05. முதலாம் மோதல்

by நூருத்தீன்

சென்ற அத்தியாயத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு அன்பர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். அவற்றில் இரண்டு பிரச்சினையின் மூலக்கூறை நெருங்கியிருந்தன. மோடியிடம் ஒற்றை வாக்கியத்தில் அவரது பிரச்சினையைக் கூற வேண்டும்; என்ன சொல்வீர்கள்

என்றதற்கு –

‘நீங்க எப்போ ஒரு இந்தியப்பிரதமரா நாட்டுக்கு உங்க கடமைகளைச் செய்யப்போறீங்க?’ என்று அபூஃபைஸல் எழுதியிருந்தார். அபூநஸீஹா, ‘நீங்க இந்தியப் பிரதமர்னு நினைவிருக்கா?’ என்று கேட்டிருப்பாராம். மற்ற பதில்களும் சுவை. ஆனால் அவற்றில் கூடவே நையாண்டியும் கோபமும் ஒளிந்திருந்தன.

பிரச்சினையை எதிர்கொண்டு மோதித் தீர்க்க முனையும்போது ஒரு விதி வெகு முக்கியம். வெகு வெகு முக்கியம். நேர்மையான, நாணயமான உரையாடல்!

மனைவி, கணவர், உறவினர், மேலாளர் நமது தலைமுடியைத் தேவாங்கு ஸ்டைலுக்கு வெட்டித் தள்ளிவிட்ட முடி திருத்துனர் என யாராக இருந்தாலும் அவருடன் அவரது பிரச்சினையைப் பேசித் தீர்க்க உரையாடலைத் துவக்கும்போது எள்ளல், எகத்தாளம், நக்கல், சரமாரியான புகார், குறை என்று ஆரம்பித்தல் பெரும் தவறு. உங்களது எதிர்தரப்பு உடனே தற்காப்பு நிலைக்குச் சென்று, முஷ்டியை முறுக்கி, குங்ஃபூ, கராத்தே தோரணையை மனத்தில் உருவாக்கிக்கொண்டு தம்முடைய தரப்பை, குறையை, தவறை நியாயம் கற்பிக்கத்தான் பார்க்குமே தவிர, உங்களது நியாயமான வாதத்திற்கு இணங்காது.

உங்களது முதல் பாலே நோ பால் ஆகிவிடும்.

மோடியின் ஆட்சியில் எல்லாமே மோசம், எழுதி, பேசி மாளாத பிரச்சினைகள் ஏராளம் என்பனவெல்லாம் எச்சத் தொட்டுச் சத்தியம் செய்யத் தேவையே இல்லாத உண்மைகள்தாம். என்றிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் அடிப்படை என்ன? அநீதி! அதனால், கிடைக்கும் சொற்ப விநாடி அவகாசத்தில் இவரிடம் நேரடியாக ஒற்றை வாக்கியத்தில் பிரச்சினையைத் தெரிவிக்க, “மிஸ்டர் பிரதமர், உங்களது ஆட்சி அநீதியானது” என்று சொல்லி, பிரச்சினையின் மூலக்கூறைத் தொடலாம்.

சிக்கல்களைத் தீர்க்கும்முன் அவற்றைக் கூறு போட வேண்டும் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? அந்தக் கூறு போடுதல் மூன்று வகை. பிரச்சினையொன்று ஏற்படுகிறது. அது உடனடியாகத் பேசித் தீர்க்கப்பட்டே ஆக வேண்டும் என்பது முதல் வகை.

சென்னையில் ஒரு ஹோட்டல் குறிப்பிட்ட வகையான ஓர் உணவிற்கு வெகு பிரசித்தி. புஹாரி பிரியாணி, சிம்ரன் ஆப்பக் கடை, முருகன் இட்லிக் கடை என்பதுபோல் அந்த ஹோட்டலில் கொத்துப் பரோட்டா பிரசித்தம். அந்த உணவைச் சுவைப்பதற்காகவே பெரும் கூட்டம் வரும். வருபவர்கள் அதை மட்டுமேவா உண்பார்கள். கூடவே மற்ற சில ஐட்டங்களும் விற்குமல்லவா? எனவே நல்ல வியாபாரம். முதலாளி அண்ணாச்சி தினமும் ஹேப்பி.

ஒருநாள் வாடிக்கையாளர் ஒருவர் உணவு பரிமாறுபவரிடம் ஏகத்துக்கு எகிறி ரகளைச் செய்து கொண்டிருக்கிறார். பதறிப்போன முதலாளி ஓடிப்போய் என்ன பிரச்சினை என்று விசாரித்தால், ‘மனுசன் திம்பானா இந்தக் கொத்துப் பரோட்டோவை’ என்று அவரிடமும் எகிறுகிறார் கஸ்டமர். சிறிது எடுத்து வாயில் போட்டால் காரம் கதி கலக்கியது. வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டு, சமாதானப்படுத்தி, இலவசமாகக் லஸ்ஸி பரிமாறி அனுப்பி வைத்துவிட்டு, சமையலறைக்குள் நுழைகிறார் முதலாளி.

எல்லாம் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கொத்துப் பரோட்டாவுக்காகவே வெளியூரிலிருந்து அழைத்து வந்திருந்த பரோட்டா மாஸ்டர் பரபரவென்று செயல்பட்டுக் கொண்டிருந்தார். எல்லாம் சரியாகத்தானே நடக்கிறது என்று ஓரமாக நின்று முதலாளி கவனிக்க ஆரம்பித்தார். உணவு தயாரிக்கத் தேவையான மசாலா தூள் பலவகையாக நிரப்பி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களிலிருந்து தேவையான தூளை தேவையான அளவு எடுத்துப் போடும்போது ஏதோ சில நேரத்தில் தவறு நடக்கிறது என்று தெரிந்து விடுகிறது.

அதை மேலும் கவனிக்கும்போது, குனிந்த தலை நிமிராமல் வேகமாய் இயங்கும் பரோட்டா மாஸ்டர் சுவரில் ஒட்டிவைத்திருக்கும் தமது குடும்பத்தினர் படத்தைப் பார்க்க எப்பொழுதாவது நிமிரும்போது அவரது கை தவறான பாத்திரத்தில் நுழைகிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார் முதலாளி.

இந்தப் பிரச்சினை உடனே நிவர்த்திச் செய்யப்பட வேண்டிய பிரச்சினை. வாடிக்கையாளர்களின் வயிற்றையும் கல்லாப்பெட்டியின் அடிமடியையும் பாதிக்கும் பிரச்சினை. எப்பொழுதாவதுதானே அப்படி என்று அமைதியாக விட்டுவிடவும் முடியாது. முரட்டுத்தனமாக ‘அறிவிருக்கா உனக்கு?’ என்று அதட்டியும் ஆரம்பிக்கக் கூடாது. அமைதியாக விடுவது நிரந்தர வாடிக்கையாளர்களை இழக்க வைக்கும். முரட்டுத்தனமாகப் பேசினால் எப்பொழுதாவது தெரியாமல் நிகழும் தவறு, அதிகப்படியாக இரண்டு சிட்டிகை காரம், மூன்று சிட்டிகை உப்பு என்று தெரிந்தே நிகழ ஆரம்பித்துவிடும்.

பரோட்டா மாஸ்டரின் முக்கியப் பிரச்சினை என்ன? குடும்பத்தைப் பிரிந்து வாடுவது. அவர்கள் நினைவாகச் சமையலறையின் முக்கியப் பகுதியில் ஒட்டி வைத்திருக்கும் அவர்களது புகைப்படம் அவரது கவனத்தைக் குலைக்கிறது. இதைத் தான் பேசித் தீர்வு காண வேண்டும். அவரைத் தனியே அழைத்து அதை நேரடியாகப் பேசி அந்தப் புகைப்படத்தைச் சமையலறையின் அந்தப் பகுதியிலிருந்து நீக்கிவிடுவது எந்தளவு அவருக்கும் ஹோட்டலுக்கும் வியாபாரத்திற்கும் முக்கியம் என்பதைப் பேசினார் முதலாளி. அவரது கல்லாப்பெட்டி நிறைந்தால்தானே தமக்கு ஊதியம், தமது குடும்பத்திற்கு மாதச் செலவுக்குப் பணம் என்பதை உணர்ந்தார் மாஸ்டர். நிதானமான, நேர்மையான, உரையாடல், குறிப்பாகப் பிரச்சினையின் மூலக் கருவை மட்டுமே தொட்டு அமைந்த பேச்சு சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த, புகைப்படம் அகன்றது.

பரேட்டா மாஸ்டரைத் தக்க வைக்க அவருக்கு ஊதியத்தை உயர்த்தியோ, அவருடைய குடும்பத்தினரை சென்னைக்கே வரவழைத்து வைத்துக் கொள்ளும் அளவிற்குச் சலுகைகளை அதிகப்படுத்தியோ அந்த முதலாளி இயங்கினால் அது நிர்வாக இயல் சார்ந்த கெட்டிக்காரத்தனம். இங்கு அது பேசு பொருள் அன்று. முக்கியமான ஒரு பிரச்சினை; அதுவும் உடனே தீர்க்க வேண்டிய பிரச்சினை. அதை எப்படி அணுகுவது என்பதே.

அடுத்த இரண்டு கூறுகளை அடுத்தடுத்துப் பார்ப்போம். இந்த அத்தியாயம் வெளியாகும்வரை சென்ற அத்தியாயத்திற்குப் பதில் எழுதியிருந்த வாசகர்கள் அனைவரும் தங்களது இந்திய விலாசத்தை இந்நேரம் எடிட்டருக்கு அனுப்பி வையுங்கள். மனம் மகிழுங்கள் கூரியரில் வரும்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 16 நவம்பர் 2015 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

 

 

Related Articles

Leave a Comment