இமாம் அபூஹனீஃபா – 10

பனூ உமய்யாக்கள் ஆட்சி முடிவுற்று, அப்பாஸியர்களிடம் ஆட்சிப் பொறுப்பு வந்ததும் இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) கூஃபா நகருக்குத் திரும்பினார், அப்பாஸியர்களுக்கும் அலீ (ரலி) அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டதை நாம் அறிவோம். அப்பாஸியர்களின் இரண்டாவது கலீஃபாவான அல்-மன்ஸூருக்கு

எதிராக அலாவீக்களின் எதிர்ப்பு கிளம்ப, அதைக் கடும் நடவடிக்கைகளின் மூலம் ஒடுக்கினார் மன்ஸுர். கடும் சித்ரவதைகள், அவர்களின் தலைவர்களுக்குக் கொலைத் தண்டனை  என இரத்தம் தெறிக்கும் நடவடிக்கைகளைக் கண்டு அப்பாஸியர்களின் ஆட்சியின் மீதும் அபூஹனீஃபாவுக்குக் கடும் அதிருப்தி தோன்றியது. இவர்களின் ஆட்சியிலும் நீதி தவறிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் விலகிப் போனது.

சலிப்படைந்து, வெறுத்துப் போய் தமது முழு கவனத்தையும் இஸ்லாமியக் கல்வி ஞானத்தின் பாதையில் முழுவதுமாகத் திருப்பிவிட்டார். ஆனாலும் மார்க்கத் தீர்ப்பு என்ற அடிப்படையில் அவர் அவ்வப்போது வெளியிட்டு வந்த  கருத்துகள், அல்-மன்ஸூரின் மீதும் அவரது ஆட்சியின் மீதும் அவர் கொண்டிருந்த எண்ணத்தைக் கோடிட்டுக் காட்டின.

அபூஹனீஃபா என்னதான் ஒதுங்கியிருந்தாலும் அவர் தனக்கு எதிரானவர் என்ற சந்தேகம் அல்-மன்ஸுருக்கு இருந்து கொண்டே வந்தது. இருவருக்கும் இடையிலான உறவு விரிசலடையத் தொடங்கியது. அதை உறுதிப்படுத்துவதைப்போல் சில நிகழ்வுகளும் அமைந்தன.

இமாம் மாலிக்: “இஸ்லாமியச் சட்டத் துறையில் தலைசிறந்த அறிஞர் அபூஹனீஃபா. அவர் இந்தத் தூண்களுக்கு இடையே சென்று இவை மரக்கட்டைகளால் செய்யப்பட்டவை என்று ஒப்பிட்டு ஆய்வு செய்து கூறினால், அவை மரக்கட்டைகள்தாம் என்று நீங்களும் எண்ணுவீர்கள்” என்று அபூஹனீஃபாவின் ஒப்பீட்டு ஆய்வு செய்யும் திறன் குறித்து வியந்து கூறியுள்ளார் பல விஷயங்களில் இமாம் அபூஹனீஃபாவுடன் வாதம் புரிந்துள்ள இமாம் மாலிக்.

ஃபுதைல் இப்னு அய்யாத்: “அபூஹனீஃபா சட்டத்துறை வல்லுநர்; சட்டத துறைக்காக அறியப் பெற்றவர்; செல்வந்தர்; தம்மை வந்து சந்திப்பவர்களிடம் அன்பும் பண்புமாய் நடந்து கொண்டவர்; இரவும் பகலும் கல்வியைப் பயிற்றுவிப்பதில் உறுதியுடன் திகழந்தவர்; அவருக்கு நற்பெயரும் நன்மதிப்பம் இருந்தன; அமைதியைப் பேணுவார்; சுருக்கமாகவே பேசுவார்; அனுமதிக்கப்பட்டவை, தடுக்கப்பட்டவை பற்றிய கேள்வி அவரிடம் வரும்போது, உண்மையைச் சுட்டிக்காட்டுவதில் அவர் சிறப்பானவர்; ஆட்சியாளரிடம் பணம் பெறுவதை அவர் வெறுத்தார்.”

மோசூல் நகர மக்கள் அப்பாஸியர்களின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். எல்லாரையும்போல அவர்களும் அல்-மன்ஸூரின் கிலாஃபத்தை ஏற்று, அவருக்கு சத்தியப் பிரமாணம் அளித்திருந்தனர். அதுமட்டுமின்றி, “உங்களை எதிர்த்து நாங்கள் கிளர்ச்சி புரிந்தால் நீங்கள் எங்களைக் கொல்லலாம்” என்றும் அதிகப்படியான வாக்குறுதி ஒன்றையும் அளித்திருந்தனர். ஆனால், ஆட்சியின் மீது அதிருப்தியும் வெறுப்பும் அதிகமானவுடன் சத்தியப் பிரமாணத்தை முறித்துவிட்டு கிளர்ச்சியைத் தொடங்கி விட்டனர்.

அவர்கள் அளித்திருந்த சத்தியப் பிரமாணத்தின் அடிப்படையில், அவர்களைக் கொன்று விடலாமா என்று சட்ட ஆலோசனையைப்பெற அபூஹனீஃபா உள்பட மார்க்க அறிஞர்கள் சிலரை தமது அவைக்கு வரவழைத்தார் அல்-மன்ஸூர். தமது ஐயத்தை விளக்கினார். பிறகு, “நம்பிக்கையாளர்கள் தங்களது பிரமாணத்தை எப்பொழுதுமே ஏற்று நிறைவேற்றுவார்கள்” என்று நபியவர்கள் ஏற்படுத்திய விதிமுறைக்குள், அந்தக் கிளர்ச்சியாளர்களின் வாக்குறுதி மீறல்  அடங்குமா என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தார்.

“உங்களுக்கு அவர்கள்மீது அனைத்து அதிகாரங்களும் உள்ளன. நீங்கள் மன்னித்தால் அது உங்களுடைய உயர் பண்பு. தண்டித்தால் அது அவர்களுக்குரியதே! இதில் வரம்புமீறல் எதுவும் இல்லை” என ஓர் அறிஞர் கருத்துத் தெரிவித்தார். ஏறக்குறைய இதே மாதிரியே பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். அபூஹனீஃபா மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். அல்-மன்ஸூரின் கவனமெல்லாம் இமாம் அபூஹனீஃபா தெரிவிக்கப் போகும் கருத்தின்மீதே குவிந்திருந்தது.ஆம் என்பது மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாக அமைந்தால் கிளர்ச்சியாளர்கள் அனைவரும் கொலைத் தண்டனைக்கு உரியவர்களாகி விடுவார்கள். அம்மக்களைக் கொன்றதைக் குறித்து பிறகு எந்த மார்க்க அறிஞரும் கேள்வி கேட்க முடியாது, ஆட்சேபம் தெரிவிக்க இயலாது அல்லவா.

“நிம்மதியாய், பாதுகாப்பாய் வாழும் மக்களை அந்தக் கிளர்ச்சி அச்சுறுத்துகிறது” எனக் கூறி அபூஹனீஃபாவின் அமைதியைக் கலைத்தார் மன்ஸூர்.

தாம் உண்மை என்று நம்புவதை எவ்விதத் தயக்கமும் அச்சமும்  இல்லாமல் கலீஃபாவிடம் கூறத் தொடங்கினார் அபூஹனீஃபா.

“அம்மக்கள் அவர்கள் மனதார விரும்பாத ஒன்றைத்தான் உங்களுக்குப் பிரமாணமாக அளித்துள்ளார்கள். அவர்கள்மீது தண்டனையாகச் சுமத்த உங்களுக்கு அதிகாரம் இல்லாத ஒரு விஷயத்தையே நீங்களும் அவர்கள்மீது சுமத்தியுள்ளீர்கள். இறைவன் அறிவித்துள்ள மூன்று விஷயங்களில், ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் ஒரு முஸ்லிமுக்கு மரண தண்டனை வழங்க முடியும். இறை நிபந்தனையின் அடிப்படையில் மரண தண்டனை வழங்குவதை மட்டுமே நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவே உங்களுக்குச் சிறப்பு. மாறாக, நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப நிபந்தனை விதித்து, அதை அவர்கள் மீறுகிறார்கள் எனக் கூறி மரண தண்டனை வழங்குவீர்களேயானால், அநீதியான முறையில் நீங்கள் அவர்களைக் கொன்றவர் ஆவீர்கள்.”

“நான் விதிக்கவில்லையே. அம்மக்கள் தாமாகத்தானே அதிகப்படியான வாக்குறுதியுடன் பிரமாணம் அளித்தார்கள்” என்று கலீஃபா அல்-மன்ஸூர் பதில் கூற, “ஒரு பெண், கணவன் அல்லாத ஒருவனை தன்னிச்சையாகப் படுக்கைக்கு அழைத்தால், அவளது வார்த்தையை ஏற்றுக்கொள்வது யாருக்கேனும் ஆகுமானதா?” எனக் கேட்டார் அபூஹனீஃபா.

“இல்லை” என்றார் கலீஃபா. தன்னிச்சையான செயல்பாடு இறைவனின் சட்டத்திற்கும் நிபந்தனைக்கும் மாற்றாக அமைய முடியாது என்ற அபூஹனிஃபாவின் விளக்கத்தைக் கேட்டவுடன், அதில் திருப்தியடைந்த அல்-மன்ஸூர் மற்றவர்களைக் கலைந்து செல்லச் சொல்லிவிட்டு, அபூஹனீஃபாவை நிறுத்தி வைத்துக்கொண்டார்.

தனிமையில் அவரிடம், “தாங்கள் மட்டுமே சரியான கருத்தை உரைத்தீர்கள். தாங்கள் வீட்டிற்குச் செல்லலாம், ஆனால் கலீஃபாவுக்கு முரண்படும் வகையிலான தீர்ப்புகளை நீங்கள் வெளியிடக் கூடாது. அது கிளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாக ஆகிவிடும்” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அதற்கெல்லாம் உடன்படக் கூடியவரா இமாம் அபூஹனீஃபா?

ஒருமுறை அபூஹனீஃபாவுக்கு 10,000 திர்ஹங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தமது அமைச்சர் அப்துல் மாலிக் இப்னு ஹமீத் என்பவர் மூலம் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார் அல்-மன்ஸூர். அபூஹனீஃபா அதனை அப்படியே நிராகரித்து விட்டார். அந்த அமைச்சர் பெருந்தகையாளர், நற்குணம் வாய்ந்தவர். அபூஹனீஃபாவின்மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.

“அமீருல் மூஃமினீன் உங்களை எதிலாவது சிக்க வைக்கக் காரணம் தேடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இவற்றை ஏற்கவில்லையெனில், அவர் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தோதாகிவிடும்” என்றார் அப்துல் மாலிக் கவலையுடன்.

வேண்டாம் என அபூஹனீஃபா மறுக்க, “பணத்தை நீங்கள் தானமாக அளித்துவிடுங்கள்; அடிமைப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுங்கள். அமீரிடம் நான் பேசிச் சமாளித்துவிடுவேன்,” என்றார் அமைச்சர்.

அதற்கு அபூஹனீஃபா, “நானோ முதுமை அடைந்துவிட்டேன். இந்நிலையில் ஓர் அடிமைப் பெண்ணை ஏற்றுக்கொண்டு அவளுக்குரிய உரிமையை அளித்து நியாயமாக நடந்துகொள்ள முடியாத நிலையில் நான் உள்ளேன். அவளை விற்றுவிடலாம் என்றாலோ அவள் அமீருடைய சொத்தாயிற்றே” எனக் கூறி இறுதி வரை கலீஃபாவின் வெகுமதிகளை அவர் ஏற்கவே இல்லை.

இவ்விதமான நிகழ்வுகள் கலீஃபாவையும் இமாம் அபூஹனீஃபாவையும் இணக்கமற்ற நிலையிலேயே வைத்திருந்தன. அரசாங்கத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் அவர் இருந்துவந்தார். இவை தவிர கலீஃபாவின் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், அல்-மன்ஸூரைத் தூபமிட்டு அபூஹனீஃபாவின் மீது அவரது சந்தேகம் நிலையாகத் தொடரும்படி பார்த்துக் கொண்டார்கள். அபூஹனீஃபாவும் அவற்றை அறிந்தே இருந்தார். ஆனாலும் அதற்கெல்லாம்  அவர் கவலைப்படுவதாக இல்லை.

தமக்குச் சரியென தோன்றிய கருத்துகளையும் தீர்ப்புகளையும் வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார். மக்களுக்கும் மன்னருக்கும் அவை பிடித்திருந்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன, அல்லாஹ்வை திருப்திப்படுத்தகிறோமா, சத்தியத்துக்கு இணக்கமாக இருக்கிறதா, அது போதும்.

கலீஃபாவின் அவையில் அபுல் அப்பாஸ் அத்தூஸி என்றொருவர் இருந்தார். அபூஹனீஃபாவின்மீது நல்லெண்ணம் இல்லாதவர். அபூஹனீஃபாவுக்கும் அது தெரியும். ஒருமுறை அபூஹனீஃபா அல்-மன்ஸூரின் அவைக்குச் சென்றிருந்தார். அவை நிறைய மக்கள் குழுமியிருக்க, அத்தூஸியும் அப்பொழுது அங்கு இருந்தார்.

‘இன்றுடன் அபூஹனீஃபாவின் புகழை முடிக்கிறேன் பார்’ என்று கருவிக் கொண்டு, அவரிடம் வந்து, “அபூஹனீஃபா, ஒருவர் இன்னாரென்றே தெரியாத நிலையில், நாங்கள் அவரின் தலையைக் கொய்ய வேண்டும் என்று அமீருல் மூஃமினீன் எங்களுக்குக் கட்டளையிடுகிறார். அதை நாங்கள் நிறைவேற்ற எங்களுக்கு அனுமதியுள்ளதா?” என்று கேட்டார்.

“அபுல் அப்பாஸ்! கலீஃபா நேர்மையான ஒரு விஷயத்திற்காகக் கட்டளையிடுகிறாரா அல்லது அநீதியாகவா?” என்று கேட்டார் அபூஹனீஃபா.

அமீருல் மூஃமினீன் அநீதியாகக் கட்டளையிடுகிறார் என்றா அவையோர் முன்னிலையில் கூற முடியும்? “நேர்மையானதைத்தான்” என்று பதில் அளித்தார் அபுல் அப்பாஸ்.

“எனில் கட்டளையை நிறைவேற்றுங்கள். நேர்மையான நடவடிக்கையை நீங்கள் நிறைவேற்றியதற்காகக் கேள்வி கேட்கப்படமாட்டீர்கள்” என்றார் அபூஹனீஃபா. பிறகு தம்முடன் இருந்தவர்களிடம், “இவர் என்னைக் கட்டிப் போடப் பார்த்தார், அதனால் நான் அவரைக் கட்டிப்போட்டு விட்டேன்” என்றார்.

(தொடரும்)

– நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் ஏப்ரல் 1-15, 2016 இதழில் வெளியானது

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–ஞான முகில்கள் முகப்பு–>

 

 

Related Articles

Leave a Comment