5. அபூஉபைதாவுக்கும் (ரலி) முஆவியாவுக்கும் (ரலி) வந்த மடல்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறையருளால் இங்கு அனைவரும் நலம். இதுபோல் அங்கு தங்கள் அனைவரின் நலத்திற்கும் விழைகிறேன். நாள் தவறாமல், வாரம் தவறாமல் பொழுதும் விடிகிறது; இரவும் தொடர்கிறது. போலவே, எந்த ஊராக இருந்தாலும் சரி; நாடாக இருந்தாலும் சரி, செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையம் என்று எல்லாச் செய்திகளிலும் ஏதாவது புகார், மறுப்பு; வழக்கு, விசாரணை.
அவ்வளவு எதற்கு? நம் வீட்டைப் பார்ப்போம். உங்கள் பிள்ளைக் குட்டிகள் மத்தியில் சாக்லெட் துவங்கி சிறியதும் பெரியதுமாய் ஏதாவது பிரச்சினைக்கு நீங்கள் நாட்டாண்மையாய் தீர்ப்பு அளித்திருப்பீர்கள். அல்லது மாமியார், மருமகள் பஞ்சாயத்துக்கு பம்மிப் பதுங்கியிருப்பீர்கள். நீதி சொல்லி அடங்கும் பிரச்சினையா அது? யாருக்குப் பேசுவது? யாருக்கு விட்டுத்தருவது என்று நீங்கள் மிரண்டதில்லை?
வீடோ, ஊரோ, நாடோ, நீதி வழங்கும் பணி அசாத்தியச் சுமை. நன்றாகக் கவனியுங்கள். இது சுமை என நிர்ணயிக்கும் ஒரே அளவுகோல் இறையச்சம். ஆனால், ஏக இறைவனின்மீது அச்சம் என்பது அலட்சியமாகி நடைமுறையில் மறையத் தொடங்குகிறது பாருங்கள், அப்பொழுதுதான் பணமும் செல்வாக்கும் நீதியை நிர்ணயிக்கின்றன. நீதியானது சந்தை மாடாய் விலைக்கு விற்பனையாகிவிடுகிறது.
உமர் (ரலி) நீதிபதி பதவி வகிக்கும் தமது ஆளுநருக்கு எழுதிய மடலை சென்ற மடலில் பார்த்தோமில்லையா? அதைப்போல் மற்றும் இரு தோழர்களான அபூஉபைதாவுக்கும் (ரலி) முஆவியாவுக்கும் (ரலி) மடல் அனுப்பினார் கலீஃபா உமர். வெகு சிறு வாக்கிய வித்தியாசம் தவிர்த்து இரண்டிலும் ஒரேவிதமான தகவல்கள்தான்.
நான் உங்களுக்கு எழுதியுள்ள இக்கடிதத்தில் எனக்கோ, உங்களுக்கோ பயன்படும் எந்த நன்மையையும் நான் ஒதுக்கிவிடவில்லை. ஐந்து பண்புகளைக் கடைப்பிடியுங்கள். அவை உங்களுடைய மார்க்கப் பற்றுதலுக்குப் பாதுகாவல் அளிக்கும். உங்களுக்கு வெற்றி வாய்க்கும்.
இருவர் உங்களிடம் வழக்கை எடுத்துவந்தால் தெளிவான சான்றைத் தேடுங்கள். நிச்சயமான சத்தியப் பிரமாணத்தைப் பெறுங்கள்.
எளியவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். அது அவர்கள் தங்களது வாதத்தை அச்சமின்றி எடுத்துரைக்க வைக்கும்.
வெளியூரிலிருந்து வந்திருப்பவர்களை அக்கறையுடன் நடத்துங்கள். இல்லையெனில் அவரது வழக்கை ஆராய காலம் அதிகமாகும்போது அவர் தமது வழக்கைக் கைவிட்டு தம் குடும்பத்தாரிடம் திரும்பிவிட நேரிடும். அவர்மீது அக்கறை செலுத்தாதவரே அவரது உரிமையை நிராகரித்தவராவார்.
வழக்குத் தொடுத்த வாதி, பிரதிவாதி இருவரையும் சமமாக நடத்தவும்; இருவரிடம் சமமான கவனம் செலுத்துங்கள்.
வழக்காடுபவர்களில் யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்று தெளிவு ஏற்படாவிட்டால் இருவருக்கும் மத்தியில் சமரசம் செய்துவைக்க கடுமையாய் முயற்சி செய்யுங்கள்.
அதிகமான விளக்கம் தேவையில்லாத எவ்வளவு எளிய மடல்; எத்தகு உயர் சிந்தனை; அக்கறை!
‘இந்தா உனக்கு அறிவுரை’ என்றில்லாமல் அது தமக்கும் என்பதை முதல் வாக்கியத்திலேயே தெளிவாக்கிவிடுகிறார் உமர். அவற்றைப் பின்பற்றினால் தத்தம் மார்க்க நலனுக்கு வெற்றி என்கிறாரே கலீஃபா? எனில், அவர்களது ஒவ்வோர் அசைவுக்கும் செயலுக்கும் இறையச்சம்தானே அச்சாணியாக இருந்திருக்கிறது.
அந்த ஐந்து அறிவுரைகளையும் மற்றொருமுறை படித்துப் பாருங்கள். கடலளவு ஆழம் புலப்படும். ‘அவையெல்லாம் நீதிபதிகளுக்கு ஆச்சு’ என்று ஒதுக்கிவிடாமல் நாமும் பின்பற்றலாம் என்பது புரியவரும். முயன்று பார்ப்போம்.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
-நூருத்தீன்
வெளியீடு: சமரசம் 01-15, அக்டோபர் 2013