மாலியில் நடப்பது என்ன?

by நூருத்தீன்

னவரி 16, புதன்கிழமை. விடிந்தும் விடியாத அதிகாலை. அல்ஜீரியாவில் இன் அமீனாஸ் எனும் ஊர். அங்கு அல்ஜீரியா நாட்டுக்கும் நார்வே நாட்டின் எண்ணெய் நிறுவனத்திற்கும் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று. அங்கு புழுதி பறக்க எங்கிருந்தோ வாகனங்களில் வந்தார்கள் இஸ்லாமியப் போராளிகள். நிறுவனத்திற்குள் அதிரடியாய் நுழைந்து அங்கு பணிபுரிந்தவர்களைச் சிறைபிடித்தார்கள். உள்நாட்டினர் அதில் நிறையபேர் இருந்தாலும் அவர்களது குறி வெளிநாட்டினர். ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா என்று பல மேலைநாட்டினர் அவர்களிடம் மாட்டியிருந்தனர். நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போராளிகள், மாலி நாட்டிலிருந்து பிரான்சு வெளியேற வேண்டும்; சிறைபிடிக்கப்பட்டுள்ள போராளிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். எப்பொழுதும்போல் அமைதியாக விடியவிருந்த அன்றைய நாள் அமளி துமளியாகிப் போனது.

நான்கு நாட்கள் கழிந்தன. போராளிகளுடன் பேச்சுவார்த்தை ஒத்துவராது என்று எதிர் நடவடிக்கையில் இறங்கியது அல்ஜீரியா. சரமாரியாக இருதரப்பினரும் சுட்டுத்தள்ள, போராளிகளை விரட்டி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீட்டது அல்ஜீரியா. துப்பாக்கிகள் சுட்ட புகை விலகியபின் எண்ணிப் பார்த்தால், 37 பணயக் கைதிகள், 29 போராளிகள் இறந்திருந்தனர். இறந்த பணயக் கைதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட வகையில், ஏழு ஜப்பானியர்கள், ஆறு பிலிப்பைன்ஸ் நாட்டவர், மூன்று அமெரிக்கர்கள், மூன்று பிரிட்டானியர்கள், ஒரு அல்ஜீரியா நாட்டவர்.

இந்த தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பேற்று முக்தார் பில் முக்தார் (Moktar BelMoktar) என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார். ‘மாலியில் இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராக பிரான்சு போர் தொடுத்துள்ளது. அதற்கு தங்களது வான் எல்லையைப் பயன்படுத்திக்கொள்ள அல்ஜீரியா அனுமதித்துள்ளது. அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையே இது’ என்று அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

மாலிக்குள் பிரான்சு நுழைந்தே நாலு நாள்தான் ஆகிறது. அதற்குள் இத்தகைய சிக்கலான ஒரு தாக்குதலை குறுகிய காலத்தில் எப்படித் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க முடியம் என்று வியக்கிறார்கள் வல்லுநர்கள். போராளிகளின் திட்டம் தயாராக இருந்திருக்கிறது என்பதே அவர்களது யூகம். அந்த யூகம் சரியானதாகத்தான் தோன்றுகிறது. ஏனெனில் மாலிக்குள் அந்நியப் படைகள் நுழைவதைப் போராளிகள் எதிர்பார்த்தே இருந்திருக்கிறார்கள். அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் மிக விரிவாகவே நடைபெற்றுள்ளன. போலவே, எதிர் நடவடிக்கைகளையும் அவர்கள் திட்டமிட்டிருந்திருக்க வேண்டும். அதன் முதல் காட்சியாகவே இன் அமீனாஸ் நிகழ்வு தோன்றுகிறது.

மாலி எங்கிருக்கிறது? எதற்கு அங்கு பிரான்சு வருகிறது? என்னதான் நடக்கிறது என்று கேள்விகள் எழுகின்றன இல்லையா? சற்று முன்கதைச் சுருக்கம் பார்த்துவிடுவோம்.

உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த மாலி, இப்போது உலக அரசியலில் முக்கியப்பங்கு வகிக்கும் நாடுகளுள் ஒன்று. புத்தாண்டுக்கு வான வேடிக்கை கொண்டாடி மகிழ்ந்த ஜோருடன், ஜனவரி 11 ஆம் தேதி குண்டுகள் சகிதமாய் போர் விமானம் ஏறி, மாலியில் வந்து இறங்கியது பிரான்சு. இறங்கிய வேகத்தில் மாலி நாட்டின் வடக்கே குடியிருக்கும் இஸ்லாமியப் போராளிகளின்மீது வான்வெளித் தாக்குதல் நிகழ்த்தி போரைத் தொடங்கினார்கள். இதை எதிர்பார்த்திருந்த போராளிகளின் எதிர் நடவடிக்கையாகவே அல்ஜீரியாவின் நிகழ்வு கணிக்கப்படுகிறது.

அதற்குமுன் ஒரு விஷயத்தைப் பொதுவாய் நாம் அறிந்துகொள்வது அவசியம். இஸ்லாமியப் போராளிகள், அல் காயிதா, மேலை நாடுகளின் தாக்குதல் என்று ஆசியா கண்டத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் என்று குறிப்பிட்ட நாடுகளுக்குள் நிகழ்ந்த யுத்தம், கலவரம் என்று எல்லைக்கோடு வகித்துதான் இதுவரை நிகழ்வுகளைப் பார்த்துப் பழகியிருக்கிறோம். இனி ஆப்பிரிக்காவின் நாடுகளில் நிகழப்போகும் நிகழ்வுகள் நாடுகளின் எல்லைக் கோடுகளை அலட்சியப்படுத்திவிட்டு, பரந்து விரிந்த வகையில் நடைபெறப்போவதாக தான் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாடு, கண்டம் வித்தியாசமின்றி எப்படி மேலை நாடுகள் ஒன்றாகக் கைகோர்த்து ராணுவ நடவடிக்கை, போர் என்று மூக்கை நீட்டிக்கொண்டு களத்தில் குதிக்கின்றனவோ, அதைப்போல் நாடுகளின் அடையாளத்தைத் துறந்த நிலையில் ஏகத்துவ இஸ்லாமிய அடிப்படையில் ஒன்றினைந்து வருகின்றன இஸ்லாமியப் போராளி அமைப்புகள். அல்ஜீரியாவின் இன் அமீனாஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்த போராளிகள் அல்ஜீரியா, துனிஷியா, எகிப்து, மாலி, நைகர், கனடா, மௌரிடானியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கிறார் அல்ஜீரியாவின் பிரதமர் அப்துல் மாலிக் ஸல்லால் (Abdul Malek Sallal).

மாலி ஆப்பிரிக்காவில் உள்ள ஓர் இஸ்லாமிய நாடு. அதன் வரலாறு நெடியது. 11ஆம் நூற்றாண்டில் மாலியில் உள்ள திம்புக்தூ நகரில் முஸ்லிம் வர்த்தகர்களுடன் சேர்ந்து இஸ்லாமும் வந்து இறங்கியது. இங்கு இஸ்லாம் ஓங்கி வளர்ந்ததுடன் இல்லாமல் அந்நகரம் இஸ்லாமியக் கல்விக்குப் புகழ்பெற்று விளங்கியது. இந்நாட்டை 1893 ஆம் ஆண்டு பிரான்சு கைப்பற்றி தனது காலனி நாடாக ஆக்கிக்கொண்டது. பின்னர் 1960 இல் சுதந்திரம் அடைந்து, அடுத்து 23 ஆண்டுகாலம் சர்வாதிகார ஆட்சி, பின்னர் 1992 இல் ஜனநாயக ஆட்சி என்று மாறியது மாலி.

பல இனப் பிரிவுகள் கொண்ட மாலியில் துஆரெக் (Tuareg) இன மக்கள் தங்களது கலாச்சார உரிமைகளைக் கோரி அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியைத் தொடங்கினர். 1990 இல் தொடங்கிய இந்தப் பிரச்சினை 2007 இல் தீவிரமடைந்தது. லிபியாவின் அதிபர் கதாபியின் ஆப்பிரிக்கக் கூலிப்படையினருள் துஆரெக் மக்களும் உள்ளடக்கம். லிபியாவின் உள்நாட்டுப் போரில் கதாபி கொல்லப்பட்டதும், தாங்கள் அவருக்கு பார்த்த வேலைக்குக் கூலியாகப் பெரும் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு மாலிக்குத் திரும்பி விட்டனர் இவர்கள். வந்த வேகத்தில் National Movement for the Liberation of Azawad (MNLA) என்ற அமைப்பைத் துவங்கினார்கள்.

இதற்கிடையே மாலியில் அன்ஸார்தீன் என்றொரு இஸ்லாமியப் போராளி அமைப்பு உருவாகி வளர ஆரம்பித்தது. இந்த அமைப்பின் தலைவர் அயாத் அஃக் ஃகாலி (Iyad Ag Ghaly). இவரும் ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய மொரொக்கோவில் அல் காயிதா (Al Qaeda in the Islamic Maghreb – AQIM) எனும் அமைப்பின் தளபதி ஹமாதா அஃக் ஹாமாவும் (Hamada Ag Hama) நெருங்கிய உறவினர்கள். இந்த உறவுமுறையினாலேயே அன்ஸார்தீனும் AQIM அமைப்பும் அல் காயிதா குழுவே என்றும் ஒரு கருத்து இருந்தது. ஆயினும் இவ்விரண்டும் தனித்தனி போராளி இயக்கங்களாகவே கருதப்படுகின்றன.

ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கிய MNLA, அன்ஸார்தீன் அமைப்புடன் துப்பாக்கி கோர்த்து களத்தில் குதித்தது. இதனிடையே 2012 மார்ச் 22 அன்று ஒரு திருப்பம். மாலியின் இராணுவம் தன் அரசாங்கத்தின்மீது அதிருப்தியுற்று புரட்சி ஒன்றை நிகழ்த்தியது. புரட்சி நிகழ்த்திய இராணுவம் ஜனாதிபதியைத் தூக்கிவிட்டாலும் சர்வதேச அழுத்தம் காரணமாய் இடைக்கால அரசாங்கம் மாலியில் உருவானது. ஆனால் அதற்குள் இக்குழப்பத்தை சரியாகப் பயன்படுத்தி MNLA, அன்ஸார்தீன் குழுவினர் மாலியின் வடக்கே பெரும்பகுதியைக் கைப்பற்றி விட்டனர்.

MNLA வின் கனவு “துஆரக் மக்களுக்கான ஆஸாவாத்” (Tuareg state of Azawad) என்பதாகும். AQIM, அன்ஸார்தீன் அமைப்புகளின் அடிப்படை நோக்கமோ, ‘முழுமையான மாலி நாடு. அதில் இஸ்லாமிய ஆட்சி’. இந்த முரண் இவர்களுக்குள் பகைமையை உருவாக்கி, அன்ஸார்தீன் MNLA வை ஒடுக்கியது. கைப்பற்றிய பகுதிகள் முழுவதுமாக இஸ்லாமியப் போராளிகள் வசமாகின. நிலம் வசப்பட்டதும் மாலி நாட்டுக்குள் தங்களுக்கான நாட்டை உருவாக்க ஆரம்பித்தார்கள் அவர்கள். தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் முழு அளவிலான ஷரீஅத் சட்டம் அமல்படுத்தப்பட்டது. தர்காக்கள் இடிக்கப்பட்டன. இசைக்குத் தடா.

அங்கு துவங்கியது மேற்குலகத்தின் மெய் கவலை. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் உலகின் வறுமையான நாடுகளுள் ஒன்றாக மாலி கிடந்தபோது ஏற்படாத கவலை!

ஆப்பிரிக்காவில் அல் காயிதாவா? என்று அச்சத்துடன் கூர்ந்து கவனிக்கத் துவங்கினார்கள். முடிவில் அவர்களுக்கு ஒன்று புலப்பட்டது. AQIM, அன்ஸார்தீன், Movement for Oneness and Jihad in West Africa (MOJWA) MUJAO எனும் வெவ்வேறு பெயர்களில் இயங்கும் போராளி இயக்கங்களெல்லாம் ஒன்றுக்குள் ஒன்று; அல்-காயிதா எனும் மரத்தின் கிளைகள்.

போராளி அமைப்புகள் மாலி எனும் நாட்டில் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி, முன்னேறிக் கொண்டே வருவதைக் கவனித்த மேற்குலகு, அவர்களை மாலி நாட்டு இராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தது. வெகு விரைவில் அவர்கள் மாலியின் தலைநகரையே கைப்பற்றி விடுவார்கள் என்று அனுமானித்தது. வலிமையும், ஆட்சி செலுத்த நாடும் அவர்களுக்கு வலிமையும் அமைந்துபோனால் அது தங்களுக்கு எத்தகைய பிரச்சினைகளை உருவாக்கும் என்று நிறைய சிந்தித்தார்கள். முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையிலான நாடு உருவானால் அது உலக சுகாதரத்துக்குக் கேடாயிற்றே என்று எண்ணியவர்கள் முடிவெடுத்தார்கள் – போராளிகளை மாலியில் வைத்தே நசுக்கிவிட வேண்டும்.

என்ன செய்யலாம் என்று சர்வேதச நாடுகள் மாதக்கணக்கில் ஆலோசனை புரிந்தன. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில், சில நிபந்தனைகளுடன் ராணுவத் தலையீடு இருக்கலாம் என்றது. என்ன, எப்படி தாக்கப்போகிறீர்கள் என்று முற்கூட்டியே எங்களுக்கு மெனு கார்டு தயாரித்துத் தந்துவிட வேண்டும். மாலி இராணுவத்திற்குப் பயிற்சி அளித்து அவர்களை இஸ்லாமியப் போராளிகளுடன் போரிட வைக்கவேண்டும் போன்றவை அவற்றுள் சில. மாலி நாட்டைத் தன்னுடைய முந்தைய காலனி நாடாக வைத்திருந்த பிரான்சுக்கு மற்ற அனைத்து நாடுகளைவிட இதில் ஏகப்பட்ட அக்கறை. அங்குள்ள சந்து பொந்தெல்லாம் எனக்கு கூகுள் மேப் இல்லாமலேயே தெரியும். நான்தான் களமிறங்குவேன் என்று துடித்தது. அதற்கு உள்நோக்கமாக இயற்கை வள காரணங்கள் என்று சில அனுமானங்களும் உள்ளன. அதன் உண்மை போகப்போக வெளிவரலாம். ஆனால் தற்சமயம், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று நுழைந்து ஏகப்பட்ட தலைவலி, திருகுவலியுடன் உள்ள அமெரிக்கா, இராணுவ ரீதியாகப் பிரான்சு களமிறங்கினால் நல்லதுதான், வேண்டுமானால் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று நினைத்தோ என்னவோ, உனக்கு நான் அனைத்து உதவியும் அளிப்பேன் என்று பின்புல ஆதரவுக்கு உத்தரவாதம் அளித்துவிட்டது.

ஜனவரி இரண்டாம் வாரம். போராளிகளின் இரண்டு குழுக்கள் தெற்கில் உள்ள Sego and Mopti நகரங்களை நோக்கிச் செல்வதாகவும், அந்நகரங்கள் வீழ்ந்தால் இஸ்லாமியப் போராளிகள் தலைநகர் பாமாகோவை நெருங்கிவிடுவார்கள் என்றும் பிரான்சின் உளவுத்துறை அச்சம் பூசி தகவலொன்று வெளியிட்டது. அதுவரை சிறுநீரை அடக்கும் சிறுவனைப்போல் தவித்துக்கொண்டிருந்த பிரான்சு, இதுபோதும் காரணம் என்று உடனே விமானமேறி வந்துவிட்டது. மாலியின் வடக்கில் உள்ள இஸ்லாமியப் போராளிகளின்மீது போரைத் துவக்கிவிட்டது. ஆப்கானிஸ்தானைவிட மோசமான ஓர் அனுபவமாக உங்களுக்கு இது அமையப்போகிறது என்று அறிவித்து வரவேற்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர் போராளிகள். தொடங்கிய போர் பிரான்சு நினைத்ததைவிட கடுமையாக உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமியப் போராளிகளின்வசம் உள்ள பகுதி மிகப் பெரியது. பிரான்சு நாடு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம் ஆகியவற்றைவிடப் பெரிய பரப்பு. ஏறக்குறைய ஆப்கானிஸ்தான் அளவுக்குப் பெரிசு. இவர்கள் கோலாச்சும் வடக்குப் பகுதியில்தான் புகழ்பெற்ற சஹாரா பாலைவனம். அந்த கடினமான பாலைவெளி, அனுகூலமற்ற நிலப்பரப்பு ஆகியவற்றினால் இங்கு போராளிகளை எதிர்கொள்வது ஆப்கானிஸ்தானைவிடக் கடினமானதாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

AQIM என்ற போராளி அமைப்பானது மாலியின் கானகங்களிலும், பாலைவனங்களிலும் பல ஆண்டுகள் நிழலாய்ப் பரவியிருந்த ஒன்று. அவர்களது ஜாகை மாலியில் மட்டுமன்றி, எல்லை தாண்டிய பெரும்பகுதி. ஏறத்தாழ 7000 கி.மீ. நீளமுள்ள நீண்ட ரிப்பன் அளவிற்கு, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் அவர்கள் பரவியுள்ளனர். மௌரிடானியா, நைகர், அல்ஜீரியா, லிப்யா, பர்கினா ஃபாஸோ, சாட் நாடுள் அதில் அடங்கும். ஆப்கானிஸ்தானில் ஸ்வாட் பகுதியல் தாலிபான் போராளிகளைக் கட்டுப்படுத்தவாவது ஒரு போர்வழிமுறையை யோசிக்க முடியும். ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து செங்கடல் வரை நீளும், ஏறத்தாழ ஆயிரம் கி.மீ. அகலமுள்ள பிராந்தியத்தில் பரவியுள்ள இவர்களைக் கட்டுப்படுத்தவது சாத்தியமில்லை என்கிறார் பீட்டர் ஃபாம் (Peter Pham). அமெரிக்க இராணுவத்தின் ஆப்பிரிக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் ஆலோசகர் இவர்.

அதே நேரத்தில், நாம் வலிமையடைந்து கொண்டேயிருந்தால் மேற்குலகம் அப்படியே திகைத்து நின்றுவிடும் என்று அபத்தக் கற்பனையெல்லாம் வளர்க்காமல் மாலியிலுள்ள இஸ்லாமியப் போராளிகள் பிரான்சு வந்து குதிக்கும் முன்பே போருக்குத் தயாராக ஆரம்பித்தார்கள்.

பிரான்சு நாட்டின் கட்டுமானக் கம்பெனி SOGEA-SATOM. ஆப்பிரிக்காவிலுள்ள சர்வேதசக் கட்டுமான நிறுவனங்களில் முதன்மையானது. மாலியிலுள்ள திம்புக்தூ நகரத்திற்கும் கோமா கோரா (Goma Coura) என்ற ஊருக்கும் இடையே நெடுஞ்சாலை அமைக்க ஐரோப்பிய யூனியனின் முதலீட்டில் இந்தக் கம்பெனிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் கோடாலி, கடப்பாரை, மண்வெட்டி போன்றவை கொண்டா சாலை அமைக்கும்? நவீனக் கட்டுமான உபகரணங்களான earth movers, cater pillars ஆகியன வைத்திருந்தார்கள். இவர்களிடமிருந்த 11 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள இந்த இயந்திரங்களைப் போராளிகள் கடத்திச் சென்றனர். தேங்காயா, மாங்காயா மூட்டையை மறைத்துத் தூக்கிக்கொண்டு ஓட? பெரும் அளவிலான இந்த கட்டுமான இயந்திரங்களை, கறுப்புக் கொடிகள் பறக்கும் தங்களது ட்ரக்குகள் புடைசூழ, பாதுகாப்புடன் ஓட்டிச் சென்றார்கள் போராளிகள். என்றால், அந்தப் பகுதிகளில் எந்த அளவிற்கு அவர்களுக்கு ஆளுமை இருந்திருக்கும்?

கடத்திச் சென்ற இயந்திரங்களை போர்த்தி வைத்து வேடிக்கை பார்க்காமல், அடுத்த காரியத்தில் இறங்கினார்கள். கூலிக்குப் பணிபுரியும் உள்ளூர் ஆட்கள் தாராளமான சம்பளத்தில் அமர்த்தப்பட்டனர். நாளொன்றுக்கு 10,000 francs அதாவது 20 டாலர்கள் கூலி. அது அந்த கூலியாட்களின் சாதாரணக் கூலியைவிடப் பன்மடங்கு அதிகம்.

மலையைக் குடைந்து பாதை, சாலைகள், அகழிகள், சுரங்கவாயில், பாதுகாவல் அரண் என மிக விரிவாய்த் திட்டமிட்ட கட்டுமான அமைப்புடன் புதிய தளங்கள் உருவாக ஆரம்பித்தன. ஜெனரேட்டர்கள், சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்கள் என்று மின் வசதி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. டெகர்கார்ட் (Teghergharte) மலை. இங்கு உள்ளூர் போராளிகளுக்கான முதல் தளம் உருவானது. ஆப்கனில் உள்ள தோரா-போராவுக்கு இணையாய் இதை அதிகாரிகள் ஒப்பிடுகிறார்கள். அதற்கும் வடக்கே, போகாஸா (Boghassa). இங்கு அன்ஸார்தீன் போராளிகள் தளம் உருவாக்கினார்கள். இங்கும் மலைகளுக்கு இடையே பாதைகள் அமைக்க வெடிமருந்துகள், சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. கிடால் எனும் நகருக்கு வடக்கே 200 அல்லது 300 கி.மீ. தொலைவில் கடுமையான பாறைகள் அமைந்த பாலைவெளி. அங்கு இரண்டு தளங்களை உருவாக்கியுள்ளார்கள்.

தவிர குகைகள். குகைகள் என்றால் பொந்துகள் அல்ல. இந்த குகைகள் ட்ரக்குகளை உள்ளே ஓட்டிச் செல்லுமளவு விசாலம், பிரம்மாண்டம். அதனுள் ஏராளமான கார்கள். வாகனங்களுக்கான டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் நூற்றுக்கணக்கான பீப்பாய்களில் அடுக்கி வைக்கப்பட்டன. ஆயுதங்களை கையாளும் வகையில் வாகனங்களை மாற்றி அமைத்துக்கொண்டார்கள். சாலைகளின் ஓரத்தில் ஆழமான பதுங்கு குழிகள், சிமென்ட் தற்காப்பு அரண்கள், அதில் துப்பாக்கி செருகி சுடுவதற்கு வாகாய்த் துளைகள்.

செங்குத்தான மலைச்சரிவுகள், அதிலுள்ள பாறைப் பிளவுகள், பூமியில் பொந்துகள் தோண்டி வல்லமைமிக்க அரண்கள் என்று ஏறக்குறைய மாலிக்குள் ஒரு புது நாட்டையே போராளிகள் உருவாக்கி விட்டனர். ஒருவிதத்தில் சொல்லப்போனால் அவர்கள் பாறையினுள் வாழ்கிறார்கள் என்கிறார்கள் செய்தியாளர்கள்.

மாலி இராணுவத்தின் முன்னாள் தளங்களிலிருந்து கைப்பற்றிய ரஷ்யத் தயாரிப்பு போர்க்கருவிகள்; லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் படைக்கொட்டிலிலிருந்து கிடைத்த SA-7 SA-2 எனும் ஏவுகணைகள் போன்றவை இவர்களது வசம். இவற்றைக் கொண்டு தரையிலிருந்து வான் நோக்கி விமானத்தைச் சுடலாம். இவை ஆப்பிரிக்காவின் வலிமையற்ற விமானப் படையைத் தாக்க உதவலாம். ஆனால் மேற்கின் வல்லமை பொருந்திய விமானப் படையிடம் இது எடுபடாது என்கிறார் அதாவுல்லாஹ் (Atallah). அமெரிக்க விமானப் படையில் ஓய்வுபெற்ற லெஃப்டினனட் கர்னல் இவர்.

ராபர்ட் ஃபௌலர் (Robert R. Fowler) கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஐ.நா.வின் செக்ரட்டரி ஜெனரலின் சிறப்புத் தூதுவராக நைகர் நாட்டில் பணியில் இருந்தார். 2008 ஆம் ஆண்டு, டிசம்பர் 14 ஆம் நாள் அவரையும் அவருடன் இருந்த இருவரையும் AQIM இன் உள்ளூர்க் கிளையினர் கடத்தினர். அவரைப் பெரும்பாலும் வாகனத்தில் வைத்து பாலைவனத்தைச் சுற்றிகாட்டியே 130 நாட்கள் கைதியாக வைத்திருந்தனர். பின்னர் அவரும் அவரைப்போல் கடத்தப்பட்டிருந்த மற்றும் பல மேற்கத்தியர்களும் விடுவிக்கப்பட்டனர். பணயத் தொகையாக பெரும் தொகை கைமாறியதாக விக்கி லீக்ஸ் தகவலைக் கசியவிட்டுள்ளது. பணம் கட்டியதற்கு, பெற்றதற்கு என்று ஏதும் ரசீது இல்லையாதலால் இரு தரப்பும் மௌனம் சாதித்துவிட்டன.

இதில் பணம் கைமாறியதோ இல்லையோ, அந்தத் தம் கடத்தல் அனுபவத்தை வைத்து A Season in Hell என்ற புத்தகம் எழுதி ராபர்ட் ஃபௌலருக்கு சில்லறை கிடைப்பது தனிச் செய்தி. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள், சொச்சம் நாற்பது நாள் என்று போராளிகளுடன் ராபர்ட் ஃபௌலர் வாழ்க்கை நடத்தியுள்ளதால் அந்தப் புத்தகத்திலுள்ள செய்திகளின் நம்பகத்தன்மை அதிகம். இன்றைய இப்பிரச்சினையில் அவர் கூறியுள்ள கருத்து முக்கியமானது. ‘அன்றைய அல்-காயிதாவினர் ஆப்கானிஸ்தானைத் தங்களது உடைமையாக்கி இருக்கவில்லை. ஆனால் இன்றைய இவர்கள் மாலியின் வடக்கைத் தங்களது உடைமையாக்கி ஏகபோக உரிமையுடன் ஆண்டு வருகிறார்கள்.’

முக்தார் பில்முக்தார் (Mokhtar Belmokhtar) என்று இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோமே அவர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போது பாடத்தில் அதிகம் ஆர்வம் ஏற்படாமல் ஜிஹாத் இவருக்கு விருப்பப் பாடமாகி இள வயதிலேயே ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். அங்கு அல் காயிதாவின் பட்டறையில் சண்டை பயின்று ரஷ்யர்களுக்கு எதிரான ஆப்கன் போரில் ஈடுபட்டு சண்டை புரிந்திருக்கிறார். அதில் இவருக்கு இழப்பு ஒற்றைக்கண். பின்னர் அல்ஜீரியாவுக்குத் திரும்பி, Armed Islamic Group of Algeria (GIA) எனும் போராளிக் குழுவுடன் இணைந்து, ஆயுதம், ரத்தம், போராட்டம் என்று வளர்ந்து, AQIM இல் முக்கியத் தளபதியாகிவிட்டார். பல குற்றச்சாட்டுகள் உள்ள இவரை uncatchable என்று வர்ணித்துள்ளது பிரான்சு. இவருடைய தலைமையிலான பிரிவினர்தாம் ராபர்ட் ஃபௌலரைக் கடத்தியவர்கள்.

தம்மைக் கடத்திய போராளிகள் பல நாள்கள் தம்மை வண்டியிலேயே வைத்து ஓட்டிக் கொண்டிருந்தனர் என்கிறார் ஃபௌலர். வடிவமைப்பற்ற நிலப்பகுதி, ஒரேமாதிரியான மணல் குன்றுகள் போன்றவை அவர்களுக்கு எந்த தடுமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. காகிதத்தில் வரைந்து கொடுத்ததைப்போல் பாதையெல்லாம் அவர்களுக்கு மனப்பாடம். சூரியனைப் பார்த்து திசை அறிந்து எளிதாய் பயணித்தனர். நான்கு மாதம் கைதியாகக் கிடந்தேன். அந்த காலத்தில் அவர்கள் ஒருமுறைகூட பெட்ரோல் பங்க் சென்று டீசல் நிரப்பியதில்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு டீசல் தட்டுப்பாடும் இருந்ததில்லை. அரவமற்ற வனாந்திரமாக இருக்கும். எங்கோ இருக்கும் ஒரு முள்மரத்தின் அருகில் ஓட்டிச் செல்வார்கள். அங்கு அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பீப்பாய்களிலிருந்து டீசல் நிரப்புவார்கள். எங்கோ ஓர் இடத்தில் மணலைத் தோண்டி, பின்னர் அவர்களுக்குத் தேவைப்படும்போது உபயோகிக்க, மூட்டை நிறைய பூட்ஸுகளை புதைத்து வைப்பார்கள். சாயா வேண்டும், வடை வேண்டும், ரொட்டி வேண்டும் என்று எந்த கடைக்கும் சென்று பொருள் வாங்கியதில்லை. ஆயினும் உணவு தட்டுப்பாடே இருந்ததில்லை. மிகவும் குறைவாய் உணவு உண்பார்கள், என்று வியந்து சொல்லியுள்ளார் ராபர்ட் ஃபௌலர்.

இப்படியான இந்தப் போராளிகளை எதிர்த்து படையெடுத்துவந்திருக்கும் பிரான்சு படையினருக்குச் சவாலான பல விஷயங்களுள் ஒன்று இணக்கமற்ற நிலப்பரப்பு. அடுத்தது கோரமான வெப்பம். சஹாரா பகுதிகளில் வெப்பம் எந்தளவு இருக்குமென்றால் மூச்சு விடுவதே சிரமம். இராணுவப் புரட்சிக்கு முன்னர் வடபகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாலி நாட்டுப் படையினரேகூட காலை 4 மணியிலிருந்து 10 மணிவரை மட்டுமே பணிபுரிவர். அதன் பின்னர் வாகனங்களின் நிழலில்தான் அவர்களது பகல் நேரம் கழியும். ஆனால் இந்தப் போராளிகள், சஹாராவின் சூரிய வெப்பத்திலும், மணிக் கணக்கில் குர்ஆன் ஓதியவாறு இருப்பார்கள் என்று ராபர்ட் ஃபௌலர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “தங்களுடைய கொள்கையில் இந்தளவு ஈடுபாடுள்ள இளைஞர்களை நான் கண்டதே இல்லை. ஓய்வையும் உல்லாசத்தையும் அவர்கள் நினைப்பதில்லை; ஏங்குவதில்லை. தங்களுடைய மனைவி, மக்கள். குடும்பத்தைப் பிரிந்து போராளிகளாய்க் களத்தில் கிடக்கின்றனர். தங்களது பயணம் சொர்க்கத்தின் பாதையை நோக்கி என்பதை அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்” என்கிறார்.

மாலியின்மீது பிரான்சு போர் தொடுக்க பணம்? ஐக்கிய அமீரகம் எங்களுக்கு பண உதவி செய்ய முற்றிலும் தயார் என்று கடந்த மாதம் அபுதாபிக்கு ஒரு குட்டிநடை சென்றுவிட்டு வந்த பிரான்சின் ஜனாதிபதி ஃபிரான்காய்ஸ் ஹாலண்ட் (Francois Hollande) தெரிவித்துள்ளார். “மாலி 90 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ள நாடாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதற்காக அது இஸ்லாமிய நாடாக இருக்க பிரான்சு அனுமதிக்காது” என்று அறிவித்துள்ள இவருக்கு முஸ்லிம் அரபு நாடுகளின் எண்ணெய் மணக்கும் பணம். மாலி நாட்டு மணலில் பூட்ஸ் காலை விட்டுள்ளது பிரான்சு. அது பிடித்துள்ள வால் எலியா, புலியா என்பதை உலகம் கவனிக்க ஆரம்பித்துள்ளது.

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம், 16-28, பிப்ரவரி 2013

குறிப்பு: சமரசம் அச்சுப் பிரதியில் விரிவு கருதி நீக்கப்பட்டுள்ள பகுதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Leave a Comment