3. ஆதி வாழ்க்கையின் வரலாறு

Damascus

கெய்ரோ என்னும் ஆங்கில நாமமிடப்பட்டுப் பிரபலமாக இன்று அழைக்கப்பட்டு வரும் தலைநகருக்கு அரபு மொழியில் ‘காஹிரா’ என்று பெயர்

இட்டிருந்தார்கள். இன்று எகிப்து என்று வழங்கும் நாட்டுக்கு ‘மிஸ்ர்’ என்று இன்றும் வழங்கியே வருகிறார்கள். 

சென்ற 13-ஆம் நூற்றாண்டின் காலத்தில் முஸ்லிம்களின் ஒப்பற்ற ஆட்சியின்கீழ் அத்தேசமும் அந்தத் தலைநகரும் மிக்க மாட்சியுடன் திகழ்ந்துவந்தன. அதுபோது அந்த ராஜ்யத்தை – (ஸல்தனத்தை) நிர்வகித்து வந்தவர்கள் ஐயூபி வம்ச சுல்தான்களாவார்கள். மூன்றாவது சிலுவை யுத்தத்தில் பல கிறிஸ்தவர்களை முறியடித்த மன்னாதி மன்னர் சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி என்பவர் அவ் வம்சத்தின் இரண்டாவது அரசராவார். அவர் கி.பி. 1193-இல் (ஹி. 589-இல்) காலஞ்சென்ற பின்னர், மிஸ்ர்ப் பகுதியின் ஸல்தனத்துக்கு அவருடைய சகோதரர் ஸைபுத்தீன் அல் மலிக்குல் ஆதில் ஐயூபி என்பவர் மன்னரானார்.

இவருக்கு முதலாவது ஆதில் மன்னர் என்று சரித்திராசிரியர்கள் பெயரிட்டிருக்கின்றார்கள். இவரும் கி.பி. 1218-இல் (ஹி.615-இல்) இருபத்தைந்து வருடம் சிறந்த ஆட்சி புரிந்துவிட்டு, விண்ணுலகடைந்து விட்டார். இவருக்கு மூன்று புத்திரர்கள் இருந்தார்கள். தந்தை இறந்த பின்னர் அம் மூவரும் ராஜ்யத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். மூத்த மைந்தரான முஹம்மத் என்பவர், அல் மலிக்குல் காமில் அபுல் மஆலி நாஸிருத்தீன் என்னும் பட்டத்துடன் மிஸ்ர் ஸல்தனத்துக்கு அரசரானார்; அவர் பெயரைச் சுருக்கமாக அல் மலிக்குல் காமில் ஐயூபி என்று அழைப்பர்.

அவருடைய இரு சகோதர்களான ஈஸா அல்மலிக்குல் முஅஜ்ஜம் ஷர்புத்தீன் என்பவர் ஷாம் பகுதிக்கும், மூஸா அல் மலிக்குல் அஷ்ரப் முஜ்ஜப்பருத்தீன் என்பவர் அலெப்போ (ஹல்ப்) பகுதிக்கும் அரசராகிவிட்டார்கள்.

அம் மூவரும் ராஜ்யத்தைப் பங்கிட்டுக்கொண்டிருந்தும், ஒருவரையொருவர் சந்தேகித்தே வந்தார்கள். ஆனால், 1227-ஆம் ஆண்டில் இரண்டாவது சகோதரரான அல் மலிக்குல் முஅஜ்ஜம் காலஞ் சென்றுவிட்டபடியால், ஷாம் தேசத்தை மற்றிரு சகோதரர்களான காமிலும் அஷ்ரபும் கைப்பற்றிக் கொண்டனர்.

இந்த ஐயூபி வம்சத்து முதல் ஆதில் மன்னரின் குமாரர் அல் மலிக்குல் காமில் என்பவர் ஆட்சி செலுத்திவந்த இறுதிப் பகுதியாகிய கி.பி. 1230-இல்தான் நமது இந்தச் சரித்திரம் ஆரம்பமாகிறது. என்னெனின், அந்த ஆண்டின் முதுவேனிற் காலத்துப் பிற்பகலொன்றின்போது, அந்த நீலநதிக்கரையிலே யூசுப் என்னும் திருடனுடைய இல்லத்திலே அநாதையாக வந்து சேர்ந்த ஒரு சிறுமி அந்த ஸல்தனத்தையே ஆட்டிப்படைக்கும் அதிருஷ்டத்தை வாய்க்கப்பெற்றிருந்தாளென்பதை அந்த அல்லாஹுத் தஆலா ஒருவனையன்றி வேறெவரே அன்று கனவு கண்டிருக்கத்தான் முடியுமென்று எண்ணுகின்றீர்கள்?

அரசாங்கத்து இலட்சணத்தை இவ்வளவுடன் நிறுத்திக்கொண்டு, நமது கதையின் சம்பவத்தைத் தொடர்வோம்:-

அன்று கி.பி. 1230-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியாயிருந்தது. பர்கானா என்னும் அந்த மாதுசிரோமணி நஞ்சிறுமியின் கதையை மிகவும் உருக்கமாகக் கேட்ட வண்ணம் அமர்ந்திருந்தாள். ‘எத்தீம்’ கூறுகிறாள்:-

“நான் துருக்கி தேசத்தில் பிறந்தவள்; என் தந்தைக்கும் அதேதான் சொந்த ஊர். ஆனால், என் தாயார் மட்டும் இராக் பகுதியைச் சார்ந்தவள். எனக்குக் கருத்துத் தெரிவதற்கு முன்னே என் தாயார் இறந்துவிட்டார். என் தகப்பனார் என்மீதே உயிராக இருந்தபடியால், வேறு விவாகம் செய்துகொள்ளவில்லை. அவர் தானிய வியாபாரத்தில் சிறந்த தரகர்; ஏராளமாகச் சம்பாதிப்பார். அப்படிச் சம்பாதிக்கும் பொருளையெல்லாம் என் போஷணைக்காகவும், என் படிப்புக்காகவுமே முழுதும் செலவிட்டு வந்தார்.

“ஐந்து வயதிலேயே என்னைப் படிக்க வைத்தார். நான் குர்ஆன் முழுதையும் ஒரு வருஷ காலத்திலேயே ஓதி முடித்தேன். குர்ஆன் மட்டுமல்ல; என் ஆசிரியர் எனக்கு எல்லாவிதமான பாடங்களையுமே படித்துக் கொடுத்தார். எனக்கு ஆறரை வயது நிரம்புமுன் நான் இவ்வளவு கெட்டிக்காரியாய்த் திகழ்ந்தது பலருக்குப் பொறமையளித்தது. அந்தப் பொறாமைக் குணம் எவ்வளவு அதிகமாக என் தந்தையின் வர்த்தகத்தைப் பாதித்ததென்றால், அவருடன் எவருமே பேசுவதில்லை. அல்லாமலும், நான் பிறந்த பின்னர் என் பெற்றோர் எனக்கு என்ன பெயரிட்டார்களென்பதை நான் இன்றளவும் அறியேன்!” என்று திடீரென்று நிறுத்தினாள். அதற்குமேல் அவளால் பேச முடியாதபடி துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.

”உன் பெயர் உனக்கே தெரியாதா? பின்னே உன் தந்தையும் ஆசிரியரும் உன்னை எப்படித்தான் கூப்பிடுவார்கள்?” என்று பர்கானா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“ஆம், என் தந்தை என்னை ‘மகளே!’ அல்லது ‘கண்மணியே!’ என்றுதான் அழைப்பது வழக்கம். இனி அந்தப் பெயரைச் சொல்லி என்னை யார்…” -செறுமினாள் சிறுமி.

“கண்மணி! அழாதே! உன் பெற்றோரின் ஸ்தானத்தில் நான் இருக்கிறேன். உன்னை என்ன பெயர்ச் சொல்லி அழைக்க வேண்டுமென்று நீ ஆசைப்படுகிறாயோ, அதே பெயரைச் சொல்லி நான் கூப்பிடுகிறேன். யார் உனக்கு என்ன பெயரிட்டாலும் நான் மட்டும் உன்னை நவரத்னங்களுள் ஒன்றான முத்தின் பெயரையே உனக்குச் சூட்டுகிறேன். இன்று முதல் நீ ஷஜருத்துர் – முத்துத் திவலை என்றே அழைக்கப்படுவாய்.”

“என்ன, துர் என்றா எனக்குப் பெயரிடுகிறீர்கள்? ஆ, என் ஆசிரியரும் என்னை அப்படித்தான் அழைத்துவந்தார்!”

“ஆம், ஷஜருத்துர்! ஆஹா, என்ன இனிமையான பெயர்! சொல்லும்போதே எவ்வளவு ருசிகரமாயிருக்கிறது, தெரியுமா?”

பின்பு சிறிதுநேரம் இருவரும் மௌனமாயிருந்தனர். பர்கானா எதையோ நினைத்துக் கொண்டு, “நீ உன் கதையைப் பாதியில் நிறுத்திவிட்டாயே?” என்று நினைவூட்டினாள்.

“ஆம்; மிச்சத்தைச் சொல்வதால் பிரயோஜனம் என்ன இருக்கிறது? – நானும் என் தந்தையாரும் எப்படியாவது பொறாமையாளர் நிறைந்த துருக்கியை விட்டுத் திமஷ்க் செல்வதென்று முடிவு செய்தோம். பாய்மரக் கப்பலில் ஏறிக் கடலில் வந்து கரை சேர்வதற்குள் புயல் வந்துவிட்டது. கப்பல் கவிழ்ந்தபோதும் என் தந்தை என்னை முதுகில் தூக்கிக் கொண்டு, ஒரு மரப் பலகையைப் பிடித்து நீந்திக் கரைசேர்ந்தார். கப்பல் விபத்தின் காரணமாக என் அபூ எல்லாப் பணத்தையும் இழக்க நேர்ந்தது. என்றாலும், அவர் இடுப்பில் கட்டிக்கொண்டிருந்த நூறு தங்க தீனார்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒருநாள் என் தந்தை வெளியே போய் வந்தபோது, ஓர் அழகிய கழுதையை வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தின்பண்டங்களும் கொண்டுவந்தார். அவர் முகம் வாடியிருந்தது. என்னிடம் பேசவுமில்லை. நான் அவர் மடிமீது ஏறிக்கொண்டு, ‘அபூ! ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

“‘கண்மணி! இந்தத் திமஷ்க் நகரம் துருக்கியின் இஸ்தம்பூலை விடக் கொடிய இடமாயிருக்கிறது. அல்லாமலும், இங்குள்ள கிறிஸ்தவர்களும் யூதர்களும் தவறான வழிகளில் பொருள் சேர்க்கிறார்கள். ஆகையால், நாம் இந்த ஊரில் இனி ஒரு கணமும் இருக்கக் கூடாது!’ என்று கவலை நிரம்பிய மொழிகளில் பேசினார்.

“‘வேறு எந்த ஊருக்குப் போவது?’ என்று நான் கேட்டேன்.

“‘மிஸ்ர் தேசத்துக்கே போய் விடுவோம். அங்கே காஹிராவில் ஏதும் தொழில்செய்து பிழைப்போம்.’

“எனக்கு அந்த யோசனை பிடிக்கவேயில்லை. நான் அழுதேன். துருக்கிக்கே திரும்பிப் போய்விடலாமென்று தொந்தரவு செய்தேன். இரண்டு மூன்று தினங்கள் இப்படிக் கழிந்தன. இதற்குள் எங்கள் நூறு தீனாரும் தினம் கொஞ்சமாகச் செலவழிந்து விட்டபடியால், இனியும் திமஷ்கில் இருக்க முடியாது என்று தெரிந்துகொண்ட என் அபூ ஓர் இரவின் கடை ஜாமத்தில், தூங்கிக்கொண்டிருந்த என்னைத தூக்கிக் கொண்டு, கழுதைமீதேறி, பிரயாணத்தைத் தொடங்கிவிட்டார். நான் கண்விழித்துப் பார்த்தபோது, நாங்கள் திமஷ்க் எல்லைக்கு வெளியே பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்தோம் என்பதைக் கண்டுகொண்டேன்.

“‘அபூ! காஹிரா என்கிற பட்டணம் இன்னம் இரண்டு நாள் பயணத்தில் வந்துவிடுமா?’ என்று நான் ஆவலோடு கேட்டேன். என்னைத் திருப்தி செய்வதற்காக அவர் ‘ஆம்’ என்று தலையசைத்தார். இரண்டுநாள் பயணம் முடிந்ததும் கேட்டேன்; இன்னும் இரண்டே தினங்களில் சேர்ந்துவிடலாமென்றார். இந்தமாதிரி 15 முறை அவர் கூறினார். பின்பு நேற்று மாலை அவர் எனக்கு உறுதியாகச் சொன்னார், இன்று எல்லையை எட்டிவிடலாமென்று.”

சிறுமியானபடியால், யதார்த்தமாகவும், வீண் வருணனையில்லாமலும் சுருக்கமாக அவள் இந்தக் கதையைக் கூறி முடித்தாள். பர்கானாவுக்கு மனம் குழைந்துவிட்டது.

“ஏ ஷஜருத்துர்! போனதைப் பற்றிக் கவலைப் படாதே. எல்லாவற்றுக்கும் அல்லா(ஹ்) போதுமானவன். இதோ நானே உனக்குத் தாயாகவும் சகோதரியாகவும் இருக்கிறேன். என் தாயார் கூடத் துருக்கி தேசப் பெண்மணியாகவே விளங்கிவந்தார். நான் உன்னைப் பார்த்தது முதலே அளவற்ற பிரியம் கொண்டுவிட்டேன். நீ, சென்றவற்றையெல்லாம் மறந்து விடு. ஆண்டவன் நாடியபடியே எல்லாம் நடக்கும் என்பதை நீ அறிய மாட்டாய்.”

“என் தந்தையைக் கொன்ற மகா பாதகனான இந்த யூசுபின் வீட்டிலா நான் இருக்க வேண்டும்? முடியாது, முடியாது,” என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள் ஷஜர்.

“கண்மணி! உன் அபூவை யூசுப் கொல்லவில்லை.”

“என்ன? யூசுப் அல்லவா? பின்னே வேறு யார் கொன்றார்?”

அவளுடைய இந்தக் கேள்விகள் வெகு ரோஷத்தோடும் அடக்கமுடியா ஆத்திரத்தோடும் பிறந்தன.

“இல்லை; நிச்சயமாக, யூசுப் கொல்லவில்லை. ஆனால், அவருடன் வந்தானே, அந்த அயோக்கிய ஹாரூன்…”

“என்ன, ஹாரூனா?”

“ஏ ஷஜர்! எங்கள் சரித்திரம் வின்னியாசமானது. நீ அதைத் தெரிந்து கொண்டால், பிறகு உண்மையை உணர்வாய். நீ நினைப்பதுபோல் என் சகோதர் யூசுப் ஓர் அநியாயக்காரரல்ல. ஆனால, நீதிமான்.”

ஷஜருத்துர்ரின் மனக்கண் முன்னே அந்தப் பயங்கர யூசுபின் முகம் காட்சியளித்தது. “என்ன, நீதிமானா?” என்று அச்சங் கலந்த அதிசயக் கேள்வியைப் போட்டாள்.

”ஆம். இந் நாட்டை இப்போது ஆண்டுவருகிற சுல்தான் மலிக்குல் காமில் என்பவர் மிகவும் நல்லவர். இவர் பட்டத்துக்கு வந்து இப்போது சரியாகப் பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன. ஆனால், இவர் சுல்தானாவதற்கு முன்னால் இவர் தந்தை ஆதில் ஐயூபி என்பவர் சென்ற ஆறாவது சிலுவை யுத்தத்தின்போது ஸிரியாவிலிருந்து – (ஷாம் தேசத்திலிருந்து) இந்த மிஸ்ர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, திமஷ்கிலேயே காலஞ்சென்று போயினார். அவர் மரணமடைந்த பின்னர் அவருடைய மூத்த குமாரராகிய நம்முடைய சுல்தான் அல் மலிக்குல் காமில் அவர்களுக்கும் இரண்டாவது மைந்தர் அல் மலிக்குல் முஅஜ்ஜம் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, சிறிது கலகமும் விளைந்தது. இறுதியாக முஅஜ்ஜம் என்கிற இளையவர் ஷாம் தேசத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார். காமில் இந்தத் தேசத்தை எடுத்துக்கொண்டார்.

“அந்தச் சந்தர்ப்பத்தில் என் சகோதரர் யூசுப் திமஷ்க் நகருக்கு ஏதோ வேலையாகப் போய்விட்டுத் திரும்பிவந்தார். அப்போது நம் சுல்தானின் சேவகர்கள், முஅஜ்ஜமின் ஆட்கள் மிஸ்ருக்குள் வந்து அல் காமிலை இரகசியமாகக் கொன்றுவிடாதிருப்பதற்காக வழி நெடுகக் காவல் புரிந்துவந்தனர். என் அண்ணன் இந்த அரசாங்க உபத்திரவங்களெல்லாம் தெரியாமல் நிஷ்களங்கமான மனத்துடன் இந்தக் காஹிராவை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை வழியில் ஒரு போர்வீரன் தடுத்து நிறுத்தினான். என் அண்ணன் பயந்துபோனார்.

“உன் பெயரென்ன?” என்று அந்த வீரன் அதிகாரத் தொனியில் கட்டளையிட்டான்.

“முஹம்மத் யூசுப் பின் ஈஸா” என்று அவர் நடுங்கிக் கொண்டே பதில் கூறினார்.

“எங்கே போகிறாய்?” என்று அந்த வீரன் இன்னுங் கடுமையாகக் கேட்டான்.

“காஹிராவுக்கு.”

“எங்கிருந்து வருகிறாய்?”

“திமஷ்கிலிருந்து.”

“என்ன, திமஷ்கிலிருந்தா? உன் சொந்த ஊர்?”

“காஹிராவேதான்.”

“நீ ஏன் திமஷ்குக்குப் போனாய்?”

“என் அண்ணனுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. ஒரு மனிதன் தன்னுடைய சொந்த வேலையாகக் காஹிராவை விட்டுப் புறப்பட்டு, திமஷ்குக்குப் போய்வந்தால், அவனை வழியில் மடக்கிக்கொண்டு இந்தமாதிரி குறுக்கு விசாரணை செய்தால், யாருக்குத்தான் கோபம் வராது? எனவே, என் அண்ணன் மின்னல்வேகத்தில் தமது இடுப்பில் சொருகிவைத்திருந்த கட்டாரியையெடுத்து, ஒரே நொடியில் அதை அவ்வீரனது நெஞ்சுக்குள் புதைத்துவிட்டார். அவனது உயிர் உடனே பிரிந்துவிட்டது. என் அண்ணன் பிறகு அந்தப் பிரேதத்தைச் சோதித்துப் பார்த்ததில், அவன் சுல்தான் காமிலின் கொத்தவாலென்று தெரிந்தது. எதிரிகளும், உளவர்களும் காஹிராவுள் வந்து நுழைவதைத் தடுப்பதற்காக அந்தக் கொத்தவால் சுல்தானால் நியமிக்கப்பட்டிருந்தானென்பதை என் அண்ணன் அப்போதுதான் தெரிந்துகொண்டார். ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் தாம் செய்துவிட்ட பெரிய பாதகத்தைக் கண்டு கலங்கிப்போனார். -ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டென்பார்கள்.

“கதையை வளர்த்துவானேன்? அவர் ஓட்டமாய் ஓடி வந்தார். என்னிடம் இதையெல்லாம் சொல்லிவிட்டு, மீட்டும் போய்விட்டார் – தலைமறைவாயிருப்பதற்காகவும், சுல்தானின் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவும். மறுநாள் அரண்மனையில் ஓர் அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்டது. சுல்தானின் வீரனொருவனை அந்த மாதிரி கொன்ற பாதகனைக் கண்டு பிடிப்பவர்க்கு 500 தீனார் இனாமென்று பறையறையப்பட்டது. என் அண்ணனின் திகில் தினமும் அதிகரித்தே வந்தது. காஹிராவுக்குள் நுழையவும் பயந்துகொண்டு, வனாந்தரத்திலேயே திரிந்தும், திருடர்களின் நட்பைப் பெற்றும் அவர் காலங் கடத்துகிறார். அச் சம்பவம் நடந்து இப்போது பன்னிரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியும், அவர் இன்னமும் தலைமறைவாகவே இருந்துவருகிறார். அந்தச் சேவகனைக் கோபத்தால் குத்திக் கொன்றதைத் தவிர்த்து வேறு ஒரு கொலையையும் அவர் புரிந்ததே கிடையாது.”

“அவர் ஏன் திருடர்களுடனே சிநேகம் பூண்டிருக்கிறார்?”

“வயிற்றுப் பிழைப்புக்கு வேறு என்ன செய்வது? காஹிராவுக்குள்ளே அவர் ஏதும் வர்த்தகம் செய்யலாமென்றால். யாராவது அடையாம் கண்டுபிடித்து விட்டால், என் செய்வது?”

“அப்படியானால், அவர் ஆயுளெல்லாம் இப்படியேதான் கள்ளனாகக் கழிய வேண்டுமோ?”

“இல்லை. அந்த ஹாரூன் என்கிற அயோக்கியன் செத்துப் போய்விட்டால், இவருக்குப் பயமில்லை. இப்போதுகூட யூசுப் அந்தத் திசையை நோக்கியே பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்தக் குதிரையிலிருந்து விழுந்தவன் இந்நேரம் அப் பாலைவனத்தில் சுருண்டுபோயிருந்தால், என் அண்ணன்பாடு அதிருஷ்டமே.”

“ஏன்?”

“அவன் ஒருவனுக்குத்தான் என் அண்ணனின் வரலாறு தெரியும். எந்த நேரத்திலுமே சுல்தானிடம் அவரைக் காட்டிக் கொடுத்துவிட அவன் காத்திருந்தான். நேற்று நீ கிடைத்த அதிருஷ்டத்தால்தான் என் அண்ணன் அந்த ஆபத்திலிருந்து விடுதலையடைந்திருக்கிறார்.”

“ஒருவேளை அந்த ஹாரூன் தப்பிப் பிழைத்திருந்து இங்கே வந்துவிட்டாலோ?”

“அப்பொழுது பெரிய ஆபத்துத்தான்!”

இருவரும் மௌனமாயிருந்தனர். ஷஜரின் மனக் கண்ணாடி முன்னர்ப் பழைய நிகழ்ச்சிகள் வேகமாயோடின. பர்கானா அடிக்கடி அவ்வீட்டு வாசல்வழியே வெளியே எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவளுக்கு ஓரிடத்தில் இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் அலைந்தவண்ணமிருந்தாள்.

“அப்படியானால், என் தந்தையை உங்கள் அண்ணன் கொல்லவில்லையென்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்?” என்று ஷஜர் திடீரென்று கேட்டாள்.

“இல்லை; நிச்சயமாக யூசுப் கொல்லவில்லை. ஹாரூன் தான் கொன்றான். இது எனக்கு நன்றாய்த் தெரியும்.”

தந்தையின் பாசத்தை நினைத்து, ஷஜருத்துர் விம்மியழுது கொண்டேயிருந்தாள். அற்றைப்பொழுது அந்த மாதிரியாகக் கழிந்தது.

மறுநாட் காலையில் யூசுப் வேகமாக ஓடி வந்து சேர்ந்தான். குதிரையை விட்டுத் தாவிக் குதித்து ஓடோடிப்போய், “பர்கானா! தொலைந்தான்! ஹாரூன் தொலைந்தே போய் விட்டான்! அப்பாடா, ஒழிந்தது என் திகிலெல்லாம்!” என்று ஒரே மூச்சில் அடுக்கினான்.

பர்கானா வாய் திறக்காவிட்டாலும், அவளுடைய வதனமும் பார்வையும் மட்டற்ற மகிழ்ச்சிக்குறியைக் காட்டின.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-30 செப்டம்பர் 2011

<<அத்தியாயம் 2>>     <<அத்தியாயம் 4>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment