முன் தேதி மடல்கள், மடல் 11

by நூருத்தீன்
11. குஸ்ரோவுக்கு மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

மாணவப் பருவத்தில் நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு வசவு உண்டு. உங்களுக்குத் தெரிந்திருக்கும். படித்தது எந்த ஊராக இருந்தாலும் சரி; ‘கான்வென்ட்டோ’ அரசுப் பள்ளியோ; ஆங்கில மொழி வகுப்போ, தமிழோ, அது வெகு பொதுவான வசவு. ‘மக்குப் ப்ளாஸ்திரி’ மாணவனை திட்டித் தீர்க்க உதவும் வாசகம் அது. நினைவுக்கு வந்திருக்குமே. அதேதான்.

‘நீயெல்லாம் என்னத்த உருப்படப்போற. மாடு மேய்க்கத்தான் லாயக்கு.’

வீட்டிலும் பெற்றோர் இதைச் சொல்வது உண்டு. பிராணிகளை மேய்க்க எந்தத் திறமையும் தேவையில்லை என்பது ஒருபுறம் என்றாலும் உதவாக்கரையை இழிவுபடுத்த அந்த வாக்கியம்தான் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் கச்சிதமான வடிகால். உலக அளவிலும் அந்தக் காலத்திலும் அது புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். எப்படி என்கிறீர்களா? நபித் தோழர் ஒருவரின் மடல் ஒன்றில் அதற்கான தடயம் ஒளிந்துள்ளது. அந்த வேடிக்கையைப் பார்ப்போம்.

பாரசீகத்தின்மீது முஸ்லிம்கள் போர் தொடுக்க ஆரம்பித்ததும் பெரும் சூறாவளி வீசத் தொடங்கியது. இக்காலத்தில் புயல்களுக்குப் பெயரிடுகிறார்களே அதைப்போல் அந்தச் சூறாவளிக்கும் ஒரு பெயர் இருந்தது. மெனக்கெட்டு யோசித்து இட்ட பெயர் போலன்றி உண்மையான பெயர். அந்தப் புயலின் பெயர் காலித் இப்னு வலீத் (ரலி). ஏனெனில் பாரசீகர்களுடன் நிகழ்ந்த ஒவ்வொரு போரிலும் முஸ்லிம்கள் அடைந்த பெரு வெற்றி ஒரு சாகசம் என்றால் அதைச் சாத்தியமாக்கிய காலித் இப்னு வலீதின் வீரமும் திறமையும் பாரசீகர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிப் போயிருந்தன. அந்தப் பெயர் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது மிகையற்ற உண்மை.

இதற்கிடையே சிரியாவில் ரோமர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் படைகளுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகி அதிகப்படியான முஸ்லிம் படைகளின் உதவி தேவைப்பட்டது. கலீஃபா அபூபக்ரு (ரலி) காலித் இப்னு வலீதையும் குறிப்பிட்ட அளவிலான படையினரையும் பாரசீகத்திலிருந்து உடனே ஸிரியாவுக்குச் செல்லும்படி கட்டளையிட்டு விட்டார். அவ்விதமே ஒரு படை கிளம்பிச் சென்றது. அல் முத்தன்னா இப்னு ஹாரிதா (ரலி) பாரசீகத்தில் உள்ள முஸ்லிம் படைகளுக்குத் தலைமை ஏற்றுக் கொண்டார்.

காலித் இப்னு வலீத் (ரலி) பாரசீகத்திலிருந்து கிளம்பிவிட்டார்; சென்றுவிட்டார் என்று அறியவந்ததும், பாரசீகத்தின் புதிய அரசன் குஸ்ரோவுக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டது. நம்பிக்கையுடன் மூச்சுவிட்டான். இனி முஸ்லிம்களை வென்று விடலாம் என்ற கனவு அவனுடைய பகல் துயிலில் ஏற்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கில் வீரர்கள் அடங்கிய படையைத் திரட்டி அல் முத்தன்னா இப்னு ஹாரிதாவுக்குக் கடிதம் எழுதினான். அதில் இருந்த முக்கிய வாசகம் –

“நான் உங்களிடம் எனது படையினரை அனுப்பியுள்ளேன். அவர்கள் பாரசீகத்தின் மகா முரடர்கள். பன்றியும் கோழியும் மேய்ப்பவர்கள். அவர்களைக் கொண்டு நான் உங்களிடம் போரிடுவேன்.”

அதாவது முஸ்லிம்களை இளக்காரமும் ஏளனமும் புரிவதாக நினைத்து அவன் எழுதியிருந்த கடிதம் அது. காலித் இப்னு வலீத் சென்றபின், முஸ்லிம்களின் படைகளை எதிர்த்துப் போரிட கோழி, பன்றி மேய்ப்பவர்களே போதுமாம். போர் வீரர்கள் தேவையில்லையாம். அவனது உற்சாக மிகுதியில் நிகழ்ந்த தவறு என்னவென்றால் சுய ஏளனம். அதை அவன் கவனிக்கத் தவறிவிட்டான். ஆனால் அதைச் சரியாகக் கவனித்தார், படித்தார் அல் முத்தன்னா இப்னு ஹாரிதா.

குஸ்ரோவுக்குப் பதில் எழுதினார். மிகச் சுருக்கமான பதில். ஆனால், ஆழமான அழுத்தமான பதில்.

“நீ இருவகையினருள் ஒருவன். ஒன்று கொடுங்கோலன். உனது எதேச்சாதிகாரம் உனக்கு வரப்போகும் கேட்டையும் நாங்கள் பெறப்போகும் வெற்றியையும் முன்னறிவிக்கிறது. அல்லது நீ ஒரு பொய்யன். பொய்யர்கள் மிகவும் கடினமாகத் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையிலும் மக்கள் மத்தியிலும் மிகவும் இழிவாக வெளிப்படுத்தப்படுவார்கள்.

எங்களுக்குத் தோன்றுவது யாதெனில், எங்களை எதிர்த்துப் போரிட நீ குறிப்பிட்டுள்ள மக்களைத்தான் உன்னால் திரட்ட முடிந்திருக்கிறது. எங்களுடன் போரிடுவதற்கு பன்றிகளையும் கோழிகளையும் மேய்ப்பவர்களை மட்டுமே திரட்டுமளவிற்கு உனது வலிமையைக் குன்றச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”

‘எங்களை எதிர்த்துப் போரிட முறையான போர் வீரர்களைக் கூட உன்னால் திரட்ட முடியவில்லை. அச்சமுற்று விட்டார்கள் உன் வீரர்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாதவர்கள், பன்றி, கோழி மேய்ப்பவர்கள் என்று பிடித்தல்லவா எங்களுடன் சண்டையிட அனுப்பி வைத்திருக்கிறாய்’ என்ற அந்த நையாண்டி பதில் மடல் பாரசீகர்களுக்குத் தெரிந்துவிட்டது.

‘முட்டாளா நம் அரசன்?’ என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். பின்னர் நிகழ்ந்த அந்தப் போரிலும் முஸ்லிம்கள் வென்றார்கள்; பாரசீகர்கள் தோற்றார்கள் என்பது சுவையான தனி வரலாறு.

அடுத்த மடலில் வேறொன்று பார்ப்போம் – இன்ஷா அல்லாஹ்

வஸ்ஸலாம்.

அன்புடன்,

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 1-15, ஜனவரி 2014

Related Articles

Leave a Comment