தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ (ரலி) – பகுதி 2

by நூருத்தீன்
55. அதிய் பின் ஹாதிம் அத்தாயீ (عدي بن حاتم الطائي‎) – 2

பியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில் அமர்ந்ததும் அவர்களை எதிர்கொண்ட தலையாயப் பிரச்சினைகளுள் முக்கியமான இரண்டு. இஸ்லாத்தைக் கைகழுவி மார்க்கத்தைவிட்டு வெளியேறியவர்களின் பிரச்சினை, மற்றும் தம்மை நபியென அறிவித்துக் கொண்டு அராஜகம் புரிய ஆரம்பித்த சில கிறுக்கர்களின் அட்டகாசம்.

முஸ்லிம்களாக இருந்துவிட்டு, இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்களைக் குறிக்கும் அரபு மொழி வார்த்தை முர்தத். இவர்களின் பிரச்சினை மாபெரும் தலைவலி என்பது மட்டுமல்லாது இஸ்லாமிய ஆட்சிக்கே சவால்விட ஆரம்பித்துவிட்டது என்பதை துமாமா பின் உதால் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் பார்த்தோமில்லையா? அப்படி இஸ்லாத்தைக் கைகழுவிய குலங்களில் அதிலுள்ள மக்கள் அனைவருமே முர்தத்களாகிவிடவில்லை. பாதகமற்ற ஈமானுடன், சொல்லப்போனால் மேலும் வலுவடைந்த ஈமானுடன் முஸ்லிம்கள் அக்குலத்தினுள் இருந்தனர். அந்தக் குலத்துத் தலைவர்களும் பெரும்பாலான மக்களும் முர்தத்களாகிவிட, மிஞ்சியிருந்தார்களே முஸ்லிம்கள் அவர்கள் செய்த உதவி சாலப் பெரிது. முர்தத்களை எதிர்த்து கலீஃபா அபூபக்ரு நிகழ்த்திய போரில் அவர்கள் ஆற்றிய பங்கு பெரும்பங்கு.

குலத் தலைவரைப் பின்பற்றி பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இந்தச் சிலர் மட்டும் தாங்கள் இஸ்லாத்தில் தங்கியிருப்பதைப் பகிரங்கமாய் அறிவித்தார்கள். அத்தோடல்லாமல், தம் மக்களிடம், ‘இதெல்லாம் நல்லதிற்கில்லை; அழிவை நோக்கிச் செல்கிறீர்கள். நீங்கள் சந்திக்கவிருப்பது பெரும் சோதனை’ என்று எச்சரிக்கையும் செய்தார்கள். அதற்கெல்லாம் பலனாக அவர்களுக்கு அவர்கள் இன மக்களிடமிருந்து கிடைத்தவை அடியும் உதையும்; கேலியும் கிண்டலும். சிலர் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டனர். மற்றும் சிலர் கொல்லப்பட்டனர்.

இதையெல்லாம் மீறி, வழிதவறிய தங்களது மக்களை இஸ்லாத்திற்கு மீட்டெடுப்பதில் சிலர் வெற்றி கண்டனர். அந்தச் சிலருள் ஒருவர் அதிய் இப்னு ஹாதிம், ரலியல்லாஹு அன்ஹு.

முர்தத்களாகிப்போன தமது அத்தாயீ குலத்தினரை எப்படி அவர் மீட்டெடுத்தார் என்பதை நாம் அறியவேண்டுமெனில் நாம் மற்றொரு பாத்திரத்தை இங்கு அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. துலைஹா அல் அஸ்தி. ‘நான் நபி’ என்று அறிவித்துக்கொண்ட பொய்யர்கள் முஸைலமா, அஸ்வத் அல்-அன்ஸி எனும் இரு அயோக்கியர்களை முன்னர் பார்த்தோமே, அவ்வரிசையில் மூன்றாவது துலைஹா.

ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு. அரேபிய தீபகற்பத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல குல கோத்திரத்தைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிக் குழு மதீனாவிற்கு வந்த வண்ணமிருந்தது. நபியவர்களைச் சந்தித்து, பேசி, இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள். அதனால் ஒன்பதாம் ஆண்டுக்கு, ‘பிரதிநிதிக் குழுக்களின் ஆண்டு’ என்று சிறப்புப் பெயரே ஏற்பட்டுவிட்டது. அவ்விதம் பனூ அஸத் மக்களின் பிரதிநிதிக் குழுவும் மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தது. அந்தக் குழுவினருள் துலைஹாவும் அடக்கம்.

ஊரெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்; எல்லோரும் இணைகிறார்கள் நாமும் சென்று இணைவோம் என்பது போன்ற மனநிலைதான் பனூ அஸத் குழுவினரிடம் இருந்திருக்கிறது. நபியவர்களைச் சந்தித்து, “நாங்கள் இங்கு எதற்கு வந்திருக்கிறோமென்றால், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவருமில்லை; நீங்கள் அவனுடைய அடிமையும் தூதருமாயிருக்கிறீர்கள் என்று சாட்சி சொல்ல வந்திருக்கிறோம்” என்று சொன்னவர்கள் அத்துடன் நிறுத்தியிருந்தால் சரியாக இருந்திருக்கும். இணைத்து ஒன்றைச் சொன்னார்கள்.

“நீங்கள் எங்கள் குலத்தினருக்கு அனுப்பப்படாமல் இருந்தும்கூட நீங்கள் அவனுடைய அடிமையும் தூதருமாயிருக்கிறீர்கள் என்று சாட்சி சொல்ல வந்திருக்கிறோம்”

என்னவோ தாங்கள் இஸ்லாத்தில் இணைவது நபியவர்களுக்கு அவர்கள் செய்யும் பெரும் உபகாரம் என்பதைப்போன்ற மனநிலையே அவர்களுக்கு மிகைத்து இருந்திருக்கிறது. அவர்களது இந்த நடத்தையைச் சுட்டிக்காட்டி, அல்லாஹ்வின் வசனம் இறங்கியது.

“அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக” என்று இறைவன் அறிவித்தது சூரா ஹுஜுராத்தின் 17ஆவது வசனமாகப் பதிவாகிப்போனது.

இப்படி அந்தக் குழுவினர் முழு மனத்துடன் இஸ்லாத்தில் நுழையாமல் போயிருந்தாலும் அது அவர்கள் அளவிலான சிறு பிரச்சினையாக இருந்திருக்கக்கூடும். ஆனால் துலைஹா செய்ததுதான் சகிக்க இயலாத தீவினை. நாட்டாண்மை, பஞ்சாயத்துத் தலைவர் போல் நபித்துவத்தைப் பட்டம், பதவி என்று கருதித் தொலைத்திருக்க வேண்டும். பேர், புகழ் எல்லாம் கிடைக்கும் போலும் என்று ‘நானும் ஒரு நபி’ என்ற அறிவிப்பு துலைஹாவிடமிருந்து வெளியானது. ஆனால் அதன் பின்விளைவைப் பற்றிய அனுமானம் துலைஹாவுக்கு இருந்தது. முஸ்லிம்களுடன் பகிரங்கமான போருக்கு இது வழிவகுக்கும் என்று தெரிந்ததால் பனூ அஸத் எல்லையில் இருந்த ஸுமைரா எனும் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை நிறுவப்பட்டது.

துலைஹாவின் செல்வாக்கு பனூ அஸத் மக்களிடம் பெருகுவதற்கு ஒரு கூத்து வழிவகுத்தது. ஒருநாள் அம்மக்களுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுப்போய், வெகுவிரைவில் நிலைமை மோசமாகி, அந்த மக்கள் தாகத்தில் தவிக்கத் துவங்கினர். துலைஹா தன்னை நபி என்று சொல்லிக்கொண்டதால், அதற்குப் பரிகாரம் ஏதும் சொல்ல வேண்டுமில்லையா? அதனால் ‘நான் ஒரு புதிர் சொல்வேன். அதன் விடை உங்களைத் தண்ணீருக்கு இட்டுச் செல்லும்’ என்று மனம்போன போக்கில் ஏதோ ஒன்றை அம்மக்களுக்குச் சொல்ல, மக்களும் மண்டையை உடைத்துக்கொண்டு அதற்கு விடை தேடினார்கள். எதை எதையோ தேடிச்செல்ல, யதேச்சையாக அது நீர் நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றது.

அடுத்து என்னாகும்?

ஆச்சரியத்தின் உச்சிக்குச் சென்ற அக்குலத்து மக்கள், அருகிலிருந்த ஊர்களில் வசித்துவந்த பதுஉ அரபிகள் என்று பலரும் துலைஹாவை ஏற்றுக்கொண்டு கட்டுப்பட்டுப் பின்பற்ற ஆரம்பித்தனர். இதைப் பார்த்து மேலும் உற்சாகமடைந்து, ‘இனிமேல் நீங்கள் தொழுகையில் சிரவணக்கம் புரியத் தேவையில்லை’ என்று சிறப்புச் சலுகை. ‘விண்ணைத் தாண்டி வருகிறது’ என்று சகட்டுமேனிக்கு அர்த்தமற்ற, கோக்குமாக்கான வசனங்கள். அவற்றையெல்லாம் எந்தத் தயக்கமும் இன்றி அம்மக்கள் நம்ப ஆரம்பித்தனர். எல்லாம் குலம் சார்ந்த விசுவாசம்.

துலைஹாவின் கோமாளித்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் ஒடுக்க நபியவர்கள் திரார் இப்னுல் அஸ்வர் ரலியல்லாஹு அன்ஹுவையும் அவருடன் சிலரையும் அனுப்பிவைத்தார்கள். ஆனால் பனூ அஸத், கதஃபான் போன்ற கோத்திரத்து மக்களின் பெரும் படையுடன் இருந்த துலைஹாவை அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. அதற்கடுத்து சில மாதங்களில் நபியவர்கள் இறந்ததும் துலைஹாவின் அழிச்சாட்டியம் அதிகரித்துப் பரவ ஆரம்பித்தது. அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கத் தேர்ந்தெடுத்த தளபதி, காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு.

இதற்கிடையே துலைஹாவின் படை பலம் பெருக ஆரம்பித்திருந்தது. பனூ அப்ஸ், திப்யான் கோத்திரங்கள் கைகோர்த்திருந்தன. அவையெல்லாம் போதாது என்பது துலைஹாவுக்குத் தெரிந்தது. எனவே தனக்கு ஆதரவு தரும்படி பனூ ஜதீலா, கௌத் என்ற இரு குலத்தினருக்கும் துலைஹாவின் தகவல் சென்றது. பனூ ஜதீலா, கௌத் என்ற இரு குலமும் யார் எனில், அதிய் இப்னு ஹாதிமின் அத்தாயீ எனும் கோத்திரத்தின் சிறு கிளைகள். அசம்பாவிதமாக அந்த மக்களும் துலைஹாவின் வலையில் விழுந்து, பலர் தாயீ பகுதியிலிருந்து வெளியேறி அந்தப் படையில் சேர்ந்துவிட்டனர்.

அதிய் அவருடைய மக்களுக்கு ஒரு காலத்தில் அரசராகத் திகழ்ந்தவரல்லவா? அதனால் இராணுவ நடவடிக்கைக்காக காலித் பின் வலீதை அனுப்பிவைக்கும் முன்னதாக ஒரு காரியம் புரிந்தார் அபூபக்ரு. அதிய் இப்னு ஹாதிமை அழைத்து, ‘நீர் உம் மக்களிடம் சென்று புத்திசொல்லி அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி அபாக்கியவான்களாக ஆகாமல் காப்பாற்றும்’ என்று அனுப்பிவைத்தார். வந்து சேர்ந்த அதிய் தம் மக்களிடம் துலைஹாவின் பொய்ப் புரட்டை எடுத்துச் சொன்னார். அபூபக்ருவை கலீஃபாவாக ஏற்றுக்கொண்டு பிரமாணம் அளியுங்கள் என்று உபதேசம் புரிந்தார். ‘வலிமை இருக்கிறது; போர்த் திறமை இருக்கிறது; முஸ்லிம் படைகளைச் சமாளித்துவிடலாம்’ என்று நினைத்தால் அது எத்தகைய அபத்தம் என்பதைப் புரியவைத்தார். ஆரம்பத்தில் விறைப்பும் பிடிவாதமுமாய்த்தான் அம்மக்கள் இருந்தனர். ஆனால் அவரது நியாயமான வாதங்களைப் புரிந்து, உண்மையை உணர்ந்து, அவர்களது மனம் மென்மையடைய ஆரம்பித்த நேரத்தில் தாயீ மக்களை நெருங்கியது காலித் பின் வலீதின் தலைமையிலான படை.

தாபித் பின் அக்ரம், உக்காஷா இப்னு மைஹ்ஸன் எனும் நபித்தோழர்கள் இருவரை, முன்னதாக அனுப்பி உளவு பார்க்கச் சொல்லியிருந்தார் காலித். அவர்கள் வழியில் ஹிபால் என்பவனைக் கண்டார்கள். இவன் துலைஹாவின் சகோதரன் மகன். இருவரும் ஹிபாலைக் கொன்றுவிட, அச்செய்தி துலைஹாவை அடைந்தது. உடனே துலைஹாவும் சகோதரன் ஸலமாவும் கிளம்பிவந்து தாபித், உக்காஷா இருவரையும் நெருங்கிவிட்டனர். ஒற்றைக்கு ஒற்றை சண்டை மூண்டது. கடுமையான சண்டை. துலைஹா, உக்காஷா ரலியல்லாஹு அன்ஹுவுடன் சண்டையிட்டு அவரைக் கொன்றுவிட, ஸலமா, தாபித் பின் அக்ரம் ரலியல்லாஹு அன்ஹுவைக் கொன்றான்.

ஹிபாலின் கொலைக்குப் பழி தீர்த்த திருப்தியுடன் இருவரும் திரும்பிவிட்டனர். சற்று நேரம் கழித்து அவ்விடத்திற்குப் படையுடன் வந்து சேர்ந்தார் காலித் பின் வலீத். இரு நபித் தோழர்களின் சடலங்களைப் பார்த்ததும் அவர்களுக்குப் பெரும் சோகம் ஏற்பட்டு, துலைஹாவின் மீது கோபம் அதிகரித்தது. ஆக்ரோஷத்துடன் பயணத்தைத் தொடர்ந்தது படை. அவர்களது இலக்கு தாயீ. ஏனெனில் முதலில் தாயீ கோத்திரத்தை நோக்கிச் செல்லும்படி காலிதிற்குத் தெளிவான உத்தரவு அளித்திருந்தார் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு.

மற்ற எதிரிகளைப் போலன்றி முர்தத்களாகிப்போன கோத்திரத்தைத் தாக்குவதில் காலிதிற்கு ஒரு பெரும் பிரச்சினை இருந்தது. ஒரு குலமோ, கோத்திரமோ முர்தத்களாகி இருந்தாலும் அவர்களுள் முஸ்லிம்களும் இருந்தார்கள் என்று மேலே பார்த்தோமில்லையா? எனவே, தாக்குதலைத் துவங்குமுன் அவர்களுள் முர்தத்கள் யார், முஸ்லிம்களாக நிலைத்திருப்பவர் யார் என்பதைக் கண்டறிவது அவசியமாக இருந்தது. இப்படியான சூழ்நிலையில் தாயீ மக்களை நோக்கி காலித் நெருங்கிவர, அவரை முன்சென்று சந்தித்தார் அதிய் இப்னு ஹாதிம்.

காலிதிற்கு இடப்பட்டிருந்த கட்டளையோ முர்தத்களை எதிர்த்துப் போர் தாக்குதல். போர் என்று வந்தபின் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் கடுமையான தளபதி அவர். அதிய் இப்னு ஹாதிமோ தம் மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற வந்திருந்தவர். முரண்டு பிடித்து நிற்கும் மக்களிடம் பையப்பையப் பேசிப் புரியவைத்து ஓரளவு வெற்றியடைந்து காரியத்தை வெல்லும் நிலையில் இருந்தார். எனவே அவர் தளபதி காலிதைச் சந்தித்துப் பேசும்போது மிகவும் கவனமாகவும் சாதுர்யமுடனும் பேசவேண்டிய கடுமையான சூழ்நிலை உருவாகியிருந்தது. அதிய் அதை வெகு சிறப்பாகக் கையாண்டார்.

