புத்தக வாசம்

by admin

ம்பி ராபியா குமாரன் தன்னுடைய கட்டுரையொன்றை அனுப்பியிருந்தார். சமநிலைச் சமுதாயம், ஜனவரி 2015 இதழில் வெளியான ‘புத்தகக் காட்சியும் முஸ்லிம் சமூகமும்’ என்ற கட்டுரை. புத்தகம் வாசிப்பது என்பது ஏதோ கெட்டப் பழக்கம் போல் ஆகிவிட்ட இக்காலத்தில் நம்மிடம் படர்ந்துவிட்ட அவலத்தை விளக்கி, விழித்துக்கொள் என்று நம்மைத் தட்டி எழுப்புகிறது அவரது கரிசனமும் கவலையும். அக்கட்டுரையிலிருந்து முக்கியமான பகுதிகள் கீழே.

புத்தக வாசிப்பை ஏதோ பொழுதுபோக்கு சார்ந்த விஷயமாக மட்டுமே பெரும்பான்மையான முஸ்லிம்கள் பார்க்கின்றனர். வாசித்தல் என்பது அறிவின் ஊற்று, எழுத்திற்கும், படைப்பிலக்கியத்திற்குமான முதற்படி, சமூகத்திலும், ஊடகத்திலும் களமாடுவதற்கான முதன்மைத் தகுதி என்பதையெல்லாம் இன்னும் உணரவில்லை. வாசிப்போடும், புத்தகத்தோடும் தொடர்பில்லாத காரணத்தினால்தான் முஸ்லிம்களால் மையநீரோட்டத்தில் கலக்க முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்.

இலட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் புத்தகக் காட்சிக்கு வருகை தரும் முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு மிக, மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே புத்தகக் காட்சிக்கு வருகை தருவர். அவர்களும் வேறு எங்கும் செல்லாமல் நேராக முஸ்லிம் பதிப்பக கடைகளுக்கு மட்டும் சென்றுவிட்டு வீடு திரும்புகின்றனர். இதற்கு எதற்காக புத்தகக் காட்சிக்கு வரவேண்டும்? இஸ்லாமிய புத்தகங்களை மட்டும் வாங்குவதற்கு ஏன் சிரமப்பட்டு, கூட்ட நெரிசலில் சிக்கி புத்தக் காட்சிக்கு வரவேண்டும்? சென்னை மண்ணடிக்குள் நுழைந்தாலே தேவையான அனைத்து இஸ்லாமியப் புத்தகங்களையும் வாங்கிவிடலாமே!

புத்தகம் மற்றும் வாசிப்பின் பயனை அனுபவப்பூர்வமாக உணராத முஸ்லிம்களுக்கு புத்தகக் காட்சி பற்றிய விழிப்புணர்வு அறவே இல்லை. தினமும் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தைக்கூட கடைப்பிடிக்காதவர்களிடத்தில் இலக்கியம், தத்துவம், அறிவியல், பொது அறிவு, சமூகவியல் சார்ந்த நூல்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாகவும், சிக்கலாகவும் இருக்கிறது. இச்சிக்கலைக் களைவதற்கு முஸ்லிம் சமூகத்தின் அங்கமாக இருக்கக்கூடிய எவரும் முன்வருவதில்லை. இயக்கக் கழகத்தினர், தலைவர்கள், இமாம்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள்… என எந்த அங்கத்தினரும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

முஸ்லிம்கள் எந்த அளவிற்கு வாசிப்பில் பின்தங்கி இருக்கிறார்களோ அந்த அளவிற்கு எழுத்துலகிலும் பின்தங்கி இருக்கின்றனர். இன்றைய நவீன தமிழ் இலக்கியமானது பெண்ணிய இலக்கியம், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், தலித் இலக்கியம், விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எல்லா சமூகத்தினரும் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல! என்றளவிற்கு தங்களது பங்களிப்பை இலக்கியத் துறையில் செய்து வருகின்றனர். ஆனால் முந்தைய காலகட்டத்தில் ந.பிச்சமூர்த்தி, கல்கி, சாண்டில்யன், தி. ஜானகிராமன், நகுலன், மௌனி, கு.பா.ரா, ஆதவன், அசோகமித்திரன், லா.ச.ரா, சுந்தரராமசாமி, சுஜாதா என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே எழுத்துலகில் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.

அந்த நிலை இன்று மாறி இலக்கியத் துறை பரந்துபட்ட பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முன்பு பின்தங்கியிருந்தவர்களே தற்போது இலக்கியத்திலும், எழுத்திலும் கொடி கட்டிப் பறக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களில் மிகச் சிலரே சமகால இலக்கியத் துறையில் இயங்கி வருகின்றனர்.

முந்தைய தலைமுறைச் சார்ந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் தங்களது ஆகச் சிறந்த படைப்புகளைத் தந்துள்ளனர். சாண்டிலயன், கல்கி போன்ற வரலாற்று நாவலாசிரியர்களுக்கு நிகராக ஹஸன், நாவலர் ஏ.எம். யூசுப் போன்றோர் வரலாற்று நாவல்களை எழுதியுள்ளனர். எம்.ஆர்.எம் அப்துற் றஹீம், செ. திவான் போன்றவர்கள் வரலாறு சம்பந்தமான நூல்களை எழுதிக் குவித்துள்ளனர். தோப்பில் முஹம்மது மீரான், கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றோர் சாகித்திய அகாதெமி விருது வாங்கும் அளவிற்கு இலக்கியப் பங்காற்றியுள்ளனர். ஆயினும் முஸ்லிம்களுக்கு எழுத்தையும், எழுத்தாளர்களையும் கொண்டாடத் தெரியாத மனப்பாங்கு பிந்தைய தலைமுறை எழுத்தாளார்கள் அதிக அளவில் உருவாக்காத பரிதாப நிலையை ஏற்படுத்திவிட்டது.

முன்பைவிட தற்காலத்தில் முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. ஆயினும் அக்கல்வி பெரும்பாலும் ஏதாவதொரு டிகிரி, இன்ஜீனியரிங், பாலிடெக்னிக் என்ற நிலையில்தான் இருக்கிறது. அதையும் தாண்டி ஜேர்னலிசம், விஷீவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் என ஊடகம் சார்ந்த படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது. ஏனெனில் பொது வெளியில் முஸ்லிம்கள் குறித்து ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை மாற்றியமைக்கவும், உண்மையான செய்திகள், அவதூறு அற்ற தகவல்கள் மக்களை சென்றடையவும் முஸ்லிம் இளைஞர்கள் ஊடகத் துறையில் பங்களிப்புச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் ஊடகம் சார்ந்த படிப்புகளை மற்ற படிப்புகளைப் போல் வெறுமனே மனனம் செய்து படித்தாலோ, பெயரளவில் பட்டம் வாங்கினாலோ எந்தப் பயனும் இருக்காது. ஊடகத்தில் களமாட விரும்புகிறவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் மிக மிக அவசியம். சமகால நாட்டு நடப்புகளையும், முந்தைய வரலாறு குறித்த அறிவையும், எதிர்காலம் பற்றிய கண்ணோட்டத்தையும் வசிப்பதன் மூலமே பெற முடியும்…

ஊடகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆங்காங்கே ஊடகப் பயிலரங்கம் நடத்தப்படுவது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் அப்பயிலரங்கத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கொடுக்கவேண்டிய அடிப்படைப் பயிற்சி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதேயாகும். ஒரு கட்டுரையை ஆழ்ந்து படித்து பத்து வரிகளில் ஒரு விமர்சனக் கடிதம் கூட எழுத இயலாதவர்களுக்கு, கட்டுரை எழுதுவதற்கான பயிற்சியை அளிப்பது எந்தப் பயனையும் தராது என்பதை உணர்ந்து செயல்பட்டால் அதன் பலன் திருப்திகரமாக இருக்கும். வாசித்தல் என்பது ஒரு கலை, நுனிப்புல் மேய்வது போல் படிப்பதற்கும், ஆழ்ந்து படிப்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கி வாசிப்பை நேசிக்கும் பழக்கத்தை உண்டுபண்ணுவதே இதுபோன்ற ஊடகப் பயிலரங்குகளின் முதன்மையான பயிற்சியாக இருக்க வேண்டும்.

வாசிப்பின் மீதான நேசமும், எழுத்தின் மீதான ஆர்வமும் ஏற்படாதவரை முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படாது. இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாத்தைத் தூற்றியும், அவமதித்தும் ஒரு புத்தகமோ, நாவலோ எழுதப்பட்டால் நாம் வீதியில் நின்று கோஷமிடுவது நமது எதிர்ப்பை காட்டியதாக அமையுமே ஒழிய, அதற்குத் தகுந்த எதிர்வினையாகாது. நாமும் ஒரு புத்தக்கத்தையோ, நாவலையோ எழுதி வெளியிடுவதுதான் மிகச் சரியான எதிர்வினையாக இருக்கும். அறிவுத் தளத்திலும் எடுபடும் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

இவரது கட்டுரையில் சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ளன. உணர்ந்தால் நம்மிடையே ஆராக்கியமான மாற்றம் நிகழும் வாய்ப்புள்ளது.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment