48. அப்துல்லாஹ் பின் ரவாஹா (عبد الله بن رواحة)
காலையிலிருந்து மிக மும்முரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். முஸ்லிம்கள் தரப்பில் படையைத் தலைமைத் தாங்கிய முதலாமவரும் இரண்டாமவரும் ஒருவர் பின் ஒருவராக ஷஹீதாகி இருந்தனர். அடுத்து ஒருவரிடம் படையின் தலைமைப் பொறுப்பு வந்தது. படை கிளம்பும்போதே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி அனுப்பியிருந்தார்கள்; முதலாமவர் கொல்லப்பட்டால், அடுத்து யார் படைத் தலைவர், அதற்கு அடுத்து யார் படைத் தலைவர் என்று தெளிவான கட்டளை இடப்பட்டிருந்தது. ஆயுதமேந்தி விடைபெற்றுக் கொண்ட முஸ்லிம் படையினரும் அதன் அர்த்தத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொண்டுதான் கிளம்பியிருந்தார்கள் – இந்தப் போரில் மரணமடைவதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம் என்பதை. அதனால் என்ன? வெற்றி; இல்லாவிட்டால் உயர் பதவி என்ற திருப்தி நெஞ்சில் திடம் வளர்த்திருந்தது.
மும்முரமான போர் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் அதன் தீவிரம் சொல்லிமாளாத உக்கிரம். உணவு என்று ஏதாவது வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ளக்கூட முஸ்லிம்களுக்கு நேரமின்றிப் போயிருந்தது. தலைமையேற்றிருந்த மூன்றாமவரின் உறவினர் ஒரு துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டு அவரிடம் ஓடிவந்தார்.
“இதைச் சாப்பிட்டுக் கொஞ்சம் தெம்பேற்றிக்கொள்ளுங்கள். இன்றைய போரில் உங்களது உடல் மிகவும் களைப்புற்றுவிட்டது.”
அதை வாங்கிச் சிறிது கடித்துச் சுவைத்திருப்பார். போர்க்களத்தின் ஓசையும் இரைச்சலும் காதில் விழுந்தன. “நான் இன்னுமா இந்த உலகில் இருக்கிறேன்?”
‘சகோதரர்கள் அங்கு உயிரைப் பணயம் வைத்திருக்க இங்கு என்ன இன்னும் ஆற அமர உணவு!’ என்று அந்த இறைச்சியைத் திருப்பித் தந்துவிட்டுக் களத்தில் குதித்தார் அவர் – அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. ரலியல்லாஹு அன்ஹு.
oOo
அகபா உடன்படிக்கையிலிருந்து ஆரம்பிப்போம். இரண்டாம் அகபா உடன்படிக்கையின்போது பங்குபெற்ற 73 ஆண்களுள் முக்கியமான மற்றொருவர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹுவின் தாய்மாமன். அகபா உடன்படிக்கை முடிந்தவுடன் அவர்களுக்குப் பன்னிருவரைத் தலைவராக நியமித்தார்கள் நபியவர்கள். அவர்களுள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவும் ஒருவர். அத்தகு தகுதியும் பெருமையும் வீரமும் அவருக்கு அப்போதே வாய்த்திருந்திருக்கின்றன. தவிர, வேறு சில சிறப்புகளும் குறிப்பிடும்படியானவை.
அக்காலத்தில் எழுதவும் படிக்கவும் ஆற்றல் குறைந்திருந்த அரபிகள் மத்தியில், ‘இவருக்கு எழுதப் படிக்கத் தெரியுமாம்’ என்று மக்கள் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவுக்கு அந்த ஆற்றல் இருந்திருக்கிறது. அப்புறம் கவித்திறன். நபியவர்களே மகிழும் அளவிற்குக் கவிதைகள் புனைந்திருக்கிறார். இவை யாவற்றிலும் விசேஷமானது யாதெனில் தாம் கொண்டிருந்த அத்தனை தகுதிகளையும் இஸ்லாத்திற்காக அவர் திறம்பட உபயோகித்ததுதான்.
‘அகபா உடன்படிக்கை முடித்து, மக்கள் யத்ரிபுக்குத் திரும்பினார்கள்; முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு உடன் வந்தார்; இஸ்லாம் யத்ரிபில் பரவலாய், ஆழமாய் மீளெழுச்சி பெற்றது; பின்னர் நபியவர்களும் முஸ்லிம்களும் சிறுகச் சிறுக யத்ரிபுக்குப் புலம்பெயர்ந்தார்கள்; யத்ரிப் மதீனாவானது’ என்பனவெல்லாம் தோழர்கள் வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களிலிருந்து நாம் அறிந்த ‘வரலாற்றுச் சுருக்கம்’. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்வுற்ற மிக முக்கியப் போரான பத்ருப் போரும் நமக்குத் தெரியும். அப்பொழுது களமிறங்கிய முந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம்களுள் இப்னு ரவாஹாவும் ஒருவர். அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் அந்தச் செய்தியை மதீனாவில் அறிவிக்க ஸைது இப்னு ஹாரிதாவையும் இப்னு ரவாஹாவையும்தாம் அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள்.
மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முஹாஜிர்கள், மதீனத்து அன்ஸார்கள் என்று இரண்டறக் கலந்து உருவாகியிருந்த புதுச் சமூகத்தில் உறுப்பினராகிவிட்ட இப்னு ரவாஹாவுக்குப் பெரும் வருத்தம் ஒன்று இருந்தது. அவருடைய உற்ற நண்பர் அபூதர்தாவைப் பற்றிய கவலை.
அபூதர்தா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இருவரும் நீண்ட நெடுங்காலமாய் இணைபிரியா நண்பர்கள். இப்னு ரவாஹா இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே இருவரும் தோழமையில் சகோதர உறுதிமொழி எடுத்துக் கொண்டு, “நீயும் நானும் இன்றிலிருந்து அண்ணன்-தம்பி” என்று ஆகிவிட்டனர். அப்படியெல்லாம் ஒரு நடைமுறை அக்காலத்தில் அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது. மதீனா நகருக்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவ ஆரம்பித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் அபூதர்தாவோ “எனக்கு என் மதமே போதும்” என்று இருந்து விட்டார். இருவருக்கும் இடையிலான அணுக்கமான நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.
அகபா உடன்படிக்கை முடித்து வந்ததும் தம் உடன்பிறவாச் சகோதரரான அபூதர்தாவிடம் இஸ்லாத்தைப் பற்றி இப்னு ரவாஹா எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் அபூதர்தா அசைந்து கொடுக்கவில்லை. இதுதான் இப்னு ரவாஹாவின் ஆற்றாமையும் கவலையாகவும் இருந்தது. ‘நான் மெய்மார்க்கம் கண்டேன். உய்வடையப் போகிறேன். வந்தால் வா! இல்லை எக்கேடோ கெட்டுப்போ’ என்று அவரால் தம் நண்பரை விட்டுவிட இயலவில்லை. அபூதர்தாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருமளவு நட்பு இருந்ததால் ஒருநாள் மனத்தில் ஒரு திட்டத்துடன் அபூதர்தாவின் வீட்டை நோக்கிச் சென்றார் அப்துல்லாஹ். அப்பொழுது அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்பது அப்துல்லாஹ்வுக்குத் தெரியும்.
வீட்டு முற்றத்தில் அபூதர்தாவின் மனைவி அமர்ந்திருந்தார். “தங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் சேவகியே!” என்று முகமன் கூறினார் அப்துல்லாஹ். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளதவர்களாய் இருப்பினும் அனைவரும் அல்லாஹ்வுக்கு அடிமைகள்தாமே என்ற ரீதியில் பொதுவான, மரியாதையான வாழ்த்து அது.
“நும் மீதும் சாந்தி உண்டாவதாக, அபூதர்தாவின் சகோதரரே!”
“எங்கே அபூதர்தா?”
“அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். திரும்பும் நேரம்தான். எப்பொழுதும் வந்து விடலாம்.”
“நான் உள்ளே வந்து அபூதர்தாவுக்காகக் காத்திருக்கலாமா?”
“தாராளமாக!” என்று அனுமதியளித்தவர், தமது அறைக்குள் சென்று, வேலை, குழந்தைகளைக் கவனிப்பது என்று அவரது கவனம் திரும்பி சுறுசுறுப்பாகிவிட, அவர் தம்மைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அப்துல்லாஹ், அபூதர்தாவின் குலதெய்வச் சிலை இருந்த பூஜை அறையினுள் நுழைந்தார். தம்முடன் ஒரு சிறு ரம்பத்தை மறைத்து எடுத்து வந்திருந்தவர், கிடுகிடுவென்று அந்தச் சிலையைத் துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். “அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது பொய்மையே” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிலையை வெட்டி எறிந்துவிட்டு, அபூதர்தாவின் வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டார்.
இதையெல்லாம் அறியாமல் பின்னர் பூஜையறையினுள் நுழைய நேரிட்ட அபூதர்தாவின் மனைவி, கடவுள் சிலை துண்டு துண்டாகத் தரையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், கன்னத்தில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். “எனக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டாயே இப்னு ரவாஹா, இப்படி. பேரழிவை ஏற்படுத்திவிட்டாயே!” என்று பலமான அழுகை, அரற்றல்.
சற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தார் அபூதர்தா. சிலை இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அமர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் அவர் மனைவி. அபூதர்தாவைப் பார்த்ததும் அவரது கண்களில் பயம் தோன்றியது.
“ஏன், என்ன ஆச்சு?” என்றார் அபூதர்தா.
கண்ணீரும் ஆற்றாமையுமாகப் பேசினார் மனைவி, “நீங்கள் கடையில் இருந்தபோது உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் வந்திருந்தார். பாருங்கள், கடவுள் சிலையை என்ன செய்திருக்கிறார் என்று”
சிலை, தரையில் மரத் துண்டுகளாய் உடைந்து கிடந்தது. உருவமாய் ஒன்றுமே பாக்கியில்லை. கோபத்தில் தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது அபூதர்தாவுக்கு. என்னவாவது செய்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பழி வாங்கத் துடித்தது மனம். கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம் முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்தபோதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அது பட்டது. “இந்தச் சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அது தன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே!”
அந்த எண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ புரிந்தது. உடனே சென்று அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைச் சந்தித்தார். அவரை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்றார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் அபூதர்தா.
oOo
இஸ்லாத்தின்மீதும் நபியவர்கள்மீதும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா கொண்டிருந்த பாசமெல்லாம் சம்பிரதாயமானதன்று. நபியவர்கள் சொன்னால் அதை ஓர் எழுத்து மாறாமல் பின்பற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருந்திருக்கிறது. மிகையில்லை. ஒருமுறை நபியவர்கள் பள்ளிவாசலில் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்தார் இப்னு ரவாஹா. சொற்பொழிவின் இடையே நபியவர்களின் ஒரு வாக்கியத்தில், “அமரவும்” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. அதை அவர்கள் உச்சரித்ததுதான் தாமதம்; பள்ளிவாசலுக்கு வெளியே இருந்தவர் அங்கேயே அப்படியே சட்டென்று அமர்ந்துவிட்டார். பின்னர் இவ்விஷயம் நபியவர்களுக்குத் தெரியவந்தது. “அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படியும் உமது விருப்பத்தை அல்லாஹ் அதிகப்படுத்தி வைப்பானாக” என்றார்கள் நபியவர்கள்.
இறையச்சம் உதிரத்தில் கலந்து, நாடி-நாளமெங்கும் பரவி இருந்திருக்கிறது இப்னு ரவாஹாவுக்கு. ஒருநாள் வீட்டில் அமர்ந்திருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா விசும்பி அழ ஆரம்பித்தார். ‘என்ன ஏது என்று தெரியவில்லை. கணவர் இப்படி அழுகிறாரே’ என்று அவரது மனைவிக்கும் அழுகை தொற்றிக்கொண்டது.
அவரும் அழுதார். தம் மனைவியிடம், “நீ எதற்கு அழுகிறாய்?” என்றார் இப்னு ரவாஹா.
“நீங்கள் அழுதீர்கள். அதைக் கண்டு எனக்கும் அழுகை வந்துவிட்டது; அழுதேன்.”
“நான் நரக நெருப்பின் அருகே வருவேனே, அதிலிருந்து காப்பாற்றப்படுவேனோ, மாட்டேனோ என்று எனக்குக் கவலை ஏற்படுகிறது. அதனால் எனக்கு அழுகை,” என்றார் இப்னு ரவாஹா.
குர்ஆனில் சூரா மர்யமில் வசனம் ஒன்று உள்ளது. “மேலும், (நரக நெருப்பு) அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்” (சூரா மர்யம் : 71).
இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி நரக நெருப்பைத் தாண்டிவிடுவேனோ, மாட்டேனோ என்று அழுதிருக்கிறார் என்றால் அவருடைய கவலையும் விசனமும் முழுக்க முழுக்க வேறொரு பரிமாணம் என்பதை மட்டும்தான் நாம் உணர முடிகிறது. ஒருநாள் நமக்கும் அந்தப் பக்குவம் வளரலாம், இன்ஷா அல்லாஹ்.
oOo
இப்னு ரவாஹாவின் கவித்திறன் பற்றி மேலே பார்த்தோமில்லையா? ஒரு முறை நபியவர்கள் தம் தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் இப்னு ரவாஹா. “ஏதேனும் கூற விழைந்தால் அதை நீ கவிதையில் எப்படி வடிக்கிறாய்?” என்று கேட்டார்கள் நபியவர்கள்.
“சொல்ல விரும்பும் விஷயத்தை யோசிப்பேன். பிறகு கவிதையில் வடித்துவிடுவேன்.” வெகு இயல்பாய் அந்த ஆற்றல் இப்னு ரவாஹாவிடம் அமைந்து இருந்திருக்கிறது.
“இறை நிராகரிப்பாளர்களைப் பற்றிக் கவிதை சொல்க!” என்றார்கள் நபியவர்கள். அதைப் பற்றி அதுவரை எதுவுமே யோசித்திராத இப்னு ரவாஹா உடனே புனைந்தார்; சொன்னார்.
ஹாஷிம் குலத்தின் நல்வழித்தோன்றல்களே
அல்லாஹ் உங்களை உயர்த்தினான் உயர்நிலைக்கு
மனித குலத்தில் நிகரில்லை உங்களுக்கு
நிச்சயமாய்
இறை நிராகரிப்பாளர்களுக்கு மாற்றமான நற்பண்புகளை
நான் உங்களிடம்
காண்கிறேன் ஏகத்திற்கு!
அவர்களிடம் உதவியும் ஆதரவும் நீங்கள் வேண்டினால்
அவர்கள் உங்களைக் கைவிடுவர்
ஆயின்,
அல்லாஹ் மூஸாவை நிலைநிறுத்தியதைப்போன்று
நிலைநிறுத்தட்டும் உங்களின் நற்பண்புகளை
அவன் உங்களை ஆக்கட்டும்
வெற்றியாளர்களுள் வெற்றியாளராய்!
அக்கவிதை நபியவர்களுக்குப் பிடித்துப்போனது. மகிழ்வுற்றவர்கள், “அல்லாஹ் உம்மை வலுவாக்கி வைப்பானாக” என்றார்கள். இதைப்போல் அவரது கவித்திறன் வெளிப்பட்ட இதரத் தருணங்களும் உண்டு.
நபியவர்கள் முஸ்லிம்களுடன் முதல்முறை உம்ரா சென்று மக்காவிற்குள் நுழைய இயலாமல் குரைஷிகளால் தடுக்கப்பட்டு ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டதைப்பற்றி முன்னேரே படித்தோம். அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நபியவர்களும் முஸ்லிம்களும் உம்ராவுக்குக் கிளம்பிச் சென்றார்கள். என்னதான் உடன்படிக்கை என்று ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் முஸ்லிம்கள் தங்களது மார்க்கக் கடமையை நிறைவேற்ற மக்காவினுள் நுழைவதைக் குரைஷிகளால் பொறுக்க முடியவில்லை. நெஞ்சம் முழுக்கக் குரோதம் பரவியிருந்த அவர்களுக்கு இந்நிகழ்வைத் தங்களது கண்களால் காண்பதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே பெரும்பாலானோர் தங்களின் குடும்பத்தை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மலைக் குன்றுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
நபியவர்கள் அல்-கஸ்வா என்ற பெயருடைய தம் ஒட்டகத்தில் அமர்ந்துவர, அதன் வாரைப் பிடித்துக்கொண்டு முன்நடந்தார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. முஸ்லிம்களுக்கும் அது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். பிறந்து வாழ்ந்த ஊரிலிருந்து விரட்டப்பட்ட முஹாஜிர்கள், அவர்களுக்கு உதவியது குற்றம் என்று வெறுக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்ட மதீனத்து அன்ஸார்கள். மட்டுமல்லாது இத்தனை காலமாய்க் குரைஷிகளுடன் ஏகப்பட்ட போர், சண்டை, எக்கச்சக்க உயிரழப்பு. இப்பொழுது அனைத்தும் கனிந்து இறைவனின் புனித ஆலயத்திற்குள் அவர்கள் நுழைந்த போது அவர்களது மனங்களில் ஏற்பட்ட உணர்வுகள் எளிதில், வார்த்தைகளில் சொல்லவிட முடியாத அனுபவம். நபியவர்கள் கஅபாவைச் சுற்றி வரும்போது அவர்களுக்கு முன்னால் சென்ற அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவிதை உரைத்தார்.
இறைமறுப்புக் குலத்தவரே விலகிச் செல்வீர்!
இன்றும்மோ டிறைவாக்கால் பொருத வந்தோம்
உறைவாளின் வீச்சால்உம் தலைகள் வீழும்!
உறுநண்பர் நண்பர்க்கே உதவ மாட்டார்!
இதைச் செவியுற்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு “ஓ இப்னு ரவாஹா! புனித இறைத்தலத்தில் அதுவும் நபியவர்கள் முன்னிலையில் நீ இப்படிக் கவிதை சொல்லலாமா?” என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
நபியவர்கள் உமருக்கு பதில் அளித்தார்கள். “இவர் சொல்லட்டும் உமர். சத்தியமாகச் சொல்கிறேன், இவரது வார்த்தைகள் ஈட்டி துளைத்தால் ஏற்படும் வலியைவிட அதிக வலியை இறைமறுப்பாளர்களுக்கு ஏற்படுத்தும்.”
பிறகு அவர்களுக்கு மற்றொரு பிரார்த்தனையைச் சொல்லித் தந்தார்கள். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனியோன்; வாக்குறுதியை நிறைவேற்றுபவன்; தன் அடியாருக்கு அவன் வெற்றியை அளித்தான்; தன் படையினரைக் கண்ணியப்படுத்தினான்; எதிரணியிர் அத்தனை பேரையும் தனியனாய்த் தோற்கடித்தான்.”
மிக உரத்த குரலில் இதை உச்சரிக்க ஆரம்பித்தார் இப்னு ரவாஹா. முஸ்லிம்களும் அதைத் தொடர்ந்து உச்சரிக்க , குன்றுகளில் எதிரொலித்தது அந்த ஒலி. அங்கிருந்த குரைஷிகளின் உள்ளங்கள் அதிர்ந்தன.
oOo
யூதர்களுக்கு எதிரான ஃகைபர் யுத்தம் முன்னரே நமக்கு அறிமுகமாகி விட்டது. அதில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றபின், கைப்பற்றிய விளைநிலத்தை யூதர்களிடமே திருப்பி அளித்தார்கள் நபியவர்கள். விளைச்சலில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் பங்கு செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பங்கை நிர்ணயித்து விளைச்சலைப் பாகம் பிரிக்க அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைத்தான் நபியவர்கள் அனுப்பிவைப்பார்கள். மிகவும் கவனமுடன் அனைத்தையும் சரிபார்த்து, விளைச்சலைப் பங்கிட்டு எது முஸ்லிம்களுக்கு எது யூதர்களுக்கு என்று இப்னு ரவாஹா சொன்னதும்,“நீர் நியாயமாய்ப் பங்கு பிரிக்கவில்லை இப்னு ரவாஹா.” என்று சிலசமயம் யூதர்கள் குறுக்கிடுவார்கள்.
நியாயமாய் அது கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மிக எளிதான உபாயத்தைக் கையாண்டார் இப்னு ரவாஹா. “அப்படியா! ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்கு எந்தப் பங்கு வேண்டுமோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.”
ஒருமுறை அந்த யூதர்கள் தங்கள் பெண்களின் நகைகள் சிலவற்றைத் திரட்டி அவருக்கு இனாமாய் அளிக்க வந்தார்கள். “இந்தா இது உனக்கு. உன் வீட்டுப் பெண்கள் மகிழ்வார்கள்; வைத்துக்கொள். ஏதோ பங்கு பிரிப்பதைப் பார்த்துச் செய்யப்பா!” அது வேறொன்றுமில்லை. கிம்பளம். கையூட்டு அளித்து அவரைக் கைக்குள் போட்டுக்கொண்டால், தங்களுக்குச் சாதகமாய் அவர் பங்கு பிரிப்பார் என்பது யூதர்களது எண்ணம்.
ஆனால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, “ஓ யூதர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன்! இறைவனின் படைப்பில் நீங்களே எனக்கு மோசமானவர்கள். ஆனால் அதற்காக உங்களுக்கு அநீதி இழைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை. கையூட்டுப் பெறுவது எங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அதை நாங்கள் தொடக்கூட மாட்டோம்.”
அந்த பதிலைக் கேட்டுவிட்டு மறைக்க இயலாமல் உண்மையைப் பேசினார்கள் யூதர்கள். “இது, இந்த நீதிதான் வானத்தையும் பூமியையும் தாங்கிப் பிடித்துள்ளது.”
முஃத்தா போர் பற்றி ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் பார்த்தோம். முஃத்தா எனும் சிறிய கிராமம் இன்றைய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் சிரியா நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் ரோமர்களைக் களத்தில் சந்தித்த முதல் போர். நபியவர்கள் மூவாயிரம் வீரர்களை அணி திரட்டினார்கள். படைத் தலைவராக ஸைது இப்னு ஹாரிதா (ரலி) நியமிக்கப்பட்டார். நிச்சயம் போர் உக்கிரமாக இருக்கும் என்று நபியவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, “ஸைது கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபூதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக்கிரமமாய் நியமித்து வழி அனுப்பிவைத்தார்கள். கிளம்பியது அந்தச் சிறிய படை.
அங்கோ கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை! பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ கோத்திரங்களைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள்.
முஃத்தாவை நோக்கி நகர்ந்துவந்த முஸ்லிம்களின் படையினர் மஆன் என்ற பகுதியை அடைந்திருந்தார்கள். இன்றைய ஜோர்டான் நாட்டுக்குத் தென்பகுதியில் அமைந்துள்ளது அது. அப்பொழுது அவர்களுக்கு ரோமர்களின் பிரம்மாண்ட படையைப் பற்றிய தகவல் கிடைத்தது. நிச்சயமாய் முஸ்லிம்களுக்குப் பெரும் கிலேசத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி. இரண்டு இரவுகள் மஆனில் தங்கி, ஸைது இப்னு ஹாரிதா (ரலி) முஸ்லிம் படையினருடன் ஆலோசனை நடத்தினார். சிலர் “எதிரிகளின் எண்ணிக்கையைப்பற்றி நபியவர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்புவோம். அவர்கள் மேற்கொண்டு நமக்குப் படையினரை அனுப்பிவைத்தால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் என்ன கட்டளை அனுப்புகிறார்கள் என்று பார்ப்போம். அதன்படிச் செயல்படுவோம்.” என்று ஆலோசனை கூறினார்கள். இறுதியில் அவர்கள் மத்தியில் எழுந்து நின்றார் இப்னு ரவாஹா.
“உங்களது தயக்கம் எனக்குப் புரிகிறது! ஆனால், இந்தப் பரிசிற்காகத்தான் நீங்கள் கிளம்பி வந்துள்ளீர்கள் – ‘ஷஹாதத்’ வீர மரணம் எனும் பரிசு. நமது எதிரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ, ஆயுத வலிமையின் அடிப்படையிலோ, குதிரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ நாம் போரிடுவதில்லை. நமக்கு அல்லாஹ் அருளியுள்ள இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக மட்டுமே போரிடுவோம். நாம் முன்னேறிச் செல்வோம்”
“நான் பத்ருப் போரில் கலந்து கொண்டேன். அப்பொழுதும் நம்மிடம் இரண்டு குதிரைகள் மட்டுமே இருந்தன. உஹது யுத்தத்தில் நம்மிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு குதிரைவீரர் மட்டுமே. முன்னேறுங்கள் சகோதரர்களே! நமக்கு இரண்டில் ஒரு பரிசு நிச்சயம். ஒன்று நமக்கு வெற்றி – இதைத்தான் அல்லாஹ்வும் அவன் தூதரும் நமக்கு வாக்களித்துள்ளார்கள். அவ்வாக்குப் பொய்ப்பதில்லை. அல்லது நமது உயிர்த் தியாகம். பிரிவது நமது உயிர் எனில் நமக்குமுன் சொர்க்கம் புகுந்த நம் சகோதரர்களுடன் நாம் சென்று இணைவோம்”
அந்தச் சிறு உரை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. அவர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்னு ரவாஹா உண்மையை உரைத்தார்.”
முன்னேறியது முஸ்லிம்களின் படை. அடுத்த இரண்டு இரவுகளில் மஷாரிஃப் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகளின் படை நெருங்கி வர ஆரம்பித்தது. முஸ்லிம்கள் முஃத்தா பகுதிக்கு நகர்ந்து சென்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். துவங்கியது யுத்தம். மும்முரமான போர் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் அதன் தீவிரம் சொல்லிமாளாத உக்கிரம்.
ஸைது இப்னு ஹாரிதா வீரமாய்ப் போரிட்டு வீர மரணம் எய்தினார். அடுத்து, தலைமை ஜஅஃபரிடம் வந்து சேர்ந்தது. அவரும் போரிட்டு மரணம் அடைந்தார். போர் தீவிரமான நிலையை அடைந்திருந்தது. அடுத்து தலைமை அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவிடம் வந்து சேர்ந்தது. அதுவரை படை அணியில் ஒரு வீரராய்ச் சுற்றிச் சுழன்று போரிட்டுக் கொண்டிருந்த அவருக்குத் தம்மிடம் வந்தடைந்த கூடுதல் பொறுப்பு ஒரு சிறு தயக்கத்தை ஏற்படுத்தியது. உடனே தமது ஆன்மாவிற்கு ஊக்கமளிக்கத் தமக்குத்தாமே கவிதை உரைத்தார் இப்னு ரவாஹா.
சபதம் செய்தேன் ஆன்மாவே!
சமரில் பொருதல் விதிஎன்றே
சபலம் ஒன்றும் எனக்கில்லை
சாப வெறுப்பும் எனக்கில்லை
பறையை முழக்கிப் பெருங்கூட்டம்
பாய்ந்தே வந்தும் எனக்கென்ன?
சிறையாம் உலகின் வாழ்வின்முன்
சேர்ந்த சொர்க்கம் பெரிதன்றோ?
மனமே நேரம் நீள்கிறது
மாற்றம் வருமுன் சீர்படுவாய்
இனமோ விந்தின் துளியாவாய்
இனியேன் உனக்குச் சபலங்கள்?
என்றன் உளமே படைநடுவில்
இறப்பேன் வெட்டப் பட்டவுடன்
உன்றன் விதியில் இறப்பொன்றே
உண்டோ அதுவே விதியாகும்
எதனை எதிர்பார்த் திருந்தாயோ
இறப்பாம் அதனை அடைவாய்நீ
முதலில் சென்ற அவ்விருவர்
முடிவே உனக்கும் விதியாகும்!
முஸ்லிம்கள் சரியான உணவை உட்கொள்ளக்கூட நேரமின்றி அன்று போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் உறவினர் ஒரு துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டு அவரிடம் ஓடிவந்தார்.
“இதைச் சாப்பிட்டுக் கொஞ்சம் தெம்பேற்றிக்கொள்ளுங்கள். இன்றைய போரில் உங்களது உடல் மிகவும் களைப்புற்றுவிட்டது.”
அதை வாங்கிச் சிறிது கடித்துச் சுவைத்திருப்பார். போர்களத்தின் ஓசையும் இரைச்சலும் காதில் விழுந்தன. “நான் இன்னுமா இந்த உலகில் இருக்கிறேன்?”
‘சகோதரர்கள் அங்கு உயிரைப் பணயம் வைத்திருக்க இங்கு என்ன இன்னும் ஆற அமர உணவு!’ என்று அந்த இறைச்சியைத் திருப்பித் தந்துவிட்டுக் களத்தில் குதித்தார் அவர்.
அச்சமயம் நபியவர்கள் மதீனாவில் தோழர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அதனிடையே நேரில் காண்பதுபோல் இந்தச் செய்தியை அறிவித்தார்கள். ‘ஸைத் இப்னு ஹாரிதா கொடியைக் கையிலெடுத்து இஸ்லாமியப் படையினருக்குத் தலைமை தாங்கிக் கொண்டுள்ளார் … இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, ஜஅஃபர் அதைத் தம் கையில் எடுத்துத் தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார் … அவரும் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தம் கையில் எடுத்துத் தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, தளபதியாக நியமிக்கப்படாமலேயே காலித் இப்னு வலீத் அதைக் கையிலெடுத்துள்ளார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது. வீர மரணத்தினால் பெரும் பேற்றினை அடைந்துவிட்டார்கள். ஷஹாதத் எனும் பெரும்பேறு அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. அதைவிட அவர்கள் நம்முடன் இருப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல …”
இதைக் கூறியபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
முஃத்தா போரில் தமது உயிரைத் தியாகமாக்கி சொர்க்கவாசியாகிப் போயிருந்தார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!
சத்தியமார்க்கம்.காம்-ல் 03 ஜூலை 2012 அன்று வெளியான கட்டுரை