சுல்தான் ஸாலிஹ் அமீர்களின் பகைவரென்று எவருமே கூறமுடியாது. பிரதம மந்திரி, அமீர் தாவூதைப்பற்றியும் ஏனை அமீர்களைப்பற்றியும் எவ்வளவோ இழிவாக
வெல்லாம் அடிக்கடி பேசிவந்த போதினும், சுல்தானுக்குமட்டும் ஆரம்பத்தில் அந்த வார்த்தைகள்மீது நம்பிக்கை பிறக்கவேயில்லை. சிறுபிராயம் முதல் அமீர் தாவூதுடன் அவர் மிக நெருங்கிப் பழகியிருக்கிறாராகையால், அவரைப்பற்றி வஜீர் கிளப்பிய அபவாதங்களை அவர் அப்படியே வரவேற்கத் துணியவில்லை. ஆதிலின் வீழ்ச்சிக்கு ஆதிலின் நடத்தைகளேதாம் காரணமென்றும், வஜீர் கூறுவதுபோல் அமீர்களின் சூழ்ச்சிகளல்லவென்றும் அவரது மனச் சாட்சியே உறுத்திக்கொண்டிருந்தது. குடிமக்கள் இயற்கையாகக் கொண்டுவிட்ட பெரும் அதிருப்தியே அண்ணனின் உயிரைக் குடித்ததன்றி, அமீர்களின் வஞ்சகத்திட்டமன்று என்பதை அவர் நன்கறிவார். எனவே, தாம் சுல்தானாக உயர்வதற்கு உறுதுணையாய் இருந்த அமீர்களளை அடியோடு நாசப்படுத்தி விடுவது பெருந் துரோகமான பாதகம் என்பதை அவருடைய உதடுகள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
எனினும், மன்னனாயிருப்பவன் தன் அமைச்சனின் மந்திர ஆலோசனையைச் செவிமடுக்காவிட்டால், அரசாட்சியை எப்படி நடத்துவது என்னும் ஏக்கமும், அவரை வாட்டிற்று. வஜீர் கூறுகிற அத்தனை விஷயங்களும் உண்மையல்லவென்று வைத்துக் கொண்டாலும், ஒரு விஷயமட்டும் எவராலும் மறுக்க முடியாததுதானே? அதாவது, அமீர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் அதிகாரத்தின் எல்லையைக் கடப்பதுடன், சுல்தான்களின் வாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் வழிகோலியும் விடுகிறார்களல்லவா? உண்மையிலேயே, நாட்கள் செல்லச்செல்ல, அந்த அமீர்கள் தங்கள் சுயநலங் கருதியாவது ஸாலிஹை வீழ்த்திவிடவேண்டுமென்று திட்டமிட்டு மற்றொரு புரட்சிக்கலகத்தை மூட்டிவிட்டால், என்ன செய்வது? ஆதிலின் தலையை உருட்டிய மக்கள் அவருடைய தம்பிக்கும் அதேகதியை உண்டுபண்ணி விட்டாலோ?
இந்த எண்ணம் ஸாலிஹின் உள்ளத்துள் உதித்ததும், அவர் பிரமித்துப் போனார். உலகம் பொல்லாததுதான்! இன்று ஒருவித மனம் படைத்தவர் நாளை நேர்முரணான குணங்களுடன் காட்சியளிக்கின்றார். “காலையிலொன் றாவர் கடும் பகலில் ஒன்றாவர், மாலையிலொன் றாவர் மனிதரெலாம்.” அதேபோல், அமீர்களும் நாளை அக்கிரமக்காரர்களாகப் போய்விட்டால்? முன்பெல்லாமாவது முதியவர் தாவூத் இருந்துகொண்டு மற்ற அமீர்களுக்கு நல்வழி காட்டிக்கொண்டிருந்தார். இனி யார் இருக்கிறார் அந்தமாதிரியான நல்லுபதேசம் புரியக்கூடியவர்? இதை நினைக்க நினைக்க, ஸாலிஹ் மன்னர் பெருமூச்சு விட்டுச் சோர்ந்தார்.
சிந்தை குலைந்த சந்தர்ப்பங்களில் மனிதனை ஆண்டவன் அதிகம் சோதிப்பது வழக்கம். அதேபோல், ஸாலிஹ் இருதலைக்கொள்ளி எறும்பேபோல் மனச்சஞ்சல முற்றுப் படுக்கையில் கிடந்து அரை உறக்கமாய்ப் புரண்டுகொண்டிருந்த பொழுது பயங்கரமான கனா தோன்றியது. அவருடைய காலஞ்சென்ற சகோதரர் அபூபக்ரின் உருவம் அவர் கண்ணெதிரில் வந்து நின்றது. அவ்வுருவத்தைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. அப் பேயுருவின் தலை முண்டத்துடன் ஒட்டாமல், இடைவழியை ஏற்படுத்திக் கொண்டு கழுத்துக்குமேல் அந்தரந்தில் நிற்பதேபோல் ஸாலிஹின் கண்களுக்குப் புலப்பட்டது. ஆனால், கழுத்துக்கும் முண்டத்துக்கும் இடையிலே இரத்தக் கறையொன்றும் தென்படவில்லை. அவ்வுருவம் ஸாலிஹை நெருங்குவதுபோல் தெரிந்தது. அது மெல்ல மெல்ல நடந்துவந்து, அவரருகில் நின்றது. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்த ஸாலிஹ் அதிர்ச்சியடைந்து போகுமாறு அவ்வுருவம் பேசவும் ஆரம்பித்தது!
“என்னை நன்றாய் உற்றுப்பார்! நான்தான் உன் அண்ணன் அபூபக்ர்….ஏன் உன் முகத்தை மூடிக்கொள்கிறாய்? என்னைப் பார்; பார்! நன்றாய்ப் பார்!
“சேசே! ஏன் என்னைக் கண்டு நீ பயப்படுகிறாய்? என் தலை என் உடலுடன் ஒட்டாமல் அந்தரத்தில் தொங்கி நிற்கிறதே என்றா? சை! இதற்குத்தானா பயப்படுகிறாய்? என் தலையை உடலிலிருந்து பிரித்ததனால்தானே இன்று நீ சுல்தானாயிருக்கிறாய்? நீ சகலவித சுகபோக சொகுசுடனும் கவலையற்ற மனத்துடனும் அல் மலிக்குஸ் ஸாலிஹாக உயர்வதற்குக் காரணமாயிருக்கும் என் இந்த நிலையைக் கண்ட நீ மகிழவேண்டியதிருக்க, என்னைக் கண்டு வீணாய்ப் பயப்படுவானேன்?
“தம்பி! என்னைப் பார். உனக்கு என் வாழ்த்தைக் கூறவும், உன்னை மன்னாதி மன்னனாயிருக்கிற நிலையில் பார்த்து மகிழவுமே இப்போது இங்கு வந்தேன். ஏன் உன் முகத்தைப் புதைத்துக் கொள்கிறாய்?”
ஸாலிஹின் உடலெல்லாம் வேர்த்துத் தாரை தாரையாக வடிந்தது. வாயின் மேலண்ணம் நன்றாய் உலர்ந்துப்போய், நாக்கு அதனுடன் இறுக ஒட்டிக்கொண்டது. தொண்டை வறண்டு போவதை நனைத்துக்கொள்ளலாம் என்றாலோ, வாயில் எச்சில் ஊறமாட்டேனென்கிறது. சுழல்கிற தந் தலையை இரு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டார். பழுக்கக்காய்ந்த இரும்பைப் பட்டடைமீது வைத்து, சூடு ஆறுமுன்னே மாறி மாறி ஓங்கியடிக்கும் கருமானின் சம்மட்டியைப்போன்று, ஸாலிஹின் இதயம் நெஞ்சின்மீது பட்படடென்று மோதி மோதி அடித்துக்கொண்டிருந்தது.
“அருமைத் தம்பி! ஏன் பேசமாட்டேனென்கிறாய்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? நீயாகக் கேட்டிருந்தால், இந்த ஸல்தனத்தை நான் உனக்குக் கொடுத்திருக்க மாட்டேனா? இதற்காக நீ அந்த மிருக குணம் படைத்த அமீர்களின் உதவியை ஏன் நாடினாய்? என்னைக் கொன்றுவிட்டால், அவர்கள் உன்னைமட்டும் உயிருடனே விட்டுவைப்பார்களென்றா நீ மனப்பால் குடிக்கிறாய்? விடு அந்த வீண் எண்ணத்தை! இதோ என் கழுத்தைப் பார். அறுபட்ட இடத்தில் துளியிரத்தங்கூட இல்லை. அந்தக் கொலைகார அமீர்கள் நான் சிந்திய உதிரத்தை ஒட்டத் துடைத்துத் தங்கள் கைகளைக் கழுவிக் கொண்டு விட்டார்கள்.
“என் கண்களைப் பார். நான் இனிச் சிந்துவதற்கு ஒரு துளி கண்ணீர்கூட எஞ்சியில்லாமல் அவற்றை அந்த அமீர்கள் கசக்கிப் பிழிந்துவிட்டார்கள். என் வாயைப் பார். என் பற்கள் முப்பத்திரண்டையும் அவர்கள் பிடுங்கி மென்று தின்றுவிடடார்கள். என் காதுகளைப் பார். இனிய வேத கீதங்கள் அவற்றில் ஒலிக்காதவாறு கொம்புகளைத் திணித்து வைத்திருக்கிறார்கள். என் தலையைப் பார். ஒவ்வொரு மயிர்க் காலிலும் அக் கயவர்கள் அக்கினித் திராவகத்தைத் தெளித்திருக்கிறார்கள். என் நிலைகுலைந்த தாடியைப் பார். அவர்கள் ஆளுக்குக் கொஞ்சமாகப் பிய்த்துக்கொண்டவை போக ஒன்றிரண்டு ரோமங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. என் நாசித் துவாரங்களைப் பார். நான் தப்பித் தவறி உயிர்த்தெழுந்து விடாதபடி ஆப்புக்களை அறைந்து வைத்திருக்கிறார்கள். என் உடலின் எல்லா அவயவங்களையும பார். அவை ஒவ்வொன்றும் அந்த அமீர்களின்மீது பழிதீர்த்துக் கொள்வதற்குத் துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கின்றன…
“ஏ ஸாலிஹ்! இந்தக் கேடுகாலமெல்லாம் எனக்கு மட்டுந்தானென்று எண்ணி நீ இறும்பூ தெய்திவிடாதே! அண்ணனை முன்னால் அனுப்பிவைத்த அமீர்கள் தம்பியை அவன் பின்னால் அனுப்பிவைக்க ஆயத்தமாயிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே. கானலை நீரென்று நம்பி மோசம்போகும் மானினத்தைப்போல் நீ மதிமயங்கிக் கிடக்கிறாய். பின்னே வரப்போகும் கேடுகாலத்துக்கு அறிகுறியாக உன் மதி முன்னே கெட்டு வருகிறது. ஐயூபிகளின் காலன்களாகிய அமீர்களை நீ வைத்துக் கொஞ்சிக் குலவிக்கொண்டிருக்கிற மட்டில் உனக்கிருக்கிற கேடுகாலம் தொலையப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.”
துள்ளித் துடித்து அலறிப் புடைத்துக்கொண்டு ஸாலிஹ் மன்னர் அரண்டுவிழித்து வாரிச்சுருட்டி எழுந்தார். உலர்ந்த வாயை நாவால் தடவிக்கொண்டே திருதிருவென்ன விழித்து மெதுவாகத தமது தலையைத் தொட்டுப் பார்த்தார். கண்டது கனவுதான் என்பதை அவர் அறிந்துணர அரை நாழிகை பிடித்தது. அடித்துக்கொண்ட இதயம் தன் சரியான நிலையை அடைய அரைமணி நேரம் சென்றது. மீண்டும் அவருக்குத் தூக்கம் எங்கிருந்து வரப்போகிறது? விடியவிடியப் பஞ்சணைமீது புரண்டுபுரண்டு கொண்டே கிடந்தார்; நிமிடத்துக்கொருமுறை குளிர்ந்த தண்ணீரைப் பருகிக்கொண்டிருந்தார்.
மனிதனுடைய மனத்தைக் குரங்குக்கு ஒப்பிட்டுச்சொல்வது வழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால், ஸாலிஹ் போன்ற நிலையிலுள்ள மன்னர்களின் மனத்தை எதற்கு உவமையாக்குவதென்று எமக்குத் தோன்றவில்லை. அடுத்தடுத்துப் பயங்கரமான எண்ணங்கள், வெகுவர்ண தர்சனியில் விதம் விதமான வர்ண விசித்திரங்கள் மாறிமாறி வருவதேபோல், தொடர்ச்சியாய் மாறிமாறி ஓடிக்கொண்டேயிருந்தன. உடலிலுள்ள உதிரம் முழுதும் ஒரே வேகமாக அவரது மூளைக்குள்ளே ஓடிப் பாய்ந்துகொண்டிருந்தமையால், அவரது மண்டையே வெடித்துவிடும் போன்ற உணர்ச்சி பிறந்தது. அமீர்கள் உண்மையிலேயே நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் தாமா? அல்லது சற்றுமுன் கனவில் கண்ட அபூபக்ரின் உருவம் கூறியது போன்று, ஸாலிஹ் கானலை நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கிறாரா? அன்று வஜீர் கூறியது ஒருதலைப் பட்சமானதென்று கருதின அவருக்கு இந்தக் கனவைப்பற்றி என்ன அபிப்ராயம் கொள்வதென்றே ஒன்றும் புலனாகவில்லை. எல்லாம் ஒரே மயக்கம்; எல்லாம் ஒரே குழப்பம்.
உண்மைதானே! இந்த அமீர்கள் எதைத்தான் செய்ய மாட்டார்கள்? செப்பனிட முடியாத செருப்பைக் கழற்றித் தூக்கியெறிந்துவிட்டு வேறொரு ஜோடி புதிய செருப்பை எவ்வளவு சுலபமாக வாங்கி மாட்டிக்கொள்கிறோமோ, அவ்வளவு சுலபமாகத் தங்கள் மனத்துக்குப் பிடிக்காத சுல்தானை ஒழித்துவிட்டு வேறு மன்னனை நியமிக்கும் சக்தி படைக்கப்பெற்ற அமீர்களை இனியும் நீடிக்க விடுவது உசிதந்தானா? ஸாலிஹின் மனம் குமுறியது; அச்சத்தால் அலைப்புண்டது.
ஆனால், அமீர்கள் பல சமயங்களில் ஸல்தனத்துக்காகப் புரிந்த தியாகங்களும் சேவைகளுமோ? ஸாலிஹின் மனம் அவற்றைச் சிந்திக்க முடியவில்லை. இனியும் அமீர்களை வாழவிடுவதால் கெடுதிகள் நிகழுமா? அல்லது நன்மைகள் விளையுமா? என்கிற தத்துவத்தை ஆராயவேண்டிய நிலைமைக்கு அப்பாலே சென்றுவிட்டார் அவர். காலையில் சூரியன் உதயமாவதற்கும், அன்று அது மறைவதற்குள் அத்தனை அமீர்களையும தொலைத்துவிடுவது என்று சூளுறவுசெய்து கொண்டு ஸாலிஹ் படுக்கையை விட்டு எழுவதற்கும் சரியாயிருந்தது!
அன்று தம் அரசவைக்கு ஸாலிஹ் மன்னர் வழக்கம் போல் கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து செல்லாமல், தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையுள் மூழ்கியவண்ணம், அடிமேலடி வைத்து மெல்ல நடந்தார். இரவு படுக்கைக்குப் போகிறவரையில் எந்த நடத்தைபற்றி உச்சரிப்பையே மாபெருந் துரோகமென்று அழுத்ததந்திருத்தமாக ஸாலிஹ் கூறிக்கொண்டிருந்தாரோ, அதே நடத்தை பற்றிய தீர்மானமான முடிவுடன் இப்பொழுது நடக்கிற அவர் மனம் எங்ஙனம் அமைதியுடனிருத்தல் சாலும்?
தூக்குமேடைக்குச் செல்கிற குற்றவாளியைப்போலே அவர் மெல்ல நடந்தார். அமீர்களை ஒழித்துத்தான் தீர்க்கவேண்டுமென்று உறுதியான மனத்தோடு அவர் நடந்துகொண்டிருந்தாலும், அவர் மனச்சாட்சியின் ஒரு மூலையில் மட்டும் களங்கம் படிந்தேயிருந்தது. நிரபராதிகளான அமீர்களைக் கொன்றால், ஆண்டவன் தமக்குக் கொடுக்கிற தண்டனையினின்று எப்படித் தப்புவது என்ற புதிய பிரச்சினை வேறு அவர் நெஞ்சை அழுத்தியது. இல்லை, இல்லை! அமீர்கள் முற்றமுற்றக் குற்றவாளிகளே! அன்று அபூபக்ரைக் கொன்றார்கள்; நாளை, நம்மையே கொன்று தம் மைந்தரையும் கொலைசெய்து ஸல்தனத்தை அவர்கள் பற்றிக்கொண்டாலோ?….. நிச்சயமாக அமீர்கள் குற்றவாளிகளே! சூழ்ச்சிக்காரர்களே!
அந்த இறுதிச் சிந்தனையலை அவருடைய அதிகாலைத் தீர்மானத்தை இன்னம் உறுதி பெறச் செய்துவிட்டமையால், இதுவரை அசைந்து அசைந்து நடந்த அவர் மின்சாரத்தால் தாக்குண்டவர்போலே விரைவான நடை நடந்து, சிம்மாசனத்தின்மீது பாய்ந்தேறி அமர்ந்துக் கொண்டார். அரசவையில் கூடியிருந்தோர் அனைவரும் அவர் வதனத்தைப் பார்த்துக் கலவரமுற்று விட்டார்கள். அது அவ்வளவு அச்சமூட்டத்தக்க கடுகடுப்புடன் காணப்பட்டது.
சுல்தான் ஸாலிஹ் நேரத்தை வீணாய்க் கடத்தவில்லை. அவருடைய அன்றைய நடத்தைகளெல்லாம் மிகச் சுருக்கமாயிருந்தன.
“ஏ வஜீர்! இன்று இங்கு நம் சபையில்வந்து குழுமியிருக்கும் அத்தனை அமீர்களையும் இக்கணமே சிறை செய்யும். இங்கு நம் சபைக்கு வராமல் வேறு வேலையாய் வெளியில் போயிருக்கும், அல்லது வீட்டிலேயே அமர்ந்திருக்கும் ஏனை அமீர்களையும் இப்பொழுதே கைது செய்ய ஆளனுப்பும். இன்று பிற்பகலுக்குள் இந்தக் காஹிராவின் அத்தனை அமீர்களும் நம் சிறைச்சாலையின் பயங்கரக் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும இருட்டறைக்குள்ளே கொண்டுவந்து பூட்டப்பட வேண்டும். இது நமது அவசர ஆணை!”
இடிவிழுந்தாற் போன்று சடாரென்று பிறந்த இக்கொடிய கட்டளையின் அதிர்ச்சியிலே மண்டை கிறுகிறுத்த அமீர்கள், தாங்கள் சுல்தான் வாயால் என்ன செவிமடுத்தார்கள் என்பதை நம்பமுடியாமல் செயலற்று நின்றபோதே, அரண்மனைப் பிரதானக் கொத்தவால் அங்குக் குழுமயிருந்த அத்தனை அமீர்களையும் அப்படியே சூழ்ந்துகொண்டு, ஏராளமான சேவகர்கள் புடைசூழ அவர்களை அந்தச் சிறைக்கூடத்துக்குக் கொண்டு சென்றான். எல்லாம் கண்மூடிக் கண் திறக்கிற நொடிப்பொழுதில் மின்சார வேகத்தில் நிறைவேறி முடிந்துவிட்டன!
சுல்தான் இட்ட கட்டளையின் அடுத்த பாகத்தைப் பூர்த்தி செய்வதற்காக மற்ற அமீர்களைக் கைது செய்ய ஒரு பெரிய ராணுவ கோஷ்டி காஹிராவின் எல்லா மூலைமுடுக்குக்களுக்கும் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றது. சிறைக்கூடம், இரண்டு மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட அமீர்களால் நிரப்பப்பட்டுவிட்டது.
அன்று மாலை சுல்தானின் விசேஷ அறிக்கை எல்லாப் பொதுமக்களுக்கும் பகிரங்கமாக வாசித்துக் காட்டப்பட்டது. மக்கள் கூடுகிற பொதியில்களிலும், வர்த்தகர்கள் குழுமுகிற அம்பலங்களிலும் அந்த அறிக்கையின் நகல்கள் ஒட்டி வைக்கப்பட்டன. மஸ்ஜித்களில்கூட அது விளம்பரப்படுத்தப்பட்டது.
“மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் சுல்தான் அல் மலிக்குஸ் ஸாலிஹ் ஐயூபி இதனால் சகலமான மிஸ்ர் நாட்டு மக்களுக்கும், மிஸ்ரின் ஸல்தனத்துக்கு ஐக்கியப்பட்ட நாடுகளிலுள்ள மக்களுக்கும் பகிரங்கமாகத் தெரியப்படுத்தும் அரசப் பிரகடனம் என்னவென்றால் :
“நமது ஸல்தனத்துக்கும் நமக்கும் கேடுவிளைவிக்க வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடன் அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் பயங்கரப் படுசூழ்ச்சிகளையும் ராஜதுரோகக் குற்றங்களையும் புரிந்துவந்த அமீர்கள் இன்றுமுதல் நம் அரசாங்கத்தின் விரோதிகளாகக் கருதப்படுகின்றனர். ஸல்தனத்தைக் காப்பாற்றவும் பொதுமக்களின் நன்மையை நிலைநாட்டவும் அல்லுபகல் அனவரதமும் அரும்பாடுபட்டுவரும் நாம், இந்தக் கயவர்களான நயவஞ்சக அமீர்களை அழித்தாலன்றி வேறெந்த மார்க்கத்தைக் கொண்டும் நிலைமையைச் சமாளிக்க முடியாதென்று எவ்வித ஐயமுமின்றி நம்புவதால், அவர்களையெல்லாம் இன்றையப் பொழுதுக்குள்ளே கைதுசெய்ய நேர்ந்துவிட்டதென்பதை மெத்த வருத்தத்துடனே தெரிவிக்க நேருகிறது. ராஜ துரோகக் குற்றமிழைக்கும் கூட்டத்தினரைவிட்டு அவ் வெல்லாம்வல்ல அல்லாஹுத் தஆலா நம் அனைவரையும் என்றென்றும் காப்பாற்றி வைப்பானாக! இஸ்லாமிய ஸல்தனத் இம் மிஸ்ரிலே நீடித்து நிலைத்து நிற்க அவனே கிருபைகூர்ந்து அருள் புரிவானாக!”
