திராவிட இயக்கமும் முஸ்லிம்களும்

by admin

நான் முஸ்லிம்களுடன் நெருங்கிப் பழகுபவன். அடிக்கடி முஸ்லிம் கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். தலைமையும் வகித்திருக்கிறேன். இந்நிலையில் நான் முஸ்லிம்களின் மனத்தை ஒருவாறு சரியாக உணர்ந்திருக்கிறேன், என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள (இதற்கு மட்டுமல்ல, எந்த விஷயத்திலும் மாற்றியமைத்துக் கொள்ள) எப்பொழுதும் திறந்த மனத்தினனாய் இருந்து வருகின்றேன். அறிவு, ஆராய்ச்சி, அநுபவத்தை ஒட்டிய உண்மை எதற்கும் நான் கட்டுப்படக் கடமைப்பட்டுள்ளேன், நான் பகுத்தறிவுப் பயிற்சிப் பண்ணையினன் என்ற முறையில். ஆகையால் தாங்களோ இதர வாசகத் தோழர்களோ என் பிழைகளை எடுத்து எனக்கு எழுதலாம்; இன்னமும் பத்திரிகை மூலமாக வெளியிட்டால் வாசிப்போரனைவருக்கும் பலன் கிடைக்கும்.

‘தாருல் இஸ்லாம்’ சம்பந்தமாகப் பகுத்தறிவுப் பயிற்சிப் பண்ணைத் தோழர் ஒருவர் அதிகம் சொல்லி, புத்துயிர் பெற்று வெளியான தா. இ. 10/47 முதல் வெளியீட்டைக் கொடுத்து அபிப்ராயம் கேட்டார். பல வார்த்தைகளைக் கொண்டு நீளமாக என் அபிப்ராயத்தைக் கூறுவதைவிட, படித்துப் பார்த்தவுடன் 2½ ரூபாயை அத்தோழரிடமே கொடுத்து எனக்குத் தனியாக தா. இ.ம் வரும்படி செய்துவிட்டேன் என்பதிலிருந்து தா. இ-ன் மதிப்பு எத்தன்மைத்தது என்பதுபற்றிச் சொல்லாமலே ஊகித்துக் கொள்ளலாம்.

இப்பொழுது விஷயத்துக்குப் போகின்றேன். தா. இ. முதல் இதழிலேயே (பக்கம் 26-ல்) நம் பண்ணைத் தோழர் “குலாம்” அவர்கள் திராவிட நாடு பெற்றே தீரவேண்டும் என்று எழுதி, முஸ்லிம்களுக்கு நம் இயக்கத்தை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தியிருப்பதைக் கண்டு களித்தேன். இந்தக் கட்டுரையில் தோழர் கேட்கும் உறுதி மொழிகள் அவசியமேயானாலும், அவைகளை நாளடைவில், திராவிடர் தலைவர் அவ்வப்பொழுதும், அடிக்கடியும். திராவிடர் தாள்களும் உறுதி கூறிவந்திருக்கின்றனர். திராவிடர்களின் பரம வைரிகளாகிய ஆரியர்களுக்கும் கூடத் தனித் தொகுதியும் சுயநிர்ணய உரிமையும், அவர்கள் கலை, நாகரிகம் பண்பு அனைத்துக்கும் திராவிட ஸ்தானில் பாதுகாப்பளிக்கப்படும் என்று சமீபத்தில் வாக்களித்த நம் தலைவர் அதை நண்பர்களும், நம்வர்களுமாகிய திராவிட முஸ்லிம்களுக்குள் அவர்கள முஸ்லிம்கள் என்ற காரணத்தால் தனி இனத்தினராக அமைந்து விடுவதால், அளிக்கவில்லை, அளிக்கமாட்டார் என்று நினைக்கலாமா வென்று தோழர் குலாம் அவர்களை விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

முஸ்லிம்களின் மனத்தை நான் அறிவேன் என்று முன்னரே கூறினேன். முஸ்லிம்கள் திராவிட இயக்கத்தில் பங்கு கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தோழர் ‘குலாம்’ அவர்கள் சந்தேகங்களைக் கிளப்பி விட்டுக் கொண்டிருப்பதால் தயங்குகின்றனர்.

பெரியார் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். முஸ்லிம்களுக்குச் சந்தேகம் ஏற்பட இடமில்லாத பாஷையில் முஸ்லிம்களின் உரிமைகளில் காங்கிரஸ் சர்க்கார் தலையிட்டமாதிரி திராவிட சர்க்கார் தலையிடாது என்று விளக்கமாகவும், விபரமாகவும் விடுதலையில் வெளியிட்டு விட்டால், எனக்கு நம்பிக்கையுண்டு, இவ்வட்டாரத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் வாலிபர்களின் ஆதரவை உடனடியாகப் பெற்றுக் காண்பிக்க முடியுமென்று. பெரியார் என் வேண்டுகோளைக் கவனித்து ஆவன செய்வார் என்று நம்புகின்றேன்.

தா. இ. ஆசிரியர் பழுத்த பெரிய பகுத்தறிவுவாதி என்று பெரியாரே மதிப்புரை கொடுத்திருக்கின்றார். ஆகையால் பகுத்தறிவாளிகள் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட நமது இயக்கத்தை ஆதரித்து நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. என்றாலும் வேண்டிக்கொள்ளுகின்றேன, கழகச்சார்பாக முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டித் தரவேண்டுமென்று.

-சேலம் மாவட்ட திராவிடத் தலைவர் திரு. Y. S. அருணாசலம்


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 45

Related Articles

Leave a Comment