Pear

ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தன. இதுபோது அந்த முஹம்மத் யூசுப் பின் ஈஸா என்னும் மாஜி குற்றவாளி முன்போல் எல்லாம் பாலைவனங்களில்

ஆறலை கள்வனாய் மறைந்து வாழவில்லை; கொலை செய்யப்பட்ட வழிப்போக்கர்களின் உடல்களைத் துழவிப் பொருள் ஈட்டவில்லை. ஆனால், ஒரு கண்ணியமான தரகராகக் காஹிராவில் உயர்ந்து உயிர் வாழ்ந்து வந்தார். இறைவனின் அருளும் ஒத்தாசை செய்து வந்தமையால், அவர் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகி வந்தது; லாபத்துக்குமேல் லாபம் பெருகியது. அவரோ தமக்கு வரும் இந்தப் பெரிய அதிருஷ்டத்துக்கெல்லாம் அந்த ஷஜருத்துர்ரே மூலகாரணம் என்று எண்ணிக்கொண்டார். எனவே, அவர் ஐசுவரியத்தை அள்ளிக் கொட்டி, அந்தப் பெண்ணைச் சகலகலாவல்லியாகப் பயிற்றுவித்ததுடன், வேளைக்கோர் உண்டியும், நாளைக்கோர் உடையுமாக வாங்கிக்கொடுத்து வளர்த்தும் வந்தார். ஈராண்டுகட்கு முன்னர், காலவித்தியாசத்தால் பர்கானா கடுநோயுள் வீழ்ந்து அகால மரணமடைந்து விட்டமையால், அந்த யூசுப் தமது சம்பாத்தியம் முழுதையும் நம் ஷஜருக்கே செலவிட்டுவந்தார்.

வறுத்த பார்லியால் செய்த மெல்லிய நல்ல ரொட்டிகளும், நெய்விட்டுப் பொரித்த விடைக்கோழி மாமிசமும், கீழ்த்திசையில் விளையும் மதுரமான வாசனைத் திரவியங்களால் பக்குவம செய்யப்பட்ட வாதுமை ஹல்வாக்களும், நறுமணமூட்டப்பெற்ற இனிய ஷர்பத்துகளும், வெண்ணெயையும் இறுகிய பார்கட்டிகளையுங்கொண்டு செய்யப்பட்ட மதுரமான தின்பண்டங்களும், தேனும் தினைமாவும் சேர்ந்த ருசிமிக்க பட்சணங்களும் ஷஜருத்துர் தினமும் சாப்பிடும் சாதாரண உணவாக இருந்தன. அதேமாதிரி, உடை வகைகளில் சீனா தேசத்து மினுக்குப் பட்டும், மோஸல் நாட்டு ஜரிகைப் பட்டுக்களும், இந்திய-டாக்கா மஸ்லினும், பாக்தாத் நகரின் பூவேலையமைந்த அழகிய நெய்யற்றுணிகளும் அவளுக்கு இயற்கையுடுப்பாகத் திகழ்ந்தன. தூரதேசத்துப் பவழங்களும், ஈரான் தேசத்து மணிகளும், ரோமாபுரியின் பொன்னாபரணங்களும், ஒபீர் முகத்துவார முத்துக்களும் அவளது இயற்கை அழகை மிகைபடுத்திக்கொண்டிருந்தன. மொத்தத்தில் பார்க்கப் போனால், ஒரு புகழுக்குரிய மன்னாதி மன்னனின் ஏகபுத்திரி எவ்வளவு கவனமாகக் கண்காணிக்கப் படுவாளோ, அதைவிட அதிகமாகவே நம் ஷஜருத்துர் கவனமாய் வளர்க்கப்பட்டு வந்தாள்.

