அங்கம்:— ஹுதைபிய்யா கட்டம்.

களம்:— ஹுதைபிய்யா.

காட்சி:— அவ்வுடன்படிக்கை நிகழ்வுறும் அமயம்.

நேரம் மாலை:— அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்), அபூபக்ர், உமர், அலீ, மற்றும் பல தோழர்களும், குறைஷியர் பிரதிநிதி ஸுஹைல் பின் அம்ரும் அமர்ந்துள்ளார்கள்.

[அபூஜந்தல் – ஸுஹைலின் சொந்தக் குமாரன் காலில் கட்டிய சங்கிலியுடன் ஓடி வருதல்]

அபூஜந்தல்:— அந்தோ! அந்தோ! அஹ்மத் நபி இங்கிருக்கும்போதுமா இந்த அநியாயம்? மூன்று மகாயுத்தங்களில் முதுகொடிய முறியடிக்கப்பட்டும், குறைஷியர் இன்னும் இப்படிச் செய்கின்றனரே! இதற்குக் கேள்விமுறையில்லையா? யா ரஸூலல்லாஹ்! [என்று கூறித் தேம்பித் தேம்பியழுகிறார்.]

உமர் (ரலி):— இஃதென்ன கொள்ளை! இஃதென்ன அலங்கோலம்! உடம்பெல்லாம் உதிரக் களரி! சரீர முழுதும் சிரங்கே போன்ற ரணங்கள்!

அபூபக்ர் (ரலி):— காலிலென்ன சங்கிலி!

அலீ (ரலி):— நீர் தீனுலிஸ்லாத்தைத் தழுவியதனாலா இத்தனை தொல்லை?

உமர்:— இப்படிப்பட்ட கொடுமையா இஸ்லாத்தைத் தழுவியதற்கு? இரு காலில் விலங்கு! மேனியெல்லாம் இரத்தக் காயம்!

இனியொரு தோழர்:— ஒரே ஆண்டவனைத் தவிர்த்து வேறே தெய்வமில்லையென்று கூறியதற்காகவா? எத்தனை கொடிய தண்டனை!

அபூஜந்தல்:— ஆம்! யான் வெறெந்தக் குற்றமும் செய்யவில்லை. அதோ இருக்கும் என் பிதாவையே கேளுங்களே.

ஸுஹைல்:— மூதாதையர் மதத்தை விட்டு இஸ்லாத்தை தழுவுவதைப் பார்க்கிலும் வேறென்ன பாதகம் பெரிதாயிருக்க முடியும்?

உமர்:— இப்படிப்பட்ட நிலையில் ஹுதைபிய்யாவில் என்ன உடன்படிக்கை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது?

அலீ:— தன் மதிப்பிற்கு இடமில்லா உடன்படிக்கையும் ஓர் உடன்படிக்கையா?

உமர்:— அதைத்தானே யானும் கேட்கிறேன்! “மான மழிந்தபின் வாழாமை முள்ளினிதே” யன்றோ? நாம் சென்ற மூன்று மஹாயுத்தங்களில் – ஹிஜ்ரீ 2-இல் பத்ரிலும், ஹி. 3-இல் உஹதிலும், ஹி.5-இல் அகழடியிலும்- அந்தக் குறைஷியரின் இடுப்பை ஒடித்து விட்டிருக்க, இன்று இந்த ஹுதைபிய்யாவில் இத்தகைய அநீதியா?

ஸுஹைல்:— உடன்படிக்கை எழுதி முடிந்துவிட்டதே!

வேறொரு தோழர்:— அதிலென்ன, அபூஜந்தலை நீங்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமென்றா எழுதப்பட்டிருக்கிறது?

ஸுஹைல்:— இல்லை; அவ்வுடன்படிக்கையில், “காபிர்களுள், அல்லது முஸ்லிம்களுள் எவரேனும் மதீனாவிற்குச் சென்று புகலிடம் தேடிக்கொள்வராயின், அன்னவரை மக்காவிற்கே திருப்பியனுப்பிவிடல் வேண்டும். ஆனால், முஸ்லிம்களுள், எவரேனம் மதீனாவைவிட்டு மக்காவில் வந்து தங்கி விடுவதாயின், அன்னவர் மதீனாவிற்குத் திருப்பியனுப்பப் படமாட்டார்,” என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.

அந்தத் தோழர்:— இஃதென்ன, அநீதி! அபூஜந்தல் இஸ்லாத்தில் சேர்ந்து, உங்கள் துன்பம் சகிக்க முடியாது எங்கள் பால் ஓடிவந்து விட்டார்; இவரை யாங்கள் எப்படிக் குறைஷியரிடம் ஒப்புக் கொடுப்பது?

ஸுஹைல்:— அப்படித் தானப்பா அதில் வரையப்பட்டிருக்கிறது.

உமர்:— அதுமட்டுமல்லவே! மதீனா முஸ்லிம் எவரேனம் மக்காவிற்கு ஓடிவிட்டால், அன்னவரை அக் குறைஷியர் நம்மிடம் திரப்பினுப்ப மாட்டார்களாம்!

அலீ:— அதுதானே அதிக அநீதி!

வேறொரு தோழர்:— இஃதென்ன உடன்படிக்கை!

இன்னமொருவர்:— ஒருதலைப் பக்ஷமான உடன்படிக்கை!

உமர்:— அதுதான் எனது அபிப்ராயமும். அக்கிரம நிபந்தனை; அநியாய நிபந்தனை.

எல்லாரும் சேர்ந்து:— அக்கிரமம்! அநியாயம்!!

உமர்:— இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்!

வேறொருவர்:— ஜயித்தகக்ஷி நம்முடையது; உடன்படிக்கையில் சலிகை அவர்கட்கு. நன்றாயிருக்கிறது இந்த நியாயம்!

அபூஜந்தல்:— இப்படிப்பட்ட உடன்படிக்கை எதற்கு? இதைக் கிழித்தெறிந்தாலென்ன? இறைவன் ஏகனேயென்றால், அதற்கு இத்தனை தகராரா? ஐயகோ! ஐயகோ!!

[இத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த நபிகள் நாயகம், தங்களுக்குள்ளே:—] அபூஜந்தல் நிலைமையைக் கண்டு என்மனம் நெக்கு நெக்கு உருகுகின்றது. இன்னம் ஹுதைபியாய உடன்படிக்கை நிறைவேறி முடிவுறவில்லையே; எனவே, இவர் விஷயத்தில் மட்டும் இச்சாஸனத்தில் ஒரு விலக்கு விதி ஏற்படுத்த இயலாதா? [ஸுஹைலை நோக்கி] ஸுஹைல்! இன்னம் இவ்வுடன்படிக்கை கையெழுத்திட்டு முடிவுபெறவில்லையே; உம்முடைய குமாரன் விஷயத்தில் ஏன் ஒரு விலக்கு விதியை ஏற்படுத்தக் கூடாது?

அபூஜந்தால்:— என்னருந் தந்தாய்! நீர் ஏன் என்னை விட்டுவிடக் கூடாது? யான் உங்கள்பால் பட்டதெல்லாம் போதாதா?

ஸுஹைல்:— [நபிநாயகத்தைப் பார்த்து] ஏ முஹம்மத்! இஃது இவ்வுடன்படிக்கையை நிறைவேற்றுதற்கு நுமக்கு வாய்த்துள்ள முதல் சந்தர்ப்பமாகும். இதில் நீர் வாக்குத் தவறினால், அப்பால் எப்படி நீர் அல் அமீனாக இருப்பது இயலும்? எனவே, என்மகனை, இந்த மதப்பாஷண்டனை, என்னிடத்தே இப்பொழுதே ஒப்படைத்து விடக்கடவீராக.

அபூஜந்தல்:— [தமது மேனியிலிருந்த இரத்தக் காயங்களையெல்லாம் எல்லார் முன்னும் திறந்து காட்டி] ஏ முஸ்லிம் சோதரர்காள்! இதே நிலமையிலா என்னை மீண்டும் பார்க்க நீங்கள் விழைகின்றீர்கள்? யானோ இஸ்லாத்தைத் தழுவிவிட்டேன்; இனிமேலும் என்னைக் குப்பார்களிடமா உயிரோடு ஒப்படைக்கப் போகிறீர்கள்? என்ன கொடுமை! என்ன கொடுமை!!

[அனைவர்க்கும் ஆத்திரம் ஜனித்தது; ஹஜ்ரத் உமருக்கு மேனி துடித்தது; உதடு படபடத்தது; கண்களிரண்டும் சிவந்து அனற்பொறி கக்கின. ஆகவே, அப்பெரியார் நாயகத்தை நோக்கி]:— யாரஸூலல்லா! தாங்கள் அல்லாஹ்வின் சத்தியத் திரு நபியல்லவா?

நபிகள்:— நிச்சயமாக யான் அல்லாஹ்வின் ஓர் உண்மை நபியாகவே இருக்கிறேன்.

உமர்:— நாமிருப்பது சரியான சத்திய சன்மாரக்கமல்லவா?

நபிகள்:— ஆம்; அப்படித்தான்.

உமர்:— அக்குறைஷியர் இருப்பது தவறான மாரக்கமல்லவா?

நபிகள்:— மெய்தான்.

உமர்:— சென்ற மூன்று மஹாயுத்தங்களிலும் அவர்கள்மீது நாமல்லவா வெற்றிக் கொடி நாட்டினோம்?

நபிகள்:— ஆம்; உண்மைதான்.

உமர்:— உண்மை இவ்வாறிருக்க, நம் சத்திய சன்மார்க்க விஷயத்தில் நாம் நம்மை எதற்காக இழிவு படுத்திக் கொள்ள வேண்டும்? உடன்படிக்கை இன்னும் கையெழுத்துப் போட்டுப் பூர்த்தியாகவில்லையே!

ஸுஹைல்:— நீங்கள் இப்பொழுதே இப்படி வாக்கு மீறுவிர்களாயின், நாங்கள் உங்கள் சமாதானத்தை ஏற்றுக் கொள்வது இயலாது; இயலாது. யான் இதோ எழுந்து செல்கிறேன்.

நபிநாயகம்:— [உமரை நோக்கி] நானோ அல்லாஹ்வின் மெய்த்தூதன். ஆதலால், அவன் பெயரால் வரையப்பட்டள்ள உடன்படிக்கையை என்னால் மீறுவதென்பது முடியாது. அவன் ஒருகாலும் என்னை இழிவு படுத்த மாட்டான்; அவனே எனக்கு உதவி புரிவான்.

அபூபக்ர்:— ஏ உமர்! நபி பெருமானார் அல்லாஹ்வின் உண்மையான நபியே. ஆகையால், அவர்கள் எதைச் செய்யினும், அல்லாஹ்வின் கட்டளைப்படியே செய்வார்கள். இதில் சந்தேகம் சிறிதும் வேண்டாம்.

ஏனைத்தோழர்கள்:— அபூஜந்தலின் பரிதாபநிலை கண்டு எங்களுக்கெல்லாம் உடல் துடிக்கிறது; உள்ளம் கொதிக்கிறது. எனினும், எம்பெருமான் திருமுன்பினில் யாங்கள் என் செய்தல் கூடும்? அவர்கள் செய்யும் முடிபெ எல்லார்க்கும் ஏற்றதாகும்.

அபூஜந்தல்:— எனக்கொன்றும் விமோசனமில்லையா? யா ரஸூலல்லா? என் கொடுந் தந்தையிடமா என்னை மீண்டும் ஒப்படைக்கப் போகின்றீர்கள். அவர் படுமோசப் பாபி!

ஸுஹைல்:— ஏ முஹம்மத்! யான் எழுந்து செல்லட்டுமா? நேரமாகிறது.

நபிகள்:— ஏ அபூஜந்தல்! நிர் இதுபொழுது நும்முடைய தந்யைாருடனே பின்பற்றிச் செல்லக்கடவீர். நீர் பொறுமையுடனும் அடக்கத்துடனுமே இருக்கக் கடவீர். நுமக்காகவும் நும்மைப்போன்ற ஏனை முஸ்லிம்களுக்காவும் ஆண்டவன் சீக்கிரத்தில் ஒரு வழியைக் காண்பிப்பான். இதுபொழுதோ உடன்படிக்கை முடிந்துவிட்டது; இனி இதனை முறிப்பது கூடாது.

அபூஜந்தல்:— இன்னும் கையெழுத்திடப் படவில்லையே?

நபிகள்:— கையெழுத்திடா விட்டாலும், பேசிய பேச்சு மாறு செய்வது கூடாது. அல்லாஹ்வின் நபியொருவர் வாக்கை மீறுவது கூடாதன்றோ! என் செய்யலாம்? பொறுத்துக் கொள்க!

[அபூஜந்தல்:— ஸுஹைலுடன் அழுது கொண்டே செல்கிறார்.]

சபை கலைகிறது. நபிகள் பெருமான் மதீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றார்கள்.

– பீ. டீ. ஷா (பா. தாவூத்ஷா, பீ. ஏ.)


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 30 – 33

Related Articles

Leave a Comment