தோழர்கள் – 08 அபூதர்தா (ரலி)

8. அபூதர்தா (أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ)

தீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் இந்த இரு கோத்திரத்தினருக்கும் இடையில் வெட்டுப்பழி, குத்துப்பழிதான் வாழ்க்கை. சண்டை, சண்டை ஓயாத சண்டை. போர் புரிந்து ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்குக் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூத கோத்திரத்தினரின் கைங்கர்யம் அது. யூதர்களுக்கு அதில் அரசியல் சுயநலம் இருந்தது. அந்த அரேபியர்கள் வேதம் அருளப்படாத, சிலை வணங்கும் மக்கள் எனும் இளக்காரம் இருந்தது. தங்களது ஆளுமையே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும் என்ற நயவஞ்சகம் இருந்தது. இப்படிப் பல.

நபிகள் மதீனா வந்து சேர, இந்த இரு கோத்திரத்தினரும் ஒவ்வொருவராய் இஸ்லாத்தில் இணைய, அதன் பின் அவர்கள் அனைவரும் அன்ஸாரீகள் என்ற பொதுப் பெயரில் அடையாளம் காணப்பட்டனர். நபிகள் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனா வந்து சேர்ந்த அடுத்த நாளே அனைவரும் முஸ்லிமாகிவிடவில்லை. அகபா உடன்படிக்கை பற்றி முன்னர் பார்த்தோமே, அப்படி இரு அகபா உடன்படிக்கைகளின் போது இஸ்லாத்தை ஏற்றவர்கள், பின்னர் தோழர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் செய்தியறிந்து இணைந்தவர்கள் என்று பெரிய அளவில் முஸ்லிம்களின் சமூகம் ஏற்பட்டிருந்தாலும், இதர மதீனாவாசிகள் காலப்போக்கில் படிப்படியாகத்தான் இஸ்லாத்தை ஏற்றனர்.

மேற்சொன்ன கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் உவைமிர். அவர் மதீனா நகரில் நல்லதொரு வியாபாரி. ஏதோ ஒரு கடை வைத்து, வியாபாரம் புரிந்து, நல்ல வருமானம் ஈட்டியபடி அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து சாதகமான நிலை ஏற்பட்டபின், நபிகளும் மற்றும் மக்காவைச் சேர்ந்த தோழர்களும் மதீனா வந்தடைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. அப்போதும் உவைமிர் இஸ்லாத்தில் இணையவில்லை. தனது சிலை வணக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தார். இன்னம் சொல்லப் போனால் அவரது தெருவில் அவரும் அவரது குடும்பமும்தான் இஸ்லாத்தை ஏற்காதவர்கள்.

இந்நிலையில் ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு, ரமளான் மாதத்தின்போது, முஸ்லிம்களுக்கும் மக்காவிலிருந்து படை திரட்டி வந்த குரைஷியர்களுக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்ருப் போர் நிகழ்வுற்றது. ஆயிரத்துச் சொச்சம் குரைஷி வீரர்களை எதிர்க்க முந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம் வீரர்கள் பத்ருப் போருக்கு கிளம்பிச் சென்றதை வேடிக்கைப் பார்த்து வழியனுப்பிவிட்டு, தனது கடைக்கு வந்து வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் உவைமிர்.

எப்பொழுதும்போல் அன்றைய பொழுதும் விடிந்தது. உவைமிர் அதிகாலையிலேயே எழுந்து கொண்டார். அவரது வீட்டின் பிரதான பகுதியில் வீற்றிருந்த அவருக்குப் பிரியமான கடவுளின் சிலைக்குச் சென்று அன்றைய வழிபாட்டை ஆரம்பித்தார். அவரது கடையிலேயே மிகவும் உசத்தியாயுள்ள வாசனைத் திரவியத்தை எடுத்து அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்தார். யமன் நாட்டிலிருந்து ஒருமுறை வந்திருந்த அவரின் வியாபாரத் தோழர் ஒருவர் உவைமிருக்கு விலையுயர்ந்த பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாய் அளித்திருந்தார். இப்பொழுது பட்டு சால்வை அன்பளிப்பாய் அளிப்பது போன்ற பழக்கம் அப்பொழுதே அரேபியாவில் இருந்திருக்கிறது போலும். அந்த அங்கியை எடுத்துச் சிலைக்குப் போர்த்தி பயபக்தியுடன் வழிபட்டார் உவைமிர்.

இதெல்லாம் முடிவதற்குள் பொழுது புலர்ந்து விட்டிருந்தது. சரி, இன்றைய வேலையைப் பார்ப்போம் என்று கடைக்குக் கிளம்பி வெளியே வந்தால் தெருவெங்கும் திருவிழா பரபரப்பு! முஹம்மது நபியும் அவரின் தோழர்களும் குரைஷிப் படைகளை வென்றுவிட்டு மதீனா திரும்பிக் கொண்டிருந்தனர். கூடவே போரில் கைப்பற்றப்பட்ட குரைஷிப் பிணயக் கைதிகளும். கண்ணெதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் உவைமிர். ஆச்சரியமான ஆச்சரியம்! இருப்பினும் கடை திறக்க நேரமாகி விட்டது என்ற கவனம் வந்ததும், சரி, வேலையைப் பார்ப்போம் என்று ஒதுங்கி தன் கடைக்கு நடக்கத் துவங்கியவருக்கு சட்டென்று ஞாபகம் வர, வேகமாய்ப் பின்வாங்கி அந்த முஸ்லிம்களின் அணியில் இருந்த ஓர் இளைஞரைப் பிடித்தார்.

“அப்துல்லாஹ் இப்னு ரவாஹா பத்திரமாய் திரும்பி விட்டாரா?” என்று பதட்டமுடன் கேட்டார்.

அந்த இளைஞரும் இவர் சார்ந்திருந்த கஸ்ரஜ் கோத்திரம்தான். அவரிடமிருந்து உற்சாகமாய் பதில் வந்தது. “ஓ! அவருக்கென்ன? படு வீரமாய்ப் போரிட்டார். போரில் கைப்பற்றிய பெரும் சுமையுடன் பத்திரமாய் வந்து சேர்ந்து விட்டார்”

“அப்பாடா!” என்று திருப்தியாக இருந்தது உவைமிருக்கு. தனிச் சிறப்புமிக்க வரலாறு அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவினுடையது. இங்கு அது முக்கியமல்ல. ஆனால் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பு முக்கியம். அதை மட்டும் கண்டு விடுவோம். நட்பென்றால் நட்பு, அப்படியொரு நட்பு. இருவரும் சகோதர உறுதிமொழியெல்லாம் எடுத்துக் கொண்டனர். “நீயும் நானும் இன்றிலிருந்து அண்ணன்-தம்பி” என்பது போலான உறுதிமொழி. அப்படியொரு நடைமுறை அப்பொழுது அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது. மதீனா நகருக்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவ ஆரம்பித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் உவைமிருக்கு அது சரிவரவில்லை. “எனக்கு என் மதமே போதும்” என்று இருந்து விட்டார். இருந்தாலும் அன்னியோன்ய நட்பு இருவருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால்தான் அந்த அக்கறையான விசாரிப்பு.

உவைமிர் கடையைத் திறந்தார். வேலையாட்கள் வந்து சேர்ந்தார்கள். வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்க அன்றைய வியாபாரம் மும்முரமடைய ஆரம்பித்தது. வேலையில் மூழ்கிவிட்டார் உவைமிர். அதே நேரம் அவரது வீட்டில் ஒரு பிரளயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர் அறியாமலேயே.

உடன்பிறவா சகோதரரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா உவைமிர் மீது அளவற்ற பாசமும் அக்கறையும் கொண்டிருந்தவர். பலமுறை உவைமிரிடம் இஸ்லாத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டார், ஆனால் உவைமிர்தான் அசைந்து கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய ஆற்றாமையாகவே இருந்தது அப்துல்லாஹ்விற்கு. உவைமிரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருமளவு நட்பு இருந்ததால் அன்று ஒரு திட்டத்துடன் உவைமிரின் வீட்டை நோக்கிச் சென்றார் அப்துல்லாஹ். அப்பொழுது அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.

வீட்டு முற்றத்தில் உவைமிரின் மனைவி அமர்ந்திருந்தார். “தங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் சேவகியே!” என்று முகமன் கூறினார் அப்துல்லாஹ். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளதவர்களாய் இருப்பினும் அனைவரும் அல்லாஹ்விற்கு அடிமை தானே என்ற ரீதியில் பொதுவான, மரியாதையான வாழ்த்து அது.

“நும் மீதும் சாந்தி உண்டாவதாக, உவைமிரின் சகோதரரே!” என்று பதில் வந்தது.

“எங்கே உவைமிர்?”

“அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். திரும்பும் நேரம்தான். எப்பொழுதும் வந்து விடலாம்.”

“நான் உள்ளே வந்து உவைமிருக்காகக் காத்திருக்கலாமா?”

“தாராளமாக!” என்று அனுமதியளித்தவர் தனது அறைக்குள் சென்று விட்டார். பின்னர் வேலை, குழந்தைகளை கவனிப்பது என்று அவரது கவனம் திரும்பி சுறுசுறுப்பாகிவிட்டார்.

அவர் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அப்துல்லாஹ், உவைமிரின் பிரத்யேக சாமி சிலை இருந்த பூஜை அறையினுள் நுழைந்தார். தன்னுடன் ஒரு சிறு ரம்பத்தை மறைத்து எடுத்து வந்திருந்தவர், கிடுகிடுவென்று அந்த சிலையைத் துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். “அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது பொய்மையே” என்று சொல்லிக் கொண்டே அந்த சிலையை வெட்டி முடித்தவர், உவைமிரின் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.

இதையெல்லாம் அறியாமல் பின்னர் பூஜையறையினுள் நுழைய நேரிட்ட உவைமிரின் மனைவி, கடவுள் சிலை துண்டு துண்டாக தரையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், கன்னத்தில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். “எனக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டாயே இப்னு ரவாஹா, இப்படி. பேரழிவை ஏற்படுத்திவிட்டாயே!” என்று பலமான அழுகை, அரற்றல்.

சற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தார் உவைமிர். வந்து பார்த்தால், சிலை இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அமர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் அவர் மனைவி. உவைமிரைப் பார்த்ததும் அவரின் கண்களில் பயம் தோன்றியது.

“ஏன், என்ன ஆச்சு?” என்றார் உவைமிர்.

கண்ணீரும் ஆற்றாமையுமாகப் பேசினார், “நீங்கள் கடையில் இருக்கும் போது உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் வந்திருந்தார். பாருங்கள், கடவுள் சிலையை என்ன செய்திருக்கிறார் என்று”

சிலை, தரையில் மரத் துண்டுகளாய் உடைந்து கிடந்தது. உருவமாய் ஒன்றுமே பாக்கியில்லை. கோபத்தில் தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது உவைமிருக்கு. என்னவாவது செய்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை பழி வாங்கத் துடித்தது மனசு. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம் முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்த போதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அது பட்டது. “இந்த சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அது தன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே!” அந்த எண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ புரிந்தது. உடனே அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை சந்திக்கக் கிளம்பி விட்டார் உவைமிர்.

இதுவரை சொல்ல விட்டுப்போன ஒரு சிறு தகவலையும் இங்குக் குறிப்பிட்டுவிட வேண்டும். உவைமிருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தர்தா.

அபூ தர்தாவை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்றார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் உவைமிர் அபூதர்தா. மதீனாவின் முஸ்லிம் ஆணுக்கும் புலம்பெயர்ந்து குடிவந்த முஸ்லிம் ஆணுக்கும் இடையில் சகோதர உறவை ஏற்படுத்தியிருந்தார் நபிகளார். குல வேற்றுமையை நீக்கி, ஒற்றுமையை வலுப்படுத்தவும் பொருளாதாரச் சுமைகளை இலேசாக்கவும் அத்தகைய ஏற்பாடு. அதனால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவிற்குப் பதிலாய் ஸல்மான் அல்-பாரிஸீ அபூ தர்தாவின் சகோதரனாகிப் போனார்.

நுழைந்த அந்த நொடியிலிருந்து நேரெதிர்த் திசைக்குத் திரும்பியது அவரது வாழ்க்கை. என்னவோ தெரியவில்லை, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய நபியின் மீதும் அவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை, வலுவாய், மிக வலுவாய் அவரது ஒவ்வொரு நரம்பினுள்ளும் அசகாய சக்தியுடன் ஊடுருவிப் பாய்ந்து விட்டது.

அபூதர்தாவின் தொழிலோ வியாபாரம். அதில் அவர் கெட்டிக்காரரும்கூட. திறம்பட வெற்றிகரமாய்த் தொழில் நடத்திக் கொண்டிருந்தவர் அவர். வெற்றிகரமான வியாபாரி இயற்கையாய்க் கணக்கிலும் கெட்டியாகத்தானே இருக்க வேண்டும். அதனால் அவர் என்ன செய்தாரென்றால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவுடன் ஓர் ஓரமாய் அமர்ந்து கணக்குப் போட ஆரம்பித்து விட்டார். தனக்கு முன் இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட தன் நண்பர்களையெல்லாம் யோசித்துப் பார்த்தார். எந்தளவு நற்காரியங்கள் அவர்கள் புரிந்திருப்பார்கள், எந்தளவு இஸ்லாத்தைக் கற்றுக் கொண்டிருந்திருப்பார்கள், எந்தளவு குர்ஆனில் தேர்ச்சிப் பெற்றிருப்பார்கள், எந்தளவு இறைவனை வழிபட்டுக் கூலி சேர்த்திருப்பார்கள் என்று கணக்குப் போட்டு, கூட்டக் கூட்ட, தன்மேல் அவருக்கு அளவற்ற கழிவிரக்கமே ஏற்பட்டு விட்டது. புதிதாய்ச் சேர்ந்த தன்னையும் அவர்களையும் ஒப்பிட்டால், இறைவனிடம் அவர்களுக்கு எத்தகைய கூலி சேமிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். “சே! எவ்வளவு தவற விட்டுவிட்டேன் நான். அன்றே இஸ்லாத்தில் சேராமல் போனேனே! நானும் இன்று அவர்களுக்கு இணையான தனவந்தனாகியிருப்பேனே!” என்றெல்லாம் அவர் மனம் அல்லாட ஆரம்பித்துவிட்டது. தனவந்தன் என்றால் பணத்தில் அல்ல! இவரிடம்தான் அது தேவையான அளவு உள்ளதே! விசனப்பட்டது தவறவிட்ட நற்கூலிக்கு.

பணம், காசு பார்த்து வெற்றியடைந்த வியாபாரி அதையெல்லாம் கட்டி ஓரமாக வைத்துவிட்டு, விசித்திரக் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். என்னவென்று சொல்வது அந்த ஈமானை? புரட்டிப் போட்டது அவரது வாழ்வை, அந்தச் சிந்தனையும் கணக்கும். உட்கார்ந்து இப்படி பச்சாதபப்பட்டுக் கொண்டிருந்தால் சரிவராது என்று ஒரு தீர்மானத்துடன் துள்ளி எழுந்தார் அபூதர்தா. இத்தனை நாள் விட்டுப் போனதை எப்படியும் ஈட்டியாக வேண்டும். என்ன செய்யலாம்? குறுக்கு வழியெல்லாம் இல்லை, ஒரே வழி. இரவு, பகலென்று பாராமல், அதிகம், அதிகமதிகம் முயற்சி செய்து இறை வழிபாடு, நற்காரியங்கள் என்று மூச்சுவிடாமல்… இல்லை விடும் மூச்சையும் நற்செயல்களாக மாற்ற வேண்டியதுதான். இதுவே என் வழி என்று முடித்துக் கொண்டார். மிரள வைக்கும் தீர்மானம் அது.

உலக இச்சைகளையெல்லாம் மூட்டை கட்டி எறிந்துவிட்டு இறைவழிபாட்டில் முழு முதற் கவனமும் இறங்கியது. தாகத்தால் உயிர் போகும் நிலையில் இருப்பவன் தண்ணீரை எப்படித் தேடி அலைவான்? அதைப் போல இஸ்லாமியக் கல்வி ஞானத்தை அள்ளி அள்ளிப் பருக ஆரம்பித்தார் அபூதர்தா. அதுவும் சுனை பெருக்கெடுத்து வருவதைப்போல நபிகளாரிடமிருந்து நேரடியாக வரும்போது வேறென்ன வேண்டும்? குர்ஆனை எடுத்து வைத்துக் கொண்டு ஓதினார்; மனனம் செய்தார்; அதன் அர்த்தம் புரிய இறங்கியவர் அதனுள் மூழ்கியே போனார்.

பதவி இச்சைக்கும் அதிகாரத்திற்கும் தொழில் வெற்றிக்கும் பணத்திற்கும் என்றுதானே போட்டி பார்த்திருக்கிறோம். அபூதர்தா தனியானதொரு தளத்தில் தான் நிர்ணயித்துக் கொண்ட ஓர் இலக்கை நோக்கி ஒருவித வெறியுடன் ஓடிக்கொண்டிருந்தார். அதை அறவெறி என்று வேண்டுமானால் சொல்லலாம். ரலியல்லாஹு அன்ஹு!

இப்படியெல்லாம் வாழ்க்கை மாறிப் போனால் ஒரு வியாபாரிக்கு என்ன ஆகும்? தொழிலில் எப்படி கவனம் குவியும்? தனது ஓட்டத்திற்கு வியாபாரம் மிகவும் இடைஞ்சலாகப் பட்டது அபூ தர்தாவிற்கு. கடை, பணம், வேலை, ஊழியம் -என்னது இது? இப்படிக் கல்வியிலும் வழிபாட்டிலும் மனதை லயிக்கவிட மறுக்கிறதே இந்த வர்த்தகம் என்று யோசித்தார். ஒரே முடிவு தான் தோன்றியது. கடையை இழுத்து மூடிவிட்டார்! இலாபகரமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்த கடையை ஏன் மூடிவிட்டார் என்று மக்களுக்குப் புரியவில்லை.

ஒருவர் வந்து கேட்டார், “என்ன அபூ தர்தா இது? ஏன் கடையை இழுத்துப் பூட்டி விட்டீர்?”

சாந்தமாக அவரைப் பார்த்தார் அபூதர்தா. தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா? சொல்கிறேன் வா என்பதைப் போல நினைத்தவர், “இதோ வந்திருக்கிறாரே அல்லாஹ்வின் தூதர், அவரை உணர்வதற்குமுன் நான் வணிகனாய் இருந்தேன். பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் தொழிலையும் இறைவனைத் தொழுவதையும் வழிபடுவதையும் ஒருங்கே செய்துகொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதில் என்ன பிரச்சனை என்றால் நான் நாடியதை என்னால் சரியான முறையில் அடைய முடியவில்லை. அதற்கு என்ன செய்வது? எனக்கு வழிபாடுதான் முக்கியம். அதனால் தொழிலைத் துறந்து விட்டேன். யாருடைய திருக்கரத்தில் எனது உயிர் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன், பள்ளிவாசலின் வாயில் அருகே எனக்கு ஒரு சிறுகடை இருந்தால் போதும். நான் ஏதோ என் வாழ்க்கைக்குத் தேவையான சிறு பொருள் ஈட்டிக் கொண்டு அதே நேரம் ஒருவேளைத் தொழுகையைக்கூடத் தவறவிடாமல் இருந்து விடுவேன்”

எனில் வணிகம் தடுக்கப்பட்டதா? பொருளீட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? என்னவிதமான வாதம் இது என்று நம் மனதினுள் கேள்வி எழுமல்லவா? கேள்வி கேட்டவருக்கும் அந்த ஐயம் எழுந்திருக்கக் கூடும். ஆயினும் அவர் கேட்பதற்குமுன் அபூ தர்தாவே பதில் கூறிவிட்டார்:

“அல்லாஹ் வியாபாரத்தை, தொழிலை தடைசெய்துள்ளான் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அவன் குர்ஆனில் சிலரை விவரித்திருக்கிறானே, ‘அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு அவர்களை வணிகமும் கொடுக்கல்-வாங்கல் செய்வதும் தடுக்கவில்லை’ என்று, அந்தச் சிலரில் நான் ஒருவனாகி விட விரும்புகிறேன்”

தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, வகுப்பிலேயே முதலாவதாக வர வேண்டும்; இல்லையில்லை பள்ளியிலேயே முதலாவதாக வர வேண்டும்; அதுகூட போதாது. மாநிலத்திலேயே முதலாவதாக வரவேண்டும் என்றெல்லாம் மாணவருக்கும் பெற்றொருக்கும் ஓர் இலக்கு, ஆசை, குறிக்கோள் இருக்குமே அது புரிந்தால் இது ஓரளவு புரியும். அவரது மன ஓட்டத்தை அவருடன் ஓடிப் பார்க்க முடிந்தால் மட்டுமே முழுவதும் புரிய முடியும். ரலியல்லாஹு அன்ஹு!

கடையை மூடியதுடன் நிறுத்தவில்லை அவர். உலக வாழ்க்கையின் யதார்த்த இச்சைகளையும் முழுவதுமாய் ஒதுக்கி விட்டார். உலகின் ஆடம்பரம், கவர்ச்சி இதனையெல்லாம் பார்த்து, “நீ வேண்டாம் போ” என்று புறங்கையால் தள்ளிவிட்டு, மிக எளிமையான உணவு, மிக எளிமையான ஆடை, இது போதும் இவ்வுலக வாழ்க்கைக்கு என்று அமைத்துக் கொண்டார். சுமை அதிகமிருந்தால், தான் மேற்கொண்டுள்ள பயணத்திற்கு அது மிகவும் கடினம் என்பது அவருடைய தீர்மானம். அவருடைய தாயார் ஒருமுறை, “என் மகனுக்கு வாழ்க்கையின் அனுபவத்தைப் படிப்பதும் உணர்வதுமே பிடித்தமான ஒரு செயலாகி விட்டது” என்று பெருமிதப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு ஞானத் தேடலே அவர் வாழ்க்கையின் ஓர் அம்சமாகிவிட்டது.

அதெல்லாம் சரி – மனைவி, பிள்ளைகள்? அதுதான் அடுத்த சிறப்பு. அவர்கள் குறைபட்டு அழுததாகவோ, இதென்ன பஞ்சத்தனமான வாழ்க்கை என்று முரண்டு பிடித்ததாகவோ குறிப்புகள் இல்லை. அமைதியாய், அனுசரனையாய் கூடவே வாழ்ந்திருக்கிறார்கள் அவர்களும். எவ்வளவு பெரிய கொடுப்பினை! இப்படியான புதியதொரு வழித்தடத்தில்,

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

கடுமையான குளிரில் மக்கள் வெடவெடத்துக் கொண்டிருந்த ஓர் இரவு. பாலைவனப் பிரதேசமான அரேபியாவில் வெயிலும் கோடையும் எவ்வளவு பிரசித்தமோ அந்தளவு குளிர்கால இரவுகளில் நடுநடுங்க வைக்கும் குளிரும் பிரசித்தம். அபூதர்தாவின் வீட்டிற்குச் சில விருந்தினர் வந்திருந்தனர். வெகு தொலைவிலிருந்து வந்திருக்க வேண்டும். அன்றிரவு அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டனர். அவர்களுக்குச் சூடான உணவு வகைகள் தந்து உபசரித்தார் அபூதர்தா. இரவு வந்து உறங்கும் நேரமும் வந்தது, ஆனால் விருந்தினர்களுக்குப் போர்வை ஏதும் அளிக்கக்படவில்லை. தூங்கும் நேரம் ஆகிவிட்டது. அப்பொழுதும் போர்வை வந்து சேரவில்லை. கடுமையான குளிரில் போர்த்திக் கொள்ளாமல் எப்படி உறங்குவது? காத்திருந்து பார்த்த அவர்களில் ஒருவர், “நான் அவரிடம் சென்று கேட்டு வருகிறேன்” என்று ஆயத்தமாக, மற்றவர்களோ, “வேண்டாம், அபூதர்தா ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறார்” என்று தடுத்தார்கள். இவர் கேட்கவில்லை. அபூதர்தாவின் படுக்கையறையை அடைந்தவர் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார். அங்கே அபூதர்தா படுத்திருக்க, அருகே அவரின் மனைவி அமர்ந்திருந்தார். இருவருக்கும் சேர்த்து போர்த்திக் கொள்ள ஒரே ஒரு துண்டு. அது அந்தக் குளிருக்கு எத்தகைய கதகதப்பும் கொடுக்க இயலாத ஓர் எளிய துணி, அவ்வளவே!

போர்த்திக் கொள்ள கம்பளியோ, போர்வையோ இல்லை என்பது மட்டுமல்ல, வேறு பொருட்கள் என்பதே அங்கே இல்லை. அபூதர்தாவும் அவரின் மனைவியுமே விருந்தினர்போல்தான் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்.

விருந்தினருக்கு ஆச்சரியம் தாளவில்லை. “என்ன இது அபூதர்தா? எங்களை விட அதிகமாய் உங்களிடம் ஒன்றுமில்லையே? உங்களுடைய மற்றப் பொருட்களெல்லாம் எங்கே?” என்றார்.

“ஓ! அதுவா? எங்கள் வீடு வேறிடத்தில் உள்ளது. ஏதாவது கிடைத்தால் அதை நாங்கள் அந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது வழக்கம். வேறு ஏதும் இங்கு இருந்திருந்தால் உங்களுக்குக் கொடுத்து உபசரித்திருப்போம், மன்னிக்கவும்”

“எங்களது அந்த வீட்டை சொன்னேனில்லையா, அதன் பாதை சிரமமானது. அதற்கு அதிகமான பொருட்சுமை இருந்தால் பயணம் சரிப்பட்டு வராது. சுமை குறைவாக வைத்திருப்பவனால்தான் அந்தப் பாதையை எளிதாகக் கடக்க முடியும். அதனால் எங்களது சுமையை மிகவும் குறைத்து விட்டோம், பயணம் எளிதாகும் என்ற நம்பிக்கையில். என்ன ஏதும் புரிகிறதா?” என்றார் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு.

வாயடைத்துப் போனார் விருந்தினர். முற்றிலும் புரிந்தது. அபூதர்தாவின் பாதையும் பயணமும் புரிந்தது. ஒரு வழிப்பயணி, பயணத்தின்போது இடையில் தென்பட்ட ஒரு சிறிய ஓய்விடத்தில் அமர்ந்திருப்பதுபோல் கண்ணெதிரே அவர் அமர்ந்திருப்பது புரிந்தது. “புரிகிறது அபூதர்தா. உங்களது வெகுமதி உங்களுக்கு அருளப்படட்டுமாக!” என்ற பிரார்த்தனையை பதிலாக்கிவிட்டு திரும்பிவிட்டார் அவர்.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

தோழர்களின் வரலாற்றைப் படிக்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் எப்பொழுதுமே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் – பெருக்கல் கணக்கிற்கு வாய்பாடு மனனம் செய்து வைத்துக் கொள்வோமில்லையா அதைப்போல. நமது வாழ்க்கை முறையினாலும் உலக நடைமுறையினாலும் இல்லறம், துறவறம், வீரம், என்பதெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்ற எண்ணங்கள்தாம் நமது மனங்களில் உள்ளன. அதெல்லாம் அல்லாத வேறு பரிமானம் அவர்களுடையது. உலக இச்சையைத் துறப்பது இறைவனுக்காக; இல்லறம் நடத்துவது இறைவனுக்காக; ஒழுக்கம் பேணுவது இறைவனுக்காக! இதற்கெல்லாம் இங்கேயே கூலி கிடைக்கிறதோ இல்லையோ, சேர்த்து வைத்து பெற்றுக்கொள்வோம் மறுமையில் ஒட்டு மொத்தமாக என்று ஆகாயம் தாண்டிய லட்சியப் புள்ளி அவர்களுடையது. அதனால் போர் நடைபெறப் போகிறது இறைவனுக்காக என்று நபிகளிடமிருந்து அறிவிப்பு வந்தால் போதும். வாள், அம்பு, ஈட்டி என்று ஆயுதங்கள் ஏந்தி முதல் ஆளாகத்தான் களத்தில் நின்றார்கள் அவர்கள். அதனால் இஸ்லாத்தினுள் நுழைந்தபின் உலக வாழ்க்கையில்தான் எளிமையின் உருவாய் மாறினாரே தவிர, பின்னர் நிகழ்வுற்ற போர்களில் எல்லாம் நபிகளாருடன் இணைந்து வீர யுத்தம் புரிந்தவர் அபூதர்தா.

