முன் தேதி மடல்கள், மடல் 7

by நூருத்தீன்
7. அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ்வுக்கு (ரலி) வந்த மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நலம். நலமறிய ஆவல். ‘மதிப்பிற்குரிய’ என்று குறிப்பிடப்பட்டு நமக்குச் சில கடிதங்கள் வருமே கவனித்திருக்கிறீர்களா? அவை பெரும்பாலும் வர்த்தக, தொழில் ரீதியான கடிதங்களாக இருக்கும். உறவுகள் எழுதுபவை அப்படி துவங்குவதில்லை. அழைப்பிதழ்கள், திருமணத்திற்குமுன் இன்னமும் சண்டை தொடங்காத சம்பந்திமார்கள் என்று வேண்டுமானால் ‘மதிப்பிற்குரிய’ குறிப்பிட்டு வரலாம்.

மற்றபடி மக்களை ஆளும் சபைகளில், மேடைகளில் தம் தலைவரை மதிப்பிற்குரிய என்று விளிக்க ஆரம்பித்து, பேசிக் குவியும் புகழ் வசனங்கள் நமக்கு அத்துப்படி. அவர்களது நாவும் தலைவரின் காதும் கூசுகின்றனவோ இல்லையோ, நமக்குத்தான் காதினுள் அருவருப்பு.

இதில் வேடிக்கை, உயிருடன் இருப்பவரை கடவுள் அளவிற்கு உயர்த்தி, அவரது ஆயுள் முடிந்தவுடன் கடவுளாகவே ஆக்கிவிடுவதும் யதார்த்தக் காட்சி. ‘அப்படி என்னதான் அந்த அவரின் சாதனை’ என்று தொடர்புடையவரின் வரலாற்றைத் தோண்டினால், புகழ் வார்த்தைகளுக்கு நியாயம் சேர்க்கும் விஷயங்கள் எத்தனை தேறும் என்பது பெரிய கேள்விக்குறி.

கேள்விக்குறி இருக்கட்டும். பழைய நிகழ்வொன்றைப் பார்ப்போம்.

படை அணிக்குத் தலைவராகப் பொறுப்பேற்று போரில் எதிரிகளைப் பெரும் கலக்கு கலக்கிக் கொண்டிருந்தார் ஒரு தளபதி. அவருக்கு ‘அல்லாஹ்வின் போர் வாள்’ என்று அடைமொழியும் கூட. அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அவரது படையிலிருந்த மற்றொருவருக்குப் பொறுப்பு அளித்து கடிதம் அனுப்பினார் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்.

படை அணியின் தலைவராக இருந்தவர் தமக்குக் கீழ் இருந்தவரின் புதிய தலைமையில் அவருக்குக் கீழ்படிந்தவராக மாற்றப்பட்டார்.

இத்தகு தலைகீழ் மாற்றம், அதுவும் போர்க் களத்தில், அதுவும் பழைய தளபதி வெற்றிக்குமேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருக்கும்போது நிகழ்ந்தால், அந்தத் தளபதிக்கு எத்தகு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும். பிணக்கு, சச்சரவு தோன்றியிருக்க வேண்டும்?

எதுவும் இல்லை.

மட்டுமல்லாது, மாற்றல் உத்தரவுக்கான புதிய ஆணையை பழைய தளபதியிடம் உடனே காட்டாமல், ‘தா பதவியை’ என்று உடனே பிடுங்காமல் கடிதத்தை மறைத்து வைத்துக்கொண்டார் புதிய தளபதி. அப்படி மறைத்ததைக் கேள்விபட்டுதான் –

“அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக. உம்மை தலைவராக நியமித்து கலீஃபாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. வந்த கடிதத்தை எனக்குச் சொல்லாமல் இருந்திருக்கிறீர். எங்களுக்கு நீங்கள் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க என் பின்னால் நின்று தொழுதிருக்கிறீர்” என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்; அதட்டியிருக்கிறார் பழைய தளபதி காலித் பின் வலீத் (ரலி).

அதற்கு புதிய தளபதி அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி) என்ன பதில் சொன்னார்?

“உம்முடைய போர் திட்டம் நிறைவேறும்வரை அதில் நான் குறுக்கிட விரும்பவில்லை. அதை முடித்ததும் சொல்லலாம் என்றிருந்தேன். இவ்வுலக அதிகாரமல்ல நான் தேடுவது. உலக ஆதாயங்கள் அல்ல நான் விரும்புவது. அவை முடிவுக்கு வந்துவிடும். நாம் சகோதரர்கள். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுகிறோம்.”

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றச் செயல்படுகிறோம். இதில் பட்டம் என்ன? பதவி என்ன? தீர்ந்தது பேச்சு!

இஸ்லாமியப் படைகள் ஸிரியாவின் டமாஸ்கஸ் நகரை முற்றுகையிட்டிருந்த முக்கியமான நேரம் அது. முதலாம் கலீஃபா அபூபக்ரு (ரலி) இறந்துவிட இரண்டாவது கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டார் உமர் (ரலி). அபூபக்ருவின் மரணச் செய்தியைத் தெரிவித்து, அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ்வை புதிய தளபதியாக அறிவித்துக் கடிதம் எழுதி அனுப்பினார். அம்மடலில் முதலாம் கலீஃபாவைப் பற்றிய புகழ் வார்த்தைகள் இருந்தன. அனைத்தும் ரத்தினச் சுருக்கம்.

இறையச்சத்தை அடிப்படையாக அமைத்து வந்து சேர்ந்தது அந்த மடல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்சி புரிந்த அபூபக்ரு அஸ்-ஸித்தீக் மரணமடைந்துவிட்டார். நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம். அல்லாஹ்வின் கருணையும் அருளும் அபூபக்ரு அஸ்-ஸித்தீக்கின்மீது பொழியட்டுமாக.

வாய்மையுடன் அவர் செயல்புரிந்தார். நன்மையை ஏவினார். மென்மையானவர். அடக்கமானவர். அமைதியானவர். எளிய தன்மை வாய்த்தவர். தோழமையானவர். கூர்மதியாளர்.

அவரது இழப்பு நம்மீதும் முஸ்லி்ம்கள் அனைவர் மீதும் விழுந்துள்ள பேரிடர். இவற்றிலிருந்து நாம் அல்லாஹ்விடம் வெகுமதி தேடுகிறோம்.

நமது இறை பக்தியின் வாயிலாகவும் அவனது கருணையாலும் நமக்குப் பாதுகாவல் அளிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

நாம் வாழும் காலம்தோறும் நாம் அவனுக்கு அடிபணிய உதவுவானாக. நாம் இறந்தபின் நம்மைச் சொர்க்கத்தினுள் அனுமதிப்பானாக. அவன் அனைத்தையும் செய்யும் திறன் பெற்றவன்.

நீங்கள் டமாஸ்கஸ் நகரை முற்றுகையிட்டுள்ளீர்கள் என்று நாங்கள் அறிந்தோம். நான் உம்மை முஸ்லிம் படைகளின் தளபதியாக நியமிக்கிறேன். தாக்குதல் தொடுக்கும் உங்களது சிறு படைகளை ஹும்ஸ், டமாஸ்கஸ், ஸிரியாவின் இதர பகுதிகளுக்கு அனுப்பி தாக்குதல் நடத்துங்கள். நீரும் முஸ்லிம்களும் எது சரியென்று கருதுகிறீர்களோ அதற்கேற்பத் திட்டமிடுங்கள்.

நான் சொல்வதைத் தவறாக விளங்கி, உம்முடைய சிறு படைகளை ஆபத்திற்கு உட்படுத்தி விடாதீர்கள். உங்களை வென்று விடலாம் என்று எதிரிகள் நம்பிக்கைக் கொள்ளச் செய்துவிடாதீர்கள். மாறாக, உங்களுடைய முற்றுகைக்கு யாருடைய உதவி அவசியமில்லையோ அவர்களை மட்டும் அனுப்பி வைக்கவும். யாருடைய உதவி தேவையோ அவர்களை உம்முடன் வைத்துக் கொள்ளவும்.

உம்முடன் நீர் வைத்துக் கொள்பவர்களுள் காலித் பின் வலீத் இருக்கட்டும். அவரன்றி உமக்குச் சிரமம்.”

ஆட்சிமாற்றச் செய்தி, இறந்தவரின் பெருமை, புதிய நியமனம், இறையச்சம், இறை உதவி இறைஞ்சல், போரில் செயல்பட உத்தி, பழைய தளபதியின் மேன்மையையும் உதவியையும் வலியுறுத்தும் வாசகம் என்று எவ்வளவு உள்ளடக்கம் இவ்வளவு சிறிய மடலில்?

இது இப்படியென்றால், புதிய தளபதி எழுதிய பதில் மடல் மற்றொரு சிறப்பு. அதை அடுத்த மடலில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 1-15, நவம்பர் 2013

Related Articles

Leave a Comment