முன் தேதி மடல்கள், மடல் 8

by நூருத்தீன்
8. கலீஃபா உமருக்கு (ரலி) வந்த மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருளால் நலம். அவ்விதமே தங்களது நலனுக்கும் விழைகிறேன். மடல்களைப் பரிமாறிக் கொள்ளும் இம்மடல்களில் தந்தி பற்றி சுருக்கமாய் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. புறா காலிலோ, அஞ்சல் தலை ஒட்டியோ அனுப்பப்படும் மடல்களில் அதற்கே உரித்தான ஒரு பிரச்னை உண்டு. கால அவகாசம். ஓரிரு நாளோ, ஒரு மாசமோ கழித்துத்தான் அனுப்புநரின் செய்தி பெறுநரை அடைந்து வந்தது. அதனால் கணினி தோன்றி இணையம் தோன்றா கற்காலத்தில் அவசர ஆத்திரத்திற்கு தகவல் சொல்ல தந்தி.

‘அவசரம் சரி. அதென்ன ஆத்திரம்?’ என்று ஆர்வப்படுபவர்களுக்கு ஒரு கதை. கற்பனையல்ல; நிஜம்.

சுமார் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு அது. சென்னை நகரில் வழக்கறிஞர் ஒருவர் தம் மனைவியுடன் வசித்து வந்தார். இருவரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள். ‘போய்ப் பார்த்துவிட்டு வருகிறேனே’ என்று கணவரிடம் சிலநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தம் தாயார் இல்லத்திற்குச் சென்றார் வழக்கறிஞரின் மனைவி.

அம்மா வீடு செல்லும் மனைவியர் சொன்ன நாளில் திரும்பி வந்துவிடுவார்களா என்ன? சற்று அதிக நாள் ஆகிவிட்டது. வழக்கறிஞர் முன்கோபக்காரர். கோபக்காரர்களுக்கு ஆத்திரம் வரலாமா? வழக்கறிஞருக்கு வந்துவிட்டது. அதட்டி கடிதமெழுதி, ‘உடனே கிளம்பிவா’ என்று உத்தரவிட அவருக்குப் பொறுமையில்லை. கடிதம் சென்றுசேர குறைந்தபட்சம் ஒருநாள் ஆகிவிடும். அதனால் தந்தி அனுப்பினார். வாசகம், ‘Start or stay.’

உடனே வா. அல்லது அப்படியே இருந்துவிடு என்று சூடு பறந்தது அந்த மூன்றே வார்த்தைகளில். அடுத்த ரயில் பிடித்து மறுநாள் காலை சென்னை வந்துவிட்டார் அவர் மனைவி.

இப்படியான ஆத்திர நிகழ்வுகள் தவிர அனைத்து அவசரச் செய்திகளுக்கும் தந்திதான் ‘உலகத்தின் நம்பர் ஒன்’ சாதனமாய்த் திகழ்ந்து வந்தது. எக்ஸ்பிரஸ், ஆர்டினரி என்று சேவையைப் பிரித்து அதற்கேற்ப கட்டணம் நிர்ணயித்திருந்தது தந்தி இலாகா. ஆர்டினரி தந்தி எனில் இரவு நேரங்களில் பெறுநரை அடையாது. ஆனால், மரணச் செய்தி எனில் அதற்குமட்டும் முக்கியத்துவம் அளித்து இரவிலும்கூட தந்தி இலாகா ஊழியர் வந்து வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிடுவார். அத்தகைய தந்தியில் வெளியே ‘XX’ குறியிட்டிருக்கும். கையெழுத்திட்டு தந்தியைப் பெறும்போதே மனம் பதட்டத்துடன் அழுகைக்குத் தயாராகிவிடலாம்.

தந்தியோ, மடலோ மரணச் செய்திகள் சோகம் வாய்ந்தவை; துக்கத்தைக் கிளறுபவை. இறந்தவர் நமக்கு எந்தளவு உறவு, நெருக்கம், நமக்கு அவர் கடன் பாக்கி என்பதைப் பொறுத்து நமது துக்க அளவு கூடும்; குறையும்.

சென்ற மடலில் உமர் (ரலி) எழுதிய மடலையும் அதில் கலீஃபா அபூபக்ரு (ரலி) மரணமடைந்ததையும் குறிப்பிட்டதைப் பார்த்தோமில்லையா? தோழர்களுக்கு அது பேரிழப்பு; துக்க நிகழ்வு. ஏனெனில்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மரணமடைந்து இரண்டரை ஆண்டுகள்தான் ஆகியிருந்தன; பாரசீகர்களுடனும் ரோமர்களுடனும் மும்முரமாய்ப் பெரும் போர்கள் நடைபெற்று வந்தன; நபி என்று வாதிட்ட சில பொய்யர்கள், இஸ்லாத்தை விட்டு வெளியேறியிருந்த முர்தத்கள் என்று பல குழப்பங்கள் தீர்க்கப்பட்டு மதீனாவில் அப்பொழுதுதான் அமைதிதிரும்பியிருந்த நேரம்.

அத்தகைய நேரத்தில் நபியவர்களின் அணுக்கத் தோழர், திறம்வாய்ந்த கலீஃபா அபூபக்ரு மரணம் என்பது தோழர்களுக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்திய செய்தி. ஆயினும் அத்தகு பெரும் இடியைத் தாங்கிக்கொண்டு, புதிய கலீஃபா உமருக்கு (ரலி) பதில் எழுதினார்கள் இரு தோழர்கள்.

அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ், முஆத் இப்னு ஜபல் ஆகியோரிடமிருந்து உமர் இப்னு கத்தாபுக்கு என்று தொடங்கியது அம்மடல்.

அஸ்ஸலாமு அலைக்கும். இணையற்ற அல்லாஹ்வை நாம் புகழ்கிறோம். நாங்கள் அறிந்தவரையில், தாங்கள் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டீர்கள். உமர் அவர்களே! தாங்கள் இப்பொழுது முஹம்மது (ஸல்) அவர்களுடைய உம்மத்தினருக்குப் பொறுப்பாளர். தங்களிடம் நண்பர்களும் வருவார்கள்; எதிரிகளும் வருவார்கள். மேல்குடி மக்களும் வருவார்கள்; சமூகத்தின் கீழ்மட்டத்தினவரும் வருவார்கள். வலிமையுள்ளவர்களும் வருவார்கள்; பலவீனமாவர்களும் வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் உம்மிடம் நீதி கோரும் உரிமை உள்ளது. ஆகவே,

உமர் அவர்களே! நீங்கள் விஷயத்தை எப்படிக் கையாள்வீர்கள் என்பதைச் சிந்தித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைப் பற்றி நாங்கள் உமக்கு நினைவுறுத்துகிறோம். அந்நாளில் மக்களின் மனங்களில் உள்ள ரகசியங்கள் வெளிப்பட்டு விடும். மறைக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அனைவரும் அந்த இறைவனுக்குக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். அனைத்தையும் அடக்கி ஆளும் இறைவன் அன்று அம்மக்களை தன் வலிமையால் அடக்கி வைப்பான். மக்கள் அவனுடைய நீதியை வேண்டி தாங்களே அடிபணிந்து நிற்பர். அவனுடைய தண்டனைக்கு அஞ்சியும் கருணையை நம்பியும் நிற்பார்கள்.

இந்தச் சமுதாயத்தில் சில மக்கள் இருப்பார்கள். அவர்கள் வெளித் தோற்றத்தில் சகோதரர்களாகவும் மனத்திற்குள் எதிரிகளாகவும் இருப்பார்கள் என்பதை நாங்கள் செவியுற்றிருக்கிறோம். அத்தகைய செயல்களிலிருந்து நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். இந்த மடலை தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். எந்த நோக்கத்துடன் எழுதியுள்ளோமோ அதற்கு மாற்றமாகக் கருத வேண்டாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

வாழ்வு, மரணம்; சுகம், துக்கம் என்று எந்த நிலையிலும் இறைவனின் நினைப்பும் அச்சமும் அவர்களிடம் குடியிருந்திருக்கின்றன. புதிய ஆட்சியாளர், தமக்கு தலைமைப் பொறுப்பு அளித்தவர் என்பதற்காக எத்தகைய சமரசமோ, பாசாங்கோ, முகத்துதியோ அறவே இல்லை. மாறாக இறைவனைப் பற்றிய அச்சத்தை அறிவுறுத்தித்தான் மடல் அனுப்பப்பட்டிருக்கிறது.

உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லும் எண்ணம் இல்லை என்பதை வலியுறுத்த, அம்மடலில் இறுதி பத்தியில் ஒரு விஷயத்தைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்களே, அதை இன்றைய நம் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விந்தையாய் இல்லை? இறைவனிடமும் நாமும் பாதுகாவல் தேட வேண்டும்.

மடலில் நினைவூட்டியிருக்கும் அந்த நாளைப் பற்றி இன்றே அச்சப்பட முயன்று பார்க்க வேண்டும்.

மற்றவை இன்ஷா அல்லாஹ் அடுத்த மடலில். வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-30, நவம்பர் 2013

Related Articles

Leave a Comment