“எனக்கு மூன்று நாள் அவகாசம் அளியுங்கள். தாயீ மக்கள் என்னைச் சற்றுக் காத்திருக்கச் சொன்னார்கள். துலைஹாவிடம் சென்றுவிட்ட அவர்களுடைய மக்களைத் திருப்பி அழைக்க விரும்புகின்றனர். துலைஹாவிடமிருந்து அவர்கள் திரும்பியதும் அனைவரும் பகிரங்கமாய் உமக்குக் கட்டுப்படுவதாகக் கூறியுள்ளனர். ஏனெனில் இப்பொழுது எஞ்சியுள்ள இவர்கள் உமக்குக் கட்டுப்படுவதாக அறிவித்தால் தம்மிடமுள்ள அவர்களுடைய மக்களை துலைஹா கொன்றுவிடுவது நிச்சயம் என்று அச்சப்படுகிறார்கள். ஆகவே, இப்பொழுது நீர் அவசரப்பட்டு அவர்கள்மீது தாக்குதல் நடத்தினால், இஸ்லாத்திற்கு மீளாத நிலையில் அவர்கள் மரணமடைய நேரிடும். அவர்கள் அனைவரும் நிரந்தர நஷ்டவாளிகளாகி ஆகி நரகை எட்டுவதைவிடச் சற்றுக் காத்திருப்பது உமக்கு உவப்பானதா இல்லையா?”

மிகச் சிறப்பான வாதம் அது. அதுதான் உண்மையும்கூட. அதிய்யின் புத்திமதியை ஏற்றுக்கொண்ட தாயீ மக்கள் அதைத்தான் அவரிடம் தெரிவித்திருந்தனர். முஸ்லிம் படைகளுக்கு இருந்த அடிப்படை நோக்கமோ மக்களை இஸ்லாத்தின்பால் மீட்க வேண்டும் என்பதாகும். மாறும் மனநிலையில் உள்ள மக்களை வீணே கொல்வதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்? அதிய்யின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார் காலித் பின் வலீத்.

மூன்று நாள் கழிந்தது. அதிய் இப்னு ஹாதிமும் தம் வாக்குக்கு ஏற்பக் காரியத்தில் வெற்றி கண்டார். தாயீ கோத்திரத்தின் அல் கௌத் குலத்தைச் சேர்ந்த ஐந்நூறு வீரர்கள் அவருடன் வந்து காலிதின் படையில் முஸ்லிம்களாக இணைந்தனர். தம் படையினரின் எண்ணிக்கையில் ஐந்நூறு மேலும் பெருக, அடுத்து பனூ ஜதீலா கோத்திரத்தை நோக்கி நகர்ந்தார் காலித். இம்முறையும் காலிதிடம் கலந்து பேசினார் அதிய்.

“ஓ காலித்! எனக்குச் சில நாள் அவகாசம் அளியுங்கள். நான் அவர்களிடம் செல்கிறேன். அல் கௌத் குலத்தைக் காத்ததுபோல் அல்லாஹ் இவர்களையும் காத்தருளக் கூடும்.”

அனுமதியளித்தார் காலித். பனூ ஜதீலா மக்களிடம் சென்று நிதானமாக, பொறுமையாக எடுத்துச் சொன்னார் அதிய் இப்னு ஹாதிம். இறுதியில் அவர்களும் உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்ள, ஆயிரம் வீரர்கள் வந்து காலிதின் படையில் இணைந்தனர். இவ்விதமாக தாயீ மக்கள் நிரந்தரமாய் நரகில் வீழ்ந்து நஷ்டமடைவதைத் தம் முயற்சியால் தடுத்து நிறுத்தி வெற்றிகொண்டார் அதிய் இப்னு ஹாதிம் ரலியல்லாஹு அன்ஹு. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், அதிய் தம் மக்களிடம் சென்று பேசியது, போரைத் தடுத்தது என்பதெல்லாம் அம்மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, ‘கொல்லப்படுவார்களே, செத்துப் போவார்களே’ என்ற மேலோட்டமான கரிசனத்தினாலெல்லாம் அல்ல. அதற்கு அவரிடமே ஒரு சான்றும் உள்ளது.

காலித் பின் வலீத் தம் படையினருடன் துலைஹா தலைமையிலான பனூ அஸதை புஸாக்கா எனும் இடத்தில் நேருக்குநேர் சந்தித்தார். மூர்க்கமான போர் துவங்கியது. அப்பொழுது காலிதின் படையில் முஸ்லிம்களாக இணைந்துவிட்ட தாயீ குல மக்களுக்குத் தங்களுடைய முந்தைய கூட்டாளியான பனூ அஸதை எதிர்த்துப் போரிடுவதில் நிறையத் தயக்கம் ஏற்பட்டது. அதனால் காலிதிடம், ‘நாங்கள் வேண்டுமானால் பனூ ஃகைஸ் மக்களிடம் சண்டையிடுகிறோமே’ என்று கோரிக்கை வைத்தார்கள். இந்த பனூ ஃகைஸும் முர்தத்களாகி இருந்தனர்.

“நம்மை எதிர்த்து நிற்கும் இரண்டு எதிரிகளில் பனூ ஃகைஸ் ஒன்றும் வலிமை குன்றியவர்களில்லை. எனவே எழுந்து சென்று, உறுதியுடன் நின்று இருவருள் யாரை வேண்டுமானாலும் எதிர்த்துப் போரிடுங்கள்” என்று அனுமதியளித்துவிட்டார் காலித் பின் வலீத். ஆனால் தாயீ மக்களின் கோரிக்கையைக் கேட்டுக் கோபமும் சீற்றமும் அடைந்தார் அதிய் இப்னு ஹாதிம்.

தம் குலத்து வீரர்களிடம், “எனக்கு நெருக்கமான குடும்ப உறவினர்கள் யாரேனும் இந்த மார்க்கத்தைவிட்டு வெளியேறி இருந்தால், நான் அவர்களை எதிர்த்துப் போரிட்டிருப்பேன். அப்படியிருக்க நாம் ஏன் பனூ அஸதை எதிர்த்துப் போரிட மறுக்க வேண்டும்? அவர்கள் நமக்கு நேச குலத்தினராக இருந்திருக்கலாம். அதனால் என்ன? அல்லாஹ்வின்மீது ஆணையாக. நான் அவர்களிடம் சண்டையிட மறுக்கமாட்டேன்.”

போர்த் தளபதிக்குரிய தமது திறமையை அங்கு உபயோகித்தார் காலித். தாயீ குலத்து மக்கள் அதிய் இப்னு ஹாதிமைப்போல் ஈமானில் வலுவுடன் அன்றைய அந்த நிலையில் இல்லை. அவர்களுடைய சுணக்கம் படையில் பலவீனத்தை ஏற்படுத்தக் கூடாதல்லவா? அதனால் அதிய்யிடம் சொன்னார். “பனூ ஃகைஸ், பனூ அஸத் எனும் இந்த இரண்டு எதிரிகளுள் யாரிடம் போரிட்டாலும் அது ஜிஹாதுதான். அதனால் உம் குல மக்களுடைய அபிப்ராயத்திற்கு நீர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம். அவர்கள் களத்தில் எந்த எதிரியைச் சந்திக்க விரும்புகிறார்களே அவர்களை நோக்கி உம்மக்களைத் தலைமை தாங்கி நடத்தவும். அப்பொழுதுதான் அவர்கள் பூரணமான உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வீரியத்துடனும் சண்டையிடுவார்கள்.”

பின்னர் நிகழ்ந்த புஸாக்கா போரில் பனூ அஸதை காலித் பின் வலீதின் படை அழித்தொழிக்க, துலைஹா தன் மனைவியுடன் ஒட்டகத்தில் ஏறி ஸிரியாவுக்குத் தப்பி ஓட நேர்ந்தது. துலைஹாவின் படையினர் கொன்று ஒழிக்கப்பட்டனர். அவ்விதமாக அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால் அதைத் தொடர்ந்த விசித்திரம் என்னவெனில் –

தன்னை ஒரு நபி என அறிவித்துக்கொண்டு, கலீஃபா அபூபக்ருவுக்குப் பெரும் குடைச்சலும் தலைவலியும் கொடுத்து, ஏகப்பட்ட உயிரிழப்புக்குக் காரணமான அதே துலைஹா, பின்னர் இஸ்லாத்தை ஏற்று, உமரின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் படையில் இணைந்து போர்களில் நிகழ்த்திய சாகசமும் புகழ்பெற்ற காதிஸிய்யா போரில் வகித்த பங்கும் இறுதியில் இஸ்லாத்திற்காக உயிர் துறக்கக் கிடைத்த வாய்ப்பும் – அதெல்லாம் தனி வரலாறு.

முர்தத்கள், நபி என அறிவித்துக்கொண்ட பொய்யர்கள் ஆகியோரின் பிரச்சினைகளெல்லாம் முடிவுக்கு வந்தபின், பாரசீகத்தை நோக்கி முஸ்லிம்களின் படையெடுப்புத் துவங்கியது. காலித் பின் வலீத் தலைமையில் ஏறத்தாழ, பதினெட்டாயிரம் முஸ்லிம் வீரர்கள் ஈராக் நோக்கி அணிவகுத்தனர். மூன்று பிரிவாகப் படையை அமைத்து மூன்று வெவ்வேறு பாதையில் எதிரிகளை நோக்கிச் செலுத்தினார் காலித். முதல் பிரிவிற்குத் தலைவர் அல் முத்தன்னா இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு. இரண்டாவது பிரிவிற்கு அதிய் இப்னு ஹாதிம், மூன்றாவது பிரிவிற்கு காலித் பின் வலீத். முழு மூச்சாக ஜிஹாதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார் அதிய் இப்னு ஹாதிம்.
காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் முஸ்லிம்கள் வெற்றிக்குமேல் வெற்றி அடைந்து, பாரசீக சாம்ராஜ்ஜியத்திற்குள் ஊடுருவி, ஊர் ஊராக முன்னேறிக் கொண்டேயிருந்தனர். தோல்வி, மேலும் தோல்வி என்று ஏற்பட்டுப்போய்ப் பாரசீகர்களுக்கு முஸ்லிம் படைகளின்மேல் அச்சமும் காலித் பின் வலீத் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஒவ்வாமை என்றும் ஆகிப் போயின.

அல் முஸய்யக் என்ற பகுதியிலிருந்த குலத்தினர்மீது மும்முனையிலிருந்து திடீர்த் தாக்குதல் நடத்தினர் முஸ்லிம்கள். அதில் பாரசீகர்களுக்குப் பேரிழப்பு. காலித் பின் வலீத் தலைமையில் படை நெருங்குகிறது என்ற செய்தியைக் கேட்டதுமே அவர்களுக்கு எத்தகைய அச்சம் ஏற்பட்டிருந்தது என்பதற்கு அப்பொழுது நடைபெற்ற ஒரு நிகழ்வு உதாரணம். திடீர்த் தாக்குதல் நிகழ்த்திய முஸ்லிம்களின் அந்தப் படையில் அதிய் இப்னு ஹாதிம் ஒரு வீரர். பிற்காலத்தில் அந்த அனுபவத்தை அவர் விவரித்துள்ளார்.

“ஹர்கூஸ் இப்னு அந் நுஃமான் அந் நம்ரீ என்பவனை முஸ்லிம் படையினர் நெருங்கி விட்டனர். அச்சமயம் தன் மனைவி, மகன்கள், மகள்கள் சூழ இருந்த அவன், அவர்களுக்குமுன் ஒரு பெரிய கிண்ணம் முழுவதும் சாராயம் நிரப்பி வைத்தான். ‘நகர் பற்றியெறியும் நேரத்தில் இதென்ன பிடில் வாத்தியம்’ என்பதுபோல் அவனை ஆச்சரியமாகப் பார்த்த குடும்பத்தினர், “காலிதின் படைகள் நெருங்கிவிட்ட நேரத்தில் யாராவது இப்படி குடித்துக் கூத்தடிப்பார்களா?” என்றார்கள்.

“குடியுங்கள். இது பிரிவுபச்சாரம். இதன் பிறகு நீங்கள் மற்றொருமுறை குடிப்பீர்கள் என நான் நம்பவில்லை” என்றான் ஹர்கூஸ். தோல்வியும் மரணமும் நிச்சயம் என்பது அவனுக்குத் தெரிந்து போயிருந்தது. அவன் அதைச் சொல்லி மதுபானப் பாத்திரத்திற்குள் தன் தலையை முழுதாக நுழைக்க இருந்த நேரம். குதிரையில் விரைந்துவந்த முஸ்லிம் படையினரின் சிறு குழுவொன்று, அவனது தலையைக் கொய்தது. கைக்கு எட்டிய மது வாய்க்கு எட்டாமல் இறந்து விழுந்தான் ஹர்கூஸ்.

oOo

கலீ்ஃபா உமர் இப்னு கத்தாப், ஈராக்கிலிருந்த தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். “வலிமையும் மேன்மையும் பொருந்திய இருவரை என்னிடம் அனுப்பி வைக்கவும். ஈராக்கைப் பற்றியும் அங்குள்ள மக்களின் நிலையைப் பற்றியும் நான் விசாரித்து அறிய வேண்டும்.”

தகவல் தொடர்பு வசதிகள் உச்சத்தை எட்டியிருக்கும் இக்காலத்தில் வாழும் நமக்கு அது அபத்தமாகத் தோன்றலாம். ஒவ்வொரு பகுதியின் விஷயங்களையும் அறிந்துணர அதெல்லாம் அக்காலத்தில் அப்படியொரு வழிமுறை. அதுவும் ஆட்சி விஷயத்தில் உமர் மிகவும் நுணுக்கம் வாய்ந்தவர் என்பது இதில் மற்றொரு முக்கிய விஷயம்.

மேன்மையான இருவர் என்றதும் அந்த ஆளுநர் உமரிடம் அனுப்பிவைத்த இருவர், லபீத் இப்னு ரபீஆ, அதிய் இப்னு ஹாதிம். மதீனா வந்தடைந்த அவர்கள், பள்ளிவாசலின் உள்ளே நுழைந்தனர். அங்கு அம்ரிப்னுல் ஆஸ் இருந்தார். அவரிடம், “ஓ அம்ரு! அமீருல் மூஃமினீனை நாங்கள் சந்திக்க வேண்டும். நாங்கள் வந்திருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுத் தரவும்” என்றனர்.

உமரிடம் சென்ற அம்ரு, “அஸ்ஸலாமு அலைக்கும் அமீருல் மூஃமினீன் அவர்களே” என்றார்.

அதுநாள்வரை கலீஃபாவை அமீருல் மூஃமினீன் என அழைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. முதன்முறையாக அப்பிரயோகத்தைக் கேட்டு வியந்தார் உமர்.

“ஆஸினுடைய மகனே, என்னை ஏன் இந்தப் பெயரைக்கொண்டு அழைக்கிறாய்? இதை எங்கிருந்து அறிந்தாய் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்.”

“லபீத் இப்னு ரபீஆவும் அதிய் இப்னு ஹாதிமும் வந்துள்ளனர். அமீருல் மூஃமினீனை நாங்கள் சந்திக்க வேண்டும். நாங்கள் வந்திருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுத் தரவும் என்று அவர்கள்தாம் கூறினர்.”

அன்றிலிருந்துதான் கலீஃபாவை அமீருல் மூஃமினீன் என அழைக்கும் வழக்கம் துவங்கி நிலைபெற்றுப் போனது.

உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் நிலங்களைப் பங்கிட்டு அளிக்கும்போது பக்தாதின் அப்ஸ் ஆற்றின் அருகே அமைந்திருந்த அர் ரவ்ஹா என்ற கிராமப் பகுதி அதிய் இப்னு ஹாதிமுக்குக் கிடைத்துள்ளது.

அதிய் இப்னு ஹாதிமுக்கு ஜிஹாது வாழ்க்கையாகிப் போனது என்று மேலே பார்த்தோமே – காதிஸிய்யாப் போரில் தாயீ மக்களின் படைத் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். மிஹ்ரான், ஃகுஸ் அல் நாதிஃப், நுஃகைலா போர்களிலும் பங்கு பெற்றிருக்கிறார். பின்னர் அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் நிகழ்வுற்ற ஒட்டகப் போரில் அவரது அணியில் இணைந்து போரிட்டு, அதில் தம்முடைய ஒரு கண்ணையும் மகனையும் இழந்திருக்கிறார் அதிய். பின்னர் நிகழ்வுற்ற ஸிஃப்பீன், நஹ்ராவான் யுத்தங்களிலும் கலீஃபா அலியின் படையில் இடம் பெற்றிருந்திருக்கிறார்.

நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து தமது 120ஆவது வயதில் மரணமடைந்தார் அதிய் இப்னு ஹாதிம் அத்தாயீ.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 12 அக்டோபர் 2013 அன்று வெளியானது

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment