27. ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ (صهيب بن سنان الرومي)
தம் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு வந்தபோது முதலில் தங்கியது குபா எனும் சிற்றூரில். மதீனா நகருக்கு வெளியே சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருந்தது குபா. நபியவர்கள் ஏறக்குறைய 20 நாட்கள் அங்குத் தங்கியிருந்துவிட்டு, பின்னரே யத்ரிப் நகருக்குப் புறப்பட்டார்கள். அப்படி அவர்கள் குபாவில் தங்கியிருக்கும்போது வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், நபியவர்களிடம் இறைவன் அனுப்பிவைத்த வசனமொன்றைக் கொண்டுவந்து சேர்ப்பித்தார்.
“இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்” பின்னாளில் குர்ஆனில் இரண்டாவது அத்தியாயத்தில் 207ஆவது வசனமாக இடம்பெற்ற இறைவாசகம் அது. நபியவர்கள் அதைத் தம் தோழர்களிடம் அறிவித்துவிட்டுச் செய்தியொன்று சொன்னார்கள். தோழர்கள் ஆச்சரியத்துடன் அறிந்து கொண்ட செய்தி.
அதேநேரம் அல்லது அதற்குச் சிலநாள் முன்னர் மக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஒருநாள் இரவு உறங்கிக் கொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அலறி அடித்துக்கொண்டு எழுந்து, “நம் ஆள் தப்பிவிட்டான்; ஓடிவிட்டான்” என்று தன் சகாக்களை எழுப்ப, அரக்கப் பரக்க எழுந்தார்கள் அவர்கள். அவசர அவசரமாய்க் குதிரைகளில் சேணம் பூட்டி, அந்த ஆள் தப்பித்துச் சென்றிருக்கும் திசை எதுவாக இருக்கும் என்பதை யூகித்து, அத்திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்கள். அவர்களது ஊகம் தப்பவில்லை!
மக்காவிலிருந்து தப்பித்துச் சென்று கொண்டிருந்த அவர், தமக்குப் பின்னால் குதிரை ஒலிகள் நெருங்குவதைக் கேட்டார். பரந்த வெளியில் பதுங்கி மறைய ஏதும் இடம் இருப்பதாய் அவருக்குத் தெரியவில்லை. சிக்கினால் தப்பிப்பது கஷ்டம்; மக்காவிற்கு இழுத்துச்சென்று பிழிந்து எடுத்துவிடுவார்கள். சட்டென்று அருகில் தென்பட்ட செங்குத்தான குன்று ஒன்றின்மீது தாவி, ஓடி ஏறி நின்றுகொண்டார். அவரிடம் ஏதும் பயணப் பொருட்கள் இருந்ததாய்த் தெரியவில்லை. ஆனால் ஆயுதங்களை மட்டும் கவனமாக எடுத்து வந்திருந்தார். வில்லில் அம்பைப் பூட்டி ஏந்திக் கொண்டு அங்கிருந்தே இரைந்து கத்தினார் – “ஏ குரைஷிக்குல மக்கா! அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் ஒரு மிகச் சிறந்த வில்லாளி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என் குறி தப்பாது. நீங்கள் என்னை நெருங்குவதற்குமுன் எனது அம்புகள் உங்களைத் தாக்கும். ஒவ்வொருவரையும் எண்ணி எண்ணித் தாக்குவேன். மீறி நெருங்கினால் எனது வாள் உங்களுடன் உரையாடும். நீங்கள் என்னை உயிருடன் பிடித்துவிடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள்”
திகைத்து நின்றார்கள் அவர்கள்; வேகம் மட்டுப்பட்டது. அவர்களில் ஒருவன் கத்தினான். “நீ உனது செல்வத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது”
சட்டெனப் புரிந்தது அவருக்கு. “இதுதான் உங்கள் பிரச்சினையா?” எளிது; அதைத் தீர்ப்பது அவருக்கு எளிது.
“எனது பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு இனாமாகத் தந்துவிடுகிறேன். பிறகு நான் என் போக்கில் செல்லலாம்தானே?”
ஏக மகிழ்வுடன் தலையாட்டினார்கள் அவர்கள். குன்றிலிருந்து இறங்கி வந்தார் அவர்.
oOo
உபுல்லா நகர்!
நினைவிருக்கிறதா? “ஆம்” என்பவர்கள் முதுகில் தட்டிக் கொள்ளுங்கள். இல்லை என்பவர்களுக்காக சுருக்கமாய் இங்கு:
பாரசீகப் பேரரசின் முக்கியத் துறைமுக நகரம் உபுல்லா. அவர்களது வலுவான, தலையாய கோட்டைநகர். இராக் நாட்டில் அமைந்திருந்தது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது அந்நகரைக் கைப்பற்ற உத்பா பின் கஸ்வான் (ரலி) தலைமையில் ஒரு படை புறப்பட்டுச் சென்றது என்பதையும் அதுசார்ந்த நிகழ்வுகளையும் அவரது வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோம்.
மக்காவில் முஹம்மது நபிக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்நகருக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஸினான் இப்னு மாலிக். இவர் ஓர் அரபியர். நுமைர் கோத்திரத்தைச் சேர்ந்தவர். பாரசீக மன்னன் குஸ்ரோ அரபியர் ஸினானை அந்நகருக்கு ஆளுநராக நியமித்திருந்தான்.
பாரசீகத்தின் ஆளுநர் என்பதால் ஸினானிடம் வளமான பொருட் செல்வம்; இறையருளால் ஏராளமான பிள்ளைச் செல்வம். ஏகப்பட்ட பிள்ளைகளில் ஒருவர் ஸுஹைப். ரோசாக் கன்னம், செம்பு போன்ற தலைமுடி, துறுதுறு குறும்பு என்றிருந்த ஐந்து வயது ஸுஹைப், ஆளுநரின் செல்லப்பிள்ளை. கதைகளில் காட்சிகளில் காண்பதுபோல் அலுவல், அதிகாரம், இல்லம், குழந்தைகளுடன் விளையாட்டு என்று இன்பமாய்க் கழிந்து கொண்டிருந்து ஸினான் இப்னு மாலிக்கின் வாழ்க்கை.
