Image of Chapter 13

அதே நிலைமையில் ஷஜருத்துர் எவ்வளவு நேரம் மெய்ம்மறந்து இருந்தாளென்பது அவளுக்கே தெரியாது. ஒவ்வொரு நிமிஷமும் அவள் அந்த அமீரின்

வரவையே அதிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். அரண்மனையில் நடக்கிற கலகம் என்ன மாதிரியான பயங்கர முடிவை உண்டுபண்ணப் போகிறதோ என்று அவள் மனம் கலங்கித் தத்தளித்துக்கொண்டிருந்தது. வயது முதிர்ந்த இக் கிழவர் இந்தப் பெரும்புரட்சி நடக்கிற இடத்துக்கு ஏன் போகவேண்டுமென்றுகூட அவள் மனம் கடிந்துகொண்டது.

ஆனால், ஓர் அமீர் நாடுகிற வண்ணம் செய்கிற எந்தச் செயலைத்தான் ஒரு விலைகொடுத்து வாங்கப்பட்ட பெண்ணடிமை தடுத்து நிறுத்தவோ, அல்லது மாற்றியமைக்கவோ முடியும்? அமீர் தாவூத் எத்துணை எல்லையற்ற அன்புடனே ஷஜருத்துர்ரைத் தம்சொந்த மகள் போல நடாத்தி வந்தாலும், அவள்மட்டும் தான் அடிமையாக அவருக்கு விற்கப்பட்டவளென்பதை எந்த நிமிஷமும் மறந்ததில்லை.

எனவே, அவள் அந்த அமீரிடம் பழகுந்தோறெல்லாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவருடைய கோபத்துக்கோ, அதிருப்திக்கோ ஆளானதில்லை. என்றாலும், சென்ற இருபதுமணி நேரமாக அந்த அமீரின் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் இரவுகேட்ட பாதிக் கதையின் பரவசமும் அச் சிறுநங்கையின் உள்ளக்கிளர்ச்சியை அதிகம் ஊக்கிவிட்டதுடன், அவள் எல்லா விஷயங்களையும் அப்போதே தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தாள். அரசாங்க விஷயத்தில், அல்லது ராஜாங்க நடடிவக்கைளில் மிகவும் பொறுமையுடனிருப்பது மெத்த அவசியமென்பதை அவள் எப்படி அதற்குள் உணர்ந்திருத்தல் இயலும்?

இறுதியாக அவள் பொறுமையை இழந்து, எப்படியாவது அம் மாளிகையை விட்டு வெளியேறி, காவலாளிக்குத் தெரியாமல் அரச அரண்மனையில் என்ன நடக்கிறதென்பதை எப்படியாவது தெரிந்து வந்துவிட வேண்டுமென்று துணிந்தெழுந்த நேரத்தில் அமீர் தாவூதே திரும்பி வந்துவிட்டார். புன்முறுவல் தவழும் வதனத்துடனும், வேர்வை வழியும் மேனியுடனும் அந்த அமீர் அங்கு வந்து நுழைந்ததைக் கண்டதும், புத்துயிர் வந்ததுபோன்ற புதிய உணர்ச்சி பிறந்தது. சட்டென்று அமீரின் மேலாடைகளைக் கழற்ற அவள் உதவிபுரிந்தாள். அவரும் கலவரமற்ற நிதானமான குரலில் அவள் சாப்பிட்டு விட்டாளா என்று பைய விசாரித்தார்.

“தாங்கள் வராமல் நான்மட்டும் எப்படிச் சாப்பிடுவது?” என்று சிரித்தவண்ணம் அவள் பதில் கேள்வியைப் போட்டாள்.

“அமீராயிருக்கிற எனக்கு அலுவல்கள் ஆயிரமிருக்கும். அவற்றைக் கவனித்துவிட்டு நான் வருகிறவரையில் நீயும் பட்டினியாயிருப்பதா?

“தாதா! தங்களைவிட்டும் நான்மட்டும் உணவருந்த விரும்பாததற்குத் தாங்கள் என்மீது காட்டிவருகிற எல்லையற்ற அன்புதானே காரணம்?…..சரி! உணவு ஆறிப்போகிறது; வாருங்கள் சேர்ந்து சாப்பிடுவோம்.”

அமீர் கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு, வயிறார உணவு உட்கொண்டார். ஷஜரும் சிறிது சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்ததும் அமீர் தாவூத் கூறினார் :

“மகளே! இன்றொரு புனிததினம் : அக்கிரமக் கொடுங்கோலன் அழிக்கப்பட்டான். நல்ல நீதிமான் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டான்.”

”என்ன! சுல்தான் ஆதில் கொல்லப்பட்டு விட்டாரா?”

“ஆம்! பொதுமக்களின் வாழ்க்கையைக் கொல்ல முயலும் சுல்தானின் கதி எப்போதுமே அப்படித்தான் போய்முடியும். இதிலென்ன வியப்பிருக்கிறது? அபூபக்கர் ஆழ்த்தப்பட்டான்; ஸாலிஹ் உயர்த்தப்பட்டார்.”

“ஸாலிஹ் இப்போது சுல்தானாகிவிட்டாரா, என்ன?-”

“ஆமாம்! ஆண்டவன் என் எண்ணத்தை நல்லவிதமாகப் பூர்த்திசெய்து வைத்ததுடன், ஐயூபி வம்சத்துக்கே வரவிருந்த அழிவுக்காலத்தையும் அகற்றிவிட்டான். இனி இந்த ஸல்தனத்துக்கு அபாயமில்லை. எந்தக் கலீஃபா முயன்றாலும் இனிமேல் இந்த ஐயூபி வம்சத்தை அகற்றி வேறொரு வம்சத்தவரை இந்த மிஸ்ரின் ஸல்தனத்துக்குக் கொண்டுவர முடியாது. அன்று அந்த வீரர் ஸலாஹுத்தீன் நாட்டிச்சென்ற புகழுக்கு இனிப் பங்கம் விளையாது. நான் சமீபகாலமாகக் கண்டுவந்த கனவை நனவாக்கிய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!”

அமீர் கூறிய இந்த சில வார்த்தைகளிலிருந்தே ஷஜருத்துர் சர்வ விஷயத்தையும் நன்கு புரிந்துகொண்டு விட்டாள். சற்றுநேரம் மௌனம் நிலவியது.

“தாதா! அன்று தமீதாவுக்குத் தனியே போகப்பயந்த அதே ஸாலிஹ்தானே இன்று நம் சுல்தானாகியிருக்கிறார்?” என்று ஷஜருத்துர் ஆவலுடன் கேட்டாள்.

“அவரேதாம். ஆனால், சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னே அவர் சிறுபாலகனாயிருந்ததைப் போலவா இன்றும் இருக்கிறாரென்று நீ நினைக்கின்றாய்? இன்று இந்த ஸாலிஹ் பெரிய மன்னர். இந்த ஸல்தனத்தின் சுல்தான்; காலஞ்சென்ற மன்னாதி மன்னர் ஸலாஹுத்தீன் வீரரின் ஒரே அருமந்த புத்திரியாகிய மூனிஸ்ஸா என்னும் இளவரசியை மணந்துகொண்டிருக்கிற பெரியமனிதர். தமீதாவுக்கு அவர் பிணைப்பொருளாகச் சென்றபோது எப்படிக் குழந்தையாயிருந்தாரோ, அதேபோன்ற ஓர் அழகிய பிள்ளையையும் இப்போது அவர் பெற்றிருக்கிறார்…”

“என்ன! சுல்தான் ஸாலிஹ் திருமணம் ஆனவரா? குழந்தையையும் பெற்றிருக்கிறாரா? நேற்று மாலை தாங்கள் மற்ற அமீர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஸாலிஹ் இப்போது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார்?” என்று ஒன்றுமறியாதவர்போலே கேட்டீர்களே! இன்று எல்லா விவரங்களையும் அடுக்கியடுக்கிக் கூறுகிறீர்களே! எனக்கொன்றும் விளங்கவில்லையே!” என்று அவள் குறுக்கிட்டுக் கூறினாள்.

“என் கண்ணே! மீன் பிடிப்பவனுக்குத் தூண்டில் மிதப்பின்மீதேதான் கண்ணிருக்கும் என்கிற உண்மையை நீ அறியாயா? நான் அரசாங்க அலுவல்களில் தலையிடாமல் சென்ற சிலகாலமாகத் தனித்து நின்றிருந்தேனெனினும், எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். நேற்று மற்ற அமீர்களிடம் நான் ஒன்றுமறியாதவன் போலே கூறிய வார்த்தைகள் என்னால் வேண்டுமென்றே கூறப்பட்டன. நீ சிறுபெண் தானே? உனக்கு அதன் இரகசியமெல்லாம் தெரியா. இந்த ஸல்தனத்துக்கு அந்த ஸாலிஹ் எப்படியாவது வந்து தீரவேண்டுமென்று எப்போதும் விழைந்துநின்ற எனக்கு எல்லா விவரமும் தெரியாமலா போயிருக்கும்? என் உள்ளக்கருத்தை வெளியிடாமல் அப்படி மாற்றமாகக் கூறினேனே அதற்குத்தான் ராஜதந்திர நிபுணத்துவும் என்று சொல்வார்கள்.”

“அது சரி! ஆனால், என்னிடம் சென்று இரவு பேசும்போதுகூட மன்னர் மலிக்குல் காமில் மைந்தர் ஸாலிஹைப் பிணைவைத்த பின்பு என்ன நேர்ந்ததென்பது தங்களுக்குத் தெரியாதென்று சொன்னீர்களே! அதுவும் மற்றொரு ராஜதந்திர நிபுணத்துவமோ?”

“ஒ, அதுவா? உனக்குச் சாவகாசமாக எல்லாக் கதையையும் நிதானமாகச் சொல்லலாமென்று நினைத்து, அப்படிச் சொல்லிப் பார்த்தேன். ஆனால், நீயோ என்னை விடவில்லை; விடிகிற வரையில் விழித்தேயிருந்தாய்.”

“தாதா! தாங்கள் என் பொறுமை எப்படியிருக்கிறதென்பதைப் சோதிக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். நானோ, தங்கள் அடிமை; அரசியல் விவகாரம், ராஜ்ய சங்கடங்கள், ஸல்தனத்தின் சிக்கல் நிலைமை ஆகிய எந்த ஒரு விஷயத்தையும் அறியாத அயல்நாட்டுச் சிறுமியும் அநாதையுமாகிய நான் தங்களிடம் விலைக்கு விற்கப்பட்டேன். ஆனால், நான் தங்கள் சொத்தாக என்றைக்கு ஒப்படைக்கப்பட்டேனோ, அன்றே நான் தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாகிவிட்ட காரணத்தால், இந்த அரசாங்க சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முற்றும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

“ஷஜருத்துர்! உன்னிடம் நான் எல்லாவற்றையும் கூறாமல் வேறு யாரிடம் கூறப்போகிறேன்? உன் பொறுமையைச் சோதிப்பதற்காக நான் இத்தனை நாட்களாக இதையெல்லாம் கூறாமல் இருக்கவில்லை; ஆனால், தக்க சந்தர்ப்பம் வரட்டுமென்றே காத்திருந்தேன். இன்று அந்தச் சந்தர்ப்பம் வந்துவிட்டது. சென்ற இரவு நான் விட்ட இடத்திலிருந்து சரித்திரத்தைத் தொடர்ந்து கூறுகிறேன். கவனமாய்க் கேள்,” என்று முகவுரையுடன் கிழவர் கதையைத் தொடர்ந்தார் :-

தமீதாவின் முற்றுகை மிக மும்முரமாயிருந்த காலத்தில் நம் சுல்தான் அல்மலிக்குல் காமில் தம் மைந்தர் ஸாலிஹை ஈடாக அனுப்பி, அந்தக் கிறிஸ்தவப் பிரதிநிதியை இங்கே அரண்மனைக்கு வரவழைத்தார். யுத்த நிறுத்தத்துக்காக ஏற்பாடுகளைச் செய்வதற்கான பூர்வாங்கப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாயின. ஆனால், கையோங்கி நிற்கும் அக் கிறிஸ்தவர்கள் எப்படி நம் கோரிக்கைக்கு இணங்குவார்கள்? நம்மால் ஏற்கமுடியாத நிபந்தனைகளையெல்லாம் அந்தப் போப்பின் பிரதிநிதி பெலேஜியஸ் அடுக்கிக்கொண்டே போனார். மேலும், அவற்றை நாம் ஏற்பதானால் அரசாங்கம் முழுதுமே போப்பாண்டவருக்கு அடிபணிய வேண்டியிருக்கும்; அல்லது சகல முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களாக மாறிவிட வேண்டுமோவென்று சந்தேகிக்கவும் நேர்ந்துவிட்டது. பைத்துல் முகத்தஸையும் அக் கிறிஸ்தவர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று பேராசைமிக்க அப்பிரதிநிதி கோரினார்.

சுல்தான் காமிலுக்கு அந்தப் போக்கிரித்தனமான நிபந்தனைகளைக் கேட்டதும் உதிரம் கொதித்துவிட்டது. சுமுகமான முறையில் ஒழுங்காக யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளலாமென்று எதிர்பார்த்த அவருக்கு இது பெருத்த அவமானத்தையும் ஏமாற்றத்தையுமே கொடுத்தது. எனவே, அவர் அந்தக் கிறிஸ்தவப் பிரதிநிதியை நோக்கி, தாம் அந்நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட இயலாதென்றும், சுமுகமான முறையில் இணங்கிப்போக அவர் விரும்பவில்லையேல் முஸ்லிம்கள் இறுதிவரை போராடியே தீருவரென்றும், இனி எதுவந்தாலும் வரட்டுமென்று தாம் துணிந்துவிட்டதாகவும் கர்ஜித்துப் பேசினார். அப்போது அந்தப் போப்பின் பிரதிநிதி, “ஏ சுல்தான்! ஏன் வீணே கத்துகின்றீர்? நீரே எம்மை இங்கு வரவழைத்தீர். யுத்தத்தையும் முற்றுகையையும் நிறுத்த வேண்டுமென்று எம்மிடம் நீர்தான் கூறினீர். நாங்கள் சில நிபந்தனைகளை விதிக்கிறோம். அவற்றை நீர் ஏற்றுக்கொண்டால், சரி. இல்லையேல் எங்களுக்கொன்றும் நஷ்டமில்லை. இதற்காக நீர் ஏன் பாய்ந்து வீழ்ந்து பதறவேண்டும்?” என்று நாசூக்காகப் பேசினார். இவ் வார்த்தைகள் அல் மலிக்குல் காமிலுக்கு இன்னம் அதிகமான உத்வேகத்தைக் கிளப்பிவிட்டன.

“ஏகதெய்வத்தை மூன்றாக்கி, ஆண்டவன் அனுப்பிய தூதரைத் தேவகுமாரனென்று கூறி, சுவர்க்கத்தின் வாயிற்கதவின் சாவியைப் போப் வைத்துக் கொண்டிருக்கிறாரென்று அறிவுகெட்டுத் தடுமாறித் திரியும் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியே! அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் கூறுகிறேன் : உங்களுக்கெல்லாம் அழிவுக்காலம் வந்தே விட்டது. அன்று எம்முடைய பெரிய தந்தை ஸலாஹுத்தீன் உங்களையெல்லாம் சும்மா விட்டுவிட்டது உங்கள் எல்லாரின் கேடுகாலத்துக்கே போலும்! எங்கள் தந்தையை எதிர்க்க அஞ்சி, ஷாம் பகுதியிலிருந்து பதுங்கிவந்து, சோம்பேறிப் பேடிகளேபோல், உதவுவாரற்றுக் கிடக்கும் குற்றமற்ற தமீதாவாசிகளை முற்றுகையிட்டுக் கொடுமைப்படுத்தும் உங்கள் வீரத்தைக் கண்டு நான் நகைக்கிறேன். ஜெருஸலேம் என்னும் பைத்துல் முகத்தஸைக் கைப்பற்ற வந்த நீங்கள் அம் முயற்சியில் படுதோல்வியுற்றுவிட்ட பின்னர் மரியாதையாகத் திரும்பிப் போய்விட வேண்டியதுதானே? தமீதா உங்களுக்கு என்ன தீமையைச் செய்தது? உங்கள் போப்பாண்டவர் இந்த மிஸ்ர் தேசத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காகவா பேடிகளாகிய உங்களெல்லாரையும் படைதிரட்டி அனுப்பிவைத்தார்? நீங்கள் நிஜமான வீரர்களாயிருந்திருப்பின், அல்லது புண்ணியத் தலமாகிய ஜெருஸலேமை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்னும் உண்மையான ரோஷத்துடன் இருந்திருப்பின், என் தந்தையைப் போர்க்களத்தில் சந்தித்து ஒன்று வெற்றியைப் பெற்றிருப்பீர்கள்; அல்லது செத்துமடிந்திருப்பீர்கள். ஆனால், வந்த காரியத்தை விட்டுவிட்டு, ஒரு பாவமுமறியாத தமீதாவாசிகளை நீங்கள் வீணே முற்றுகையிடுவதும், அதை நிறுத்தவேண்டுமானால், உங்களுடைய பேராசைமிக்க கேவலமான நிபந்தனைகளை நாங்கள் ஏற்க வேண்டுமென்று சண்டித்தனம் புரிவதும் வியப்பாகவே இருக்கின்றன. செய்வது பேடித்தனமான செய்கை! கொள்வது கவைக்குதவாத வீராப்போ?”

“ஏ, முஹம்மதைப் பின்பற்றும் பேடி சுல்தானே! நீர் எம்மை இங்குக் கூப்பிட்டனுப்பியது இதற்குத்தானா? எம்முடைய நிபந்தனைகளை நீர் ஏற்க இப்போது மறுத்தால் இறுதியில் என்ன ஆகப்போகிறதென்பதை நீரே தெரிந்துகொள்வீர். எங்கள் போப்பாண்டவர் எங்களை ஜெருஸலேமைக் கைப்பற்ற அனுப்பினாரா அல்லது முஹம்மதியர்களாகிய உங்களெல்லாரையுமே ஒழித்துக்கட்ட அனுப்பினாரா என்பதைப் பற்றி நீர் பேசத் தகுதியில்லை. யுத்தகாலத்தில் எவரும் எதையும் செய்யலாம். போர் தொடுத்துப் படையெடுத்துவந்த நாங்கள் தமீதாவை முற்றுகையிட்டது நியாயமா அல்லது அநியாயமா என்பதைப் பற்றி நீர் விவாதிக்கத் தேவையில்லை. தேவன் மீதும், தேவகுமாரன் மீதும், பரிசுத்த ஆவியின் மீதும் ஆணையிட்டுத் திரண்டுவந்துள்ள நாங்கள் இறுதிவரையில் வெற்றியைப் பெற்றுக்கொள்ளாமல் வீடுதிரும்பப் போவதில்லை. தமீதாவின் கதி என்ன ஆகப் போகிறதென்பதை இப்போது நான் கூறமாட்டேன். நீரே பார்த்துக் கொள்ளும்,” என்று கூறியவண்ணம் அந்தப் பிரதிநிதி விர்ரென்று எழுந்து முதுகுப்புறத்தைத் திருப்பிக்கொண்டு அரசவையை விட்டு வெளியேறினார்.

சுல்தான் காமிலுக்கோ, சொல்ல முடியாத மனவருத்தமும், சகிக்கமுடியாத ஆத்திரமும் மூண்டுவிட்டன. பற்றாக்குறைக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் தமீதாவிலிருந்து வந்து சேர்ந்த செய்திகள் வேறு மனக்கிலேசத்தை உண்டுபண்ணிக் கொண்டேயிருந்தன. உணவின்றி மடியும் மக்களின் பரிதாபகரமான கதைகளைக் கேட்டு என்மனம் நெக்குருகிவி்ட்டது. இதே விதமாக நாட்கள் பல ஓடிக்கொண்டேயிருந்தன.

இறுதியாக, ஹிஜ்ரீ 616-ஆம் ஆண்டின் ரமலான் மாதத்தின் பத்தாவது நோன்பு தினத்தன்று தமீதா கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்துக்குள் வீழ்ந்துவிட்டதென்ற மிகவும் துக்ககரமான செய்தி எங்களுக்கு எட்டிற்று. முற்றுகையின் ஆரம்பத்தில் தமீதா நகருக்குள் எல்லா மதங்களையும் சேர்ந்த எழுபதாயிரம் மக்கள் வசித்துவந்தனர். ஆனால், அந் நகருக்குள் கிறிஸ்தவர்கள் நுழைந்தபோது, மூவாயிரம் பேர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அந்த மூவாயிரம் பேருங்கூட உயிரற்ற பிரேதங்களே போலத்தான் காட்சியளித்தார்களாம்! ஆனால், அந்தப் பரிதாப நடைப்பிணங்களாக நின்ற அத்தனை பேரையும் கண்ட அக்கிறிஸ்தவர்கள் கொஞ்சமும் நெஞ்சிரக்கங் கொள்ளவில்லை. இந் நீண்ட முற்றுகை முடிகிறவரையில் மிகவும் சிரமத்துடன் உயிரைப்பிடித்து வைத்துக்கொண்டிருந்த அந்த மூவாயிரம் பேரையும் படையெடுப்பாளராகிய கிறிஸ்தவர்கள் சற்றுமே ஈவிரக்கமின்றி நொடிப்பொழுதில் படுகொலை புரிந்து கொன்று குவித்துவிடடார்கள். சிலுவை யுத்தம் புரியவந்த ‘புனித ஆத்மாக்க’ளாகிய அவர்கள் செய்த இக்குரூரச் செயலை ஆண்டவன் என்றைக்கு மன்னிக்கப் போகிறான்?

தமீதாவின் வீழ்ச்சியும், அடுத்து நிகழ்ந்த படுகொலையும் எங்கள் எல்லாரையுமே பெருங்கலக்குக் கலக்கிவிட்டன. அந்த நோன்பு காலத்தின் மீதிநாட்கள் பூராவுமே காஹிராவெங்கும் பெருந் துக்கத்துடனேதான் கடத்தப்பட்டன. போதாக்குறைக்கு, தமீதா வீழ்ச்சியடைந்ததும், அக் கிறிஸ்தவர்கள் இன்னும் அதிகமான பேராசைப் பேய்பிடித்து, தெற்கு நோக்கிக் காஹிராமீதே படையெடுக்க ஆரம்பித்து, வேகமாக முன்னேறி வருகிறார்களென்ற செய்தி எங்களுக்கு எட்டியது. இச்செய்தி கேட்டதும், பலர் மூர்ச்சித்து வீழ்ந்தார்கள். கோழைநெஞ்சம் படைத்தவர் பலர் அதிர்ச்சி மேலீட்டால் மாண்டே போய்விட்டார்கள். நகரின் எந்தப் பக்கத்தில் பார்த்தாலும் பரபரப்பும் பேரச்சமுமே தாண்டவமாடின. பலபேர் வீடு வாசலைத் துறந்து, மனைவி மக்களுடன் அயலூர்செல்ல ஆயத்தமாகிவிட்டார்கள். தமீதாமீது அக் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்களென்ற செய்தியைக் காஹிரா வாசிகள் தெரிந்துகொண்டிருந்தமையால், அவர்கள் அவ்வளவு நிலைகுலைந்த அவலநிலைக்கு ஆளானது அதிசயமில்லை. இவ்விதமாகப் பல மாதங்கள் கழிந்தன.

அந்த நேரத்திலெல்லாம் நம் சுல்தான் காமில் என்ன செய்துகொண்டிருந்தாரென்று நீ அதிசயிக்கலாம். ஷஜர்! அதுதான் மிகவும் அதிசயமான விஷயம் : மலிக்குல் காமில் மட்டும் மிகவும் அமைதியாகவே இருந்துவந்தார். ‘நிச்சயமாக, அல்லாஹ் பொறுமையாளருடனே இருக்கிறான்’ என்பது நமது திருவேத வாக்கன்றோ? அவர் மனம் எவ்வளவு கலங்கியிருப்பினும், அவரது முகம் மட்டும் சற்றுமே கலவரங்கொண்டதாய்க் காணப்படவில்லை. மிகவும் சாந்தமான முறையில் அவர் மக்களுக்கு ஊக்கங்குன்றாமல் உபதேசம் புரிந்துவந்ததுடன், ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டார். மிஸ்ர் தேச மக்கள், சிறப்பாகக் காஹிராவாசிகள் கொஞ்சமும் கலவரப்படக் கூடாதென்றும், எதிர்த்துவருகிற அக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மிஸ்ரின் ஸல்தனத்தை அல்லாஹ்வினுதவியால் வீழ்த்தமுடியாதென்றும், எல்லாரும் ஒன்றாய்க்கூடி ஒவ்வொரு வேளைத் தொழுகையின்போதும் ஆண்டவனிடம துஆக்கேட்ட வண்ணம் மட்டும் இருக்க வேண்டுமென்றும் அப் பிரகடனத்தில் அறிவுறுத்தியிருந்தார்.

இத்தகைய பயங்கரமான சூழ்நிலையில் எதிரிகள் வருகிற கடுவேகத்தில் எவரே அந்த அரசப் பிரகடனத்தைச் சட்டை செய்வர்? எனவே, வெளியேறி ஓடுகிறவர் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது; காஹிராவும் ஜனநெருக்கடியற்ற அமைதியான தோற்றத்துடன் சோகக்காட்சியே அளித்தது.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-29 பிப்ரவரி 2012

<<அத்தியாயம் 12>>     <<அத்தியாயம் 14>>

 <<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment