Give Devil Its Due என்றால் பிசாசுக்கும் அதன் உரிமையைக் கொடு என்பதாகும்.
தா. இ. மும், பா. தா. வும் மறுபடியும் உயிர் பெறுவர் போலிருக்கின்றதை உணர்ந்ததும் எதிர்ப்பும் பொய்ப் பிரசாரமும் ஏற்பட்டன; என்றாலும் அஃது புத்துயிர் பெற்றெழுந்தே விட்டது.
ஜின்னா சாகிப் பலஹீன மற்றவரல்ல; அவரைத் தூற்றுபவர்கள் இல்லாமலில்லை. என்றாலும், பரம எதிரியாகிய காந்தியார் கூட ஜின்னா சாகிபுக்கு, ஒப்பற்ற விதமாய்,
“நானோ காங்கிரஸோ விட்டுக் கொடுத்ததனால் லீகுக்குத் தற்சமயம இருக்கும் பலம் ஏற்பட்டதென்று கூறுவது தவறு. ஐசுவரியமோ, பட்டங்களோ, விலைக்கு வாங்க முடியாத திறம் படைத்தவர் ஜனாப் ஜின்னா”
என்று 27-8-47இல், கல்கத்தாவில், பிரார்த்தனைக் கூட்டத்தில் பஹிரங்கமாகக் கூறினார். என்னதான் குறைகளிருந்தாலும், உலகத்திலேயே பெரிய முஸ்லிம் ராஜ்யத்தைப் போரின்றி ஸ்தாபித்ததற்கும், அழிந்துபோகும் நிலையில் இருந்த 10 கோடி மக்களின் கண் திறக்கச் செய்து ஒரு கட்டுப்பாடான சமூகமாக, 8 வருஷ காலத்துக்குள், மாற்றியமைத்ததற்கும், உலகமே, முக்கியமாக உலக முஸ்லிம்களே போற்றுகின்றனர். இதற்குத்தான் மகாத்மியம் என்பது.
இதை ஒட்டியே பா. தா. வும், அவர் கண்ட தா. இ. மும் தொடர்ந்த பலத்த எதிர்ப்புக்கிடையே சாதித்ததைத் தமிழ் நாட்டில் யாராவது சாதித்தார்களா என்று நான் பரிசீலனை செய்து பார்த்தேன். இன்றுவரை ‘இல்லை’ என்ற பதிலையே அவரை எதிர்ப்பவர்களும் கூறுகின்றனர்.
மனிதன் பலஹீனனாகவே தான் படைக்கப் பட்டிருக்கின்றான். ஏனையோரின் புகாரை நம்பியவர்களில் நானும் ஒருவனே. ஆனால், நான் என் பழக்கத்தை ஒட்டிச் சம்பந்தப்பட்டவர்களை நேரிலும், கடித மூலியமாகவும் சமாதானம் கேட்டேன். பா. தா. அவர்கள் கன்னத்தில் அறைந்தாற்போல், புள்ளி விபரங்களுடனும், உள்ளுணர்ந்து பார்த்த அதிகாரிகளின், நீதிபதிகளின் ஆதாரங்களுடனும் பதில் சொல்லுகின்றார்கள். திருப்பிப் பேச நம்மிடமோ, புகார் செய்கின்றவர்களிடமோ, ஆதாரம் இல்லை. இந்நிலையில் பா. தா. அவர்களின் நாணயத்தைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
நூறு குறை இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்த்தாலும், பா. தா. அவர்கள் தமிழ் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் செய்த தொண்டைப் போன்றது வேறு தமிழ் முதலாளியோ, முல்லாவோ, சங்கமோ, அன்ஜுமனோ செய்ததாகவும் இல்லை.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டுமானால், நான் பல தடவை பஹிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறேன், எனக்கு உருதுவோ, அரபியோ, பார்ஸீயோ, நல்ல தமிழோ, ஆங்கிலமோ தெரியாது என்று. என்றாலும், இன்று ஹாபிஸ், மௌல்விகளை யெல்லாம் அறை கூவும் அளவுக்கு, இஸ்லாத்தின் அடிப்படை சம்பந்தமான விஷயத்தில் எனக்குத் தைர்யமும், அறிவும் ஏற்பட்ட தென்றால், பெரும் பங்கு பா. தா. அவர்களின் எழுத்துக்களே, தா. இ. பத்திரிகையே என்றால், நான் முகஸ்துதி செய்யவில்லை, மிகை படுத்தவில்லை.
இந்த தா. இ. விழுந்தவுடன் எண்ணிறந்த முஸ்லிம் பத்திரிகைகளும், ‘இஸ்லாம்’ பத்திரிகைகளும் முளைத்தன. இவைகளில் ஒன்றும் என் அறிவை விருத்தி செய்து கொள்ளப் பயன்பட வில்லை. படாடோபமாய்த் தோன்றுவதும், அழுவாரும் வருந்துவாருமின்றி மறைவதுமாக இருக்கின்றன. இஸ்லாமிய பற்றும், நாணயமான இலட்சியமும் அற்றவர்களால் என்ன உருப்படியானது செய்யமுடியும்? வயிற்றுப் பிழைப்புக்குப் பாமரமக்களைப் படாடோப விளம்பரத்தால் ஏமாற்றத்தான முடிகின்றது. இதில் பலர் தாங்களும் ‘பத்திரிகை ஆசிரியர்கள்’ என்று விளம்பரம் பெறும் விளம்பரப் பிரியர்களாகவே தோன்றி மறைந்து விடுகின்றனர்.
இப்படியெல்லாமின்றி, பா. தா. அவர்கள் ஓர் இலட்சியத்துடன், தன் கௌரவமான உத்யோகத்தைத் தியாகம் செய்து, உருப்படியான ஊழியத்தைச் சமூகத்துக்கும், இஸ்லாத்துக்கும் செய்தார். இடையில், துரதிருஷ்டவசமாய், பல வந்தமாய் ஓய்வு பெற்றார். எல்லாம் நன்மைக்கே போலும்! மறுபடியும் இறைவனருளால் பக்க பலத்துடன் தோன்றியிருக்கின்றார், தா. இ. மூலமாக.
அப்பொழுது, அவர் தம்பி அப்துர் ரஹ்மான சாஹிப் அவர்களுடைய உதவி மட்டும் அவருக்கு இருந்தது. இப்பொழுதோ, ‘அப்பன்சாமி’யாகிய அவருடைய மூத்த மகன் அப்துல் ஜப்பார் சாகிபும் துணை செய்ய இருப்பதாகச் சமீபத்தில் பா. தா. அவர்கள் கூறினார்கள். ஆகையால் நிர்வாகத் திறமையில் கொள்ளை அனுபவம் பெற்ற பழைய மானேஜர் சாகிபும் புது முறுக்குடைய ஜப்பார் சாகிபும் சேர்ந்து தா. இ. த்தை முன் போலவே நாளடைவில் தினசரி யாக்கி விடக் கூடும் என்ற நம்பிக்கையிருக்கின்றது; இ. அ.
ஆனால், தா. இ. தினசரி ஆனாலும், மாதப் பதிப்பை மட்டும் தொடர்ந்து வெளியிடும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். 20 வருஷத்துக்கு முன் வெளிவந்த தா. இ. மாதப் பதிப்புக்கள் தாம் இப்பொழுதும் பலன் தருகின்றனவே யன்றி, வார, தினசரிப் பதிப்புக்கள் மறைந்து விட்டன. இதுவிஷயமாய் நேரில் பா. தா. அவர்களை கேட்டுக் கொண்டுமிருக்கின்றேன்.
மற்றோர் வேண்டுகோள்
பத்திரிகை வெளியிடும் வேலையில் தந் நேரத்தை யெல்லாம் செலவு செய்து விடாமல் பா. தா. அவர்கள் தாம் பூர்த்தி செய்து வைத்துள்ளதாக எனக்குக்காட்டிய குர்ஆன் மொழிபெயர்ப்பு, ஹதீஸ், ந. நா. மான்மியம் முதலிய இஸ்லாமிய அடிப்படை நூல்களை அச்சடித்து எங்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகும்படி தமிழ் முஸ்லிம்கள் சார்பாக வேண்டிக்கொள்ளுகிறேன்.” (சஹீஹ் புகாரீ, நாயக வாக்கியம் இரண்டும் வெளியாய் விட்டன. ந. நா. மான்மியம் அச்சாகி வருகிறது. இ. அ. குர்ஆன் ஷரீபு சீக்கிரம் அச்சாகும். ப-ர்.)
பெரியாரவர்களுக்கோ, வயது அதிகமாய் விட்டது (63). பழுத்த பழமாய்க் காட்சியளித்தார். சென்ற மாதம் இத்துடன் முன்னிருந்த சௌகர்யங்களில் 10-இல் ஒரு பங்குகூட, ஒரு மேஜை நாற்காலி கூட இல்லாமல், 50 வருஷத்துக்கு முன் செய்யப்பட்ட ஓர் அசௌகரியமான ‘ஈஸீச்’ சேரில், கூன் விழ உட்கார்ந்து கொண்டு, பொருத்தமற்ற கண்ணாடியுடனும், பவுண்ட்டின் பேனாவுடனும், நோன்பிருந்து கொண்டே, சதா எழுதிக் கொண்டும் பல கிரந்தங்களை ஆராய்ந்துகொண்டும் இருக்கப் பார்த்தேன்.
ஆனால் ஊக்கமும், உற்சாகமும், தன்னம்பிக்கையும், தைரியமும், முன்கோபமும், பழைய குரல் வேகமும் குறைந்ததாகமட்டும் காணவில்லை. ஆகையால், எனக்கு நம்பிக்கையிருக்கின்றது, அவர் நமக்கு இன்னமும் வழி காட்டுவார், பல வருஷங்களுக்கு என்று. பத்திரிகையை ஆரம்பித்து, மானேஜர் சாகிபுடன் ஜப்பாரிடம் சமாளிக்கும்படி கொடுத்துவிட்டுக் குர்ஆன்மொழி பெயர்ப்பு, ஹதீஸ், நபிகள் நாயகமான்மியம், இவைகளை மட்டுமாவது சீக்கிரம் அச்சடித்து எங்களுக்குக் கொடுத்து விட மற்றோர் முறை வேண்டிக் கொள்ளுகின்றேன். பா. தா. அவர்களைவிட நான் 15, 20 வயது குறைந்தவனாகையால் கடவுள் கிருபையானால், பா. தா. அவர்கள் விட்டுச் செல்லும் வேலையை அவருக்குப் பிறகு 15, 20 வருஷம் வரை நான் தொடர்ந்து செய்யக் கூடும். அதற்கு உதவியாக இருக்க இப்பொழுது கையில், தமிழில் குர்ஆன், ஹதீஸ், இறுதி நபியவர்களின் ஆராய்ச்சி நிறைந்த கிரந்தங்கள் பா. தா. அவர்களுடைய அரைகுறையான நூல்களைத் தவிர வேறொன்றுமில்லை, புராணக் குப்பைகள் நிறைந்த புராதான நூல்களைத் தவிர்த்து.
இறைவன், மௌலானா பா. தா. அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், உயிருள்ள வரைக்கும் எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்க வேண்டிய அனைத்தையும் கொடுக்கும்படி பிரார்த்திக்கொண்டு ‘அல்ஹம் துலில்லாஹ்’ என்று முடிக்கின்றேன்.
-குலாம்
தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 17-19