3. அபூஉபைதா (ரலி) எழுதிய மடல்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக நிகழ்வுறும் செய்திகளை நாள்தோறும் படித்துப் படித்து, கேட்டுக் கேட்டு, கோபப்பட்டு. அங்கலாய்த்து, அலுத்து எல்லாம் நமக்கு இயல்பாகிவிட்டது. அதில் அடிப்படையான ஒரு விஷயத்தை நம்மில் பெரும்பாலோர் கவனிக்கத் தவறியிருக்கிறோம்.
ஒருவர் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படப்போகிறேன் என்று முடிவெடுத்தபின் அவரிடமிருந்து என்ன பின்விளைவை எதிர்பார்க்கிறோம்? கூட அமர்ந்து ரமளான் கஞ்சி குடிக்கிறார்களே, அந்தக் கஞ்சிக்கு இலவச அரிசி அளிக்கிறார்களே என்றெல்லாம் நம்ப ஆரம்பித்தால் அது முஸ்லிம்கள் தலையில் குல்லா அணிவிக்கும் தந்திரங்கள்.
பத்திரிகையோ, அரசியல்வாதியோ, ஊடகமோ அவரவரின் சக்திக்கேற்ப இஸ்லாத்திற்கு எதிராக இயங்குகின்றனர். அவர்கள் அப்படித்தான் என்பதை முதலில் புரிந்துகொண்டால் அங்கலாய்ப்பு மறைந்து, ஆக்கபூர்வ வகையில் செயல்பட, எதிர்வினையாற்ற கவனம் ஒருமுகப்படும்.
போர் களமானாலும் சரி, சமுதாயத்தில் பழக வேண்டிய மக்களானாலும் சரி, நயவஞ்சகர்களையும் எதிரிகளையும் அவர்களது செயல்பாடுகளையும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள் நபியவர்களும் பின்னர் வந்த கலீஃபாக்களும்.
இவ்விஷயத்தில் அபூபக்ருவின் (ரலி) அறிவுத்திறம் அபாரமாய் வெளிப்பட்ட மடல் ஒன்று உண்டு. படிப்போம். அதற்குமுன் –
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ரு (ரலி) கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் ரோமர்களுடனும் பாரசீகர்களுடனும் போர் தொடங்கியது. ரோம சாம்ராஜ்யமும் பாரசீகமும் அக்காலத்திய வல்லரசுகள் என்று படித்திருப்பீர்கள்; கேள்விப்பட்டிருப்பீர்கள். படை பலம், தளவாட வசதிகள், போர் அனுபவம் என்று அவர்களது இராணுவம் பெரும் வலிமை.
ரோமர்களின் ஆட்சியிலிருந்த ஷாம் பகுதிக்குத் தோழர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை வந்து சேர்ந்தது. அக்காலத்து ஷாம் என்பதை இக்காலத்தைய ஸிரியா நாடு என்று பொதுவாகச் சொல்லலாம். பொதுவாக மட்டும்தான். ஏனென்றால் இன்றைய லெபனான், ஸிரியா, ஜோர்டான், ஃபலஸ்தீன், ஸிப்ரஸ் நாடுகள் உள்ளடங்கியது ஷாம்.
இவ்வளவு பெரிய பகுதியை, அதை ஆண்டு கொண்டிருந்த வல்லரசை நோக்கித்தான் முஸ்லிம் படைகள் வந்தன. நான்கு படைப் பிரிவுகள், நான்கு முக்கிய தோழர்கள் அதன் தளபதிகள் என்று நிர்ணயித்திருந்தார் அபூபக்ரு (ரலி). அதன் விவரங்களுக்குள் அதிகம் நுழையாமல் அவர்களுள் ஒரு தளபதியான அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி) அவர்களுக்கும் கலீஃபாவுக்கும் இடையில் நிகழ்ந்த மடல் பரிமாற்றம் மட்டும் நமக்கு இந்த மடலில் போதும்.
முஸ்லிம்களின் படை திரண்டு வந்ததும் அதை ரோமர்கள் இலேசாகக் கருதி ஒதுக்கிவிடவில்லை. அவர்களும் பெருமளவில் ஆயத்தம் புரிந்தனர். பிரம்மாண்டமான அளவில் போர் ஏற்பாடுகள் நிகழ்ந்தன. உச்சகட்டமாய், ரோம மன்னன் ஹெர்குலிஸ் புறப்பட்டு ஷாம் பகுதியின் முக்கிய நகரமான அந்தாக்கியாவிற்கு (Antioch / Antakiyah) வந்து முகாமிட்டு விட்டான்.
எதிரிப் படைகளின் எண்ணிக்கை பலம், ஆயுத பலம் ஆகியவற்றைக் கணக்கிட்டார் அபூ உபைதா. பெரும் இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம்கள் உள்ளதும் தம் படைக்கு மேலும் வீரர்கள் தேவை என்பதையும் அவர் உணர்ந்தார். ஆயினும் முஸ்லிம்கள் படை எண்ணிக்கையின் அடிப்படையில் எதிரிகளைச் சந்திப்பது அன்று அவர்களுக்கு அந்நியம். அதனால், ‘இங்குள்ள சூழ்நிலையை கலீஃபாவுக்கு விவரித்து விடுவோம். அவர் என்ன முடிவெடுக்கிறாரோ எடுக்கட்டும். நாம் எப்படியும் எதிரிகளுடன் போரிடுவது உறுதி’ என்று கலீஃபா அபூபக்ருவுக்கு (ரலி) மடல் எழுதினார்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வின் தூதருடைய கலீஃபா அபூபக்ருவுக்கு, அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் எனத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நிற்க-
இஸ்லாத்திற்கும் அதன் மக்களுக்கும் சிறப்பான கண்ணியத்தை அளித்தருளும்படி அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன். அவர்களுக்கு வெற்றியை எளிதாக்கும்படி அவனிடம் கேட்கிறேன். ஹெர்குலிஸ், ரோமாபுரியின் அரசன், ஷாம் தேசத்தின் நகரங்களுள் ஒன்றான அந்தாக்கியாவில் முகாமிட்டிருப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. அவன் தன்னுடைய ராஜாங்கத்திலுள்ள மக்களுக்கு ஆயுதங்களுடன் வரும்படி தகவல் தெரிவித்துள்ளான். அவர்களும் கிடைக்கும் வாகனங்களில் ஏறி மிகப் பெருமளவில், பெரும் உற்சாகத்துடன் திரண்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தரப்பில் நிகழும் இந்த முன்னேற்றத் தகவலை நான் தங்களுக்குத் தெரிவிக்க நினைத்தேன். நாங்கள் எத்தகு சிறப்பான முறையில் செயலாற்ற வேண்டுமென்பதைத் தாங்கள் ஆலோசித்து எங்களுக்குத் தெரிவிக்க அது ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் தங்கள்மீது உண்டாவதாக.
பதற்றமோ, தவிப்போ, அச்சமோ அற்ற நேரடியான எளிய கடிதம். அது முஸ்லிம்களின் இக்கட்டான சூழ்நிலையையும் அவர்களை எதிர்நோக்கியுள்ள சவாலையும் விவரிக்கப் போதுமானதாக இருந்தது. கடிதத்தைப் படித்துவிட்டு, அபூபக்ரு (ரலி) பதில் எழுதினார். அந்த பதிலை, சிறிதளவு ஊன்றிக் கவனித்தாலே போதும், அபூபக்ருவின் இறைநம்பிக்கையும் மனவுறுதியும் முஸ்லிம் வீரர்களின் முன்னுரிமையும் அதில் இழையோடுவது தெளிவு.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால். உம்முடைய மடல் கிடைத்தது. ரோமாபுரியின் அரசன் ஹெர்குலிஸைப் பற்றி நீர் சொன்னதைப் புரிந்துகொண்டேன். உறுதியுடன் நம்பவும் – அவன் அந்தாக்கியாவில் முகாமிட்டிருப்பது என்பது அவனுக்கும் அவனது படையினருக்கும் தோல்வி; அல்லாஹ்வின் உதவியால் உமக்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றி என்பதாகும்.
தனது ராஜாங்கத்திலிருந்து மக்களைக் திரட்டுகிறான், உங்களுடன் சண்டையிட கூட்டங் கூட்டமாய் ஆள் திரட்டி வைத்துள்ளான் என்று குறிப்பிட்டிருந்தீர். நல்லது. அதுதான் நடக்கப்போகிறது என்பது எமக்கும் உமக்கும் தெரியுமே. அதை நாம் எதிர்பார்த்ததுதானே. ஏனெனில் யாருமே தமது ராச்சியத்தையும் அரசையும் எதிர்த்துப் போரிடாமல் விட்டுத் தரப்போவதில்லை.
மேலும் உமக்குத் தெரியும் – அவர்களை பல முஸ்லிம்கள் தாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுடைய எதிரிகள் எந்தளவு தங்களது உயிரை நேசிக்கின்றனரோ அந்த அளவு முஸ்லிம்கள் மரணத்தை நேசிக்கிறார்கள். அந்த முஸ்லிம்கள் தங்களது போரின் மூலம் அல்லாஹ்விடம் சிறப்பான வெகுமதியை ஈட்ட முடியும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை நேசிப்பவர்கள்; எந்தளவென்றால் தங்களது சொத்து, தம் பெண்களிடம் அவர்கள் கொண்டுள்ள நேசத்தைவிட அதிகமாக. போரிடும்போது அவர்கள் ஒவ்வொருவரும் இறை நிராகரிப்பாளர்கள் ஆயிரம் பேருக்குச் சமம்.
ஆகவே உமது எதிரியை உம் படையினருடன் சந்திப்பீராக. உம்முடன் இணைய முடியாத முஸ்லிம்களை நினைத்து வருத்தமோ, துயரமோ அடைய வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான்.
நான் மேற்சொன்ன இவையெல்லாம் ஒருபுறம் இருக்க –
நான் மேற்கொண்டு உமக்கு வீரர்களை அனுப்பி வைப்பேன். நீர் திருப்தியுறும் வகையில் அவர்கள் எண்ணிக்கையில் நிறைந்திருப்பர். அதன்பிறகு உமக்கு மேலும் வீரர்கள் தேவைப்படமாட்டர் – இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் நற்பேறும் உம் அனைவர் மீதும் பொழியட்டுமாக.
அபூபக்ரு (ரலி) முதலில் தமது தளபதியை உள்ளத்தளவில் வலவூட்டுகிறார். எதிரிகள் தரப்பில் நடப்பவை எதுவும் விசித்திரமில்லை; அவையெல்லாம் எதிர்பார்த்தவைதான் என்பதை விவரித்து, தன்னுடைய தளபதியை முதலில் உள்ளத்தளவில் வலுவூட்டுகிறார் அபூபக்ரு (ரலி).
அச்சமயம் அத்தளபதியின் வசம் இருந்த பலம் என்ன? எதிரிகளைவிட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் முஸ்லிம் படையினரின் வீரமும் அவர்களது ஆன்ம பலமும்.
அதையெல்லாம் சொல்லிவிட்டு, ‘போ! சென்று எதிரியுடன் கட்டிப்புரண்டு உருள்’ என்று கைவிட்டுவிடவில்லை. அதிகப்படியான வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவர் என்று உறுதியளித்தது மடல்.
பிறகு? முஸ்லிம்கள் ரோம வல்லரசை விரட்டியதும் வென்றதும் வரலாறு.
அடுத்து வேறு மடலொன்று பார்ப்போம்.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
-நூருத்தீன்
வெளியீடு: சமரசம் 1-15, செப்டம்பர் 2013