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் கோடை விடுமுறை வந்ததும் பிள்ளைகளுடன் ஊர்ப்புறங்களில் இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிற்குச் செல்வது இன்றும் வழக்கமாய் இருக்கிறது இல்லையா, அதைப்போல் அன்றும் ஸினான் வீட்டில் அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. நல்லதொரு கோடை காலம். ஆளுநர் ஸினானி்ன் மனைவி, “நான் அம்மா வீட்டிற்குப் போய்வருகிறேன். நீங்கள் சமையல்காரர் சமைத்துத் தருவதைச் சாப்பிட்டு, உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தம் பணியாட்கள், பணிப்பெண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு, ஸுஹைபையும் தூக்கிக் கொண்டு தானீ எனும் தனது கிராமத்திற்குக் கிளம்பிவிட்டார்.
பயணம் கிளம்பி வந்தார்கள். சொந்த பந்தம் என்று பார்த்துப் பேசி, சிரித்து விளையாடி, உண்டு களித்து, ஏகாந்தமாய் பொழுது கழிந்து கொண்டிருந்தது.
அமைதியான ஒருநாளில், வழக்கமான ஒரு பொழுதில் தானீயை நோக்கி எங்கிருந்தோ சரேலெனப் பாய்ந்து வந்தது ரோமர்களின் குறும்படை ஒன்று. பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் தீராத பழி, மாறிமாறி தாக்கிக் கொள்ளும் போர்வெறி என்று தெரியுமில்லையா? ஏதோ ஒரு பழிவாங்கும் செயல்போல் வந்தார்கள் ரோமர்கள். ஒரு கொள்ளைக் கூட்டம் கிராமத்தைக் கொள்ளையடிக்கும் என்று படிப்போமே அதைப்போல் குதிரைகளில் கிளம்பிப் பறந்துவந்து அந்தக் கிராமத்தினுள் நுழைந்தது அந்தப்படை. காவலுக்கு இருந்த வீரர்களைச் சகட்டுமேனிக்கு வெட்டித்தள்ளிச் சாய்த்தார்கள். வீடுவீடாய்ப் புகுந்து அகப்பட்டப் பொருள்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு சிலபல மக்களைக் கடத்தினார்கள். பொருட்களையும் மக்களையும் குதிரைகளின்மேல் தூக்கி வைத்துக்கொண்டு போயே போய்விட்டார்கள். கடத்தப்பட்ட மக்களில் சிறுவர் ஸுஹைபும் ஒருவர்.
புயல்கடந்த பூமியாய் மாறிப்போனது தானீ.
இப்பொழுதெல்லாம் கடத்தப்பட்ட வாகனங்களைக் கழட்டிப்போட்டு விற்பதற்கென்றே நகரங்களில் சில பேட்டைகள் இருக்கிறதே அதைப்போல் அன்று கடத்தப்பட்ட மக்களையெல்லாம் சந்தைக்குக் கொண்டுவந்து விற்றுவிடுவது வழக்கம். அதற்குமுன் ராசா வீட்டுக் கன்றுக்குட்டியாக இருந்திருக்கலாம்; எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். பிடிக்கப்பட்டு விற்கப்பட்டால் தீர்ந்தது விஷயம் – அவனோ அவளோ அடிமை. என்றென்றும் அடிமை. ஆளுநரின் செல்ல மகனாய், அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவர் ஸுஹைபின் வாழ்க்கை சடுதியில் மாறிப்போனது. அடிமைச் சந்தையில் ரோமர்களிடம் விலைபோனார் அவர்.
அக்காலத்தில், ஒரே எசமானனிடம் ஓர் அடிமை பலகாலம் அடிமைப்பட்டுக் கிடப்பதும் உண்டு. அல்லது ஓர் அஃறிணைபோல் பண்டமாற்றாய், நன்கொடையாய் கைமாற்றிக் கொள்ளப்படுவதும் உண்டு. ரோம நாட்டின் மேட்டுக்குடியினரும் குறிப்பிட்ட அடிமைகளின் முகத்தையே நாள்தோறும் பார்த்துக்கொண்டிருப்பது சலிப்படைய வைக்கிறது என்று அடிமைகளை விற்று, வாங்கி மாற்றிக் கொண்டிருந்தார்கள். இதனால் எசமானன் மாற்றி எசமானன் என்று அடிமையாய்க் கைமாறிக் கொண்டிருந்தார் ஸுஹைப்.
ஆனால் அந்தக் கடும் விதியே பெரும் பாடமாய், ஞானம் புகட்டியது ஸுஹைபுக்கு. ஆடம்பரமும் பகட்டுமாய் வாழ்ந்து கிடந்த அந்தச் சமூகத்தை அதன் பளபளப்பைத் தாண்டிப் பார்க்கும் தூரநோக்கு அவருக்கு அமைந்து போனது. அடிமைகள் எசமானர்களுடன் அனைத்துப் பொழுதிலும் உடன் இருக்க நேர்வதால் அவர்களது அந்தரங்க வாழ்வை, ஒளிவு மறைவின்றி, எவ்வித இரகசியமும் இன்றிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டு, உயர்ந்த மாளிகைச் சுவர்களின் பின்னே நடைபெறும் அக்கிரமங்கள் அனைத்தும் அடிமைகளாக வாழ்வோருக்கு அத்துப்படியானது.
ரோமர்களின் மத்தியில் நாகரீகம் என்ற பெயரில் நிகழ்ந்து கொண்டிருந்த அனாச்சாரங்களையும் ஆபாசங்களையும் அட்டூழியங்களையும் சீர்கேடுகளையும் பார்த்துப் பார்த்து வெறுப்பின் உச்சத்தை அடைந்தார் ஸுஹைப். ‘அப்படியே முழுக்க முற்றிலுமாய் ஒரு வெள்ளம் வந்து மூழ்கடித்தால் மட்டுமே இந்த சமூகத்தைத் தூய்மைப்படுத்த முடியும்’ என்பார் அவர். அந்தளவிற்கு ரோம நாகரீகத்தின்மீதும் அந்தக் கேடுகெட்ட வாழ்க்கை மீதும் அவருக்குக் கோபம் ஏற்பட்டுப்போனது.
அன்றைய ரோம சமூகம் இருக்கட்டும், இன்று நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லிக் கொள்கின்றனவே மேற்கத்திய நாடுகளும் அவற்றை முன்னோடியாகப் பின்பற்றும் இதரர்களும் – என்ன செய்கிறார்கள்? ஆபாச நரகலில் மூழ்கி, ஒருகாலத்தில் மனிதன் கற்பனைகூட செய்திராத அக்கிரமங்களை எல்லாம் நாகரீகம் என்ற போர்வையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாவங்களையெல்லாம் நியாயங்களாக்கிப் பெருமிதமாய் உலா வந்துக்கொண்டிருக்கிறது மனித சமூகம்! அறிவியல் முன்னேற்றமும் சி்ந்தனா மாற்றமும் நவீன வசதிகளுடன் பெரும்பாலான மக்களை அஞ்ஞானத்தில் மூழ்கடிக்க மட்டுமே உதவிக் கொண்டிருக்கின்றன. உள்ளத்தில் ஏக இறைநம்பிக்கையும் இம்மை தாண்டிய இலட்சியம் அடிப்படையாகவும் அமைந்தாலொழிய நாள்காட்டியானது நூற்றாண்டுகளை எண்களில் மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கும்.
சிறு வயதிலேயே அந்நிய நாட்டு மக்களிடம் அடிமையாகிவிட நேர்ந்ததில் ஸுஹைபுக்கு, அவரது தாய்மொழியான அரபுமொழி அந்நியமாகிப்போனது. ஆயினும் அரபும் அரபியர்களும் தன் மொழி, தன் மக்கள் என்ற தன்னிரக்கம் மட்டும் அவருக்கு அடங்கவில்லை. பல ஆண்டுகளாய் ரோமர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தாலும் தான் ஓர் அரபியன் என்ற எண்ணம் அவர் மனதில் வேர்விட்டுக் கிடந்தது. விடுதலைக்கு மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு வாய்ப்பு அமைந்தால் போதும் தப்பித்துவிடலாம் என்று காத்துக் கிடந்தார்.
மதீனாவில் இருந்த யூதர்கள் தங்களது வேதம் முன்னறிவித்தபடி நபியொருவர் வரப்போகிறார் என்பதை அறிந்து எப்படிக் காத்திருந்தார்களோ அதைப்போல் ரோம நாட்டின் கிறித்தவப் பாதிரிகளும் மதகுருமார்களும் அச்செய்தியை அறிந்திருந்தனர். அதைப்பற்றி அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது வழக்கம்.
ஒருநாள் பாதிரி ஒருவர் மற்றொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ‘மக்காவில் திருநபி ஒருவர் தோன்றப் போகிறார் என்பதை மத அறிஞர்கள் பலர் எதிர்பார்த்துள்ளனர்’ என்று கூறியதை ஸுஹைப் கேட்க நேர்ந்தது. ‘அப்படி அங்குத் தோன்றப்போகும் தூதுவர், மர்யமின் மகன் ஈஸாவின் செய்திகளை உறுதிப்படுத்துவார், மக்களை அறியாமை எனும் இருளிலிருந்து உண்மையான ஒளியின் பக்கம் அழைப்பார்’ என்றெல்லாம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்க, அது ஸுஹைபின் ஆர்வத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தியது. தப்பிக்கும் எண்ணமும் நேர்வழி காண வேண்டும் என்ற எண்ணமும் ஒருங்கிணைந்தால் என்னாகும்? அவரது மனதில் உறுதியொன்று வலுப்பெற்றது. வலுப்பெற்று, வலுப்பெற்று ஒருநாள் நல்லதொரு வாய்ப்பு வந்தமைய, தப்பித்தார் ஸுஹைப்.
ரோம நாட்டிலிருந்து கிளம்பியவர் நேராக மக்காவை நோக்கி ஓடினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அக்காலத்தில் மக்காதான் அரேபியா நாட்டின் அனைத்துப் பயணிகளும் சந்தித்துக்கொள்ளும் இடமாக இருந்தது. இரண்டாவது அந்த மதகுருமார்கள் பேசிக்கொண்டபடி நபியொருவர் தோன்றப் போவது அந்த மண்ணில்தான் என்று அவர் அறிந்துகொண்டிருந்த உண்மை.
மக்காவில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் என்றொருவர் இருந்தார். வாணிபத் தொழிலதிபர். அவரிடம் வந்துசேர்ந்தார் ஸுஹைப். ஸுஹைபின் புத்திக் கூர்மையையும் கடின உழைப்பையும் கண்டு அவருக்கு விடுதலை அளித்துத் தம்முடன் வாணிபத்தில் சேர்த்துக் கொண்டார் அப்துல்லாஹ். கடகடவென தொழிலில் முன்னேறினார் ஸுஹைப். மக்காவில் உள்ளவர்களெல்லாம் ஸுஹைப் ரோமர்களிடமிருந்து ஓடிவந்தவர் என்பதை அறிந்திருந்தார்கள். அவரது சிவந்த தலைமுடியும் வெளிர் நிறமும் அந்நியமான அரபு உச்சரிப்பும் எல்லாமாகச் சேர்ந்து அவர் ஒரு ரோமர் என்றே அரபுகள் மனதில் பதிந்துபோய் அவரை ஸுஹைப் அர்-ரூஃமி (ரோம நாட்டினன்) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாத ஸுஹைபுக்கு மனதில் ஒரேயொரு கவலை மட்டும் பெருங்கவலையாக ஆக்கிரமித்திருந்தது. அது,
‘ஏன் இந்தத் தாமதம்? எப்பொழுது தோன்றப்போகிறார் அந்த நபி?’
வர்த்தக நிமித்தமாய் அடிக்கடிப் பயணங்கள் மேற்கொள்வது ஸுஹைபின் வாடிக்கை. அவ்விதம் வெளியூர் சென்று மக்கா திரும்பும் போதெல்லாம் உடனே கடை வீதிகளுக்குச் சென்று அங்குள்ள இளைஞர்களை எல்லாம் சந்தித்து, பேச்சு கொடுப்பார். அவ்வளவு ஆவல்! ‘அப்புறம் என்ன சேதி? சொல்லு என்ன விசேஷம்?’ என்று, தான் இல்லாத நேரத்தில் மக்காவில் ஏதாவது முக்கிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதா எனத் தெரிந்து கொள்ளும் நைச்சியப் பேச்சு.
அப்படியான ஒரு பயணத்திலிருந்து அவர் மக்கா திரும்புவதற்குள் நல்லதொரு நாளில் இங்கு அந்த மீளெழுச்சி துவங்கியிருந்தது. அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது என்பார் அல்லாஹ்வின் இறுதி நபியாகத் தம்மை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள ஆரம்பித்திருந்தார், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அந்தப் புதுச்செய்தி மக்கா நகரில் அனைவரையும் உலுக்க ஆரம்பித்திருந்தது. ஊரெங்கும் அச்செய்தி பெரும் பேச்சாகிப் போனது. இதையெல்லாம் அறியாமல் பயணத்திலிருந்து திரும்பிய ஸுஹைபை நெருங்கிய அவரது நண்பர்கள் தாங்களே முந்திக்கொண்டு அச்செய்தியை அறிவித்தார்கள். “வாங்க ஸுஹைப் வாங்க! கேளுங்கள் இந்தச் செய்தியை..” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
‘அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தெரியுமில்லையா, அவர் நாமெல்லாம் ஒரே இறைவனையே வணங்க வேண்டும் என்று கூறுகிறார்; பண பரிவர்த்தனைகளில் நேர்மையாக இருக்க வேண்டுமாம்; மக்களிடம் அன்பாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமாம். அதுவாவது தேவலாம். நமது வாழ்க்கைமுறை ஒழுக்கக்கேடாம்; பாவமாம். எனவே ஒழுக்கக்கேடு புரியக்கூடாது; பாவங்களிலிருந்து தடுத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்’
படபடவென அவர்கள் ஸுஹைபிடம் தெரிவித்த செய்தியின் கரு இது.
உடனே நண்பர்களிடம் கேட்டார், “இந்த முஹம்மது, அல்-அமீன் என்று அழைக்கப்படுபவரா?”
“ஆம்!”
ஸுஹைபை இன்ப அதிர்ச்சி தாக்கியது! தேடிவந்ததும் காத்திருந்ததும் வீணாகவில்லை. “எங்கிருப்பார் அவர்? எங்குச் சென்றால் அவரைச் சந்திக்கலாம்?”
சஃபா குன்றுக்கு அருகிலிருந்த அர்கமின் இல்லத்தை நோக்கிக் கைகாட்டிய நண்பர்கள், அதிர்ச்சியுடன் அவரைத் தடுத்தார்கள், “அங்கெல்லாம் நீ போகாதே, கெட்டுப் போய்விடுவாய்”
“அங்குப் போகத்தான் போகிறேன்! அவரைச் சந்திக்கத்தான் போகிறேன்!” என்று இரண்டு கால்களிலும் உறுதியாக நின்றார் ஸுஹைப்.
அவரைப் பரிதாபமாகப் பார்த்த அவரின் நண்பர்கள், “அப்படியானால் யார் கண்ணிலும் படாமல், நீ எங்குச் செல்கிறாய் என்று யாரிடமும் தெரிவிக்காமல் போ. யாராவது குரைஷி உன்னைப் பார்த்துவிட்டால் உன் பாடு பெரும் பாடு; புரட்டி எடுத்துவிடுவார்கள். இங்கு உனக்குப் பாதுகாவல், ஆதரவு என்று அளிக்க எந்தக் கோத்திரமும்கூட இல்லை. ஒருவனைக் கொலை செய்தால் அதற்குப் பழிவாங்க யாருமில்லை என்று தெரிந்தால் குரைஷிகளின் கொடுமைக்கு எல்லையே இல்லாமல் போகும்”
முன்னரே பார்த்திருக்கிறோம்; அந்தச் சமூகத்தின் நடைமுறையில் தமது கோத்திரம் அல்லது தமக்கு ஆதரவு அளிக்கும் கோத்திரம் என்ற அடிப்படையிலேயே ஒருவரது உயிருக்குப் பாதுகாவல் அடங்கியிருந்தது. நபியவர்களுக்கே அவரது பெரியப்பா அபூதாலிபின் ஆதரவு தேவைப்பட்டிருந்தது.
நண்பர்களின் ஆலோசனை ஏற்படுத்தியிருந்த எச்சரிக்கையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி அர்கமின் வீட்டை அடைந்தார் ஸுஹைப். கதவருகே சென்றுவிட்டார். அப்பொழுதுதான் அவரைப் பார்த்தார். அந்த வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார் ஒருவர். முன்னமேயே அவரைப் பார்த்துள்ளதால் அடையாளம் தெரிந்தது. திடுக்கிட்டவர் சமாளித்துக் கொண்டு தயக்கத்துடன் கேட்டார்.
“இங்கு என்ன செய்கிறீர் அம்மார்?” அங்கு நின்று கொண்டிருந்தவர் அம்மார் பின் யாஸிர்.
“இங்கு நீர் என்ன செய்கிறீர்?” என்று அதே கேள்வி பதிலாகத் திரும்பி வந்தது.
“ஒருவரைச் சந்திக்க வந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று அறிய வேண்டும்” என்றார் ஸுஹைப்.
“நானும் அதற்காகவே வந்தேன்” என்றார் அம்மார்.
“நல்லது. இருவரும் சேர்ந்தே செல்வோம். நமக்கு அல்லாஹ் அருள்புரிய வேண்டிக்கொள்வோம்”
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமைச் சந்தித்துத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் இருவரும். அங்குக் கூடியிருந்த தோழர்களுடன் அமர்ந்து நபியவர்களின் அறிவுரைகளைக் கேட்கக் கேட்க அந்த எளிய உண்மை அவர்களைக் கவர்ந்தது; புரிந்தது. அன்றே அப்பொழுதே இஸ்லாத்தினுள் நுழைந்தார்கள் இருவரும். ரலியல்லாஹு அன்ஹுமா!
பகலில் அந்த வீட்டினுள் நுழைந்தவர்கள் இரவுவரை நபியவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; ஒவ்வொரு வார்த்தையும் பாடமாய் அவர்களது நெஞ்சங்களில் புகுந்தது. நகரில் இருள் பரவிக் கவிழ்ந்ததும்தான் வெளியேறினார்கள். ஆனால் அவர்களது உள்ளங்களில் மட்டும் பேரொளி; இவ்வுலகையே பிரகாசமடைய வைக்கும் அளவிற்கு இறை நம்பிக்கைப் பேரொளி!
எத்தனை நாள் குரைஷிகளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கமுடியும்? ‘ஸுஹைப் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்; முஹம்மதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்’ என்று தெரிந்ததும் அவர்களது கொடூர ஆட்டத்திற்கு ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹுவும் ஒரு விளையாட்டுப் பொருளாக ஆகிப்போனார். கப்பாப் பின் அல்அரத், பிலால், அம்மார், அம்மாரின் தாயார் சுமைய்யா போன்ற, பாதுகாவலுக்கு வழியில்லாத தோழர்களுடன் அவர்களுக்கு இணையாக ஸுஹைபும் குரைஷிகளிடம் கடும் சோதனையை எதிர்கொள்ள வேண்டிவந்தது. கடுமையான சித்திரவதை, அடி, உதை என்று என்னென்ன கொடுஞ்செயல்கள் உண்டோ அத்தனையும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஆனால் எந்தளவிற்குக் கொடுமைப்படுத்தப்பட்டாரோ, எந்தளவிற்கு உடலெங்கும் காயமும் ரணமும் பரவியதோ அந்தளவிற்கு அவரது மனம் திடமடைந்தது. சொர்க்கத்தின் பாதை அவ்வளவு எளிதல்ல என்று புரிந்து போனதால் அத்தனை அடி, உதை, சித்திரவதை என்பதையெல்லாம் தாங்கிக் கொண்டு உறுதியாய், சாந்தமாய், மலையாய் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தார் ஸுஹைப் இப்னு ஸினான். ரலியல்லாஹு அன்ஹு.
oOo
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ருவுடன் மதீனா புலம்பெயரப் போகிறார்கள் என்ற திட்டம், குறிப்பிட்டத் தோழர்களுக்கு மட்டும் தெரியவந்தது. அவர்கள் இருவருடன் தாமும் சேர்ந்து கொள்ளவேண்டும் என்று கருதினார் ஸுஹைப். ஆனால் அதற்குரிய வாய்ப்பு அமையவில்லை. நபியவர்களும் அபூபக்ருவும் மக்காவிலிருந்து கிளம்பிச் சென்றதும் மற்ற முஸ்லிம்களும் மெதுமெதுவே தப்பிச்செல்வதை அறிந்து கொண்ட குரைஷிகள் காவலை பலப்படுத்த ஆரம்பித்தனர். முக்கியமான சிலருக்குத் தனிப்பட்ட முறையிலெல்லாம் சிறப்புக் காவலர் பாதுகாப்புபோல் ஆள் அமர்த்திவிட்டார்கள். ஸுஹைபுக்கும் சிறப்புக் காவல் போடப்பட்டது. இரா, பகல் என்று அனைத்து நேரமும் குரைஷிகளின் கழுகுப் பார்வையின்கீழ் சிக்கிப்போனார் ஸுஹைப்.
வெறுங்கையுடன் அடிமையாய் மக்காவிற்கு வந்திருந்த ஸுஹைப், பின்னர் விடுதலையடைந்து வாணிபத்தில் சிறந்து விளங்கியதால் நிறையப் பொருள் ஈட்டியிருந்தார்; செல்வம் சேர்ந்திருந்தது. எனவே ஸுஹைப் தப்பித்துப் போய்விடக்கூடாது என்ற எண்ணம் குரைஷியருக்கு ஒருபுறம் இருக்க, அத்தனை செல்வத்தையும் பொருளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட அனுமதிக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணம் அதைவிட மேலோங்கியிருந்தது.
ஆனால் ஸுஹைபுகோ ஒரே எண்ணம். ‘நபியவர்களைப் பின்தொடர்ந்து எப்படியும் மதீனா சென்றுவிட வேண்டும்’
அதற்கு என்ன வழி? இந்தக் குரைஷியர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிப்பது எப்படி? என்று அவர் மனமெங்கும் கவலை பரவ ஆரம்பித்தது. பரிதவிப்புடன் தினமும் யோசித்துக் கொண்டிருந்தவருக்குத் திட்டமொன்று உருவானது.
ஒருநாள் இரவு. நன்றாக இருள் கவியும்வரைக் காத்திருந்தார் ஸுஹைப். வீட்டைவிட்டு வெளியே வந்தவர், நடக்க ஆரம்பித்தார். தம் வீட்டை நோட்டம்விட்டுக் கொண்டு வெளியே எதிரிகள் காத்திருப்பார்கள், தம்மைப் பின்தொடரப் போகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். மறைவாய்ப் பின்தொடர்ந்தனர் குரைஷி உளவாளிகள். அக்காலத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க, ஊருக்கு வெளியே சற்று ஒதுக்குபுறமாய்ச் செல்லவேண்டும். அங்குச் சென்றார் ஸுஹைப். காத்திருந்தனர் எதிரிகள். சற்றுநேரம் கழித்து அவர் வீடு திரும்ப, திருப்தியுடன் தங்களது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர் அவர்கள்.
சற்று நேரம் கழித்து மீண்டும் வீட்டைவிட்டுக் கிளம்பினார் ஸுஹைப். மீண்டும் பின்தொடர்ந்தனர் எதிரிகள். அதேபோல் வீடு திரும்பினார் ஸுஹைப்.
இதேபோல் பலமுறை செய்ய ஆரம்பித்துவிட்டார் ஸுஹைப். நொந்துபோன காவலாளிகள் சிரித்துக் கொண்டார்கள். “நம் கடவுளர்கள் அவரது குடலைக் கெடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. விடு! இன்றிரவு அவர் எங்கும் ஓடிப்போகப்போவதில்லை” என்று தங்களது இடத்திற்குத் திரும்பிவந்து கண்ணயர்ந்தனர். அதற்காகவே காத்திருந்த ஸுஹைப் அவர்கள் அயர்ந்து உறங்கிவிட்டார்கள் என்பது உறுதியானதும் சட்டெனக் கிளம்பிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து உறங்கிக் கொண்டிருந்த காவலர்களில் ஒருவன் எழுந்து ஸுஹைபைக் காணவில்லை என்றதும் அலறி அடித்துக்கொண்டு தன் சகாக்களை எழுப்ப, அவர்கள் அனைவரும் அவசர அவசரமாய்க் குதிரைகளில் சேணம் பூட்டி மதீனாவின் திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்கள். அவர்களது ஊகம் தப்பவில்லை.
தப்பித்துச் சென்று கொண்டிருந்த ஸுஹைப் தமக்குப் பின்னால் குதிரை ஒலிகள் நெருங்குவதைக் கேட்டார். பரந்த வெளியில் பதுங்கி மறைய ஏதும் இடம் இருப்பதாய் அவருக்குத் தெரியவில்லை. மாட்டினால் தப்பிப்பது கஷ்டம். சட்டென்று அருகில் தென்பட்ட செங்குத்தான குன்று ஒன்றின்மீது தாவி ஓடி ஏறி நின்றுகொண்டார். வில்லில் அம்பைப் பூட்டி ஏந்திக் கொண்டு அங்கிருந்தே இரைந்து கத்தினார்,
“ஏ குரைஷிக்குல மக்கா! அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் ஒரு மிகச் சிறந்த வில்லாளி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என் குறி தப்பாது. நீங்கள் என்னை நெருங்குவதற்குமுன் எனது அம்புகள் உங்களைத் தாக்கும். ஒவ்வொருவரையும் எண்ணி எண்ணித் தாக்குவேன். மீறி நெருங்கினால் என் வாள் உரையாடும். நீங்கள் என்னை உயிருடன் பிடித்துவிடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள்”
திகைத்து நின்றார்கள் அவர்கள்; வேகம் மட்டுப்பட்டது. அவர்களில் ஒருவன் கத்தினான். “நீ உனது செல்வத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது”
சட்டெனப் புரிந்தது அவருக்கு. “இதுதான் உங்கள் பிரச்சினையா?” எளிது; அதைத் தீர்ப்பது அவருக்கு எளிது. “எனது பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு இனாமாகத் தந்துவிடுகிறேன். பிறகு நான் என் போக்கில் செல்லலாம்தானே?”
ஏக மகிழ்வுடன் தலையாட்டினார்கள் அவர்கள். குன்றிலிருந்து இறங்கி வந்தார் அவர். தனது செல்வப் பொருட்களையெல்லாம் மக்காவில் ஓரிடத்தில் பத்திரமாக மறைத்து வைத்திருந்தார் ஸுஹைப். அதன் விபரங்களை அவர்களுக்குத் தெரிவிக்க, அதையெல்லாம் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், ‘இப்பொழுது நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்’ என்று அவரை விடுவித்தார்கள்.
இங்கு நாம் கவனித்து உணர செய்தி ஒன்று உண்டு. இறைவனும் நபியும் கட்டளைகளும் நமக்கெல்லாம் இரண்டாம் பட்சமாகி, செல்வமும் உலக வாழ்க்கையின் வெற்றியுமே முக்கியம் என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம். மீந்த பொழுதுகளே சோம்பலான இறை வணக்கத்திற்குப் போதுமானதாய் இருக்கின்றன.
இவரோ உண்மையைத் தேடி ரோம நாட்டிலிருந்து மக்காவிற்கு ஓடிவருகிறார். பிறகு அத்தனை காலம் வியர்த்து, களைத்து, ஓடியாடி உழைத்து ஈட்டியிருந்த தமது அத்தனை செல்வத்தையும் துச்சமென அவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, மனமெங்கும் இஸ்லாம் நிரப்பிய இறை நம்பிக்கையையும் மகிழ்வையும் மட்டுமே சுமந்துகொண்டு வெறுங்கையுடன் மதீனாவிற்குப் பயணம் கிளம்பிச் செல்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.
மக்காவிலிருந்து மதீனாவின் தூரமும் குறைவானதில்லை; பாதையும் புல்வெளிகளால் நிரம்பியதில்லை. பாலையும் மணலும் குன்றும் பாறையும் என்று கடினமான பயணம். சோர்வில் துவண்டு விழுந்தன அவரது கால்கள். இதற்குமேல் முடியாது என்று களைப்பின் உச்சத்தை எட்டும் போதெல்லாம், இனி காலத்திற்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்திருக்கப் போகிறோமே என்று நினைத்துப் பார்க்க, உற்சாகம் ஒன்று பொங்கியெழுந்து அவரது உடலெங்கும் பரவும்; பயணம் உத்வேகத்துடன் தொடரும்.
மதீனாவின் புறநகர்ப் பகுதியான அல்-ஹர்ரா எனும் இடத்தில் உமரும் இதர சில தோழர்களும் மக்காவிலிருந்து வந்துகொண்டிருந்த ஸுஹைபைச் சந்தித்தார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர்கள், “நிச்சயமாக உமது வாணிபம் வெற்றிபெற்றது” என்றனர்.
புரியவில்லை ஸுஹைபிற்கு. “அல்லாஹ் உங்களுடைய வாணிபத்தையும் வெற்றிகரமாக ஆக்கிவைப்பானாக” என்று பதிலுக்கு வாழ்த்தியவர், “என்ன செய்தி?” என்று விசாரித்தார்.
இறைவன் அருளிய வசனத்தைப்பற்றித் தெரிவித்த உமர், “ஓ ஸுஹைப்! உமது வாணிபம் வெற்றியடைந்தது” என்றார் மீண்டும். அப்பொழுது மதீனா நகருக்கு வெளியே அமைந்திருந்த குபா நகரின் பள்ளியில் தங்கியிருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தடைந்தார் ஸுஹைப். அவரை அன்புடனும் ஆதுரவுடனும் வரவேற்றவர்கள், “நீர் நல்ல லாபகரமான கொள்முதல் செய்துவிட்டீர் அபூயஹ்யா” அதை வலியுறுத்தும்விதமாக இரண்டுமுறை கூறினார்கள் நபியவர்கள். வியந்துபோனார் ஸுஹைப்!
“அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் வந்தபாதையில் யாரும் என்னைக் கடந்து மதீனா வரவில்லை. எனவே அங்கு என்ன நடந்ததென்று வானவர் ஜிப்ரீலைத் தவிர யாரும் தங்களுக்குத் தெரிவித்திருக்க வாய்ப்பேயில்லை”
அதன்பிறகு நபியவர்கள் கலந்து கொண்ட போர்களிலெல்லாம் ஸுஹைப் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. நபியவர்களுக்கு மக்கள் பிரமாணம் அளிக்க நேர்ந்த அனைத்துத் தருணங்களிலும் ஸுஹைப் தவறாமல் இடம்பெற்றவர். நபியவர்கள் சிறுபடைகளை அனுப்பிவைக்கும் போதெல்லாம் அதில் ஸுஹைப் நிச்சயமாக இடம்பெற்றிருந்தார். நபியவர்களுடன் போருக்குச் சென்றால் அவர்களுக்கு வலப்புறமோ இடப்புறமோ ஸுஹைப் நிச்சயம். போரில் நபியவர்களை எந்த எதிரியும் அண்மிவிட ஸுஹைப் அனுமதித்ததே இல்லை. படை அணிவகுப்பில் ஸுஹைப் முற்பகுதியில் இருந்தால் அவரைமீறித் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் நிகழ்ந்து விடாது என்று முஸ்லிம்படையினர் நம்பினர். அதுவே முஸ்லிம்களுக்கும் மிகப்பெரும் ஆன்ம பலமாக அமைந்து போனது. அதுவே அவர் படையின் பின்பகுதியில் இடம்பெற்றால் தங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளால் எந்த ஆபத்தும் அண்டிவிட முடியாது என்ற உறுதி அவர்களுக்கு ஏற்படும்.
நபியவர்களின் தோழர்களில் ஆலோசனை வழங்குபவர்கள் பலர் இருந்தனர். அக்குழு நிறம், இனம், மொழி சார்ந்தெல்லாம் அமையாமல் தோழர்களது மனதில் வேரூன்றியிருந்த ஏகத்துவம், ஆழ் நம்பிக்கை, இறை பக்தி ஆகியனவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது. யாரெல்லாம் அக்குழு? குரைஷி குலத்தைச் சேர்ந்த அபூபக்ரு, பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த அலீ இப்னு அபூதாலிப், எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிலால், பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான், செல்வந்தர் உதுமான், வறியவர்கள் அம்மார், எவ்வித வாழ்வாதாரமும் அற்ற திண்ணைத் தோழர்கள் மற்றும் இவர்களுடன் ஸுஹைப் அர்-ரூஃமி.
பெருந்தன்மையும் தாராள குணமும் அளவில்லாமல் அமைந்து போனார் ஸுஹைப். தமக்கெனக் கிடைக்கும் வருமானத்தையெல்லாம் முஸ்லிம்களின் கருவூலத்திற்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிட்டுவிட வேண்டும் அவருக்கு. வறியவருக்கும் அனாதைகளுக்கும் அவலநிலையில் உள்ளவர்களுக்கும் அவர் அள்ளி அள்ளிச் செலவிட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த உமர் ஒருமுறை கேட்டார், “நீர் மிகத் தாராளமாய் மக்களுக்கு உணவளிப்பதையும் உதவுவதையும் காண்கிறேன் ஸுஹைப்”
“அல்லாஹ்வின் தூதர், ‘ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உணவளிப்பவர் உங்களில் சிறப்பானவர்’ என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் உமர்” என்றார் ஸுஹைப். அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொள்ள ஆரம்பித்தார் உமர்.
ஒருநாள் காலை உமர், ஸுஹைபைச் சந்திக்க வந்தபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது உமர் கலீஃபாவாய் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலம். ஸுஹைபை எழுப்பாமல் கொள்ளாமல் அருகில் அமர்ந்து கொண்ட கலீஃபா, அவர் உறக்கம் கலைந்து எழும்வரை அமைதியாகக் காத்திருந்தார். விழித்தெழுந்த ஸுஹைப் திடுக்கிட்டுவிட்டார். “ஸுஹைப் உறங்கிக் கொண்டிருக்க அமீருல் மூஃமினீன் அமர்ந்து காத்திருப்பதா!” என்று சங்கடத்துடன் கூற, “உமது உறக்கத்தை நான் கலைக்க விரும்பவில்லை. அந்த இளைப்பாறுதல் உமக்குத் தேவை என்று கருதினேன்” என்றார் உமர்.
உமர் கத்தியால் குத்தப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த நேரம். அடுத்து கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சூழல்.
நபியவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவர்களான, பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஆறு பேரை உமர் தேர்ந்தெடுத்தார். அலீ, உதுமான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் பின் அபீ வக்காஸ், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லஹு அன்ஹும். அவர்கள் அனைவருமே அடுத்து கலீஃபாவாய் தேர்ந்தெடுக்கபட தகுதி வாய்ந்தவர்களாய்க் கருதப்பட்டவர்கள்.
‘இவர்கள் தங்களில் ஒருவரின் வீட்டில் குழுமி கலந்து பேசிக்கொள்ள வேண்டும். அவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு உமர் இருப்பார்; ஆனால் அவருடைய பணி ஆலோசனை தேவைப்படின் அதை வழங்குவது மட்டுமே. மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூ தல்ஹா அல்-அன்ஸாரீ ஆகிய இருவரும் அந்த ஆறுபேரும் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் தேர்தல் நிகழ்வை மேற்பார்வையிட வேண்டும்’ என்று நியமித்தார் உமர்.
தம் மரணத்திற்குப்பின் அவர்களுக்கு மூன்று நாள் மட்டுமே அவகாசம் என்றார் உமர். அதற்குள் அவர்கள் பேசி முடிவெடுத்து கலீஃபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட அதிக அவகாசம் தேவைப்படும் நிலை ஏற்பட்டால் அது ஆழ்ந்த கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திவிடும் என்று கருதிய உமர், “நாலாவது நாள் வருவதற்குள் உங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்.
அந்த மூன்று நாளும் தொழுகையின் இமாம் யார் என்றும் அறிவித்தார் உமர்.
பள்ளிவாசலின் இமாம் என்று இன்று நமக்கு அறிமுகமாகியுள்ளதே ஒரு வழக்கம் அப்படியொன்று அன்று இருந்ததில்லை. கடைச் சிப்பந்திகள்போல் இமாம்கள் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டதில்லை. தொழுகையின் இமாம் மக்களின் தலைவராய் இருந்தார். அது அவரது தலையாயப் பணியினுள் ஒன்று. மக்கள் அவருக்குக் கட்டுப்பட்டுப் பின்பற்றி நடந்தனர். மதீனாவைப் பொருத்தவரை கலீஃபாதான் இமாமாக நின்று தொழவைப்பார். இதர ஊர்களுக்கும் பிராந்தியங்களுக்கும் அங்கங்கு உள்ள ஆளுநர்கள் இமாமாகத் தொழ வைத்தனர். ஓர் ஆளுநர், பதவி விலக நேர்ந்தாலோ, போருக்காக அல்லது ஹஜ்ஜுக்காகப் பயணப்பட நேர்ந்தாலோ, ஒருவரைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அவரைத் தொழுகைக்கு தலைமையேற்க நியமிப்பார்.
உமரின் மரணத்திற்குப்பிறகு அடுத்த கலீஃபா தேர்ந்தெடுக்கப்படும்வரை மிகவும் பொறுப்பான ஒருவர் மக்களுக்கு இமாமாக நின்று தொழவைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு உமர் தேர்ந்தெடுத்த தோழர், ஸுஹைப் இப்னு ஸினான்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு மரணம் அடைந்தவுடன், அவருக்கு நிகழ்த்தப்பெற்ற இறுதித் தொழுகையை ஸுஹைப் முன்நின்று நடத்தினார். அதன்பிறகு கலீஃபாவைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்துபோன மூன்று நாள்களும் ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹு இமாமாகத் தலைமை தாங்கித் தொழவைத்தார்.
“அல்லாஹ்வின்மீது அவருக்கு அச்சம் அற்றுப் போனாலுங்கூட அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்க மாட்டார்” என்று ஸுஹைபைப் பற்றி உமர் குறிப்பிடுவது வழக்கம். அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து அவனது கட்டளைகளுக்கு மாறுபுரியாமல் அடிபணிவது வேறு. ஆனால் அல்லாஹ்வின் மீது ஏற்பட்டுவிடும் அளவற்ற அன்பினால் அவனுக்கு முழுமுற்றிலும் அடிபணிந்துவிடுவது இருக்கிறதே அது பக்தியின் உச்சம். இறைநம்பிக்கையின் மகா உன்னதம் அது.
இதைப் புரிந்து கொள்வது கடினம்போல் தோன்றலாம். தோராயமான இந்த உதாரணம் உதவும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பணிவிடை புரிந்து கொள்கிறார்கள். அதை அவர் முகம் சுளிக்கக்கூடாதே, கோபப்படக் கூடாதே என்பதற்காக மட்டுமே செய்து கொள்ளலாம். ஆனால் அதே உபச்சாரத்தைக் காதல் மேலீட்டால் செய்து கொள்ளும்போது எப்படி இருக்கும்? ஒப்பிட்டு யோசித்தால் சற்று விளங்கும். பின்னதில் அன்பு அடிப்படையாகிப் போகிறதல்லவா?
அல்லாஹ்வின்மீது அத்தகைய அன்பில் மூழ்கி வாழ்ந்து மறைந்தார் ஸுஹைப் இப்னு ஸினான்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
சத்தியமார்க்கம்.காம்-ல் 15 மார்ச் 2011 அன்று வெளியான கட்டுரை