முஸ்லிம் இலக்ஷியம் இஸ்லாமே

by admin

ஸ்லாமிய சோதரீர்!

இப்பிரபஞ்சத்தில் இறைவனால் அருளப்பட்ட அருட் பாக்கியங்களில் மிக மகத்தானது “இஸ்லாமே” என்பதுதான் ஒவ்வொரு உண்மை முஸ்லிமுடைய உதரத்திலும் உயிரிலும் ஊறிப் போய் இருக்கும் உள்ளக் கிடக்கை. தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் உள்ளம் உவந்து உவகை பூத்து, எல்லாம் வல்ல இறைவனுக்கு ‘ஷுக்ரு’ என்னும் கடப்பாடு செலுத்துகிறான். அது மட்டுல்ல; அத்தகைய அரும் பெரும்பாக்கியமாய தீனுல் இஸ்லாத்தை ஆண்டவன் புறத்திருந்து நம் மாந்தர் கோடிக்கு அளித்தருளிய ஏக தெய்வத்தூதர் நபி கரீம் முஹம்மத் (சல்) அவர்களுடைய உம்மத்தில் “நானும் ஒருவனா யிருக்கிறேன்” என்று எண்ணும் போது, ஒவ்வொரு முஸ்லிமும் முகம் மலர்ந்து அகம் குளிர்ந்து, ஏதோ ஒருவகைப் பேரானந்தங் கொள்கிறான்; “அன்ப! நீ முஸ்லிம்தானே?” என்று கேட்டதும், “ஆம், அல்ஹம்து லில்லாஹ்!” என உடனே பதில் அளிக்கின்றான்.

இன்னம், லோகத்தில் எத்தனையோ வித மக்கள், எத்தனையோ வகைப் பொருட்களையும், சக்திகளையும் தெய்வங்களாக நினைத்துக் கும்பிட்டு வணங்கிக் கொண்டிருக்கும்போது, உண்மை முஸ்லிம் மட்டும் அங்கிங் கெனாதபடி எங்கும் நிறையும் சகல சக்திகளுக்கும் பிறப்பிடமாக உள்ள ஒரே தெய்வமாம் அல்லாஹுத் தஆலாவைத் தினம் ஐங்காலம் தொழுவதனால், அவன் லோகத்தில் எல்லா ஜனசமூகத்திலும் தானே சிறந்தவன் என்ற பெருமையும் கொள்ளுகின்றான். முஸ்லிம் கொள்ளும் இந்தப் பெருமை தெய்விகமான பெருமையாகும்.

“இன்று உங்களுக்கு உங்கள் சன்மார்க்கத்தைப் பூரணமாக்கித் தந்து விட்டேன். இன்னம் என்னுடைய அருட் பாக்கியத்தை உங்கள் மீது பரிபூரணமாய்ப் பொழிந்துவிட்டேன்; அதலின், உங்களுக்கு இஸ்லாமே சிறந்த சன்மார்க்க மென்பதை யான் தெளிந்தேற்றுக் கொண்டேன்,”

என, இறைவனே முஸ்லிம்களின் தன்மையை உன்னத ஸ்தானத்துக்கு உயர்த்திச் சந்தோஷங் கொண்டு பூரிக்கும்படி அனுமதி யளிக்கின்றான்.

முஸ்லிம்களின் பெருமை

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் பெருமை யடைவது நியாயமே; ஆனால், இப்பெருமைக்குரித்தான சன்மார்க்கத்தை நமக்குப் பரிபூரணப்படுத்தி, நம் மனோ பீஷ்டத்தை ஏற்றுக்கொண்டு, “இஸ்லாம்” எனும் சம்மான மளித்த அல்லாஹுத்தஆலாவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்? இதைப்பற்றி நாம் யோசிக்கிறோமா? உலகத்தில் ஒருவர் நமக்கு உபகாரம் செய்தால், அதைவிடச் சிறந்த உபகாரமாய் நாம் அவருக்குச் செய்வது தர்ம ரீதியாய் இருக்கிறது : அங்ஙனம் மறு உபகாரம் செய்யாதவனை “நன்றி கெட்டவன்” என்று லோக மக்கள் சொல்வார்கள்.

மனிதனுக்கு மனிதன் செய்யும் உபகாரத்துக்கே நன்றி செலுத்த வேண்டுமென் றிருக்கும்போது, நமக்கு உடலைக் கொடுத்து, உயிரைக் கொடுத்து, உயிர் வாழும் சாதங்களுங் கொடுத்து, யாவற்றினும் மேலான சன்மார்க்கமாய் “இஸ்லாமை”யும் தந்தருளிய இறைவனுக்கு நாம் எத்துணை அபரிமிதாய் நன்றி செலுத்த வேண்டும்! யோசித்துப் பாருங்கள்.

சோதரீர்! உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம்; மனிதன் ஒருவன் பொருளாலோ, பணத்தாலோ, உணவாலோ நமக்கு உபகாரம் செய்தால், நாம் அதைவிடச் சிறந்த முறையில் பொருளாலும், பணத்தாலும், உணவாலும் மறு உபகாரம் செய்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், சர்வ சம்பத்தும் நமக்கருள் பாவிப்பவனும், லோக ரக்ஷகனும் தயாபரனுமாகிய அல்லாஹுத் தஆலாவுக்கு என்ன மாதிரி ‘கைம்மாறு’ செய்து நன்றி தெரிவித்துக் கொள்ள முடியும்? என்று நீங்கள் என்னைக் கேட்பீர்கள்.

அல்லாஹ்வுக்கு நன்றி

வாஸ்தவம். அல்லாஹ்வுக்கு நம் பொருள் வேண்டாம்; பணம் வெண்டாம்; பண்டம் வேண்டாம்; பழம் புஷ்பம் தேங்காய் பாக்கு வெற்றிலை சூடங்கூட வேண்டாம். ஆனால், இறைவன் நமக்குப் புரிந்துள்ள ஆக்ஞைகள் பிரகாரம் நாம் பரிபூரண முஸ்லிமாக, உண்மை “முஹம்மதீ”யாக, மெய்யான மூமினாக இருக்க வேண்டியதே ஆண்டவன் நம்மிடமிருந்து கோரும் கைம்மாறு எனும் நன்றிச்செயல். இஸ்லாத்தின் போதனைகளை முற்றும் ஏற்று ஒழுகுதலால் நாம் பூரண முஸ்லிம்களாகின்றோம்; முஹம்மது நபி (சல்) உடைய போதனைகளைச் சரிவர ஏற்று நடப்பதால் நாம் மெய்யான “முஹம்மதீ”யாகின்றோம்; பக்தியும் வணக்கமும் மேற்கொண்டொழுகுவதால் சரியான மூமின் ஆகின்றோம்.

உங்களுக்கு ஆண்டவன் அருட்பாலித்த சர்வ சம்பத்துக்கும் பாக்கியங்களுக்கும் கருணாசாதனத்துக்கும் நீங்கள் ‘பணிவு-வணக்கம்-வழிபாடு’ என்னும் நன்றிகூடச் செலுத்த முடியாதா? முடியும். பணிவும், வணக்கமும்தான் இஸ்லாத்தில் முஸ்லிம் எனப்படுவதற்குரிய அடையாளம். இந்த வழியால்தான் ஆண்டவனுடைய அருட் பேருபகாரங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு வழிகளில் ஆண்டவன் நம்மிடமிருந்து பிரதியுபகாரங்கள் கோரவில்லை. பணிவு-வணக்க முறையில் நாம் ஆண்டவனுக்கு நன்றி செலுத்தாமல் இருந்து விடுவோமானால், நாம் ஆண்டவன்பால் நன்றி கெட்ட பதராகவும், துரோகியாகவும், வெறுக்கப்படுவராகவுமே யாக்கின்றோம். இத்தகைய கெட்ட பெயரும், துரோகத் தன்மையும், தெய்வ வெறுப்பும் நம்மைப் பீடிக்கா வண்ணம் அவ்வாண்டவனே நம்மைக் காப்பானாக! ஆமீன்.

“முஸ்லி்ம்” என்றால் யார்?

ஒவ்வொரு இஸ்லாமியரும் உண்மை முஸ்லிமாக வேண்டு மென்று கூறினேன். உண்மை முஸ்லிமாவதற்கு வழி என்னவென்று என்னை நீங்கள் கேட்கலாம். அதற்கும் பதிலும் இதோ தருகின்றேன்.

நாம் ஒவ்வொருவரும் நம்மை “இஸ்லாமானவர்” என்றோ, “முஸ்லிம்” என்றோ, “முஸல்மான்” என்றோ கூறிக்கொள்கிறோம். எதை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு நாம் கூறிக்கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். பலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டும் பாருங்கள். “எங்கள் பாவா இஸ்லாமானவரா யிருந்தார்; ஆதலால் நானும் இஸ்லாமானவனா யிருக்கின்றேன்,” என்று ஒரு சிலர் கூறுவர். “இதென்ன கேள்வி? முஸ்லிமுக்குப் பிறந்தவன் முஸ்லிம்தானே? இதைக் கேட்டா தெரிந்துகொள்ள வேண்டும்?” என்று வேறு சிலர் பதில் கூறுவர். “அஜீ சாஹிப்! நீர் ஏன் முஸல்மானாக இருக்கிறீர்?” என்று யாரையாவது கேட்டுப்பாருங்களே. “ஹா! நான் முஸல்மானாக இல்லாமல் காபிராக இருக்க வேண்டுமென்றா நீர் விரும்புகிறீர்? நீர், என் நண்பரென்று பேசாதுவிட்டேன்; வேறு எவராவது இப்படிக் கேட்டிருந்தால்…” என்று ஆக்ரோஷத்தோடு பதில் சொல்வார்.

முஸ்லிமுக்குப் பிறந்ததால்தான் நாம் முஸ்லிமாயிருக்கிறோம் என்று பெரும்பாலான நம் பாமர மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தோ, என்ன அறியாமை! பிராம்மணருக்குப் பிறந்தவர் பிராம்மணர்தாம்; ராஜபுத்திரருக்குப் பிறந்தவர் ராஜபுத்திரர்தாம். சூத்திரருக்குப் பிறந்தவர் சூத்திரர்தாம். ஏனெனின், இதெல்லாம் ஒவ்வொரு ஜாதியின் பெயர்; குலத்தின் பெயர்; பரம்பரைப் பெயர். “முஸ்லிம்” என்பது ஒரு குலத்தின் பெயரல்ல; கோத்திரத்தின் பெயரல்ல; ஜாதியின் பெயரல்ல; ஆங்கிலேயன் குடும்பத்தில் பிறப்பதால் ஒருவன் ஆங்கிலேயனாகப் பாவிக்கப்படலாம்; லார்டு வம்சத்தில் பிறப்பதால் லார்டாகக் கருதப்படலாம். ஆனால், முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகக் கருதப்பட, அழைக்கப்பட நியாயமே இல்லை.

முஸ்லிமுக்குப் பிறந்தவன் முஸ்லிமா?

பட்டாணியன் மகன் பட்டாணியனாக இருந்தாலும், சய்யித் மகன் சய்யிதாக இருந்தாலும், தீனுல் இஸ்லாத்தைத் தன் இலக்ஷியமாய் ஏற்றுக்கொள்ளாத வரை எவனும் முஸ்லிமாக விளங்க முடியாது. முஸ்லிம் பெற்றோர்க்குப் பிறந்த ஒருவன், இஸ்லாமிய கோட்பாடுகளின் பிரகாரம் நடந்துகொள்ள வில்லை யாயின், அவன் முஸ்லிமாகக் கருதப்படவே கூடாது; இஸ்லாத்தைவிட்டு விலகிப் போனவன் என்றே அவன் கணிக்கப்படுவான்.

முஸ்லிம்கள் வீட்டில் முஸ்லிமாகப் பிறப்பதே ஒரு பெரும் பாக்யம் என்று உங்களில் ஒரு சிலர் சொல்லலாம். முஸ்லிமாகப் பிறப்பது பாக்யம்தான். அந்தப் பாக்கியத்தையும் பிறகு ஒருவன் உதறி எறிந்துவிட்டு, இஸ்லாமிய வரம்பை விட்டு வெளியே போய்விட்டால், அவனைப் பாக்யவான் என்று எப்படிச் சொல்லமுடியும்? குப்பை மேட்டின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு ஒருவன், “நான் அரண்மனையில் பிறந்தவன்; என்னை எல்லோரும் ராஜன் என்று கூப்பிடுங்கள்,” என்று சொன்னால், அவனை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? பைத்தியக்காரன் என்று தானே பட்டம் சூட்டுவீர்கள்?

அங்ஙனமே நம்மில் ஒருவன் முஸ்லிம் வீட்டுப் பிள்ளையாக இருந்தும், தொழ மஸ்ஜிதுக்குப் போகாமல், கள்ளுக் கடைக்கும் வேசி வீட்டுக்கும் போய் வந்துகொண்டிருந்தால், அவனை முஸ்லிம் எ்னறு நாம் எங்ஙனம் அழைக்க முடியும்?

அந்தக் குடிகாரனும் முஸ்லி்ம வீட்டில் பிறந்த பாக்கியவான்தான்; வியபிசாரகனும் முஸ்லிமுடைய பிள்ளைதான். ஆனால், அவனது உள்ளத்தில் ஈமான் எனும் பிரகாசம் இல்லையே! அவனது உடம்பில் இஸ்லாம் என்னும் இலக்ஷணம் இல்லையே! இப்படிப்பட்ட தேஜஸோடும் இலக்ஷணத்தோடும் எத்தனை பேர் இக்காலை இருக்கிறார்க ளென்பதைச் சற்றுநேரம் சிந்தித்துப் பாருங்களே.

எனவே, முஸ்லிமாகப் பிறப்பதுமட்டும் அருட் பாக்யமில்லை; ஆயுள் முழுவதும் இஸ்லாமிய இலக்ஷணத்தோடு ஒழுகிக் கொண்டிருப்பதே பேரருட் பாக்யமாகும். இத்தகைய அருட்பாக்யம் சுயமே சூல் வழியாய் வந்து புகுந்துவிடுவதில்லை. நம்பிக்கையாலும், ஒழுக்கத்தாலும். உறுதியான நடப்பாலுமேதான் இந்தப் பாக்யம் நிலைத்திருக்கும். இஸ்லாமிய கட்டுப்பாட்டுடனும் எல்லை மீறாமல், மனதையும் புலன்களையும் ஆண்டவன்பால் சமர்ப்பித்து, எவன் என்றென்றும் மூமினானவனாய் நடந்துகொள்கிறானோ, அவனே முஸ்லிம்; அவனே பாக்யவான்; அவனே மாந்தரில் சிறந்தவன். அவனுக்கே சாந்தி! சாந்தி!!

–ரஹ்மத் பாகவீ


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947

பக்கம்: 19-22

Related Articles

Leave a Comment