கண்களை வேறெங்கும் செலுத்தாமல் கம்ப்யூட்டர் திரையில் மூழ்கியிருந்தான் ஆதித்யன். நாளைக்குள் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் வந்துவிட வேண்டும் என்று அவனுக்குக் கெடு அளிக்கப்பட்டிருந்தது. முடித்துவிடலாம் என்று தோன்றியது. மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தான்.
அரவமின்றி அருகில் வந்து நின்ற மேனேஜரை முதலில் அவன் கவனிக்கவில்லை. கனைக்கும் சப்தம் கேட்டுத் திரும்பியவனிடம், “ஆதித்யா. எக்ஸிகியூட்டிவ் கமிட்டியுடன் டைரக்டருக்கு ஒரு மீட்டிங். அவருடைய பவர்பாயின்ட் ஃபைலை அனுப்பியிருக்கிறார். சென்ற காலாண்டின் ஹைலைட்ஸும் லோலைட்ஸும் சேர்க்கணுமாம். மெயில் அனுப்பியிருக்கேன். அவசரமில்லை. லஞ்சுக்குள் கொடுத்துடு போதும்.”
டைரக்டரின் பவர்பாயின்ட்டிற்கான தகவல் அளிக்க உட்கார்ந்தால் அவ்வளவுதான். அன்றைய நாளின் பெரும்பகுதி காலி. அதை எப்பொழுது முடித்து, ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை எப்பொழுது தயார் செய்வது? மேனேஜருக்கு ஆதித்யனுடைய வேலையும் கெடுவும் நன்றாகத் தெரியும். தவிர, டைரக்டர் கோரிய விபரங்கள் அளிக்க வேண்டியது ஆதித்யனுடைய பொறுப்பே கிடையாது. அது மேனேஜருடையது. தன்னுடைய வேலையை அப்படியே ஆதித்யனின் தலையில் போட்டான் அந்தக் கிராதகன்.
கோபத்தையும் ஆற்றாமையையும் எரிச்சலையும் தண்ணீர் இல்லாமலேயே முழுங்கிவிட்டு, பலவீனமாய்த் தலையாட்டினான் ஆதித்யன்.
இப்படி நடப்பது முதல்முறையன்று. மேனேஜர் நாசூக்காகக் கழுத்தை நெரிப்பதும் அதை அவன் ஏற்றுக்கொள்வதும் அரசியல்வாதியும் லஞ்சமும்போல் இயல்பாகி இருந்தன.
***
“இன்னிக்கு செக்கப் இருக்குல்லே. கரெக்டா ஆறு மணிக்கு வந்துடறேன். ரெடியா இரு. நானே கூட்டிட்டுப் போறேன்.” காலையில் கிளம்பும்போது தலையில் அடித்துச் சத்தியமிடாத குறையாக வாக்களித்தான் சிராஜ்.
“சரிங்க.”
மாலை மணி ஆறு அடித்துக் கூடுதலாக அறுபது நிமிடமும் கழிந்திருந்தது. ஃபோனில் அழைத்தான். “செல்லம். முக்கியமான வேலைல மாட்டிகிட்டேன். மாமியைக் கூட்டிட்டுப் போயிடேன். நெக்ஸ்ட் டைம் நிச்சயமா நான் கூட வர்ரேன்.”
அதற்கும் “சரிங்க” என்று போனிலேயே தலையாட்டினாள் மனைவி.
அழுகை வந்தது. அனுசரணைக்கும் உதவிக்கும் ஆயிரம்பேர் இருக்கலாம். கட்டியவனைப்போல் வருமா? வரம்பு மீறிய எதிர்பார்ப்பா இது?
தவிர,
இப்படி நடப்பது முதல்முறையன்று. தன் வாக்கு மீறலை சிராஜ் நாசூக்காகச் சமாளிப்தும் அதை அவள் ஏற்றுக்கொள்வதும் சீரியலும் அழுகையும்போல் இயல்பாகி இருந்தன..
***
இத் தொடரின் தலைப்பை அறிவிப்பில் பார்த்துவிட்டு நண்பர் ஃபேஸ்புக்கில் கேட்டார், “மாறி மாறி மோதினா மண்டை உடைஞ்சுடாதா?”
அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் பரிகாசம். “ஹெல்மெட் போட்டுகிட்டுப் படிங்க” என்று பதிலுக்கு ஏதாவது சமாளிச்சுப் பார்க்கலாம். ஆனாலும் அவரது கேள்வியில் சற்று நியாயமுள்ளதால் இந்த மோதல் என்னவென்று முதலில் பார்த்துவிடுவோம்.
மோதுவது என்றால் என்ன?
கட்டிப் புரண்டு சண்டையா? சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்ப்பதா? ‘ச்சீ போ’ என்று காறி உமிழ்வதா?
அவையும் மோதலுக்குள் அடங்கும்தாம்; என்றாலும் இந்த ‘மோதி மோதி’, வன்முறைக்கு இடமற்ற யு சர்ட்டிபிகேட் தொடர்.
மேலே இரண்டு உதாரண நிகழ்வுகளைப் பார்த்தோமே, அதைப்போல் நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். அலுவலகம், குடும்பம், நட்பு, உறவு என்று நாம் நாள்தோறும் பலவித மனிதர்களுடன் பழகிக் குப்பைக் கொட்ட வேண்டியிருக்கிறது. அப்பொழுது நாம் சந்திக்கும் நெருக்கடிகளும் சவால்களும் நமக்கு இணக்கமற்ற மக்களும் உலகின் யதார்த்தம்.
என்ன நெருக்கடி? என்ன சவால்?
ஆதித்யனுடைய நிகழ்வில் பார்த்ததுபோல், ஒரு விஷயம் அல்லது ஒரு பிரச்சினை. நமக்கோ, நிறுவனத்திற்கோ, அது நிச்சயமாகக் கேடாக முடியும் எனத் தெரிகிறது. அச்சம், தயக்கம், துணிவின்மை போன்ற ஏதோ ஒரு காரணத்தால் அதைப் பற்றி உரியவரிடம் பேசி அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள முடியவில்லை.
அடுத்த உதாரணம் வாக்கு மீறல். பொறுப்பு தட்டிக் கழிக்கப்படும்போது – எதிர்ப்பார்ப்பு நிறைவேறாதபோது – அதிகாரத்திற்கு அஞ்சியோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ அடங்கிப் போகிறோம். நமது நியாயமான கோபத்தை, அதிருப்தியை அடக்கிக் கொள்கிறோம்.
பிரச்சினை அத்துடன் முடிந்து விடுமா? அடுத்த நாள் மீண்டும் அச்செயல்கள் தொடராவா? சந்தேகமே வேண்டாம். நிச்சயம் தொடரும்.
அதிகார துஷ்பிரயோகம், வாக்கு மீறல், தட்டிக் கழிக்கப்படும் பொறுப்புகள், கெட்ட ஒழுக்கம் போன்றவற்றை எதிர்கொண்டு, உரியவர்களிடம் தகுந்த முறையில் பேசிச் சரி செய்ய வேண்டும்.
ஆனால் பொதுவான மனித இயல்பால், இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டு மோதத் தயங்கி இரண்டு வழிகளைக் கையாள்கிறோம்.
‘பேசி என்ன ஆகப்போகிறது; எக்கேடோ கெட்டுப் போ’ என்று நாம் ஸைலண்ட் மோடுக்கு மாறிவிடுவது.
அல்லது, முரட்டுத்தனமாக அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயல்வது.
பிரச்சினையை எதிர்கொள்ளாமல் அமைதி காக்க ஆரம்பித்தால் அது சிக்கல். நாளாவட்டத்தில் அது மலச்சிக்கலைவிட மோசமான சிக்கலாகிவிடும். எப்படி?
அத்தனை அதிருப்தியையும் ஆத்திரத்தையும் மனத்திற்குள்ளேயே சேர்த்துச் சேர்த்துப் பூட்டி வைப்பது மன அழுத்தம் போன்ற ஆரோக்கிய நாசத்திற்கு வழிவகுக்கும். அல்லது அத்தனையும் ஒன்று சேர்ந்து ஒருநாள் அசாதரணமாய் வெடித்து, கம்ப்யூட்டர் கீபோர்டை எடுத்து உங்கள் மேனேஜரின் மண்டையில் நாலு சார்த்துச் சார்த்தி, கீபோர்டு உடைந்து விடும்.
மாறாக, சொன்னபடி வேலை செய்யாத தொழிலாளியை ‘எப்படி வேலை வாங்குகிறேன் பார்?’ என்று மிரட்டி, உருட்டி, வசை மொழிபாடி முரட்டுத்தனமாக அப்பிரச்சினையை எதிர்கொண்டால் அதன் பின்விளைவு வேறு வகை.
அவனும் பேட்டை ரௌடியும் ஒண்ணாப் படிச்சவங்களாக இருந்தால் நீங்கள் வீடு திரும்பும்போது உங்களுக்கு உடல் புண் ஏற்படலாம். அல்லது அவன் அஹிம்சைவாதியாக இருந்தால் உங்களது காலைவார அவன் தயாராகி, தகுந்த நேரத்திற்காகக் காத்திருப்பான். அது சொந்தச் செலவில் சூன்யம்.
எனில் என்னதான் செய்வது? பார்ப்போம்.
(தொடரும்)
– நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 14 அக்டோபர் 2015 அன்று வெளியானது
<–மோதி மோதி உறவாடு முகப்பு–> <–அடுத்தது–>