எளிமையின் கம்பீரம் அவர்.

நபிகளார், அபூபக்ரு (ரலி) ஆகியோரின் மறைவிற்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரம். உமர், அபூதர்தாவை அழைத்தார். உடனே புரிந்திருந்தால் நீங்கள் தோழர்கள் தொடரை ஒன்று விடாமல் படிக்கக் கூடியவர் என்று பொருள்! ஆம், அதேதான். “சிரியாவிலுள்ள ஒரு மாகாணத்திற்கு உங்களை கவர்னராக அனுப்பப் போகிறேன்” என்றார் உமர். “மாட்டேன்” என்றார் அபூ தர்தா. வற்புறுத்தினார் உமர். இசைந்துக் கொடுக்கவில்லை அபூதர்தா. ஆனால் உமருக்கு உதவும் வகையில் வேறொரு யோசைனையை இறுதியில் சொன்னார்:

“தாங்கள் வற்புறுத்துவதால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களுக்கு குர்ஆனையும் நபிவழியையும் கற்றுக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு இமாமாக நின்று தொழவைக்கவும் வேண்டுமானால் நான் செல்கிறேன்” பட்டம், பதவி இதெல்லாம் வேண்டாம், சேவை மட்டும்தான் செய்வேன் என்பது அதன் சுருக்கம். வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக் கொண்டார் உமர். டமாஸ்கஸ் நகருக்குக் குடும்பத்துடன் கிளம்பினார் அபூதர்தா.

ரோமர்களிடமிருந்து முஸ்லிம்கள் கைப்பற்றிய சிரியா, செல்வவளத்தில் சிறந்திருந்த பகுதி. அங்கிருந்த மக்கள் செல்வமும் சுகபோகமும் ஆடம்பரமுமே வாழ்க்கை என்று சுகித்துக் கொண்டிருந்தனர். மக்கா, மதீனாவிலிருந்து அங்குப் புலம் பெயர்ந்திருந்த முஸ்லிம்களையும் அதில் ஓரளவு ஒட்டிக் கொண்டுவிட்டது. சிரியா வந்தடைந்த அபூதர்தா இதையெல்லாம் கண்டு திகிலடைந்து விட்டார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கைக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது அங்கிருந்த சூழ்நிலை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு “எக்கேடோ கெட்டுப் போங்கள்” என்று இருக்க முடியாது அவரால். அவரால் மட்டுமல்ல, நபித்தோழர்கள் எவராலும் முடியாது. தோழர்கள் அவர்கள்! ரலியல்லாஹு அன்ஹும்.

அன்றிலிருந்து டமாஸ்கஸ் மக்களுக்குச் சிறந்த இஸ்லாமிய ஆசிரியர், ஆலேசாகர் ஆகிப் போனார் அபூதர்தா. மக்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் உரையாற்றுவது, பாடம் நடத்துவது, கடை வீதிகளில் உலாவி அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்துவது, பொறுப்பற்ற முறையில் திரிபவர்களுக்கு ஆலோசனை பகர்வது என்று நொடிப் பொழுதும் வீணாக்காமல் மக்களிடம் நன்மையை ஏவித் தீமையை தடுப்பதே தலையாயப் பணியாகிப் போனார் அவர்.

ஒருநாள் சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது சிலர் குழுமி நின்று ஒரு மனிதனை அடித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருப்பதைக் கண்டு அருகில் சென்றார் அபூதர்தா.

“என்ன பிரச்சினை?”

அவன் ஏதோ ஒரு பாவ காரியம் புரிந்து விட்டிருந்ததை அவரிடம் தெரிவித்தார்கள் மக்கள்.

“அப்படியா? அவன் ஒரு கிணற்றில் விழுந்திருந்தால் நீங்கள் அவனைக் கைத்தூக்கி காப்பாற்றியிருக்க மாட்டீர்களா?” அவர்களிடம் கேட்டார் அபூதர்தா.

“நிச்சயமாக!”

“பிறகு ஏன் இப்படி? அவனைத் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள். அதை விடுத்து அவனுக்கு அறிவுரை கூறுங்கள். அவனது பாவத்தை உணரச் செய்யுங்கள். அவன் தெளிவு பெற்று விடுவான். மேலும் அல்லாஹ் உங்களையெல்லாம் அத்தகைய பாவத்தில் விழுந்துவிடாமல் காப்பாற்றியிருப்பதற்கு அந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்”

“அப்படியானால், உங்களுக்கு அவன் மேல் வெறுப்பு ஏற்படவில்லையா அபூ தர்தா?” என்று கேட்டார்கள் அவர்கள்.

“அவன் செய்த பாவ காரியம் – அதை மட்டுமே நான் வெறுக்கிறேன். அதற்காக அவன் உளம் வருந்துவானாயின், அவனும் எனக்கு சகோதரனே, மற்றபடி அவன் மேல் எனக்கு வெறுப்பு இல்லை” எத்தகைய பக்குவம் அது! எத்தகைய உள்ளார்ந்த ஞானம் இருந்தால் அத்தகைய வார்த்தைகள் வெளிப்படும்!

அடி வாங்கி நைந்துப் போய்க் கிடந்த அந்த மனிதன் காதிலும் அது விழுந்தது. இத்தகைய சொற்கள் அத்தகைய காதுகளில் விழுந்தால் என்ன ஆகும்? அவனது கண்களிலிருந்து பொல பொலவென்று கொட்டியது கண்ணீர். விம்மல்தான் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. “என் பாவத்தை நிச்சயமாக நான் உணர்ந்து விட்டேன். இதோடு இப்பாவத்திற்கு முழுக்கு. இனி இதன் புறம் திரும்ப மாட்டேன்” என்று பாவம் அச் சகோதரனின் உள்ளத்திலிருந்து வெளியேறி, அவனது வாய்வழியே ஓடியது.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

ஒருமுறை இளைஞன் ஒருவன் வந்து அபூதர்தாவைச் சந்தித்தான். “நபிகளாரின் தோழரே! எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்களேன்.” அவரைப் பற்றி அறிந்து மக்கள் தேடித் தேடி வந்து பேசிப் பழகி தெளிவு பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அப்படித் தேடி வந்தவன்தான் அந்த இளைஞனும்.

“மகனே, ஒரு மார்க்க அறிஞனாய் இரு, அல்லது அவருக்கு ஒரு மாணவனாய் இரு, அல்லது மார்க்க அறிவுரைகளை உற்றுக் கேட்பவனாய் இரு. இந்த மூன்றில் ஒருவனாய் இல்லாமல் ஆகிவிடாதே. ஏனெனில் அது உனது அழிவிற்கு வழிவகுத்து விடும்.

“மகனே! பள்ளிவாசலை உனது வீடாகக் கருது. ஏனெனில், ‘இறைவனுக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனுக்கும் பள்ளிவாசல் வீடாகும். அப்படிப் பள்ளிவாசலை வீடாக்கிக் கொள்பவர்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் ஆறுதலையும் கருணையையும் சத்தியமளிக்கிறான். மேலும் அவனது உவப்பைப் பெறும் பாதையில் அத்தகையவர்கள் நடைபோட முடியும் என்றும் அவன் வாக்குறுதி அளித்துள்ளான்’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.”

நமது காலகட்டத்தில் நம்மில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அத்தியாவசியமான அறிவுரை இது! காலா காலத்திற்குமான அறிவுரை!

ஒருநாள் அபூதர்தா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சில இளைஞர்களைக் கண்டார். வெட்டித் தனமாய்க் கதைப் பேசிக் காலங்கழிக்கும் இளைஞர் கூட்டத்தை இன்றும் நாம் பார்க்கிறோமில்லையா? அப்படியான சில வாலிபர்கள் ஓரமாய் அமர்ந்து கொண்டு, சும்மாவேனும் கதைப் பேசிக் கொண்டு, சாலையில் செல்பவர்கள், வருபவர்களையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்றார் அபூதர்தா.

“பிள்ளைகளே! ஒரு முஸ்லிமிற்கு அவனது இல்லமே பாதுகாப்பான புகலிடம். அங்கு அவன் தனது பார்வையையும் ஆசைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இப்படி சாலையோரங்களில் பொழுது கழிப்பதைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் அது அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் உங்களைத் தடுத்து விடும்; வெட்டிப் பேச்சிற்கும் வழிவகுத்து விடும்”

அன்றே இந்த எச்சரிக்கை அவர்களுக்குத் தேவைப்பட்டதென்றால், இன்று?

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அப்பொழுது சிரியாவை நிர்வகித்துக் கொண்டிருந்தார். முஆவியா பின் அபீஸுஃப்யன், நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபாவின் சகோதரர். குர்ஆன் அருளப்பெற்றபோது அதை எழுதப் பணிக்கப்பெற்றவர்களில் அவரும் ஒருவர். சிரியா நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்க உமர் அவரை அமர்த்தியிருந்தார். அவர் தன்னுடைய மகன் யஸீத் இப்னு முஆவியாவிற்கு அபூ தர்தாவின் மகள் தர்தாவை மணமுடிக்க விரும்பினார். யஸீதோ செல்வச் செழிப்பும் வளமையும் சேர்ந்து மாளிகை, சேவகர்கள், வசதி என்று வாழ்ந்து கொண்டிருந்தார். எவ்விதத் தயக்கமுமின்றி அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் அபூதர்தா. அது மட்டும் இல்லை. எவ்வித அந்தஸ்தோ, பிரபல்யமோ இல்லாத ஓர் எளிய முஸ்லிம் வாலிபனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அந்த இளைஞனின் நடத்தையும் குணமுமே அவருக்குப் போதுமானதாயிருந்தது.

இவ்விஷயம் பொதுமக்கள் மத்தியில் பெரிய செய்தியாகிப்போய், மக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். “கேட்டாயா செய்தியை! அபூதர்தாவின் மகளை யஸீத் இப்னு முஆவியா மணந்து கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் அதை மறுத்துவிட்டு பொதுமக்களில் ஒரு சாதாரண ஆளை மருமகனாக்கிக் கொண்டாராம் அவர்”

பேசிப் பேசி பொறுக்க முடியாமல் அபூதர்தாவிடமே கேட்டு விட்டனர் சிலர். “ஓ அதுவா! என் மகளுக்குச் சிறப்பான வாழ்க்கையை நான் நாடினேன். அதனால்தான்” என்று பதில் வந்தது. யஸீதிடம் இல்லாத சிறப்பா? அவருடைய தகப்பனார் முஆவியாவிடம் இல்லாத சிறப்பா? புரியவில்லை மக்களுக்கு.

“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?”

“யோசித்துப் பாருங்கள். இட்ட ஏவலை செய்து முடிக்கக் காத்திருக்கும் அடிமைகள் திடீரென்று என் மகளுக்குக் கிடைத்தால் என்னாவது? பளிச்சிடும் மாட மாளிகை வாசம் அவளுக்கு அறிமுகமானால் அது அவள் மனதில் எத்தகைய கிலேசத்தை உண்டு பண்ணும்? இவையெல்லாம் அவளுடைய ஈமானுக்கு எத்தகைய கேடு விளைவிக்கும்? என்னாவாள் என் மகள்? புரியவில்லையா உங்களுக்கு?”

ஒவ்வொருவரும் ஏங்கிக் காத்துக் கிடக்கும் வாழ்க்கை வாசல் தேடி வந்து விழ, அது அபாக்கியம் என்று கருதி ஒதுக்கித் தள்ளிவிட்டு, எளிய குடிலுக்குத் தன் மகளை மருமகளாக்கி அனுப்பி வைத்தார் தர்தாவின் தந்தை. ஆம்! அதுதான் சிறந்தது என்று வாழச் சென்றார் மகள்.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

ஒருநாள் மதீனாவிலிருந்து சிரியா புறப்பட்டு வந்தார் அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப். முஸ்லிம்கள் நலன், தன் அதிகாரிகள் செயல்பாடுகள் இதெல்லாம் நேரில் கண்டறிவது அவரது நோக்கம். ஸயீத் இப்னு அம்ரு வரலாற்றிலேயே இதைப் படித்தது நினைவிருக்கலாம். அபூதர்தாவைச் சந்திக்க அவரது இல்லத்திற்கு இரவு நேரமொன்றில் வந்தடைந்தார் உமர்.

வீட்டுக் கதவின் மீது தட்டுவதற்குக் கைவைத்தால், அது உடனே திறந்து கொண்டது. அக்காலத்திலேயே தானியங்கிக் கதவுகளா? என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. என்னவென்றால் வீட்டின் கதவிற்குத் தாழ்ப்பாளே இல்லை! அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார் கலீஃபா. நுழைந்தால் ஒரே கும்மிருட்டு, ஒரு விளக்கொளியும் இல்லை. அபூதர்தா, உமரை வரவேற்று அமர வைத்தார். நாற்காலியெல்லாம் ஏதுமில்லை, சும்மா வெறும் மண்தரைதான். இருவரும் இருட்டில் சௌகரியமாய் அமர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமலேயே பழைய நட்பில் அளவளாவ ஆரம்பித்து விட்டனர்.

பேசிக் கொண்டே உமர் கையால் துழாவியபோது அபூதர்தாவின் தலையணை அகப்பட்டது. அது வேறொன்றும் இல்லை, குதிரைச் சேனம்! அதுதான் தலையணையாம். சரி தரையில் ஏதும் சமுக்காளம் இருக்குமோ என்று துழாவினார் உமர். தரையில் கூழாங்கற்கள்தான் கையில் பட்டன. அபூதர்தாவின் உடலைப் போர்த்தியிருந்த துணியும்கூட டமாஸ்கஸ் நகரின் கடுங்குளிரில் இருந்து காக்க இயலாத மெல்லியதொரு துணிதான்.

அதிர்ந்து போனார் உமர்! எளிய வாழ்க்கை வாழும் உமருக்கே அது அதிர்ச்சியாய் இருந்தது. “அல்லாஹ்வின் கருணை உம் மேல் பொழிவதாக! என்ன இது அபூதர்தா? இதை விட சௌகரியமாய் வாழ்வதற்கு நான் உமக்கு பொருள் வழங்கவில்லையா? நான் உமக்குப் போதிய பணம் அனுப்பவில்லையா?” தான் மிகவும் சொற்பத் தொகையை அவருக்கு அனுப்பி வருகிறோமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது கலீஃபாவிற்கு.

நிதானமாய் பதில் கேள்வி கேட்டார் அபூதர்தா: “அல்லாஹ்வின் தூதர் நமக்குத் தெரிவித்த ஒன்று உமக்கு ஞாபகமிருக்கிறதா?”

நிறையத் தெரிவித்திருக்கிறார் நபிகளார். அபூதர்தா எதைக் குறிப்பிடுகிறார் என்பது உமருக்கு விளங்கவில்லை. அதனால், “என்ன அது?”

“பிரயாணத்தில் இருப்பவர்கள் தேவைக்கு அதிகமாய் உலகாதாயப் பொருட்களைச் சுமக்க வேண்டாம் என்று அவர்கள் நமக்குத் தெரிவிக்கவில்லை? அவர்களுடைய மரணத்திற்குப் பின் நாம் என்ன செய்கிறோம் உமர்?”

வெடித்துவிட்டார் உமர். பீறிட்டெழுந்தது அழுகை அவருக்கு! அபூதர்தாவும் அழ ஆரம்பித்து விட்டர். முஸ்லிம் சமூகம் எப்படி உலக வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிட்டது என்பதை நினைத்து விசனப்பட்டு, விடியும்வரை அழுது கொண்டிருந்தார்கள் அந்த இரு எளிய தோழர்கள். உத்தேசம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே, அரதப் பழசான சொகுசுக்கு அடிமையாகப்போன அந்த மக்களை நினைத்தே அவர்கள் அழுதார்கள் என்றால், நம்முடைய இன்றைய நிலையை என்னவென்று சொல்வது?

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

உமர் இப்னுல் கத்தாபின் மறைவிற்குப் பிறகு உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, ‘காழீ’ எனப்படும் இஸ்லாமிய நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் அபூதர்தா. முஸ்லிம்களிடம் பெருகிவந்த செல்வம் அவர்களை ஆடம்பர வாழ்க்கைக்கு மேலும் மேலும் தூண்டி வருவது கண்கூடாய்த் தெரிந்தது. நபிகளாரின் காலத்திலும் அப்பொழுது அவர்களுடன் வாழ்ந்து மறைந்த தோழர்களும் எப்படியான எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று ஓயாமல் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் அபூதர்தா. எந்தக் காலத்தில் நல்ல அறிவுரை இனித்திருக்கிறது? “என்ன இந்த முதியவர்? இறைவன் அள்ளிக் கொட்டும் வசதிகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் போடச் சொல்லுகிறாரா?” என்பதுபோல சலிப்படைந்தனர் மக்கள். அவர்களது சுகபோக உல்லாச வாழ்க்கைக்கு இவரது அறிவுரை இடைஞ்சலாகத் தோன்றியது.

பார்த்தார் அபூ தர்தா. ஒருநாள் மக்களைப் பள்ளிவாசலுக்கு வந்து குழுமச் சொன்னார். அவர்கள் வந்து சேர்ந்ததும் எழுந்து நின்றார், உரத்து உரையாற்றத் துவங்கினார்.

“டமாஸ்கஸ் நகர மக்களே, நீங்களெல்லாம் எங்களுக்கு இஸ்லாமியச் சகோதரர்கள், அண்டை தேசத்துக்காரர்கள், நம் நண்பர்கள், நம் எதிரிகளுக்கு நீங்களும் எதிரி. எனக்கு உங்களிடமிருந்து யாதொன்றும் வேண்டாம். நீங்கள் எனது செலவினங்களுக்காக எதுவும் செலவு செய்ய வேண்டியதும் இல்லை. நான் அளிக்கவிருக்கும் அறிவுரைகள் இலவசம். உங்கள் மீது நான் கொண்டுள்ள அக்கறையையும் ஆலோசனையையும் நீங்கள் மறுத்து ஒதுக்க மாட்டீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

எனக்குச் சொல்லுங்கள். உங்கள் மத்தியில் மார்க்க அறிஞர்கள் வயது முதிர்ச்சியுற்று இறந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் உங்களின் இளைஞர்கள் யாரும் அவர்களிடமிருந்து கல்வி கற்று அவர்கள் இடத்தை நிரப்பத் தயாராகவில்லை?

அல்லாஹ் உங்களுக்குத் தேவையானதை வாரி இறைத்திருக்கிறான். நீங்களோ மேலும் மேலும் செல்வம் சேர்ப்பதில்தான் உங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் அவனுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை ஒதுக்கி வைத்து விட்டீர்கள்?

ஏன் உபயோகப்படுத்த வாய்ப்பில்லாத பொருட்களாய்ச் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் வசிக்கும் தேவைக்கு மீறிய அளவு, வீடுகளை பிரம்மாண்டமாய்க் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஆனால், மறுமையில் சொர்க்கத்தை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள், அதற்கென ஆயத்தம் ஏதும் செய்து கொள்ளாமலேயே!

உங்களுக்கெல்லாம் முன் சமூகங்கள் உங்களது சமூகத்தைப் போன்றே வாழ்ந்திருந்தன. அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தாங்கள் விரும்பியது கிடைத்து விடும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்கள் சேமித்து வைத்ததெல்லாம் யாதொரு மதிப்பும் இல்லாது போய்விட்டது. அவர்களது நம்பிக்கையெல்லாம் எவ்விதப் பயனுமின்றி முடிந்தது. மேலும் அவர்களது இல்லங்களோ மண்ணறையைப்போல உயிரற்றுப் போனது.

உங்களுக்கு முன் வாழ்ந்திருந்தது பிரம்மாண்டமான ஆத் எனும் சமூகம். அவர்கள் நிலங்களெங்கும் தங்களது செல்வத்தையும் சந்ததியையும் நிரப்பி வைத்திருந்தனர். இப்பொழுது, அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து இரண்டு திர்ஹம் பெருமானமுள்ள ஏதும் மிச்சமுள்ளதா? கொண்டு வந்து என்னிடம் தாருங்கள் பார்ப்போம்”

உண்மையிலேயே உணர்ச்சிகரமான உரை அது. அனைவரின் உள்ளங்களையும் தொட்டுவிட்டது. அவர் பேசி முடிக்கும் போது பள்ளிவாசலினுள் இருந்த மக்கள் கண்ணீர் விட்டு அழுத ஒலி எவ்வளவு பலமாய் இருந்ததென்றால் அவர்களின் விம்மல் பள்ளிக்கு வெளியில் கேட்டது.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

சிரியா நாட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது சைப்ரஸ் (Cyprus) தீவு. முஸ்லிம்களுடனான போரில் தோற்றிருந்த ரோமப் படையினர் அத்தீவிற்குத் தப்பிச் சென்று அதனைத் தங்களது கப்பற்படையின் தலைமையகமாக ஆக்கிக் கொண்டு போர்க் கருவிகளையெல்லாம் சேமித்து வைத்திருந்தனர். உமர் இப்னுல் கத்தாப் இறந்து போவதற்கு முன்னரே அதனைக் கைப்பற்ற முஆவியா திட்டமிட்டிருந்தார். அப்பொழுது அது நடைபெறவில்லை. பின்னர் உதுமான் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் சைப்ரஸ் மீது படையெடுப்பதற்கு அனுமதியளித்தார். கடல் தாண்டி நடைபெறவிருந்த போர் அது. பாலையிலும் நிலத்திலும் போர் புரிந்திருந்த முஸ்லிம் படைகளுக்கு இது நிச்சயமாய் மிகப் பெரிய சவாலான படையெடுப்பு. அதனால் யாரையும் வற்புறுத்தி படையெடுப்பில் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார் உதுமான். ஆனால் முக்கியமானவர்கள் அடங்கிய வீரர்கள் குழுவொன்று அதற்கு ஓடோடி முன் வந்தது. அப்துல்லாஹ் பின் ஃகைஸ் தலைமையில் படகில் ஏறி கடலில் கிளம்பிய படையில் அபூதர் அல் கிஃபாரீ, ஷத்தாத் இப்னு அவ்ஸ், உபாதா இப்னு ஸாமித், அவருடைய மனைவி உம்மு ஹரம் பின்த் மில்ஹான் ஆகியோருடன் அபூதர்தாவும் முக்கிய வீரர். வெற்றிகரமாய் முடிவுற்ற அப்போர் சைப்ரஸை முஸ்லிம்கள் வசமாக்கியதால் அதன் பின்னர் கான்ஸ்டன்டினோபில் (Constantinople) நோக்கி முஸ்லிம் படைகள் முன்னேற வாசலை அகலத் திறந்து கொடுத்தது. ஹிஜ்ரீ 28-29ஆம் ஆண்டு அப்போர் நடைபெற்றது.

ஏராளமான பொருட்கள் போரில் கைப்பற்றப்பட்டன. நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமாகின. அதையெல்லாம் கண்ட அபூதர்தா அழ ஆரம்பித்து விட்டார். ஜுபைர் இப்னு நாஃபிர் என்பவர், “என்ன அபூதர்தா, அல்லாஹ் இஸ்லாத்திற்கு சக்தியும் வெற்றியும் அளித்திருக்கும்போது என்ன காரணத்திற்காக அழுகிறீர்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

“ஜுபைர்! அல்லாஹ்வோ வெற்றிமேல் வெற்றி அளிக்கிறான். வெற்றியும் ஆட்சியும் மேலோங்கி, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்கத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாகிவிட்டால் எத்தகைய அற்பர்களாய் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் மாறிவிடுவார்கள்?”

‘நேற்று மாட்சிமையுடன் ஆட்சி புரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இறைவனை அறியாமல் மறந்து, அகங்காரத்தில் இருந்ததால் இன்று முஸ்லிம்களிடம் தோற்றார்கள். அதைப் போன்ற மனோநிலைக்கு முஸ்லிம்களும் ஆளானால் இன்றைய வெற்றி அவர்களுக்கு நாளை என்னவாகும்?’ என்ற எண்ணம் ஏற்பட்டபோது அழுதார் அபூதர்தா. நியாயமான அழுகை! ஆச்சரியமான தீர்க்க தரிசனம்!

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

சொச்ச காலமும் டமாஸ்கஸ் நகர மக்களுக்குக் குர்ஆனை போதித்தவாறு தொடர்ந்த அபூதர்தாவின் வாழ்க்கை, அவரது 72ஆவது வயதில் இறுதி நிலையை அடைந்தது. மரணப் படுக்கையில் கிடந்த அவரைச் சந்திக்க வந்தனர் அவரது நண்பர்கள்.

“எதனால் நோய்வாய்ப்பட்டீர் அபூதர்தா?” என்று அக்கறையுடன் விசாரித்தனர்.

“எனது பாவங்களினால்” என்று பதில் வந்தது.

“நீர் ஏதாவது விரும்புகிறீரா?”

“ஆம்! என் இறைவனின் பாவமன்னிப்பை”

பிறகு அவர்களிடம் வேண்டினார். “என்னை உச்சரிக்க வையுங்கள், ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அவனுடைய தூதர் ஆவார்கள்’. இதை நான் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதவுங்கள்”

உச்சரித்தார். தொடர்ந்து உச்சரித்தார். உச்சரித்துக் கொண்டே உயிர் துறந்தார் அபூதர்தா. ரலியல்லாஹு அல்ஹு!

முடிந்தது அவரது இவ்வுலக வாழ்க்கை. அது ஹிஜ்ரீ 32.

அவ்ஃப் பின் மாலிக் அல்-அஷ்ஃபயி என்றொரு தோழர் இருந்தார். வீரஞ்செறிந்த போர் வீரர். முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றியபோது தனது இனத்தின் கொடியை அதன் சார்பாய் எடுத்துக் கொண்டு மக்காவினுள் நுழைந்தவர். பிற்காலத்தில் இவர் சிரியாவிற்குக் குடிபெயர்ந்து அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் அபூதர்தாவின் மறைவிற்குப்பின் ஒருநாள் கனவொன்று கண்டார்.

மிகவும் விசாலமான பசும்புல் நிலம். அதில் நிழல் தரும் வகையில் பலவித மரங்கள். அந்த நிலத்தின் நடுவில் கவிகை மாடக் கூடாரம். தோலினால் ஆன அந்தக் கூடாரத்தின் வெளியே அவரது வாழ்நாளிலேயே கண்டிராத வகையில் அழகான செம்மறியாட்டு மந்தை.

“யாருடையது இது?” என்று கேட்டார் இப்னு மாலிக்.

“அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபினுடையது” என்று யாரோ பதில் கூறினார்கள். திடீரென்று கூடாரத்தின் உள்ளிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் எட்டிப் பார்த்தார்.

“இது, எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு குர்ஆனில் வாக்குறுதி அளித்தவை. அதோ தெரிகிறதே அந்தப் பாதையின் மீது ஏறிச் சென்றால் நீர் கற்பனைகூட செய்து பார்த்திராதவற்றை கண்ணுறுவீர், செவியுறுவீர்”

“அது யாருக்குச் சொந்தமானது அபூமுஹம்மது?” அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம் கேட்டார் இப்னு மாலிக்.

“எல்லாம் வல்ல அல்லாஹ் அதனை அபூதர்தாவிற்காகத் தயாரித்து வைத்துள்ளான். ஏனெனில் அவர் உலகில் வாழும்போது தனது இரு கைகளாலும் தனது முழு சக்தியையும் கொண்டு உலகப் பொருட்களையெல்லாம் தள்ளிவிட்டுக் கொண்டே வாழ்ந்திருந்தார்”

மாபெரும் சேமிப்பொன்றின் அளவற்ற செல்வந்தனாகிப் போனார் அபூதர்தா. நம்மால் கற்பனைகூட செய்ய இயலாத செல்வம் அது.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 10 மே 2010 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment