09. என்ன வேண்டும்?

by நூருத்தீன்

கோபி, வாசுகி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள். தொழில் நிறுவனம், மென்பொருள் வல்லுநர் என்று கணவனும் மனைவியும் பக்கா பிஸியான நகரவாசிகள். வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ள வேணி என்று ஒரு மூதாட்டி.

 

அந்த அம்மாள் பொறுப்பாகத் தமது வேலைகளைக் கவனித்தாலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. சில நேரங்களில் காலதாமதமாக வேலைக்கு வருபவர் அதற்கான காரணங்களைச் சொல்வதுமில்லை. சிறு பொருள்கள் சில காணாமல் போயிருக்கின்றன. அவர்தாம் களவாடியிருப்பார் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் கோபிக்கும் வாசுகிக்கும் அடிமனத்தில் மட்டும் சந்தேகம்.

அழைத்து விசாரிக்கப்போய் அதையே ஒரு சாக்காக வைத்து அந்த அம்மாள் வேலையைவிட்டுப் போய்விட்டால் என்னாவது என்ற எண்ணம் அச்சுறுத்தியது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பது நாம் வேலை தேடுவதைவிடச் சிரமமான காரியம் என்பதால், மறதியாக எங்காவது வைத்திருப்போம் என்று தங்களுக்குள் சமாதானம் செய்து கொண்டனர்.

ஒருநாள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ வரவில்லை. அன்று அவர்களுக்கு முக்கியமான டெஸ்ட் இருந்தது. சோதனையாக கோபியும் வாசுகியும் அன்று வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். அலுவலகம் செல்லும் வழிக்கு எதிர்திசையில் பல கி.மீ. தள்ளியிருக்கும் பள்ளிக்கூடத்திற்குப் பிள்ளைகளை அவர்கள் அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை. காலில் வெந்நீர் கொட்டியதைப்போல் பரபரத்துக் கிடந்தவர்களிடம் வேணி யோசனைத் தெரிவித்தார்.

“யம்மா! என் புருஷன் நைட் ஷிஃப்ட் முடிஞ்சு வந்திருக்கும். அத்தோட ஆட்டோல புள்ளைங்கள ஸ்கூல்ல விட்டுறச் சொல்றேன்மா”

வேணியின் கணவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் அது காலத்திற்கேற்ற யோசனையாக இருந்தது. இருந்தாலும் கோபியின் மனத்திற்குள் இலேசாக அச்சம். அந்த ஆட்டோவில் இதற்கு முன் இரண்டு முறை அவன் பயணம் செய்திருக்கிறான். பாதசாரிகளின் சென்னை வசவுகளையும் இல்லாத பிளாட்பாரத்தை நோக்கி அவர்கள் தெறித்து ஓடுவதையும் கேட்டு , கண்டவனுக்கு அந்த ஆட்டோ ஓட்டியின்மேல் சிறப்பான அபிப்ராயம் இருந்ததில்லை. இப்பொழுது ஸ்கூலுக்கு லேட்டாகும் பிள்ளைகளை அழைத்துச்செல்ல வேண்டும் என்றால் அவனது வேகம் எப்படியிருக்கும் என்று நினைக்கும்போதே கலக்கமாக இருந்தது.

வாசலில் ஆட்டோ வந்து நிற்க, தூக்கிய பைகளுடன் கைகளை டாட்டா வீசிக்கொண்டே ஓடினார்கள் பிள்ளைகள். வாசலுக்கு விரைந்த கோபி, வேணியின் கணவனிடம், “இன்னும் போதிய டைம் இருக்கு. பார்த்து நிதானமாவே போ” என்றான். அவனோ அலட்சியமாக “அதெல்லாம் கவலையே படாதே ஸார்” என்றான். கணவனின் முகம் மாறுவதையும் மேலும் எச்சரிக்கை ஆலோசனைகளைத் தெரிவிக்க அவன் தயாராவதையும் கவனித்த வாசுகி. இடைமறித்தாள். “நம்மப் பிள்ளைகளை அவர் பொக்கிஷம் போல் பத்திரமாகக் கொண்டு சேர்த்து விடுவார் பாருங்களேன்” என்று கணவனிடம் சொல்லிவிட்டு “இல்லியாப்பா?” என்றாள் ஆட்டோ டிரைவரிடம்.

“பாரு ஸார்! மேடம் கரீக்டா சொல்லிட்டாங்க. நீதான் காப்ராவா இருக்கே” என்று சிரிப்புடன் கிண்டலையும் கலந்து வீசிவிட்டு, டுர்ரென்று ஆட்டோவைக் கிளப்பி எதிரே வந்த சைக்கிள்காரனை ஒரு கட் அடித்துத் தடுமாற வைத்துவிட்டு, சட்டென்று தெரு திரும்பிப் போய்விட்டான். இதில் கோபிக்கு வாசுகியிடம் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்ன?

என் பேச்சை மதிக்காமல் முந்திரிக்கொட்டைபோல் ஏன் குறுக்கிட்டாய் என்று ஆரம்பித்தால் அது தவறான துவக்கம். கண்டவனெல்லாம் என்னை நக்கல் பண்ணிட்டுப் போற அளவுக்கு இருக்கு உன் செயல் என்று மோதுவதும் தப்பு.

இது பிள்ளைகளின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். அவர்கள் நேரத்துடன் பள்ளி செல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அவர்களது பாதுகாப்பான பயணம். எனவே கணவனும் மனைவியும் இவ்விஷயத்தில் ஒருமித்த கருத்துடன் இருப்பதும் குடும்ப நிர்வாகத் தலைமையாளரின் அக்கறையைப் புரிந்துகொண்டு அதற்கு இணக்கமாக மற்றவர் செயல்பட வேண்டியதும் வெகு முக்கியம். அது இந்தக் குறிப்பிட்ட நிகழ்வைத் தாண்டிய பிரச்சினையில்லையா? அதைத்தான் கோபி வாசுகியிடம் பேச வேண்டும்.

வாசுகி அவ்விதம் குறுக்கிட்டதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அவசரத்திற்கு உதவ வந்த தம் கணவனிடம் அவர்கள் அவ்விதம் பேசுவது பிடிக்காமல் வேணி கோபித்துக்கொள்வாரோ என்ற அச்சம். ஏற்கெனவே வேணியிடம் சில பிரச்சினைகள் உள்ளதால் அவை பிற விஷயங்களில் குறுக்கிடுகின்றன. அவர்களும் அந்த அம்மாளிடம் சரியான பிரச்சினையை முன்னெடுத்துப் பேசித் தீர்க்க வேண்டும்.

அது என்ன பிரச்சினை என்று நினைக்கிறீர்கள்?

பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முனையும் முன் அவற்றைக் கூறுபோட்டு அறிவது அவசியம் என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அவை என்ன? ஒருவரிடம் பிரச்சினை. அதை உடனே சரி செய்தாக வேண்டும் என்பதை உணர்கிறீர்கள். இது பிரச்சினையின் உள்ளடக்கத்தைப் பற்றிய ரகம்.

அடுத்த ரகம் மீண்டும் மீண்டும் தொடரக் கூடிய செயல்கள். இவ்வகையான பிரச்சினைகளில் உள்ளடக்கம் பற்றிப் பேசி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் தொடர்கதையாகிப் போன செயல்கள்தாம் பிரச்சினையின் கரு என்பதை அறிந்து அவற்றைப் ப் பேசிச் சரி செய்வது.

மூன்றாவது, உறவைப் பாதிக்கும் பிரச்சினைகள். உறவு என்பது குடும்பம், ஆசிரியர்-மாணவர், மேலாளர்-சிப்பந்தி என்று ஏதொன்றாகவும் இருக்கலாம். அத்தகைய உறவு பாதிப்பிற்கு உள்ளாகிறது; அல்லது அந்த உறவு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது என்பதைப் புரிந்து அதைச் செப்பனிட முயல்வது.

பிறரிடம் நமக்குள்ள பிரச்சினைகள் எப்பொழுதுமே ஒன்றுக்கும் மேற்பட்டவையாகத்தாம் இருக்கும் எனும்போது அவை அனைத்தையும் சிந்தித்துக் குழம்பி மேற்சொன்ன ரகங்களின் அடிப்படையில் பிரச்சினையின் மூலக்கூறை அறிவது என்பது சவாலான விஷயமா இல்லையா? தவிர, அந்தப் பிரச்சினையாளரின் உள்நோக்கம், பிரச்சினையின் பின்விளைவுகள் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து, எங்கிருந்து தொடங்குவது, எந்தப் பிரச்சினையைத் தொடுவது என்று முடிவெடுப்பதற்குள் தலை சுற்றாது?

ஏதாவது மென்பொருள் இருக்கிறதா என்ன, ஸ்மார்ட்போனில் தரவிறக்கி, பிரச்சினைகளைப் புலம்பியவுடன், அது ‘இந்தா! இதைப் பேசு!’ என்று நமக்கு அறிவுறுத்துவதற்கு? பிரச்சினைகளினால் தலைமுடி இழந்த மகராசன் யாராவது இனி அதை எழுதிச் சந்தைப்படுத்தினால் உண்டு. நாம் அதற்குள் சில வழி முறைகளைப் பார்ப்போம்.

பேச்சு வார்த்தையை எங்கிருந்து தொடங்குவது? எந்தப் பிரச்சினையைத் தொடுவது என்பதை அறிய –

  • உங்களுக்கு என்ன வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவெடுங்கள். அதாவது என்ன தீர்வை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லது எந்தத் தொந்தரவு உங்களுக்கு வேண்டாம்;
  • எவருடனான பிரச்சினையுடன் மோத இருக்கிறீர்களோ அவருக்கு என்ன வேண்டும் அல்லது அவருக்கு என்ன வேண்டாம்;
  • உங்கள் இருவர் மத்தியிலான உறவு பாதிப்படையாமல் இருக்க என்ன வேண்டும் அல்லது என்ன வேண்டாம்

என்ற மூன்றையும் சிந்தித்துக் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் பிரச்சினை எதுவோ அது தீரவே போவதில்லை. மேய்வது நுனிப்புல் என்றாகிவிடும்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 27 டிசம்பர் 2015 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

Related Articles

Leave a Comment