02. மௌனம் கலை

by நூருத்தீன்

இந்தத் தொடரைத் தொடரும் முன் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது வாத விவாதத்திற்கும் பிரச்சினைகளை எதிர்கொண்டு பேசித் தீர்ப்பதற்கும் உள்ள வேறுபாடு. இரண்டிற்கும் இடையே அப்படி என்ன வேறுபாடு? குழப்புவதைப் போல் இருக்கிறதே

என்கிறீர்களா? எளிய உதாரணங்களைப் பார்ப்போம்.

மகனை, மகளை என்ன படிக்க வைப்பது, எந்தளவிற்குச் செல்லம் கொடுப்பது என்பதில் தாய்க்கும் தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் காச், மூச்சென்று கத்தி, கடைசியில் தந்தையானவர் அன்றிரவு பட்டினியாகப் படுக்க நேர்வது வாத, விவாத வகை.

தலைவரும் அவருக்கு அடுத்தபடியாக உள்ளவரும் ஈகோவின் காரணமாய்ச் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கிக்கொண்டு ஆளாளுக்கு மைக்கில் ‘என்னுதுதான் மெய்யான கட்சி’ என்று வக்கீல் நோட்டீஸ் விட்டுக் கொள்வதும் இவ்வகைதான்.

இத்தகையப் பிரச்சினைகளை எப்படிப் பேசிக்கொள்வது, தீர்த்துக் கொள்வது என்பனவெல்லாம் முற்றிலும் வேறு பாடம்.

பேருந்தின் உள்ளே தரைப்பலகை உளுத்துப் போய்விட்டது. எந்நேரத்திலும் பிய்த்துக் கொள்ளும் என்பது நடத்துனருக்குத் தெரிகிறது. தாம்மட்டும் நகர்ந்து, நகர்ந்து டிக்கெட் கொடுக்கும் அளவிற்குக் கவனத்தை வளர்த்துக் கொள்கிறாரே தவிர, நிர்வாகத்திடமோ, தம்முடைய உயர் அதிகாரியிடமோ அதைத் தெரிவிக்க அவருக்கு அச்சம். அல்லது, நான் சொன்னால் அவர்கள் கேட்டுவிடவா போகிறார்கள்? என்று எரிச்சல், அவநம்பிக்கை.

அதன் விளைவு என்னவாகிறது? ஒருநாள் பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே அதன் தரைப் பலகை பிளந்து பயணி ஒருவர் சாலையில் விழ, ஆயுள் மிச்சமிருந்ததால் அவர் பிழைத்துக் கொள்கிறார். பிறகுதான் விழித்துக் கொள்கிறார்கள் அனைவரும்.

இப்பிரச்சினைக்கு யார் காரணம் என்ற ஆராய்ந்து குற்றம் சுமத்துவது இருக்கட்டும். பேருந்தின் பலகையில் இப்படியொரு ஓட்டையை அறிந்த நடத்துனரோ, ஓட்டுனரோ என்ன செய்திருக்க வேண்டும்? தம்முடைய உயர் அதிகாரியிடம் அப்பிரச்சினையை உரிய முறையில் பேசி, அதைச் சரி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஏன்? அவருக்குத் தெரியவில்லை.

பிரச்சினையொன்றை நேர்மையான முறையில், தெளிவான வகையில், எதிர்கொண்டு பேசித் தீர்க்க நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

‘நாலுபேர் செத்தால்தான் புத்தி வரும்’ என்றா பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருப்பது?

நாட்டின் ஆட்சிக்கு ஏற்படும் கேடு, நிறுவனங்கள் சந்திக்கும் தோல்வி, குடும்பத்தில் நிகழ்வுறும் விவாக முறிவு என்று எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலும் அடிப்படையான விஷயம் ஒன்றே. சம்பந்தப்பட்டவர்களுடன் எப்படிப் பேசுவது, சமாளிப்பது என்பது தெரியாமல் பிரச்சினைகளை எதிர்கொண்டு மோதித் தீர்க்காமல் அப்படியே விட்டுவதுதான் காரணமாகப் பொதிந்திருக்கும்.

அப்படியானால் உலகிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் மோதிப் பேசித் தீர்த்துவிட முடியுமா; விவாகரத்து இல்லாத புது உலகம் உருவாகிவிடுமா என்று கேட்டால் பதிலானது, இல்லை. என்ன செய்வது? உத்தமர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், கொலைகாரர்கள், பிரதமர் என்று உலகில் பலதரப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நமக்கென்ன போச்சு; எக்கேடோ கெட்டுத் தொலை என்று ஒதுங்கி விடாமல் நம்மால் இயன்றவரை ஒரு பிரச்சினையை எதிர்கொள்வதுதான் இந்தத் தொடரின் கரு.

ஒரு பிரச்சினையின்போது நமக்குள் பெரும்பாலானவர்கள் இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்கிறோம். அமைதியாக இருந்து விடுவது. அல்லது முரட்டுத்தனமாக நமது கருத்தை, தீர்வை வலியுறுத்தித் திணிப்பது. இரண்டுமே சாதகமான விளைவுகள் ஏற்படாமல் தடுக்கும் பாதகங்கள்.

நிறுவனமோ, குடும்பமோ சிறு சிறு பிரச்சினைகள் உருவாகத்தான் செய்யும். சின்ன விஷயம்தானே என்று அவற்றைத் தீர்க்காமல் விடுவதுகூடப் பல நேரங்களில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து விடும். கடலில் மிதக்கும் கப்பலின் அடித்தளத்தில் ஏற்படும் சின்ன ஓட்டை என்ன விளைவை ஏற்படுத்தும்?

எதிர்த்துப் பேசுவதால் நமக்கு வீண் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாய் வாய் மூடி, பேசாதிருப்போம் என்றிருப்பவர்கள் ஒருவகை. ஆனால் மனித இயல்பு என்னவெனில் அதன் பக்க விளைவுகள் நமது செயல்களில் பேச்சில் மறைமுகமாக வெளிப்பட ஆரம்பித்துவிடும். எப்படி?

அலுவலகம், நட்பு, உறவு என்றால் சாடை பேசுவது, புறம் பேசுவது, கிண்டல் புரிவது என்று எதிர்ப்பு வெளிப்படும். பெண்களுக்குக் கணவனிடம் என்றால் உணவின் சுவையும் லொட்டு லொட்டு என்று நசுங்கும் பாத்திரங்களும் காட்டிக்கொடுத்து விடும். ஆனால் பிரச்சினையைத் துணிவுடன் எதிர்கொள்வது என்பது மட்டும் இவர்களுக்கு இருக்காது.

மௌனத்தின் அத்தகைய பக்க விளைவுகள் பிரச்சினையைத் தீர்க்குமா? தீர்க்காது. மட்டுமின்றி, வளர்க்கும்.

நாளாவட்டத்தில் அந்த ஆத்திரம், இயலாமை, அதைரியம் எல்லாம் சேர்ந்து, எதிர்த்தரப்பை மரியாதைக் குறைவாக நடத்துவது, வெறுப்பை உமிழ்வது என்று மாறும். இவையாவது பிரச்சினையைத் தீர்க்குமா? ம்ஹும். இவையும் தீர்க்காது. இவையும் பிரச்சினையை மேலும் வளர்க்கும்.

‘சரி உன்னிடம் இது வேலைக்காவாது’ என்று மீண்டும் ஸைலன்ட் மோடுக்கு மாறிவிடுவோம். வாழ்க்கை ஒரு வட்டம்தான். அதற்காக இப்படியா வட்டமடிப்பது?

அது மட்டுமின்றி, அமைதியாக இருந்துவிடுவது என்ற வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதால் பிரச்சினைக்கு உரியவர் பிரச்சினையை அறியாமல் போவது ஒருபுறமிருக்க, மௌனம் சம்மதம் என்று தப்பாக விளங்கவும் நாம் இடமளித்து விடுகிறோம்.

பிரச்சினையை முரட்டுத்தனமாக எதிர்கொள்ள நினைப்பவருக்கான பக்க விளைவுகள் வேறு வகை. அதிகாரத்தில் இருப்பவராக இருந்தால் அடியாத மாடு பணியாது என்று அடித்து, உதைத்து வேலை வாங்க நினைக்கிறார். அது பழி உணர்ச்சியைத்தான் அதிகப்படுத்தும். தகுந்த நேரம் வாய்த்ததும் அது பூமராங் போலத் திருப்பி வந்து தாக்கும்.

நட்பு, உறவு, நிறுவன அதிகாரி போன்றோர் மற்றவரிடம் முரட்டுத்தனமாக பிரச்சினையை தீர்க்க முனையும்போது அவர்களை மட்டந்தட்டுவதுபோல் பேசுவது, எழுதுவது. அவர்களுடையக் கருத்தைத் தாக்குவது ஆகியன மற்றொரு போக்கு. அச்சமோ, தாழ்வு மனப்பான்மையோ, இயல்பான சுபாவமோ என்று ஏதோ ஒரு காரணத்தால் இவர்கள் கடுமையான வகையில் இவ்விதம் செயல்படுகிறார்கள்.

அவர்களது இத்தகைய அணுகுமுறை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றால் அவர்களது கருத்தும் யோசனையும் நியாயமானதாகவே இருந்தாலும்கூட சம்பந்தப்பட்டவர்களால் அவை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தப்படும்.

இவை ஒருபுறமிருக்க, பிறர் தம்மை ஏசக் கூடாது. மரியாதை குறைவாக நடத்தக் கூடாது என்று விரும்பும் அவர்கள் மற்றவர்களிடம் நேர் மாறாய் நடந்துகொண்டு, ‘அவனுக்கு அதுதான் சரி’ என்பதுபோல் சம்பந்தப்பட்டவரின் செயல் அல்லது குணத்தை காரணமாக்குவார்கள்.

இவ்வாறன்றி நேர்மையான முறையில் பிரச்சினையை எதிர்கொண்டு, கண்ணியமான முறையில் பேசி, தகுந்த தீர்வை எட்டுவதே பிரச்சினையைத் தீர்க்கும். ஆனால் என்ன பிரச்சினை என்றால் இந்தத் திறன் மாத்திரையாகவோ, டானிக்காகவோ கிடைப்பதில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பயில வேண்டும். வேறு குறுக்கு வழி இல்லை.

ஆனால் அஞ்சத் தேவையில்லை. எளிதுதான். விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 22 அக்டோபர் 2015 அன்று வெளியானது

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–மோதி மோதி உறவாடு முகப்பு–>

Related Articles

Leave a Comment