ருக்னுத்தீன் தம் விசுவாசப் பிரமாணத்தை முடித்துக் கொண்டு, முன்பின் தயங்காமலும், சற்றும் கலக்கமுறாமலும், தெளிந்த மனத்துடன் நிமிர்ந்த தலையை மார்புவிரிய உயர்த்திக்கொண்டு, அக் கூடாரத்தை விட்டு வெளியேறினார். அப்படி வேகமாகச் சென்றவர்
நீல நதிக்கரையை எட்டுவதற்குள்ளே எதிரிகள் கரையிறங்கியதும், கரை நெடுகவே வந்தவர்கள் பாசறை இறங்கியதும் நிகழ்ந்து விட்டன. அதனுடன், கோபாவேசங்கொண்ட காஹிரா வாசிகளும், மம்லூக் படையினரும் ஏற்கனவே தங்கள் கைவரிசையைக் காட்டி விட்டனர். சேனைத் தலைவரின் அனுமதியின்றி அவசரப்பட்டுத் தாங்கள் தங்கள் இஷ்டத்துக்கு எதிரிகளைத் தாக்கி நாசப்படுத்தியது தவறென்றுணர்ந்த அத்தனை முஸ்லிம் வீரர்களும், ருக்னுத்தீனைக் கண்டதும் பேசாது நின்றுவிட்டதுடன், அவர் என்ன கட்டளையிடப் போகிறாரென்பதை எதிர் நோக்கினர். “தாக்காதீர்கள்!” என்ற கட்டளை ருக்னுத்தீனின் வாயினின்று சட்டென்று பிறந்தது. மறு கணத்தில் அத்தனை முஸ்லிம்களின் வாட்களும் உறையுள்ளே சொருகப்பட்டன; ஈட்டிகள் தாழ்த்தப்பட்டன.
நிலா வெளிச்சத்தின் உதவியை வைத்துக்கொண்டே முஸ்லிம்கள் தங்கள் பாசறைகளை நிருமித்தார்கள். இவ்வளவு நேரம் கடுமையாகத் தாக்கியவர்கள் திடீரென்று போரை நிறுத்திக்கொண்டதைக் கண்டு கிறிஸ்தவர்கள் வியப்படைந்தனர். எனினும், மூச்சு விடவேனும் நேரம் கிடைத்ததே என்று அவர்கள் மனந்தேறித் தங்கள் பாசறைகளைச் சித்தஞ் செய்யத் துவக்கினார்கள்.
அன்றிரவே ருக்னுத்தீன் மட்டும் நாடி இருப்பாராயின், அத்தனை கிறிஸ்தவர்களையும் ஒருவர் எஞ்சியில்லாமல் படுகொலை புரிந்திருக்க முடியும். ஆனால், அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, முஸ்லிம்கள் அம்மாதிரியான பேடிச் செயலையும், அக்கிரமப் படுகொலையையும் புரியும்படி ஏவப்பட்டில்லை. யுத்தம் நேர்ந்தால், போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று, தற்காப்புப் போர்தான் புரியலாமேயொழிய, எதிரிகள் அக்கிரமம் செய்வதற்காகப் படையெடுத்து வந்திருக்கின்றனர் என்னும் ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு, அவ் வெதிரிகள் ஏமாந்த சமயத்தில், அல்லது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், அல்லது ஆயத்தமாயில்லாத வேளையில் குபீரென்று பாய்ந்து படுகொலை புரிவதை இஸ்லாம் என்றும் அனுமதிக்கவில்லை. அம்மாதிரியான நயவஞ்சகப் படுகொலைகளை யூதர்கள் புரிந்தார்கள். ஆயின், உண்மையான முஸ்லிம்கள் புரியவில்லை; புரிய மாட்டார்கள். அப்படிப்பட்ட நிஜ மூமினான ருக்னுத்தீன், அல்லாஹ்வையும் ரஸூலையும் அடியொற்றி நடக்கும் அத் தளபதி அந்த இரா நேரத்தில் போரை நிற்பாட்டியதில் அதிசயமில்லை.
“யுத்தத்திலும் காதலிலும் என்ன செய்தாலும் அது சரியான நியாயமே!” என்னும் ஆங்கிலப் பழமொழியொன்று வழங்கி வருகிறது. இஸ்லாத்தின் “ஜிஹாத்” அப் பழமொழியைத் திரஸ்கரிப்பதுடன், யுத்தத்திலும் காதலிலுங் கூட நீதமான எல்லையைக் கடக்கக் கூடாதென்றுதான் மிகத் திட்ட வட்டமான தெளிந்த மொழிகளால் சதா உபதேசம் புரிகின்றது. தற்காப்பு ஜிஹாதிலும் எதிரிகள் இழைத்த அளவுக்கே நம் முஸ்லிம்களும் அவர்களுக்கு நஷ்டம் விளைத்தல் வேண்டும். ஏ, காமாலைக் கண்படைத்த நயவஞ்சக விரோதிகள்! சற்றே இஸ்லாத்தின் இணையற்ற சற்போதனையைக் கண் திறந்து நோக்கக் கடவீர்கள்! நாகரிகத்திலும் நியாயத்திலும் தங்களை ஒப்பாரும் மிக்காரும் எவருமே இல்லையென்று மார்தட்டி நிற்பவர்கள் சற்றே தங்களுடைய நெஞ்சில் கையை வைத்து உண்மை முஸ்லிம்கள் யுத்த சந்தர்ப்பத்தில் நடந்துகொள்வதைப் போலச் சாதாரணகாலத்தில் தாங்கள் எதிரிகள்மாட்டு நடந்துகொண்டதுண்டா என்று ஓர்ந்து பார்க்கக் கடவார்கள். இற்றை நாட்களிலும் மேனாட்டு “நவநாகரிக” மாக்கள் தங்கள் போர்களில் இஸ்லாத்திலிருந்து கற்று நடக்கவேண்டிய பாடங்கள் அநேக முள.
மறுநாள் நன்றாய் விடிந்ததும், அந்தச் “சிலுவை யுத்தம்” என்னும் போர் மிக உக்கிரமாக ஆரம்பித்தது. தமீதாவில் வந்து இறங்கியது முதல் நன்றாய்த் தின்று கொழுத்திருந்த அக்கிறிஸ்தவர்கள் இப்போதுதான் முதன் முதலாக நிஜமான யுத்தத்தை ருசி பார்க்க நேர்ந்தது. முஸ்லிம்களின் சக்தி இவ்வளவு அதிகமாய் இருக்குமென்பதை மட்டும் லூயீ முன்னமே உணர்ந்திருப்பாராயின், அவர் இந்த யுத்தத்துக்கே வந்திருக்கமாட்டார். ஆனால், இனி என்ன செய்ய முடியும்? நீல நதி தீரத்தில் கரையிறங்கிக் காஹிராவில் காலடி எடுத்து வைத்தவுடனேயே முஸ்லிம்களின் வீரம் எத்தன்மைத்து என்பதை லூயீ நன்கறிந்து கொண்டார். ஆனால், இப்பால் பொழுது விடிந்த பின்னர் அவர்கள் அணிவகுத்து நின்ற முறையைக் கண்டு திகைத்துப் போயினார். என்னெனின், அந்தக் காலத்து ஐரோப்பியர்களுக்குப் போர் முறையும் சாதாரணமாகத் தெரியாது; அணிவகுத்து நிற்க வேண்டுய வியூக வகையும் இன்னதென்பது தெரியாது. ஒரே கூட்டமாகக் குழுமி நின்று கண்ட கண்டபடியெல்லாம் ஓடியாடுவார்கள்.
அப்படிப்பட்ட அந்தச் சிலுவை யுத்தப் பேர்வழிகள், நீல நதி தீரத்தில் வரிவரியாக மம்லூக்குகள் நிறுத்தப்பட்டிருந்ததையும், காஹிராவின் நகர் வாயிலிலே எறும்புச்சாரி போல் ஒன்றையடுத்து ஒன்றாக வீரர்களின் வரிசைகள் அணிவகுக்கப்பட்டிருந்ததையும், கிறிஸ்தவப் படையின் இரு புயங்களிலும் அதே போன்ற பெரிய அணிவகுப்புகள் அமர்த்தப்பட்டிருந்ததையும் கண்டு திகைத்துவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் முன்னோக்கிக் காஹிராவுள் நுழைய மார்க்கமில்லாமற் போனதுடன், பின்னோக்கி நீல நதிக்குள் குதித்துப் புறமுதுகிட்டோடவும் வழியில்லை. என்னெனின், முன்னம் நாம் கூறிய ஷாம் தேசத்துப் படைகள் அந் நதியோரத்தில் சமயம் எப்போது வாய்க்குமென்று காத்துக் கிடந்தன. பற்றாக் குறைக்கு நதியின் நடுவிலுள்ள தீவில் பஹ்ரீ மம்லூக்குகள் பசியால் வாடிய புலிகளேபோல் சீறிக் கொண்டிருந்தனர். லூயீ மன்னருக்குக் குடல் கலங்க ஆரம்பித்து விட்டது.
கிறிஸ்தவக் கூட்டம் வெளிப் பார்வையில் எப்படிக் குழம்பிப்போயும் குலைந்துபோயும் காணப்பட்டதோ, அதே விதமாகவே அகத்திலும் நிலைதடுமாறி விட்டது. அவர்கள் அணியணியாகவும் நிற்கவில்லை; துண்டுதுண்டாய்ப் பிரிந்து ஒவ்வொரு திசையிலுமுள்ள முஸ்லிம்களைத் தனித்தனியான முறையில் தாக்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளவில்லை; ஒவ்வொரு வீரனாக நேருக்கு நேர் நின்று போராட வேண்டுமென்பதும் புலனாகவில்லை. உண்மையிலேயே முஸ்லிம்களைவிடக் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் மிகுந்திருந்திங்கூட எப்படித் தாக்குவது என்று ஒன்றும் புரியாமல் எல்லாரும் ஒரே காக்காக்கூட்டமாகச் செறிந்து நின்று கண்டபடி தாவினார்கள். ஆட்டுமந்தை எத்துணைப் பெரிதாயிருந்தாலும், அம் மந்தையின் நாற்புறத்திலும் வரிசைக் கிரமமாக நிற்கும் புலிகளை எப்படித் தாக்கி ஒழிக்கமுடியும்? அல்லது தாக்காமலேதான் எப்படித் தப்பி ஓட முடியும்? ஆகவே, அன்று பொழுது போவதற்குள் அந்தக் கிறிஸ்தவக் கூட்டத்தின் நான்கு ஓரங்களிலும் இருந்த படையினர் மட்டுமே கொல்லப்பட்டனரன்றி, முஸ்லிம்களுக்குச் சேதம் மிகச் சொற்பமே விளைந்தது. அப்பொழுதிருந்த நிலைமையில் லூயீ மன்னர் எப்படியாவது தப்பியோடிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால், எப்படி ஓடுவது? எங்கே ஓடுவது? அவரால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லையே!
கிறிஸ்தவக் கும்பல்கள் பட்டபாட்டை இன்னும் காணச் சகிக்காமல் கதிரவனும் மேல் கடலுள் சென்று மறைந்துவிட்டான். லூயீ மன்னரும் அவர் படையினரும், மாண்டவர் போக மீதிப்பேர் நாற்புறமும் வளைத்துக்கொண்டு நின்ற முஸ்லிம் படைகளுக்கு மத்தியிலே இசகுபிசகாய்ச் சிக்கிய நிலைமையிலேயே இரவைக் கழித்தனர் ஒருவாறு.
அடுத்த நாள் விடியுமுன்பே கிறிஸ்தவர்கள் தாக்க ஆரம்பித்தார்கள். எனினும், முஸ்லிம்கள் சளைக்கவில்லை. அர்த்த சந்திரனின் காலை வெளிச்சத்திலே, கொட்டுகிற கொடிய பனியிலே கடுகளவும் உள்ளந் துளங்காது நிலைமையைச் சமாளித்தனர். ருக்னுத்தீன் இன்னமும்கூட, எதிர்த்துத் தாக்குமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடாமல், தற்காப்பிலேயே நிற்கும்படிதான் ஆக்ஞாபித்துக்கொண்டிருந்தார். அவர் அப்படிச் செய்ததற்குரிய இரண்டு முக்கியமான காரணங்கள் என்னவென்றால், தூரான்ஷா இங்கே வந்து சேர்கிற வரையில் யுத்தத்தை முடித்துக்கொண்டு விடக்கூடாதென்பதும், எதிரிகளை இன்னம் சில நாட்களுக்கு இந்த ஈன ஸ்திதியிலேயே வைத்து வாட்டவேண்டும் என்பதுமேயாகும்.
அல்லாமலும் ருக்னுத்தீனிடம் ஷஜருத்துர் அடிக்கடியும் யுத்தத்தை நீடிக்கச் சொல்லியே கோரி வந்தார். என்னெனின், போர் முடிகிற வரையில் எவரும் சுல்தானைப்பற்றிக் கவலைப் பட மாட்டார். ஆனால், போரை முடித்துவிட்டு, எதிரிகளை லூயீ உட்படச் சிறைப்படுத்தி விட்டால், எல்லாரும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்ள ஸாலிஹைத் தேடி ஓடுவார்கள். அப்போது அவர்களை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படிப் பெரு மகிழ்ச்சியால் ஓடுகிறவர்கள் உண்மையைக் கண்டு கொள்வார்கள். தூரான்ஷா வந்து சேர்வதற்குள், சுல்தான் மாண்டுவிட்டாரென்னும் பயங்கர உண்மை பகிரங்கமாக வெளிப்பட்டு விட்டால், அத்தனை லலிதமாக எடுத்த ஏற்பாடுகள் அனைத்தும் வீண் வியர்த்தமாகி விடாவோ? எனவே, முஸ்லிம் வீரர்களை ருக்னுத்தீன் பக்குவமாகவே பார்த்து வந்தார். அன்றியும், இந்த நிதான நடவடிக்கையால் கிறிஸ்தவர்களின் நிலைமை மிகக் கொடிய நெடிய நரகாவஸ்தையாகவும், சித்ரவதையாகவுமே காட்சியளித்துக்கொண்டிருந்தது. தமீதாவைப்போல் காஹிராவின் கோட்டைக் கதவுகளும் அகலமாயத் திறந்திருக்குமென்று பகற் கனவு கண்டுவந்த அவர்களுக்கு ஏமாற்றம் ஒருபுறமிருக்க, திட்டமான முடிவைச் சடுதியில் எட்டிவிடவும் முடியாதபடி முஸ்லிம்கள் திணறச் செய்து வருவதைக் கண்டு ஆத்திரம் அதிகரித்தது. எலியைப் பிடித்த பூனை அதை உடனே தின்று விடுவதில்லை. அஃதே போல், வலியச் சிக்கிய கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் சன்னஞ் சன்னமாய் வாட்டினர்.
டிஸம்பர் பிறந்த பின்பும் யுத்தம் முடியவில்லை. முஸ்லிம்களும் தங்கள் நிலைமையிலிருந்து மாறவில்லை. கிறிஸ்தவர்களின் படைப் பலம் நாடோறும் குன்றிக்கொண்டே வந்ததுடன், முஸ்லிம்களின் கை ஓங்கியே வந்தது. போர்தொடங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டபடியால், கிறிஸ்தவர்கள் தங்கள் கையோடு கொண்டுவந்திருந்த உணவுப் பண்டங்களும், ஏனை அவசிய சாமான்களும் குறைந்துகொண்டே வந்தன. மேலும், இந்த யுத்தத்தில் நீல நதியின் ஆதிக்கத்தைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டு முஸ்லிம்களை நசுக்கி விடலாமென்று லூயீ எண்ணியிருந்த ஆகாசக் கோட்டைத் திட்டம் பகற்கனவாய்ச் சென்று முடிந்தது. நாம் முன்னமே வருணித்ததுபோல் ஷாம் தேசத் துணைப்படைகள் நதிக்கரையிலும், பஹ்ரீ மம்லூக்குகள் நதியின் நடுவிலுள்ள தீவிலும் பலமான அரணைச் சிருஷ்டித்துக்கொண்டு விட்டபடியால், காஹிராவை எட்டிய கிறிஸ்தவர்கள் நாற்புமும் வளைத்துக் கொள்ளப்பட்டதுடன், அவர்கள் முன்னேறி வந்த வடக்கு வழியும் துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே, இங்கே மாட்டிக் கொண்டவர்கள் புறமுதுகிட்டோடுவதற்கும் முடியாமற் போயிற்று; தமீதா வழியாகத் துணைப் படை, உணவுப் பண்டங்கள் முதலியன இவர்களுக்கு வர முடியாமலும் போய்விட்டன. சுருங்கச் சொல்லின், மிகவும் பருத்த தன் மேனியுடன் ஆழமான குழியுள் – கொப்பத்துள் – அறியாமல் வீழ்ந்துவிட்ட யானையொன்று வெளியேற முடியாமல் எப்படித் திணறுமோ, அப்படியே லூயீயின் திணற ஆரம்பித்தது. அந்தோ, பரிதாபம்! பரிதாபம்!
முஸ்லிம்கள் எதிர்த்துத் தாக்காமல், தங்களை தாக்கியவர்களை மட்டுமே பொருத்துக்கொண்டிருந்தபடியாகவும் இவர்களின் அணிவகுப்பு வெகு உன்னதமான வகையில் வியூகம் வகுக்கப்பட்டிருந்தமையாலும், ஆட்சேதமே விளையவில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் குழைத்து வைத்த மாவைப்போல் பெருந் திரளாக ஒரே இடத்தில் குழுமி நின்றுகொண்டு, தத்தம் மனம்போன போக்கிலெல்லாம் தாவி வீழ்ந்து பாய்ந்ததினால், தினமும் பன்னூற்றுக் கணக்கில் மாண்டொழிந்தார்கள். முஸ்லிம் படைகளுக்கிடையே ஒற்றுமையை நிலவியது; எதிரிகளுக்கிடையே ஒற்றுமை இல்லாமற் போனதுடன் வேற்றுமையுணர்ச்சியும் மிதமிஞ்சி விட்டது. ருக்னுத்தீன் கிழித்த கோட்டைத் தாண்டாமல் நம்மவர் அடிபணிந்து நின்றார்கள்; ஆனால், கிறிஸ்தவப் படைகளோ, லூயீயின் படைகளுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்த்ததுடன், லூயீயையே மீற ஆரம்பித்தனர். சுகமான வாழ்க்கை நடத்துகிற நிழல் நிரம்பிய மாளிகைக்குள்ளே மனைவியொருத்தி தன் கணவனுக்குப் பணியாவிட்டால், அவன் எவ்வளவு வேதனைப்படுகிறான்? அப்படியிருக்க, சுதேசத்தை விட்டு வேற்று நாட்டுக்கு வந்து, போர்க்களத்தில் குளிரால் நளிர் பிடித்துப் பேரவதியுறுகிற இக்கட்டான வேளையிலே போர்த் தலைவனின் கட்டளைகளைச் சிப்பாய்கள் எதிர்த்து நின்றால், அவன் எப்படிச் சும்மா இருக்க முடியும்? கழுத்திலே கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றிலே குதித்த செயலாகப் போய் முடிந்ததே என்று லூயீ பெருமூச்செறிந்தார். முன்னம் தமீதாவில் இருக்கையில் லூயீ பட்ட மனவேதனையைவிட இப்போது பட்டபாடு போதும் போதுமென்றாகி விட்டது.
பத்தாவது நாள் பிறந்துவிட்டது. கிறிஸ்தவர்கள் தோல்விக்கு மேல் தோல்வியைப் பெற்று வந்தபோதினும், இன்னம் பணியவில்லை. தூரான்ஷா அதுவரையிலுங் கூட மிஸ்ருக்குத் திரும்பி வராதபடியால், ஷஜருத்துர்ரோ ருக்னுத்தீனோ யுத்தத்தை முடித்துக்கொள்ள அவசரப்படவில்லை. இந்த அந்தரங்கம் அமீர்களுக்கோ மம்லூக்குகளுக்கோ, அல்லது வீரர்களுக்கோ தெரியாதாகையால், சேனாதிபதி ஏன் இப்படி மந்தமாக நிற்கவேண்டுமென்பது புரியாமல் துடித்தார்கள். எனினும், சேனைத்தலைவர் அனுமதியின்றி எதையும் செய்ய மனமில்லாமல் அவர்கள் சுவர்போல் நின்றார்கள். ஒரு சிலர் ருக்னுத்தீனை நெருங்கி மெதுவாக ஆலோசித்தனர்.
“தலைவரே! எதிரிகள் நம்மிடையே உரித்து வைக்கப்பட்ட வாழைப் பழத்தைப்போல் நிற்கிறார்கள். அவர்கள் அத்தனை பேர் மீதும் நாம் அப்படியே சுற்றிலும் தாவி வீழ்ந்து எல்லாரையும் சிறைப்படுத்தி ஒழிக்காமல் இன்னம் காலதாமதம் செய்வானேன். வீணே நாட் கடத்துவதால் என்ன பயன் விளையப்போகிறது? எதிர் பாராமல் ஐரோப்பாவிலிருந்து மிகப்பெரிய சேனைப்பலம் வந்து நம்மைச் சூழ்ந்துகொண்டால், அப்பால் என்ன செய்வது? புனிதமிக்க ரமலான் மாதம் பிறக்க இன்னம் இரண்டு நாட்களே இருக்கின்றன. அதற்குள் இந்த ஜிஹாதை முடித்துக்கொள்ளலாமன்றோ? தங்கள் அபிப்பிராயம் என்னவோ?” என்று சில பிரதானிகள் ருக்னுத்தீனிடம் பேசினர்.
“ரமலான் பிறை பிறக்குமுன்னே இந்தக் கயவர் கூட்டத்தைச் சிறைபிடிக்கவே நானும் துடிதுடிக்கிறேன்; சுல்தானா ஸாஹிபாவும் அவசரப்படுகிறார். ஆயினும், சுல்தான் அப்படிச் செய்ய விரும்பவில்லையே! அவர் இன்னம் பூரண சுகம் அடையாமையால், ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். ஐயூபி வமிசத்து வழக்கப்படி அவரே நேரில் வந்து லூயீ மன்னனுடன் நேருக்கு நேர் நின்று போராடி அவனைக் கைதுசெய்ய ஆசைப்படுகிறார். எனவே, அவர் உடல் நலம் பெற்று எழுந்து வருகிற வரையில் நாம் எதிர்த்துத் தாக்கக் கூடாதென்றும், லூயீயைச் சிறை பிடிக்கக் கூடாதென்றும் கடுமையான கட்டளையிட்டிருப்பதால், நானும் திக்குமுக்காடிக்கொண்டுதான் இருக்கின்றேன்,” என்று ருக்னுத்தீன் எவ்வளவு நிஜமான முகப்பாவத்தோடு பேசினாரென்றால், அதை அத்தனை பேரும் நம்பி விட்டதுடன், சுல்தான் ஸாலிஹ் விரும்பிய விருப்பத்தை மனப்பூர்வமாக ஆதரித்தும் விட்டனர். லூயீயை ஸாலிஹே வீழ்த்த வேண்டுமென்பதில் அவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வளவு ஆசை!
மறுநாளன்று பெரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது: லூயீயின் படைகள் காஹிராவிலே போய் மாட்டிக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்று கருதி, ரோமாபுரியிலிருந்த போப்பாண்டவர் மேலும் சில படைகளைத் திரட்டி மிஸ்ருக்கு அனுப்பினார். அந்தப் படை வேகமாக மத்தியதரைக் கடலைக் கடந்து, நீல நதி முகத்துவாரத்துள் புகுந்து தெற்கு நோக்கி விரைவாக முன்னேறி வந்தது. பெரிய பெரிய பாய்கள் கட்டப்பட்ட படவுகளில் பிரம்மாண்டமான சிலுவைக் குறிகளைத் தாங்கிய வண்ணம் நீலநதியில் வெகுதூரத்தில் அத் துணைப்படை வருவதை பஹ்ரீகள் கண்டார்கள்; ருக்னுத்தீனும் அதைத் தூரத்தில் தொடுவானத்தில் பார்த்துவிட்டார். இனியும் வாளா நிற்பது ஆபத்தல்லவா? ஏற்கெனவே முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தார்கள். அன்றியும், அவர்களுடைய அணி வகுப்புக்களின் மத்தியிலே கிறிஸ்தவர்கள் நின்றார்கள். இப்போது புதிய கிறிஸ்தவப் படையும் பின்புறமாக நீலநதியை மடக்கிக்கொண்டால், முஸ்லிம்கள் கதி என்னாவது?
அரண்மனையின் உயரிய மாடத்தில் வீற்றிருந்த வண்ணம் தம் மைந்தன் வரக்கூடிய திக்கையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஷஜருத்துர், நதியின் வடகோடியில் புதிய பட்டாளம் சிலுவைக் கொடியுடன் வருவதைக் கண்டு, திகைத்து விட்டார். மறுகணமே ருக்னுத்தீன் ஷஜரின் முன் வந்து நின்றார்.
“யா ஸாஹிபா! இனியும் காலந் தாழ்த்துவதற்கில்லையே? என்ன கட்டளையிடுகின்றீர்கள்?” என்று அச் சேனைத் தலைவர் கேட்டார்.
“தூரான்ஷா இன்று நிச்சயம் இங்கு வந்து சேர்ந்தாக வேண்டும்; எனவே, காலங் கடத்த வேண்டாம். நதியின் வெகு தூரத்தில் வருகிற கிறிஸ்தவத் துணைப்படை கிட்ட நெருங்கு முன்னே லூயீயின் படைகளை எதிர்த்துத் தாக்கி, இன்று மாலைக்குள் அவனைச் சிறை பிடியுங்கள் இனி வருவது வரட்டும்!” என்றார் சுல்தானா.
சுல்தானாவின் கட்டளை பிறந்தவுடனே ருக்னுத்தீன் தம் படைகளுக்குச் சயிக்கினை செய்தார். சென்ற பத்து நாட்களாக இந்த உத்தரவை அதிக ஆர்வத்துடனே எதிர்நோக்கியிருந்த, போர் வேட்கை முடுகி நின்ற முஸ்லிம்கள், “அல்லாஹூ அக்பர்!” “வலா காலிப இல்லல்லாஹ்!” என்னும் பெருமுழக்கம் வானத்தைப் பிளக்க மிக வேகமாகப் பாய்ந்தார்கள். இரு தரப்பினரும் மும்முரமாகப் போராடினர். வீரமிக்க முஸ்லிம்களின் வாளுக்கும், ஈட்டிக்கும் பல்லாயிரக்கணக்கான சிலுவை யுத்தக்காரர்கள் பரிதாபகரமாய்ப் பலியாயினார்கள். கணை மழைகள் சரிமாரியாய்ப் பொழிந்தன. ஈட்டிகள் மின்னிப் பறந்தன. போர்க்களமென்றால் அங்கே என்னென்ன பயங்கரப் படுகொலைகளும் பெருங் கூச்சல்களும் முணக்கங்களும் நிகழுமோ, அவையெல்லாம் நிகழ்ந்தன. கிறிஸ்தவப் படைகள் முஸ்லிம்களால் அதரிதிரித்துக் கடாவிடப் பெற்றன. நெற்களத்தில் வாரியடிக்கப்படும் கதிர்களைப்போல் கிறிஸ்தவர்கள் சின்னா பின்னமாகச் சிதறடிக்கப்பட்டார்கள். அன்று மாலைப்பொழுது வருமுன்னே கவந்தக் குவியல்கள் எங்கும் நிரம்பிவிட்டதுடன், எஞ்சிநின்ற இறவாக் கிறிஸ்தவர்கள் தப்பியோட வழியின்றி, முழந்தாள் படியிட்டுப் பணிந்து விட்டார்கள். வாளுக்கு இரையானவர்களின் எண்ணிக்கையைப் போல், சிறைப்ப்டுத்தப்பட்டவர்களும் அதிகமாயினர்.
யுத்தம் ஆரம்பித்து இத்தனை நாட்களாகியும், ஐயூபி சுல்தான் தம்மை நேரில் சந்தித்துப் போரிட வராததைக் கண்டு லூயீ அதிசயப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருவேளை அந்த ஸாலிஹ் திடீரென்று வந்து தாக்கவுங் கூடுமென்று அவர் எண்ணினார். எனவே, முஸ்லிம்கள் எதிர்த்துத் தாக்கிய அன்றைத் தினத்தில் லூயீ மன்னரை ருக்னுத்தீனே சந்தித்தபடியால், அந்தச் சேனைத் தலைவரையே ஐயூபி சுல்தானென்று லூயீ தவறாக எண்ணிக்கொண்டார். அன்றியும், உளவர்கள் மூலம் அந்த பிரெஞ்சு மன்னர், ஸாலிஹ் சிறிது வியாதியுற்றுப் படுத்திருக்கிறாரென்று கேள்விப்பட்டிருந்தமையால், சுல்தான் மிகவும் பலஹீனமுற்றுப் போயிருப்பாரென்று லூயீ மனப்பால் குடித்தார். ஆனால், ஸாலிஹ் உயிரிழந்த பிரேதமாய்க் கிடக்கிறார் என்பதையும், தம் முன்னே அரபிக் குதிரை மீதேறிச் சண்டை புரிபவர் சேனைத் தலைவர்தாம் என்பதையும் லூயீ எங்ஙனம் அறிவார்?
ரிதா பிரான்ஸுக்கும் ருக்னுத்தீனுக்கும் இடையே நடந்த தொந்தப் போரில் எல்லையற்ற வீராவேசம் காட்சியளித்துக் கொண்டிருந்தது. லூயீ மன்னரைக் கொல்லாமல் அவரை உயிருடன் சிறைபிடிக்க வேண்டுமென்னும் உறுதியோடு ருக்னுத்தீன் “சாலக்”காய் வாள் வீசினார். லூயீயோ, அந்த முஸ்லிம் சுல்தானை ஒரே வீச்சில் கொன்றெழித்து விட்டுக் காஹிராவை அடிபணியச் செய்யவேண்டுமென்னும் பேராசையுடன் கண்களை மூடிக்கொண்டு கட்கத்தைச் சுழற்றினார். பாய்கிற வாம்பரி மீதிருந்து பறக்கிற வேகத்தில் வாளைச் சுழற்றிய லூயீயை ருக்னுத்தீன் மிக்க கெட்டிக்காரத்தனமாகத் தடுத்துவிட்டார். குறிபார்த்து வீசிய வீச்செல்லாம் காற்றிலே‘வீச்’சென்னும் ஓசையுடனே குறி தப்பின. ருக்னுத்தீனின் நிலைமை மிகவும் சங்கடமாகவே இருந்தது என்னெனின் எதிரியின் மிருகத் தாக்குதலினின்று தமது உயிரையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்; லூயீயையும் தோற்கடிக்க வேண்டும்; ஆயின், அம் மன்னரைக் கொன்றுவிடவும் கூடாது. என்னெனின், ஷஜருத்துர் இறுதியாக ருக்னுத்தீனுக்கிட்ட கட்டளை, “இன்று மாலைக்குள் அவனைச் சிறைபிடியுங்கள்!” என்று மட்டுமே பிறந்ததன்றி, “அவனைக் கொன்றுவிடுங்கள்!” என்று பிறக்கவில்லையல்லவா?
சூரியாஸ்தமயம்வரை அந்தத் தொந்த யுத்தம் மிக மும்முரமாக நடந்தது. லூயீயாலும் ருக்னுத்தீனைக் கொல்ல முடியவில்லை; ருக்னுத்தீனாலும் லூயீயைச் சிறைபிடிக்க முடியவில்லை. எனினும், அவ்விருவரின் சுழன்றுகொண்டிருந்த கட்கங்கள் மட்டும் ஓயவே இல்லை. மறையப்போகும் சூரியனின் மஞ்சள் நிறமான ஒளிக்கதிரில் அவ்விருவர் கரத்திடை இருந்த வாட்களும் மின்சாரச் சுடர் போலே மின்னிக்கொண்டிருந்தன. அவர்கள் வீற்றிருந்த அசுவங்கள் களைத்துப் போயிருந்தபடியால், அவற்றின் வாய்களில் நுரை பொங்கிக்கொண்டிருந்தது. லூயீ மூச்சுத்திணறிச் சலித்துப் போயுங்கூட, ருக்னுத்தீன் சற்றுமே சளைக்கவில்லை.
இன்னம் சிறிது நேரத்தில் சூரியன் அஸ்தமித்து விடுவான். லூயீயை அதற்குள் சிறைப்படுத்தாவிட்டால், நீலநதி வழியே வந்துகொண்டிருந்த துணைப்படை நெருங்கி வந்து சேர்ந்துவிடும். எனவே, ருக்னுத்தீன் முன்பின் யோசிக்காமல் தங் குதிரையின் அங்கவடியை அதன் விலாவிலே அழுத்திக் குத்தினார். அரபிக் குதிரையாகையாலும், அதிலும் அது சுல்தானின் சொந்தப் பரி ஆதலாலும் மின்னல் வேகத்திலே முன்னோக்கிக் குபீரென்று தாவிப் பாய்ந்தது. தயாராய்ப் பற்றிப் பிடித்திருந்த தங் கூரிய வாளை முன்னோக்கி நீட்டிப் பிடித்தவண்ணம் ருக்னுத்தீன் ஒரே குறியாய் இருந்தார். கண் சிமிட்டுகிற நொடிப்பொழுதில் அவருடைய வீரபராக்கிரம வேகமான வாள் வீச்சு லூயீயின் குதிரையின் கழுத்தைச் சேதித்துவிட்டது.
அவ் வுயிரிழக்கும் அசுவத்தின் பாய்ச்சல் அதிக பயங்கரமாய் இருந்தது. அம் மிருகத்தின் முண்டம் தன் முன்னங் கால்களைத் தூக்கி ஆகாயத்தை நோக்கி வேகமாய்த் தாவியது. இந்த விபரீதத்தை ஒரு சிறிதும் எதிர்பார்க்காமல் ருக்னுத்தீன் கழுத்திலே மட்டும் குறியாயிருந்த லூயீ மன்னருக்குக் கதி கலங்கி விட்டது; மதியும் மருண்டுவிட்டது. இன்னதுதான் நடந்துவிட்டது என்று அவர் உணருமுன்னே அந்தக் குதிரையின் முண்டத்திலிருந்து அவர் வேகமாய்த் தூக்கியெறியப்பட்டார். லூயீ கீழே விழுவது நிச்சயமென்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ருக்னுத்தீன் அதற்குள்ளே தங் குதிரையை விட்டுத் தொப்பென்று குதித்தார்.
தூக்கியெறியப்பட்ட வேகத்திலே லூயீ தலைகீழாகத் தரையிலே வீழ்ந்ததுடன், அவர் கையில் பிடித்திருந்த வாள் அந்த அதிர்ச்சியில் எங்கோ துள்ளிப்போய் விழுந்தது. அவர் தலையில் தரித்திருந்த பிரெஞ்சு மன்னர்க்குரிய கிரீடமும், அதன் உச்சியில் போப்பாண்டவர் ஆசிர்வதித்துச் சொருகி அனுப்பிய சிலுவைச் சிறு சின்னமும் காற்றிலே பறக்கவிடப்பட்ட காகிதமே போல் விர்ரென்று பறந்து போயின. பரப்பிய கால்களுடனும், உதிரம் சொரியும் மேனியுடனும் ரிதா பிரான்ஸ் மல்லாந்த வண்ணம், சூறையிற்பட்ட பெரு மரமேபோல் பூமியிலே “சேசுவே!” என்று சாய்ந்துவிட்டார். லூயீ தரையில் விழுந்ததைப் பார்த்த அத்தனை முஸ்லிம் வீரர்களும் தம்மையறியாமலே தொண்டை கிழிய, “அல்லாஹு அக்பர்!” “வலா காலிப இல்லல்லாஹ்!” என்னும் பேரொலியை வானமுகடு பிளக்க முழங்கினார்கள். அம் மாபெரு முழக்கத்தால் எழுந்த அதிரொலி வான மண்டலம்வரை எட்டி எதிரொலி கிளப்பத் துவக்கிற்று. சூரியனும் சிரித்துக்கொண்டே சக்கர வாளத்துக் கப்பால் இளைப்பாறச் சென்றுவிட்டான்.
ருக்னுத்தீனோ, அரை நொடியும் தாமதியாமல் அந்த லூயீயின் கரங்களில் விலங்கைப் பூட்டினார். அல்ஹம்துலில்லாஹ்!
முஸ்லிம்கள் மிகமிக நேர்த்தியாய் நிகழ்த்திய இந்தத் தற்காப்புப் போரில் பெற்றுக்கொண்ட இவ் இணையற்ற பெரு வெற்றிக்கு யாமனைவருமே என்றென்றும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். சிலுவை யுத்தம் சிதறடிக்கப்பட்டது; தீனுல் இஸ்லாம் காப்பாற்றப் பட்டது. அன்று அவர்கள் ஆண்டவன் பாதையிலே மிக நேர்மையாகப் பாடுபட்டு உழைத்த பேருழைப்புக்கே “ஜிஹாத்” என்று பெயர். “காபிரானவர்களைக் கண்ட கண்ட இடத்திலே கழுத்தை வெட்டித் தள்ளுதல்!” என்பதுதான் அந்த ஜிஹாதுக்குப் பொருள் என்று கபடமாகப் பிதற்றுகிற பேயர்கள் சற்றே கண் திறந்து பார்ப்பார்களாக!
லூயீ மன்னர் சிறை பிடிக்கப்பட்டவுடனே, எஞ்சி நின்ற அத்தனை கிறிஸ்தவரும் செயலிழந்து மண்டியிட்டு விட்டார்கள். பலர் ஓட்டம் பிடித்தார்கள். “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது; நிச்சயமாகவே, அசத்தியமென்பது அழியக் கூடியதாயே இருக்கிறது!” என்னும் ஆண்டவனின் வேதவாக்கு இச் சந்தர்ப்பத்தில் முற்ற முற்றப் பலித்தே விட்டது.
எட்டாவது (பெரிய) சிலுவை யுத்தத்தில் அக் கிறிஸ்தவர்கள் அடைந்த படுதோல்வியின் முழு விருத்தாந்தம் இதுவே தான்.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
<<அத்தியாயம் 40>> <<அத்தியாயம் 42>>