கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் உரை

by நூருத்தீன்

தாலாட்டுக்கு அடுத்து உரைகள் கேட்டு வளர்ந்த மக்கள் நாம். பெற்றோர் அறிவுரை, ஆசிரியர் உபதேசம், மேடைப் பேச்சு, தேர்தல் வாக்குறுதி, போதாததற்கு “என் இனிய தமிழ் மக்களே”

எனும் செலுலாய்ட் பாசக் குரல் என நம் செவிக்குப் பரிச்சயமான உரைகள் ஏராளம். YouTube, வாட்ஸ்அப் கைங்கரியத்தால் பயான்களும் எதிர்வினை என்ற பெயரில் அக்கப்போர் அட்டகாசங்களும் நவீன ரகம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இஸ்லாத்தில் கட்டாய உரைகள் உண்டு. வெள்ளிக்கிழமை குத்பா உரை, பெருநாள் தொழுகையின் உரைகள். ஆனால் மார்க்கக் கடமையான அவ்வுரைகள் பெரும்பாலும் பெரும்பாலானவர்களுக்கு தாலாட்டாய் அமைந்துவிடுவது உரைப்பவர் குறையா, செவியுறுவோர் அலட்சியமா என்பது தனி விவாதம்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பால பாடம் பயின்று மேதைகளாக உருமாறிய முதல் தலைமுறை முஸ்லிம்களின் உரைகள் பல உண்டு. அவர்கள் அக்கால மக்களுக்கு ஆற்றிய அவ்வுரைகள் எழுத்துப் பிசகாமல் சமகால தலைமுறையினரான நமக்கும் பொருந்திப் போவதும் பயன் அள்ளிப் பொழியும் அறிவுரைகள் அவற்றில் நிரம்பியிருப்பதும் வியப்பான உண்மை. தெளிவு, செறிவு, சுருக்கம், கருத்தாழம், நேர்மை, அறம் என்று எண்ணற்ற பொக்கிஷங்களின் தொகுப்பு அவை. அவற்றுள் சிலவற்றைக் கண்டு உய்யலாம் என்பதே இந்த ஒரு பிடி உபதேசத்தின் நோக்கம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் மரணித்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாமல் தோழர்களெல்லாம் பேரதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர். பெருமளவிலான சோகமும் அதிர்ச்சியும் மதீனாவில் பரவியிருந்தது. சோதனையாக அரபு கோத்திரத்தினர் சிலர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறியது ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், ‘இதுதான் சந்தர்ப்பம்’ என்று தலைதூக்கிய நயவஞ்சகர்கள். புயல் வீசும் இரவில் மழையில் நனைந்த ஆட்டு மந்தைகள் காட்டு மிருகங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் சிக்கியிருந்ததைப் போல் இருந்தது அவர்களின் நிலை என்று அச்சூழலை அருமையாக விவரித்திருக்கிறார் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ்.

பல குழப்பங்களுக்குப் பிறகு, ஆலோசனைகளுக்குப் பிறகு நபியவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்ர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்சொன்ன சவால்களுக்கு மத்தியில், மக்களை அழைத்து உரையொன்று நிகழ்த்தினார் கலீஃபா அபூபக்ரு (ரலி). அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, துதித்துவிட்டு அவரது உரை விரிந்தது.

“மக்களே, நானும் உங்களைப் போன்றவனே, எனக்குத் தெரியவில்லை, அனேகமாய், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மட்டுமே சுமக்கக்கூடிய பெரும் சுமையை நீங்கள் என் தோள்மீது ஏற்றி வைக்கிறீர்கள். அல்லாஹ் அனைத்து உலகங்களினின்றும் உயர்வாக முஹம்மத் நபியவர்களைத் அவர்களைத் தேர்ந்தெடுத்தான்; அனைத்துப் பிழைகளை விட்டும் அவர்களைப் பாதுகாத்தான். நான் வெறுமனே பின்பற்றுபவன் மட்டுமே; புதிதாக எதையும் கண்டுபிடிப்பவனல்லன். நான் செய்வது சரியாக இருக்கும்பட்சத்தில் எனக்கு அடிபணியுங்கள். தடம்புரள்வேனாயின் என்னைத் திருத்துங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மரணித்துவிட்டார்கள். அவர்களைப் பின்பற்றுபவர்களுள் ஒருவர்கூட அவர்கள் (நபியவர்கள்) தமக்கு அநீதி இழைத்துவிட்டார்கள் என்று கோர முடியவில்லை. சவுக்கின் வீச்சு, அல்லது அதனினும் குறைவான அளவில்கூட ஏதும் அநீதி நிகழ்ந்தது என்று பரிகாரம் கோரவில்லை.

(நான் நிதானத்தை இழந்து கோபம் கொள்ளும்படி) என்னைச் சில நேரங்களில் ஷைத்தான் தாக்குவான். அந் நேரங்களில், நான் தங்களுக்கு ஏதும் தீங்கு விளைவிக்காதிருக்கும் பொருட்டு, என்னை விட்டு விலகியிருங்கள்.

முடிவு எப்பொழுது என்று அறியாத ஆயுட்காலத் தவணையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் பொருட்டு போராடுவதற்கு மட்டுமே ஆயுளைச் செலவிடுவது என்பது உங்களுக்குச் சாத்தியமெனில் அவ்விதம் அதைச் செலவிடுங்கள். ஆனால் அல்லாஹ்வின் உதவியின்றி உங்களால் அவ்விதம் செய்ய இயலாது. மரணம் உங்களை நெருங்குவதற்கு முன், உங்களது செயல்கள் முடிவுக்கு வருவதற்கு முன், ஆயுள் இருக்கும்போதே கடுமையாகப் போராடுங்கள்.

தங்களது ஆயுட்காலம் முடிவுறும் என்பதை மறந்தவர்கள் உளர். மரணம் தங்களை நெருங்கும் வரை, நற்காரியம் புரிவதை அவர்கள் தள்ளிப்போட்டவாறு இருக்கிறார்கள். எச்சரிக்கை! அவர்களுள் நீங்களும் ஒருவராகி விடாதீர்கள். தீவிரமான விஷயம் உங்களை நெருங்கியவாறு உள்ளது என்பதாலும் வாழ்நாள் வெகு விரைவில் கழிந்துவிடும் என்பதாலும் விரைந்து பாதுகாப்பைப் பெறுவதற்குக் கடினமாகப் போராடுங்கள். மரணத்தைக் குறித்து எச்சரிக்கை இருக்கட்டும். மரணமடைந்த உங்களுடைய தந்தையர், மகன்கள், சகோதரர்கள் ஆகியோரிடமிருந்து பாடம் பெறுங்கள். இறந்தவர்களிடம் எவ்விஷயத்தில் அடிபணிவீர்களோ, அதைப் போலன்றி உயிருடன் இருப்பவர்களிடம் வேறு விஷயங்களில் அடிபணிந்து விடாதீர்கள்.”

இது மட்டுமின்றி மற்றோர் உரையும் நிகழ்த்தினார் கலீஃபா.

“தன் பொருட்டுச் செய்யப்படும் காரியங்களைத் தவிர மற்றவற்றை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. வறுமையின்போதும் தேவைகளின்போதும் மட்டுமே நீங்கள் நேர்மையைக் கடைப்பிடிப்பதால், உங்களது செயல்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்க முயலுங்கள்.

அல்லாஹ்வின் அடிமைகளே, மரணமடைந்தவர்களிடமிருந்து பாடம் பெறுங்கள். உங்களுக்கு முன் வந்தார்களே, அவர்கள் நேற்று எங்கிருந்தார்கள், இன்று எங்கிருக்கிறார்கள் என்று சிந்திக்கவும். போரில் சண்டையிடுவதிலும் வென்று மேலோங்குவதிலும் ஆற்றலுள்ளவர்களாய் அறியப்பட்டவர்களெல்லாம் எங்கே? மரணமடைந்து, மக்கி மண்ணாகிவிட்டார்கள்; அவர்களது தீமைகள் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டன. நிலங்களை அபிவிருத்தி செய்து, உயர்ந்தோங்கிய கட்டடங்களைக் கட்டிய மன்னர்களெல்லாம் எங்கே? அவர்கள் மறைந்து, நினைவுகளைவிட்டு நீங்கி காலங்களாகிவிட்டன, அவர்களெல்லாம் இன்று ஒன்றுமே இல்லை. ஆனால் அல்லாஹ் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களிடம் கணக்கெடுப்பான். மறைந்துவிட்டாலும் அவர்களுடைய செயல்களை மட்டும் அவர்களே சுமக்கின்றனர். அவர்களுடைய உலக உடைமைகளோ அவர்களுக்குப்பின் வந்த வேறு யாராலோ அனுபவிக்கிப்படுகின்றன. இவற்றிலிருந்து பாடம் பெற்றால் நமக்கு ஈடேற்றம். மாறாக, அவர்களின் நிலைக்குத் தாழ்ந்தால், நாமும் அவர்களைப்போல் ஆகிவிடவேண்டியதுதான்.

தங்களுடைய இளமைத் தோற்றத்தைத் தாமே ரசித்துப் பாராட்டி மகிழ்ந்த பிரகாசமான ஒளிவீசும் முகத்தினர் எங்கே? அவர்கள் மண்ணாக மக்கிவிட்டனர். அவர்களுடைய அலட்சியத்தால் அவர்களது முடிவு வேதனைக்குரியதாயிற்று.

நகரங்களைக் கட்டி, அவற்றை அற்புதங்களால் நிரப்பி, சுவரெழுப்பி அரண் அமைத்துக்கொண்ட மன்னர்கள் எங்கே? தமக்குப் பின் வந்தவர்களுக்குத்தாம் அவற்றை அவர்கள் விட்டுச்சென்றனர்; அவர்களது குடியிருப்புகள் காலியாகி, அவர்கள் இருப்பதோ மண்ணறையின் இருட்டில்.

அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?’ (குர்ஆன் 19:98)

உங்களுடைய தந்தையரும் சகோதரர்களும் எங்கே? அவர்களுடைய ஆயுள் முடிந்தது. தாங்கள் முன் அனுப்பி வைத்தவற்றை நோக்கி அவர்கள் சென்று சேர்ந்துவிட்டனர். மரணத்திற்குப் பிறகான, தீய இடம் அல்லது பேரின்பத் தளம் அது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவனுக்கு இணை இல்லை, துணை இல்லை. அவனது காரியங்களில் அவனைத் தூண்டும்படியான தொடர்பு அவனுக்கும் அவனுடைய படைப்பினங்களுக்கும் இடையில் அறவே இல்லை. மாறாக அவையெல்லாம் அவனுக்குக் கீழ்பணிந்தும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்துமே கிடக்கின்றன. நீங்களெல்லாம் அவனுடைய அடிமைகள் என்பதையும் உங்களது கணக்குவழக்கு அவனிடம் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவனிடம் உள்ளதை அவனுக்குக் கீழ்படியாமல் அடையவே முடியாது.

நீங்கள் நெருப்பிலிருந்து பாதுகாவல் பெறவும் சொர்க்கத்திற்கு அருகில் நெருங்கவும் இதுவன்றி சரியான நேரம் எது?”

நாற்காலியும் பதவியும் கிடைத்தவுடன் குடிமக்களை மிருகத்தைவிடக் கீழ்த்தரமாக நினைக்கும் மனோபாவம் உலகெங்கும் இயல்பாகிவிட்ட காலம் இது. இஸ்லாமிய அரசிற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்ற அபூபக்ர் (ரலி) என்னவென்றால் நபியவர்களின் வழித்தடத்தை அடியொற்றி பின்பற்றுவேன் என்று உறுதி கூறிவிட்டு, தாமும் ஒரு மனிதன், தவறிழைக்கவோ, பிழை புரியவோ கூடும் என்பதைக் கூட்டம் போட்டு உரத்துச் சொல்கிறார்.

சரியென்றால் பின்பற்றுங்கள், இல்லையென்றால் சுட்டிக்காட்டி என்னைத் திருத்துங்கள் என்கிறாரே அதை இன்று எந்த ஆட்சியாளரிடம் காணமுடியும்?

மரணத்தையும் பின் தொடரப்போகும் வாழ்க்கையையும் நினைவூட்டி, இறை உவப்பே பிரதானம் அதையொட்டியே வாழ்க்கையின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாக உபதேசிக்கிறது அவரது உரை. அதை நாம் உள்வாங்கினால் என்னவாகும்?

தொற்றுநோயாய் அறம் பரவும்.

-நூருத்தீன்

வெளியீடு: அல்ஹஸனாத் செப்டெம்பர் 2017

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<<ஒரு பிடி உபதேசம் முகப்பு>> <<அடுத்தது>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment