13. மௌனமும் கற்பனையும்

by நூருத்தீன்

சிறு வயதில் படித்த கதையொன்று குத்துமதிப்பாக நினைவிற்கு வருகிறது. பாடத்தை ஒழுங்காகப் படிக்காமல் பராக்குப் பார்த்தவர்கள்கூட, இந்தக் கதையைத் தவற விட்டிருக்க மாட்டீர்கள். சாலையின் நடுவே ஒரு பெரிய கல்லையும் அதனடியில்

பணத்தையும் வைத்துவிட்டுக் கண்காணிப்பான் ஒருவன். வருவோர், போவோர் எல்லாம், அந்தக் கல்லை அவ்விதம் அறிவுகெட்டத்தனமாக நடுச்சாலையில் போட்டுவிட்டுச் சென்றவனைத் திட்டிக்கொண்டே, அந்தக் கல்லைச் சுற்றி வளைத்துக் கடக்கிறார்களே தவிர, யாரும் அதைச் சாலையின் ஓரத்திற்கு நகர்த்த முனையவில்லை. இறுதியில் ஒருவன், ‘இப்படி இது பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதே’ என்று அக் கல்லைச் சிரமப்பட்டு நகர்த்துகிறான். கல்லின் அடியில் உள்ள பணம் அவனுக்குப் பரிசாகக் கிடைக்கிறது.

அது இருக்கட்டும். இந்தக் கதை இப்பொழுது எதற்கு என்பதைச் சற்று நேரத்தில் பார்ப்போம். அதற்குமுன் –

‘சும்மா கம்முன கிட’ என்று நம் மனது நம்மை சைலண்ட் மோடுக்கு அழைத்துச் செல்ல இரண்டு உபாயத்தைக் கடைப்பிடிக்கிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

பேச வேண்டிய விஷயத்தில் நாம் அமைதியாக இருந்துவிட்டால் அப்படியொன்றும் குடிமுழுகி விடாது என்று மோசமான பின்விளைவுகளை மட்டுப்படுத்துவது ஒன்று.

‘பேசினால் தொலைந்தாய் நீ’ என்று மிகையான பின்விளைவுகளைக் கற்பனை செய்ய வைத்து நம்மை ஊமையாக்குவது மற்றொன்று.

மனம் கடைபிடிக்கும் அந்தத் தந்திரங்களைச் சற்றுப் புரிந்து கொள்வோம்.

பிரச்சினைக்குரிய விஷயங்களை நாம் தொடர்ந்து சந்திக்கும்போது ‘இப்பொழுது இருக்கும் பிரச்சினையை அப்படியே சகித்துத் தொலைப்போம்’ என்று பல விஷயங்களில் நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்வோம். கவனித்திருக்கிறீர்களா? ஆனால், அப்படி அமைதி காப்பதால் ஏற்படக்கூடிய மோசமான பின்விளைவுகளை உதாசீனப்படுத்தி, அவற்றைக் கவனிக்கவே மாட்டோம். தற்சமயம் அந்தப் பிரச்சினையினால் நமக்குத் தொல்லை என்ன என்பதை மட்டுமே கவனித்து, ‘போய்த் தொலையுது கழுதை. என் தலையா போகுது? கப்பலா கவிழப் போகுது?’ என்று நம்மைச் சாந்தப்படுத்திக் கொள்வோம். ஆனால் அந்தப் பிரச்சினையின் பெரிய அளவிலான பாதிப்பை, நம்மைத் தாண்டி அது பிறருக்கும் பிரச்சினையாய், தொல்லையாய் இருக்கப்போவதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. இதற்குத்தான் அந்தப் பழைய ‘சிறுவர் கதை’.

ஒரு பிரச்சினையின் வீரியம் நம்மைத் தாண்டிப் பிறரையும் பாதிக்கக்கூடும் என்றிருந்தால் அது மோத வேண்டிய பிரச்சினை.

நம்மில் பலர் பாதையில் உள்ள தடையைப் பார்த்து முணுமுணுத்து, திட்டி, குறை சொல்லிச் சுற்றி வளைத்துச் சென்று விடுகிறோமே தவிர, பார்வை நலிவுற்றவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அந்தக் கல்லில் தடுக்கி விழும் அபாயம் இருக்கிறதே என்று கவலைப்படுவதில்லை. ஒரு பிரச்சினையின் வீரியம் நம்மைத் தாண்டிப் பிறரையும் பாதிக்கக்கூடும் என்றிருந்தால் அது மோத வேண்டிய பிரச்சினை. ஆனால் மனமானது அந்தப் பாதிப்புகளைப் புறந்தள்ளி நம்மை வாய்பொத்தச் சொல்லிவிடுகிறது.

அடுத்தது பிரச்சினையின் கடுமையைக் குறைவாக மதிப்பிடுவது. மனதை மரத்துப் போகச் செய்வது. ஏதோ உபாதையினால் காலில் கடுமையான வலி ஏற்படுகிறது என்று வையுங்கள். முதலில் மிகவும் துன்பப்படுவோம். வருவோர் போவோரிடமெல்லாம் காலைத் தூக்கிக் காட்டி, ‘வலிக்குது பாரேன்’ என்று புலம்புவோம். நாளாவட்டத்தில் அலட்சியத்தினாலோ, சரியான சிகிச்சை இன்றியோ அந்த வலி தொடர்கதையாகி விடும்போது அது நமக்குப் பழகி விடும்.

யதேச்சாதிகார முதலாளியின் கொடுமை, மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தும் வாழ்க்கைத் துணை, புறம்பேசித் தூற்றும் சக ஊழியர்கள்,உறவுகள் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம் இருக்கும். இவையெல்லாம் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள். ஆனால். நாள்தோறும் தொடரும் இப் பிரச்சினைகளின் விளைவுகளால் நமக்குத் துன்பம் ஏற்பட்டு, அது பழகிப்போய், இது இப்படித்தான், தீர்வு காண முடியாது, இந்த இழிநிலை எனது தலைவிதி என்று ஏற்றுக்கொண்டு அப்படியே காலம் ஓடும்.

பத்திரிகையும் தொலைக்காட்சியும் நம் காசில் நமக்குப் பொய் விற்கிறார்களே, நாம் மரத்துப் போய்க் கிடக்கவில்லை?

இவற்றைவிட மோசமான மற்றொரு பாதிப்பும் இருக்கிறது. அதை உணரக்கூட முடியாத அளவிற்கு நம் மனம் நமது சைலண்ட் மோடை நியாயப்படுத்தியிருக்கும். நாம் வாயைப் பொத்திக் கொண்டதால், யாவும் நலமே என்று நினைத்துக்கொண்டு நமது நடத்தையில் தரம் தாழ்ந்திருப்போம். எப்படி என்கிறீர்களா?

அக்கிரமக்கார மேனேஜரிடம் அவதிப்பட்டு, அவரது அதிகாரத்திற்கு அஞ்சி வேறு வழியில்லை என்று நினைத்து வாயை மூடிக்கொண்டிருப்பீர்கள். ஆனால் நடை, உடை, பாவனை, நக்கல் பொதிந்த எதிர்க் கருத்து என்று நீங்கள் அறியாமலேயே உங்களது எதிர்ப்பு உணர்வு பல வகைகளில் வெளிவரத் துவங்கி, அவரது இருக்கையில் குண்டூசி வைப்பது, அவரது கார் டயரின் காற்றைப் பிடுங்குவது என்று அது எவ்விதமான துஷ்டத்தனமாகவும் முடியலாம்.

நம் முகத்தை மறைத்துக்கொண்டு பாத்ரூம் சுவர்களில் ஆபாசமாகக் கிறுக்குவது, வரைவது; ஊடகங்களை த்தூ, விபச்சார ஊடகம், நாயே, பேயே, மலமே என்று எழுதுவதையும் இவ்வகையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நாம் பிரச்சினைகளுடன் மோதாமல் வாயைப் பொத்திக் கொள்வதால் ஏற்படும் பாதகங்களைக் குறைத்து மதிப்பிடுவது ஒருபுறமிருக்க, இவ்விதமான தரக்குறைவுகளை நாம் அறியாமல் போய்விடுவது மோசம், பரிதாபம். நமது பெருமைக்கு இழுக்கு.

ஆச்சா? இப்பொழுது மனத்தின் இரண்டாவது தந்திரத்தைப் பார்ப்போம்.

அது பிரச்சினைகளுடன் மோதுவதால், நமது கருத்தை வெளியிடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கன்னாபின்னாவென்று மிகைப்படுத்திக் கற்பனை செய்வது.

கெட்ட விஷயங்கள் நடந்துவிடும் என்று கற்பனை செய்து அவற்றை அடுக்கடுக்காக நினைத்து மிகைப்படுத்துவது மனிதர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள குணம். அதன் விளைவால், நாம் வாயைத் திறப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று நாம் சிந்திக்க ஆரம்பித்து, சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளை நம் மனம் சரசரவென்று கற்பனை செய்ய ஆரம்பித்துவிடும்.

“ஏன்பா! இங்க என் செருப்பு கிடந்ததே பார்த்தியா?” என்று, காணாமல் போன காலணிகளைப் பற்றிக் கோயில் வாசலில் நிற்பவனிடம் கேட்க நினைக்கிறீர்கள். விசாரிப்பதற்குமுன் அவனது தோற்றம் முரட்டுத்தனமாக இருப்பதைப் பார்த்து, நான் கேட்பது இவனுக்குக் கோபத்தை வரவழைத்து, ‘இன்னா நக்கலா?’ என்று அவன் என்னிடம் கோபப்படப் போகிறான், அதைப் பார்த்து என் மனைவி வீட்டில் என்னிடம் பேசுவதைப் போன்ற நினைப்பில், ‘யோவ் நீ எடுத்தியான்னா அவரு கேட்டாரு, யாராவது எடுத்ததைப் பார்த்தியான்னுதானே விசாரிச்சாரு’ என்று அவனிடம் எகிறப் போகிறாள், ‘அப்படி வேற கேப்பாரா ஸாரு?’ என்று அவன் என்னைக் கும்மப் போகிறான், …. என்று ஒன்றுக்குப்பின் ஒன்றாக கமா குறி போட்டு அடுக்கி, உலகம் அழியாத குறையாகக் கற்பனை செய்து முடித்திருப்போம்.

கொடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற வீண் கற்பனை உருவானால் நடைமுறை சாத்தியங்களைப் பற்றிய மெய்யறிவு விடைபெற்று விடும். பின்விளைவுகள் கடுமையாக அமைந்துவிடுமோ என்று நினைத்துவிட்டாலே போதும், சாத்தியங்களின் அனுமானம் தகர்ந்துவிடும். அவை சாத்தியமா, இல்லையா என்றெல்லாம் ஆராயாமல் நிச்சயமாக அப்படித்தான் நடக்கப்போகிறது என்று மனம் நம்ப ஆரம்பித்துவிடும்.

பிரச்சினையுடன் மோதுவதால் ஏற்படும் பின்விளைவுகளை இவ்விதம் மிகைப்படுத்துவது மிகப்பெரும் தவறு. பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முனைபவனுக்கு இவ்வுலகம் தீங்கு மட்டுமே இழைக்கும் என்பது அதீதமான கற்பனை.

நீதியையும் நேர்மையையும் பேசப்போய், பாதிப்புக்கு உள்ளாகும் நபரை சினிமாவில் பார்த்து, செய்திகளில் படித்துப் படித்து நமக்கும் அதுதான் நடக்கும், அதைத் தவிர வேறு எதுவுமே சாத்தியமில்லை என்று நம்பி, அத்தகைய விளைவுகளை மட்டுமே மனம் கற்பனை செய்கிறது.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 20 பிப்ரவரி 2016 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

Related Articles

Leave a Comment