ஷஜருத்துர் அமீர் தாவூதின் அகால மரணத்துக்குப் பின்னே சொல்லொணாச் சஞ்சலத்துக்கு உள்ளாயினாள். கருத்துத் தெரியுமுன்னே தாயைப் பறிகொடுத்து,
பிழைக்க வந்த வழியில் தந்தையை இழந்து, அன்னிய கள்வனொருவனால் வளர்க்கப்பட்டு, அமீர் தாவூதிடம் இறுதியில் அடிமையாக விற்கப்பட்டவள், இந்த எஜமானரையும் இறுதியில் இழந்து விட்டால், அவள் கதி என்னாவது? அவளுக்கு எவ்வளவோ மனச் சாந்தியை எப்போதும் ஊட்டிவந்தவரும், தந்தையினும் மிகுந்த உண்மையுடன் ஆதரித்து வந்தவரும், அரசாங்கத் துறையில் முன்னணியில் நின்றவரும், ஷஜருக்குச் சகலவித அரசத் தந்திரங்களையும் உபதேசித்தவருமாகிய தாவூதைப் பறிகொடுத்த அவள் பலநாட்கள்வரை அப்பெரியவரை நினைத்து நினைத்துக் கண்ணீர் பெருக்கிக்கொண்டேயிருந்தாள்.
அவர் மாண்ட பின்னர்த்தான் அவளுக்குப் பழைய கவலைகளெல்லாம் ஒருங்கு திரண்டுவந்து நெஞ்சத்தை அழுத்திப் பிளந்தன. அன்றுதான் அவளுக்கு எல்லா உறவினரும் ஏககாலத்தில் மரணமடைந்ததே போன்ற பயங்கர உணர்ச்சி பிறந்தது. நெஞ்சைக் குமுறிக்கொண்டு வந்த அவலக் கவலையலைகள் அவளுடைய கண்களிலிருந்து துக்கத் துளிகளை அள்ளிப் பொழிந்தன. பச்சிளங் குழந்தையைப்போல் தேம்பிதேம்பி அழுதாள்.
எதை நினைத்துக்கொண்டாலும், அவளுக்கு அமீரின் ஞாபகமே சதா கண் முன்வந்து நின்றது. திக்கற்ற அனாதையாக்கி, பரிதபிக்கத்தக்க அபலையாகத் தன்னைச் செய்துவிட்ட ஆண்டவனின் விதியை எண்ணி வருந்தினாள். பிறந்ததுமுதல் அடுக்கடுக்கான இடுக்கண்களை அனுபவிக்கவென்றே தன்னை அல்லாஹுத் தஆலா படைத்திட்டான் போலுமென்று அவள் மனங்கசந்தாள். ஸீனாய்ப் பாலைவனத்தில் கழுதையின்மீது வந்தாலும், காஹிராவின் தரகர் யூசுபி்ன் இல்லத்தில் வளர்ந்தாலும், அமீரெ முஅல்லத்தின் மாளிகையுள் சொகுசாய் வசித்தாலும் தன் தலைவிதி இவ்வளவு துக்கத்தையும் துயரத்தையும் மாறிமாறித் தந்துகொண்டுதான் இருக்க வேண்டுமோவென்று அவள் தன்னையே நொந்துகொண்டாள். பழைய கண்ணீர் வழிந்த கன்னங்கள் உலருமுன்னே, புதிய கண்ணீர்மாரி இழிந்துவந்து, அவளது வதனத்தைப் பாழ்படுத்திற்று. சோகமே உருவான அவள் முகம் நாளடைவில் வீங்கவும் துவங்கி விட்டது. தனக்கிட்ட விதியைப்போல், தன் கொடும் பகைவருக்குங்கூட ஆண்டவன் இத்தகைய கடுஞ்சோதனைகளை உண்டுபண்ணி வைக்கக்கூடாதென்று அவள் நினைத்துக் கொண்டாள். எல்லாம் இறைவன் நிர்ணயித்த விதியின் விளையாட்டுக்களேயல்லவா?
பிரம்மாண்டமான பெருமாளிகையில் அவள் ஏகாந்தமாயிருந்தது ஒரு பொல்லாத தனிச் சிறைவாசமே போலத்தானிருந்தது. காலஞ்சென்ற அமீரின் அங்கக் காவலனாயிருந்த அந்த ஒரே காவலாளியைத் தவிர்த்து அம் மாளிகையில் வேறெவருமேயில்லை. அந்தக் காவலாளியும் தன் பழைய எஜமானர்மீது வைத்திருந்த மெய் விசுவாசத்தின் அறிகுறியாக அவளை மிகவும் பாசத்துடன் கவனித்து வந்தான். பல சந்தர்ப்பங்களில் அவனே அவளுக்கு மட்டற்ற ஆறுதல் மொழிகளைப் பொழிந்துவந்தான். அடுக்களை வேலைகளைச் செய்யவாவது ஒருத்தி வேண்டுமே என்று பெரிய கவலைகொண்ட அவன் தன் முயற்சியால் தானே ஒரு யோக்கியமான சமையற்காரியைக் கொண்டுவந்து வேலைக்கு அமர்த்தினான். ஷஜருத்துர்ருக்கு மட்டும் நாளாக ஆகக் கவலை அதிகரித்து வந்ததேயொழிய, துக்கம் தணிகிறபாடாயில்லை. இப்படியே நிலைமையிருந்தால், தன் எதிர்காலம் என்னாகுமென்பதைக்கூட அவளால் சிந்திக்க இயலவில்லை. அப்படிச் சிந்தித்தாலும், அது மிக்க இருள் சூழ்ந்ததாகவும், அச்சமூட்டும் நடுக்கத்தையும் திடுக்கத்தையும் ஊட்டவல்லதாகவுமே இருந்தது. நிச்சயமில்லாத வாழ்க்கையும், இன்னம் என்னென்ன கஷ்டங்களைத் தான் அனுபவிக்கவேண்டி வருமோ என்ற அச்சங்கலந்த எண்ணங்களும் அவளைத் தற்கொலை புரிந்து கொள்ளவும் தூண்டிவிட்டன. ஆனால், தன் உயிரை எவராவது வேண்டுமேன்றே போக்கிக்கொண்டால், அவருக்கு ஆண்டவன் எத்தகைய கொடிய நோவுண்ட தண்டனைகளைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறானென்ற நபிமொழி நினைவில் வந்து அவளுடைய அந்தத் தற்கொலை எண்ணத்தைத் தடுத்து நிறுத்தியது.
இத் துயர்மிகுந்த துன்ப உலகத்தில் இன்னம் எத்தனை நாட்கள் தனித்துக்கிடந்து உழல்வது? செல்வம் இருந்தென்ன? செல்வாக்கு இருந்தென்ன? நல்கதி இல்லையேல், என்ன இருந்துதான் என்ன? இன்னம் என்ன என்ன விதமான பொல்லாத விதிகளையெல்லாம் அனுபவிக்கவேண்டி வருமோ? பின்னர் வேறு விமோசனந்தான் என்ன? அவள் மண்டை கிறுகிறுத்தது. சஞ்சலங் கலந்த அவளை அஞ்சேலென்று ஆதரிக்க எவரேயுள்ளனர் இப் பாருலகில்? அவள் இருதயம் விம்மிவிம்மி வடிந்தது.
ஒருநாள் முற்பகலில் அவள் தன் இடது புறங்கையில் கன்னத்தை ஊன்றிக்கொண்டு மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துகிடந்த போது, ஓர் அரசாங்க அதிகாரி அங்குவந்து தோன்றினார். வந்தவர் மிடுக்காக அந்தப் பெண்ணருகில் சென்று நின்றார். அவள் தலையையுயர்த்தி அவரைப் பார்த்தாள். அன்னியனொருவன் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்து, அம்மாளிகையின் அறைக்குள்ளே தன்னெதிரில் வந்ததைக் கண்டு, அவள் வெருண்டுவிட்டாள்.
“நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்? உம்மை யார் இங்கே உள்ளே வர அனுமதித்தது?” என்று துயரம்தோய்ந்த குரலில் கோபாக்கினி வீச இக் கேள்விகள் அவள் வாயினின்று பிறந்தன.
“ஆட்சி புரியும் சுல்தானின் ஆக்ஞைப்படி நீங்கள் சிறை செய்யப்பட வேண்டும்!” – இந்தப் பதிலில் வந்தவரின் மிடுக்கான தொனியும், அரசகட்டளையை மெய்ப்பிக்கும் ஒலியும் சேர்ந்து பிறந்தன.
“ஆட்சி புரியும் சுல்தானின் ஆக்ஞையா? நான் சிறை செய்யப்பட வேண்டுமா?”
“ஆம், அம்மணி! அதுவும், இப்போதே கைது செய்யப்பட வேண்டும்!”
“நான் என்ன குற்றம் இழைத்தேன்? எவருக்கு இழைத்தேன்? நான் ஏன் கைது செய்யப்பட வேண்டும்?”
“அம்மணி! சுல்தானைத் தாங்கள் கேட்கவேண்டிய இக்கேள்விகளை என்னிடம் கேட்பதில் என்ன பிரயோஜனம்? அவரிட்ட கட்டளைகளை நிறைவேற்றவே நான் இங்கு வந்திருக்கிறேன். ஆனால், அவர் ஏன் இக்கட்டளை இட்டாரென்பது எனக்குத் தெரியாது….சரி, நேரமாகிறது. புறப்படுங்கள்!”
அவளுடைய உள்ளம் எத்துணைக் குழம்பிக் கூழாய்ப் போய்விட்டதென்பதை அவளது தோற்றம் நன்கு பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
“எங்கே புறப்படவேண்டும்? என்ன சொல்லுகிறீர் என்பது எனக்கொன்றும் புலனாகவில்லையே!”
“இந்த மிஸ்ரிலுள்ள எல்லா அமீர்களும் முன்னமே கைது செய்யபட்டுச் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப்பட்டுவிட்டனர். அம்மணி! தாங்களும் ஓர் அமீரின் ஒரே அடிமையாகவும், அவருக்கு மகள் இருந்தால் எந்த அந்தஸ்தில் இருப்பாளோ அந்த அந்தஸ்தில் இருப்பதாலும், தங்களையும் கைது செய்ய வேண்டுமென்றுதான் மேலிடத்து உத்தரவு கடுமையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாங்கள் ஆணாயிருந்திருந்தால், நான் இவ்வளவுகூடப் பேசியிருக்க மாட்டேன். முன்னரே கைகளில் விலங்கைப் பூட்டி, …..”
“போதும், நிறுத்தும்! நான் விளங்கிக்கொண்டேன். சுல்தானின் கட்டளைக்கு மாறுபேசும் பேர்வழி நானல்ல. இதோ வருகிறேன். எனக்கொன்றும் விலங்கிடத் தேவையில்லை. நீர் முன்னே செல்லும்; நான் பின்னே தொடர்கிறேன்!”
அவளுடைய வாயினின்று இவ் வார்த்தைகள் எவ்வளவு வீராவேசத்துடன் பிறந்தனவோ, அவ்வளவு வீறாப்புடனே எழுந்தாள். அலங்கோலமாய்க் கிடந்த தன் கூந்தலைமட்டும் ஒதுக்கிவிட்டுக் கொண்டு, உடைகள் எதையும் மாற்றிக்கொள்ளாமல் அமைதியுடனும் சாந்தத்துடனும் சட்டென்று புறப்பட்டு விட்டாள்.
அவளைச் சிறைசெய்ய வந்த அதிகாரி இந்த எதிர்பாராத வீரத்தனத்தைக் கண்டு, ஆச்சரியமுற்றுவிட்டார். என்னெனின், அவளை இவ்வளவு இலேசாகக் கைதுசெய்ய முடியுமென்று அவர் நினைத்து வரவில்லை. தக்க படையினர் சிலரின் பந்தோபஸ்துடனேயே அவர் அம் மாளிகைக்கு வந்திருந்தார். அக் காவலர்களை மாளிகையின் மூலைக்கொருவராக நிறுத்தி வைத்துவிட்டு, அதன் பின்னரேதான் ஷஜருத்துர்ரின் அறைக்குள்ளே அவர் நுழைந்தார். அவள் எதிர்ப்பாள், அல்லது அலறுவாள், அல்லது ஓடிப்போக முயலுவாள் என்று அவர் எதிர்பார்த்த வகையில் முதல் ஏமாற்றத்தைப் பெற்றுக் கொண்டார். அவளுக்கு இடுக்குக்கொடுக்கக் கூடாதென்பதற்காகவே முதலில் மிடுக்காகப் பேசினார். அவள் முதலில் கலவரமுற்றுக் கலங்கிவிட்டாலும், நொடிப்பொழுதில் அவள் மனந்தேறிக் கொஞ்சமும் அஞ்சாமல் துணிந்தெழுந்ததைக் கண்டு இரண்டாவது ஏமாற்றத்தைப் பெற்றுக்கொண்டார்.
அரண்மனையின் அந்தப்புரத்தில் சுல்தான் ஸாலிஹ் தம் மனைவி மூனிஸ்ஸாவுடனே தனித்திருந்த சமயத்தில் ஷஜருத்துர் அவர் முன்பினில் கொண்டுபோய் நிறுத்தப்பட்டாள். குனிந்த சிரத்துடன் பவ்யமாக நின்ற அவளை ஸாலிஹ் நிமிர்ந்து நோக்கினார்.
“இந்தப் பெண் யார்?” என்று அவர் அவளை அங்குக் கொணர்ந்து நிறுத்திய பெண்சேவகியைப் பார்த்துக் கேட்டார்.
“யா மலிக்கல்முல்க்! இவள்தான் அந்த ஷஜருத்துர்ரென்னும் பெண்மணி; அமீரெ முஅல்லம் தாவூத் மர்ஹூம் வாங்கி வளர்த்த பெண்ணடிமை. அந்த அமீரின் மரணத்துக்குப்பின் இவ் வடிமைப் பெண்தான் அவருடைய சொத்து சுதந்திரங்களையும் வீடுவாசல்களையும் அனுபவித்து வருகிறவள். எல்லா அமீர்களையும் ஒருவர் விடாமல் கைதுசெய்ய வேண்டுமென்று தாங்கள் பிறப்பித்த ஆக்ஞைக்கிணங்க, அந்த அமீர் தாவூதின் இல்லத்திலிருந்து இந்த ஒரே பெண்மணியும் கைதுசெய்யப்பட்டுத் தங்கள் முன்பினில் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறாள்.”
சுல்தான் வதனத்தில் வியப்புக்குறி தோன்றிற்று.
“நாம் அமீர்களை மட்டுமே சிறைசெய்யச் சொன்னோம். அவர்கள்வீட்டுப் பெண்மணிகளைக் கைதுசெய்யச் சொல்லவில்லையே? இதென்ன அக்கிரமம்?” ஸாலிஹின் குரலில் அரசர்க்குரிய ஆத்திரமும் கடுங்கோபமும் தொனித்தன. ஷஜருத்துர்ருடன் வந்த அப்பெண் சேவகி நடுநடுங்கிப் போனாள்.
“ஹுஜூர்! நம் வஜீரின் அபிப்பிராயத்துக்கு இணங்கவே இப் பெண்மணி கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தாங்கள் ஆமோதிக்கவில்லையெனின், இக்கணமே சகலவித மரியாதைகளுடனும் இவ் வணங்கைத் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். தங்கள் விருப்பத்துக்கு மாற்றமான இந் நடத்தை நிகழ்ந்துவிட்டதற்கு மன்னியுங்கள்!” என்று கூறி, அச் சேவகி கலங்கிவிட்டாள்.
சுல்தான் கவலையுடன் ஷஜரைக் கூர்ந்து நோக்கினார்.
“ஏ நங்காய்! நீ யார்? உனக்கு அந்த அமீர் மாளிகையில் என்ன வேலை?” என்று மிருதுவான கேள்விகளை மெல்ல விடுத்தார்.
ஷஜருத்துர் இதுவரை பூரண மௌனத்துடன் சித்திரப் பாவைபோல் நின்றிருந்தவள் மெல்லிய குரலில் மிகுந்த மரியாதையுடனே, “யா ஸாஹிபல் ஜலாலில் மலிக்! இந்தத் துரதிருஷ்டம் பிடித்த அடிமையை ‘ஷஜருத்துர்’ரென்று அழைப்பார்கள். பிறந்ததுமுதல் இன்பத்தையன்றித் துன்பத்தையே அனுபவித்து வந்த யான் அந்தக் கண்ணியமிக்க புண்ணிய சீலராகிய அமீர் தாவூத் அவர்களால் விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையாவேன். இப்போது தங்கள் முன்பினில் கைதியாகக் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறேன். குற்றமேதும் இழைத்தறியாத இவ்வடியேனை ஏன் இங்குக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறார்களென்பதை யானறியேன்,” என்று விசுவாசத்துடனே பைய மொழிந்து நின்றாள்.
தம் காதுகளை நம்பமுடியாத வண்ணம் பொழிந்த அவ்வினிய மொழிகளைக் கேட்டு, ஸாலிஹ் மெய்ம்மறந்திருக்கையில், அவருடைய பத்தினி மூனிஸ்ஸா தம் வியப்பின் பெருக்கத்தால், “ஸுப்ஹானல்லாஹ்! என்ன மதுரமான கிள்ளை மொழிகள்!” என்று தம்மையறியாமலே கூறினார்.
“ஷஜருத்துர்! நீ அந்த அமீரிடம் பெண்ணடிமையாக விற்கப்படு முன்பு எவரால் வளர்க்கப்பட்டாய்?” என்று சுல்தான் இனிது கேட்டார்.
“யா சுல்தானல் மலிக்! இந் நகரிலுள்ள வர்த்தகரொருவர் சிறுமியாயிருந்த என்னை அனாதையாகக் கண்டபொழுது, என்மீது கருணைகொண்டு வளர்த்துவந்தார். குழந்தை பெறவேயில்லையென்ற கவலையால் வாடிய அமீருக்கு யான் விற்கப்பட்டேன். அங்கே யான் இதுவரை எல்லாவித சுகபோகத்தையுமே அனுபவித்துவந்தேன். ஆனால், அது நீடித்து நிற்கவில்லை. இதுதான் என் தலைவிதியின் சுருக்கமாகும்.”
சிரங்குனிந்து நின்ற அவளுடைய கண்களிலிருந்து முத்தைப்போன்ற நீர்த்திவலைகள் கிடுகிடுவென்று உதிர்ந்ததை அரசர் கவனித்தார். அவர் மனம் குழைந்துவிட்டது. பெண்ணென்றால், பேயும் மனம் இரங்கிவிடுமன்றோ?
“ஷஜருத்துர்! ஏழையாகிய உன்னை வருத்தவேண்டும் என்னும் நோக்கத்துடனே உன்னைக் கைது செய்யச் சொல்லவில்லை. ராஜதுரோகக் குற்றம் இழைக்கிற அமீர்களை மட்டுமே நான் சிறையிடச் சொன்னேன். என் கட்டளையைத் தவறாய் விபரீத அர்த்தப்படுத்திய வஜீரின்மீது நான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துக்கொள்கிறேன். அபலையாகிய உன்னை அலைக்கழிக்கச் செய்தவரை உடனே தக்க தண்டனைக்கு உள்ளாக்குகிறேன். நீ எவர்மீதும் கோபியாமலும் வருத்தங்கொளாமலும் இப்போதே பத்திரமாக உன் இருப்பிடத்துக்குப் போய்ச்சேர். இனி உனக்கு என்ன சங்கடம் விளைவதாயிருப்பினும், இங்கே நேரில் வந்து எம்மிடம் கூறிக்கொள். நாம் ஆட்சி செலுத்துகிற வரையில் உன்னை எவருமே யாதொருவிதக் கஷ்டத்துக்கும் ஆளாக்கத் துணியமாட்டார்.”
இதைக் கேட்டு, ஒன்றும் பேசாமல் அவள் சிலையைப் போலே நின்றுகொண்டிருந்தாள். அப் பெண்ணின் பரிதாப நிலையைக் கண்டு பேய்மட்டும் மனமிரங்கியதென்று நினையாதீர்கள். வச்சிரம் போன்ற கடியமனம் படைக்கப்பெற்ற ஸாலிஹ்கூட மெழுகெனவுருகிய மனத்துடன் அவளை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தார்.
எவ்வளவோ முயன்றும், அடக்கமுடியாத காரணத்தால், பொங்கியெழுந்த அவளுடைய துக்கம் மீறிக்கொண்டு வெளிவந்து மென்னியை நசுக்கி, அவளை மயக்கமுறச் செய்துவிட்டது. வேர் பறிக்கப்பட்ட பருமரம் நின்றது நிற்கத் திடீரென்று சாய்ந்து வீழ்வதைப்போல் ஷஜருத்துர் அங்கேயே தொப்பென்று மல்லாந்து வீழ்ந்துவிட்டாள்.
<<அத்தியாயம் 19>> <<அத்தியாயம் 21>>