ப்புடனும் விவரமான உரையுடனும் இச்சங்கத்தாரால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்புத்தகமும், மிக விசாலமான “நாயக மான்மியம்“ என்னும் நபிகள் பெருமானாருடைய ஜீவிய சரித்திரமும், இன்ஷா அல்லா, சீக்கிரம் வெளிப்படுத்தப்படும்.

கு. அமீருத்தீன் சாகிப்,
காரியதரிசசி.

முதல் பக்கத்தில் கட்டுரை தொடங்குகிறது.

கமலம்-1, இதழ்-1 என்று எண்கள்.

பெரிய பிறை, நட்சத்திர அடையாளம்.

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
நஹ்மதுஹு வனுசல்லி அலா ரஸூலிஹில் கரீம்.
நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கத்தில் அதன் ஆரம்ப தினமாகிய 1919ம் ஆண்டு சனவரி மாதம் 1ந் தேதியில் ஷையூர் பா. தாவூத் ஷா சாகிப், பி.ஏ., அவர்களால் உபன்யசிக்கப்பட்டது.

விஷயம்:
ஈமான் அல்லது உறுதி

முகவுரை

இச்சங்கத்தில் விஜயம் செய்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களே!

இன்று நாமெல்லோரும் இச்சபையில் கூடியிருப்பதன் கருத்து இன்னதென்பதும் இச்சங்கத்தின் நோக்கங்கள் இன்ன இன்னதென்பதும் இது வரையில் நீங்கள் கேட்டுவந்த விஷயத்தால் நன்குணர்ந்திருக்கிறீர்கள். இச்சங்கத்தின் நோக்கங்களுக்கிணங்க இச்சிற்றறிவுடையேனாகிய யான் இன்று ஓர் உபன்யாசம் செய்யத் துணிந்திருக்கிறேன். என்னால் இயலாத இப்பெருங் காரியத்தை ஏற்றுக்கொண்ட என்னுடைய மனத்துணிவையும், யான் சொல்லப்போகும் விஷயத்தில் காணப்படும் சொற்குற்றம் பொருட்குற்றம் முதலியவற்றையும் மன்னித்து. விஷயத்தின் சாரத்தை மட்டும் நல்லோர்களாகிய நீங்கள் எல்லோரும் கிரகிப்பீர்களெனத் துணிந்து பின்வருமாறு சொல்ல முன்வந்திருக்கிறேன்.

மதமென்பதென்ன?

பூவுலகின்கண் மானிடவர்க்கத்தில் பிறந்தாரெல்லாரும் பகுத்தறிவுடையவராயிருக்கின்றார் என்பது உலகமறியக் கிடக்கும் உண்மையன்றோ? யுக்திக்குப் பக்கத்தில் குயுக்தியும், தர்க்கத்துக்குப் பக்கத்தில் குதரக்கமும் செய்யக்கூடியவர்கள் அநேகர் காணப்படுகின்றனர்; இப்படிப்பட்ட குதர்க்கமும் குயுக்தியும் செய்யத்தக்கவர் உலகில் இருக்கின்றார்கள் என்பதே மனிதனுக்கு இயற்கையில் பகுத்தறிவு உண்டு என்பதை நன்கு விளக்குகின்றது.

முற்காலத்தில் எவ்வாறாயினும் இக்காலத்தில் பகுத்தறிவுக்கு முரணான விஷயத்தை மனிதர் நம்பும்படி செய்வது அசாத்தியமான காரியமாயிருக்கின்றது. ஆதலின் லௌகிகத்திலேனும் வைதிகத்திலேனும் பகுத்தறிவுக்கு மாறானவற்றை ஏற்றுக்கொள்ளுதல் மனிதபுத்திக்கு ஒவ்வாததாய்க் காணப்படுகிறது. ஆகவே, பகுத்தறிவுக்குப் பொருத்தமுள்ள கருமங்களே இகபர லோகங்களுக்குரிய சுகத்தையும் மேன்மையையும் தரத்தக்கனவாம்.

இத்தகைய பகுத்தறிவுடன் ஆராயப்புகின், “மதம் (மார்க்கம்) என்றாலென்ன?” என்னும் கேள்வி உதிக்கின்றது. மதமாவது, மனிதர்கள் இகலோகத்தில் சர்வ சுகத்தையும் நாகரிகத்தையும் அடைந்து, தங்களுடைய சக்தியை முற்றிலும் முதிர்ச்சி பெறும்படி செய்து, இதன் தொடர்ச்சியாகப் பரலோகத்தில் நித்தியானந்தத்தையும் முத்தி இன்பத்தையும் சதா சான்னியத்தியமாக அடைதற்கு வேண்டிய அனுஷ்டான முறைகளைக் காட்டிக்கொடுக்கும் சன்மார்க்கமாகும்.

“சன்மார்க்கம்” என்றால் அதில் நம்புதற்குரிய சில கோட்பாடுகள் இருந்தே தீருவேண்டும்; ஆயினும் இவ்வாறு நம்பப்படும் கோட்பாடுகள் வெறும் நம்பிக்கையளவில் மட்டும் நில்லாமல் அனுஷ்டானத்துக்கு வரத்தக்கவையா யிருத்தல் அவசியம். அனுஷ்டிக்க முடியாத நம்பிக்கைகள் ஒரு மதத்தில் இருந்தும் அவற்றால் ஒன்றும் பயனில்லை. தாழ்ந்த நிலைமையிலிருப்பவன் ஒருவன் மேன்மைபெற விரும்புவானாயின் அவன் தன்னம்பிக்கைக்குத் தக்க அனுஷ்டானங்களையும் அனுஷ்டித்தல் வேண்டும்.

“அரசனாக ஆதல் வேண்டும், அரசனாக ஆதல் வேண்டும்” என்று மட்டும் ஒருவன் அநேக கோடிமுறை மனதால் நம்பின போதிலும் வாயால் ஜபித்தபோதிலும் அவனுக்கு அப்பதவி எட்டாது; ஆனால் அனுஷ்டானத்துக்கு வரத்தக்க நம்பிக்கைவைத்து அந்நம்பிக்கைக்குத்தக்க அனுஷ்டானமும் (ஏற்பாடு) செய்தால் மட்டுமே கோரிய காரியம் சித்திக்கும். ஆதலின், அனுஷ்டானத்துக்கு வரத்தக்க நம்பிக்கையும் நம்பிக்கைக்குத் தக்க அனுஷ்டானமும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருத்தல் வேண்டும். நம்பிக்கையில்லாத அனுஷ்டானமும் பயன்தராது; அனுஷ்டிக்க முடியாத நம்பிக்கைமட்டும் இருந்தும் பயனுண்டாகமாட்டாது.

ஆதலின், சத்திய சன்மார்க்கத்துக்கு அழகாவது, அனுஷ்டானத்துக்கு வரத்தக்க நம்பிக்கையான கோட்பாடுகள் அதில் பொருந்தி யிருப்பதுதான். ”ஆண்டவனாக ஆய்விடவேண்டும்” என்று ஒருவன் நம்புவானாயின் அஃது அனுஷ்டானத்துக்கு வருதல் கடினம். ஆதலின். அந்நம்பிக்கை வெறும் நம்பிக்கையேயாம். அனுஷ்டானத்துக்கு வரத்தக்க நம்பிக்கையான கொள்கைகளையுடைய மார்க்கம் தான் சத்திய சன்மார்க்கமாகும்; அதைத்தான் நாம் நம்பிப் பின்பற்றவேண்டும்.

இகலோகத்தில் அனுஷ்டிக்க முடியாத நம்பிக்கைகளையுடைய மதம் நம்மதத்தினருக்குச் சம்மதமாகாது. ஆகவே, அனுஷ்டானத்துக்குரிய கொள்கைகளையுடைய மார்க்கம் “இஸ்லாம்” என்பது ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட தன்மையுடைய மார்க்கம் இஃது ஒன்றேயாகும்; இம்மார்க்கத்துக்குரிய பரிசுத்த வேதத்தைப் படிக்கப்புகின், இகலோகத்தில் சுகமடைவதற்கு வேண்டிய இலேசான விதிகளையும், மனித சக்தியை அபாரவிருத்தி செய்து பரலோகத்திலும் சுவர்க்கத்தை அடைந்து மேன்மை பெறுதற்குரிய சுலபமான அனுஷ்டானங்களையும் சிரமமின்றி யாவரும் தெரிந்து கொள்ளலாம்….

என்று தொடர்கிறது.

தகவல் உதவி: தாவூத் சா இலக்கியம், அ.மா.சாமி

Related Articles

Leave a Comment