பெருந்துன்பம் நிறைந்த அந்த ஹிஜ்ரீ 647-ஆம் ஆண்டின் ஷஃபான் மாதப் பெளர்ணமி கழிந்த மறுநாள் விடிந்தது – (அஃதாவது, கி.பி. 1249-ஆம் ஆண்டின் நவம்பர் மாதம், 23-ஆம் தேதி). சுல்தான் ஸாலிஹ் இறுதிவரை தமது சுய உணர்வு வராமலே தம்முடைய நாற்பத்திரண்டாம் பிராயத்தே இறைவனின் கட்டளைப்படி
இன்னுயிர் துறந்து விட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!) ஷஜருத்துர் வாலிபத்தே கைம்பெண்ணாகி விட்டார்!
மானிட மூளைக்கு எட்டாத அதிசயங்கள் அத்தனையையும் ஆற்றிவைக்கும் மகா சக்தியையே “கடவுள்” என்கிறார்கள்; அல்லது “தேவன்” என்றழைக்கிறார்கள்; அல்லது அல்லாஹ் என்று சொல்லுகிறார்கள். ஸீனாய் வனாந்தரத்தில் திருடர்களிடம் தப்பிப் பிழைத்த பரதேசி, அதிலும் அனாதைச் சிறுமி, அற்ப ஏழை, பத்தொன்பதாண்டுகளுக்குள பெரிய சுல்தானின் பட்டமகஷியாகி, இதுபோது அவரையும் இழந்து விதவையாகிப்போன விந்தையை விதியின் விளையாட்டென்பதா, அல்லது விதியின் சதியென்பதா, அல்லது விதியின் விசித்திரம்தான் என்பதா? அல்லது ஓரே வார்த்தையில் “ஆண்டவன் திருவிளையாடல்” என்று கூறி விடுவதா?
ஸாலிஹ் நஜ்முத்தீனின் பிரேதத்தின் பக்கத்திலே ஷஜருத்துர் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார் கோபாவேசத்துடன் குமுறிக்கொண்டே நெருப்புப் பிழம்பைக் கக்குகிற எரிமலைபோல் அவருடைய நீண்ட கயல்விழிகளில் பெருமழைக் கண்ணீர் பொங்கிக்கொண்டிருந்தது. நாசியும் நேத்திரங்களும் பழுத்த மிளகாயின் நுனியைப் போன்று சிவந்துவிட்டன. அவர் அழுவதைப் பார்த்த ஹக்கீமும் அலிகளும் அதிகம் அழுதார்கள். அவர்கள் நால்வரும் அழுதார்கள், அழுதார்கள் – கண்களில் உவர்நீர் வற்றுகிறவரை அழுதார்கள். அங்கிருந்த அஃறிணைப் பொருள்களும் அவ்வுருக்கமிக்க அவலக் காட்சியைக் காணச் சகியாமல் அழுது வடிந்தன. அவ்வறை முழுதும் அரசர்க்குரிய தேஜஸ் மிக்க பொலிவையிழந்து, நிச்சப்தம் நிலவும் பயங்கரப் பிரேதத் தனியறையின் சொரூபத்தைப் பெற்றுக் கொண்டது. சுமார் அரை மணி நேரம் சென்றதும், ஷஜருத்துர் சட்டென்று அழுகையை நிறுத்திக் கொண்டார். அதுவா அழுகிற நேரம்?
அரை நிமிஷத்தில் அவர் எழுந்தார்; மேலாடைகளை உதறிவிட்டுக் கொண்டு, தலை மயிரைக் கோதினார். கண்களையும், கன்னங்களையும், மூக்கையும், உதடுகளையும் சுத்தமாய்த் துடைத்துக் கொண்டார். சிறிது புன்முறுவலையும் சிரமத்துடன் வரவழைத்துக் கொண்டார். தமது மேனியை ஒரு முறை மேலுங் கீழும் பார்த்துக்கொண்டார். ஒன்றுமே நடவாதது போல், அவர் அவ்வறையை ஒருமுறை முகந்திரும்பிப் பார்த்துக்கொண்டார். அப்பால் அங்கிருந்த ஹக்கீமையும் அலிகளையும் நோக்கி, “நீங்கள் உங்கள் உயிர் போனாலும் இங்கு நிகழ்ந்த நிகழ்ச்சியையேனும், இனி நடக்கப் போகின்ற நிகழ்ச்சியையேனும் ஒருவருக்கும் ஒரு சிறிதும் வெளியில் தெரிவிக்கக் கூடாது. மீறித் தெரிவித்துவிட்டால், உங்கள் தலைகள் உருண்டு விடும்; ஜாக்கிரதை! அன்றியும், நீங்கள் எவருமே இவ்விடத்தை விட்டு நான் அனுமதி கொடுக்கிறவரை அசையக்கூடாது; அசைந்தால், உங்கள் உயிர் உங்களுடையதன்று. உஷார்! உங்களுக்கு வேண்டிய ஆகாராதிகள் ஒவ்வொரு வேளையும் தவறாமல் இங்கு வந்துவிடும். ஜலமல விசர்ஜனமெல்லாம் இவ்வறையையொட்டி அதோ இருக்கிற கழிவறையிலேயே நடைபெற வேண்டும். என்ன, தெரிகிறதா?” என்று மிகக் கடுமையான குரலில் கடாவினார்.
சுல்தானாவின் கட்டளையென்றால், இலேசா, என்ன? அம் மூவரும் தலைகுனிந்து மெளனமாக நின்றனர். ஷஜருத்துர்ரின் வார்த்தைகள் தொனித்த மாதிரியில் அவர்களின் உயிரே உடலிலில்லை.
சிரத்தை அவர்கள் நிமிர்த்துமுன்னே சுல்தானா அங்கிருந்து அகன்று விட்டார். உத்தேசம் ஒரு மணி நேரம் சென்ற பின்னர் ஷஜருத்துர்ரும் அவருடன்கூடப் படைத் தலைவர் ஜாஹிர் ருக்னுத்தீனும் மட்டுமே அங்கே வந்து நுழைந்தனர். ருக்னுத்தீன் கையிலே சிறு பேழையொன்று இருந்தது. ஷஜருத்துர்ரின் கட்டளையின்படி அவ் வறைக்கதவு உள்ளே சார்த்திப் பூட்டிடப்பட்டு விட்டது.
மம்லூக் ருக்னுத்தீனும் ஷஜருத்துர்ரும் சுல்தானின் பிரேதத்தைக் கட்டிலிலிருந்து கீழே மெல்ல இறக்கி வைத்தனர். ஹக்கீமும் அந்த இரண்டு அலிகளும் திருதிருவென்று விழித்தார்கள். அவர்கள் வாய்திறக்க அஞ்சி, மெளனமாய் நின்று, என்ன நடக்கப் போகிறதோவென்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே இறக்கி வைக்கப்பட்ட பிரேதத்தின் இடுப்பாடை தவிர ஏனை உடைகளெல்லாம் கழற்றப்பட்டன. ருக்னுத்தீனும் ஷஜருத்துர்ரும் சிறு துணியைக்கொண்டு தங்கள் மூக்கையும் வாயையும் சேர்த்து மறைத்துக் கட்டிக்கொண்டு, கூரிய சத்திரக் கத்திகளை எடுத்து அப்பிரேதத்தின் வயிற்றைக் கிழித்தார்கள். அப்பால் இரண்டு மணி நேரத்தில் எல்லா வேலைகளும் நடந்து முடிந்தன. பின்னர் இறுதியாகச் சில தைல மருந்துகளை அப்பிரேதத்தின் கிழிக்கப்பட்ட வயிற்றுள்ளே ஊற்றி, மீட்டும் பொருத்தித் தைத்து விட்டார்கள். வயிற்றுள் வார்த்த மருந்தின் மிச்சத்தை அப்பிரேதத்தின் கண்களிலும் காதுகளிலும் நாசித் துவாரங்களிலும், உதட்டின் இடுக்கிலும் ஊற்றினார்கள். பிறகு பழையபடியே அவ்வுடம்பினில் சுல்தானுக்குரிய சர்வ அலங்கார ஆடையாபரணங்களும் அணவிக்கப்பட்டு, திரும்பவும் கட்டிலின்மீது அது நீட்டிப் படுக்கவைக்கப்பட்டு விட்டது.
உயிரிழந்த ஸாலிஹின் உடல் இவ்வண்ணமாகத் தைலமிடப்பட்டுப் பண்டைய எகிப்து வழக்கப்படி பக்குவப்படுத்தப்பட்டு விட்டது!
உத்தேசம் நாலாயிரம் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பண்டைக் கால எகிப்து நாகரிகம் மிக உச்சத்திலிருந்த நாட்களில் பக்குவப்படுத்தப்பட்ட பல பேரோக்களின் (பிர் அவ்ன்களின்) பிரேதங்கள் இன்று வரை கூடக் கொஞ்சமும் கெட்டுப் போகாமல் அப்படியே அப்பட்டமாயிருப்பதைக் கூர்நுதிக் கோபுரங்களிலும், கெஜேயிலும் நீங்கள் காணலாம். அம்மாதிரியாகப் பாடம் பண்ணப்பட்ட பிரேதங்களை “மம்மீ”1 என்று இன்றும் அழைக்கிறார்கள்.2 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும், சிறிதும் கெட்டுவிடாத, கறையான் அரிக்காத, கால இயற்கை அழிக்காத, எப்படிப்பட்ட திரவத்தை அல்லது தைலத்தைக் கொண்டு அப் பண்டைக் கால எகிப்தியர் மனித உடலைப் பக்குவப்படுத்தி வைத்தனரென்பது இக்கால விஞ்ஞானிகளின் மூளைகளுக்கும் எட்டாத மாயாஜால மந்திர வித்தையாகவே விளங்கி வருகிறது. உலக அதிசயங்களுள் இந்த ‘எகிப்து மம்மீ’களும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட அரிய வித்தையையே ஷஜருத்துர் அரண்மனைக்கு வந்து ஆரம்பத்தில் பழங்கிழவி ஒருத்தியிடமிருந்து கற்றிருந்தார். கற்ற வித்தையைக் காட்டத் தக்க வாய்ப்பு இதுவரை அவருக்குக் கிட்டவில்லை. எனவே, இந்த ஆபத்தான அரசியல் சூழ்நிலையில் உயிரிழந்த தம் சொந்தக் கணவர் மீதே அவர் முதன் முறையாக அதைப் பிரயோகித்தார். இம்மாதிரி தைலமிட்டுப் பிரேதங்களைப் பக்குவப்படுத்தும் பழைய முறையை ருக்னுத்தீனும் கற்றிருந்தார் என்பதை முன்னரே சுல்தானா உணர்ந்திருந்தமையால், துணைக்காக அவரைக் கூப்பிட்டுக் கையோடு கொணர்ந்து, ஸாலிஹின் சரீரத்தை முற் சொன்னவாறு ‘மம்மீ’யாக்கி விட்டார். இனி எத்தனை நாட்கள், அல்லது மாதங்கள், அல்லது ஆண்டுகளே சென்ற போதினும், சுல்தானின் உடல் அழியாது என்னும் பரிபூரணத் திருப்தி அவரது உள்ளத்துள் பேரமைதியை உண்டு பண்ணிவிட்டது.
பஹ்ரீ மம்லூக்கான ருக்னுத்தீனும் தாம் ஐயூபி அரசாங்கத்திடம் கொண்டிருந்த அளவற்ற ராஜபக்தியை இவ்வாறு தக்க சமயத்தில் செய்கை மூலம் நிரூபித்துக் காட்டியதை ஷஜருத்துர் ஆயுள் உள்ளளவும் மறக்கவில்லை. அம் மாது சிரோமணியார் புர்ஜீ வம்சத்துக்குரிய அமீர் தாவூதிடம் வளர்ந்து வாலிபமாகியிருந்தும், பஹ்ரீகள் செயல் பூர்வமாகச் செய்துகாட்டிய பேரபிமானப் பெருஞ் செயல்களை எங்ஙனம் உல்லங்கனம் செய்ய முடியும்? இரகசியக் கூட்டத்திலே அதே பஹ்ரீதான் முதலாவதாக விசுவாசப் பிரமாணத்தைப் பிரேரேபித்தார். அவரே இன்று உறுதுணையாயிருந்து சுல்தான் ஸாலிஹின் உடலுக்கு இறுதிச் சடங்காகிய இந்த மாய வித்தையைப் புரிந்தார். அன்பே உருவான ஷஜருத்துர்ருக்கு பஹ்ரீ மம்லூக்குகள்மீது மட்டற்ற வாஞ்சை பிறப்பதற்கு இவற்றினுஞ் சிறந்த செயலென்ன இருக்கமுடியும்? புர்ஜீ வம்சத்து அமீரால் வளர்க்கப்பட்ட அம் மாதுக்கு இதுபோது பஹ்ரீகளின் எல்லையற்ற ராஜபக்தியைக் கண்டதும், அளக்க முடியா அன்பு ததும்ப ஆரம்பித்துவிட்டது இயற்கையே.
மேலும், அப்போதிருந்த அரசியல் அவசர நிலைமையில் ஒரே புர்ஜீ மம்லூக்குக்காவது சுல்தான் மாண்ட செய்தி தெரிந்திருக்குமேல், அவர்கள் அக்கணமே ஸல்தனத் தங்களுக்கே சொந்தமென்று உரிமை பாராட்டி, அரியாசனத்தின் மீது ஏறியமர்ந்திருப்பார்கள். என்னெனின், அன்னவர்களுடைய உதவியைக் கொண்டேயன்றோ ஸலாஹுத்தீன் ஐயூபி காலமுதல் மிஸ்ரிலே ஆட்சி நடந்துவந்தது? அந்த புர்ஜீ அமீர்களாலேயே ஐயூபி சுல்தான்கள் ஆக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்தார்களன்றோ? இறுதியாகக்கூட அவர்கள் எடுத்த முயற்சியாலேயன்றோ அபூபக்ர் ஆதில் வீழ்த்தப்பட்டு, அந்த ஸ்தானத்தில் ஸாலிஹ் அமர்த்தப்பட்டார்? எனவே, இன்று ஸல்தனத்தில் பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் பக்கத்திலில்லாத போது, இந்த புர்ஜீகள் “இட்ட பிச்சையைப் பெற்று ஆண்ட ஸாலிஹ்” இறந்து போனதும், ஸல்தனத்தின் உரிமை புர்ஜீகளுக்கே சொந்தம் அன்றோ? – இம்மாதிரி எல்லாம் புர்ஜீகள் தர்க்கவாதம் புரிவர் என்பதை ஷஜருத்துர் நன்றாயறிவாராதலால், இச் சமயத்தில் அந்த புர்ஜீ மம்லூக் ஒருவரைக்கூட அவர் நம்பவில்லை.
ஷஜருத்துர் புர்ஜீ மம்லூக்குகளை நம்பாததுடன், வெறுக்கவும் ஆரம்பித்தார். என்னெனின், அவர்கள் ஸல்தனத்துக்கே துரோகமிழைக்கக் கூடியவர்களாய் இருந்ததுடன், நம்பிக்கைத் துரோகமும் செய்யக் கூடிய அளவுக்கு இழிந்துவிட்டிருந்தார்கள். பஹ்ரீ மம்லூக்குகளோ, சுல்தானின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாய் இருந்ததுடன், இன்று ஜாஹிர் ருக்னுத்தீனைப் போன்ற மிகவும் ராஜ விசுவாச மனப் பான்மையுள்ள சோனாதிபதியையும் சிருஷ்டித்து விட்டிருந்தார்கள். எதிர்த்து வருகிற கிறிஸ்தவர்களை இந்த பஹ்ரீ மம்லூக்குகளே விரட்டியடிக்கக் கூடிய வீறாப்பு மிக்கவர்களாய்த் திகழ்ந்து வந்தார்கள்.
விஷயம் இப்படியிருக்க, ஷஜருத்துர் மிகவும் சாமர்த்தியமாகத் தம் மனத்தை நன்கு தேற்றிக்கொண்டு, ஸாலிஹ் மரணமடைந்து விட்டார் என்பதைக் கூடச் சிந்திக்காமலே இருந்துவிட்டார். ஆனால், அவ்வளவுடன் விஷயங்கள் பூர்த்தியாகவில்லையே! இனி அரண்மனையிலும் காஹிராவிலும் உள்ள மக்கள் அனைவருக்கும் சுல்தான் உயிருடனேதான் இருக்கிறார் என்னும் நம்பிக்கையை வளர்த்து வர வேண்டுமே! அவருக்கு உடம்பு நன்றாய் இருக்கிறதென்று சொன்னால், இவர் எப்படி அரசவை கூட்டலாமென்று புர்ஜீகள் குழப்பத்தைக் கிளப்புவார்களே! இல்லை, அவர் வியாதியுற்றிருக்கிறார் என்றால், பல முக்கியஸ்தர்கள் சுல்தானை நேரில் கண்டு பேச விரும்புவார்களே! எத்தனை நாட்களுக்கு அவர்களைப் பொய் சால்ஜாப்புச் சொல்லித் தடுத்து நிறுத்தமுடியும்? சுல்தானை எவரும் பார்க்கக் கூடாதென்று ஹக்கீம் கடுமையான கட்டளையிட்டிருக்கிறாரென்று சொல்லிக்கொண்டே இருக்கலாமென்றால், அப் பிரமுகர்கள் ஹக்கீம் சாஹிபையே பார்த்துப் பேச விரும்பினால், என்ன செய்வது? அல்லது, சுல்தான் மிகவும் கடுமையான வியாதியால் பேச்சு மூச்சின்றிக் கிடக்கிறார் என்று பிரபலப்படுத்தி விடலாமென்றாலோ, எதிரிகள் இச்செய்தி கேட்டு மிகவும் துணிச்சலுடன் பாய்வார்களே! முஸ்லிம்களோ, மனந்தளர்ந்து சுல்தானின் உடல் நிலை மீதே கவலை கொண்டு, போர்க்களத்திலே வலியிழந்து விடுவார்களே!
நினைக்க நினைக்க, ஜருத்துர்ருக்கு ஆத்திரம் அதிகரித்தது; குழப்பமும் பெருகிற்று. மற்ற மந்திரி ஒருவரையும் அவர் கலக்க விரும்பவில்லை. மீண்டும் ருக்னுத்தீனையே தம் அறைக்குக் கூப்பிட்டனுப்பினார்; அந்தப் படைத் தலைவரும் அங்கு வந்து சேர்ந்தார்.
“மலிக்கா! இதோ வந்துவிட்டேன். என்ன விசேஷம்?” என்று ருக்னுத்தீன் ஆவலுடன் வினவினார்.
“நம் சம்பந்தப்பட்ட மட்டில் எல்லா இறுதிச் சடங்குகளையும் நன்கு செய்து முடித்து, அவ்வுடம்பையும் என்றும் அழிய முடியாதபடி சரியாகப் பக்குவப்படுத்தி விட்டோம். ஆனால், தூரான்ஷா வருகிற வரையில் சுல்தான் ஸாலிஹ் உயிருடனிருப்பதுபோல் எல்லாரையும் நம்பவைக்க வேண்டுமே?” என்று கவலைதோய்ந்த தொனியிலே சுல்தானா கழறினார்.
“ஸாஹிபா! எத்தகைய இசகுபிசகான சிக்கல்களையும் மிகுந்த சாமர்த்தியத்துடன் நொடிப்பொழுதில் அவிழ்த்து விடக்கூடிய தங்களுக்கு இஃதொரு பிரமாதமான காரியமா? சுல்தானைப்பற்றி நாம் ஒன்றுமே பிரஸ்தாபிக்காமல் இருந்து விட்டால்?”
“பொது ஜனங்களும், இவ்வரண்மனையில் உள்ள அத்தனை பேரும் மதிமயங்கியா கிடக்கிறார்கள்? எதிரிகளைச் சமாளிக்கவென்றே ஷாமிலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட சுல்தான் இப்போது திரைக்குள்ளே கண்மறைவாய் இருக்கிறாரென்றால், யாருக்குத்தான் சந்தேகம் ஜனிக்காது? அன்றியும், நாம் எதை மறைக்க வேண்டுமென்று அதிகமாக முயல்கிறோமோ, அதே விஷயந்தான் அடிக்கடி ஒவ்வொருவரின் உள்ளத்துள்ளும் ஊடாடிக்கொண்டே இருக்குமென்பதை உமது அனுபவத்தில் நீர் கண்டதில்லையா?”
“அப்படியானால், வேறென்னதான் செய்வது? ஊர் ஜனங்களுக்கு உண்மையையும் உரைக்கக்கூடாது; அவர்கள்பால் ஐயத்தையும் கிளப்பக்கூடாது; கிளம்புகிற சந்தேகத்துக்கும் பதில் சொல்லிச் சமாளிக்க வேண்டும். – இஃதெப்படி முடியும்?”
“அதை முடிவுசெய்யத்தானே உம்மை நான் இங்குக் கூப்பிட்டனுப்பி இருப்பதும்? சுல்தான் காலமான செய்தி கொஞ்சமாவது வெளியாகிவிட்டால், நான் கட்டிவந்த அத்தனை மனக்கோட்டையும் இடிந்து பாழாகிவிடுமே! அல்லது, அவர்கள் என்னையாவது ஸல்தனத்தை நடத்தவிடுவார்களா? கணவனை இழந்த நான் நாலரை மாதங்கள் இத்தா என்னும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டுமென்று வேறே மெளலவீமார் கூறுவரே? – சே! அது பெரிய ஆபத்து! உயிரிழந்த வெற்றுடலை நாம் மூமிய்யாவாகப் பதப்படுத்தியது இந்த ஆபத்தைத் தவிர்க்கவே அல்லவா?”
“மலிக்கா! எனக்கு ஒன்று தோன்றுகிறது.”
“என்ன உமக்குத் தோன்றுகிறது?”
“சுல்தான் உயிருடனே இருப்பதைப் போலே நாம் நடித்தால்?”
“அப்படி எப்படி நடிப்பது? பிரதம மந்திரியாரையும், யுத்த மந்திரியாரையும் எப்படி நம்பச் செய்வீர்? எப்படியேனும் நம்பச் செய்துவிட்டாலும், அவர்கள் அரசரை நேரில் பார்க்க ஆசைப்பட்டால்?”
ருக்னுத்தீன் யோசித்தார் வேறொன்றும் அவர் மூளையில் படவில்லை.
“ருக்னுத்தீன்! இப்படிச் செய்தாலென்ன?”
“எப்படி, மலிக்கா!”
“அஃதாவது, ஒரு போலியான ராஜ கட்டளையை- (பர்மானை) நாமே சிருஷ்டி செய்வது; அதில் சுல்தானின் கையெழுத்தைப்போல் கள்ளக் கையொப்பமிடுவது ….. என்ன உமக்கு விளங்கவில்லையா?” என்று கூறிக்கொண்டே, ஷஜருத்துர் எழுந்தோடினார். அரை நொடியில் காகிதச் சுருணையையும், நாணற் பேனாவையும், மைக்கூட்டையும் கொண்டு வந்தார். நாணற் பேனாவை மையிலே தோய்த்தெடுத்து, இடக்கரத்தில் பிடித்துக் கொண்டு, வேகமாக வரைந்தார். ருக்னுத்தீனுக்கு ஒன்றும் புரியாததுடன், பேராச்சரியமாகவும் இருந்தது. எத்தனையோ வித்தை கற்ற அந்தப் பெண்கள் திலகம் இடதி கையால் மிக வேகமாக எழுதுவதைக் கண்டு, மூச்சடக்கி வியந்துகொண்டேயிருந்தார், அவர்.
அதை வரைந்து முடித்ததும் அரசி அந்தத் தளபதிக்கு வாசித்துக் காண்பித்தார். “எப்படி இருக்கிறது, இது?”
“ஆஹா! மிகவும் முதற் தரமாயிருக்கிறது! இந்தப் போலிப் பிரகடனம் எதற்கு? எனக்கு இன்னம் சரியாக ஒன்றும் விளங்கவில்லையே?”
“இந்த அறிக்கையை நான் நாளைக்கு அரசவையில் பகிரங்கப்படுத்தி விட்டால், சுல்தான் உயிருடன் இருக்கிறாரென்று மட்டுமே ஜனங்கள் கருதமாட்டார்கள்; இதனை அவர் விடுத்த அறிக்கை என்றே முழுதும் நம்புவார்கள். இந்தக் கையொப்பத்தைப் பார்த்தீரா? – எவ்வளவு லாவகமாகவும் பொருத்தமாகவும் நிஜ ஒப்பம் போலே வரைந்திருக்கிறேன்! எவரே இது சுல்தானுடைய கையயாப்பமல்ல என்று கூறுவார்? இப்போது பல இடையூறுகளுக்கு இது முற்றுப்புள்ளி வைத்துவிடவில்லையா?”
“இந்த அறிக்கையைத் தாங்கள் பிரகடனப்படுத்திய பின்னரும் அந்த வஜீரும் ஏனைப் பிரதானிகளும் சுல்தானை நேரில் பார்க்க வேண்டுமென்று விரும்பினால்?”
“ஆம்! அதற்கும் ஒரு யோசனை செய்து வழி கண்டு பிடித்திருக்கிறேனே! எவரேனும் சுல்தானைப் பார்க்க வேண்டுமென்று பிடிவாதமாக வற்புறுத்தினால், முதலில் முடியாது, அல்லது கூடாதென்று கூடிய வரை தடுக்க வேண்டும். மீறியும் தொந்தரை கொடுத்தால் அந்தப் பிரேதத்தை நன்றாய்ப் போர்த்தி விட்டு, முகம் மட்டும் வெளியில் தெரியும்படியாக வைத்து, பார்க்க விரும்புவோரை அருகிற் கொண்டுபோக வேண்டும். பாடம் பண்ணப்பட்ட அந்த மூமிய்யா பார்வைக்கு உயிருள்ளதே போல் காணப்படுவதால், பார்க்கிறவர் பார்த்துவிட்டுப் போவதில் கவலை என்ன? ஹக்கீமோ, அங்கேயே பக்கத்திலிருக்கிறார், அவர்களுடைய சந்தேகத்தைத் தகர்த்தெறிய. சுல்தானிடம் எவரும் பேசக் கூடாதென்று அவரே தடுத்துக்கொண் டருப்பார். ஏன், என்ன யோசிக்கிறீர்?”
“ஒன்றுமில்லை! இந்த நாடகம் இறுதிவரை முழு வெற்றியுடனே நடந்துமுடிய வேண்டுமே என்றுதான் யோசிக்கிறேன்.”
“நடிகர்கள் திறமையற்றவர்களாய் இருந்தாலல்லவோ? ஏன், இதில் நீர் சரியாக நடிக்க முடியாதென்று அஞ்சுகின்றீரோ?”
“அஃதொன்றுமில்லை. இதில் யான் நடிக்க வேண்டிய பாகம் என்னவோ?”
“நீரும் என்னுடன் சேர்ந்தே எப்பொழுதும் இருக்க வேண்டும்; அவ்வப்போது சுல்தான் என் மூலமாக உமக்கிடும் கட்டளைகளை நிர் கேட்டுக்கொண்டிருப்பதற்காக என்னுடனே எப்போதும் இருப்பதாகப் பசப்பவேண்டும். இன்று இநதப் பிரகடனத்தில் சுல்தான் தம் பலஹீனமான கையால் ஒப்பமிடும்போது நீரும் உடனிருந்ததாகச் சொல்லி, மக்களைப் பல வழிகளிலும் நம்பச் செய்யவேண்டும். அவ்வளவேதான்; மிகுதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
ருக்னுத்தீன் தலையைச் சொறிந்துகொண்டே, ஏதேதோ சிந்திக்கத் துவக்கினார்.
“மலிக்கா! என்ன இருந்தாலும், யானையைக் கொன்ற சுளகால் மறைக்க முடியுமா? சுல்தான் உயிர்துறந்த விஷயத்தை அவ்வளவு சுலபமாக ஒருவருக்குமே தெரியாத பரம ரகஸ்யமாக வைத்திருக்க எப்படி இந்த எகிப்திலே இயலும்? ” என்று அவர் கவலை தோய்ந்த வதனத்துடனே கழறலுற்றார்.
“ஐயா ருக்னுத்தீன்! இந்த உலகமே நம்பிக்கையைக் கொண்டுதான் உயிர் வாழ்ந்து வருகிறதென்பதை நீர் அறியீரா? தூரான்ஷா திரும்புகிறவரை அல்லது வரப்போகிற யுத்தத்தை ஜெயிக்கிற வரைதானே இதை மூடிவைக்கப் போகிறோம்! அதுவரை கூடவா நம்மால் சமாளித்து மறைத்து வைக்க முடியாது?”
“எல்லாம் உணர்ந்த தங்களிடம் யான் கூறவேண்டுவது என்ன இருக்கிறது? தாங்கள் போடுகிற திட்டப்படி பிரமுகர்களையும் மந்திரி பிரதானிகளையும் சகல காஹிரா வாசிகளையும் ஒருவகையாக நம்பச் செய்துவிட முடியமென்றாலும், இந்த அந்தப்புரத்திலுள்ள அத்தனை பேரையும் எப்படிச் சமாளிப்பது? வேளா வேளைக்கு சுல்தானுக்கு உணவு கொண்டு வருகிறவர்கள், அடிக்கடி அவரிடம் போய் வருகிற ஊழியர்கள் முதலிய அரண்மனைச் சிப்பந்திகளுக்கு விஷயம் தெரியாமலா போய்விடும்? அப்படி ஒரே ஒரு பிராணிக்குத் தெரிந்துவிட்டாலும், தாங்கள் போட்டிருக்கும் திட்டமுழுதும் அரைக் கணத்திலே தவிடுபொடியாகி விடாதா?”
ஷஜருத்துர் பெருமூச்செறிந்தார். எனினும், என்ன?
“ஜாஹிர்! இந்த உலகம் உள்ள வரை, நமக்குப் பின்னே வரப் போகிற சந்ததியார்கள என்னுடைய அத்தியாச்சரிய மிக்க இச் சாதுரியமான சாகசக்கிய சாமர்த்தியத்தைக் கண்டு என்றென்றுமே இறும்பூதெய்தி வாய் பிளந்து நிற்கும் வண்ணம் இத் திட்டத்தை நிறைவேற்றி வைக்க அவ் வெல்லாம் வல்ல இறைவனே துணைபுரிவானென்பதை என துள்ளம் உணர்கிறது. நீரே வேண்டுமானால் பார்த்துக் கொள்ளும்! லட்சோப லட்சம் ஞானிகளாலும், வித்தைகள் பல கற்ற வல்லுநர்களாலும் செய்துகாட்ட முடியாத ஒரு மா பெரிய அற்புதத்தைக் கேவலம் ஒரு சாதாரணப் பெண்ணாகிய யான் காட்டி முடிக்கிறேனா, இல்லையா என்பதை நீரே பார்த்துக் கொள்ளும்!”
கன்னத்தில் பளீரென்று அறைந்தாற் போன்ற இந்த அறை கூவும் சபதத்தைக் கேட்டு, ஜாஹிர் ருக்னுத்தீன் கல்லாய்ச் சமைந்துவிட்டார்.
“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்,” அன்றோ?
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
1. Mummy – அஃதாவது, ‘மோம்’ என்னும் அரபு வார்த்தையாகிய ‘மெழுகு’ என்னும் மூலத்திலிருந்து பிறந்த “மூமிய்யா” என்னும் அரபு வார்த்தைக்கு, “மெழுகுத் தைலமிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட பிரேதம்” என்று பொருள். ⇪
2. மூஸா நபியைத் துன்புறுத்திய பிர் அவன் (2-ஆவது ரம்ஈஸஸ் – Rameses II) பிரேதம் இன்றும் கெய்ரோவின் காட்சிச் சாலையிலே தோற்றமளிக்கிறது. “இன்று நாம் உன்னை உன் சரீரத்துடனே, உனக்குப்பின் வருவாருக்கு நீயோர் அடையாளமாயிருக்கும் பொருட்டுக் கரை சேர்த்து வைப்போம்,” என்று இறைவனும் தன் திருமறையில் (10:92-இல்) கூறியுள்ளான். ⇪
<<அத்தியாயம் 36>> <<அத்தியாயம் 38>>