காஹிராவுக்கு வந்த பின்னர் அவளது இயற்கை வனப்பு ஒவ்வொரு நாளும் எவ்வளவு முன்னேறிக் கொண்டேயிருந்ததோ, அதைவிட அதிகமாகவே அவளது விவேகமும் முதிர்ச்சியடைந்தே வந்தது. எந்த விஷயத்தையும் ஒரேமுறையில் கிரகிக்கும் சக்திபடைத்த ஏகசந்த கிராஹியாக அவளது ஞாபகத்திறன் அமைந்திருந்தமையால், பன்னிருபிராயம் நிரம்பப்பெறுமுன்னே சகல கல்வியையும் ஒழுங்காய்க் கற்றுத் தேர்ந்தாள். புத்திக் கூர்மையும், சாதுரியமான சம்பாஷணங்களும், தீர்க்கமான அறிவும், சமயோசித ஞானமும், கெட்டிக்காரத் தன்மையும் அவளை யூசுபுக்கு ஒரு பெரிய பாக்கியவதியாகவே ஆக்கிவைத்தன எனலாம்.

ஓர் இரவில் நடுச் சாமத்தில் ஷஜருத்துர் திடீரென்று விழத்துக் கொண்டாள். அப்போது யூசுப் தூக்கம் பிடிக்காமல் அந்த அறையில் மேலுங்கீழுமாய் உலவிக்கொண்டிருந்ததையும், அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்ததையும் உற்று நோக்கினாள்.

“அபூ! தூங்கவில்லையா?” என்று ஷஜர் அன்போடு கேட்டாள்.

“நீ விழித்துக் கொண்டாயிருக்கிறாய்? தூங்கம்மா, தூங்கு. இந்தச் சிறுவயதில் நீ தூக்கமின்மையால் கஷ்டப்படக் கூடாது,” என்று அவளருகில் நெருங்கிக் கூறினார் யூசுப்.

“அப்படியானால், இன்னங் கொஞ்சம் வயதான பின்னர் நான் தூங்காமல் இருக்கலாமோ?”

“கண்ணே! நள்ளிரவில்கூடவா நீ யுத்திவாதம் பேச வேண்டும்? அயர்ந்த நித்திரையைக் கெடுத்துக்கொண்டால், உன் மெல்லிய உடல் பாழாகிவிடுமே என்றுதான் நான் கவலைப்படுகிறேன்.”

“அப்படியானால், நீங்கள் மட்டும் ஏன் இப்படி உலவிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் உடம்பு கெட்டுப் பாழாகி விடாதோ?”

“உன் விஷயமான கவலையாலேயே எனக்குத் தூக்கம் வரவில்லை.”

“என்னைப் பற்றிய கவலையா!”

“ஆம், உன்னைப் பற்றியேதான் சதா சர்வகாலமும் நான் பெருங் கவலையுடன் வாடித் தவிக்கிறேன்.”

“எனக்கு யாதொருவிதக் கவலையுமில்லாமல் நான் மிகவும் குதூகலமாய்ப் பொழுதுபோக்கி வருகிறேனே! என்னைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?”

“கண்ணே! இப்படியே எத்தனை நாட்களுக்கு நீ காலங் கழிப்பாய்?”

“ஏன், தாங்கள் இங்கிருக்கிறவரையில் எனக்கென்ன கஷ்டம் வரப்போகிறது? நீங்கள் ஏன் இப்படித் திடீரென்று இல்லாததை நினைத்து வருத்தப்பட வேண்டும்! எனக்கொன்றும் புரியவில்லையே?”

யூசுப் மௌனம் சாதித்தார்.

“ஏன், தாங்கள் எங்கேயாவது வெளிநாட்டுக்குப் போகிறீர்களோ? அதுவும் எனக்குச் சம்மதமே. நானும் உடன் வருகிறேன்.”

“நான் அப்படியொன்றும் திட்டமிடவில்லை. ஆனால்,….”

“ஆனால், என்ன? ஏன் இப்படி விளங்காமல் புதிர் போடுகிறீர்கள்?”

“உன்னிடம் யான் எதையும் ஒளிக்க விரும்பவில்லை, துர்! நீ வந்ததிலிருந்து எனக்கு அதிருஷ்டத்துக்குமேல் அதிருஷ்டமாகவே இருக்கிறது. உன் அழகையும், உன் அறிவையும் பார்த்து நான் மிகவும் பெருமிதமடைகிறேன். என்னுடைய இந்தச் சந்தோஷமெல்லாம் கெட்டுப்போய்விடக்கூடுமோ என்று பயந்தே இதுவரை நான் விவாகமும் செய்துகொள்ளவில்லை. ஆனால், உன்னை நன்றாகப் படிக்கவைத்து, உன் அழகை இன்னம் நன்றாக அபிவிருத்தி அடையச் செய்து, நீயும் உன் பருவத்தை அடைந்த பின்னர் உன்னை ஓர் அமீருக்கு விவாகம் செய்து வைத்துவிட்டு. அதன் பின்பே நான் விவாகம் செய்துகொள்ள வேண்டுமென்று கங்கணங் கட்டியிருக்கிறேன். ஆண்டவனும் இதுவரை எனக்கு உதவியே செய்துவந்திருக்கிறான். ஆனால்…” என்று நிறுத்தினார்.

கேவலம் தன் பொருட்டாகவே யூசுப் பிரம்மசாரியாய் இருந்து வருகிறாரென்பதைக் கேட்டபின்னரே அவளுக்கு உணர்ச்சி பிறந்தது. அதுவரை அவள் யூசுப் தனிமனிதனாய் இருந்ததைப் பற்றி ஒன்றுமே சிந்தித்ததில்லை. வாஸ்தவந்தான். என்னெனின், பதின்மூன்று வயதேயடைந்த பாலிகை அவர் தமியராய்க் கஷ்டப்படுவதை எப்படி உணர்ந்திருக்க முடியும்? இப்போதுதான் அவள் சிந்திக்கத் தொடங்கினாள்.

“ஏன், நான் இருந்தால் என்ன? தாங்கள் விவாகம் செய்துகொள்ள நான்தானா இடையூறாயிருக்கிறேன்?”

“நான் அப்படிச் சொல்லவில்லையே! எனக்கு மனைவியென்று ஒருத்தி வந்துவிட்டால், நான் அவளையே அதிகம் கவனிக்க ஆரம்பித்துவிட நேரலாம். அவளும் உன்னை வெறுக்க நேரலாம். பிறகு உன்னுடைய கதி என்னாவது? அன்று நான் ஹாரூனுடன் நண்பனாயிருந்த பாவத்துக்காக உன் தந்தையை நீ இழப்பதற்கு நானும் ஓரளவு ஒத்தாசையாய் இருந்திருக்கிறேன். நான் அந்தப் பெரிய கொலைக் குற்றத்துக்கு ஏற்ற தண்டனையையே இன்னும் பெற்றுக் கொள்ளாமல் இருக்கும்போது, என் முட்டாள்தனத்தால் உன்னை நான் பிற்காலத்தில் திரஸ்கரிக்க நேர்ந்தால், அந்தப் பெரும் பாவத்தை நான் எப்படிப் போக்கிக் கொள்ள முடியும்? உன்னை நான் ஆண்டவனது அமானத்துப் பொருளாக இன்றுவரை பாவித்துப் பரிபாலித்து வருவதுடன், உன் தந்தையின் உயிருக்குக் கிரயமாக நான் சம்பாதிப்பதையெல்லாம் உன் மீதே செலவிட்டு வருகிறேன். நீயும் கூடிய விரைவில் பருவத்தை எய்தி விடுவாய். அப்போது உனது ரூபலாவண்ய சௌந்தர்ய தேஜஸ் என் கண்களை அதிகம் மயக்கிவிட்டால், இன்று உன் தந்தையாக விளங்கிவரும் நான், ஷைத்தானின் உசுப்புதலுக்கு இலக்காகி, உன்மீதே காமங்கொள்ள, அல்லது காதல் கொள்ளத் துணிந்துவிட்டால், என் செய்வது? பழைய பாவங்களைப் போக்கிக்கொள்ள நான் இந்தத் தண்டனைகளையும் பிராயச் சித்தங்களையும் அனுபவித்து வரும்போதே மீண்டும் புதிய பாவமா செய்வது?”

ஷஜருக்குக் கண் திறந்தது. யூசுப் கூறுவனவெல்லாம் நிஜந்தானே? “அப்படியானால், என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“அதுதான் புரியவில்லை. தக்கதொரு வழி தேடிக்கொண்டிருப்பதால்தான் சென்ற சில மாதங்களாக நான் ஒவ்வோரிரவும் கவலையின் காரணமாய்க் கண்விழித்துக் கொண்டிருக்கிறேன்.”

ஷஜர் சிறிது நேரம் கடுமையாக யோசித்தாள். ‘ஏன், என்னையே நீங்கள் மணந்து கொள்வதில் ஹராமான தவறென்ன வந்துவிடும்?’ என்று கேட்கலாமென்று நினைத்தாள். ஆனால் அவ்வெண்ணம் ஆவிரூபமாக இருந்ததேயொழிய, வார்த்தைகளின் உருவைப் பெற்றுக்கொள்ளவில்லை…. பேசாமலிருந்தாள்.

“என் தந்தையின் உயிர்க் கிரயமாக நீங்கள் பொருள் செலவிடுவதாகச் சொன்னீர்களே, சென்ற ஆறு வருஷங்களாக எனக்காக நீங்கள் செலவிட்ட ஆஸ்தி இப்போது ஈடாகி இருக்குமல்லவா?”

“ஷஜர்! எல்லாம் கற்ற நீயே என்னிடம் இப்படிக் கேள்வி கேட்கிறாயே? உன் தந்தையின் உயிர்க் கிரயத்துக்கு நான் ஈடுசெய்யக் கட்டுப்பட்டிருக்கிறேன் என்றாலும், அந்தக் கிரயத்தின் பெறுமதியை நிர்ணயிக்க வேண்டியவள் சட்டப்படி நீயல்லவா? நான் உனக்கு நஷ்டத்தை உண்டுபண்ணிய பிரதிவாதி. வாதியாகிய நீதான் உன் தந்தையின் உயிரின் கிரயத்தைக் கூற வேண்டும். ஈட்டுத்தொகையை நீ சொன்னால், நான் இதுவரை ஈடுசெய்து விட்டேனா, அல்லது இன்னும் பாக்கியிருக்கிறதா என்பதைக் கூறுகிறேன்.”

“தாங்கள் எனக்காக இதுவரை எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்? அந்தத் தொகை உத்தேசமாக எவ்வளவிருக்கலாம்?”

“நான் என்ன, கணக்கா எழுதி வைத்திருக்கிறேன்? எனக்குத் தெரியாதம்மா!”

“தோராயமாய்ச் சொல்லுங்களேன்.”

“நான் சொல்வதிருக்கட்டும். நீ கோரும் கிரயத்தை எனக்கு முதலில் சொல். ஏனென்றால், நான்தான் குற்றவாளி; நஷ்டஈடு கோரவேண்டியவள் நீ.”

ஷஜர் புத்திசாலிதான். ஆனால், யூசுபிடம் இந்த விஷயத்தில் அவளது கெட்டிக்காரத்தனம் பலிக்கவில்லை. சற்று யோசித்தாள். மார்க்கச் சட்டப்படி பார்த்தால், அவள்தானே அந்த உதிரக் கிரயத்தைக் கோர வேண்டியவள்? சென்ற ஆறு வருஷமாகத் தன்னால் யூசுபுக்கு எவ்வளவு செலவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதைக் கணக்கிட்டாள். ஏழு அல்லது எட்டாயிரம் தீனாராவது அவர் செலவு செய்திருக்கக் கூடுமென்று நிச்சயித்தாள். எனவே, அந்தத் தொகையிலும் சற்றுக் குறைத்துக் கணக்கிட்டாள்.

“என்னைக் கேட்டால், தாங்கள் என்னை இவ்வளவு அன்புடனும் ஆதுரவுடனும் நடத்தியதே அவ்வுதிரக் கிரயத்துக்கு ஈடாகி விட்டதென்று நினைக்கிறேன்,” என்று பையச் செப்பினாள்.

“அல்ல; அது கிரயமல்ல. உதிரக் கிரயமென்பதை நீ நாணயக் கணக்கில் சொல். அப்போதுதான் நான் ஆண்டவனுக்குப் பாவியாகாமல் போவேன்.”

“நாணயக் கணக்கில் சொல்லித்தான் ஆகவேண்டுமென்றால், ஏன், ஐயாயிரம் தீனார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!” என்று துடுக்காக மொழிந்தாள்.

“என்ன, ஐயாயிரமா? இவ்வளவுதானா? அதை நாளைக்கே நான் கொடுத்து விடுகிறேன்.”

“நான் ஐயாயிரம் தீனார் கோருவது என் தந்தை காலமான அன்றைய தொகையே. ஆனால், அதற்கப்பால்தான் இன்றுவரை தாங்கள் அதற்கு மேலேயே என் பொருட்டாகச் செலவிட்டிருக்கிறீர்களே? எனவே, நீங்கள் எனக்கு மேற்கொண்டு வேறு ஏதும் கொடுத்தால், அது கடன் தொகையாகவல்லவோ போய் முடியும்?”

“என்ன, என்னிடம் நீ முன்னமேயே அந்த உதிரக் கிரயத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டாயென்றா கூறுகிறாய்?”

“ஆம்; நான் அதையும் பெற்றுவிட்டேன்; அதற்குமேலும் பெற்றுவிட்டேனே!”

யூசுபின் கண்களில் நீர் மல்கியது. “நீ சொல்வது நிஜந்தானே?” என்று துக்கம் நெஞ்சையடைக்கக் கேட்டார்.

“ஏன் அழுகிறீர்கள்? அல்லா(ஹ்)வும் ரசூலும் அறிய நான் சொல்கிறேன்: நான் சொல்வது நிஜந்தான். குற்றம் இழைக்கப்பட்ட நான் தங்களை மன்னிக்கும்போது, தாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? என் தந்தையை நான் பறிகொடுத்தாலும், தங்களை நான் அந்த நாளிலேயே பெற்றுக் கொள்ளவில்லையா? அன்று தாங்கள் குதிரைமேலேற்றி என்னைக் கொண்டுவந்து இந்தக் காஹிராவில் சேர்த்துவிட்டிராமற் போயிருப்பின், என் தந்தையின் கழுதை என்னை இந்த இடத்துக்கு உயிருடனே கொணர்ந்துவிட்டிருக்குமென்று என்னால் நம்ப முடியவில்லை. திமஷ்கிலிருந்து காஹிராவரையில் ஒரு சாதாரணக் கழுதை மீது ஏழுவயதுக் குழந்தை கடுங்கோடையில் எப்படி உயிருடன் கடந்திருக்க முடியும்? என் உயிர் மறுநாளே கூட பிரிந்திருக்கலாம்! ஏனென்றால், நான் ஏற்கெனவே அவ்வளவு களைத்துப்போயிருந்தேன்.”

“அப்பாடா! என் நெஞ்சிலிருந்த பெரிய சுமை இப்போது இறங்கிவிட்டது. அப்படியானால், நான் அதிருஷ்டசாலிதான்!” என்று கூறிக் கொண்டே, படுக்கையின்மீது சாய்ந்துவிட்டார் யூசுப். ஷஜரும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாள்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 1-15 அக்டோபர் 2011

<<அத்தியாயம் 3>>     <<அத்தியாயம் 5>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment