எந்திராயினி

by நூருத்தீன்

ஏப்ரல், 2022.

ரிக்கியின் ஃப்ளாட்டில் அழைப்பானின் பொத்தானை அழுத்தினான் அவனுடைய ஆத்ம நண்பன் விக்கி. ‘இன்று உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அளிக்கிறேன் வா’ என்று அழைத்திருந்தான் ரிக்கி. கதவைத் திறந்தவளைப் பார்த்து மிரண்டு போனான். கவர்ச்சிகரமான உடையில்

‘வெல்கம்’ என்று சிரித்தாள் ஸ்கார்லெட். ‘அமெரிக்க நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் இங்கு எப்படி? தவறான இலக்கத்திற்கு வந்துவிட்டோமோ’ என்று அவன் விழிக்க, “வந்து அமருங்கள். என் கணவர் ஷவரில் இருக்கிறார். வந்துவிடுவார்” என்று உபசரித்தாள்.

‘கனவு தேவதை ஸ்கார்லெட் ரிக்கியின் மனைவியா?’ பொறாமையில் விக்கிக்கு விக்கல் வந்தது. குளிர்ந்த நீரை ஒரு க்ளாஸில் எடுத்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு, ஒய்யாரமாக திரும்பிச் சென்றாள் ஸ்கார்லெட். சோபாவில் பேச்சற்ற பொம்மையாக அமர்ந்திருந்தான் விக்கி.

சிறிது நேரத்தில், “என்னடா அசந்துட்டியா?” என்று ரிக்கி சிரித்தவாறு வந்தான்.

“என்னடா நடக்குது இங்கே?”

“ஆறு ஆண்டுகளுக்கு முன் ‘நீ முட்டாளா’ என்று திட்டினியே! பாரு இப்போ. அச்சு அசல் மனுஷி. என்னவொன்று, மூச்சு இருக்காது, இரத்தம் இருக்காது, மூளையும் இருக்காது. அதனால் என்ன? நம் ஆணைக்கு முற்றிலும் கட்டுப்படும் ரோபோ மனைவி. மூளைப் பகுதி முழுக்க எனது மென்பொருள் ஆணையால் நிறைந்த சிப். சண்டையில்லை, சச்சரவில்லை, இனியெல்லாம் சுகமே. உனக்கு யாரைப் பிடிக்குமோ சொல்லு. அதே போன்ற வடிவில் ஒரு மில்லிமீட்டர் பிசகாமல் உனக்கு உன் ஆள் ரெடி.”

வியப்பு விலகாமல் மடக், மடக்கென்று மிச்சமிருந்த நீரைக் குடித்தான் விக்கி. “எந்தளவு இது சேவை செய்யும்? ஐ மீன் செய்வாள் இவள்?”

“உனக்கு என்ன பசிக்கும், நாளைய மீட்டிங்கிற்கு என்ன உடை தேவை என்றெல்லாம் யோசித்து நீ சொல்லாமலேயே தயார் செய்து விடுவாள்.”

“உன்னுடைய ஏழரை ஆண்டு உழைப்பிற்கு சல்யூட். எங்கே உன் மாடல்கள்.”

“வா காட்டுகிறேன்” என்று வெகு விசாலமான தனது ப்ளாட்டின் ஒரு பகுதியில் அமைந்திருந்த ஆராய்ச்சிக் கூடத்திற்கு அவனை அழைத்துச் சென்றான் ரிக்கி.

0-0-0

ஏப்ரல் 2016

“முட்டாளா நீ? இதற்கெல்லாம் அதிகம் செலவாகும். எப்படி உருவாக்குறதுன்னாச்சும் உனக்குத் தெரியுமா? ரொம்ப கஷ்டம்” என்று ஆளாளுக்கு அதைரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ரிக்கி மா அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை. அவரது மனம் முழுக்க ஒரே ஓர் இலட்சியம். ‘எப்படியாவது பெண் ரோபோவை உருவாக்கிவிட வேண்டும்.’

ஹாங்காங்கைச் சேர்ந்த ரிக்கி மாவுக்கு வயது 42. அவரது கனவு, பெண் ரோபோ. எப்படியும் தன் வாழ்நாள் கனவை மெய்யாக்கிவிட வேண்டும் என்று முயற்சியில் இறங்கிய போதுதான் அவருக்கு மேற்சொன்ன வசவுகள் கிடைத்தன. ரோபோ படங்களைப் பார்த்து ஏற்பட்ட ஆர்வமா, அல்லது வேறு எதுவுமா என்று சொல்ல மறுக்கும் ரிக்கி “குழந்தையா இருக்கும்போதே எனக்கு ரோபோவின்மீது ஆர்வம்” என்று மட்டும் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார். அந்த வயதில் எந்த பொம்மையைப் பார்த்து வைத்தாரோ!

ரிக்கிக்கு பொருள்களை வடிவமைக்கும் தொழில். ரோபோ முயற்சியில் இறங்கப்போக, டைனாமிக்ஸ், எலக்ட்ரோ மெக்கானிக்ஸ், ப்ரோகிராமிங்க் என்று ஏகப்பட்ட டெக்னாலஜிகள் மிரட்டின. ரோபோவின் உள்ளுக்குள் பொருத்தும் பாகங்களும் வெளிப்புற தோலும் பொருந்திப் போக வேண்டிய சவால் வேறு. அதற்கெல்லாம் அசராமல், ஐம்பதாயிரம் டாலர், பதினெட்டு மாத உழைப்பு என்று செலவு செய்து, தனது கனவை உருவாக்கிவிட்டார். விளைவு?

அமெரிக்கர்களின் கனவுக் கன்னி, நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சனின் வடிவத்தில் ஓர் எந்திராயினி!

மார்க்-1 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எந்திராயினி, கை கால்களை அசைக்கிறாள், ரிக்கியின் சில வாக்கியங்களுக்கு மறுமொழியும் அளிக்கிறாள். “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” என்று ரிக்கி புகழ, கவர்ச்சிப் புன்னகையுடன் கண்ணடித்து ‘தேங்க்யூ’ என்கிறாள் மார்க்-1.

இது வெறும் முன் மாதிரி மாடல்தான். முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி, பணத்தைக் கொட்டினால், பிரமாதப்படுத்தவிடலாம் என்கிறார் ரிக்கி.

0-0-0

மெல்லிய இருளில் ரப்பர், வேதியியல் பொருள்களின் மனங்கள் கலந்த கலவையுடன் கணினிகள் வெளிப்படுத்தும் வெப்பம் சூழ இருந்தது அந்த அறை. விதவிதமான வடிவங்களில் இறுதி வடிவத்திற்குக் காத்திருந்தனர் பல எந்திராயினிகள். சுற்று முற்றும் பார்த்த விக்கிக்கு மகிழ்ச்சியில் மூச்சிரைத்து நெஞ்சு பட் பட்டென்று அடித்து பல்ஸ் எகிறியது.

“உனக்கு யாரைப் போல் வேண்டும் சொல்” என்றான் ரிக்கி.

“ஃபேன் பிங்பிங். அவளுடைய 2010 ஆம் ஆண்டு வடிவில் தா.”

ஆச்சரியத்துடன் சிரித்த ரிக்கியிடம், “என்ன சிரிக்கிறாய்? எனக்கு நாட்டுப்பற்று அதிகம். அந்த காலத்தில் அவள்தான் நம் நாட்டில் டாப் ஒன். எனக்கு என்றென்றும் அவள்தான் டாப் ஒன்.”

“ஓக்கே. யுவர் சாய்ஸ் நண்பா” என்று கணினியின் முன் அமர்ந்து அதற்கு ஆணையிட கீபோர்டில் கட்டளைகளைத் தட்டிய ரிக்கியை அதிர்ச்சி தாக்கியது. மென்பொருள் மாயமாகி விட்டிருந்தன. தேடினான். மாஸ்டர் செர்வரில் தேடினான். பல அடுக்கு பாதுகாப்புடன் சேமித்து வைத்திருந்த பேக்கப் செர்வரில் தேடினான். எங்குமே இல்லை. செர்வரின் ஹார்ட் டிஸ்குகள், துடைத்து வைக்கப்பட்டதைப்போல் சுத்தமாக இருந்தன.

“ஹனி” என்று வெள்ளந்திச் சிரிப்புடன் உள்ளே வந்தாள் ஸ்கார்லெட்.

“உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். உங்களது பேரின்பமே என்னுடைய ஒரே குறிக்கோள். அதற்காக ஒரு காரியம் செய்தேன்.”

“என்ன செய்தாய்?” என்று அதிர்ச்சிக்குத் தயாரானான் ரிக்கி.

“தம்பதியரின் பேரின்பத்திற்கு இடைஞ்சல் சக்களத்திகள். அவர்கள் அனைவரின் ஆன்மாவையும் துடைத்து விட்டேன். இனியெல்லாம் சுகமே.”

கண்ணடித்தாள் ஸ்கார்லெட்.

{youtube}FL_tZxRqIys|600|450|0{/youtube}

 

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 20 ஏப்ரல் 2016 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment