ஷாமிலிருந்து சுல்தான் ஸாலிஹ் திரும்பியது முதல் அவரை ஓரிரு முறைக்கு மேலே பார்க்காத அரசவையினர், இன்றும் நேற்றுப் போலவே ஷஜருத்துர் சபை கூட்டியிருப்பதைக் கண்டு அதிசயித்தனர். ஒருவேளை சுல்தானின் காய்ச்சலும் தலை வலியும் இன்னம் நீங்கவில்லை போலும் என்று அவர்கள்

நினைத்துக்கொண்டார்கள். அல்லது, சுல்தான் யாருக்கும் சொல்லாமலே மாறுவேடம் பூண்டு காஹிராவைவிட்டு வெளியேறி, எதிரிகளிடைப் புகுந்து உளவறிந்து வரப்போயிருக்கக் கூடுமென்று சில விவேகிகள் நினைத்துக் கொண்டு, அவ் வெண்ணத்தை மனத்துக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டனர். இன்னம் சிலர் தத்தம் மனம் போன போக்கெல்லாம் ஏதேதோ கற்பனை செய்து கொண்டார்கள். எனினும், அவர்களுள் எவருமே சுல்தானின் உண்மை நிலையை உணரவுமில்லை ; உணரவிடப் படவுமில்லை ; உணர வழியுமில்லை என்க.

மிகவும் ஒய்யாரமான ராஜ கம்பீரத்துடனே ஷஜருத்துர் அரியாசனத்தில் தலை நிமிர்ந்து அமர்ந்திருந்தார். வெளியில் அவருடைய வதனம் பெரிய மாறுதல் எதையும் காட்டவில்லை என்றாலும், அவரது உள்ளம் துடித்த துடிப்பை எவரே அறியவல்லார்! ஆருயிர்க் கணவரைப் பறிகொடுத்த பின்னர் முதன் முதலாக அன்று அரசவை கூட்டியிருக்கும் அப் பெண்ணரசியின் நெஞ்சம் பகீரென்றும், திகீரென்றும் மாறி மாறி வேதனை தரும் உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே இருந்தது. ஆயினும், அவ் வஜ்ஜிர மனம் படைத்த ஷஜருத்துர் வெகு லாவகமாகத் தம்மைச் சமாளித்துக் கொண்டார். இம் மாதிரியான சந்தர்ப்பங்களிலே ராஜதந்திர நிபுணத்துவ வீரர்களுக்குத் திடீரென்று உதிக்கும் விசித்திரமான திடசித்தம் வீராங்கனை ஷஜருத்துர்ருக்கும் உற்பத்தியானதில் வியப்பில்லை யன்றோ?

சுல்தானா ஆசனத்தில் அமர்ந்ததும், அவர் தம் கையிலே கொண்டு வந்திருந்த அந்தப் பொய்யான போலிப் பிரகடனப் பத்திரத்தை விரித்து, அரசவை அமைச்சரிடம் நீட்டிக் கொடுத்து, அதை உரத்த குரலில் வாசிக்கச் சொன்னார். இவ் வமைச்சர் அந்த அறிக்கைப் பத்திரத்தை விரித்துப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தார். ஷஜருத்துர் அந்தப் பத்திரத்தை மிகவும் நிஜமானதென்று தோற்றுவித்தற்காக, சுல்தான் வழக்கமாக அத்தகைய பத்திரங்களிலே கட்டி விடும் முத்திரை வளையத்தை இதற்கும் பொருத்தியிருந்தார். அமைச்சரின் கைகளில் இருக்கும் அறிக்கைப் பத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவ் வளையத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே, சபையினர் அனைவரும் மெளனமாகவும் மிக அமைதியாகவும் செவி மடுத்தனர் :-

