நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு!

by

பொதுவாகவே ஷாப்பிங் மோகம் குறைந்து போய்விட்டதால் மால்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வாங்கியே தீரவேண்டும் என்ற பொருள்களுக்காக,

தேர்வுக்குத் தயாராவதைப் போல் வீட்டில் ஹோம்வொர்க் செய்து விட்டு தேவைகளின் பட்டியலையும், நுழைய வேண்டிய கடைகளின் பெயர்களையும் மனப்பாடம் செய்து விட்டுப் போனால்கூட, திட மனத்தையும் நொடி நேரத்தில் திசை திருப்பி விடுகிறார்கள் மார்க்கெட்டிங் மேதைகள். அவசியமே இல்லாத விஷயங்கள் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்த்து, சிந்தைக்குள் போதையைத் தூவி, வீட்டிற்கு வந்து சேர்ந்தால் பட்டியலில் இல்லாத பொருள்கள் பாதியளவாவது பைகளில். போதை தெளியும்போது மனத்தில் ஆயாசம்.

இதைவிட, “கூட மாட ஒத்தாசைக்கு வந்து வாங்கிக் கொடுத்தால் என்ன? வீட்டில உட்கார்ந்து அதைவிட பெருசா என்னத்தச் சாதிக்கப் போறீங்க?” என்று வந்து விழும் செல்ல வசவுகளை ஏற்றுக் கொள்வது தேவலையாக இருக்கிறது. சில சமயம் மனம் குறுக்குக் கேள்வி கேட்டு நேர்மையைச் சோதிக்கும். “யூ ஹேட் ஷாப்பிங்? உனக்கு வயசாயிடுச்சோ?”

சென்னை விஜயத்தின் போது அனைவர் வாயிலும் EA சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் இருந்தது. அடியேனது இருப்பிடம் EA எனப்படும் Express Avenue வின் சுற்று வட்டாரத்தில் அமைந்திருந்தது காரணமோ என்று நினைத்தேன். இல்லை. அதன் வர்த்தக வீச்சும் கவர்ச்சியும் அதையும் தாண்டி என்பது உள்ளே நுழைந்தால் புரிந்தது. மாணவப் பருவத்திலும் பிறகும் வொய்ட்ஸ் ரோடு, வுட்ஸ் ரோடு, பட்டுலாஸ் சாலை என்று சுற்றி வரும் போது இந்தப் பத்து ஏக்கர் மகா செல்வத்தை மதில்சுவர் பர்தாவின் பின்னால் இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட் ஒளித்து வைத்திருந்தது இப்பொழுதுதான் தெரிகிறது. இன்று மதில் சுவர் உடைந்து பந்தாவாக எழுந்து நிற்கிறது EA.

ஒரு கூரையின் கீழ் தேவைகளைப் பெற்றுவிட முடியும் என்ற மால்களின் அடிப்படையைத் தாண்டி, இன்று அவை இல்லையெனில், பொழுதின் பயன் என்னாவது என்று மக்கள் இனம் ஏங்கி மாளும் அளவிற்கு உலகளவில் மால்கள் கேளிக்கையின் உத்தரவாதம். இதில் இந்தியா ஏன் சுணங்க வேண்டும்? அயல் நாடுகளின் ஸ்டைலும் சொகுசும் கேளிக்கையும் இந்தா உன் வாசலில் என்று பகாசுர நிறுவனங்கள் சேவையாற்ற முனைந்ததில் பெருநகரங்களில் வேரூன்றி இந்தியாவின் சிறு நகரங்களிலும் இன்று மெதுமெதுவே மால், மால், மேலும் மால்.

உள்ளே கடைகளும் பொருள்களும் உணவகங்களும் பண்டங்களும் என அனைத்திலும் மேலை நாடுகளுக்குச் சளைக்காத சாயல். “கோக் வேணாம். தண்ணீர்” என்று உணவுடன் ஐக்கியமாகி வந்த கறுப்பு திரவத்தை நிராகரித்தால், தண்ணீருக்குக் காசு. குடிக்காவிட்டாலும் கோக் உனக்குத்தான் என்றார் உணவுக் கடை சிப்பந்தி. உணவு, உடை, நடை, பாவனை என்று சுதந்திர இந்தியாவில் நீக்கமற அந்நியம்.

வருகை புரியும் பெண்டிரும் கடைகளில் பணிபுரியும் மங்கையரும் குறையாடைகளிலும் ஒப்பனையிலும் என்னவொரு கண்கூசும் போட்டி? பண்டங்களின் விலை கன்னாபின்னா என்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை என்றன முண்டியடிக்கும் கூட்டங்கள். சாமான்யனின் கையிலும் பல்லாயிர ஐஃபோன். ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயங்கள் இன்று மற்றவர்களுக்கும் சாத்தியமாகியுள்ளன. சரிதான் நல்லதுதான். எல்லோரும் உய்வுற்றால் அது நாட்டின் மேன்மைதான்.

ஆனால் முரண் மிரட்டுகிறது. அயல் நாட்டில் இந்தளவு இல்லாத முரண்.

உள்ளே பணம் இறைத்து புழங்கிக் கொண்டிருந்தவர்களில் கணிசத்திற்கும் அதிகமான அளவினர் தீனார், திர்ஹம், டாலர் பார்ட்டிகளும் உள்ளூர் ஐ. ட்டீயினரும் அதைச் சார்ந்தவர்களும். மிகப் பெரும்பான்மையான இந்தியப் பிரஜைகளின் வாழ்வாதார நிலையோ மால்களின் கேட்டுக்கு வெளிப்புறத்திலேயே தேங்கி, அது இந்திய நாணயத்தின் மறுபுறம்.

சிக்னலில் ஆட்டோ நின்றபோது EA விற்கு எதிரிலுள்ள பைகிராப்ட்ஸ் சாலை ஓரத்தில் சாப்பாட்டு வண்டி கடையில் சகாய விலை உணவு விறுவிறுப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. மக்கள் பரபரப்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கென்னவோ என் அண்ணன் எம்.ஜி.ஆர் பாட்டின் இடையிலுள்ள வரிகள்தான் அபத்தமாக நினைவிற்கு வந்தன.

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகென்று பெயரும் இட்டால்….

– நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 20 செப்டம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment