நண்பர் ராகவன் வருத்தமுடன் அமர்ந்திருப்பதைக் கவனித்துவிட்டு நெருங்கி வந்தார் தாஸ். “என்னாச்சு?” என்று விசாரித்தார். இருவரும் தொழில் முறையில் நல்ல நண்பர்கள். அதனால் பரஸ்பர வாஞ்சை அவர்கள் மத்தியில் அமைந்திருந்தது.
“என்னத்தைச் சொல்ல? இளங்கோவின் விஷயம்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை.”
இளங்கோ ராகவனுடைய நெருங்கிய உறவினரின் மகன். ராகவனின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்த காலத்தில் இளங்கோவின் தந்தைதாம் ராகவனுடைய மேல்படிப்பிற்கு ஏராளமாக உதவி செய்தவர். அந்த நன்றிக்கடன், ராகவன் தாம் தொழில் துவங்கியதும் பட்டப்படிப்பு மட்டும் முடித்து எவ்வித அனுபவமும் இல்லாத இளங்கோவை முக்கியப் பொறுப்பில் அமர்த்த வைத்தது. சூட்டிகையான பையன். தொழிலில் புகுந்து விளையாடுவான் என்று ராகவன் நம்பியிருக்க அவனோ விளையாட்டுப் பையனாகவே இருந்தான்.
உத்தரவாதமற்ற வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிப்பது. அதை நீட்டிப்பது என்று அவன் எடுக்கக் கூடிய முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே அமைந்தன. பிறகு அந்தந்த வாடிக்கையாளர்களிடம் கடனை வசூல் செய்வதற்குள் ராகவனின் பாடு “உன்பாடு என்பாடு” என்றாகிவிடும்.
“உன் முடிவுகளை மீறக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விடவேண்டியதுதானே” என்றார் தாஸ்.
“எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அவனுக்கு அந்தச் சூட்சமம் “புரிய மாட்டேன்” என மறுக்கிறது. மாமாவினுடைய முகத்திற்காகப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது” என்று மேலும் வருத்தப்பட்டார் ராகவன்.
திரும்பத் திரும்ப நிகழ்வுறும் பிரச்சினைகள் உறவைப் பாதிக்கும் என்பதைப் போல, உறவின் அடிப்படையினாலும் சில பிரச்சினைகளில் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் போகும். இளங்கோ உறவினனாக இல்லாதபட்சத்தில் அவனிடம் கண்டிப்பான முறையில் உரையாட ராகவனுக்குத் தயக்கம் இருந்திருக்காதில்லையா?
இவ்வகையான பிரச்சினைகளையும் உறவுக்கு அப்பாற்பட்டுத்தான் அணுக வேண்டும்; தீர்க்க வேண்டும். அதை முறைப்படி நேரடியாக இளங்கோவிடம் பேசி, அவனது நிர்வாகச் செயல்கள் சீராகாதபட்சத்தில் அது அவனுடைய வேலைக்கு உலை வைக்கும் என்பதை நேர்மையாக, தீர்மானமாக, தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வகையான உறவுப் பிரச்சினை நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அனுபவமாக வாய்த்திருக்கும். முகத் தாட்சண்யத்திற்காகச் சேர்த்துக்கொண்டு, வேறு வழியின்றிச் சகித்துக்கொண்டு அப்பிரச்சினையை மென்று முழுங்கிக்கொண்டிருப்போம். அதனால், அதனுடன் எப்படி மோதுவது என்ற கேள்வி நமக்குள் நிச்சயம் எழும். அதற்கான சில வழிமுறைகள் பின்னர் இத்தொடரில் இடம்பெறும்.
மீண்டும் மீண்டும் தொடரும் பிரச்சினைகள் உறவுக்கு உலை வைக்கும் என்பதையும் உறவே கூட அத்தகைய பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமையும் என்பதையும் மட்டும் இப்போதைக்கு நாம் புரிந்து வைத்துக்கொள்வோம்.
இதுவரை நாம் கடந்து வந்துள்ளவற்றின் சுருக்கத்தை நினைவுபடுத்திக்கொள்வோம்.
பிரச்சினைகளை எதிர்கொண்டு மோதும் முன் அவற்றை இனம் பிரித்து அடையாளப்படுத்த வேண்டும்.
ஒருவரிடம் பலவாறான பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றுள் முக்கியமானதை, பிரச்சினைகளின் மூலக்கருவைச் சுருக்கமாக ஒற்றை வாக்கியத்தில் குறிப்பிட்டுப் பேச்சைத் துவங்க வேண்டும்.
ஆச்சா?அடுத்து பிரச்சினைகளின் வேறு வடிவங்களைப் பார்ப்போம்.
அலுவலகத்திலிருந்து களைப்புடன் திரும்பிய ராஜ் தன் மனைவியைக் கண்டு அப்படியே திகைத்துவிட்டான். ஆனந்தத் திகைப்பு. அழகிய உடையும் நகையும் கண்ணை உறுத்தாத ஒப்பனையும் என்று அவனைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தாள் அவள். புதிதாக அவளைப் பார்ப்பதைப் போல் இருந்தது அவனுக்கு. “ஹேப்பி பர்த்டே” என்று அவனே மறந்துபோயிருந்த அவனுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து வேறு.
இதிலென்ன பிரச்சினை என்கிறீர்களா? ஒன்றும் இல்லை.
அதே தம்பதியரை வேறொரு நாளில் இப்பொழுது சந்திக்கிறோம்.
ஊரில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காகச் சென்னையிலிருந்து இரவு ரயிலுக்கு ரிசர்வ் செய்திருந்தார்கள். அலுவலகத்திலிருந்து நேரத்துடன் வீடு திரும்பிய ராஜ், பயண ஏற்பாடுகளில் பரபரப்பாக இருக்கிறான். அவனுடைய மனைவியும் தயாராகிறாள். ரயிலைப் பிடிக்க ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. ஆட்டோவும் வந்து விட்டது. ஸ்டேஷனைச் சென்றடைய முக்கால் மணி நேரமாகும். மனைவி துணி மாற்றி, ஒப்பனை செய்கிறாள், செய்கிறாள், செய்து கொண்டே இருக்கிறாள்.
படபடப்பும் பரபரப்புமாக, “நீ சீவி சிங்காரித்தது போதும். கிளம்பு. இல்லைன்னா ரயில் பட்டணத்தைவிட்டுக் கிளம்பிடும்” என்று குதிக்கிறான்.
ஆடை அலங்காரம், ஒப்பனை என்று விஷயம் ஒன்றுதான். முன்னர் பரவசப்படுத்திய அதே செயல் இப்பொழுது கோபமூட்டுகிறது; எரிச்சலூட்டுகிறது. பிரச்சினை அந்தச் செயலா? இல்லை. பிரச்சினை அந்தச் செயலால் நடைபெறும் பின்விளைவு. ஒப்பனையில் நேரத்தைச் செலவிட்டுத் தாமதமாக ஸ்டேஷனை அடைந்தால், ஸ்டேஷன் மாஸ்டர் அதற்கெல்லாம் காத்திருக்காமல் கொடியசைத்து ரயிலை வழியனுப்பி வைத்திருப்பார். சேலையை விசிறி முக வியர்வைத் துடைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற பின்விளைவு அச்செயலைப் பிரச்சினையாக்குகிறது.
பிள்ளை தலையெடுத்து சம்பாதித்தால்தான் வாழ்க்கை பொருளாதார மேம்பாட்டை எட்டும் என்ற நிலையில் உள்ள தகப்பனுக்கு மகனின் குறைந்த மார்க்குகள் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தும். அடுத்து நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட்டாலும் குறையாது என்ற அளவிற்குச் சொத்துள்ள தகப்பனுக்கு அந்த மதிப்பெண்கள் என்ன பிரச்சினையைத் தோற்றுவிக்கும்?
ஆக, பிரச்சினைகளின் பின்விளைவுகள் தாமாக நம்மிடம் தோற்றுவிக்கும் விஷயங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அப்படி அதைப் புரிந்துகொண்டால் மேலோட்டமாகப் பிரச்சினைகளுக்காக அடித்துக்கொள்ளாமல் அந்தப் பின் விளைவுகளின் அடிப்படையில் உரையாடலை அமைக்கலாம். சரியான தீர்வை நோக்கி நகரலாம்.
அடுத்தது உள்நோக்கம்.
அமெரிக்க க்ளையண்ட்டை அசத்தி ப்ராஜெக்ட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று லாரன்ஸ், பிரவீன் இருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் மேலாளர். இருவரும் சேர்ந்து இராப் பகலாக அமர்ந்து அதைப் பிரமாதமாகச் செய்து முடிக்கிறார்கள். மறுநாள் அதன் பிரசன்டேஷன். அலுவலகத்தினுள் நுழைந்த லாரன்ஸுக்கு அதிர்ச்சி. தன் சகாவை அலட்சியப்படுத்திவிட்டுத் தானே முந்திக்கொண்டு சென்று அதை மேனேஜரிடம் ஒப்படைத்து டெமோ காட்டிக்கொண்டிருந்தான் பிரவீன்.
பிரவீனின் இதரச் செயல்பாடுகளை இதுவரை கவனித்து வைத்திருந்த லாரன்ஸுக்கு இது யதேச்சையானதாகப் படவில்லை. தன்னுடைய ப்ரமோஷன், ஊதிய உயர்வு என்று சுயநல காரணங்களுக்காக பிரவீன் இதைத் திட்டமிட்டே செய்திருக்கிறான் என்று அவனது உள்நோக்கத்தைப் பற்றிய அபிப்ராயம் வலுவாகப் பதிகிறது.
வாழ்க்கையில் இத்தகைய உதாரணங்களை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். இத்தகைய பிரச்சினைகளில் அந்த விஷயத்தைவிட சம்பந்தப்பட்டவரின் உள்நோக்கம்தான் தலையாயப் பிரச்சினை. ஒரு விஷயம் தவறுதலாக நடந்திருந்தால் அதைப் பொருட்படுத்தாதிருக்கும் நாம் அதன் உள்நோக்கத்தைப் பொறுத்து ஆத்திரப்படவோ, அவதிப்படவோ ஆரம்பிப்போம்.
இவற்றை அணுகும்போது மோத வேண்டியது பிரச்சினையுடனன்று; உள்நோக்கத்துடன்!
இப்பொழுது வாசகர்களுக்கு ஒரு க்விஸ்.
சென்னை வெள்ளம் கழுத்தைத் தாண்டி உயர்ந்து நகரையே புரட்டிப் போட்டதற்குத் தமிழக அரசிடம் எதைப் பிரச்சினையாகக் கருதுகிறீர்கள் என்பதை இதுவரை நாம் படித்தவற்றின் அடிப்படையில் யோசித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.
(தொடரும்)
– நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 17 டிசம்பர் 2015 அன்று வெளியானது