கதை கேட்ட கதை

சியாட்டிலில் அபூர்வமாய் வெயில் அடிக்கும் நாளில் ஒன்று அது. அதிகப்படியான அபூர்வமாய் வார இறுதி ஓய்வு நாளாகப் பார்த்து வெயில் பளபளத்தது. மேலதிக அபூர்வமாய் எழுத்து பழகும் எழுத்தாளர் ஒருவருக்கு வாக்கிங் செல்ல உந்துதல் ஏற்பட்டிருந்தது. குளிர் ஜாக்கெட்டையும் ஷுவையும் அணிந்துகொண்டு, கண்ணுக்குக் கூலிங் கிளாஸையும் மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

 

சாலையோரம் கவனமாக நடப்பட்டிருந்த மரங்கள் துளிர்த்த வசந்த கால இலைகளுடன், மெல்லிய காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தன. ஓடுவதற்காகவே சிக்கனமான அளவில் தயாரிக்கப்பட்டிருந்த ஆடைகளைப் போனால் போகிறது என்று அணிந்து, சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். நகர்ந்து ஒதுங்கினால், ஒரு கையில் நாயை இழுத்தபடியும் மறுகையில் அது சாலையில் கழித்த கழிவை ப்ளாஸ்டிக் பையில் சுமந்தபடியும் எதிரே வந்த ஒருத்தியைப் பார்த்து வேறுபுறம் ஒதுங்க வேண்டியிருந்தது அவருக்கு.

வீட்டிற்குப் போனால் அவள் தன் கையை சோப்பு போட்டுக் கழுவிக்கொள்வாள் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், அந்த நாயை மடிமீது தூக்கி வைத்துக் கொஞ்சும்முன் அதன் கழிவுத் துவாரத்தை அவள் கழுவியிருப்பாளா என்று அவருக்கு டவுட்டு தோன்றியது. அந்த எண்ணத்தை உடனே உதறித் தள்ளுவதைப்போல் வேகமாகத் தலையாட்டிக் கொண்டார். இப்படி ஏதாவது கேட்டு, கேட்டே அவரது பெயருக்கு முன்னால் “டவுட்டு” பட்டத்தைச் சேர்த்திருந்தார்கள் நண்பர்கள். அவர்களைச் சந்திக்கும்போது ஏதாவது விருந்து இலவசமாகக் கொடுத்து அதை “டாக்டர்“ விருதாக மாற்றச் சொல்லவேண்டும் என்று ஒரு தந்திரத் திட்டமும் அவர் மனத்திற்குள் ஒளிந்திருந்தது. ‘இலவச மிக்ஸி, க்ரைண்டருக்கு மயங்கி நாட்டையே தூக்கிக் கொடுக்கும் என் இனிய தமிழ் மக்கள், பட்டத்திலா ஓரவஞ்சனை செய்துவிடுவார்கள்’ என்று அவருக்கு அபார தன்னம்பிக்கை.

அரை மைல் நடந்திருப்பார்; அப்போது மற்றோர் அபூர்வ அதிர்ச்சி ஏற்பட்டது. எதிரே வந்து கொண்டிருந்தார் அவருடைய தீவிர வாசகர். அவர் வரும் தோரணையையும் இவரைப் போலவே அவரும் ஆடை அணிந்திருப்பதையும் பார்த்தால் அவருக்கும் வாக்கிங் உந்துதல் ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்தார். சம்சாரிகளுக்கு எல்லாம் ஒரே நேரத்தில் இப்படியான உந்துதல் யதார்த்தமோ என்றும் நினைத்துக் கொண்டார்.

தூரத்திலிருந்தே புன்னகையை விரித்தார் வாசகர். அவருக்கும் எழுத்தின்மீது தீராத வெறி.

ஒருவரையொருவர் நெருங்கியதும் நின்றார்கள். தமிழில் குசல விசாரிப்பு முடிந்ததும் அந்த வாசகர் கேட்டார், “அடிக்கடி ஃபேஸ் புக்ல குட்டிக் கதை எழுதுவீங்களே. ரொம்ப நாளா புதுக் கதை ஏதும் வரலியே”

“ம்ம்ம்… எழுத வேண்டும். ஒரு மாறுதலுக்கு பத்து பக்கத்துக்கு சிறுகதை எழுதி வெச்சிருக்கேன். எடுத்தா கீழே வைக்க முடியாது. அனுப்பவா?”

“வாட்ஸ்அப்ல அனுப்புங்களேன்” என்று சிரித்தார் வாசகர்.

தலையாட்டிவிட்டு நடையைக் கட்டினார். மனசுக்குள் –

‘வந்துட்டாங்க கதை கேட்க’

0-0-0

(இது ஒரு முழு நீள கற்பனைக் கதை.)

Related Articles

Leave a Comment