இடைச்செருகல்

by நூருத்தீன்

நோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த நல்ல பழக்கம் என்கிறது ‘மனம் மகிழுங்கள்’. அதனால் வெள்ளைப் பலகையில்

கலர் பேனாவால் ஒரு சிறு பட்டியல்…

நாலைந்து வேலைகள்தாம்; எழுதி வைத்துக்கொள்ளும்படி ஆனது. ஆனால், ஒவ்வொரு வேலையும் கடுமையான நேரத்தைக் கோரும்.

‘இதைச் செய்ய வேண்டும்’, ‘அதை முடிக்க வேண்டும்’ என்று மனத்திற்குள் சிறு சிறு வேலைகளைச் சேமித்து, நேரம் கிடைக்கும்போது செய்து முடிக்க அமர்ந்தால் எதைச் செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்து யோசித்தே ஆயாசத்தில் காலம் கழிந்து கொண்டிருந்தது. அதனால் முதல் வேலையாகப் பட்டியல் எழுதி வைக்கும் வேலை என்று முடிவெடுத்து, அதுமட்டும் நலமே நடந்து முடிந்தது.

பிறகென்ன? எழுதி வைத்ததுடன் சரி, அதைப் பார்க்கக் கூட நேரம் வாய்க்கவில்லை. இரண்டு, மூன்று நாள் ஆகியிருக்கும்; யதேச்சையாக வெள்ளைப் பலகையைப் பார்க்க, ஆச்சரியம் தாக்கியது. காரணம் இடைச்செருகல்! ஆச்சரியம் இறுதியில். ‘அதென்ன இடைச்செருகல்?’ என்பது அதற்குமுன்.

ஆங்கிலத்தில் interpolation என்று ஸ்டைலாக வாசிக்கும் இடைச்செருகல் தமிழில் சங்கக்கால சமாச்சாரம். சுருக்கமாகச் சொன்னால் முக்கியமான, பிரபலமான விஷயத்திற்கு இடையில் நமது விஷயத்தைச் செருகிவிடுவது. கந்தியார் என்றொரு பெண்பாற்புலவர். (எச்சரிக்கை; சற்று நீட்டினால் காந்தியார் ஆகிவிடுவார். கவுந்தி என்ற பெயர் சற்றுமாறி கந்தியார் ஆனவர் இவர்.) இவர் பரிபாடல், சீவக சிந்தாமணி போன்றவற்றில் தம்முடைய பாடல்களை எழுதிச் சேர்த்துவிட்டார் என்கிறது ஓர் ஆய்வு. எதற்கு இப்படி?

பூவோடு சேர்ந்து நாரும் மணக்கட்டுமே என்று விரும்பியே செய்திருக்கிறார்கள் சிலர். வேறு சிலர், பழைய நூல்களில் தங்களது சமயம், கொள்கைக்கு எதிரான, மாற்றமான கருத்துகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு, தங்களுடைய கருத்துகளைச் செருகியிருக்கிறார்கள். வேறொரு காரணமும் இருந்திருக்கிறது. அந்தப் புராதன நூல்களில் சில பகுதிகள் தவறிப்போய், கிடைக்காமலிருந்தால் ஆங்காங்கே ‘மானே, தேனே’ என்று இட்டு நிரப்புவதைப்போல் தாங்களே எழுதிச் செருகிவிடுவது.

நமக்கு நெருக்கமான முந்தைய நூற்றாண்டில் நமது திரைப்படங்களில் இதன் மற்றொரு வடிவம் காமெடி டிராக். அது ஆபத்தற்ற வடிவம். சிரிக்கலாம். அபத்தக் களஞ்சியமாக இருந்தால் ஒதுக்கிவிட்டு, கொடுத்த காசுக்குப் படத்தை மட்டும் விமர்சிக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் ஊடக சாம்ராஜ்யம் நிகழ்த்தும் இடைச் செருகல்தான் அரக்கன். மாபாதகம்! நிதான நஞ்சு!

செய்திதான்! நிகழ்வுதான்! ஆனால் அவற்றின் இடையில் தங்களது விஷமக் கருத்துகளைச் செருகிச் செருகிப் பரப்பி அவர்கள் நிகழ்த்தும் அராஜகம் அக்கிரமத்தின் உச்சம். வெட்கம், மானம், நீதி, நேர்மை, நியாயம் என்று பல சொற்கள் வழக்கொழிந்து, உலகளவில் புத்திகள் அடிமைகளாகிவிட்டன. சமகாலத்தில் இடைச்செருகல்கூட வழக்கொழிந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட தரப்பை நோக்கி நேரடிச் செருகல்தான்.

அவையெல்லாம் பஞ்சாயத்து தொடங்கி உலக அரசியல். மற்றொரு காந்தியார் வந்து சத்தியா ஊடகப் போராட்டம் நடத்திவிட்டுப் போகட்டும். கந்தியார் என்று ஆரம்பித்தோமில்லையா அவரிடம் திரும்பிவிடுவோம்.

அவர் பரிபாடலில் இடைச்செருகியதைப்போல் அடியேனின் திருமதியார் வெள்ளைப் பலகையில் இடைச் செருகியிருந்ததுதான் இங்கு பகிர வந்த ஆச்சரியம். என்னவென்று?

“யோவ் புருஷா! நீ இன்னின்ன வேலையை இன்னின்ன நேரத்தில் செய்வது இருக்கட்டும். உன் பெண்டாட்டியானவளுக்கு இது, அது” என்று பட்டியலில் இருந்த அனைத்து ஐட்டங்களுக்கும் இடையில் புருஷக் கடமை ஒவ்வொன்றும் சரியாகச் செருகப்பட்டிருந்தன.

வரிகளுக்கு இடையே இடைவெளிவிட்டு எழுதுவதில் இப்படியொரு ஆபத்தா? ஸோ வாட்?

‘ப்ரில்லியண்ட்!’

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 24 பிப்ரவரி 2015 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

 

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment