கல்லூரிப் படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த புதிது. அந்த ஆண்டின் பெருநாள் கழிந்து அடுத்த நாள் பணிக்குச் சென்றபோது என்னுடன் பணிபுரிந்த சுப்ரமணியன், ‘உங்க பண்டிகைக்கு கட்டிப்புடிச்சு வாழ்த்திப்பீங்களாடா?’ என்று கேட்டான்.
பத்திரிகையிலோ, தூர்தர்ஷனிலோ பெருநாள் தொழுகைச் செய்தியையும் காட்சிகளையும் படித்தோ, பார்த்தோ இருந்திருக்கிறான். அவனுக்குப் பெரும் ஆச்சரியம்.
நானும் பெருமையாக, ‘ஆமாம்டா!’
‘லேடீஸையும் இந்த மாதிரி கட்டிப்புடிச்சு வாழ்த்துலாம்னா சொல்லு, நான் மதம் மாறிடறேன்’ என்றான்.
எங்களைக் குலுங்கிச் சிரிக்க வைத்தது அவனது காமெடி.
மலரும் நினைவு ஏனெனில்,
சில நாள்களுக்கு முன் முஸ்லிம் பெண்மணி முஸ்லிமல்லாத பெண்மணியைக் காரிய நிமித்தம் கட்டிப் பிடித்த புகைப்படமொன்றைப் பகிர்ந்து ‘இதுதான் இஸ்லாம்’ என்றொரு FB பதிவைக் காண நேர்ந்தது.
இத்தனை ஆண்டுகளும் நான் ரசித்திருந்த சுப்ரமணியின் காமெடியை ஒரே நொடியில் காலாவதி ஆக்கிவிட்டார்கள்!
‘இதுதான் இஸ்லாம்’ என்ற வாக்கியத்தை யாராவது தமிழ் மொழியிலிருந்து நீக்கினால் தேவலை. கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்வேன்…
அவர் ஆணாக இருந்தால்.