“அது அல்லாஹ்வின் அனுக்ரஹமாயிருக்கிறது; அவன் அதனைத் தான் நாடியவருக்கு அருள்கிறான்; இன்னம், அல்லாஹ் மஹத்தான அனுக்ரஹத்தை யுடையவனாயிருக்கிறான்,”

என்று அல்லாஹுத் தஆலா தன் திருவேதத்தில் (குர்ஆன், 62:4) திருவுளமாயிருப்பதற்கு ஷஜருத்துர் எவ்வளவு பொருத்தமான இலக்காய்ப் போய்விட்டாளென்பதை எண்ணிப் பாருங்கள்!

ஸாலிஹ் ஐயூபி ஷஜருத்துர்ரை மணந்துகொண்ட பின்னர் அவருக்கு அதிருஷ்டத்துக்குமேல் அதிருஷ்டம் பெருகத் தலைப்பட்டன. கூரிய அறிவும், சிறந்த ஆற்றலும், இணையற்ற வீரமும் பெற்று விளங்கிய அவள் சுல்தானுக்கு ஒப்புயர்வற்ற பட்டத்து ராணியாக உயர்ந்துவிட்டதுடன், ஸல்தனத்தில் சங்கடமான சிக்கல்கள் விளையும்போதெல்லாம் அவளே தக்க மந்திராலோசனை கூறக்கூடியவளாகவும் மிளிரத் தலைப்பட்டாள். அமீர் தாவூதிடம் அவள் கற்ற அத்தனை ராஜதந்திர வித்தைகளும் இந்த ஸல்தனத்தின் சுக்கானை மிகத்திறமையாக உய்த்துச்செல்ல உதவி புரிந்தன என்று சொல்லலாம்.

இயற்கையாகவே அனேகருக்கு அறிவுத் திறமை இருப்பதுண்டு; ஆனால், அத்திறமையை எவ்வெப்பொழுது எப்படியெப்படி எவ்வெத் துறையில் பிரயோகிப்பதென்பது அவர்களுக்குத் தெரியாமல் திண்டாடுவதுமுண்டு. ஷஜருத்துர்ரோ, இதற்கொரு புறநடையாயிருந்தாள். பரம்பரையாக மன்னர் குலத்திலும் மந்திரி இனத்திலும் பிறந்த சிறந்த அரசியல் வல்லுந சிகாமணிகளேகூடச் சமாளிக்க முடியாத இசகு பிசகான இக்கட்டுச் சிக்கல்களையெல்லாம் அவள் தன் நுண்ணறிவு கொண்டு அவிழ்த்தெறியும் சாமர்த்தியத்தைக்கண்டு ஸாலிஹே வியந்து போவார். நாட்கள் செல்லச் செல்ல, அவர் அவளைக் கலக்காமல் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதற்குத் துணிந்ததில்லை. அன்றியும், அவள் கூறுகிற சமயோசித ஆலோசனைகள் மிகவும் சிறந்தனவாய் மட்டும் இருக்கவில்லை; ஆனால், அவற்றைவிடச் சிறந்தவற்றை எவரும் கூறமுடியாமலும் இருந்தது.

கொடைவள்ளலின் கீர்த்தியைக் கவிவாணர் வளர்ப்பதுபோல், ஷஜருத்துர்ரின் விவேகம் மிக்க நுண்ணறிவுத் திறன்மிக்க உன்னதமாக நாடோறும் வளர்ந்து கொண்டே வந்தது. ஆண்டவனும் அத்தன்மைத்தாய வியக்கத்தக்க அறிவாற்றலை அவளுக்கு ஊட்டி வந்தான். மிகச்சாதாரண அனாதைச் சிறுமியாயிருந்தவள் இவ்வளவு உன்னத உயரிய பதவியை அடைந்தது அதிருஷ்டவசமே என்று ஒருவாறு நாம் சமாதானம் செய்து கொண்டாலும், அவளுக்கிருந்த அரசியல் திறமை அவ்வாறு அதிருஷ்டவசத்தால் வாய்த்ததென்று எவரும் இயம்ப முடியாது. அது அவளுக்கென்று ஆண்டவனளித்த இயற்கை வரம். விஷயம் விசித்திரமாகக் காணப்பட்டாலும், உண்மை அதுவேதான்.

ஷஜருக்கு விவாகமாகி, அதாவது அவள் சுல்தானாவாக மாறி, ஆறுமாதங்களுக்குள்ளே அவள் பெயர் எல்லா மக்களின் வாயிலும் பேர்பெற ஆரம்பித்துக் கொண்டது. மன்னருடன் முன்னமே மக்கள் நெருங்கிப் பழகி வந்தபடியால், இந்த ராணி மீதும் அவர்களுக்கு நல்லபிப்ராயம் பிறந்து விட்டது. மேலும், மூனிஸ்ஸா உயிருடன் இருந்தபோதெல்லாம் பொது மக்களுக்கு அவரை அண்டவே அச்சமாயிருந்தது. அவர் சுல்தான் ஸலாஹுத்தீனின் குமாரியாய் இருந்தாரென்பதற்காக மரியாதை செலுத்தியவர் சிலர்; அவ்வம்மையார் ஷஜருத்துர்ரைப்போல் அரசியல் வியவகாரங்களில் தலையிடாமலிருந்தமையால் அவரை நெருங்காதவர் சிலர்; நெருங்கினால் எங்கே ஆபத்து அதிகரித்து விடுமோ என்று அஞ்சியவர் பலர். ஆனால், இப்போதோ, ஷஜருத்துர்ரை எல்லாரும் சுலபமாய் நெருங்கிக் குறைமுறைகளைச் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தனர். அன்றியும், சுல்தானே கூட ஷஜருத்துர்ரைக் கலந்தாலோசித்தேதான் அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறாரென்னும் விஷயம் காட்டுத் தீயேபால் எல்லாரிடையேயும் விரைவில் பரவியும் விட்டது.

ஷஜருக்குக் கண்ணியமும் கௌரவமும் உயர உயர, அவளும் அதற்கேற்பப் பூரிப்படைந்துகொண்டே வந்தாள். ஆனால், அவள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் சர்வ ஜாக்கிரதையுடன் நடந்துகொண்டாள். தான் மிகப்பெரிய அந்தஸ்தில் அமர்ந்திருந்தாலும், தான் சொல்வதை எவரும் தட்டவோ அல்லது எதிர்க்கவோ மாட்டாரென்று உணர்ந்திருந்தாலும், அவள் மனச்சாட்சிக்கு விரோதம் செய்ததே கிடையாது. மேலும், அவள் அமீர் தாவூதிடம் உலக ஞானங்களைக் கற்றுத் தேர்ந்தவளானமையால், தன் ஸ்தானத்தை அதே உயர்ந்த அந்தஸ்தில் இறுதிவரை நிலைநிறுத்திக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், தான் மேலும் மேலும் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டுவது அவசியந்தானென்று அவள் முற்றும் உணர்ந்திருந்தாள். வம்ச பரம்பரையாகவே அரச குடும்பத்தினரானவர்கள் இந்த உண்மையை உணர்வது துர்லபம். ஆனால், மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, இன்று பட்டத்து ராணியாக உயர்ந்திருக்கும் சர்வகலா வல்லியான ஷஜருத்துர் இந்த அடிப்படைக் கொள்கையைத் தினமும் தன் ஞாபகத்திலே வைத்துக்கொண்டிருந்தாள்.

இவ்விதமாக அரசாங்கமே அவள் கைக்குள் வந்துவிட்டது. அவள் இட்ட சட்டத்துக்கு எவரும் இரண்டு சொல்வதில்லை. ஸாலிஹுக்கோ, அவள் மீதிருந்த நம்பிக்கையும், பிரியமும் பன்மடங்கில் பெருகிக் கொண்டே போயின. இத்தகைய உத்தமோத்தமமான ஞானசிகாமணியைத் தாம் மனைவியாக அடையப்பெற்ற அதிருஷ்டத்தை எண்ணியெண்ணி அவர் அகமகிழ்வார். அல்லாஹ்வுக்கே நன்றி கூறுவார். நாளேற ஏற, அவர் தம் முதல் மனைவியை இழந்ததும் இத்தகைய கிடைத்தற்கரிய நாரிமணியைத் தாம் துணைவியாய்ப் பெறவேதான் போலுமென்று உளத் திருப்தியுடன் கருதிக்கொண்டார்.

அமீர்கள் இருந்த வரையில் அவர்கள் சுல்தானை எப்படிக் காப்பாற்றி வந்தார்களென்பதை அவள் மிக நன்றாய் உணர்ந்திருந்தமையால், இப்போது அவர்கள் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டனரென்பதை ஒருநாள் தெரிந்துகொண்டு. சகிக்கொணா வருத்தமுற்றாள். எனினும், செப்பனிட முடியாத அளவுக்கு அவ்விஷயம் போய் முடிவுற்றிருக்கும்போது, இனி என்ன செய்ய இயலும்? அவள் இதுபற்றி, சுல்தானிடம் ஒன்றும் பேசத் துணியவில்லை. ஆயினும், அவர் அமீர்களை ஒழித்துக் கட்டிய பின்னருங்கூட மனச் சாந்தியுடன் உயிர்வாழவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொண்டாள். சுல்தானின் சொந்தப் பாதுகாவற் படையினராகிய மம்லூக்குகளின் ஹல்கா நாடோறும் வளர்ந்து வருவதையும், சுல்தான் அப் படையினரின் வளர்ச்சி விஷயத்தில் அதிகமும் சிரத்தை பாராட்டி வருவதையும் அவள் கூர்ந்து கவனித்தாள். எனினும், இந்தப் பாதுகாவற் படையினரால் எத்தகைய சங்கடமோ, அல்லது துன்பமோ, அரசருக்கேனும் அல்லது அரசாங்கத்துக்கேனும், அல்லது பொதுமக்கட்கேனும் விளைந்துவிடக் கூடாதே என்னும் பெருங்கவலை அவள் மனத்தைப் பெரிதும் வாட்டிக்கொண்டிருந்தது.

சுல்தானின் நலத்தையே தங்கள் நலமென்று சதா கருதிவந்த அமீர்களை ஸாலிஹ் ஏன் கொன்றார்? அப்படி அவர்களைக் கொன்றதால் அவர் தமக்குப் பல பகைவர்களை உண்டு பண்ணிக் கொண்டதுடன், உயிருக்கு அஞ்சி ஏன் இப்பால் ஹல்காக்களை நியமித்துக் கொண்டார்? அமீர்கள் இருந்த ஸ்தானத்தில் அடிமைகளான மம்லூக் படையினரை சுல்தான் உண்டுபண்ணி விட்டதால், நிலைமை எப்படி முன்பைவிட உன்னதமடைந்திருக்கிறது? – இன்னோரன்ன பலப்பல ஐயப்பாடுகள் அவள் மனத்துள்ளே அலைமோதின. அவளுக்கு ஒன்றும் பைசல் தோன்றாமையால், சுல்தானையே கேட்க ஆரம்பித்தாள்.

“நாதா! எனக்கு நெடுநாட்களாக ஒரு பெரிய சந்தேகம் இருந்து வருகிறது. தங்களைக் கேட்காமல் இருக்க முடியவில்லை…,” என்று இழுத்தாற்போலப் பேசினாள்.

“கண்மணி! என்ன சந்தேகம்?”

”வேறொன்றுமில்லை. தாங்கள் பட்டத்துக்கு வந்து சில நாட்களுக்குள்ளே எல்லா அமீர்களையும் கைது செய்தீர்களே, அப்படிக் கைது செய்யப்பட வேண்டிய அத்துணைப் பெரிய என்ன குற்றம் அவர்கள் இழைத்தார்கள்?”

“ஷஜர்! பழைய வயிற்றெரிச்சலை இப்போது ஏன் நீ கிளப்புகிறாய்? அவர்கள் குற்றவாளிகளாயில்லாமலா கைது செய்யப்பட்டிருப்பார்கள்?”

“குற்றவாளிகளா! அரும்பாடுபட்டு அவர்கள் உள்ளன்புடனும் உண்மை நிறைந்த விசுவாசத்துடனும் தங்களை இந்த அரியாசனத்தின்மீது அமர்த்துவதற்காகப் புரிந்த அத்தனை தியாகங்களையும் குற்றமென்றா தாங்கள் கூறுகின்றீர்கள்?”

“கண்மணி! நீ அமீர் வீட்டில் வளர்ந்தவளாகையால், எதையும் ஒருதலைப் பட்சமாகவே உணர்ந்துகொண்டிருக்கிறாய். நான் சகல விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்துத் தீரயோசித்து ஆராய்ந்த பின்னரே அந்த அமீர்களைக் கைது செய்தேன். அப்பாலும் நான் நன்கு ஆலோசித்தே அவர்களைக் கொன்று தீர்த்தேன்.”

”நாதா! தாங்கள் யோசியாமலோ, அவசரப்பட்டோ, அந்த அமீர்களுக்கு அத்தகைய பெரிய தண்டனையைக் கொடுத்தீர்களென்று நான் கூற வரவில்லை. ஆனால், அவர்கள் அப்படி என்ன மாபெரும் பாதகத்தைச் செய்தார்கள் என்பதையே யான் தெரிந்துகொள்ள அவாவுறுகிறேன்.”

“ஷஜர்! நீ அமீர் தாவூதின் செல்வாக்குக்கு ஆளாகியிருந்தவளாகையால், இப்படியெல்லாம் பேசுகிறாயென்பதை நான் அறிவேன். ஆயினும், நான் அந்த மதிப்புக்குரிய பெரியார் தாவூத்மீது ஒரு குற்றமும் கற்பிக்கவில்லை. ஆண்டவனே அவரது ஆவிக்குச் சாந்தி அளித்தருள்வானாக! ஆனால், மற்ற அமீர்கள் இருந்தார்களே, அவர்கள்தாம் என் அண்ணனின் அநியாய வீழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் மட்டும் இந்நேரம் உயிருடன் விட்டுவைக்கப்பட்டிருந்தால், நான் இந்த நிலைமையில் இருக்க முடியுமா என்பதையும், உன்னை நான் மணந்திருக்க முடியுமா என்பதையும் நீ சிந்தித்துப் பார்!”

“என் அபிப்பிராயத்தைத்தான் ஒரே வார்த்தையில் ஒருதலைப் பட்சமானதென்று முதலிலேயே கூறிவிட்டீர்களே! அப்புறம் நான் சிந்திக்க வேண்டுவது என்ன இருக்கிறது?… அமீர்கள் இழைத்த குற்றத்துக்காகத் தாங்கள் அவர்களைப் பழிவாங்கியதாய்த் தெரியவில்லை. ஆனால், அவர்கள் எதிர்காலத்தில் குற்றம் இழைப்பார்களே என்று முற்கூட்டியே தீர்ப்புச் செய்து தண்டனை வழங்கியதாகத் தெரிகிறது. தாங்கள் இதையே நியாயமென்றும், நீதியென்றும், நேர்மையென்றும் கருதுகிறீர்கள்! அவ்வளவுதானே!”

”ஏன் இப்படிக் கோபிக்கிறாய்? அமீர்கள் என்பவர்கள் இருபக்கமும் கூர்மையான, நம்பிக்கைக்கு உதவாத, கொடிய நச்சாயுதங்கள் என்பதை நீ அறியமாட்டாய். அவர்கள் பேனைப் பார்த்தாலும் பார்ப்பார்கள்; அல்லது, காதையே கடித்தாலும் கடிப்பார்கள். சுல்தானை அவர்கள் நிஜமாய் நேசிக்கிற வரையில் அவர்களைவிட நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் எவரும் இருக்க முடியாதுதான். ஆனால், ஒரு கடுகளவாவது ஒரே ஓர் அமீராவது அதிருப்தி கொண்டுவிட்டால், அக் கொடிய கூட்டத்தினர் …. அப்பப்ப! நினைக்கவே பேரச்சமாயிருக்கிறது!”

கோபம் வீசும் வதனத்தில் தவழும் குறும்பு முறுவலுடன் அவள் சுல்தானைப் பார்த்தாள். ”ஆகையால், அந்த அமீர்களைக் கூண்டோடு கொன்றுவிட்டீர்கள் போலும்! எனவே, இனிமேல் தங்கள் உயிரும், பதவியும் யாதோர் அபாயமுமின்றி நிரந்தரமாக நிலைத்துவிட்டனவென்று திருப்தியுற்று விட்டீர்கள் போலும்!” என்று நையாண்டித் தனமாகக் கெக்கலித்துக் கூறினாள்.

ஸாலிஹ் அவ்வார்த்தைகளைக் கேட்டதும், நெஞ்சு சுறுக்கென்று தைத்தது. ஊமையாய் நின்றார்.

“நாதா! ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? அந்த அமீர்களைக் கொன்றொழித்த பின்னருங்கூடத் தாங்களேன் மன நிம்மதியற்றுக் காணப்படுகிறீர்கள்? அமீர்களை அழித்துவிட்டு. அந்த இடத்தில் மம்லூக்குகளை நுழைத்துக் கொண்டபடியால், தாங்கள் அமீர்களின் நண்பர்களுக்குக் கடும் பகைவராய்த் தோற்றமளிப்பதுடன், புதிய ஹல்காக்கள் அந்தப் பழைய அமீர்களைப் போல் நன்றி கெட்டவர்களாய்ப் போகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டிய அதிகப்படியான பொறுப்பையும் வருவித்துக் கொண்டீர்களே! இப் புதிய நிலைமை பழைய நிலைமையைவிட எந்த வகையில் தங்களுக்குத் திருப்தியூட்டுகிறதோ! அமீர்களை அளவுகடந்து நேசித்தவர்கள் உங்கள் மீதுள்ள கோபத்தால், உங்களுக்கு ஏதும் தீங்கு விளைப்பதாயிருந்தால்…?”

“ஷஜர்! நீ வித்தியாசமான முறையில் விசித்திரக் கற்பனைகளைச் செய்கிறாய். நான் சித்தப்படுத்தியிருக்கும் என் ஹல்காக்களின் திறமையை நீ அறியமாட்டாய். அவர்கள் என்னுடைய அடிமைகள். என்மீது மட்டற்ற அன்பும் நேசமும் விசுவாசமும் மிக்கவர்கள். எனக்கு எந்த அபாயமேனும் வருவதாயிருப்பின், அவர்கள் முன்னின்று அதைத் தங்கள் மீதே தாங்கிக் கொள்ளும் பெற்றி மிக்கவர்கள். என்னைப் பாதுகாப்பதற்காக உன்னுடைய பிறந்த தேசமாகிய துருக்கியிலிருந்தும், மங்கோலியாவிலிருந்தும் அவ் அடிமைகளை நான் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவர்கள் இப்போது ஆயிரக் கணக்கில் பெருகிப்போயிருக்கிறார்கள். தங்கள் உயிரைவிட அவர்கள் என் உயிர் மீதே எப்போதும் கண்ணாயிருக்கிறார்கள். அவர்கள் இங்கிருக்கிற வரையில் எனக்கு அச்சமென்பதே கிடையாது. நான் எங்கே வெளியிற் செல்வதாயிருந்தாலும், அந்த அடிமைகளே எனக்கு மெய்காப்பாளராகப் புடைசூழ்ந்து வருகிறார்கள். என்னை எவனேனும் தப்பித் தவறிக் கொல்ல நினைத்துவிட்டால், அதுவே போதும். – அவர்கள் அந்நொடியிலேயே சற்றும் ஈவிரக்கமின்றி அவனைக் கண்டதுண்டமாகச் சேதித் தெறிந்துவிடுவார்கள். அந்தப்புரத்துள் முடங்கிக் கி்டக்கும் உனக்கு எங்கே இந்தப் பெருமையெல்லாம் தெரியப் போகிறது?” என்று வீராவேசமாகப் பேசினார்.

ஷஜர் சிறிது யோசித்தாள். அவள் மூளை வெகு வேகமாய் வேலை செய்தது. “நாதா! நானொன்றும் அந்தப்புரத்தில் முடங்கிக் கிடக்கும் அறிவிலியென்று இனியும் தாங்கள் நினைக்க வேண்டாம். நான் ஒரு கேவலமான அறிவு படைத்த பெண்ணேதான் என்றாலும், எதையும் பகுத்தறிவுடன் உணராமல் பேசவில்லை. தங்கள் முன்னோர்களான பழைய ஐயூபிகள் செய்த அதே விதமான தவற்றைத்தானே தாங்களும் இப்போது வேறு உருவத்தில் செய்கிறீர்கள்? அவர்கள் காக்கேசிய நாட்டு அடிமைகளை வாங்கி வளர்த்தார்கள். அவ்வடிமைகள் நாளேற நாளேறப் பராக்கிரமசாலிகளாகி, இறுதியிலே அமீர்களாக உயர்ந்து தங்கள் சகோதரரையும் வீழ்த்தித் தாங்களே அழிந்தனர். அதற்குப் பதிலாகத் தாங்கள் இப்போது வேறு அடிமைகளை உற்பத்தி செய்திருக்கிறீர்கள். நாளா வட்டத்தில் இந்த அடிமைகள் உயர்ந்துகொண்டே போய், இறுதியில் அமீர்களாகவும் மாறிப் போய்விட்டால், அதிலென்ன அதிசயம் இருக்க முடியும்?”

“நீ என்ன, ஒன்றுமறியாப் பாலிகையே போல் பேசுகிறாயே, ஷஜர்! என் மூதாதைகள் செய்த முட்டாட்டனத்தால் அந்த அடிமைகள் அவ்வளவு உயர்ந்த பதவிக்கு வீணே உயர்த்தப்பட்டார்கள். என்னையும் அப்படிப்பட்ட மடயனென்றா நீ கருதுகிறாய்? இந்த அடிமைகளை நான் நடத்துகிறவிதமாய் நடத்தினால், இவர்கள் எப்படி அமீர்களாய் போவார்கள்? என் அடிமைகள் என்றைக்குமே அடிமைகளாகவேதாம் இருப்பார்கள்!” என்று அரச அகங்காரத்தடன் சீறினார்.

ஷஜர் சிரித்தாள். “இல்லை இல்லை; நீங்கள் இந்த அடிமைகளை நடத்துகிற வகையில், இவர்கள் வெறும் அமீர்களாகவா போவார்கள்! சே, சே! சுல்தான்களாகவே உயர்ந்து விடுவார்கள்! பின்னொரு காலத்தில் மம்லூக் சுல்தான்கள் மிஸ்ரின் ஸல்தனத்தில் அமர்ந்து விட்டால், அதிலென்ன அதிசயம் இருக்க முடியும்!”

அவளுடைய இத்தகைய குறும்புத்தனமான கிண்டல் மிகுந்த நையாண்டி வார்த்தைகள் ஸாலிஹை மிகவும் உறுத்தின. அவளோ, நகைக்கிறாள்; இவருக்கோ, கோபம் பொங்கி வழிகிறது!

“இம்மாதிரியெல்லாம் என்னிடம் குறும்பு வார்த்தைகளை உன்னையன்றி வேறெவராவது பேசியிருந்தால், இந்நேரம் என்னென்னவோ நடந்திருக்கும், ஷஜர்! நீ எனக்கு அனாவசியமாய் வீண் கோபமூட்டுகிறாய். என்னுடைய அடிமைகள் இந்த ஸல்தனத்துக்கு மன்னர்களாக உயர்வார்களென்று நீ எப்படிக் கூறலாம்? கேவலம் அடிமைகள், அதிலும் என்னால் காசு கொடுத்து வாங்கப்பட்ட அற்பர்கள், சுல்தான்களாகி விடுவரோ? உனக்கென்ன பித்தா பிடித்துவிட்டது?”

“எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை; உண்மையைத்தானே கூறினேன்? என்னைக் காசு கொடுத்து அடிமையாக வாங்கினவர் அமீர் தாவூத். தாங்களோ, என்னை அவர் வீட்டிலிருந்து சிறை பிடித்து வந்தீர்கள்; என்னைவிடக் கேவலமான பெண் வேறொருத்தி எவளிருக்கிறாள்? அப்படியிருந்தும், இன்று யான் இந்தப் பெரிய சாம்ராஜ்ய மன்னரின் பெருங்கோப் பெண்டாக உயர்ந்துவிடவில்லையா? ஒரு பெண்ணடிமையை இதுபோன்ற நிலைக்கு உயர்த்திவிடும் சக்தி மிக்க தாங்கள், தங்கள் அடிமைகளை அரசராக்குவது கடினமோ!”

ஸாலிஹ் இவ் வார்த்தைகளைக் கேட்டுப் பிரமித்துப் போயினார். அவருக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்க, அவள் சிரித்துக்கொண்டே இருந்ததால், ஸாலிஹுக்கு அழவும் முடியவில்லை, சிரிக்கவும் இயலவில்லை எனினும், கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டே, “என் புத்திரன் தூரான்ஷா உயிரோடிருக்கிற வரையில், ஐயூபி வம்சத்தினரைத் தவிர இந் நாட்டுக்கு வேறு எவரே சுல்தானாக உயர்வரென்று நீ நினைக்கின்றாய்?” என்று வேகமாய்ப் பேசிவிட்டு, விர்ரென்று வெளியே சென்றுவிட்டார்.

அவர் அவ்வாறு சென்ற பின்னர், அவள் நெடுமூச்செறிந்தாள். மிஸ்ரில் ஐயூபிகள் பட்டமேறியதுமுதல் அன்றுவரை நிகழ்ந்துள்ள சகல நிகழ்ச்சிகளும், அரசியல் மாறுதல்களும் அவளுக்கு மிக நன்றாய்த் தெரியுமாதலால், அமீர்கள் எப்படிப் பதவிக்கு உயர்ந்தனர் என்பதை அவள் நன்குணர்ந்திருந்தாள். அவள் மிஸ்ர் மன்னரின் மனைவியாக உயர்வதற்குச் சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னமேயே காக்கேசிய நாட்டு அடிமைகள் மிஸ்ர் தேசத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தனர். அந்த அடிமைகளே நாளாவட்டத்தில் சுல்தான்களின் அமீர்களாக உயர்ந்துபோயிருந்தனர். அத்தகைய அமீர்களுள் ஒருவரான தாவூதிடமே ஷஜருத்துர் விற்கப்பட்டாள். எனவே, முற்காலத்து ஐயூபிகளுக்கு அங்கக் காவலராயிருந்த காக்கேசிய அடிமைகளுக்குப் பதிலாக இக்காலத்தில் ஸாலிஹ் வேறு அடிமைகளைக் கொண்டுவந்து புகுத்தியதால், நிலைமையில் என்ன உயர்வு, அல்லது நன்மை விளைந்து விட்டதென்றே அவளுக்குப் புலனாகவில்லை. அல்லாமலும், அந்தப் பழைய காக்கேசிய அடிமைகளுள் அமீர்களாக உயர்ந்தவர்கள் போக எஞ்சியிருந்தவர்கள் இன்னம் பழைய அடிமைகளாகவே இருக்கிற சூழ்நிலையில், இன்னொரு அடிமைத் தொகுதியை இம்மன்னர் ஏன் உற்பத்தி செய்யவேண்டுமென்பதும் அவளுக்குப் புரியவில்லை. ஓரூரில் இரண்டு பைத்தியக்காரர் என்பதுபோல் இதுவும் இருக்கிறதே என்று அவள் மனமுருகினாள்.

தேச சரித்திரத்தை பயில்வீர்களானால், ஸாலிஹ் ஐயூபியின் ஆட்சி மகிமை எவ்வளவு பிராபலயமடைந்திருந்ததென்பதை நீங்களே கண்டு கொள்வீர்கள். அவர் அவ்வளவு பிராபல்யமடைந்ததற்கும் முழுக்காரணம் ஷஜருத்துர்ரின் கெட்டிக்காரத்தனமான ராஜதந்திர நிபுணத்துவமே என்று கூசாமற் கூறிவிடலாம். கணவர் மன்னர்பிரானே என்றாலும், அவர் இழைக்கக்கூடிய எந்தத் தவற்றையும் அவள் துணிந்து எடுத்துக்கூறித் திருத்தாமல் வாளா இருந்ததில்லை. எனவே, இப்போது ஸாலிஹ் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஹல்காக்களின் விஷயமாகத் தீவிரமாய் யோசித்தாள். செத்துப்போன அமீர்களை மீட்டும் உயிர்ப்பிக்க முடியாதென்பது வாஸ்தவமே; எனினும், இப்போதுள்ள அடிமைகள் வீண் அதிகாரம் பெறாதவர்களாகவே இருக்க வேண்டுமே என்னும் பெருங் கவலை அவளை வாட்டிற்று.

நாட்கள் ஓடின; காலசக்கரம் சுழன்றது. ஷஜருத்துர் கர்ப்பவதியாயினாள். ஸாலிஹோ, இக் கீர்த்திமிக்க கட்டழகிக்குக் குழந்தை பிறக்கப் போகிறதென்று தெரிந்து மட்டற்ற மகிழ்ச்சியால் குதூகலங் கொண்டுவிட்டார்.

இதற்கிடையில் ஸாலிஹ் மன்னருக்குப் பொதுமக்களின் பிரியமும் அன்பும் அதிகம் கிடைத்தே வந்தன. இதுவரை ஆட்சி செலுத்திய மற்றெல்லா ஐயூபி சுல்தான்களையும்விட, ஸலாஹுத்தீனுக்குப் பிறகு இவரே அவர்களுக்கு மனத்துக்கொத்த சிறந்த மன்னராய்ப் புலப்பட்டமையால், அவர்கள் கொண்டிருந்த அன்பு அதிகரித்து வந்தது. எனவே, அவர்கள் சுல்தானுக்குச் சிறப்புப் பெயர் கொடுக்க ஆரம்பித்தார்கள். மக்களே மனமுவந்து மன்னருக்குச் சிறப்பான பெயரை வழங்குவதென்றால், அதன் பெருமையை யாம் எங்ஙனம் வருணித்தல் இயலும்? அதிலும், அவர்கள் வழங்கிய பெயர் முஸ்லிம் சரித்திரத்திலேயே எந்த மன்னரும் அதுவரை பெற்றிராத பெயர். அதை அவர்கள் மன்னருக்குச் சூட்டினார்கள்.

ஹிஜ்ரீ 644-ஆம் ஆண்டு பிறந்த பின்னர் எல்லா மக்களுமே சுல்தானை “நஜ்முத்தீன்” – இஸ்லா மார்க்கத்தின் நட்சத்திரம் – என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். எனவே, சரித்திரத்தில் இன்றுகூட அம் மன்னரைச் சரித்திராசிரியர்கள் “சுல்தான் நஜ்முத்தீன் அஸ்ஸாலிஹ் ஐயூபி” என்றே அழைக்கின்றனர். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், அவரை நஜ்முத்தீன் மன்னர் என்றே நாமும் செப்பலாம்.

<<அத்தியாயம் 22>> <<அத்தியாயம் 24>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment