தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொள்பவர்களை நிறையப் பார்த்திருப்போம். கணவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு அது தவறாத அனுபவமாகவும் வாய்த்திருக்கும். வாக்குறுதிகளையும் பச்சைப் பொய்களையும் இஷ்டத்திற்கு அவிழ்த்துவிட்டவர், பின்னர் டிவி சேனல்காரரிடம் மாட்டி,
அவர் மடக்கி மடக்கிக் கேள்வி கேட்டால், படக்கென்று எழுந்து ஓடிவிடுவார். பார்த்திருப்பீர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் திருவிழாவில் அந்தக் கூத்துகள் பஞ்சமில்லாத நகைச்சுவை. அந்த அரசியல் கோமாளித்தனங்கள் ஒருபக்கம் கிடக்கட்டும். சாமான்யர்கள் நாம் நமது ‘வாய்ப்பாட்டை’ப் பார்ப்போம்.
எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் மோதிப் பேசித் தீர்க்கும் சாமர்த்தியசாலிகளாக ஆவது எப்படி என்பதுதான் இத்தொடரின் நோக்கம். ஆனால் எந்தெந்த விஷயங்களில் வாயைத் திறக்கவே கூடாது என்பதை நாம் அறிய வேண்டியதும் வெகு முக்கியம். சில பிரச்சினைகளைக் கிளறாமல் விட்டுவிடுவதே சரியானதாக இருக்கும். அல்லது குறைந்தபட்சம் நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளும் வரையாவது அப்பிரச்சினையைத் தொடாமல் இருப்பது நல்லது. பின் விளைவுகளை எடைபோட்டுப் பார்த்துச் சில விஷயங்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.
வாசுதேவன் புதிதாக பிஸினஸ் ஒன்றைத் தொடங்குகிறார். அதற்காகப் புதிய அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சி நடத்த முடிவு செய்கிறார். நாள் குறித்தாயிற்று. ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாயிற்று. விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு அளிப்பதற்காக ஆர்டர் செய்திருந்த பிரத்யேகப் பரிசுப் பொருள் மட்டும் நேரத்தில் வராமல் தாமதமாகிவிட்டது. ரத்தக் கொதிப்பு உச்சத்தைத் தொடப்போகும் வேளையில் விழாவிற்கு ஒரு மணிநேரம் இருக்கும்போது அதைக் கொண்டு வந்து சேர்க்கிறார் சப்ளையர்.
‘அதெப்படிய்யா நீ வாக்குறுதி மீறலாம்? நாம் இதைப் பேசித் தீர்ப்போம். உன் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு என் அறைக்கு வா’ என்று வாசுதேவன் இவ்விஷயத்தை அணுகினால் அது அபத்தம்; நேர விரயம். அந்த விற்பனையாளருடன் அதற்குப் பிறகு, தினசரி கொடுக்கல் வாங்கல் இருக்கப் போவதில்லை. அவர் வாசுதேவனுக்கு உறவினர், நண்பர், அலுவலக ஊழியர் என்று எந்தச் சம்பந்தமும் இல்லாதவர் எனும்போது அவருடன் பேச்சுவார்த்தை இங்கு அனாவசியம். வேண்டுமானால் கோபத்தை வெளிப்படுத்த உனக்கு ‘ஸ்வீட்டும் கூல்டிரிங்ஸும் கிடையாது போ’ என்று ‘கா’ விடலாம்.
உங்களது கடையில் கேஷியர் சில ஆயிரம் ரூபாய்களைக் களவாடிவிட்டார் என்பதைக் கண்டு பிடிக்கிறீர்கள். இது கிரிமினல் பிரச்சினை. அலுவலகத்தில் ஆண் ஊழியர் ஒருவர் சக பெண் ஊழியரிடம் பாலியல் குற்றம் புரிகிறார். இதுவும் கிரிமினல் குற்றம். இவையும் பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்ட, சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட வேண்டிய பிரச்சினைகள்.
மற்றோர் ஊழியர் நாள்தோறும் தாமதமாக வேலைக்கு வருகிறார். முன் சென்ற அத்தியாயங்களில் படித்து அறிந்ததை நடைமுறைப்படுத்த அவரை அழைத்துப் பேசுகிறீர்கள். இது பேசிச் சரி செய்ய வேண்டிய பிரச்சினை. உங்களது அணுகுமுறையும் சரியானதே. ஆனால் உங்களது கண்டிப்பும் கறாரும் அவருக்கு நற்புத்தி ஏற்படுத்துவதற்குள் முன்கோபப்பட்ட அவர், உங்களது மேசையில் இருந்த கண்ணாடி ஜாடியை உடைத்து, கூர்முனையால் உங்களைக் குத்த வருகிறார்.
‘ஒன் மினிட் வெயிட்’ என்று அடுத்து அவருடன் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருக்கக்கூடாது. உங்களது உயிர் முக்கியம். அதனால் உடனே துள்ளிக் குதித்து ஓடியவாறு அவசர உதவி போலீஸைக் கூப்பிட வேண்டும். அவர்கள் வரத் தாமதமானால் மூச்சிரைக்கக் காவல் நிலைய வாசலை அடைந்துவிட வேண்டும்.
மன நலம் சரியில்லாத ஒருவர் ஒழுங்கீனமாக இருக்கிறார்; தரக் குறைவாக நடக்கிறார். அவரிடம் தர்க்க ரீதியாக விஷயங்களை முன்வைப்பது, நல்லது கெட்டது எடுத்துச் சொல்லி விஷயத்தைப் புரிய வைப்பது முடியாத காரியம். மாறாக இங்கு மருத்துவ ஆலோசனை முக்கியம்.
சுருக்கமாக –
பாதுகாவல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, ஒரே ஒரு முறை சந்திக்கக் கூடிய – மீண்டும் தொடராத பிரச்சினை, கிரிமினல் குற்றம், சட்ட நடவடிக்கைக்கு உட்பட வேண்டிய பிரச்சினை, மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை போன்றவை பேச்சுவார்த்தைக்கு உகந்தவை அல்ல. இவ்விஷயங்களில் வாய் திறக்கலாகாது. அவற்றுக்கு உரிய நடவடிக்கைகளைத்தாம் மேற்கொள்ள வேண்டும்.
0-0-0
பொதுவான சில எதிர்பார்ப்புகளும் ஒழுங்கும் குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் எழுதப்படாத விதியாக இயற்கையாகவே அமைந்து போயிருக்கும். போலவே எந்தெந்த விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் விடலாம், விட்டுப் பிடிக்கலாம் என்பதும் இயல்பாகியிருக்கும்.
ஆனால் அப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்படும் விஷயங்கள் நாளாவட்டத்தில் மோசமாகித் தரமற்ற, கேடான சூழ்நிலையை உருவாக்கிவிடும். என்றோ, எப்பொழுதோ தோன்றிய லஞ்சம், ஊழல் பரவலாகி, இயல்பாகி இன்று நம் வாழ்க்கையில் அவை இன்றியமையாத அங்கமாகவே ஆகிவிட்டன.
அப்படி ஏதோ ஓர் ஒழுங்கீனம் இயல்பாகிவிட்ட ஊழியர்கள் மத்தியில் புதிதாகப்பணிக்கு அமர்த்தப்படுகிறீர்கள். அந்த அவலகத்தைச் சுற்று முற்றும் பார்த்த உங்களுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. பணி நேரத்தில் பணியைத் தவிர பேச்சு, அரட்டை, இணைய உலா என்று பிற அனைத்தையும் நிகழ்த்தும் அலுவலர்கள் நிறைந்த அலுவலகம் அது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும், வேலை நேரத்தில் வேலை மட்டுமே என்ற அடிப்படையை நிலைநாட்ட வேண்டும் என்பது உங்களது ஆக முக்கிய வேலை என்று முடிவு செய்கிறீர்கள்.
என்ன செய்வது?
மறுநாள் அலுவலகத்தில் நுழைந்ததுமே அந்த அலுவலர்களுக்குக் கண்டிப்பான உத்தரவு இட்டுவிட்டு, அனைத்தும் சரியாகிவிடும் என்று மேசையில் அமர்ந்துவிட முடியுமோ? முடியாது.
இரண்டு கட்ட நடவடிக்கை, அதுவும் விடாப்பிடியான கண்டிப்பான நடவடிக்கை அமைய வேண்டும்.
முதலாவதாக அனைவரிடமும் அலுவலின் அடிப்படையை, நிர்வாகியான உங்களின் எதிர்பார்ப்பைத் தெளிவாக அறிவித்துவிட வேண்டும். அடுத்ததாக, கடமை தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துவிட வேண்டும். இவை பேச்சோடு நின்றுவிடாமல், அவகாசம் அளிக்கப்பட்டு, அந்த அவகாசம் முடிந்த அடுத்த நாளிலிருந்து, கடமை தவறுபவர்களின்மீது முறைப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சமரசமற்ற, தொடர்ச்சியான உங்களது நடவடிக்கைகள்தாம் ஒழுங்கீனத்தில் மூழ்கிவிட்டவர்களைத் தட்டி எழுப்பி, சுயநினைவிற்குக் கொண்டுவரும்.
மேற்சொன்ன உதாரணத்தை ஃபாக்டரி, தொழிலாளிகள் அவர்களுக்கான யூனியன் பின்புலம் என்று நினைத்துப் பார்த்தால் வேறு சவால்கள் தென்படலாம். அவை நிர்வாகவியல் பாடம் சம்பந்தப்பட்டவை.
மாறாக அந்த உதாரணத்தைக் குடும்பத்தில், உறவில், நீங்கள் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பு ஏற்கும் காவல் நிலையத்தில் என்று பொருத்திப் பாருங்கள். பொருள் பிடிபடும்.
(தொடரும்)
– நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 08 ஏப்ரல் 2016 அன்று வெளியானது
<–முந்தையது–> <–அடுத்தது–>