4. கலீஃபா உமர் (ரலி) எழுதிய மடல்
அன்புள்ளங்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த மடலில் கலீஃபா அபூபக்ர் (ரலி) போர்க்களத்திலுள்ள தோழருக்கு எழுதியிருந்த மடலைப் பார்வையிட்டோம் இல்லையா? அவ்விதம் போர்க்களத்திற்கும் மதீனாவிற்கும் இடையே நிறைய மடல் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பிறகு களத்திற்கு வருவோம். இப்பொழுது நகருக்குள் சென்று வேறென்ன மடல் அனுப்பப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.
அபூபக்ருக்குப் பிறகு கலீஃபாவாகப் பொறுப்பேற்ற உமர் (ரலி) தோழர் அபூமூஸா அல்-அஷ்அரீயை (ரலி) இராக்கிலுள்ள பஸ்ரா நகரின் ஆளுநராகவும் நீதிபதியாகவும் நியமித்தார். தாம் தேர்ந்தெடுக்கும் ஆளுநர்கள், ஊழியர்கள் தகுதியுள்ளவர்களாக, சிறந்தவர்களாகத் திகழ வேண்டும் என்பதற்காக உமர் எந்தளவு மெனக்கெடுவார் என்பதை ‘அது ஓர் அழகிய பொற்காலம்’ தொடரில் படித்தது தங்களுக்கு நினைவிருக்கும். (பழைய இதழ்கள் இருந்தால் புரட்டிக் கொள்க; அல்லது சமரசம் இணைய இதழ் பார்வையிடுக).
நீதிபதிக்கான தகுதியும் சிறப்பும் நிறைந்திருந்தவர்தான் அபூமூஸா. ஆயினும் கலீஃபா உமர், நீதித்துறை சார்ந்த சட்டங்களை விவரித்து அவருக்கு மடல் எழுதினார். அப்துல்லாஹ் இப்னு ஃகைஸுக்கு என்று அபூமூஸாவின் இயற்பெயரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள அம்மடல் உமரின் ஆட்சி சிறப்புக்கு ஓர் உரைகல்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் அடிமை, கத்தாபின் மகன், அமீருல் மூஃமினிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஃகைஸுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும்.
நீதி வழங்குவது நிச்சயமான ஒரு கடமை. அது பின்பற்றப்பட வேண்டும். உம்மிடம் வழக்குகள் சமர்ப்பிக்கப்படும்போது அவற்றைப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஏனெனில் புரிந்துகொள்ள முடியாத வழக்குகளினால் அவற்றைச் சமர்ப்பிப்பவருக்கு பயனில்லை. மக்களைச் சமமாக நடத்துங்கள். தம்மை அநீதியான முறையில் நீர் ஆதரிப்பீர் என்று உயர்குடியைச் சேர்ந்த மனிதர் நம்பிவிடக்கூடாது; சமூகத்தில் நலிவுற்றவர் உமது நீதியில் நம்பிக்கை இழந்துவிடவும் கூடாது.
சாட்சியைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு – வாதி – வழக்குத் தொடர்பவரைச் சார்ந்தது. மறுக்கும் பிரதிவாதி இறைவனின்மீது சத்தியப் பிரமாணம் செய்வது நிபந்தனை. முஸ்லிம்களின் இடையே சமரசம் செய்துவைத்தல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய சமரசம் தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டதாகவும் ஆக்கி விடக்கூடாது.
முன்னர் ஒரு தீர்ப்பு வழங்கி, பின்னர் உங்களுடைய மனத்தில் அதை மீள் ஆய்வு செய்யும்போது வேறொரு முடிவுக்கு நீர் வரநேர்ந்தால் அது உம்மைச் சத்தியத்தின் பக்கம் மீள்வதைத் தடுக்கக் கூடாது. ஏனெனில் சத்தியம் நிலையானது. பொய்மையில் பிடிவாதமாய் நிலைத்திருப்பதைவிட சத்தியத்திற்கு மீள்வதே மேன்மை.
உம்மால் உறுதியான முடிவிற்கு வரமுடியாத ஒவ்வொரு பிரச்னையையும் கவனமாக ஆராய்ந்து பாருங்கள். குர்ஆன், சுன்னாவில் அதற்கான நேரடி ஆதாரம் இல்லையெனில் அப்பிரச்னைக்கு நெருக்கமான முன்னோடி வழக்கு உள்ளதா எனக் கண்டுபிடியுங்கள். ஒப்புமை செய்து எது அல்லாஹ்வுக்கு உவகை அளிக்கக் கூடியது, உண்மைக்கு நெருக்கமானது எனப் பாருங்கள்.
தமக்குப் பிறரிடமிருந்து கடன் வரவேண்டியுள்ளது என்று எவரெல்லாம் வழக்குத் தொடர்கின்றாரோ, சான்று சமர்ப்பிக்க அவருக்குப் போதிய கால அவகாசம் அளியுங்கள். அக்காலத்திற்குள் அவர் தகுந்த சான்றைச் சமர்ப்பித்தால் அவருக்குரிய உரிமையை மீட்டுத் தாருங்கள். சான்று அளிக்க இயலவில்லையெனில் அவர் தமது வழக்கைக் கைவிடச் சொல்லுங்கள். ஐயத்தைத் தவிர்க்க அதுவே சரியானதாகும்.
முஸ்லிம்கள் அடிப்படையில் நற்பண்பு அமைந்தவர்கள். ஆனால் எவரெல்லாம் ‘ஹத்’ தண்டனைக்காகக் கசையடி பெற்றனரோ, பொய் சாட்சி அளிப்பவர்கள் என்று அறியப்பட்டுள்ளனரோ அவர்களைத் தவிர. மக்களின் மனங்களில் மறைந்துள்ளவற்றுக்கு அல்லாஹ்வே பொறுப்பு. போதுமான சான்று, இறைவனின் மீதான சத்தியப் பிரமாணம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
பொறுமை இழப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள். வாய்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்விடமிருந்து ஏராள வெகுமதியை ஈட்டித்தரும். அளவற்ற வெகுமதியை மறுமைக்குச் சேர்த்து வைக்கும். எவரெல்லாம் நேரிய உள்நோக்கம் கொண்டு தம்மைத்தாமே பரிசோதித்துக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்; மக்களைக் குறித்து அவர் அஞ்சத் தேவையில்லை. ஆனால் எவரெல்லாம் மக்களிடம் போலி நடத்தையை மேற்கொண்டுள்ளனர் என்பதை அல்லாஹ் அறிந்துள்ளானோ அல்லாஹ் அவர்களது நடத்தையை வெளிப்படுத்திவிடுவான். இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் பெறப்போகும் வெகுமதியைச் சிந்தித்துப் பாருங்கள். வஸ்ஸலாம்.
பாருங்கள். அநீதி, அக்கிரம் புரிய சலுகை, பொய், புரட்டு, பித்தலாட்டம் போன்றவையெல்லாம் இயல்பாகி, நீதிபதிகளின் பதவி என்பதே கேலிக் கூத்தாகிவரும் இன்றைய நிலையில் கலீஃபா உமரின் இம்மடல் நமக்கு எவ்வளவு வியப்பளிக்கிறது. ஈமானும் இறையச்சமும் அடிப்படை என்று அமைத்துக்கொண்டால் எண்ணமும் எழுத்தும் பேச்சும் மூச்சும் இப்படித்தான் சத்தியம் பேசும் எனத் தோன்றுகிறது.
உமர் (ரலி) எழுதிய இம்மடல் ஓரிரு பக்கங்கள் இருக்குமா? ஆனால் மார்க்க அறிஞர்கள் இம்மடலை வியந்து பல நூற்றாண்டுகளாகப் பக்கம் பக்கமாய் விளக்கமும் குறிப்புகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் வரலாற்று ஆசிரியர் டாக்டர் அலி முஹம்மது ஸல்லாபி.
நீதிபதிகளாக இல்லாவிட்டால் என்ன, அறிஞராக இல்லாவிட்டால்தான் என்ன? பாமரர்களாகிய நமக்கும் இம்மடலில் நிறைய பாடங்கள் உள்ளடங்கியுள்ளன என்பது மட்டும் எளிய உண்மை.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
-நூருத்தீன்
வெளியீடு: சமரசம் 16-30, செப்டம்பர் 2013