12. உள்மன உறுத்தல்

சென்ற அத்தியாயத்தில் நம்மை நாமே நான்கு கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, முதலாவதாக, ‘பேசாமல் பொத்தி வைத்த கவலைகளும் அக்கறைகளும் எனது செயல்களில் வெளிப்படுகின்றனவா?’ என்பதைப் பற்றிப் பார்த்தோம்.

 

இரண்டாவது, உள் மனத்தில் உறுத்துகிறதா என்ற கேள்வி.

வாத்தியாரிடம் பொய் சொல்வது, திருட்டுத் தனத்தைப் பெற்றோரிடம் மறைப்பது, ‘உன்னிடம் சொல்லாமல் நண்பர்களுடன் ஹோட்டலுக்கா?’ என்று மனைவியிடம் வழிவது ஆகியனவற்றால் ஏற்படும் குறுகுறுப்பு வேறு வகை. அதனால் குறுகுறுப்பின்றித் தொடரவும்.

ஒரு பிரச்சினை கண்ணுக்குத் தென்படும். அந்தப் பிரச்சினையை உணரவும் செய்வோம். ஆனால் அதைப்பற்றி ஊர், உலகத்திற்குக் கவலை இல்லாமல் இருக்கும். யாரும் அதை நினைத்துப் பதற்றப்படுவதைப் போலவோ, கவலைப்படுவதைப் போலவோ தெரியவில்லையே என்று நினைப்போம்.

நமக்கு மட்டும்தான் அக்கறை, கவலை என்று தோன்றும். இப்பொழுது நாம் என்ன செய்வது என்ற யோசனை எழும். இறுதியில் என்ன செய்வோம் என்றால் நம்மை ஒடுக்கிக்கொண்டு மனத்திலுள்ளதைப் பேசாமல் இருந்து விடுவோம்.

ஏதாவது ஒரு திரைக்கதையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஓர் ஊர். ஒரு காவல் நிலையம். ஏட்டு வேலை கிடைத்து அங்கு பணியில் அமர்கிறான் ஏகாம்பரம். அங்கு இன்ஸ்பெக்டர் தொடங்கி கான்ஸ்டபிள்வரை அத்தனைப்பேரும் லஞ்சத்தில்தான் குடும்பமே நடத்துகிறார்கள். அதன் விளைவாக ஊரில் நடைபெறும் அத்தனை அட்டூழியங்களுக்கும் அவர்கள் உடந்தை. வேலியே பயிரை மேயலாமோ என்று மாய்ந்து மருகும் நேர்மையாளன் ஏகாம்பரம். அந்தப் பிரச்சினையை மேலிடத்திற்குக் கொண்டு செல்லாமல், சகித்துக் கொண்டு தன்னளவில் ஒழுக்கத்துடன் வாழப் பழகிக் கொள்கிறான்.

நிச்சயமாகப் பிரச்சினை என்று தெரிந்தும் இப்படி அமைதி காப்பவர்களின் மனநிலையைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது. அப்படியான சூழ்நிலைகளில் தங்களது மேலதிகாரிகளிடம் அவர்கள் அமைதி காப்பது மட்டுமின்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளதைத் தெரிவிக்காமல் அவற்றைப் பூசி மெழுகப் பொய் உரைப்பதும் நடக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சிக் குறிப்பு.

உயரதிகாரிகள் என்று சொன்னது ஓர் உதாரணம் மட்டுமே. சமூக அழுத்தங்களின் காரணமாக நமது மன உறுத்தலை வெளிப்படுத்தாமல் அமைதி காப்பதும் நம்முள் பலருக்கு இயல்பான விஷயம். அந்தப் பிரச்சினைகளை ஏற்றுச் சகித்துக்கொண்டு, அவற்றால் நமக்குப் பாதகமில்லை என்று பொய் உரைப்பவர்களாக மாறிவிடுகிறோம்.

ஆக, சில விஷயங்கள் சரியில்லை என்று உள்மனத்திற்குத் தோன்றினால், மனம் உறுத்தினால், வாய் மூடி ஏற்றுக்கொண்டு மௌனம் காக்காமல் அந்தப் பிரச்சினை மோதலுக்கு உகந்தது என்பதை அறியலாம்.

மூன்றாவது கேள்வி நினைவிருக்கிறதா?

‘பேசி இன்னலுக்கு உள்ளாவதைவிட வாயைப் பொத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?’ என்பது அந்த மூன்றாவது கேள்வி.

நாம் வாயைத் திறந்து பேசுவதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியிருந்தால், நம்முள் பலரும் ஒரு தவறைத் திரும்பத் திரும்பச் செய்வோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம். அது என்னவென்று யூகிக்க முடிகிறதா?

வேறொன்றும் இல்லை. பேசினால் என்னாகுமோ, ஏதாகுமோ, தலை போய் விடுமோ என்ற வீணான அச்சங்கள். அறியாத பேயைவிடத் தெரிந்த பிசாசே மேல் என்பதுபோல், அதைவிட இந்தப் பிரச்சினையைப் பொறுத்துக் கொள்வதே எவ்வளவோ மேல் என்று நம்மைச் சமாதானப்படுத்தி வாயை மூடிக் கொள்வோம்.

இதைத் தவிர மற்றொரு முக்கியமான தவறும் நிகழும்.

பிரச்சினைகளைப் பற்றி எதிர்தரப்புடன் பேச வேண்டும் என்று நினைக்கும்போதே, ‘இந்தப் பேச்சுவார்த்தை எந்த இலாபத்தையும் தரப்போவதில்லை; படுதோல்வியில்தான் முடியும்’ என்று மனம் ஒரு தீர்மானித்திற்கு வந்து விடு்ம். ‘அப்போ பேசி என்ன ஆகப் போகிறது? சரிதான் போ’ என்று வாயைப் பொத்திக்கொள்வோம். அத்தோடு மட்டும் முடியாது. நமது அந்த முடிவை நியாயப்படுத்த காரணங்களைத் தேட ஆரம்பித்திருப்போம்.

ஏன் இப்படி?

மனத்தில் முதலில் எழுப்பிக் கொள்ளும் கேள்வி, “நான் இந்தப் பேச்சுவார்த்தையில் வெற்றியடைவேனா?” இது பெரும் தவறான கேள்வி.

ஏனெனில் நாம் நம் மனத்தில் முதலில் எழுப்பிக் கொள்ளும் கேள்வி, “நான் இந்தப் பேச்சுவார்த்தையில் வெற்றியடைவேனா?”

இது பெரும் தவறான கேள்வி.

“பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்யலாமா?” என்று நாம் நம்மைக் கேட்டுக் கொள்வதில்லை. மாறாக “வெற்றியடைவேனா?” என்று கேட்டுக் கொள்கிறோம். அந்தக் கேள்விக்கு உள் மனமானது ‘இல்லை’ என்று பதில் சொல்லிவிடும். உடனே, ‘நல்லதாப் போச்சு, ஏதும் பேச வேண்டாம்’ என்று முடிவெடுத்துவிடுகிறோம்.

மாறாக அதற்கு எதிர்த்திசையில் நமது கேள்வியும் செயலும் அமைய வேண்டும். “பிரச்சினை பேச்சு வார்த்தைக்கு உகந்ததா?” என்று முடிவெடுத்துவிட்டு, “அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன்? இதை எவ்விதம் சிறப்பாகக் கையாளப் போகிறேன்?” என்று யோசிக்க வேண்டும்.

“பேசலாமா? வெற்றியடையுமா?” என்று யோசிக்க ஆரம்பித்தால் நாம் மோதப் போவதே இல்லை.

“எப்படிப் பேசப் போகிறேன்?” என்பதுதான் நம்மைத் தயார்படுத்தும்.

சுருக்கமாகச் சொன்னால், நாம் அமைதியாக இருந்துவிடுவதற்கு நமது மனம் கடைப்பிடிக்கும் உபாயம் இரண்டு. ஒன்று, பேசுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்று ஏமாற்றுவது. இரண்டாவது, மோதினால் மோசமாகிவிடும் என்று தேவையற்ற அச்சத்தைத் தோற்றுவிப்பது.

இவற்றைக் களைய எளிய பயிற்சி ஒன்றை முயலலாம். “வாரத்தின் ஏழு நாளும் என்னால் முடியாது. இன்று நிச்சயமாக ஓய்வு வேண்டும். சமையலுக்கு விடுமுறை” என்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசிப் பாருங்கள்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 31 ஜனவரி 2016 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

Related Articles

Leave a Comment