அன்று முழுதும் காஹிரா அடைந்த அல்லோல கல்லோலத்தை வருணிப்பதென்பது இயலாது. எவருமே எதிர்பாராத திடுக்கிடத்தக்க செய்கை சுல்தானால் பிரகடனப்படுத்தப்பட்டது அதிசயமில்லை; ஆனால், சகல அமீர்களையும் குற்றவாளிகளென்று சுல்தான் பகிரங்கப்படுத்தியிருந்ததே அனைவரின் உள்ளத்துள்ளும் பெருவியப்பை மூட்டியது. எனினும், நாம் முன்னே கூறியபடி, அமீர்களுக்கு மக்களிடையேயிருந்த செல்வாக்கு இந்தச் சமயத்தில் குன்றிப்போயிருந்தபடியால், பிரமாதமாக எவரும் கவலை கொண்டுவிடவில்லை. அந்த அறிக்கை திடுக்கத்தைத் தந்ததேயொழிய, பெரும்பாலான மக்களுக்கு ஒன்றும் விசேஷமான பச்சாத்தாபத்தை ஊட்டவில்லை. அமீர்களுக்கு இத்தகைய தண்டனை வந்தது நியாயந்தான் என்றுகூடப் பலபேர் பேசிக்கொண்டார்கள்.
அறிக்கை வெளியாகி இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் ஒரே ஓர் அமீர்கூடப் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் சிறை வாரப்பட்டனர். இச் செய்தியைக் கேட்டு, ஸாலி்ஹ் திருப்திகரமான நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டார்.
அடுத்த நாள் அரசவை கூடிற்று. அமீர்கள் சிறை செய்யப்பட்ட அதிசயத்தால் திடுக்குற்றுவிட்ட அனைவரும் மௌனமாக வாய்புதைந்து கைகட்டி நின்றனர். இன்று மன்னர்பிரான் நேற்றைப்போல் மற்றொரு திடுக்கிடத்தக்க விஷயத்தை எங்கே பிரகடனப்படுத்தப் போகின்றாரோவென்று கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே நடந்தது!
சுல்தான் தமது கம்பீரமான குரலில், தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார் :- “ஏ முஸ்லிம்களே! நமது ஸல்தனத்துக்குக் கேடுசூழ நினைப்பவர் எவராயிருந்தாலும், அவரை நாம் ஒரு கணமும் விட்டுவைக்கப் போவதில்லை என்பதைக் கண்டிப்பாய்க் கூறுகிறோம். இன்று அந்த அமீர்களுக்கு எத்தகைய முடிவு வந்திருக்கிறதோ, அத்தகைய முடிவோ, அல்லது இன்னம் பரிதாபகரமான முடிவோதான எல்லா வகையான தேசத் துரோகிகளுக்கும் வந்து சேருமென்பதை நாம் நினைவுறுத்துகிறோம். இனிமேல் இந்த ஐயூபி வம்ச சுல்தான்கள் இந் நாட்டை ஆள்கிறவரை அமீர்களுக்கு இடமும் கிடையாது; அவர்களுக்குத் தேவையுமில்லை. கைது செய்யப்பட்ட அத்தனை அமீர்களுடைய சகல சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு, இன்றுமுதல் பைத்துல்மாலுக்கும் நமது கஜானாவுக்கும் உரிமையாக்கப்பட்டு விட்டன. இந்த எம்முடைய நடவடிக்கைளிலிருந்து சகல மூமினானவர்களும் கண் திறந்து, சகலவிதத்திலும் நமது ஸல்தனத்துக்காகத் தியாகமே புரிவரென்றும், துரோக எண்ணத்தைச் சற்றும் கொள்ள மாட்டார்களென்றும் நாம் நம்புகிறோம்.
“இன்றுமுதல் எமது பாதுகாவலுக்காவும், பந்தோபஸ்துக்காகவுமென்று நாம் சில மம்லூக் அடிமைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். அந்த மம்லூக்குகளை மிகவும் பலம் பொருந்திய ஹல்காவாக ஆக்கிக்கொள்ளப் போகிறோம். (“ஹல்கா“ என்றால், மெய்காப்பாளார் (Bodyguard) என்று அர்த்தம். ஸாலிஹ் உற்பத்தி செய்துவி்ட்ட அந்த மம்லூக் ஹல்காவின் வன்மை எவ்வளவு பெரிதாகப் பிற்காலத்தில் போய்முடிந்த தென்பதைச் செல்லச்செல்ல உணர்வீர்கள்.) அன்றியும், அந்த மம்லூக்குகளே எம்முடைய மெய்காப்பாளர்களாக விளங்கப்போவதுடன், நாம் அவர்களுக்காக ஒரு பெரிய சேனாவீரர் நிலையத்தை நிருமிப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறோம். எனவே, இங்குக் குழுமியிருக்கிற உங்களனைவருக்கும் நாம் விடுக்கிற ஒரே உபதேசம் என்னவென்றால், உங்களுள் எவரும் எம்மை எதிர்த்துப் புரட்சி புரியாதிருக்கக்கடவர். உங்களுள் எவருக்காவது ஏதேனும் நியாயமான குறைமுறையிருந்தால், அன்னவர் எம்மிடம் நேரில்வந்து அதைக் கூறிப் பரிகாரத்தைத் தேடிக்கொள்ளக்கடவர். அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் மாற்றமாக ஏதொன்றையும் செய்யாதபடி நாம் சர்வ ஜாக்கிரதையுடனேதான் இருந்துவருவோம். எனினும், எம்மை மீறி, எமக்குத் தெரியாமல் ஏதும் தவறு இழைக்கப்பட்டுவிடின், அத் தவற்றை எமது பார்வைக்கு அத் தவறிழைக்கப்பட்டவர் கொண்டுவரக் கடவர். சட்டத்தை இயற்றுவதற்கு எப்படி எமக்கு மட்டும் அதிகாரமிருக்கிறதோ, அப்படியே அதைப் பிரயோகிப்பதிலும் எமக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. உங்களுள் எவரேனும் எமது கட்டளைக்கு மாற்றமாக ஏதும் புரியத் தொடங்குவரேல், வீரர் ஸலாஹுத்தீன் வமசத்தில் தோன்றிய நாம் அதை மிக வன்மையாகப் பிய்த்துப் பிடுங்கியெறிவோம் என்பதையும் குற்றமிழைத்தவர் எவராயிருப்பினும், அவர் சற்றும் ஈவிரக்கமின்றி எமது வாளுக்கு நொடியில் இரையாக்கப்பட்டு விடுவர் என்பதையும் நாம் கூறத் தேவையில்லை என்றே நினைக்கிறோம்.”
சுல்தானின் இந்தப் பேச்சு எவ்வளவு நடுக்க மூட்டுவதாயிருந்ததோ, அதைவிட அச்ச மூட்டுவதாகவே அவர் சட்டென்று நிறுத்தியதும், அரசவையை ‘அத்துடன்’ கலைத்துவிட்டு அந்தப்புரத்துக்குள் அக்கணமே சென்று நுழைந்ததும் காணப்பட்டன. அரசவையில் மரம்போல் நின்றிருந்த எந்த மனிதரின் முகத்திலும் ஈயாடவில்லை. அரச ஆக்ஞை இலேசுபட்டதா?
இவ் விதமாக, ஸாலிஹ் பட்டத்துக்கு வந்து அரை ஆண்டு பூர்த்தியாவதற்குள் அமீர்களாகிய பழையன கழிந்து, மம்லூக்குகளாக புதியன புகுந்துவிட்டன!
<<அத்தியாயம் 18>> <<அத்தியாயம் 20>>