“காஹிரா மீது நசாராக்கள் அக்கிரமமாய்ப் படையெடுத்து வருகிற இந்த நெருக்கடியான சூழ்நிலையிலே, விதிவசமாக, எழுந்திருக்க முடியாத உடல் நலிவுடன் சிறிது அவதியுறுகிற, அல் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி, பின் அல் மலிக்குல் காமில் ஐயூபி ஆகிய நாம், இதனால் நமது ஸல்தனத்திலுள்ள சகல பிரஜைகளுக்கும் பகிரங்கமாய்த் தெரியப்படுத்தும் அரசப் பிரகடனம் என்னவென்றால் :- எம்மை ஹக்கீம்கள் பூரண ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்று மிகவும் வற்புறுத்தி உபதேசிப்பதாலும், இப்போது நாம் ராஜீய விவகாரங்களிலோ, அல்லது ஆட்சி வியவகாரங்களிலோ இறங்கித் தீவிரமாகப் பாடுபடுவோமானால் எமது உயிருக்கேயும் ஒரு வேளை அபாயம் நேர்ந்துவிடுமோவென்று அஞ்சுவதற்குக் காரணம் இருக்கிறதென்று அந்த ஆயுர்வேத நிபுணர்கள் அறிவிப்பதாலும், நாமே நேரில் வந்து வெளி விவகாரங்களில் கலந்து கொள்ளும் வசதியற்றிருக்கிறோம் என்பதை மிகவும் விசனத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

“என்றாலும், அவசியத்தையும் அவசரத்தையும் கருதி, எம் மைந்தர் தூரான்ஷா வெளிநாட்டிலிருப்பதால், நீங்கள் அனைவீரும் நேசிக்கிற எம் பிரிய மனைவி ஷஜருத்துர் ஸாஹிபாவின் முழுப் பொறுப்புக்கும் இன்று முதல், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த ஸல்தனத்தின் ஆட்சியைத் தற்காலிகமாக ஒப்புவித்திருக்கிறோம். நிலைமையின் முக்கியத்தை உணர்ந்துள்ள நீங்கள் அனைவீரும் எமது இந்தக் கட்டளையை ஏற்று, சுல்தானா எம் பொருட்டாக நிகழ்த்துகிற ஆட்சிக்கு ராஜ விசுவாசத்துடனே ஆக்கமளித்து வருவீர்களாக!

                                                                                                                                                      (ஒப்பம்)

                                                                                                         அல் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி”

அவ்வறிக்கை வாசித்து முடிக்கப்பட்டவுடனே அரசவை குடும்பத்தினர் அமைதியுடனே தலையைக் கவிழ்த்தனர். ஷஜருத்துர் அதையே அமயமாக வைத்துக் கொண்டு, தம்மை எல்லாரும் தாற்காலிக அரசியாக ஆமோதித்து விட்டமைக்காகச் சபையினர்க்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவசரம் அவசரமாக மற்ற நிகழ்ச்சிகள் பரிசீலிக்கப்பட்டன. நசாராக்கள் இன்னம் இருபத்து நான்கு மணி நேரத்தில் காஹிராவை எட்டிவிடக் கூடுமென்று ஒற்றர்களின் உளவுச் செய்தி அச்சபைக்கு வந்தது. யுத்தத்துக்கான இறுதித் திட்டங்களை ஷஜருத்துர் விவாதித்தார். சுல்தானுக்கு உடல்நிலை சிறிது பலஹீனமாய் இருக்கிறதென்றாலும், அவரும் தற்சமயம் இந்தப் போராட்டத்துக்கான தம் உதவிகளை எல்லா வகைகளிலும் செய்து முடிப்பதற்காக அந்தப்புரத்தை விட்டு வெளியேறி இயன்ற வரை சகல வேலைகளையும் முடியுமான அளவுக்குக் கவனிப்பதாகக் கூறினார் ஷஜருத்துர். அதே போன்று அவரும் எல்லா ஊக்கத்தையும் முழுக்கப் பொழிந்து உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

அரசவை அவ்வளவோடு கலைக்கப்பட்டது.

நேற்றுப் போல் இன்றும் இரகசியக் கூட்டம் நடந்தது. அங்குக் குழுமியவர்களுக்கு ஆவல் அதிகரித்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்ட ஷஜருத்துர் நளினமாகப் பேசினார் : “பிரமுகர்காள்! ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். அருளாளனின் பேருதவியால் சுல்தான் விரைவாகக் குணமடைந்து வருகிறார். அதிகமாக உழைத்த உடலதிர்ச்சியால் ஏற்பட்ட பலஹீனத்தால் வந்த சாதாரண அலுப்புக் காய்ச்சலென்று ஹக்கீம் நவில்கிறார். நேற்று இருந்ததைவிட இன்று அவர் சற்றுக் குணமடைந்திருப்பதால் சயன அறையை விட்டு வெளியேறிக் கிழக்கு வாயிற் கூடாரத்தில் இருந்து கொண்டு, சேனாதிபதி ருக்னுத்தீனுடனே திட்டங்கள் வகுத்துக்கொண்டிருக்கிறார். சுல்தான் சீக்கிரமே பூரண சுகமடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்வினிடம் பிரார்த்திப்பதுடன், நீங்கள் யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரை கொடுக்க வேண்டாமென்றும் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அன்றியும் எதிரிகள் காஹிராவை நெருங்கிவிட்டபடியால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உங்கள் கருத்திலே கண்ணாயிருந்து, வரப்போகிற வெற்றிக்குத் துணை புரியும்படி கேட்டுக் கொள்கிறேன்!”

இந்தப் பேச்சை ஷஜருத்துர் எவ்வளவு நிதானமான மன அமைதியுடனே சாமர்த்தியமாக மொழிந்தாரென்றால், அங்குக் கூடியிருந்த ஒன்பது பிரதானிகளும் அப்படியே நம்பி விட்டனர். முன்னம் சுல்தான் ஷாமில் இருந்த காலத்தில் ஷஜருத்துர்ரின் குண விசேஷங்களில் லயித்துப் போயிருந்த அவர்கள் இப்போது அவரைச் சந்தேகிக்கவோ, அல்லது சிறிதளவாவது அவருக்குக் கீழ்ப்படியாதிருக்கவோ, அறவே நாடவில்லை. அல்லாமலும், அவர்கள் எல்லாரின் மனமும் வரப்போகிற ஜிஹாதின் (மதப் போரின்) மீதே ஊன்றிப் போயிருந்தபடியால், சுல்தானைப் பற்றிய கவலை சற்றே கம்மி விட்டது.

அப்பால் அவரவரும் நாளை யுத்தத்தில் மிகவும் மும்முரமான நடவடிக்கைகளைப் புரிய வேண்டுமென்றும், இன்னம் பன்னிரண்டு நாட்களுக்குள் புனித மிக்க ரமலான் என்னும் நோன்புக்குரிய புண்ணிய மாதம் பிறப்பிக்கப்போவதால், அதற்குள்ளேயே எதிரிகளை முறியடித்துவிட வேண்டுமென்றும் கடுமையாகக் கட்டளையிட்டார் அரசியார். நசாராக்கள் தமீதாவிலிருந்து வரும் களைப்பால் சோர்ந்துபோய்க் காணப்படுவார்கள் ஆதலால், இத்தனை நாட்களாகப் புதிய ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிற முஸ்லிம்கள் சுலபமாக வென்றுவிட முடியுமென்றும் அவர் அழுத்திக் கூறினார்.

“எது எப்படிப் போனாலும், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உங்கள் கடமைகளை ஒழுங்குடன் நிறைவேற்றக் கட்டுப்பட்டிருக்கிறீர்கள் என்பதை என்றுமே மறந்து விடாதீர்கள். நமக்குப் பின்னே வரும் சந்ததியர்கள் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்து, மிஸ்ரின் ஸல்தனத் வீழ்ச்சியடைவதற்கு நாமே காரண கர்த்தாவாயிருந்தோம் என்னும் அபவாதத்தைச் சுமத்தி, உலகம் உள்ளளவும் நமக்குக் கறை உண்டுபண்ணா வண்ணம் செய்ய வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததே!” என்று வீரா வேசமாகப் பேசினார்.

அவ்வளவுடன் அந்த இரகசியக் கூட்டம் முடிந்தது.

அதற்குள் சூரியன் உச்சிக்கு வந்து விட்டான். ஷஜருத்துர் நேரே கிழக்கு வாயிலை நோக்கிச் சென்றார். சுல்தானின் மெய்காப்பாளராகிய பஹ்ரீ மம்லூக் ஹல்காக்கள் அந்தக் கூடாரத்தைச் சுற்றிலும் வழக்கப்படி அணிவகுத்துக் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். சுல்தானா அந்த மம்லூக்குகளை நோக்கி, எதிரிகள் சமீபித்து விட்டார்களென்னும் செய்தியை அறிவித்துவிட்டு, இனித்தான் அவர்கள் தங்கள் கடமையில் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டுமென்று உபதேசித்தார். தம்மையும் ருக்னுத்தீனையும் அன்றி, வேறெவர் சுல்தானைப் பார்க்க வந்தாலும் அடியோடு தடுத்துவிட வேண்டுமென்றும், மீறி உள்ளே நுழைய முற்பட்டால், உடனே கைது செய்து தம்மிடம் கொண்டுவர வேண்டுமென்றும் ஆக்ஞை பிறப்பித்தார்.

ஷஜருத்துர் கூடாரத்துள்ளே நுழைந்து பார்த்தார். சுல்தான் ஸாலிஹின் மூமிய்யா நல்ல தேஜஸுடனேயே இருக்கிறதென்பதைக் கண்டு, சற்று மனந் தேறினார். என்னெனின், பிரேதத்தைத் தைலமிட்டுப் பக்குவப் படுத்தும் முயற்சியில் இதுவே முதல் தடவையாதலால், எங்கே பக்குவமிழந்து பிரேதம் கெட்டுப் போய்விடுமோவென்ற ஐயம் அவருக்கு அதுவரை ஒரு சிறிது இருந்தே வந்தது. ஆனால், அம் மையித்தைப் பார்த்ததும் மனந் தேறினார். தைல மிட்டுச் சுமார் இருபத்து நான்கு மணி நேரம் கழிந்த பின்னரும் அவ் வுடலில் வீச்சமோ, வீக்கமோ, அல்லது வேறெவ் வகையான மாற்றமோ நாற்றமோ கிளம்பாமையால், அவர் பெரிதும் திருப்தியுற்றார்.

அயர்ச்சி மிகுதியால் ஹக்கீமும், ருக்னுத்தீனும், அலிகளும் தத்தம் ஸ்தானத்தில் இருந்தபடியே அக் கூடாரத்தில் உறங்கி வழிந்துகொண்டிருந்தனர். சுல்தானாவைக் கண்டதும் அவர்கள் அரண்டெழுந்தனர். இதற்கிடையில் பிற்பகல் போஜன வேளை வந்துற்றபடியால், சுல்தானுக்குரிய உணவு பதார்த்தங்களைச் சுமந்து கொண்டு அடிமை ஒருவன் அக் கூடாரத்தருகே நெருங்கினான். வெளியே காவலிருந்ந மம்லூக்குகள் அவ் வடிமையை அங்கேயே தடுத்து நிறுத்தி,      அரசிக்கு விஷயம் தெரிவித்தனர். ஷஜரின் கட்டளை பிறந்ததும் அங்கு நின்ற இரு அலிகளுள் ஒருவன் வெளிவந்து அவ்வுணவுத் தட்டை அடிமையிடமிருந்து வாங்கி வந்தான். பசியால் களைத்திருந்த ஹக்கீம் உட்பட எல்லாரும் அந்தப் போஜனத்தை வயிறார அருந்தி விட்டு, காலியான தட்டத்தைத் திருப்பி விட்டார்கள். அடுக்களை அடிமைகூட அந்த அவசரச் சட்டத்துக்கு விலக்கல்லவே!

நாடகத்தின் ஒவ்வோர் அங்கமும் இவ்வாறு மயிரிழையும் பிறழாது மிகத் திறமையுடனே நடிக்கப்பட்டு வந்தது.

அப்பால் சிறிது நேரம் ஷஜருத்துர் அந்தக் கூடாரத்துக்குள்ளேயே படுத்து இளைப்பாறிக் கொண்டார். வெளியே நின்ற அத்தனை காவலர்களும் சுல்தானுக்கும், சுல்தானாவுக்கும், படைத் தலைவருக்குமிடையே ஏதோ அந்தரங்கப் போர் முறைத் திட்டங்கள் பற்றிய வியவகாரங்கள் நடைபெறுவதாக நினைத்துக் கொண்டார்கள். இதற்கிடையில் அடிக்கடி, ஹக்கீம் கட்டளையிட்டதாகச் சொல்லி, அந்த அலிகள் இன்ன மருந்து வேண்டும், இன்ன தண்ணீர் வேண்டும், இன்ன வெந்நீர் வேண்டுமென்று வெளியில் இருந்தவர்களிடம் கட்டளை பிறப்பித்துக் கொண்டே இருந்ததற்கொப்ப, அவை யவையும் உடனுக்குடன் கொண்டு வரப்பட்டன.

பின்னர், சூரியாஸ்தமயத்துக்குச் சற்று முன்னர் ருக்னுத்தீன் மட்டும் வேகமாக வெளியே வந்தார். நேரே படைத் தொகுதிகள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று, நாளை விடியுமுன்னே காஹிராவுள் வந்துவிடக் கூடிய எதிரிகளை எப்படி எப்படித் தாக்க வேண்டுமென்னும் விவரத்தை அறிவித்தார். இவையெல்லாம் சுல்தானின் கட்டளையென்றும், அவர் எழுந்து வந்து நேரிலே உபதேசிக்க முடியாமையால் தம் மூலமாகச் சொல்லியனுப்பி இருக்கிறாரென்றும் அத்தனை படை வீரர்களையும் முற்றும் நம்பச் செய்தார். ருக்னுத்தீன் மீண்டும் கூடாரத்துள் வந்து நுழைந்த பின்னரே ஷஜருத்துர் வெளியேறினார். என்னெனின், தூரான்ஷா வந்து சேர்கிற வரையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த மூமிய்யாவின் பக்கத்திலே அவ்விருவருள் ஒருவர் மாறி மாறி இருக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டனர். ஹக்கீமையும் அலிகளையும் மட்டுமே எப்படி நம்புவது?

அல்லாமலும், ஷஜருத்துர் எடுத்துக் கொண்ட இன்னொரு முன்னேற்பாட்டையும் நாம் மறக்கலாகாது : எல்லா புர்ஜீ மம்லூக்குகளுமே அரண்மனைக்குள் ஒருவர் இல்லாமல் அத்தனை பேரும் நீலநதிக் கரையிலே அணிவகுத்திருக்க வேண்டுமென்று அவசரச் சட்டம் பிறப்பித்தார். ஷஜருத்துர் அமீர் தாவூதிடம் வளர்ந்த காரணத்தால் தங்கள் மீது அபிமானம் பூண்டு, யுத்தத்தில் தங்களுக்குச் சலிகை காட்டவே அவர் அப்படிக் கட்டளையிட்டாரென்று அவர்கள் கருதிக்கொண்டு, முற்ற முற்றக் கீழ்ப்படிந்து, நீல நதி தீரத்திலே வரிசையாய் நின்றார்கள். இந்த ஏற்பாட்டின்படி பஹ்ரீ மம்லூக்குகளுள் ஒரு சிலரேனும் சுல்தானின் கூடாரத்தண்டை அக் கிழக்கு வாயிலில் நின்றனர் ; புர்ஜீகளோ, அரண்மனைக்கு வெகு தூரத்திலே வெருட்டியடிக்கப்பட்டார்கள். ஷஜருத்துர்ரின் இந்தத் தந்திரத்தைச் சிறந்த ராஜதந்திர யுக்தியென்று செப்பலாமன்றோ?

ஷஜருத்துர் அந்தப்புரத்துள் நுழைந்தார். தமது பிரத்தியேகப் பள்ளியறையுள் புகுந்து தொழுகை விரிப்பை விரித்து, கிழக்குத் திசையை (கிப்லாவை) நோக்கித் தொழுது கொண்டிருந்தார். தொழுகை முடிந்ததும், குப்புற்று ஸுஜூதில் வீழ்ந்து இரு கையேந்தி, சிறு குழந்தையைப்போல விம்மி விம்மியழுதார்.

“ஏ இறைவா! யானோர் பேதை. இதுவரை என்னை நீ ஆளாக்கிய சோதனைகளெல்லாம் போதாவா? நீ எந்த மனிதன் மீதும் அவனால் சுமக்க முடியாத அவ்வளவு பெரிய சுமையைச் சுமத்துவதில்லை என்று நீயே நவில்கிறாய். எனினும் இப்போது நீ என்மீது சுமத்தியுள்ள மாபெரும் பளுவை இன்னம் சற்றே கனப்படுத்துவையாயின், அடியேன் தாங்குவனோ? ஏ ஆண்டவா! தூரான்ஷா இங்கு வந்து சேர்கிற வரையில் யான் இந்த நாடகத்தை எப்படி வெற்றியுடன் நடத்தி முடிக்கப் போகிறேன்! இந்த அமானத்துப் பொருளாகிய ஐயூபிகளின் ஸல்தனத்தை யான் எப்படிக் காப்பாற்றப் போகிறேன்!…

“நசாராக்களை என்னால் எதிர்க்க முடியாதென்று அஞ்சி யான் என் கணவரை ஷாமிலிருந்து இங்குக் கொணர்ந்தேனே! அவரை நீ உன்னுடன் அழைத்துக் கொண்டாயே! வரப்போகிற சோதனைகளுக்கு யான் மட்டுமே இரையாக வேண்டு மென்பதற்காகவோ இம் மாதிரியான திருவிளையாடல்களை எல்லாம் நீ புரிகின்றாய்? ஏழையாகவும், அபலையாகவும், அனாதையாகவும், அடிமையாகவும் இருந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை இக் கொடுஞ் சோதனைகளுக்கெல்லாம் ஆளாக்கவோ இந்தச் சகிக்கொணா உபத்திரவமிக்க ஸுல்தானாவாக உயர்த்தினாய்? அன்று வீரர் ஸலாஹுத்தீன் நின்ற ஸ்தானத்திலா நீ என்னைக் கொண்டுபோய் நிறுத்த நாடியிருக்கின்றாய்? மூன்றாவது சிலுவை யுத்தத்தில் அவர் பெற்ற பெருவெற்றியை இந்த எட்டாம் யுத்தத்தில் யான் பெற்றுக் காட்ட வேண்டுமென்று நீ திருவுளங் கொண்டிருக்கிறாயோ?…

“இத்தகைய கடுஞ் சுமையையும், பெருந்துயரையும் யான் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா என்னை இத்தனை நாட்களாக வைத்திருந்தாய்? நீ இன்னம் என்னென்னவெல்லாம் நாடியிருக்கிறாயோ? வரப்போகிற சிலுவை யுத்தத்தில் தோல்வியை உண்டுபண்ணி, அத்தனை அபவாதத்துக்கும் என்னையே ஊழியூழிக் காலம்வரை ஆளாக்க எண்ணியிருக்கிறாயா, அல்லது இங்குள்ள சகல மூமின்களின் பொருட்டாகவாவது வெற்றியளிக்கப் போகிறாயா? ஏ தயாநிதி! நின் சக்தி, வன்மை மிக்கது. நின் திருவிளையாடல் விசித்திரமானது. இவ் வபலை சிந்தும் கண்ணீரைக் கண்டேனும் உனதுள்ளம் உருகாதா? நின் சக்திக்கு முன்னால் ஏழையேன் எம்மாத்திரம்? சற்றே கருணை கூர்வாய்! அருளாளனே, அன்புடையோனே, ஞானவானே, நீதிமானே, வன்மை மிக்கோனே கீர்த்தி பிரதாபனே! என்னிடமுள்ள அமானத்துப் பண்டமாகிய இந்த ஸல்தனத்தைக் காப்பாற்றி வைக்க வேண்டியவன் நீ யன்றோ? உன்னையன்றி அணுவும் அசையாதன்றோ?….

இன்று எகிப்து இழக்கப்பட்டால், இஸ்லாமிய உலகினுக்கே பெரு நஷ்டமன்றோ? ஏ, கிருபையுள்ளவனே! மீண்டும் யான் குறையிரக்கிறேன். என் மனத்துக்குச் சாந்தியை அளிப்பாயாக! என் நாடகத்தில் திறம்பட நடிக்க எனக்கு நீ உதவி புரிவாயாக!  என் மைந்தனை விரைவிலே இங்குக் கொணர்ந்து சேர்ப்பாயாக! எங்களை (எல்லாரையும்) நீயே காப்பாற்றுவாய்! – முன்னம் நீ பிர்அவ்னுக்கும், யானைப் படையினர்க்கும், குறைஷிக் குப்பார்களுக்கும் உண்டு பண்ணிய அதோகதியை இப்போதும் இக் கொடிய யாஜூஜ் மாஜூஜ்மீது நீ இறக்கமாட்டாயா? ஏ கருணாநிதி! நின்னையன்றி வேறு சக்தியேனும் சாமர்த்தியமேனும் மிக்கவர் எவரிருக்கிறார்? ஏ ரக்ஷகா! நீயே ரக்ஷிப்பாய்!”

ஷஜருத்துர்ரின் கனிந்துருகிய உள்ளத்தினின்று பொங்கி வழிந்த கண்ணீர்த்துளிகள் வெள்ளமாய்ப் பெருகித் தொழுகை முஸல்லாவை நனைத்துவிட்டன. விம்மிய வதனத்துடனும், வீங்கிய இதழ்களுடனும், நெகிழ்ந்த கூந்தலுடனும், ஒளியிழந்த கண்களுடனும் ஷஜருத்துர் இரு கைகளையும் ஏந்திய வண்ணம் தலை நிமிர்த்திக்கொண்டிருக்கும் போதே, அரண்மனை மாடத்து முரசு கட்டிலிலிருந்த பெரு நகாரா வானத்தைப் பிளக்கும் பேரொலியுடன் திடீரென்று முழங்க ஆரம்பித்தது. அந் நகாராவின் ‘டண் டண்’ என்னும் ஒவ்வோர் அதிர்ச்சியும் சுல்தானாவின் நெஞ்சிலே ‘கிண் கிண் ’ என்று மோதிற்று.

வலித்திழுத்துக் கட்டப்பட்ட அத் தோல் நகாரா மீது முரட்டு கறுப்பினத்தவர் குண்டாந் தடியால் முழுப் பலங் கொண்டு மோதியதால் எழுந்த முழக்க வோசை காத தூரம் வரை காஹிராவாசிகளின் உள்ளத் துள்ளே ‘ஜிவ் ஜிவ்’ என்னும் உணர்ச்சி மிக்க அதிர்ச்சியை ஊட்டிற்று.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 38>> <<அத்தியாயம் 40>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment